Posts Tagged ‘Writers plight’

தமிழ் பதிப்புலகம் – ஹரிகிருஷ்ணன் கடிதம்

Posted in கடிதங்கள் on August 27th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
ஜன்னலில் மதிய வெயில் சுள்ளென உறைத்தது. வெக்கை. நான் ஒரு சில நொடிகள் நொறுங்கிப் போனேன். அற்புதமான தேனினும் இனிய தமிழ் படிப்பு. பக்குவம். மேதமை. எல்லாம் காலத்தால் தள்ளப்படும் வெறும் குப்பை.
இது நடந்து 16 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது நான் ஓரியன்ட் லாங்மன் பதிப்பாசிரியர். நான் எதிர்காலத்தில் எப்படி ஆகிவிடக் கூடாது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. 16 ஆண்டுகள் கழித்து இரண்டு நாள்களுக்கு முன்னர் மற்றொருவர் வந்தார். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் பேசியிருப்பார். தமிழ் தெரியும். ஓவியம் தெரியும். இசை தெரியும். பரதம் தெரியும். வரிசையாக விருதுகள், பாராட்டுகள். சைவத்தில் அதிதீவிர ஈடுபாடு
:-) ))
பதிப்புலகின் இன்னொரு முகத்தைக் காட்டவே இல்லையே!  குவியல் குவியலாக எழுதி வைத்துக்கொண்டு, பதிப்பிக்க ஆள் கிடைக்காதா என்று தவிக்கிறவர்கள் ஒருபக்கம்; புத்தகத்தைப் பதிப்பிக்க வேண்டுமானால், பதிப்புச் செலவு முழுவதையும் எழுத்தாளரே ஏற்கவேண்டும்; பிறகு ஒரு ஆறேழு வருஷம் கழித்து நானா பாத்து ஏதானும் கொடுக்கறேன் ராயல்டி … என்ற நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டே தமிழ்ப் பதிப்புலகுக்கு… வானதி, மணிமேகலை என்று வரிசை வரிசையாகச் சொல்லலாமே, எழுத்தாளன் காசில் ஏறி மேயறவங்களைப் பத்தி… எனக்கு ஒரு நண்பர் உண்டு.  ஒரு பதிப்பாளரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து வைத்திருக்கிறார்.  ஏழெட்டு ஸ்க்ரிப்ட் கொடுப்பார்.  பதிப்பாளர் எதை மெச்சுகிறாரோ அது வெளிவரும்.  அப்படியாக இதுவரையில் எனக்குத் தெரிந்தே நான்கைந்து புத்தகம் போட்டாகிவிட்டது.  கொடுத்த ஐம்பதாயிரம் பதிப்பாளர் ஐயாவிடமே இருக்கிறது.  பத்திரமாய்.  pathiram இல்லை, பத்திரத்தில் பதியாமல் ‘பத்திரமாய்’வைத்தது வைத்தபடி இருக்கிறது.  கணக்குலதான இருக்கு?  அது பாட்டுக்கு இருந்துட்டுப் போவுது!
இது கதை, நாவல், அப்புறம் பர்சனாலிடி டெவலப்மென்ட் எழுத்தாளர் கதை.  கவிஞர்கள் கதையைச் சொல்லட்டுமா?  மரபுக் கவிதைல ஓணும்னாலும் கீது…புஜுக்கவுஜல ஓணும்னாலும் கீது… வண்டிவண்டியா..:-))
மனசாரச் சொல்கிறேன்.  தமிழ்ப் பதிப்புலகில் கிழக்கு வந்த பிறகுதான் ஒருவகையான ஒழுங்கே வந்திருக்கிறது.  எழுத்துகூட மதிப்புள்ளது; அதுவும் தமிழ் எழுத்துக்குக்கூட மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டதே கிழக்குக்குப் பிறகுதான்.
அன்புடன்,
ஹரிகி.

வழி சொல்லுங்க…

Posted in அனுபவம், எழுத்தாளர்கள் on August 26th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். ஆங்கிலோ இந்திய ரிசெப்ஷனிஸ்ட் போனில் கூப்பிட்டார். ‘உன்ன பாக்க, யாரோ ஆத்தர் வந்துகிது. கீழ வா.’ இரண்டாம் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு இறங்கி வந்தேன். பெரிய வரவேற்பறை அது. மூன்று பக்கமும் நீள சோபாக்கள். சோபாக்கள் சேருமிடங்களில் தொட்டிகளில் பிளாஸ்டிக் செடிகள். நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க ஒருவர் பச்சை நிற பிளாஸ்டிக் பையோடு நின்றுகொண்டு இருந்தார். தலைமுடியை மிகச் சமீபத்தில்தான் வெட்டியிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு உருத்திராட்சம். சட்டை பாக்கெட் முழுக்க நாலைந்து வண்ண பேனாக்கள், துண்டு காகிதங்கள்.

‘நமச்சிவாய வாழக. நாதன் தாள் வாழ்க.’ கண்கள் புன்னகைப்பது தெரிந்தது. பச்சைப் பையோடு கைகூப்பினார் அவர். பதிலுக்கு நான் என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஒரு மாதிரி புன்னகைப்பது போல் வைத்துக்கொண்டு கைகூப்பினேன். சோபாவில் உட்காரச் சொன்னேன்.

‘நீங்களா தம்பி இங்க தமிழ் புத்தகங்கள் போடறது?’

’ஆமா சார்.’

‘மிக நல்ல பணி. புத்தகக் கண்காட்சியில பார்த்தேன். நல்ல வேலை செஞ்சிருக்கீங்க தம்பி.’

ஒரு மாதிரி கோணலாகச் சிரித்தேன். சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து ஒன்றிரண்டு வாரங்கள் ஆகியிருக்கும்.

‘உங்களுக்கு எந்த ஊரு தம்பி?’

‘மெட்ராஸ்தான் சார்.’

எனக்குத் தெரிந்தது மெட்ராஸ்தான். எங்கப்பாவுக்கு வேற ஊர். அதையெல்லாம் இவரிடம் போய் ஏன் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

‘சீர்மிகும் சென்னை.’

‘ஓ!’

‘என் பெயர் மாணிக்கவாசகம். செய்யாறு பக்கத்துல ஸ்கூல்ல தமிழாசிரியரா இருந்து ஓய்வு பெற்றவன். நான் சென்னை வந்து அஞ்சாறு வருஷமாச்சு’
நான் வெறுமனே மண்டையை ஆட்டினேன்.

‘இதுவரைக்கும் ஐம்பதுக்கும் மேல புத்தகங்கள் போட்டிருக்கேன். நான் ஆசுகவி. சித்திரக் கவிதை எழுதுவேன். மயில் மாதிரி, தேர் மாதிரி, குதிரை மாதிரியெல்லாம் கவிதை எழுதுவேன்.’

‘காபி குடிக்கறீங்களா?’

‘டீ கிடைச்சா நல்லது தம்பி. சர்க்கரை கொஞ்சம் அதிகம்.’

வந்து நின்ற கேண்டீன் பையன் திரும்பிப் போனான்.

’மேடையில பிரசங்கம் செய்வேன். வாரியார் சுவாமிகள் எங்க ஊருக்கு வந்தபோது, வாழ்த்தி சால்வை போர்த்தினாரு.’

‘சரி சார்’

‘ஜோசியம் குடும்பத் தொழில். எங்கப்பா காலத்துலேருந்து செஞ்சுகிட்டு வரோம். நான் ஆறு ஜோசிய புத்தகங்கள் எழுதியிருக்கேன். இதுவரைக்கு ஒரு லட்சம் ஜாதகத்துக்கு மேல பார்த்திருப்பேன். வித்வான் வே. லட்சுமணன் தெரியுமா?’

‘ஓ!’

‘நீங்கள் மேஷ ராசியா? பரணி நட்சத்திரம்?’

இது கொஞ்சம் சங்கடமான இடம். எனக்கு என் ராசி, நடசத்திரம் எல்லாம் துல்லியமாகத் தெரியாது.

‘தெரியல சார். நீங்க சொல்லுங்க.’

’நீங்க கொஞ்சம் அவசரத்துல இருக்கீங்களோ?’

‘இல்ல சார். சொல்லுங்க’

‘என்னை உங்கப்பா மாதிரின்னு நினைச்சுக்கங்க..உங்களுக்கு என்ன 23 வயசு இருக்குமா?’

நான் மையமாக தலையசைத்தேன்.

‘வானதியில என் புக்ஸ் போட்டிருக்காங்க. மணிமேகலைல குடுத்திருக்கேன். நானே ஊர்ல சின்னதா கோவில் விசேஷங்களுக்கு புத்தகம் போட்டிருக்கேன்.’

பச்சை நிற பிளாஸ்டிக் பையின் ஜிப்பைத் திறந்தார். சின்ன சின்னதாக இரண்டு கைடக்க புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். பதினாறு பக்கங்கள் கொண்ட புத்தகங்கள். இரண்டு நூல்களின் மேலட்டையிலும் வேறு வேறு அம்மன் படங்கள் இருந்தன. கடைசி பக்கத்தில் உபயம்: M.மணிவேல், தங்கராஜ் ஒயரிங் சர்வீஸஸ், செய்யாறு என்றிருந்தது.

‘நான் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கேன். அதை உங்ககிட்ட கொடுக்கத்தான் வந்தேன். யாரும் சொல்லாத உரை இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகால உழைப்பு.’

அவர் அதே பச்சைப் பையில் இருந்து புல்ஸ்கேல் பேப்பர்கள் கொண்ட பைலை எடுக்க ஆரம்பிக்கும் போதே, எனக்கு லேசாக உதற ஆரம்பித்தது.

‘நாங்க இந்த மாதிரி புக்ஸெல்லாம் போடறதில்ல சார்.’

‘அப்ப என்ன மாதிரி போடுவீங்க?’ புல்ஸ்கேல் பைலை உள்ளே தள்ளினார்.

’குழந்தைகளுக்கு, ஸ்கூல்ல யூஸ் பண்றா மாதிரி’

‘நீதிக் கதைகள் தரட்டுமா? பண்பாட்டுக் கதைகள்னு ஒரு புக்கு எழுதியிருக்கேன். இப்போ கூட, தி. நகர்ல ஒருத்தருக்கு நன்நெறிக் கதைகள்னு ஒரு புக்கு கொடுத்தேன்.. யார் அவன்?’

சட்டென அவர் மீண்டும் பச்சை பிளாஸ்டிக் பைக்குள் கையை விட்டார்.

‘அப்படி இல்ல சார்.இங்க ஒர்க் புக்ஸ், எக்ஸஸைஸ் புக்ஸ்தான் போடுவாங்க.’

‘நானே கதை எழுதி, நம்ம ஹரி தெரியுமா.. டிராயிங்கெல்லாம் போடுவாரே.. அவர வெச்சு படங்கள் போட்டு, படக்கதை போட்டிருக்கேன். ஆர்ட் ஒர்க்கே ரெடியா இருக்கு. 32 பக்கம் வரும்.’

வண்ணங்கள் தீட்டப்பட்ட அட்டைகளை அவர் வெளியே எடுத்தார்.

‘நீங்க சரின்னு சொன்னா, இங்க உங்க கம்பெனி பேரப் போட்டு அடிச்சுக் குடுத்துடுவேன். நமக்குத் தெரிஞ்ச பிரஸெல்லாம் இருக்கு. நமக்குன்னா நல்ல ரேட்டுல அடிச்சுக் குடுப்பாங்க. எனக்கு இந்தத் தயாரிப்பு செலவு மட்டும் தந்தா போதும். உரிமையெல்லாம் உங்களுக்கே எழுதிக் கொடுத்திடறேன். எத்தனை பிரிண்ட் வேணும்னாலும் போட்டுக்கலாம். ஸ்கூல் இந்த புத்தகங்கள் எல்லாம் எக்கச்சக்கமாக போவும்.’

அவருடைய முனைப்பு, வேகம், திட்டமிடல் எல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படியும் வயது 65க்கு மேல் இருக்கும். தோல் தளர்ந்துபோயிருந்தது. விட்டால், இவரே புத்தகத்தை விற்றுவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

‘அப்படி இல்ல சார். இங்கே எல்லாம் வருஷ ஆரம்பத்துலேயே முடிவு செஞ்சி, இன்னின்ன புத்தகங்கள் போடணும், இவங்க எழுதணும்னு திட்டமிட்டு வேலை செய்வாங்க சார். நீங்கள் உங்க ஐடியாஸை எல்லாம் என்கிட்ட எழுதிக் குடுங்க. எங்க சேல்ஸ் டீம்கிட்ட பேசிட்டு, எதெல்லாம் மார்க்கெட்டுல நல்லா போகும்னு தெரிஞ்சுகிட்டு அப்புறம் எழுதச் சொல்றேன் சார்.’

‘உங்கள் சேல்ஸ் டீமுக்கு யார் பொறுப்புன்னு சொல்லுங்க. நான் பேசறேன். எனக்கு 35 வருஷம் அனுபவம் உண்டு தம்பி. எந்த புக்கு நல்லா போவும்னு நல்லா தெரியும். நான் சொல்றேன்.’

நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். இவருக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. இங்கே தனிமனிதர் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. செயல்படுத்தியும் விட முடியாது. இது ஓர் நிறுவனம். நிறுவனத்துக்கான நடைமுறையோடுதான் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக முடியும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விஷயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும். இந்த நிறுவனம் பிராசஸ் ட்ரிவன் நிறுவனம். எல்லாம் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவர்,

‘மணி ரெண்டாவப் போகுது தம்பி. இன்னும் சாப்படலை. இனிமே தான் வீட்டுக்குப் போய் சாப்பிடணும். நீங்க ஏதாவது புத்தகத்தை எடுத்துகிட்டு, கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா நிம்மதியா வீடு போய் சேருவேன். இல்லன்னா, திருப்பியும் டி. நகர் போய் வேற யாரையாவது பார்க்கணும்.’

ஜன்னலில் மதிய வெயில் சுள்ளென உறைத்தது. வெக்கை. நான் ஒரு சில நொடிகள் நொறுங்கிப் போனேன். அற்புதமான தேனினும் இனிய தமிழ் படிப்பு. பக்குவம். மேதமை. எல்லாம் காலத்தால் தள்ளப்படும் வெறும் குப்பை.

இது நடந்து 16 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது நான் ஓரியன்ட் லாங்மன் பதிப்பாசிரியர். நான் எதிர்காலத்தில் எப்படி ஆகிவிடக் கூடாது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. 16 ஆண்டுகள் கழித்து இரண்டு நாள்களுக்கு முன்னர் மற்றொருவர் வந்தார். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் பேசியிருப்பார். தமிழ் தெரியும். ஓவியம் தெரியும். இசை தெரியும். பரதம் தெரியும். வரிசையாக விருதுகள், பாராட்டுகள். சைவத்தில் அதிதீவிர ஈடுபாடு.

‘பெரிய பொண்ண கட்டி கொடுத்துட்டேன் தம்பி. ரெண்டாவது பொண்ணும் பையனும் காலேஜ்ல படிக்கறாங்க. அடுத்த செமஸ்டருக்கு ஃபீஸ் கட்டணும். ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க தம்பி.’

நான் வார்தைகளற்று நின்றேன்.