உள்ளடக்கமும் விலையும்
Posted in இதழியல், புதிய இதழ் on October 14th, 2009 by வெங்கடேஷ் – Be the first to commentவீட்டில் நான் நான்கு தினசரிகள் வாங்குகிறேன். பல ஆண்டுகளாக ஹிந்து. தினத்தந்தியையும் தினமலரையும் ஆன்லைனில் படித்துவிட்டாலும் வீட்டுக்கு தினமணி வேண்டும் என்று அதை வாங்க ஆரம்பித்தேன். அது அப்பா வீட்டுப் பழக்கம். பிசினஸ் தினசரிகளில் என் தேர்வுகள் தி மிண்ட்டும் பிசினஸ்லைனும் பிசினஸ் ஸ்டேண்டர்டும். இகனாமிக் டைம்ஸை நான் நம்புவதில்லை. பிசினஸ்லைன் நான்கு ரூபாய் பேப்பரை 1.72 காசுக்கு ஆண்டு சந்தாவில் கொண்டு வந்தார்கள். உடனே அந்தச் சந்தாவை வாங்கினேன். பூனாவில் இருந்தவரை டைம்ஸை வாங்கி அதன் ருசி கண்டதால், சென்னையிலும் அதன் சந்தாவைக் கட்டினேன். ரூ.2 பேப்பரை 82 பைசாவுக்கு (ஆண்டு சந்தா ரூ.299) தருகிறார்கள். இப்போது தி மிண்ட்டும் சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. விரைவில் அதற்கும் சந்தா கட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏனோ ஆரம்பத்தில் இருந்து எனக்கு டெக்கான் கிரானிக்களைப் பிடிக்கவில்லை.
தரத்தை நிலையாக வைத்துக்கொண்டு விலைகளுக்குள் நடக்கும் யுத்தம் இது. ஒவ்வொரு இதழும் தமக்கென ஒரு எழுதும் முறை, செய்திகளைத் தரும் முறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒவ்வொரு இதழும் சிறப்பைப் பெற்று உள்ளன. இதையெல்லாம் படிக்க வேண்டும் என்று நினைப்பவனுக்குத் தடையாக இருந்தது விலைதான். விலையும் இந்த யுத்தத்தில் சரிந்தபோது, வாங்குவது சுலபமானது.
ஒருவகையில் இந்த தினசரிகளின் உள்ளடக்கங்கள் அவ்வளவு கம்பெல்லிங்காக இருக்கின்றன. வாங்கவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவனவாக இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரை விலை ஒரு பிரச்னையாக இருந்தது. விலையில் ஏற்பட்டுள்ள போட்டி, வாசகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதே நிலை, ஆன்லைன் மார்க்கெட்டில் உள்ளதா என்று பார்த்தால், சந்தேகமே மிஞ்சுகிறது. இன்றைக்கு விகடன், குமுதம், நக்கீரன், துக்ளக் ஆகியவை சந்தா கட்டி படிக்கும் வலைதளங்களாக உள்ளன. அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்துதான் பெருமளவு ஆன்லைன் சந்தா வருகின்றன. தமிழர்கள் அதிக அளவு வசிக்கும் இந்த நாடுகளில் இருந்து சந்தா வருவதில் அதிசயமில்லை.
ஆனால், ஒருவரே பலவேறு இதழ்களுக்கும் சந்தா கட்டுகிறாரா என்று பார்த்தால், அது சந்தேகமே. ஆன்லைனில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இதழ்களுக்குத்தான் சந்தா கட்டுகிறார்கள். இத்தனைக்கும் அச்சிதழைவிட, வலையிதழ்களின் சந்தா தொகை மிகவும் குறைவு. ஆனாலும் ஆன்லைன் சந்தா பெரிய அளவில் வளரவில்லை.
இந்த நிலையில், மீடியா பெருந்தலையான ரூபர்ட் முர்டாக், ஆன்லைன் உள்ளடக்கங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பேசிவருகிறார். சமீபத்தில் சீனாவில் முர்டாக் பேசும்போது, தேடுபொறிகளான கூகுள் போன்றவை தன் செய்திகளைத் திருடி வியாபாரம் செய்கின்றன என்று ரொம்பவும் காட்டமாகப் பேசியிருக்கிறார். ஆன்லைன் உள்ளடக்கங்களில், பல்வேறு படிப்பு சார்ந்த, துறை சார்ந்த ஜர்னல்களுக்கு எல்லா நாடுகளில் இருந்தும் ஆய்வாளர்களும் தனிநபர்களும் ஆய்வு நிறுவனங்களும் நூலகங்களும் சந்தா கட்டி வருகின்றன. ஆனால், எண்டர்டெயின்மெண்ட் உள்ளடக்கம் என்று சொல்லப்படுகிற நியூஸ், சினிமா, புத்தகங்கள் ஆகிய உள்ளடக்கங்களுக்கு யார் பணம் கட்டிப் படிப்பார்கள் என்று தெரியவில்லை.
பல வெளிநாட்டு தினசரிகள், இந்தியாவில் இந்தியா டுடே இதழிலும் கூட, அச்சிதழுக்கு சந்தா கட்டினால், நீங்கள் வலையிதழையும் இலவசமாகப் படிக்கலாம் என்று சொல்லுகின்றன. ஒரு சில அச்சிதழ்கள், அதன் சந்தாவோடு கூடுதலாக சிறிய தொகை ஒன்றையும் பெற்றுக்கொண்டு, வலையிதழை வாசிக்கத் தருவதோடு, வலையிதழுக்கென்றே புதிய உள்ளடக்கங்களையும் சேர்த்து தருகின்றன. இதெல்லாம் சந்தையில் இருக்கும் பல்வேறு மாடல்கள்.
‘புதிய தலைமுறை’ இதழ் இப்போது தமிழ் பத்திரிகையுலகில் இன்னொரு சவாலை முன்வைத்திருக்கிறது. 68 பக்கங்கள், நல்ல உள்ளடக்கம், வழவழ தாள், முழு வண்ண அச்சு, விலையோ ரூ.5. கடைக்காரர்களிடம் பேசியபோது, ‘நல்லா விளம்பரம் செய்யறாங்க சார். அஞ்சு ரூபான்னவுடனே உடனே வாங்கிடறாங்க..’ என்றார்கள். இதற்கு முன்னர் இதேபோன்ற ஒரு சவாலை, தினகரன் முன்வைத்தது. ரூ.1 விலை. அந்த விலை யுத்தத்தின் மூலம், இன்று தினகரனுக்கு கணிசமான ரெகுலர் வாசகர்கள் கிடைத்துவிட்டார்கள்.
வார இதழ்கள், பதினைந்து நாள் இதழ்கள், மாதாந்திர இதழ்கள் மத்தியில் இதுபோன்ற விலை யுத்தம் இல்லாமல் இருந்தது. ‘புதிய தலைமுறை’ அந்தச் சவாலை முன்வைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நல்ல உள்ளடக்கம், நல்ல அச்சு, கைக்கு அடக்கமான விலை என்றால், நப்பாசை எழாமல் என்ன செய்யும்? சந்தா கட்டினால், இன்னும் விலை குறைவு. ரூ.3.84. (ஆண்டு சந்தா ரூ.200).
வழக்கம்போல் விமர்சனங்களும் கேட்கின்றன:
இந்தப் பத்திரிகை யாருக்குன்னே தெரியல. ஆடியன்ஸ் சரியா தெரியல.
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வாரி உடறாங்கன்னு பார்ப்போம்.
கொள்ள கொள்ளயா சொத்து இருக்கு. வாரி உடறாங்க.
அவருக்கு இதுலேர்ந்து பணம் வரணும்னு அவசியமில்லை. பப்ளிசிட்டிக்கு ஒரு பத்திரிகை வேண்டும்.அதனால செய்யறாங்க.
அரசியல் கட்சி தொடங்க போறாங்க. அதுக்கு ஒரு மவுத்பீஸ் வேண்டாமா?
இதெல்லாம் சவாலை நேரடியாகச் சந்திக்காமல், வளைந்து தப்பிப்பதற்கான பதில்கள். மேலே சொன்னதெல்லாம் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், கண்ணெதிரே ரூ.5ல் ஒரு பத்திரிகை தொங்குகிறது. அது நிஜம். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இந்தப் பத்திரிகை வேறு சில நிஜங்களை முன்னே எடுத்து வைக்கின்றன. அதில்தான் என் கவனம் குவிந்திருக்கிறது.
1. இனிமேல் தொடங்கக் கூடிய புதிய இதழ்களின் விலை ரூ.5க்கு மேல் இருந்தால், அது மார்க்கெட்டில் அடி வாங்கும். ரூ.5 என்பது ஒரு பேஸ்லைன் ஆக ஆகிவிட்டது.
2. ஏற்கெனவே ஒரு இதழ் தொடங்குவது என்பது சாதாரணர்களின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது. புதிய தலைமுறை செய்யும் மார்க்கெட் ஹைப், அதன் செலவு எல்லாம், மிகவும் பிரும்மாண்டமாக இருக்கிறது. பெரிய அளவில் மூலதனம் இருந்தால் மட்டுமே இனி சந்தையில் நிற்க முடியும், மக்கள் கவனத்தைக் கவர முடியும் என்ற நிலையை புதிய தலைமுறை உருவாக்கிவிட்டது.
இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் மெல்ல மெல்ல அமெரிக்கா மாதிரி முழுவதும் விளம்பர ஆதரவு பெற்ற, வாசகர்களின் கைகளில் இலவசமாகப் போகும் இதழ்களை நோக்கிப் போகிறோமோ என்று தோன்றுகிறது. ரூபர்ட் முர்டாக் இதற்கு நேர் எதிராகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். உள்ளடக்கத்துக்கு படிப்பவன் காசு கொடுக்கவேண்டும். இலவசம் கூடாது என்கிறார் அவர். என்னாகப் போகிறதோ? பார்ப்போம்.