‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு
Posted in பதிப்பகம், புத்தகங்கள் on October 7th, 2009 by வெங்கடேஷ் – 2 Commentsகிழக்கு பதிப்பகத்துக்காக ரூல்ஸ் ஆஃப் பேரண்டிங் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இப்போது இப்புத்தகம் அச்சாகி விற்பனைக்கு வந்திருக்கிறது என்றார் பத்ரி சேஷாத்ரி. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.
எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் உற்சாகம் அளித்த புத்தகம் இது. மொழிபெயர்க்கும் முன்பு ஒருமுறை முழு நூலையும் படித்துவிட்டேன். எளிய நூறு விதிகள். நல்ல உபயோகமான பெற்றோராக இருப்பதற்கு இந்த நூல் தரும் வழிகள் மிகவும் அபூர்வமானவை. தமிழில் இதைப் படிப்பவர்களுக்கு, தமிழ் மனம் உடைய பெற்றோர்களுக்கு, பண்டைய சிந்தனை மரபில் வரும் பெற்றோர்களுக்கு இந்த நூல் எவ்வளவு உவப்பாக இருக்கும் என்று தெரியவில்லை.
இந்த நூலின் அடிநாதம் இதுதான். 18 வயதில் உங்கள் பெண்ணோ பிள்ளையோ வீட்டைவிட்டு வெளியே போய்விடுவான்/ள். அதுதான் இயற்கை. அப்படிப் போகவில்லை என்றால், அவர்களை நீங்களே அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வெளியே அனுப்பிவிட வேண்டும். சிறந்த பெற்றோர் என்பவர்கள், 18 வயதுக்குப் பின் தம் பிள்ளைகள், தம் சொந்தக் காலில் நிற்க, சொந்த சிந்தனையோடு செயல்பட, சுயமுடிவுகள் எடுக்க, உறுதியான மனமுடையவர்களாகத் தயார்படுத்துபவர்கள்தான் என்கிறது இந்த நூல்.
இதை பத்து பத்து அத்தியாயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பத்து அத்தியாயமும் வளர்ச்சிப் போக்கின் ஒரு அம்சத்தை மையப்படுத்தி, விரிவாகப் பேசுகிறது. அனுபவங்கள், உதாரணங்கள், மேற்கோள்கள், சிந்தனைத் தெறிப்புகள் நிறைந்த நூல் இது. இதற்கு மேல் இந்த நூலைப் பற்றிப் பேசினால், சுவாரசியம் குறைந்துபோய்விடும். நீங்களே நூலைப் படித்துக்கொள்ளுங்கள்.
ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. இருக்கிறது. நமது இந்திய சமூகங்களில் சுயசார்புள்ள மனிதனாக ஒருவனைத் தயார்படுத்தும் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்று யோசித்தால், ஐயமே மேலோங்குகிறது. சுயசார்பு என்று சொல்லும்போது, சுயமாக முடிவெடுத்தல், தன் சொந்தக் காலில் நிற்பது, தன் முடிவைச் செயல்படுத்துவது என்று இன்னும் விரித்துப் புரிந்துகொள்ளலாம்.
பெற்றோர்களாகிய நாம், நம் பிள்ளைகளுக்குச் சுயமாக சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் சொல்லிக்கொடுத்திருக்கிறோமா? அதை செய்ய அனுமதித்திருக்கிறோமா? முடிவான பதில் தெரியவில்லை. பெற்றோர்களில் ஒரு சிலர் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். ஒரு சிலர் செய்யவில்லை. அவர்கள், ரொம்ப பொசசிவ்வாக தம் மகவுக்குத் தேவையான அனைவற்றையும் தாமே செய்துகொடுத்து, ஸ்பூன்ஃபீட் செய்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், இந்தப் பிள்ளைகளால் சொந்த முடிவுகளை எடுக்கும் பேச்சே எழாமல் போய்விடுகிறது. அடுத்தவர்களுக்கு வலிக்குமோ, என்ன நினைத்துக்கொள்வார்களோ, என்ன பேசுவார்களோ என்று தயங்கித் தயங்கி மற்றொரு சாதாரண குடிமகன் ஆகிவிடுவார்.
மேலே சொல்லியிருப்பது சிந்தனை ரீதியான விஷயம் என்றால், நடைமுறை ரீதியாகவாகவது நம் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கிறார்களா என்றால், அதிலும் கொஞ்சம் இடறல் உண்டு. எனக்குத் தெரிந்த குடும்பத்தில், பையன் +2 படிக்கும்போதுகூட, அவனுக்கு அவன் அம்மா வாயில் சோறு ஊட்டுவாள். காலுக்குப் போடும் காலணிகளை எடுத்துவைத்து, புத்தகங்களை பையில் அடுக்கிக்கொடுத்து, புராஜட்டுகளைத் தானே எழுதிக்கொடுத்து அந்தம்மா தானே ஸ்கூலுக்குப் போகாத குறைதான்.
இன்னொரு குடும்பத்தில் பையன், எட்டாவதோ என்னவோ படிக்கிறான். வீட்டைவிட்டு வெளியே வந்ததே இல்லை. அப்படியே வந்தான் என்றால், அது காலை அப்பா ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வதும் மாலை அம்மா வீட்டுக்கு அழைத்து வருவதும் மட்டும்தான். மிஞ்சி மிஞ்சி சனி ஞாயிறுகளில், அவன் அம்மாவோடு வெளியே போகும்போது, அம்மாவின் முந்தானை முனையைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடுவான். வெளியுலகம் என்று ஒன்று இருப்பதே அந்தப் பையனுக்குத் தெரியுமோ தெரியாதோ?
இதுபோன்று அதீத pampered ஆக வளரக்கூடிய பையனோ பெண்ணோ, என்ன வாழ்வு வாழ்வார்கள்? தெரியவில்லை. தன் வேலைகளை எல்லாம் எப்படியோ யாரோ செய்கிறார்கள், அவர்களுக்கு தாம் சுமையாக இருக்கிறோம் என்ற உணர்வு இவர்களுக்கு வரவே வராதோ? தன் வேலைகளை ஏன் இன்னொருவர் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழவே எழாதோ? தனக்காக எதற்கு தன் அம்மாவோ அப்பாவோ அல்லது மனைவியோ அவர்களுடைய சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வளைந்து கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழவே எழாதோ? தெரியவில்லை.
என் தோழி ஒருத்தியின் வீட்டில், அவளுடைய அப்பா, அண்ணன்கள் எல்லாம் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு போய், வாஷ்பேசினில் கழுவக்கூட மாட்டார்கள். தட்டிலேயே கையைக் கழுவிக்கொள்வார்கள். குடித்த காபி டம்பளரை, நாற்காலிக்கு கீழே வைத்துவிட்டு டிவி பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வங்கிக்கு வரும் பல இளைஞர்களிடம் பேனா இருக்காது. இரவல் பேனாவில், சலான்களை நிரப்புவார்கள். பல பிள்ளைகளுக்கு படுத்து உறங்கும் படுக்கையை மடித்து எடுத்துவைக்கத் தெரியாது.
இன்னொரு அலுவலகத் தோழி சொன்னது இது. அவளுடைய உறவினர் ஒருவர் தன் காரை ஓட்டிக்கொண்டு அலுவலகம் போயிருக்கிறார். பொதுவாக அந்தக் காரை அவரது ஓட்டுநரோ, மனைவியோதான் ஓட்டுவார்கள். அன்று இவர் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். மேற்கு மாம்பலம் அருகே வண்டி நின்றுவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. தன் மனைவியைக் கூப்பிட்டு, என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கேட்டாராம் அவர். நடுரோட்டில் காரோடு செயலற்று நிற்கும் அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்த எனக்குச் சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.
இவர்களிடம் சுயசார்பு பற்றியெல்லாம் பேசுவதில் அர்த்தமே இல்லை. சுயசார்பு உள்ளவனால்தான் சுய முடிவுகள் எடுக்க முடியும். சுய முடிவு எடுப்பவன் தான், பின்னர் அதைச் செயல்படுத்தவும் முடியும். செயல்படுத்தும் சுதந்திரம் என்பது ஓரளவுக்கு இங்கே இருக்கிறது. தடைகள் உண்டு. ஆனால், சுயசார்பு உள்ளவர்கள் குறைவாக இருக்கும்போது, இதைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.
நமது சமூகத்தில் ஏதோ ஒருவித நோய் இருக்கிறது. எவ்வளவு பெரியவனாக வளர்ந்தாலும், தன் பிள்ளைகளை இன்னும் சிறுவர்கள் போல் நடத்தும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்களும் அவர்தம் கருத்துகளும் ஒருவிதமான கதகதப்பை பிள்ளைகளுக்குத் வழங்குகிறது. அதனால், அந்த அரவணைப்பையும் கதகதப்பையும் பாதுகாப்பையும் எங்கே இழந்துவிடுவோமோ என்று பிள்ளைகளும் பெற்றோர் வழியில் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டு நடக்கிறார்கள்.
பழமையும் பண்பாடும் நமது செழுமைகள்தான். மூத்தோர் சொல் வேதம்தான். அதை உள்வாங்கிக்கொண்டு தன்வயப்படுத்திக்கொண்டு சுயசிந்தனையோடு செயல்பட வேண்டியது அவசியம் இல்லையா?
இதுபோன்ற சூழ்நிலை நிலவும் இந்திய, தமிழகச் சூழலில், ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ நிச்சயம் வேறோரு திசையை, தீர்வை, மனநிலையை முன்வைக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.