நேசமுடன் 2009 – ஒரு ரெவியூ
Posted in நேசமுடன் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Commentபுத்தாண்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டது. புத்தாண்டின் முதல் நேசமுடன் இதழ் 6ஆம் தேதி புதன்கிழமை அன்று வந்திருக்கவேண்டும். வெளிவரவில்லை. புதிய பணி, வேலை அழுத்தம் என்று எந்தக் காரணத்தையும் என் மனம் ஏற்க மறுக்கின்றது.
அடிப்படையில் எழுத்து, என் மகிழ்ச்சிக்காக. நான் ரசிக்கவில்லை என்றால், இதை எழுதுவதே வேஸ்ட். என் ரசனை, என் எழுத்தைப் படிக்கும் பலரது ரசனைக்கும் ஏற்புடையதாக இருந்தால், இன்னும் மகிழ்ச்சி. ஏதோ ஒரு முனையில் ரசனைகள் ஒன்று சேரும். ஒரு சில விஷயங்களில், அனுபவங்களில் ரசனைகள் ஒன்று குவியும். அதுதான் எழுத்தாளனும் வாசகனும் சந்தித்துக்கொள்ளும் இடம்.
நேசமுடன் மடல் இதழ் பற்றி சென்ற 21 இதழ்களில் பலவித விமர்சனங்கள் வந்திருக்கின்றன.
1. இந்த மடல் இதழ் என்ற கருத்தே அபத்தம், அல்லது இது ஒரு பிரிமிட்டிவ் மாடல். இதன் பிறகு வலைப்பதிவுகள் என்ற அடுத்த தொழில்நுட்ப சாத்தியம் வந்தபிறகு இதைப் பிடித்துக்கொண்டு தொங்குவது அபத்தம்.
2. நான் உயர்ந்த பெடஸ்டலில் அமர்ந்துகொண்டு எழுதுகிறேன்.
3. கருத்துகளில், ஆழம் இல்லை. மேம்போக்கான பத்திரிகை எழுத்து இது.
4. ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் நீளமாக இருக்கிறது. இன்னும் நறுக்கென்று எழுதலாம்.
5. நிறைய ஆங்கிலச் சொற்களைப் பெய்து எழுதுகிறேன்.
பலருக்கு என்னை எந்தச் சிமிழில் வைத்துப் பொருத்திப் புரிந்துகொள்வது என்ற சிரமம் இருக்கிறது. வழக்கமான வெகுஜன இதழாளன் / எழுத்தாளன் என்று சொல்லிவிடுவது மிகவும் சுலபம். அதே சமயம், நவீன இலக்கியம் பற்றியெல்லாம் இந்தாள் பேசித்தொலைக்கிறான். இவனை ஒரு சிறுபத்திரிகை வட்டத்தைச் சேர்ந்தவன் என்று புரிந்துகொள்வதும், சீரியஸ்ஸான எழுத்தாளன் என்று ஏற்றுக்கொள்வதும் சரியாயில்லை.
என் மரபை, என் வழியை, என் இடத்தை, என் முதல் சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் எடுத்து எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தில் ஒரு மிடில் பாத் உண்டு. இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுப்பிரமணிய ராஜு, கந்தர்வன் ஆகிய எழுத்தாளர்கள் தம் எழுத்தின் வலிமையை என்றும், எங்கேயும் குறைத்துக்கொண்டதில்லை. இவர்கள் வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பிரிவினைகளை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. இவர்கள் அனைவரும் வெகுஜன இதழ்களிலேயே தம் பெரும்பாலான படைப்புகளை எழுதியிருக்கிறார்கள். நல்ல எழுத்தை, பரந்த வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் இதன் பின்னிருக்கும் மரபுத் தொடர்ச்சி.
வழக்கம்போல் எழுத்து தரக்கூடிய கொடைகளில் ஒன்று, புதிய நண்பர்கள். நிறைய நண்பர்கள் உருவாகியிருக்கிறார்கள். இவர்களின் தொடர்பைத் தொடர்ந்து பேணுவது என் கடமை. திண்ணை இதழும் இட்லிவடை வலைப்பதிவும் நேசமுடன் இதழ் எழுத்துகளைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். அம்ருதா என் இரண்டு கட்டுரைகள் மறுபதிப்பு செய்திருக்கிறது. புத்தகக் கண்காட்சி நடந்த டிசம்பர் 2009 இதழில் இக்கட்டுரைகள் வெளிவந்தது மிகவும் பொருத்தம். அதேபோல்,
இன்னும் வசவுகள் வாங்க ஆரம்பிக்கவில்லை. நான் எழுதும் செய்திகள், வசவுக்கு அதிகம் வாய்ப்பளிக்கவில்லையோ என்னவோ?! இப்படி இருக்கவே ப்ரியம். பார்ப்போம்.
ஒரு விஷயத்த்தில் இன்னும் தொடர்ந்து தப்பு செய்துகொண்டு இருக்கிறேன். நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்குப் பதில் போடுவதில்லை. சோம்பேறித்தனம் காரணம். இனி அதை மாற்றிக்கொள்ள எண்ணம்.