2010 – செய்ய நினைக்கும் விஷயங்கள்
Posted in பொது on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment2010 தீர்மானங்கள் என்று நான் இதைப் போடவில்லை. தீர்மானங்களை நிறைவேற்றுவது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, தனிநபர்களுக்கும் கஷ்டம்தாம். அதனால், இதையெல்லாம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதை எழுதி வைக்கிறேன்.
1. ‘நேசமுடன்’ மடல் இதழை நண்பர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இதை வாரம் இருமுறை இதழாக மாற்றங்களேன் என்று கருத்து சொன்னார்கள். எழுதுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. எழுத முடியுமா என்றுதான் தெரியவில்லை. மேலும் ஒருவிதத்தில், போர் அடிக்க ஆரம்பித்துவிடுமோ என்ற பயமும் இருக்கிறது. 2010ல் வாய்ப்பிருந்தால், நேசமுடன் மடல் இதழை வாரம் இருமுறை இதழாக அனுப்பிவைக்க உத்தேசம்.
2. பல்வேறு நிலைகளில் இருக்கும் இரண்டு நாவல்களை முடித்து, பிரசுரிக்க முடிந்தால், அற்புதமாக இருக்கும். ஒன்று பத்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்கிறது. 1998ல் பா.ராகவனோடு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா போய் உட்கார்ந்து எழுதியது. இன்னும் முடிக்காமல் இருக்கிறது. சோம்பேறித்தனமே காரணம்.
3. மாதம் ஒரு சிறுகதையேனும் எழுதவேண்டும்.
4. மலையாளம் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நாள் ஆசை. மலையாளப் படங்களாகப் பார்த்து வருகிறேன். புரிவது பிரச்னையில்லை. எழுதப் படிக்கத் தெரியவில்லை. அதை 2010ல் செய்ய முடிந்தால் நல்லது.
5. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மிச்சுவல் பண்டு’ நூலை ரிவைஸ் செய்து எழுதவேண்டும். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும்.
6. விகடன் பிரசுரித்த ‘டிஜிட்டல் உலகம்’ புத்தகத்தின் தொடர்ச்சியாக அடுத்த புத்தகம் எழுதவேண்டும். புதிய தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் பற்றி எழுத எண்ணம்.
எல்லாம் நல்லபடியாக நடக்க நான் வணக்கும் பெருமாள் துணையிருக்க வேண்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.