Posts Tagged ‘கல்கி’

2009 – மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்

Posted in அனுபவம், பொது on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

தனிப்பட்ட அளவிலும் நான் ஆர்வம் செலுத்தும் பல செய்திகளின் அடிப்படையிலும் 2009, எனக்கு மறக்க முடியாத ஆண்டு. தனிப்பட்ட அளவில் என்றால், இதெல்லாம் என் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தவை:

1. 2009 முழுவதும் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஜூனியர் விகடன், கல்கி, நாணயம் விகடன், புதிய தலைமுறை என்று குறைந்தபட்சம் 25 கட்டுரைகளேனும் பிரசுரம் ஆகியிருக்கும்.

2. நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

3. கல்கி இணையச் சிறப்பிதழ் தயாரிக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு.

4. இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.

5. என் பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது. வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கிவிட்டவர்களை எல்லோரையும் ஃபேஸ்புக் மூலம் இணைத்தோம். அப்புறம், நேரடி சந்திப்புகள் தொங்கி, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியான சந்திப்புகள்.

6. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி தனியே கட்டுரை எழுத வேண்டும். ஒரே ஒரு செய்தி மட்டும்: லேட்டஸ்டாக என்ன ஆங்கிலப் புத்தகம் வந்தாலும் வாங்கிப் படித்துவிடுவார் அருட்செல்வர். படிக்கும் வேகமும் மிக அதிகம். அதைப் பற்றிய சுயமான கருத்து ஒன்றையும் அவர் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. அவருக்கு வயது 87.

7. இந்த ஆண்டு, நண்பர் இரா. முருகன் திரைபிரவேசம் செய்திருக்கிறார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் அவர் வசனம் எழுதியிருக்கிறார். இரா.முருகனுக்கு சினிமா ஆசை இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. சாஃப்ட்வேர் சமர்த்து பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. அவர் பெயரைத்தான் இறுதி வரிசை டைட்டில் கார்டில் போட்டார்கள். சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!

8. பா.ராகவன் வசனம் எழுதிய முதல் திரைப்படம், கனகவேல் காக்க, நான் அறிந்து ஒன்றே கால் ஆண்டுகளாக பெட்டியில் இருக்கிறது. டிசம்பரில் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். வேட்டைக்காரன் முட்டுக்கட்டைக்காரனாகி விட்டான்.

9. அஜயன் பாலாவை பல ஆண்டுகளாகத் தெரியும். சினிமா ஆசையில், பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, ராஜேஷ்வரிடம் அசிஸ்டெண்ட்டாகப் போய் சேர்வதற்கு முன்பிருந்தே தெரியும். நன்றாக எழுதக் கூடியவர். சினிமா ஆசை பொல்லாதது. துணை இயக்குநர், நடிகர் என்றெல்லாம் முயற்சித்தார். விகடன் மீண்டும் அவரை எழுத வைத்தது. பிரபலங்களின் சாதனைகளை வரிசையாக எழுதினார். எல்லாம் நான்-ஃபிக்‌ஷன். இப்போது, கல்கி இதழில் ‘பகல் மீன்கள்’ என்றொரு தொடர்கதை எழுதுகிறார். இலக்கியத்துக்குள் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

10. பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கொக்காட்டி துலுக்கன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் நண்பர் கொ.மு. ரியாஜ் அகமது. நல்ல வாசகர். என் சின்ன வயது நண்பர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை கோவையில் சந்தித்தேன். வாழ்க்கை பல வலிகளை அவருக்கும் வழங்கியிருக்கிறது. அதையும் மீறி உற்சாகமாக இருந்தார். புத்தக வாசிப்பைத் தொடர்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.

செய்து முடிக்காதவை, கஷ்டங்கள் எல்லாம் தனிப்பட்டவை. அல்லது அதெல்லாம் முடிந்துபோய்விட்டவை. அதனாலேயே அதற்கு இனிமேல் ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை.

அது ஒரு பொற்காலம்

Posted in எழுத்தாளர்கள், புத்தகங்கள் on December 17th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

கல்கி ராஜேந்திரன், கல்கி இதழில் எழுபது முதல் ஏழு வரை என்று எழுதிய தொடரை, அது ஒரு பொற்காலம் என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். கல்கி ராஜேந்திரன் நான் மதிக்கும் மிகவும் முக்கியமான இதழ் ஆசிரியர். எழுத்தாளர் கல்கி, சதாசிவம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர் ராஜேந்திரன். ஒரு இதழை, எந்த விதமான அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், சமரசங்களுக்கும் ஆட்படாமல், நடுநிலையோடு நடத்த முடியும் என்பதை நிரூபித்தவர். அதேசமயம், இளைஞர்களை எழுத வைப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் மிக முக்கியம். நான் அவரைச் சந்தித்தது, தொடர்ந்து என்னை அவர் எழுத ஊக்கமளித்தது தனிச் செய்திகள்.

இந்தப் புத்தகம், அவருடைய அனுபவங்களை – முக்கியமாக கல்கி, ராஜாஜி, டி.கே.சி., எம்.எஸ்., சதாசிவம் ஆகியோரோடு ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார். மேலும் அந்தக் காலத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களான நா.பா., அகிலன், பகீரதன், சோமாஸ்கந்தன் ஆகியோரோடு பழகிய அனுபவங்களையும் எழுதியுள்ளார். இந்த நூலில், பல விஷயங்கள் என்னைக் கவர்ந்தன:

இதை ராஜேந்திரன் மட்டும் எழுதவில்லை. வெளியே ஆசிரியர் ‘கல்கி ராஜேந்திரன்’ என்று மட்டும் போட்டிருப்பது சரியாகாது. இதில், அவரது மனைவி, விஜயா ராஜேந்திரனின் பங்களிப்பு மிக அதிகம். பல அத்தியாயங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் செய்திகளாகவே பல அனுபவங்களை, ரசனைகளை ராஜேந்திரன் எழுதியுள்ளார்.

கல்கியின் மேதமை, ராஜாஜியின் புத்திசாலித்தனம், டி.கே.சியின் நுணுக்கமான ரசனை என்று பல செய்திகளை அனுபவங்கள் மூலமாக ஆசிரியர் எழுதிச் செல்கிறார். அத்தோடு, இன்றைய காலகட்ட அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்வது பொருத்தமாக இருக்கிறது.

ஒரு எழுத்தாளராக பலரும் போற்றும் கல்கி, ஒரு அப்பாவாக எப்படி இருந்தார் என்பதில்தான் என் ஆர்வம் முழுவதும். கல்கி எப்படியெல்லாம் ராஜேந்திரனை பண்படுத்தினார் என்பது நூல் முழுவதும் பரவியிருக்கிறது. ஒரு சம்பவம், மிகவும் நெகிழ்ச்சியானது. அதை அப்படியே தருவது பொருத்தமாக இருக்கும்:

‘கல்கி’ எப்படி எழுதினார் என்பதை விட என்ன எழுதினார் என்பதுதான் முக்கியம். என்றாலும் எப்படி எழுதினார், எவ்வாறு சிந்தித்தார் என்று பார்ப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது! அவரிடம் இருந்த குறை நிறைகள் இரண்டேதான். ஒன்று, வேலைச் சுமைகள் மிக அதிகம்; இரண்டு, அவற்றைச் செய்வதற்கான உடல் ஆரோக்கியம் மிகக் குறைவு! இதனால் ஓர் அந்தரங்கப் பணியாளன் போல நான் அவருக்குச் செய்லபட நேர்ந்தது. ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டதால் அவர் அடிக்கடி இருமி உமிழ்வார். அந்த எச்சில் கிண்ணத்தை அவ்வப்போது சுத்திகரித்து வைப்பது தொடங்கி, ஆயுர்வேத வைத்தியர் சங்குண்ணி மேனன் கொடுத்த தைலத்தை அவர் உடலில் தடவிக் குளிப்பாட்டுவது வரை அவருக்காக பல்வேறு காரியங்களைச் செய்திருக்கிறேன். அவர் வெளியூர் சென்றால் பெட்டியில் துணி மணிகள் அடுக்குவது, படுக்கை கட்டுவது முதல் ஹிந்து நாளிதழி!
ல் à
��வர் கேட்கிற செய்தியைத் தேடி எடுத்துத் தருவது வரை பலவிதங்களில் உதவியிருக்கிறேன். குன்றாத அன்புடனும் ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடனும் இவற்றைச் செய்வேன். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஃபார்ம் படித்துக்கொண்டிருந்த சமயம் அவருக்கு ஒரு நாள் நான் கால்மிதித்துக் கொண்டிருந்தேன். எனது குதிக்காலால் இலேசாக மிதித்து அந்த இதத்தில் அவரைக் கண்ணுறங்க வைப்பது எனக்கிருந்த பணிகளில் ஒன்று.

“ஏண்டா, என்னையே கவனிச்சிண்டிருந்தா உன் படிப்பு என்ன ஆகிறது?” என்று மனவேதனை எட்டிப் பார்க்கக் கவலையுடன் கேட்டார்.

“கவலைப்படாதீங்கோ! பிரமாத மார்க் வாங்காவிட்டாலும் பி.ஃபார்ம் டிகிரி வாங்கிவிடுவேன், நிச்சயம்” என்று ஆறுதலாக உறுதி அளித்தேன். ஆனால், என் துரதிருஷ்டம், நான் பட்டம் பெறுவதைக் காண அவர் உயிருடன் இல்லை!

எம்.எஸ். என்ற இசை தேவதை பற்றி எவ்வளவு படித்தாலும் என் ஆர்வம் அடங்குவதில்லை. வாழ்க்கை முழுவதும் இசையால் நிரம்பி, இசைபட வாழ்ந்தவர். இந்த நூலில், விஜயா ராஜேந்திரன், எம்.எஸ். பற்றி சொல்லிக்கொண்டே போகும் அனுபவங்கள், உணர்வு நெகிழ்ச்சிகள் கணக்கிலடங்காதவை. எம்.எஸ். மறைவுக்குப் பின், விஜயா ராஜேந்திரன் எழுதியுள்ள ஒரு கட்டுரை நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கிளிஷேவானாலும் பரவாயில்லை, சொல்லிவிடுகிறேன். படிக்கும்போதே, என் கண்களில் நீர் திரையிடத் தொங்கிவிட்டது.

எம்.எஸ் பற்றிய சித்திரம் இவ்வளவு துல்லியமாக எனக்கு வேறெங்கும் கிடைக்கவில்லை. சதாசிவம் பற்றி கிடைக்கும் சித்திரமும் மிக நேர்த்தியானது. பல அத்தியாயங்களில் சதாசிவம் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஆளுமையை ராஜேந்திரன் மிக கவனமுடன் எடுத்து எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் நோக்கமே பழைய நினைவுகளை அசைபோடுவதுதான். எப்போதுமே கடந்துவிட்ட காலம், அற்புதமானது. இந்த நூலிலும் அந்த அற்புதம் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. மனம் இன்றைய காலகட்டத்தோடு பல சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஏக்கப்பெருமூச்சு விடுவதையும் தவிர்க்க முடியவில்லை. இறுதி அத்தியாயம் சொல்வது போல், ‘அந்த நாளும் வந்திடாதோ’தான்.

அது ஒரு பொற்காலம், கல்கி ராஜேந்திரன், வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை – ரூ.100

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ்

Posted in இதழியல் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

வரும் ஞாயிறன்று வெளிவரும் கல்கி இதழ், இண்டர்நெட் சிறப்பிதழ். 20.12.2009 தேதியிட்ட இதழ், 13.12.2009 அன்று கடைகளில் கிடைக்கும். அந்த இதழை நான் தயாரித்திருக்கிறேன். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உற்சாகமான வேலை. இதழைப் பார்த்துவிட்டு, படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை எழுதுங்கள். இதழ் தயாரித்த அனுபவத்தை அடுத்த நேசமுடன் மடல் இதழில் எழுதுகிறேன்.

இலக்கியக் கருவூலங்கள்

Posted in இலக்கியம் on October 22nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

இந்த ஆண்டு  (2009) கல்கி தீபாவளி மலர் வெளிவரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கல்கி தீபாவளி மலரைத் தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறேன். இம்முறை இல்லை என்னும்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மற்றபடி எல்லா மலர்களையும் வாங்கிவிட்டேன்.

ஆனந்த விகடன், கலைமகள், திரிசக்தி, ஓம்சகதி, லேடீஸ் ஸ்பெஷல் ஆகிய மலர்களை வாங்கிவிட்டேன். அமுதசுரபி வாங்க வேண்டும். ஆன்மிக பத்திரிகைகள் வெளியிட்டுள்ள மலர்கள் நிறைய இருக்கின்றன. வாங்கத் தோன்றவில்லை.

எல்லா மலர்களையும் ஒரு புரட்டுப் புரட்டி, மேலோட்டமாகப் படித்துவிட்டேன். இந்த நேசமுடன் இதழிலேயே ஒவ்வொரு மலரைப் பற்றியும் தனித்தனியாக விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். படித்து முடிக்க முடியவில்லை. அடுத்த நேசமுடன் இதழை தீபாவளி மலர் ஸ்பெஷலாக வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.

என் அம்மாவழி பாட்டியின் கிராமத்து வீட்டில் இருந்து நான் எடுத்து வந்த முக்கிய பொக்கிஷங்களில் ஒன்று தீபாவளி மலர்கள். 50களின் கடைசியில் இருந்து 63, 64 வரை ஆனந்த விகடன், கலைமகள் மலர்கள் என்னிடம் இருக்கின்றன.

அதேபோல், ஆனந்த விகடன் வெளியிட்ட பெரிய தமிழ் தமிழ் அகராதியையும் கிராமத்தில் இருந்துதான் எடுத்துவந்தேன். புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பத்து வயது காலகட்டத்திலேயே, இதனால் என்ன பயன் என்று தெரியாமல், எல்லா புத்தகங்களையும் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

பதின்ம பருவம் முடிந்து கல்லூரியில் கால்வைத்த காலத்தில், கணையாழியில் எனக்கு பார்ட் டைம் வேலை. ரூ.300 மாதச் சம்பளம். பெரும்பகுதி இதுபோன்ற பழைய நூல்கள், தீபாவளி மலர்கள் வாங்கிச் சேர்க்கத்தான் அதைப் பயன்படுத்திக்கொண்டேன். நாவலர் நெடுஞ்செழியனின் மன்றம், முரசொலியின் மலர்கள், சமுதார பிரசுராலயம், ஜோதி நிலையம், வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்கள் ஆகியவற்றை அப்போதுதான் வாங்கிச் சேர்த்தேன்.

வாசகர் வட்டத்தை நடத்திய தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியையும் அவர் கணவர் கிருஷ்ணமூர்த்தியையும் இப்படித்தான் சந்தித்தேன். தி.நகர் தணிகாசலம் தெருவில் இருந்த ஒரு அழகான வீடு அவர்களுடையது. கிருஷ்ணமூர்த்திக்கு அப்போது மிகவும் வயதாகியிருந்தது. ஈசி சேரில் சார்ந்திருந்தார்.

நான் வாசகர் வட்டப் புத்தகங்களை வாங்க வந்திருக்கிறேன் என்றபோது கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியிட்ட பல நூல்கள் பைண்ட் கூடச் செய்யப்படாமல், அச்சகத்திலேயே உதிரி ஃபாரம்களாக இருந்ததைச் சொன்னார். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அப்புறம் வெளியே வந்தார். என்ன பேசினோம் என்று நினைவு இல்லை. ஆனால், கொடிகள் தொங்கும் ஒரு வராண்டா ஞாபகம் இருக்கிறது. அதில், கட்டைச் சுவரில் பல உன்னதமான நவீன இலக்கிய நூல்களை வெளியிட்டு, அற்புதமான சேவை செய்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி உட்கார, அவர் ஈஸிசேரில் சாய்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தது சித்திரம் போல் ஞாபகம் இருக்கிறது.

எத்தனை நூல்கள்? அறுசுவை என்றொரு தொகுதி இருக்கிறது. ஆறு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. அதில் வை. ரங்கநாதன் என்பவர் எழுதிய வீதி என்றொரு குறுநாவல் உண்டு. ஒரு அரசியல் நாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் அந்தக் குறுநாவல்.

நரசய்யாவின் கடலோடி, தி.ஜா.வின் நடந்தாய் வாழி காவேரி, சா.கந்தசாமியின் சாயாவனம், தி.ஜா.வின் அம்மா வந்தாள் எல்லாம் வாசகர் வட்டம் வெளியிட்டது. இன்றும் தமிழ் இலக்கியத்தின் பெயர் சொல்லும் நூல்கள் இவை.

புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்த பிறகு, இன்னும் இரண்டு பைத்தியங்கள் சேர்த்துப் பிடித்துக்கொண்டன. முதல் பதிப்பைத் தேடிச் சேர்ப்பது அதில் ஒன்று. சமீபத்தில் புத்தக அடுக்குகளை ஒழித்துக்கொண்டு இருந்தபோது, வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மூன்று பதிப்புகள் இருக்கின்றன. அதேபோல் ஜெயகாந்தனின் பல நூல்களின் முதல் பதிப்புகளை வைத்திருக்கிறேன். ஒரு புளியமரத்தின் கதை, காலமும் ஐந்து குழந்தைகளும் உண்மை வேட்கை பாம்பும் பிடாரனும் ஆகியவற்றின் முதல் பதிப்புகளும் இருக்கின்றன.

இன்னொரு பைத்தியம், தொடர்கதைகளின் பைண்ட் வால்யூம்களைச் சேகரிப்பது. தி.ஜா.வின் அன்பே ஆரமுதே, உயிர்த்தேன் எல்லாம் அப்படிச் சேகரித்தவை.

இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி ஆகியோர் எழுதிய நாவல்களின் பைண்ட் வால்யூம்கள் என்னிடம் இருந்திருக்கின்றன. வாசிப்புப் பழக்கம், சுவை மாறும்போது, மெல்ல மெல்ல இவற்றையெல்லாம் என் புத்தக அடுக்களில் இருந்து நீக்கியிருக்கிறேன்.

இதுபோல், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது என் புத்தக அடுக்குகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறேன். நிறைய நூல்களை ஒவ்வொரு முறையும் இதுபோல் நீக்கியிருக்கிறேன். எப்போது எடுத்துப் படித்தாலும் எதையேனும் புதிதாகத் தரக்கூடிய நூல்கள் என் அலமாரியின் முன் அடுக்குகளில் இருக்கும். அசோகமித்திரன், தி.ஜா, இ.பா. ஆகியோரின் எல்லா நூல்களும் இந்த வரிசையில் வருபவை. சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகள், சுஜாதாவின் நிலா நிழல், வண்ணநிலவனின் தாமிரபரணிக் கதைகள், ரெயினீஸ் ஐயர் தெரு, செல்மா லாகர்லேவின் தேவமலர், கெளதம சித்தார்த்தனின் வேனிற்கால வீடு: சில குறிப்புகள் ஆகியவையும் இங்கே உண்டு.

ஆங்கிலத்தில் எப்போதும் மார்குவேஸ் என் மனம் கவர்ந்த எழுத்தாளர். சென்ற வாரம் கோவை, பொள்ளாச்சி பயணத்தின் போது கூட, ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிடியூட்தான் என் பக்கத் துணை. மனுஷன் மகா மகா மேதை. தொட்ட இடமெல்லாம் கதையாகப் பொங்கிப் பிரவகிக்கிறது. எங்கே புத்தகம் முடிந்துவிடப் போகிறதோ என்ற பதற்றத்துடன் தான் இந்த நாவலைப் படிக்க வேண்டியிருக்கிறது. இவருடைய நூல்களை மூலமொழியில் படிக்கவேண்டும் என்ற ஆவல்தான் என்னை ஸ்பானிஷ் மொழி படிக்கத் தூண்டிக்கொண்டு இருக்கிறது.

இலக்கியத்தைப் பொறுத்தவரை, காலம் ஆக ஆகத்தான் சுவை கூடிக்கொண்டு இருக்கிறது. பழைய புத்தகங்கள் ஆனாலும் சரி, தீபாவளி மலர்களானாலும் சரி, பழைய நூல்களில் உள்ள ரசனை, அக்கறை, தேர்வுகள் ஆகியவை எப்போதும் கொஞ்சம் உயர்வாகத்தான் இருக்கின்றன.

அந்தக் காலத்து கலைமகள் தீபாவளி மலர்கள் மிகவும் நவீனமாக இருந்திருக்கின்றன. வித்தியாசமான, புதுமையான எழுத்துகளை கி.வா.ஜ. அப்போதே பிரசுரித்திருக்கிறார்.

ஒரு பக்கம் தீபாவளி மலர்கள், இலக்கிய கருவூலங்களாக, ஓவியப் பெட்டகங்களாக இருந்திருக்கின்றன. ரெகுலர் இதழ்களில் என்ன செய்கிறார்களோ இல்லையோ, தீபாவளி மலர்களில் தங்கள் ரசனையை, சுவையை பத்திரிகைகள் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. பல தீபாவளி மலர்கள், வார இதழ்களைவிடத் தரத்தில் உயர்வாக இருக்கக் காரணம் இதுதானோ என்னவோ?