Posts Tagged ‘கமல்’

உன்னைப் போல் ஒருவன்

Posted in திரைப்படம் on October 7th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

இந்தப் படத்தைப் பற்றி உடனே எழுதவேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒருசில கருத்துகளை முந்திச் சொல்ல வேண்டும் என்ற அவசரம் அதில் இருக்கும் என்பதே காரணம். நான் பிரேக்கிங் நியூஸ் மடல் இதழ் நடத்தவில்லை. இப்போது பத்திரிகைகளிலும் இணையத்திலும் பல விமர்சனங்கள் வந்துவிட்டன. படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. மக்களுக்குப் படம் பிடித்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் கமலைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

உ.போ.ஒ.வின் இந்தி மூலமான எ வெட்னஸ்டே திரைப்படத்தை குறைந்தபட்சம் 15 முறையாவது பார்த்திருப்பேன். என்னால் என் மகளுக்கும் அப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் அத்துபடி. இப்போது தமிழ்ப் பதிப்பைப் பார்த்தபோது, இந்திப் படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. உ.போ.ஒ., எ வெட்னஸ்டே படத்தில் இருந்து எங்கெல்லாம் விலகி நிற்கிறது, எங்கே ஒத்துப் போகிறது, என்ன புதிய பங்களிப்புகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன, என்ன நீக்கல்கள் நடந்திருக்கிறது என்று பார்க்கவே மனம் விழைகிறது.

முதலில் சில அழகான புதிய சேர்க்கைகளைப் பார்ப்போம்.

1. இந்தியில், போலீஸ் கமிஷ்னர் பிரகாஷ் ரத்தோட், ஓய்வு பெற்ற மறுநாள், கடற்கரையில் உட்கார்ந்து, தன் பழைய நினைவுகளை அசைபோடுவார். அதனால், ஆரம்ப காட்சியில், ஒரு போலீஸ்காரர் பிரகாஷுக்கு சேர் தூக்கிக்கொண்டு ஓடிவர, பின்னால், சிவப்பு விளக்குப் பொருத்திய அம்பாசிடர் கார் நின்றுகொண்டு இருக்கும். அதிகாரத்தின் மிச்சம் அங்கே இன்னும் இருக்கும். உ.போ.ஒ.வனில் போலீஸ் கமிஷ்னர் மாரார் பதவி நீக்கப்பட்டிருப்பார். எந்த ஒரு அதிகார மிச்சமும் இல்லாமல், தனி மனிதனாக, நாயைப் பிடித்துக்கொண்டு சூர்யோதயத்தைப் பார்த்துகொண்டு இருப்பார் மாரார். மிகவும் நுணுக்கமான இம்மாற்றம், படத்துக்கு நிறைய வலு சேர்க்கிறது.

2. இதன் தொடர்ச்சி இன்னும் இரண்டு இடங்களில் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து கமிஷ்னர் மாரார் காக்கி உடையைத் தரித்திருப்பார். கடைசியில் எல்லா பரபரப்புகளும் முடிந்த பின்னர், அவர் தன் அறைக்குச் சென்று, சாதாரண பேண்ட் சட்டையைப் போட்டுக்கொண்டு, காமன்மேன்னைச் சந்திக்கக் கிளம்புவார். இந்தியில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பிரகாஷ் ரத்தோட் சாதாரண உடையில்தான் இருப்பார். அதிகார தொனி நீங்குவதை, தானும் காமன்மேன் ஆவதை மாரார் பாத்திரப் படைப்பில், தமிழில் நுணுக்கமாகக் காண்பித்திருக்கிறார்கள்.

3. காமன்மேன்னை மாரார் சந்திக்கும் முறையும் தமிழில் கவனமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியில், காமன்மேன்னும் பிரகாஷ் ரத்தோடும் எதிர் எதிர் திசைகளில், முனைகளில் இருந்து நடந்துவருவார்கள். ஒருவரை ஒருவர் கிராஸ் செய்வார்கள். பின்னர் நின்று பேசுவார்கள். தமிழில், காமன்மேன் படியிறங்கி வரும் திசையும் மாரார் அவரைச் சந்திக்கப் போகும் திசையும் ஒரே திசையாக இருக்கும். பின்னர் கைகுலுக்கிக்கொள்வார்கள். கருத்து ரீதியில் இருவரும் ஒரே புள்ளியில் இணைவதை, இக்காட்சி வெளிப்படுத்துகிறது.

4. இந்தியில் காமன்மேன் கட்டடத்தில் படியேறுவதை அதிக நேரம் காண்பிக்க மாட்டார்கள். தமிழில் அதற்கு ஒரு நுணுக்கமான வித்தியாசம் செய்யப்பட்டிருக்கிறது. காமன்மேன் சன்னதம் வந்தவர் மாதிரி படியேறுவார். நடையில் உத்வேகம் தெரியும். சமநிலையில் இருந்து கோபம் உயர்வதின் காட்சிப் படிமமாக படிகள் இங்கே பயன்பட்டிருக்கும். இறங்குபோதும் பதற்றம் தொற்றிக்கொள்ள, ஜல்லென கோபம் வடிந்து, உடலில் அயர்வோடு தலைகுனிந்து நடந்து வருவார். மிக அழகான காட்சி அமைப்பு இது.

5. தமிழில் வசனங்களில் நெகிழ்ச்சி, சுதந்திரம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உரையாடல் நடுவே வந்துவிழும் ஒரு சில கமெண்ட்கள், வரிகள் பளிச்சென்று இருக்கின்றன. இரா. முருகன் பங்களிப்பு.

மேலே சொன்னவை மகிழ்ச்சி அளித்த செய்திகள் என்றால், கொஞ்சம் மனக்குறை அம்சங்களும் இப்படத்தில் உண்டு.

1. படத்தின் கேமரா, காட்சி அமைப்பு பெரிய குறை. இந்தியில் பெரும்பாலான காட்சிகள் லாங்க் ஷாட், மிட் ஷாட் ஆகியவற்றிலேயே இருக்கும். டைட் குளோஸ் அப் காட்சிகள் குறைவு. இதன் பலனாக, எல்லா காட்சிகளிலும் பின்னணியில் விரிந்த பரப்பு இருக்கும். ஸ்பேஸை மிக அகலமாக, கேன்வாஸை பெரிதாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பிரும்மாண்டம் சாத்தியமானது இதனால்தான். காட்சியின் கருத்துகளோடு ஒன்ற முடிந்தது இதனால்தான். தமிழில், நிறைய முகத்தை நெருக்கும் டைட் குளோஸ் அப் காட்சிகள். இங்கே தனி மனிதனான காமன்மேன் மையம் கொள்ள, இந்தியில் விரிந்த பரப்பில் அவனது இருப்பு மையப்படுத்தப்பட்டிருக்கும்.

2. இரண்டாவது வருத்தம், திரைக்கதை அமைப்பு. மிகவும் வளவளவென்ற திரைக்கதை. இந்தி பதிப்பு, பட்டு கத்தரித்தாற் போல் இருக்க, தமிழோ, காடா துணியைக் கிழித்தது போல் இருக்கிறது. இந்தியில் காமன்மேன், கமிஷ்னர், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், ஒரு பெண் நிருபர் அனைவருக்கும் தனித்தனி சுவைகள், முகங்கள் உண்டு. தமிழில், காமன்மேனுக்கும் கமிஷ்னருக்கும் தவிர மற்றவர்கள் யாருக்கும் முகம் இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஜெய் (தமிழில் இன்ஸ்பெக்டர் சேதுராமன்) பாத்திரம், மிக மிக அழகானது. அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே இருக்கும் காதல் ஒரு புறம் கவிதைபோல் விரியும். அந்தக் கவிதைக்கு பின்னணி இசை மெருகூட்டும். மேலும், எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும், அதைத் தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல், தானே அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் நுட்பத்தை அப்பாத்திரம் வெளிப்படுத்தும். தமிழிலோ, சேதுராமனின் காதல் முனை மழுங்கிப் போய் இருக்கிறது.

3. காலப்ரமாணம் ஒரு பெரிய பிரச்னை. பல காட்சிகள், அது முழுமையாக ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன. உதாரணமாக இந்தியில், தலைமைச் செயலர் வரும் ஒரு காட்சி, மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும். டிராபிக் நடுவே அவரது கார் விரைந்து வருவது, ஒரு ரவுண்டானாவில் திரும்புவது, பின்னர், கமிஷ்னர் அலுவலகம் வந்தவுடன், நீண்ட வராந்தாவில் ஒரு முனையில் இருந்து அடுத்த முனை வரை நடந்துவருவது என்று மெல்ல மெல்ல பார்வையாளனின் எதிர்பார்ப்பைத் தூண்டிவிடக்கூடியதாக அக்காட்சி உருவாக்கப்பட்டிருக்கும். தமிழில் இது மிஸ்ஸிங்.

4. இசை. மிகவும் வருந்த வைத்தது. இந்தியில் ஒவ்வொரு பாத்திரத்தின் தனித்தன்மையையும் பின்னணி இசைதான் உணர்த்தும். தமிழில், அது எந்த வேலையையும் செய்யவில்லை. டெம்போவை உயர்த்தவில்லை, காதலை ரசனை மிகுந்ததாக்கவில்லை.

5. படத்தில் மிகவும் அபத்தமான ஒரு விஷயம், கமல் துப்பாக்கியை எடுத்து அவ்வப்போது காட்டுவது. ஏற்கெனவே ஒரு சாமானியன் குண்டு வைக்கக் கிளம்பிவிட்டான் என்பதுதான் கதை. அதில் கூடவே அவன் துப்பாக்கியும் தூக்குகிறானாம்! மக்களுக்கு புரியாது போய்விடுமோ என்ற பயம் போலிருக்கிறது. அந்தக் காலத்து பாலசந்தர் படங்களில் மேஜர் சுந்தர்ராஜன், ஒரே வசனத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்வது போல் இருக்கிறது இது. ஒரு கட்டத்தில் கண்ணில் வழியும் நீரை, காமன்மேன் துப்பாக்கியால் துடைப்பாராம்! அபத்தத்தின் உச்சம். மொத்த சினிமாவின் அழகியலுக்குள் ஒட்டாமல் துருத்திக்கொண்டிருக்கும் அம்சம், இந்தத் துப்பாக்கி.

இதெல்லாம் என்னைப் போல் வேலையத்தவனின் விமர்சனங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் படம் ஓடுகிறது. மக்களுக்கு படத்தின் மையக்கரு பிடித்திருக்கிறது. தீவிரவாதத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் எரிச்சலும் கோபமும் நிஜமானது. சரியான விதத்தில் அந்த நாடியை இந்திப் பதிப்பும், தமிழ் பதிப்பும் பிடித்துவிட்டது. அதனால் படம் வெற்றி அடைந்ததில் ஆச்சரியம் இல்லை.