2009 – மறக்க முடியாத ஆண்டு 1 : பதிப்பகம்
Posted in பதிப்பகம் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment2009 ஆம் ஆண்டு ஒருவித தொய்வுடன் தொடங்கிய மாதிரி இருந்தது. 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி பலருக்கு அவ்வளவு வருவாய் ஈட்டித் தரவில்லை. சிறு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒருவிதமான வருத்தத்தில் இருந்தார்கள். சர்வதேசப் பொருளாதாரத் தேக்கம், வேலையிழப்பு, பணப்புழக்கம் இன்மை ஆகியவை ஒருவகையில் பதிப்பாளர்களை நிரம்ப யோசிக்க வைத்தது.
ஜூன் மாதம் வரை கூட, பல பதிப்பாளர்கள் அதிகம் சுவாரசியம் இல்லாமல் இருந்தார்கள். விகடன் பிரசுரம், நூல்களின் எண்ணிக்கையைக் குறைத்தது. நிறைய மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. கிழக்கு பதிப்பகம், ரூ. 20 — ரூ. 25 விலை வரிசையில் ஒரு மார்க்கெட் இருப்பதை ஏற்கெனவே உணர்ந்துகொண்டு இருந்தது. எண்ணற்ற நூல்களை இந்த விலைக்கு ஏற்ப வெளியிடத் தொடங்கியது. பள்ளி நூலகங்கள், பள்ளி விழா பரிசுகளுக்கு இந்நூல்கள் பயனுடையதாக இருந்தன.
2009ல் ஆழி பதிப்பகம் அமைதியாக முன்னுக்கு வந்திருக்கிறது. அதே போல், திருவண்ணாமலையில் இருக்கும் வம்சி புக்ஸும் முன்னுக்கு வந்திருக்கிறது.
செப்டம்பர், அக்டோபருக்குப் பின்னர் ஆர்வம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்னர் நடந்த நெய்வேலி புத்தகக் கண்காட்சியை யாரும் அவ்வளவு சுவாரசியமாகச் சொல்லவில்லை. நவம்பர், டிசம்பரில் ஏராளமான நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
சிறிய பதிப்பாளர்கள்தான் ஏராளமான நூல்களோடு வெளியே வந்திருக்கிறார்கள். காலச்சுவடு, உயிர்மை நிறைய நூல்களை வெளியிட்டிருக்கிறது.
திரிசக்தி பதிப்பகம், உயிர் எழுத்து வெளியீடு, அகநாழிகை பதிப்பகம் ஆகியவை இந்த ஆண்டு என் கண்ணுக்குத் தெரிந்த புதிய அறிமுகங்கள். திரிசக்தி 27 நூல்களை வெளியிட்டிருக்கிறது. உயிர் எழுத்து 30.12.2009 அன்று வெளியீட்டு விழா வைத்திருக்கிறது. அகநாழிகை பத்திரிகை நூல்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.
நான் நாவல் ப்ரியன். இந்த ஆண்டு என்னென்ன நாவல்கள் வந்திருக்கின்றன் என்று பட்டியல் தயாரித்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அதை நேசமுடன் மடல் இதழில் வெளியிடுகிறேன்.
இன்று (30.12.2009) நிறைய எதிர்பார்ப்புகளோடு, சென்னைப் புத்தக கண்காட்சி தொடங்குகிறது. பார்த்துவிட்டு எழுதுகிறேன்.