ஒரு திருத்தம், ஒரு மகிழ்ச்சி
Posted in பதிப்பகம், பொது on December 2nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to commentநேசமுடன் 16 இதழில், சென்னைப் புத்தகக் கண்காட்சி, டிசம்பர் 28, 2009 முதல் ஜனவரி 8, 2010 நடைபெற இருக்கிறது என்று தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்க. பல நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். சரியான தேதிகள்: டிசம்பர் 30, 2009 முதல் ஜனவரி 10, 2010. பிற தகவல்கள் சரியானவை. (வலைத்தளத்தில் சென்ற வாரமே சரி செய்துவிட்டேன்).
அம்ருதா டிசம்பர் இதழில், நேசமுடன் மடல் இதழ்களில் வெளியான தமிழ்ப் பதிப்புலகம் – இன்றும் நாளையும், தமிழ்ப் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை? என்ற கட்டுரைகளை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். எடுத்து வெளியிட்ட அம்ருதா ஆசிரியர் பிரபு திலக், கெளரவ ஆசிரியர் திலகவதி ஆகியோருக்கு என் நன்றி.
இந்தக் கட்டுரைகள் என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டனவோ அது நிறைவேறிக்கொண்டு இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தி. பல பதிப்பாள, விற்பனையாள நண்பர்கள் என்னுடன் இக்கட்டுரை பற்றிப் பேசினர். ‘அருணோதயத்தை ரூ.1 கோடி அடுக்குல வெச்சது தப்பு சார், அவங்க ரூ.5 கோடி வியாபாரம் செய்வாங்க’, ‘கண்ணதாசன் நீங்க சொல்றாமாதிரி ரூ.5 கோடி வியாபாரம் செய்வார்னு தோணலை சார்’, ‘மருதா பத்தி நீங்க எழுதியிருக்கறது சரி சார்’ என்றெல்லாம் என் குறைகளை அவர்கள் சுட்டிக் காட்டும்போது நான் மகிழ்ச்சியாகவே ஏற்றுக்கொள்கிறேன். என் தகவல்கள் தவறாக இருப்பதில் எனக்கு எந்த மனவிசனமும் கிடையாது. எந்தவிதமான பப்ளிஷ்டு, டாக்குமெண்டட் ஆதாரமும் இல்லாமல், தமிழ்ப் பதிப்பாளர்களின் புத்தக விலைப்பட்டியல், பெஸ்ட் செல்லர், மார்க்கெட் இண்டலிஜென்ஸை மட்டும் வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட பட்டியல் அவை.
அதில் தவறு இருப்பது இயல்பானது. பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சரியான தகவல்களை முன்வந்து தரும்போது, அந்தப் பட்டியல் மேன்மேலும் மேம்படும். செப்பனிடப்படும். இன்னொரு நண்பர் சொன்னது இன்னும் சரியாகத் தோன்றியது, ‘ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியல் மாறலாம் சார். எல்லா வருஷமும் எல்லோரும் புது புத்தகங்கள் போடுவதில்லை, நிறைய விற்பனையும் ஆவதில்லை. பல்வேறு காரணங்களால், ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்’ என்றார் அவர். சரியான கருத்தாகத் தோன்றியது.
தமிழ் பதிப்பகங்கள் தம் விற்பனை விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், தொழில், வர்த்தக அமைப்புகளாக இருக்கும் பபாசி போன்றவை, தமிழக சிஐஐயின் பதிப்பு அங்கம் (இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்) போன்றவை, தமிழ்ப் பதிப்புலகின் போக்குகளையும் வளர்ச்சிகளையும் அவ்வப்போது ஆய்வுகளாகவும் அறிக்கைகளாகவும் வெளியிடுவது உபயோகமாக இருக்கும்.
ஒரு துறை வளரவேண்டுமென்றால், ஆர்வமும் திறமையும் எவ்வளவு தூரம் முக்கியமோ அவ்வளவு தூரம் முதலீடும் முக்கியம். இந்தியாவில் கடந்த ஓராண்டில் கூட, மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் துறையில் ஏராளமான அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதுபோன்ற பதிப்பு, பத்திரிகை, இன்னபிற மீடியா தொழில்களில் முதலீடு செய்யவென்றே, பல நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தமிழ்ப் பதிப்புலகின் மொத்த வளம், அதில் இருக்கும் முன்னேற்றங்கள் ஓரளவுக்குத் தெரியவருமானால், இந்தச் சந்தையிலும் வந்து முதலீடு செய்வார்கள். முதலீடு கிடைக்கும்போது, வளர்ச்சி பெருகும். உபதுறைகள் எல்லாம் வளரும். இத்தொழிலில் ஆர்வத்துடன் இளைஞர்கள் ஈடுபடுவார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நம் பதிப்புத் துறை குடத்திலிட்ட விளக்காக இல்லாமல், குன்றின் மேலிட்ட விளக்காக இருப்பது நல்லதல்லவா?