மாணவர்கள்

வலி நிரம்பிய சரித்திரம்

Posted in சமூகம், மாணவர்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 2 Comments

முதல் முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா 19.01.2010 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதுவரை நான் பட்டம் வாங்கியபோதெல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கோ பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கோ சென்றதில்லை. விழா முடிந்த மறுநாள் கல்லூரி அலுவலகம் போய், அங்கே இருக்கும் பணியாளர் கையால்தான் டிகிரி சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கிறேன்!

ஒரு மாநிலத்தின் ஆளுநர் கையால், பட்டம் வாங்குவது எவ்வளவு பெருமை வாய்ந்த தருணம் என்பதை, இப்போதுதான் புரிந்துகொண்டேன். பாரம்பரியம் மிக்கப் பல்கலைக்கழகத்தின் பாரியம்பரிக்கமிக்க விழா. பின்பற்றப்பட்ட நடைமுறைகள் எல்லாம் பற்பல ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அழகான பாரம்பரியம். மரியாதை. கெளரவம். அதற்கான தயாரிப்பு, இடுப்பை ஒடிப்பதாக இருந்தாலும், நிகழ்ச்சியின் அழகும் அமரிக்கையும் பாந்தமும் எல்லா வலிகளையும் மறக்கடித்துவிட்டன.

விழாவின் பாரம்பரிய அழகு ஒருபக்கம் கவர்ந்தது என்றால், இன்னொரு பக்கம் பட்டம் பெற்றவர்களின் ஆர்வம் அற்புதமாக இருந்தது. அன்று கிட்டத்தட்ட 419 பேர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். இருபதுகளுக்குள் இருப்பவர்களில் இருந்து எழுபதுகளைத் தொட்டவர்களும் டாக்டர் பட்டங்களை வாங்கினார்கள். பார்வையற்ற இருவர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். ஒருவர் வரலாற்றுத் துறையிலும் மற்றவர் தமிழ்த் துறையில் ஆய்வுகள் செய்திருப்பவர். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் (த.சுமதி), ஏடிஜிபி ராதாகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார், செஃப் தாமு (தாமோதரன்) ஆகியோர் அன்று டாக்டர் பட்டம் பெற்றவர்களில் அடங்குவர்.

இன்னொரு பகுதி, ரேங்க் வாங்கியவர்கள். நான்கு பாடங்கள், மூன்று பாடங்கள் என்று பல பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவ மாணவியர் அன்று அதற்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கிச் சென்றார்கள்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே விழா களைகட்டத் தொடங்கிவிட்டது. விழா அரங்க வாசலில் ஏராளமான போட்டோகிராபர்கள் மோதிக்கொண்டார்கள். பட்டமளிப்பு விழா அங்கி அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளும் வேகம். அங்கியை அணிந்துகொண்டு, கார்களுக்கு முன்னால், மரத்துக்குப் பின்னால், அம்மாவை அணைத்துக்கொண்டு, அக்காவோடு நெருக்கமாக என்று விதவிதமான போஸ்களில் போட்டோகளைச் சுட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்தபின்னரும் இதே ஆர்வம்தான். துணைவேந்தரோடு சேர்ந்து போட்டோ, மேடை பின்னணியில் போட்டோ என்று பெரிய கூட்டமே அலையடித்தது.

உறவினர் கூட்டம் உற்சாகம் ததும்ப காத்திருந்தது. ஏராளமான பூங்கொத்துகள் வழங்கப்பட்டன, இனிப்புகள் கொடுக்கப்பட்டன. தம் மகள்களின் உச்சிமோந்துகொண்ட பெற்றோர்கள் இன்னொரு புறம். தாம் பெற்ற புகழைவிட தம் மகவுகள் பெறும் புகழ், அங்கீகாரம் ஆகியவற்றை மெச்சும், கொண்டாடும் பெற்றோர்களின் கண்களில் தெரிந்தது வலியும் உழைப்பும்தான்.

வாழ்க்கையில் டாக்டரேட் வாங்குவதும் ரேங்க் வாங்குவதும் இவ்வளவு கவர்ச்சிகரமான விஷயங்கள், உணர்ச்சிபூர்வமான தருணங்கள் என்று எனக்குத் தோன்றியதில்லை! வீட்டுக்கு வந்து பெட்டிக்குள் பூட்டிவைத்துள்ள என் பட்டங்களை எடுத்துப் பார்த்தேன். அதன் பின்னே தெரிந்தது, என் அப்பாவின் முகம். உழைப்பும் களைப்பும் வலியும் உற்சாகமும் ஆர்வமும் கலந்துகட்டிய முகம். பட்டம், எனக்கு இப்போது வெறும் காகிதமாகத் தோன்றவில்லை. அதன்பின்னே இருபதாண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. வலி நிரம்பிய சரித்திரம்!

அருகிப் போன ஆர்வம்

Posted in கல்வி, சமூகம், மாணவர்கள் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா. நவம்பர் 27 முதல் நவம்பர் 30 வரை சென்னை நாரத கான சபாச் சிற்றரங்கத்தில் நான்கு நாளும் இசைக் கச்சேரிகள், பேருரைகள், ஆய்வுரைகள், ஹரிகதை, நாட்டியம் எல்லாம் இனிதே நடைபெற்றன. நிறைவு விழாவுக்கு, சென்னை பலகலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் திருவாசகம் தலைமையேற்றுப் பேசினார்.

அப்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அப்ளைடு தமிழ்’ என்ற புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதைப் பற்றித் தெரிவித்தார். அப்ளைடு தமிழில் ஐம்பது சதவிகிதம் வரை தமிழும், மிச்சமிருக்கும் ஐம்பது சதவிகிதத்துக்கு அக்கவுண்டன்சி, கம்பியூட்டர் எல்லாம் சொல்லித் தரப்படும். அதன் மூலம், தமிழ்மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு சுலபத்தில் கிடைக்கும் என்றார் திருவாசகம்.

முதலில் இது புது திட்டம் இல்லை. ஏற்கெனவே, க.ப.அறவாணன் இதை இலயோலா கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். மூன்றே ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் குறைந்துபோய், இந்தக் கோர்ஸையே நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு நல்ல விஷயம் நடந்துகொண்டு இருக்கிறது. மக்கள் மனத்தில் தெளிவு பிறந்துகொண்டு இருக்கிறது. அதில் எதற்கு எல்லோரும் போய் தலையை நீட்டி தன் பங்குக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய மாணவர்கள் எந்தப் படிப்பு படித்தால் வேலை கிடைக்குமோ அதை மட்டுமே படிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, படிப்பு என்பது வேலைக்கு மட்டும்தான். அதில் இருந்து கிடைக்கும் ஞானம் என்பதெல்லாம் வேலைக்கும், அதில் கிடைக்கக்கூடிய முன்னேற்றத்துக்கும் உதவுவதாக இருந்தால்தான், அதைப் படிக்கவே செய்கிறார்கள். அப்படி முன்னேற்றம் தராத படிப்பின் பக்கம் அவர்கள் தலைவைத்தே படுப்பதில்லை.

பல கல்லூரிகளில், பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஹிஸ்டரி) போன்ற படிப்புகள் எல்லாம் ஈயோட்டுகின்றன. மாணவர்கள் சேர வராததனால், அந்தப் படிப்புகளையே மூடிவிடலாமா என்று பல்கலைக்கழகத்தைக் கேட்கின்றன கல்லூரிகள். அல்லது ஒரு சில கல்லூரிகளில், அந்தப் படிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று, மிக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை அங்கே சேர்த்துக்கொள்ளுவார்கள். விரும்பி, ஆசையாக வந்து படிக்கக்கூடிய ஒன்றிரண்டு மாணவர்கள் இருக்கவும் செய்யலாம். மொழிப்பாடத்தை முக்கியமாக கருதும் ஒரு சில பெற்றோர்கள் வேண்டுமானால், தம் பிள்ளைகளை இந்தப் படிப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்தியா போன்ற வறுமை மிகுந்த நாட்டில், ஒவ்வொருவரும் வேலை செய்தே தம் வாழ்க்கையை நடத்தவேண்டிய தேவை இருக்கும் நாட்டில், மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பது என்பது கொஞ்சம் ஆடம்பரமான ஆசைதான். நமக்குத் தேவை ஸ்கில் பேஸ்டு எடுகேஷன். தொழில் சார்ந்த படிப்பு மிக முக்கியம். பி.ஏ, எம்.ஏ., மட்டுமல்ல பி.எஸ்சி., எம்.எஸ்சி. கூட ஓரளவுக்கு உபயோகமற்ற படிப்புதான்.

மேலும் தமிழ்நாட்டில், ஐம்பது, அறுபது ஆண்டுகாலமாக, தமிழ், தமிழர் என்று பேசிப் பேசியே அரசியல் வளர்த்தாயிற்று. அதனால், தமிழ் மொழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கடும் நெருக்கடி. அரசினால் மட்டும் எவ்வளவுதான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்?

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த தாட்சர், தனது பதவிக் காலத்தில், ஆங்கிலம் படித்த பேராசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் நீக்கினார் என்று சொல்லப்படுவதுண்டு. பிரிட்டனில் இதுதான் நிலைமை.

அப்படி இருக்கும்போது, படிக்கக் கூடிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும்தான் இங்கே முடிவெடுக்கவேண்டியவர்கள். அவர்கள் மொழிப் பாடத்தை விலக்கி வைக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போது மீண்டும் நான் மொழிப் பாடத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி, அப்ளைடு தமிழ் என்றெல்லாம் அறிமுகப்படுத்துவது தேவையான வேலையாகத் தோன்றவில்லை.

மக்கள் மத்தியில் இல்லாத ஆர்வத்தை, அருகிப் போன ஆர்வத்தை எப்படி ஒரு பல்கலைக்கழகத்தால் தூண்டிவிட முடியும்? சாத்தியமே இல்லை.

இப்போதும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (வைணவம்), எம்.ஏ (சைவம்), எம்.ஏ (ஜெயினம்) என்றெல்லாம் படிப்புகள், அதை நடத்தும் துறைகள் இருக்கின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் அதில் போய் சேர்ந்து பயின்று தேர்ச்சி பெற்று வருகின்றனர். நான் அப்ளைடு வைணவம், அப்ளைடு சைவம் சொல்லிக்கொடுக்கிறேன் என்று யாரும் சொல்கிறார்களா என்ன?

மொழியைப் பற்றிய படிப்பு என்பது ஸ்காலர்லியான படிப்பு. அது ஆய்வு நோக்குடையதாக இருக்க முடியும். அல்லது, இண்டர் டிசிப்பிளினரியாக இருக்க முடியும். மொழியைப் படித்துவிட்டேன் என்பதற்காகவே அந்த மாநில அரசு வேலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அபத்தம்.

ஆர்வம் வேறு, வருமானம் வேறு. ஆர்வமே வருமானமும் தந்தால் நல்லதுதான். அதுதான் அதிகபட்ச மகிழ்ச்சி தருவது. ஆனால், இரண்டும் எப்போதும் எதிர் எதிர் துருவங்கள். இணைய வாய்ப்பே இல்லை என்பது பலருடைய வாழ்க்கை அனுபவம். உண்மையை, யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

யுடிலிட்டி வேல்யூ!

Posted in நூலகம், புத்தகங்கள், மாணவர்கள் on October 14th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

நூல்களின் மேல் பெரும் காதல் உடையவர்களாக நூலகர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவும் தப்பாக ஆசைபட்டிருக்கிறேன். சின்ன வயதில் இருந்து அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள் என்று தொடர்ந்து பல நூலகங்களில் இருந்து நூல்களை வாங்கிப் படித்துவந்திருக்கிறேன். அரசு நூலகங்களில் உள்ள நூலகர்கள் பலருக்கு, நூல்களின் பெருமை தெரியுமோ தெரியாதோ ஆனால், அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற விவரம் மட்டும் நன்கு தெரியும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசு நூலகங்களில் வந்து சேரும் புது நூல்களை, நூலகர்கள் உடனடியாக எடுத்து அடுக்குகளில் வைக்கமாட்டார்கள். அதை பொக்கிஷம் போல் கொஞ்ச நாள் மறைத்து மறைத்து பீரோவுக்குள் வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு நாள் மெல்ல ஒவ்வொரு நூலாக வெளியே வரும். அதை எடுத்துப் போகும் ஆளை, நூலகர் பார்க்கும் பார்வை, ஏதே சொந்தப் பெண்ணை களவாடிக்கொண்டு செல்பவன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த நூல்கள் எல்லாம் மக்களுக்குக் கொடுக்கவே வாங்கப்பட்டுள்ளன, அதைப் பயன்படுத்துவதன் மூலமே நூலின் உபயோகம் முழுமை பெறும் என்ற எண்ணங்களை விட, ஏதோ பத்திரமாக வைத்து பூஜை செய்வதே உயர்ந்த பணிபோல், இந்த நூலகர்கள் நினைத்துக்கொள்வார்கள் போலும். நூல்களின் மதிப்பு பலருக்குத் தெரிவதில்லை, அவர்கள் அதைக் கிழித்துவிடக் கூடும், திருடிக்கொள்ளக் கூடும் என்றெல்லாம் நூலகர்கள் காரணம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கிழிந்தால்தான் என்ன? படித்துக் கிழிக்கத்தானே நூல்கள்? அவ்வளவு பேர் படித்து நைந்து கிழிந்துபோனால், அதைவிட, அந்த நூல் அடையக்கூடிய பேறு வேறு என்ன இருக்க முடியும்? புதிதாக மேலும் படிகள் வாங்கிவைக்கவேண்டியதுதான்.

நூலகங்களில் நூல்களைத் திருடுபவர்களை எனக்குத் தெரியும். பல நூல் நிலைய காவலாளிகள், உதவியாளர்களே, இப்படிக் களவாடிக்கொடுக்கத் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லோரும் பயன்படுத்தவே நூல்கள், நூலகங்கள். தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ள, அதிகம் செலவில்லாமல் நூல்களைக் களவாடிக்கொள்ளலாம் என்ற எண்ணமே முற்றிலும் தவறு.

ஆனால், இதனாலெல்லாம், நூலகர்கள் போலீஸ்காரர்களைப் போல் நடந்துகொள்ள வேண்டாம். எல்லோர் மேலும் ஒரு சந்தேகக் கண். விளைவு, பயன்படுத்துபவர்கள் மேல் ஒருவித அசூசை. நூலகத்தை உண்மையாகப் பயன்படுத்துபவனையும் அதை முறைகேடாக பயன்படுத்த நினைப்பவனையும் இனம்காண முடியாதா என்ன?

எல்லா அரசு நூல் நிலைய நூலகர்களையும் இப்படிச் சொல்ல முடியாது. நான் சின்ன வயதில் பல முக்கிய நூல்களை வாசித்த, சென்னை கொண்டியம்பதியில், முருகன் தியேட்டர் அருகே இருந்த நூல்நிலைய நூலகர் மிக நல்ல மனிதர். நூல் நிலையத்திலேயே ஒரு முழு நூலைப் படித்துவிட்டு, கையில் இன்னும் இரண்டு நூல்களை எடுத்துவந்து அடுத்த நாளைக்குள் அவையிரண்டையும் படித்துவிட்டு, மீண்டும் போய் நூலகத்தில் நிற்பேன். மனிதர் சிரித்துக்கொண்டே அடுத்த நூல்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பார்.

இவருக்கு நேர் எதிராக இருந்தவர், நான் படித்த து.கோ.வைணவக் கல்லூரி நூலகர். மிக அற்புதமான நூலகம் இது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வெளியான நல்ல தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் சேகரம் இங்கே உண்டு. நான் படித்தது கணிதம். எடுத்து வாசித்தது அத்தனையும் இலக்கியம். துறை சார்ந்த நூல்கள் எல்லாம் முன்னால் இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நூல்கள் பின்னால் ஒருபக்கம் அடுக்கி வைத்திருப்பார்கள். விளக்கு இருக்காது. நான் சளைத்தவனில்லை.

உள்ளே நுழைந்து எண்ணற்ற ஆங்கில கதைப் புத்தகங்களை எடுத்துவந்துவிடுவேன். ஃபாக்னர் என் ப்ரிய ஆசிரியர். நூலகருக்குப் பொறுக்காது.

‘சப்ஜெக்ட் புக் இல்லையே இது?’
‘ஆமா சார்.’
‘நேத்து கூட கதை புஸ்தகம் எடுத்துகிட்டு போன போல இருக்கே?’
‘ஆமா சார்.’
‘படிச்சுட்டியா?’
‘ஆச்சு சார்.’

லேசாக முறைப்பது போல் இருக்கும். திடீரென்று, நூலகர் என் அப்பா முகத்தை எடுத்து மாட்டிக்கொண்டிருப்பார். தாடைகள் இறுக்கம் கொள்ளும். கைகள் படபடக்கும்.

‘இதெல்லாம் எடுத்துகிட்டுப் போக முடியாது. சப்ஜெக்ட் புக்ஸ்தான்.’
‘அப்படி ஒண்ணும் போடலியே சார். எல்லாம் புக்ஸும் எடுக்கலாம்னுதான் போட்டிருக்கு.’
‘ஹெ.ஓ.டி.கிட்ட சொல்ல வேண்டியிருக்கும்.’
‘தாராளமா சொல்லுங்க.’

சட்டென புத்தகங்களை வீசிவிட்டு அவர் அறைக்குள் போய்விடுவார். ‘உருப்படாத சனியன்’ என்று நினைத்திருப்பார். நான் வழக்கம்போல், நூலகத்துக்குப் பின்புறம் இருக்கும் அமைதியான பழைய கட்டடம் ஒன்றில் போய் அமர்ந்துகொண்டு படித்துக்கொண்டு இருப்பேன்.

சமீபத்தில் வேறொரு கல்லூரி நூலகரைச் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தேன்.

‘ஸ்டூடன்ஸ் என்ன மாதிரி புக்ஸெல்லாம் எடுத்துப் படிக்கறாங்க சார்?’
‘சப்ஜெக்ட் புக்ஸ்தான் சார். நான் வேறெதுவும் கொடுக்கறதில்ல.’
‘ஏன் கதை புத்தகமெல்லாம் கொடுக்க மாட்டீங்களா?’
‘அதெல்லாம் எதுக்கு சார்? அதையெல்லாம் வெச்சம்னா, எந்நேரமும் அதைத்தான் படிச்சிகிட்டு இருப்பானுங்க.’

கேட்க எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனாலும் கேட்டுவிட்டேன்.

‘கதை புக்ஸ் படிச்சா என்ன சார்?’
‘உருப்படாம போயிடுவாங்க. நாளைக்கு அங்கம்மா அப்பாவுக்கு யார் பதில் சொல்றது சொல்லுங்க? காலேஜுக்கு எதுக்கு அனுப்பறாங்க? படிக்கத்தானே? அதை ஒழுங்கா செய்யாம இவன் கண்டதையும் படிச்சுட்டு திரிஞ்சான்னா, நாளைக்கு யார் பதில் சொல்றது? வாழ்க்கையே வேஸ்டா போயிடும் இல்லையா?’

யுடிலிட்டி வேல்யூ இருக்க வேண்டும். சமூகம் மிகத் தெளிவாக இருக்கிறது. நூலகம் என்பது காசு கொடுத்து தனிநபர் வாங்க முடியாத அதிகத் தொகை உள்ள புத்தகங்களை வாங்கி வைக்கும் இடம். அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அங்கேபோய் சும்மா இலக்கியம், கதை, கவிதை எல்லாம் படிக்கக் கூடாது. கவைக்குதவாத விஷயங்கள் அவை. பணம் சம்பாதிக்க உதவாத, முன்னேற்றத்துக்கு உதவாத எதுவும் பயனுடையது அல்ல.

சமூகத்தின் இந்தக் குணத்தைத்தான் நூலகர்களும் பிரதிபலிக்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

இந்த குணமும் எண்ணமும் எவ்வளவுதூரம் தெரியுமா வந்திருக்கிறது? திருவல்லிக்கேணி பாரதி சாலை ஓரம் இருக்கும் பழைய புத்தகக் கடைகள் அத்தனையிலும் இப்போது கல்லூரிகள், பள்ளிகள் சார்ந்த நூல்கள் மட்டுமே விற்கப்படுகின்றன. ஆசிரியர் பெயர் சொன்னால், புத்தகத்தை எடுத்துத் தருவார்கள், படிப்பு மற்றும் ஆண்டு விவரம் சொன்னால், அந்தக் குறிப்பிட்ட ஆண்டு பயன்படுத்தப்படும் நூல்களின் விவரங்களை கடைக்காரர்கள் எடுத்துச் சொல்வார்கள். அவ்வளவு அத்துபடி.

எப்போதாவது, பழைய நூலகங்களில் உள்ள பழைய குப்பைகள் என்று அட்டை கிழிந்த, பக்கங்கள் நைந்துபோன இலக்கிய புத்தகங்களை அம்பாரமாய் கொட்டி வைப்பார்கள்.  ‘எது எடுத்தாலும் ஐந்து ரூபாய்.’ ‘எது எடுத்தாலும் பத்து ரூபாய்’ என்று செ.யோகநாதனும் சூர்யதீபனும் பழமலய்யும் இ.பாவும் சிதறிக்கிடப்பார்கள்.

என்னைப் போல் ஒருசிலர் அதன் அருமை கருதி வாங்கிச் செல்வார்கள். மற்றபடி, இதையெல்லாம் மசாலா வேர்க்கடலை விற்பவனும் சோம்பப்டி விற்பனும்தான் வாங்குகிறார்கள். எனக்கு இருப்பதைப் போலவே, அவர்களுக்கும் அதில் ஓர் யுடிலிட்டி இருக்கிறது!!!

அவையத்து முந்தியிருப்பச் செயல்

Posted in கல்வி, மாணவர்கள் on October 14th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

எல்லா அப்பாக்களுக்கும் உள்ள அதே கவலைதான் எனக்கும். என் பெண் எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். இன்னும் நான்கு ஆண்டுகளில் பள்ளி வாழ்க்கை முடிந்துவிடும். கல்லூரியில் அவளை என்ன படிக்க வைக்கவேண்டும்? கல்வித் துறை பற்றியும் அதில் வரும் புதுப் படிப்புகள் பற்றியும் ஓரளவுக்கு நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன், வருகிறேன். இதுதான் வருங்காலத்தில் முக்கியப் படிப்பாக இருக்கப் போகிறது என்று என்னால் ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டவும் முடியும். ஆனால், இதெல்லாம் என் பெண்ணுக்குப் பிடிக்கவேண்டுமே?

ஆனால், வீட்டுக்குள் இப்போதே பிரஷர் ஆரம்பித்துவிட்டது. ஐஐடியில் சேர எழுதப்படும் ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் தேர்வு பெற, உடனே பயிற்சிக்கு அனுப்பு. தி.நகரில் ஆனந்த் என்று ஒரு ஆசிரியர் இருக்கிறார். சூப்பர் மேன். அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ஐஐடிக்களில் கால்வைப்பது உறுதி. ஐஐடி இல்லையென்றாலும் பரவாயில்லை, எப்படியாவது பொறியியல் படிக்க வைத்துவிடுங்கள். கம்பியூட்டர் துறைதான் சாலச் சிறந்தது. என்னதான் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு உலகமெங்கும் கம்பியூட்டர் துறை வேலைவாய்ப்புகள் குறைந்துபோனாலும், இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு அந்தத் துறைதான் கோலோச்சப் போகிறது.

எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு உடன்பாடு இல்லை. சரி, அவளையே கேட்போம். அவளுக்கு என்ன தோன்றுகிறது என்று தெரிந்துகொள்வோம் என்று கேட்டேன். விவசாயம் என்றாள் அவள்.

சரி, நல்ல தேர்வுதான். உலகம் உள்ளளவும் உணவுத் தேவை இருந்துகொண்டுதான் இருக்கப் போகிறது. விவசாயப் படிப்பு அந்தத் திசையில் நல்ல முன்னேற்றம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

இன்னொரு நாள் என்னிடம் வந்தாள்.

‘டாக்டர் சுதா, டாக்டர் ராஜா எல்லாம் எப்படி டாக்டரானங்க?’
‘டாக்டருக்குப் படிச்சுதாம்மா.’
‘மெடிசின் ஒரு நோபிள் ஜாப் இல்ல. நிறைய கத்துக்கலாம் இல்ல.’

டாக்டர் சுதா சேஷய்யனும் டாக்டர் ராஜா வெங்கடேஷும் எங்கள் குடும்ப நண்பர்கள். அவர்களைப் பார்த்து எழுந்த பாதிப்பு இது என்று புரிந்துகொண்டேன்.

வேறொரு நாள் பேசும்போது, என் நீண்ட நாள் ஆசையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஏ (பப்ளிஷிங்) படிப்பை எடுத்துப் படி என்றேன். அதற்கு ஏற்ப, முதலில் ஹைதராபாத்தில் உள்ள செண்ட்ரல் இண்ஸ்டிடியூட்டில் ஆங்கிலம் மொழிப்பாடத்தைப் படி என்றேன். இன்று இல்லாவிட்டாலும், இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் எப்படியும் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி, நான் மறைவதற்குள் ரூபர்ட் முர்டாக் மாதிரி ஒரு மீடியா சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிமுடிக்காமல் ஓயமாட்டேன், அதை நிர்வகிக்க நீ உதவலாம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவள் பார்த்த பார்வையே என்னை வாயை மூடிக்கொள்ள வைத்துவிட்டது!

அப்போதுதான், சைக்கோமெட்ரிக் டெஸ்ட் பற்றித் தெரிந்துகொண்டேன். முக்கால் மணி நேர டெஸ்டில், அதில் பங்கேற்கும் மாணவ மாணவியரின் ஆர்வங்களை ஓரளவுக்குப் படித்துவிட முடியும். அதைக் கொண்டு அவர்கள் தேர்வு செய்யவேண்டிய பாடங்களைப் பற்றி முடிவு எடுக்கலாம். எட்டாம் வகுப்பில் இந்த டெஸ்ட்டை எடுக்கலாம என்பவர்கள் இருக்கிறார்கள். இல்லை பத்தாம் வகுப்பு முடிக்கட்டும், அப்புறம் டெஸ்ட் எடுப்பது சரியாக இருக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள். எட்டாம் வகுப்புக்குள் ஆர்வங்கள் அவ்வளவு தூரம் கிரிஸ்டலைஸ் ஆகாது என்றார்கள். என் குழப்பம் தீரவில்லை. இன்னும் அதிகம்தான் ஆயிற்று.

இதன் பின்னர் இன்னும் இரண்டு மூன்று விஷயங்களை எதேச்சையாகத் தெரிந்துகொண்டேன். என் நண்பர் ஒருவர், மும்பையில் மூத்த அனுபவம் வாய்ந்த டாக்டர். சென்ற முறை அவளது மகளைப் பற்றி பேச்சு வந்தது. அவள் நன்கு பாடக்கூடியவள். ‘அவளும் டாக்டராக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவள் பாடகி ஆவேன் என்று சொல்லிவிட்டாள்’ என்றார் டாக்டர் நண்பர். மும்பையில் ஒரு கல்லூரியில் ஏதோ ஒரு இளங்கலை வகுப்பில் சேர்ந்துகொண்டு, முழுநேரமும் தன் நண்பர்களோடு ஒரு ராக் பாண்ட் உருவாக்கி, பாடிக்கொண்டு இருக்கிறாள்.

இன்னொரு நண்பரின் மகன், எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யில் எம்.பி.ஏ. முடித்தார். நல்ல மார்க். ரேங்க். இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டேன். ‘மகாராஷ்ட்ராவில் கிராமம் கிராமமாக சுத்திக்கொண்டு இருக்கிறான். சோஷியல் ஆந்தரபர்னர் ஆகிவிட்டான். கிராமங்களில் போய் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான விஷயங்களைச் செய்வேன் என்கிறான்’ என்றார் நண்பர்.

தோழி ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘என் மகன் நல்ல ரேங்க்கில் பொறியியல் முடித்துவிட்டான். வேலையும் தேடிக்கொண்டு இருக்கிறான். அதற்குள் அவனுக்கு மாடலிங் செய்து பார்க்கவும் ஆசை. அவனுடைய போட்டோக்களைப் பார்க்கவும்’ என்று எழுதியிருந்தார்.

பலருக்குப் படிப்பு வேறாகவும் ஆர்வம் வேறாகவும் இருக்கிறது. படிப்பைப் பின்பற்றி கிடைக்கும் வேலையில் சேர்ந்துகொள்கிறவர்கள், எந்நேரமும் ஆர்வத்தைக் கைவிடாதவர்களாக வாழ்க்கை முழுவதும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆர்வத்தைப் பின்பற்றிச் செல்பவர்களில் எத்தனை பேர் பொருளாதார ரீதியாக நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுகிறார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இதையும் மீறி ஒரு விஷயம் இருக்கிறது. அது ஜெனரேஷன் ஒய்.யின் குணாதிசயம். அவர்களைக் கவர்வது உடனடி புகழும் அபரிமிதமான பணமும்தான். இரண்டும் ஒருசேரக் கிடைப்பது மீடியா துறையில்தான் என்பதால், என்ன படிப்பு படித்தவர்களும், கடைசியில் மீடியாவின் மாயைக்குள் வந்து சேர்கிறார்கள். அதுவும் சினிமா என்ற கவர்ச்சிக்குள் வந்து சேருபவர்களில் இன்று படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே கிடையாது. இரண்டு பேரும் ஒரே மாதிரிதான் படம் எடுக்கிறார்கள்! குத்துப் பாட்டைப் படிக்காதவன் கொச்சையாக எடுக்கிறான். படித்தவன், இன்னும் லைட்டிங் ஜாலம், காமிரா மாற்றங்கள் எல்லாம் செய்து நேர்த்தியாக எடுக்கிறான்!! இறுதி நோக்கம், ‘மக்களின் பேராதரவை’ப் பெறுவதுதான்!!!

சிங்கப்பூரில் குழந்தைகள் வளரும் அரும்பு பருவத்திலேயே அவர்களின் ஆர்வங்களை இனங்கண்டு, அத்துறையில் மேலே வளர ஏதுவான வகுப்புகள், தேர்வுகள், படிப்புகள் ஆகியவற்றில் ஈடுபடுத்தி, நல்ல குடிமக்களை உருவாக்குவதில் அரசாங்கமே ஈடுபடுகிறது என்கிறார்கள். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

எது முடிகிறதோ இல்லையோ, ஒன்றை மட்டும் நான் செய்யக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். எந்த வகையிலும் நான் என் கருத்துகளை, ஆர்வங்களை, எதிர்பார்ப்புகளையோ என் மகள் மேல் திணித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நான் என்றுமே நிறைவு செய்ய முடிந்ததில்லை. என் மகள் மட்டும் அதை எப்படிச் செய்வாள்?

சீட் வாங்கலையோ சீட்டு

Posted in கல்வி, பொது, மாணவர்கள் on September 2nd, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
இந்த ஆண்டு (2009) தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒரு மாதம் நடைபெற்று, 12 ஆகஸ்டு அன்று முடிவு பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதெல்லாம் அரசு கோட்டா என்று சொல்லப்படும் சீட்டுகளுக்கு நடந்த கலந்தாய்வு. 35% சீட்டுகளை, கல்லூரிகளை நடத்தும் நிர்வாகங்களே மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பிக்கொண்டன. இந்தக் கலந்தாய்வின் முடிவில் கிட்டத்தட்ட 30,199 சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிப் போயின. தமிழ்நாட்டில், 440 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் 6 கல்லூரிகளில் 10 % சீட்கள் கூட நிரம்பவில்லை. 20% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 26, 30% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 34.
சீட்டுகள் நிரம்பாமல் போனதைப் பற்றி பல கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். ஓவர் சப்ளையே முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. 1980களில் பொறியியல் படிக்க வந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்லூரிகள் இல்லாமல் இருந்தன. அப்போதுதான், கர்நாடகத்தைப் பின்பற்றி, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை எம்.ஜி.ஆர். அரசு வழங்கியது. 1990 களில் நடந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று சந்தைப் பொருளாதாரம், தனியார் பங்கேற்பு, திறந்த வணிகம். கல்வி, குறிப்பாக பொறியியல்/ மருத்துவக் கல்வி, இந்தச் சந்தைப் பொருளாதாரத்தின் கருத்தை அடியொற்றி உருவாயின.
இன்றைக்கு இவ்வளவு சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது, சந்தைப் பொருளாதாரத்தின் மகிமை புரிபடத் தொடங்குகிறது. அப்படியென்ன பெரிய மகிமையைக் கண்டுவீட்டீர்கள் என்று கேட்பவர்களுக்கு, இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு இதைச் சொன்னால் இன்னும் தெளிவாக விளங்கும்.
தூரதர்ஷன் மட்டுமே ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்று இருந்தபோது, அவர்கள் போட்டதுதான் நிகழ்ச்சிகள், அவர்கள் காண்பித்ததுதான் திரைப்படங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள். வெரைட்டி என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. பார்வையாளர்கள், பயனர்கள் தேர்வு என்பது இருந்ததே இல்லை. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வருகை இந்த நிலையில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. ஒரு சில நொடிகளில், உங்கள் நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவரவில்லை என்றால், ரிமோட் முனையில் சானல் தாவல் நிச்சயம். இன்றைக்கு நிலைமையைப் பாருங்கள், சின்னதும் பெரியதுமாக ஜெனரல் எண்டர்டெயின்மெண்ட் சானல்களே ஒரு பத்து சானல்கள் இருக்கின்றன. விருப்பமானதைத் தேர்வு செய்யலாம். வேண்டியதைத் தேர்வு செய்யலாம். வேண்டாம் என்றால், அந்தச் சேனலை ஒரே தாவலில் தாண்டி அடுத்ததுக்கு ஓடிப் போய்விடலாம். திறந்த பொருளாதாரம், பயனர்கள் கையில் தேர்வை, சுதந்திரத்தை எடுத்துக் கொடுத்தது.
இப்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த, ஆதாவது, பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கின்றன. இதைத்தான் நான் மகிமை என்று சொன்னேன்.
பொறியியல் கல்லூரியிலும் இதுதான் இப்போது ஏற்பட்டுவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி கல்வியை சேவையாக நினைக்கவில்லையோ, அதேபோல், எந்தப் பெற்றோரும் கல்விச்சாலைகளைக் கோவில்களாகக் கருதுவதில்லை. அது ஓர் வணிகம். கல்வி என்ற சேவை அங்கே விற்பனை செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பை உடனடியாக வழங்கும், அதிகம் பொருளீட்டக் கூடியப் படிப்புகளைச் சொல்லித் தரும் சேவையை இந்தச் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்கின்றன.
கல்வி ஏன் விற்பனைப் பொருளாயிற்று, அதன் புனிதம் எங்கே போச்சு என்றெல்லாம் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அபத்தம். எதுவும் இலவசம் இல்லை, பொருள் நோக்கமற்ற சேவை என்று ஒன்று சாத்தியமே இல்லை. இதுதான் நவீன வாழ்வின் யதார்த்தம். கல்வி வணிகம்தான் என்பதை மனத்தில் வாங்கிக்கொண்டுவிட்டால் (பல பெற்றோர்கள் வாங்கிக்கொண்டுவிட்டார்கள்), இனி கேட்கவேண்டிய கேள்விகளே வேறு.
1. ஒழுங்காக உன்னால் சொல்லித் தர முடியுமா? அதற்குத் தகுதியான ஆசிரியர்களை நீ வைத்திருக்கிறாயா? போதிய ஆய்வுச் சாலைகள் அமைத்திருக்கிறாயா?
2. உன்னால், சர்வதேச அளவில் என் பையனை/பெண்ணைத் தகுதியுள்ளவாராக ஆக்க முடியுமா?
3. சர்வதேச அங்கீகாரம், அக்கிரெடிஷன், அசோசியேஷன் ஏதும் உண்டா?
4. உன்னிடம் பெரிய நிறுவனங்கள் ஆளெடுக்க வருகிறார்களா? கடந்த ஆண்டுகளில் படித்தவர்களில் எத்தனை பேரை இப்படி நீ வேலையில் அமர்த்த உதவியிருக்கிறாய்? என்னென்ன பெரிய நிறுவனங்களின் உன் மாணவர்கள் வேலை செய்கிறார்கள்? எந்த மட்டத்தில் அவர்கள் வேலை செய்கிறார்கள்?
5. கேம்பஸில் என்ன மினிமம் சம்பளம் தர ஒத்துக்கொள்கிறார்கள்? மேக்சிமம்?
அதாவது என் பையனை/பெண்ணை எவ்வளவு திறமையானவனாக அல்ல, எவ்வளவு எம்ப்ளாயபிளாக மாற்றி நீ அனுப்புவாய் என்பதுதான் முக்கியமான கேள்வி.
மேற்படிப்பு பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் முற்றிலும் மாறிப்போன பின்பு, அதாவது அதன் உடனடி யுடிலிட்டிதான் முக்கியம், நீண்டகால ஞானம் அல்ல, என்றான பின்பு, பெற்றோர்கள், பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளை அணுகும்விதமும் மாறிப்போய்விட்டது. அதனால், பொறியியல் கல்லூரிகள் கொடுக்கும் விளம்பரங்களின் தன்மையும் மாறிப் போய்விட்டன.
இன்றைக்குப் பெற்றோர்களும் பிள்ளைகளும் மேலே உள்ள கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். சரியான பதில் வராத கல்லூரிகள்தான் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாகவோ, 90% மேலோ இருக்கின்றன. வேறு பல ஊர்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 50% கூட இல்லை.
இந்த ஆண்டு மட்டும் 90 புதிய சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அத்தனை இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில்தான் தேக்கம். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்த ஒரு தவறுதான், இந்தத் தேக்கத்துக்குக் காரணம். பொதுவாக, கட்டடம் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட வசதிகளை மட்டும் செய்துவிட்டு, கல்லூரிகளைத் தொடங்கும் போக்கு இருக்கிறது. மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு உயர, மெல்ல மெல்ல மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும் தகுதியான ஆசிரியர்களையும் கொண்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருக்கும் உலகப் பொருளாதாரத் தேக்கம், அதனால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, புதிய வேலைவாய்ப்பின்மை ஆகியவை, ஒரு சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளின் மேல் இருந்த மோகத்தை முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டன. விளைவு, வசதிகள் அற்ற பல கல்லூரிகளில் மாணவர்கள் சேரத் தயக்கம்.
மேலும், இன்று காலம் கடந்துவிட்டது. இன்று பொறியியல் கல்லூரி தொடங்கும் ஒருவர், இந்தச் சுயநிதிக் கல்லூரிகளிலேயே மிகச் சிறப்பாக இருக்கும் கல்லூரியோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, அங்கே கொடுக்கப்படும் அதிகபட்ச வசதிகளுக்கு இணையாக தானும் செய்ய வேண்டிய நிலைமை. அதாவது நதி ஓடிக்கொண்டு இருக்கிறது. அது சுற்றிச் சுழன்று ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஓடுகிறது. அதன் வேகத்தின் இடையே இறங்கும் ஓர் படகு தானும் அதற்கு இணையாக நகர வேண்டும். அங்கே போய் தள்ளாடினால், மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை.
திறந்த பொருளாதாரம், மதிப்பீடுகளில் தெளிவை உருவாக்கியிருக்கிறது. அதைக் கறாராகப் பெறவேண்டும் என்ற உறுதியைக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட வேல்யூவைக் கொடுக்காத ஒன்றை சட்டென இடக்கையால் புறமொதுக்கிவிடவும் அது தயங்காது. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் இதுதான் நடக்க இருக்கிறது.
ஓட்டத்தோடு கலக்காத கல்லூரிகள் மெல்ல கரை ஒதுங்கவேண்டியதுதான். நடத்த முடியும் படிப்புகளை நடத்த வேண்டியது, முடியாதவற்றை மூடிவிட வேண்டியது. மொத்தமாக மூட வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதியானவை மட்டுமே தங்கும்.