புத்தகங்கள்

2009ல் வெளியான நாவல்கள்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.

மேலும் இதில் ஒரு தேர்வு இருக்கிறது. அது என் ரசனையை ஒட்டிய தேர்வு. பிரபல எழுத்தாளர்களான ரமணி சந்திரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் (பலர் பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்) ஆகியோர் நிச்சயம் புதிய நாவல்களை வெளியிட்டிருப்பார்கள். தொடர்கதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டிருப்பார்கள். இப்போது உட்கார்ந்து யோசிக்கும்போது, அதையும் வாங்கிச் சேர்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை புத்தகக் கண்காட்சி செல்லும்போது, இன்னொரு பட்டியலைத் தர முயற்சிக்கிறேன்.

2009ல் வெளியான நாவல்கள் என்று இப்பட்டியலைச் சொல்வதும் முழுமையாகாது. இப்பட்டியல் ஜனவரி 2010 புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியான நாவல்கள். 2009 நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த நாவல்கள் வெளியாகியிருக்கும். ஒரு சில நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்குத் தான் வருகின்றன. ஆண்டு தொடங்கியதில் இருந்து பல நாவல்கள் இடையில் வந்திருக்கலாம். ஒரு சில பதிப்பகங்கள் மாதம், ஆண்டு இரண்டு தகவல்களையும் இம்பிரிண்ட்டில் தருவார்கள். ஒரு சிலர் வெறும் ஆண்டு தருவார்கள். புத்தக வரிசை எண் என்றொரு முறையும் இங்கே பழக்கத்தில் இருக்கிறது.

ஆங்கில நூல்களில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாக அக்டோபர் மாதத்துக்குப் பின் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்துக்கும் அடுத்து வரும் ஆண்டு ஜனவரியை வெளியீட்டு ஆண்டாகவும் மாதமாகவும் தருவார்கள்.

மொழிபெயர்ப்பு நாவல்களையும் நான் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே இப்பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி முதல் தேதி அன்று, நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். தகவல்கள் திரட்டியபோது, கீழே உள்ள ஒரு சில நாவல்கள் அச்சாகிக் கடைகளுக்கு வந்திருக்கவில்லை. அப்புறம் வந்திருக்கலாம்.

1. காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா பதிப்பகம் – ரூ.40
2. கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம் – ரூ.50
3. குவியம் – ஜெயந்தி சங்கர் – ரூ.100
4. மலையகமல்லன் – தி.குழந்தைவேலு – காவ்யா – ரூ.80
5. என் உயிரே விட்டுக்கொடு – முத்தாலங்குறிச்சி காமராசு – காவ்யா – ரூ.90
6. அனல் காற்று – ஜெயமோகன் – தமிழினி – ரூ.90
7. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – தமிழினி – ரூ.230
8. நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி – ரூ. 220
9. தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி – ரூ.75
10. நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 120
11. மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 90
12. கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை பதிப்பகம் – ரூ.50
13. மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100
14. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
15. வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
16. அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100

கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா.

இந்த நாவல் என்னை மூன்று அம்சங்களில் மிகவும் கவர்ந்தது. ஒன்று இதன் உள்ளடக்கம். புதிய களம். துபாய் வந்துவிட்டு, துன்பப்பட்டு, திண்டாடி மீளும் இரண்டு பெண்கள்; இன்னொரு பெண் அங்கே வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், ஊர் திரும்புகிறார். துபாய் பற்றியும் அரபு தேசங்கள் பற்றியும் நம்மிடம் இருக்கும் மனச்சித்திரங்களை இந்த கதைத் தொடக்கமே மாற்றி அமைத்துவிடுகிறது. சிறையில் இருந்து ஒரு பெண் மீண்டும் இந்தியா திரும்ப அனுப்பப்படுகிறார். இன்னொரு பெண், ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு, பின் தப்பித்து, இந்தியா மீளுகிறாள். இதுவரை சொல்லப்படாத கதை. அதனாலே படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.

இரண்டு, நாவலை துபாய் ஏர்போர்ட்டில் தொடங்குபவர் அப்படியே இந்தியா வந்து அப்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறார். சட்டென பழைய நினைவுகளுக்குப் போய், பிளாஷ்பேக்கில் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாரோ என்று லேசாக பயந்தேன். பழைய சம்பவங்கள் கதையில் வராமல் இல்லை. ஆனால், அதை கதையின் ஓட்டத்தோடு மிக லாகவமாக இணைத்திருக்கிறார் உஷா.

மூன்றாவது, இஸ்லாமியத் தமிழைக் கையாண்டிருக்கும் திறன். முன்னுரையில் நாகூர் ரூமி, உஷாவின் மொழிப் பயன்பாட்டைப் பாராட்டியிருக்கிறார். அப்படியென்றால், மொழிப் பயன்பாடு சரியாக வந்திருக்கிறது என்றே அர்த்தம்.

என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.

குறைகள் இல்லையா? இருக்கின்றன. முதல் நாவல் எழுதியிருக்கிறார். பாராட்டுவது மட்டுமே நம் வேலை. ஏற்கெனவே கலைமகள், இந்த நாவலைப் பாராட்டி இருக்கிறது. இந்த நாவல், கலைமகள் கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. தகுதியான பாராட்டு.

கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம், எண்.57 – 63ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083. விலை ரூ.50

அது ஒரு பொற்காலம்

Posted in எழுத்தாளர்கள், புத்தகங்கள் on December 17th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

கல்கி ராஜேந்திரன், கல்கி இதழில் எழுபது முதல் ஏழு வரை என்று எழுதிய தொடரை, அது ஒரு பொற்காலம் என்ற பெயரில் நூலாக்கியிருக்கிறார். கல்கி ராஜேந்திரன் நான் மதிக்கும் மிகவும் முக்கியமான இதழ் ஆசிரியர். எழுத்தாளர் கல்கி, சதாசிவம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர் ராஜேந்திரன். ஒரு இதழை, எந்த விதமான அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், சமரசங்களுக்கும் ஆட்படாமல், நடுநிலையோடு நடத்த முடியும் என்பதை நிரூபித்தவர். அதேசமயம், இளைஞர்களை எழுத வைப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் மிக முக்கியம். நான் அவரைச் சந்தித்தது, தொடர்ந்து என்னை அவர் எழுத ஊக்கமளித்தது தனிச் செய்திகள்.

இந்தப் புத்தகம், அவருடைய அனுபவங்களை – முக்கியமாக கல்கி, ராஜாஜி, டி.கே.சி., எம்.எஸ்., சதாசிவம் ஆகியோரோடு ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் சுவையாக எழுதியுள்ளார். மேலும் அந்தக் காலத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களான நா.பா., அகிலன், பகீரதன், சோமாஸ்கந்தன் ஆகியோரோடு பழகிய அனுபவங்களையும் எழுதியுள்ளார். இந்த நூலில், பல விஷயங்கள் என்னைக் கவர்ந்தன:

இதை ராஜேந்திரன் மட்டும் எழுதவில்லை. வெளியே ஆசிரியர் ‘கல்கி ராஜேந்திரன்’ என்று மட்டும் போட்டிருப்பது சரியாகாது. இதில், அவரது மனைவி, விஜயா ராஜேந்திரனின் பங்களிப்பு மிக அதிகம். பல அத்தியாயங்களில் இருவரும் பேசிக்கொள்ளும் செய்திகளாகவே பல அனுபவங்களை, ரசனைகளை ராஜேந்திரன் எழுதியுள்ளார்.

கல்கியின் மேதமை, ராஜாஜியின் புத்திசாலித்தனம், டி.கே.சியின் நுணுக்கமான ரசனை என்று பல செய்திகளை அனுபவங்கள் மூலமாக ஆசிரியர் எழுதிச் செல்கிறார். அத்தோடு, இன்றைய காலகட்ட அரசியலையும் ஆங்காங்கே தொட்டுச் செல்வது பொருத்தமாக இருக்கிறது.

ஒரு எழுத்தாளராக பலரும் போற்றும் கல்கி, ஒரு அப்பாவாக எப்படி இருந்தார் என்பதில்தான் என் ஆர்வம் முழுவதும். கல்கி எப்படியெல்லாம் ராஜேந்திரனை பண்படுத்தினார் என்பது நூல் முழுவதும் பரவியிருக்கிறது. ஒரு சம்பவம், மிகவும் நெகிழ்ச்சியானது. அதை அப்படியே தருவது பொருத்தமாக இருக்கும்:

‘கல்கி’ எப்படி எழுதினார் என்பதை விட என்ன எழுதினார் என்பதுதான் முக்கியம். என்றாலும் எப்படி எழுதினார், எவ்வாறு சிந்தித்தார் என்று பார்ப்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்கிறது! அவரிடம் இருந்த குறை நிறைகள் இரண்டேதான். ஒன்று, வேலைச் சுமைகள் மிக அதிகம்; இரண்டு, அவற்றைச் செய்வதற்கான உடல் ஆரோக்கியம் மிகக் குறைவு! இதனால் ஓர் அந்தரங்கப் பணியாளன் போல நான் அவருக்குச் செய்லபட நேர்ந்தது. ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டதால் அவர் அடிக்கடி இருமி உமிழ்வார். அந்த எச்சில் கிண்ணத்தை அவ்வப்போது சுத்திகரித்து வைப்பது தொடங்கி, ஆயுர்வேத வைத்தியர் சங்குண்ணி மேனன் கொடுத்த தைலத்தை அவர் உடலில் தடவிக் குளிப்பாட்டுவது வரை அவருக்காக பல்வேறு காரியங்களைச் செய்திருக்கிறேன். அவர் வெளியூர் சென்றால் பெட்டியில் துணி மணிகள் அடுக்குவது, படுக்கை கட்டுவது முதல் ஹிந்து நாளிதழி!
ல் à
��வர் கேட்கிற செய்தியைத் தேடி எடுத்துத் தருவது வரை பலவிதங்களில் உதவியிருக்கிறேன். குன்றாத அன்புடனும் ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடனும் இவற்றைச் செய்வேன். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஃபார்ம் படித்துக்கொண்டிருந்த சமயம் அவருக்கு ஒரு நாள் நான் கால்மிதித்துக் கொண்டிருந்தேன். எனது குதிக்காலால் இலேசாக மிதித்து அந்த இதத்தில் அவரைக் கண்ணுறங்க வைப்பது எனக்கிருந்த பணிகளில் ஒன்று.

“ஏண்டா, என்னையே கவனிச்சிண்டிருந்தா உன் படிப்பு என்ன ஆகிறது?” என்று மனவேதனை எட்டிப் பார்க்கக் கவலையுடன் கேட்டார்.

“கவலைப்படாதீங்கோ! பிரமாத மார்க் வாங்காவிட்டாலும் பி.ஃபார்ம் டிகிரி வாங்கிவிடுவேன், நிச்சயம்” என்று ஆறுதலாக உறுதி அளித்தேன். ஆனால், என் துரதிருஷ்டம், நான் பட்டம் பெறுவதைக் காண அவர் உயிருடன் இல்லை!

எம்.எஸ். என்ற இசை தேவதை பற்றி எவ்வளவு படித்தாலும் என் ஆர்வம் அடங்குவதில்லை. வாழ்க்கை முழுவதும் இசையால் நிரம்பி, இசைபட வாழ்ந்தவர். இந்த நூலில், விஜயா ராஜேந்திரன், எம்.எஸ். பற்றி சொல்லிக்கொண்டே போகும் அனுபவங்கள், உணர்வு நெகிழ்ச்சிகள் கணக்கிலடங்காதவை. எம்.எஸ். மறைவுக்குப் பின், விஜயா ராஜேந்திரன் எழுதியுள்ள ஒரு கட்டுரை நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. கிளிஷேவானாலும் பரவாயில்லை, சொல்லிவிடுகிறேன். படிக்கும்போதே, என் கண்களில் நீர் திரையிடத் தொங்கிவிட்டது.

எம்.எஸ் பற்றிய சித்திரம் இவ்வளவு துல்லியமாக எனக்கு வேறெங்கும் கிடைக்கவில்லை. சதாசிவம் பற்றி கிடைக்கும் சித்திரமும் மிக நேர்த்தியானது. பல அத்தியாயங்களில் சதாசிவம் வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய ஆளுமையை ராஜேந்திரன் மிக கவனமுடன் எடுத்து எழுதியிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் நோக்கமே பழைய நினைவுகளை அசைபோடுவதுதான். எப்போதுமே கடந்துவிட்ட காலம், அற்புதமானது. இந்த நூலிலும் அந்த அற்புதம் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. மனம் இன்றைய காலகட்டத்தோடு பல சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஏக்கப்பெருமூச்சு விடுவதையும் தவிர்க்க முடியவில்லை. இறுதி அத்தியாயம் சொல்வது போல், ‘அந்த நாளும் வந்திடாதோ’தான்.

அது ஒரு பொற்காலம், கல்கி ராஜேந்திரன், வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை – ரூ.100

சென்னை புத்தகக் கண்காட்சி – ஒரு டிரெயிலர்

Posted in சென்னை புத்தகக் கண்காட்சி 2010, புத்தகங்கள் on November 25th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

2010க்கான சென்னைப் புத்தக விழா ஜூரம் தமிழ்ப் பதிப்பாளர்களிடையே தொடங்கிவிட்டது. மொத்தத் தமிழ்ப் பதிப்புலகமும் சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டியே தமது புத்தக வெளியீடுகளை அமைத்துக்கொண்டு இருப்பார்கள். அதிகபட்ச மக்கள்திரள் வரும் இடம் இதுதான். அதிகபட்ச வியாபாரம் ஆகும் இடமும் இதுதான்.

இம்முறை பபாசி எனப்படும் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு பொறுப்பேற்றிருக்கிறார்கள். அவர்களுடைய தலைமையில் டிசம்பர் 30 2009 முதல் ஜனவரி 10, 2010 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகமே புத்தகக் காட்சி வளாகம்.

வழக்கம்போல், இந்தக் கண்காட்சிக்கு என்னென்ன புதிய புத்தகங்கள் வரவிருக்கின்றன என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் உங்களைப் போலவே எனக்கு உண்டு. பதிப்பாள நண்பர்களிடம் பேசித் திரட்டிய தகவல்கள் இவை:

கிழக்கு பதிப்பகம் இம்முறை 100 புத்தகங்களுக்கும் மேல் வெளியிட இருக்கிறது. அவர்களுடைய பல்வேறு இம்பிரிண்ட்களில் புத்தம் புதிய புத்தகங்கள் வருகின்றன. வழக்கமாக சரித்திரம், வாழ்க்கை வரலாறு போன்ற துறைகளில் புத்தகங்கள் இருக்கப் போகின்றன.

முக்கியமாகச் சொல்லவேண்டியது, ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமாக, அதன் வழக்கு விசாரணை சம்பந்தமாக, முதன்மை புலனாய்வு அதிகாரியாக இருந்த கே.ரகோத்தமன் எழுதியிருக்கும் புத்தகம். ராஜிவ் காந்தி வழக்கு விசாரணை பற்றி பல புதிய தகவல்களை இந்த நூலில் ரகோத்தமன் எழுதியிருப்பதாக, கிழக்கின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்.

மொழிபெயர்ப்புகள் நூல்கள் வெளியிடுவதில் கிழக்கு இப்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அதில், முன்னாள் குடியரசு தலைவர் எழுதிய ஃபாமிலி அண்ட் நேஷன்  நூலின் தமிழாக்கம் வெளிவர இருக்கிறது. இன்னொரு பக்கம், பராக் ஒபாமாவின் ட்ரீம்ஸ் ஃப்ரம் மை ஃபாதர் நூலும் வெளியாக இருக்கிறது.

சுப்ரமணியபுரம், பசங்க, நாடோடிகள் ஆகிய திரைப்படங்களின் திரைக்கதைகளையும் கிழக்கு வெளியிட இருக்கிறது. விளம்புநிலை மனிதர் தன்வரலாறு வரிசையில், ’கலைவாணி – ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ நூல் அடுத்து வரவிருக்கிறது.

இலக்கியம் பக்கம், முக்கியமான சில நூல்களை கிழக்கு வெளியிட இருக்கிறது. இலந்தை சு. இராமசாமி எழுதியுள்ள பாரதியின் முழுமையான வரலாறு வெளிவரவிருக்கிறது. இந்திரா பார்த்தசாரதியின் முழு சிறுகதைத் தொகுதி, அசோகமித்திரனின் குறுநாவல்கள் வரிசையில், முதல் நான்கு குறுநாவல்களின் தொகுதி, ஜெயமோகனின் அச்சில் இல்லாத நூல்களின் மறுபதிப்பு – பனி மனிதன், நாவல் போன்ற நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

முகில் எழுதியுள்ள முகலாயர்களின் வரலாறு பெரிய புத்தகமாக வரவிருக்கிறது. அத்துடன், இணையத்தில் எழுதி வருபவரான சரவண கார்த்திகேயனின் சந்திரயான் பற்றிய முழுமையான நூலும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கப் போகிறது என்று நம்பிக்கை தெரிவித்தார் பத்ரி.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக நல்ல நூல்களை வெளியிட்டு வரும் பதிப்பகமான ஆழி, இந்த முறை 15 முதல் 20 நூல்கள் வரை வெளியிட இருக்கிறது. இலக்கியக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை இம்முறை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன என்றார் ஆழி செந்தில்நாதன்.

எம்.எல்.ஏ.வான ரவிக்குமாரின் சிறுகதைத் தொகுதி, ஈழம் பற்றி அவர் எழுதியுள்ள நூல் ஆகியவை முக்கியமானவை. மலையாளத்தில் இருந்து ஷாராஜ் மொழிபெயர்த்துள்ள சிறுகதைகளின் ஒரு தொகுதி வெளிவரவிருக்கிறது. அதேபோல் கீரனூர் ஜாகிர்ராஜாவின் நாவல் ஒன்று, அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுதி ஒன்றும் வெளிவரவிருக்கிறது. தமிழ்நதியின் கவிதைத் தொகுதியும் வெளியீட்டுத் திட்டத்தில் இருக்கிறது. 

தலாய்லாமாவின் வரலாறு மொழிபெயர்ப்பு, குழந்தைகள் புத்தகங்களும் வெளிவரும் என்றார் செந்தில்நாதன்.

நுண்ணுணர்வு கொண்ட பதிப்பகங்களில் ஒன்று மருதா. அவர்கள் வெளியிடும் நூல்கள் எல்லாம் கவனிக்கத்தக்கவை. இம்முறை, சு.தமிழ்ச்செல்வி, வளவ.துரையன், கீரனூர் ஜாகிர்ராஜா ஆகியோரின் நாவல்களை வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறது மருதா. ”நேரம் கிடைப்பதைப் பொறுத்து எவ்வளவு நூல்களை வெளியிட முடியுமோ அவ்வளவையும் வெளியிடுவேன்” என்றார் பாலகுரு.

நூறு நூல்கள், ஆறு மீட்டிங்கள் என்று இம்முறை அதிரடி ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது உயிர்மை பதிப்பகம். டிசம்பர் மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் பத்து பத்து நூல்கள் வெளியிட இருக்கிறது உயிர்மை. ஜெயமோகன் 10, சாரு நிவேதிதா 10, எம்.எல்.ஏ. ரவிகுமார் 4, எஸ்.ராமகிருஷ்ணன் 4 என்ற எண்ணிக்கையில் நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

முக்கியமாக சர்வதேச பெண் கவிஞர் வரிசையில் முதல் மூன்று பெண் கவிஞர்களின் அறிமுகமும் அவர்தம் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் வெளிவரவிருக்கிறது. மேலும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதை, கவிதைகள் அடங்கிய கிட்டத்தட்ட 20 நூல்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக உயிர்மையின் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன் தெரிவித்தார்.

கவிஞராக அறியப்பட்ட சுகுமாரனின் முதல் நாவல் வெளிவரவிருக்கிறது. அதேபோல், தமிழ்மகனின் இரண்டாம் நாவலும் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவரப் போகிறது.

காலச்சுவடு நாற்பது புத்தகங்களைக் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது. இரண்டு முக்கியமான நூல்களுக்கு முன்வெளியீட்டுத் திட்டத்தையும் அறிவிக்க இருக்கிறது காலச்சுவடு. ஆழி சூழ் உலகு என்ற தனது முதல் நாவல் மூலம் எழுத்தாளர் மத்தியில் கவனம் பெற்ற ஜோ டி குரூஸின் அடுத்த நாவல், ‘கொற்கை’. 1350 பக்கங்கள் கொண்ட நாவல். ‘அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு’ (பதிப்பாசிரியர் ப.சரவணன்) நூலும் இதேபோல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளிவரவிருக்கிறது. 1150 பக்கங்கள் கொண்டது இந்நூல்.

மேலும் உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’ என்ற நாவலும் க.வை.பழனிசாமியின் ‘ஆதிரை’ நாவலும் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு வரப் போகின்றன. நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ என்ற மொழிபெயர்ப்பு நாவலையும் காலச்சுவடு கண்ணன் வெளியிட இருக்கிறார். அதேபோல், சுந்தர ராமசாமி 75 இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற  ஆர்.எம். நெளஸாத்தின் ‘நட்டுமை’ என்ற நாவலும் வரவிருக்கிறது.

என் கவனத்தை அதிகம் கவர்ந்தது, கிருஷ்ணன் நம்பியின் மொத்த படைப்புகளையும் உள்ளடக்கிய ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற தொகுதி. ராஜமார்த்தாண்டன் தொகுப்பாசிரியர். அதுவும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

மு.பொன்னம்பலத்தின் மொத்த சிறுகதைத் தொகுதி ‘முடிந்த போன தசையாடல் பற்றிய கதை’ மற்றொரு முக்கிய நூல். வைக்கம் முகம்மது பஷீரின் மொத்த படைப்புகளையும் வெளியிட்டும் திட்டம் காலச்சுவடுவுக்கு இருப்பதாக கண்ணன் தெரிவித்தார்.
 
“மற்றொரு முக்கியமான புத்தகம், அர்ச்சுனன் தபசு. அதேபோல், எனது பர்மா குறிப்புகள் என்பது இன்னொரு முக்கியமான புத்தகம். இந்த நூலுக்காக நாங்கள் ஓராண்டுக்கும் மேலாக உழைத்திருக்கிறோம்” என்றார் கண்ணன்.

விகடன் பிரசுரம் வெளியிட இருக்கும் நூல்கள் குறித்து, அதன் பதிப்பாசிரியரான வீயெஸ்விடம் கேட்டேன். “வழக்கமா வருவதுதான். மாதாமாதம் புதிய புத்தகங்கள் வந்துகொண்டு இருக்கின்றனவே. புக் ஃபேர்க்குன்னு தனியா ஏதும் செய்யலை” என்றார்.

வர்த்தமானன் பதிப்பகம் டிசம்பர் 15 தேதியிலேயே நாலாயிர திவ்யபிரபந்தம் முழுமையையும் உரையுடன் வெளியிட இருக்கிறது. ஜனவரி 17 ஆம் தேதி, திருமந்திரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உரையும் 9 தொகுதிகளில் வெளியாகப் போகிறது. இதையும் அருட்செல்வர் நா. மகாலிங்கத்தின் ஆதரவோடு, வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட இருக்கிறது.

இன்னும் பல பதிப்பாள நண்பர்களிடம் பேசவில்லை. அவர்களுடைய திட்டங்கள் தெரிய வரும்போது, நேசமுடனில் அதைப் பற்றியும் எழுதுகிறேன். இதில்லாமல் இன்னும் பல தனிநபர்கள் தங்கள் நூல்களை வெளியிட இருக்கிறார்கள்.

பொருளாதாரத் தேக்கம், மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இல்லை என்று சென்ற புத்தகக் கண்காட்சி (2009) கொஞ்சம் சோர்வுடன் காணப்பட்டது. இம்முறை அப்படி இருக்காது என்றே தோன்றுகிறது. வெளியிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் ஆர்வமுமே அதற்கான சாட்சியங்களாகத் திகழ்கின்றன.

யுடிலிட்டி வேல்யூ!

Posted in நூலகம், புத்தகங்கள், மாணவர்கள் on October 14th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

நூல்களின் மேல் பெரும் காதல் உடையவர்களாக நூலகர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவும் தப்பாக ஆசைபட்டிருக்கிறேன். சின்ன வயதில் இருந்து அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள் என்று தொடர்ந்து பல நூலகங்களில் இருந்து நூல்களை வாங்கிப் படித்துவந்திருக்கிறேன். அரசு நூலகங்களில் உள்ள நூலகர்கள் பலருக்கு, நூல்களின் பெருமை தெரியுமோ தெரியாதோ ஆனால், அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற விவரம் மட்டும் நன்கு தெரியும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசு நூலகங்களில் வந்து சேரும் புது நூல்களை, நூலகர்கள் உடனடியாக எடுத்து அடுக்குகளில் வைக்கமாட்டார்கள். அதை பொக்கிஷம் போல் கொஞ்ச நாள் மறைத்து மறைத்து பீரோவுக்குள் வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு நாள் மெல்ல ஒவ்வொரு நூலாக வெளியே வரும். அதை எடுத்துப் போகும் ஆளை, நூலகர் பார்க்கும் பார்வை, ஏதே சொந்தப் பெண்ணை களவாடிக்கொண்டு செல்பவன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த நூல்கள் எல்லாம் மக்களுக்குக் கொடுக்கவே வாங்கப்பட்டுள்ளன, அதைப் பயன்படுத்துவதன் மூலமே நூலின் உபயோகம் முழுமை பெறும் என்ற எண்ணங்களை விட, ஏதோ பத்திரமாக வைத்து பூஜை செய்வதே உயர்ந்த பணிபோல், இந்த நூலகர்கள் நினைத்துக்கொள்வார்கள் போலும். நூல்களின் மதிப்பு பலருக்குத் தெரிவதில்லை, அவர்கள் அதைக் கிழித்துவிடக் கூடும், திருடிக்கொள்ளக் கூடும் என்றெல்லாம் நூலகர்கள் காரணம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கிழிந்தால்தான் என்ன? படித்துக் கிழிக்கத்தானே நூல்கள்? அவ்வளவு பேர் படித்து நைந்து கிழிந்துபோனால், அதைவிட, அந்த நூல் அடையக்கூடிய பேறு வேறு என்ன இருக்க முடியும்? புதிதாக மேலும் படிகள் வாங்கிவைக்கவேண்டியதுதான்.

நூலகங்களில் நூல்களைத் திருடுபவர்களை எனக்குத் தெரியும். பல நூல் நிலைய காவலாளிகள், உதவியாளர்களே, இப்படிக் களவாடிக்கொடுக்கத் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லோரும் பயன்படுத்தவே நூல்கள், நூலகங்கள். தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ள, அதிகம் செலவில்லாமல் நூல்களைக் களவாடிக்கொள்ளலாம் என்ற எண்ணமே முற்றிலும் தவறு.

ஆனால், இதனாலெல்லாம், நூலகர்கள் போலீஸ்காரர்களைப் போல் நடந்துகொள்ள வேண்டாம். எல்லோர் மேலும் ஒரு சந்தேகக் கண். விளைவு, பயன்படுத்துபவர்கள் மேல் ஒருவித அசூசை. நூலகத்தை உண்மையாகப் பயன்படுத்துபவனையும் அதை முறைகேடாக பயன்படுத்த நினைப்பவனையும் இனம்காண முடியாதா என்ன?

எல்லா அரசு நூல் நிலைய நூலகர்களையும் இப்படிச் சொல்ல முடியாது. நான் சின்ன வயதில் பல முக்கிய நூல்களை வாசித்த, சென்னை கொண்டியம்பதியில், முருகன் தியேட்டர் அருகே இருந்த நூல்நிலைய நூலகர் மிக நல்ல மனிதர். நூல் நிலையத்திலேயே ஒரு முழு நூலைப் படித்துவிட்டு, கையில் இன்னும் இரண்டு நூல்களை எடுத்துவந்து அடுத்த நாளைக்குள் அவையிரண்டையும் படித்துவிட்டு, மீண்டும் போய் நூலகத்தில் நிற்பேன். மனிதர் சிரித்துக்கொண்டே அடுத்த நூல்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பார்.

இவருக்கு நேர் எதிராக இருந்தவர், நான் படித்த து.கோ.வைணவக் கல்லூரி நூலகர். மிக அற்புதமான நூலகம் இது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வெளியான நல்ல தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் சேகரம் இங்கே உண்டு. நான் படித்தது கணிதம். எடுத்து வாசித்தது அத்தனையும் இலக்கியம். துறை சார்ந்த நூல்கள் எல்லாம் முன்னால் இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நூல்கள் பின்னால் ஒருபக்கம் அடுக்கி வைத்திருப்பார்கள். விளக்கு இருக்காது. நான் சளைத்தவனில்லை.

உள்ளே நுழைந்து எண்ணற்ற ஆங்கில கதைப் புத்தகங்களை எடுத்துவந்துவிடுவேன். ஃபாக்னர் என் ப்ரிய ஆசிரியர். நூலகருக்குப் பொறுக்காது.

‘சப்ஜெக்ட் புக் இல்லையே இது?’
‘ஆமா சார்.’
‘நேத்து கூட கதை புஸ்தகம் எடுத்துகிட்டு போன போல இருக்கே?’
‘ஆமா சார்.’
‘படிச்சுட்டியா?’
‘ஆச்சு சார்.’

லேசாக முறைப்பது போல் இருக்கும். திடீரென்று, நூலகர் என் அப்பா முகத்தை எடுத்து மாட்டிக்கொண்டிருப்பார். தாடைகள் இறுக்கம் கொள்ளும். கைகள் படபடக்கும்.

‘இதெல்லாம் எடுத்துகிட்டுப் போக முடியாது. சப்ஜெக்ட் புக்ஸ்தான்.’
‘அப்படி ஒண்ணும் போடலியே சார். எல்லாம் புக்ஸும் எடுக்கலாம்னுதான் போட்டிருக்கு.’
‘ஹெ.ஓ.டி.கிட்ட சொல்ல வேண்டியிருக்கும்.’
‘தாராளமா சொல்லுங்க.’

சட்டென புத்தகங்களை வீசிவிட்டு அவர் அறைக்குள் போய்விடுவார். ‘உருப்படாத சனியன்’ என்று நினைத்திருப்பார். நான் வழக்கம்போல், நூலகத்துக்குப் பின்புறம் இருக்கும் அமைதியான பழைய கட்டடம் ஒன்றில் போய் அமர்ந்துகொண்டு படித்துக்கொண்டு இருப்பேன்.

சமீபத்தில் வேறொரு கல்லூரி நூலகரைச் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தேன்.

‘ஸ்டூடன்ஸ் என்ன மாதிரி புக்ஸெல்லாம் எடுத்துப் படிக்கறாங்க சார்?’
‘சப்ஜெக்ட் புக்ஸ்தான் சார். நான் வேறெதுவும் கொடுக்கறதில்ல.’
‘ஏன் கதை புத்தகமெல்லாம் கொடுக்க மாட்டீங்களா?’
‘அதெல்லாம் எதுக்கு சார்? அதையெல்லாம் வெச்சம்னா, எந்நேரமும் அதைத்தான் படிச்சிகிட்டு இருப்பானுங்க.’

கேட்க எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனாலும் கேட்டுவிட்டேன்.

‘கதை புக்ஸ் படிச்சா என்ன சார்?’
‘உருப்படாம போயிடுவாங்க. நாளைக்கு அங்கம்மா அப்பாவுக்கு யார் பதில் சொல்றது சொல்லுங்க? காலேஜுக்கு எதுக்கு அனுப்பறாங்க? படிக்கத்தானே? அதை ஒழுங்கா செய்யாம இவன் கண்டதையும் படிச்சுட்டு திரிஞ்சான்னா, நாளைக்கு யார் பதில் சொல்றது? வாழ்க்கையே வேஸ்டா போயிடும் இல்லையா?’

யுடிலிட்டி வேல்யூ இருக்க வேண்டும். சமூகம் மிகத் தெளிவாக இருக்கிறது. நூலகம் என்பது காசு கொடுத்து தனிநபர் வாங்க முடியாத அதிகத் தொகை உள்ள புத்தகங்களை வாங்கி வைக்கும் இடம். அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அங்கேபோய் சும்மா இலக்கியம், கதை, கவிதை எல்லாம் படிக்கக் கூடாது. கவைக்குதவாத விஷயங்கள் அவை. பணம் சம்பாதிக்க உதவாத, முன்னேற்றத்துக்கு உதவாத எதுவும் பயனுடையது அல்ல.

சமூகத்தின் இந்தக் குணத்தைத்தான் நூலகர்களும் பிரதிபலிக்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

இந்த குணமும் எண்ணமும் எவ்வளவுதூரம் தெரியுமா வந்திருக்கிறது? திருவல்லிக்கேணி பாரதி சாலை ஓரம் இருக்கும் பழைய புத்தகக் கடைகள் அத்தனையிலும் இப்போது கல்லூரிகள், பள்ளிகள் சார்ந்த நூல்கள் மட்டுமே விற்கப்படுகின்றன. ஆசிரியர் பெயர் சொன்னால், புத்தகத்தை எடுத்துத் தருவார்கள், படிப்பு மற்றும் ஆண்டு விவரம் சொன்னால், அந்தக் குறிப்பிட்ட ஆண்டு பயன்படுத்தப்படும் நூல்களின் விவரங்களை கடைக்காரர்கள் எடுத்துச் சொல்வார்கள். அவ்வளவு அத்துபடி.

எப்போதாவது, பழைய நூலகங்களில் உள்ள பழைய குப்பைகள் என்று அட்டை கிழிந்த, பக்கங்கள் நைந்துபோன இலக்கிய புத்தகங்களை அம்பாரமாய் கொட்டி வைப்பார்கள்.  ‘எது எடுத்தாலும் ஐந்து ரூபாய்.’ ‘எது எடுத்தாலும் பத்து ரூபாய்’ என்று செ.யோகநாதனும் சூர்யதீபனும் பழமலய்யும் இ.பாவும் சிதறிக்கிடப்பார்கள்.

என்னைப் போல் ஒருசிலர் அதன் அருமை கருதி வாங்கிச் செல்வார்கள். மற்றபடி, இதையெல்லாம் மசாலா வேர்க்கடலை விற்பவனும் சோம்பப்டி விற்பனும்தான் வாங்குகிறார்கள். எனக்கு இருப்பதைப் போலவே, அவர்களுக்கும் அதில் ஓர் யுடிலிட்டி இருக்கிறது!!!

‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு

Posted in பதிப்பகம், புத்தகங்கள் on October 7th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

கிழக்கு பதிப்பகத்துக்காக ரூல்ஸ் ஆஃப் பேரண்டிங் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இப்போது இப்புத்தகம் அச்சாகி விற்பனைக்கு வந்திருக்கிறது என்றார் பத்ரி சேஷாத்ரி. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.

எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும் உற்சாகம் அளித்த புத்தகம் இது. மொழிபெயர்க்கும் முன்பு ஒருமுறை முழு நூலையும் படித்துவிட்டேன். எளிய நூறு விதிகள். நல்ல உபயோகமான பெற்றோராக இருப்பதற்கு இந்த நூல் தரும் வழிகள் மிகவும் அபூர்வமானவை. தமிழில் இதைப் படிப்பவர்களுக்கு, தமிழ் மனம் உடைய பெற்றோர்களுக்கு, பண்டைய சிந்தனை மரபில் வரும் பெற்றோர்களுக்கு இந்த நூல் எவ்வளவு உவப்பாக இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த நூலின் அடிநாதம் இதுதான். 18 வயதில் உங்கள் பெண்ணோ பிள்ளையோ வீட்டைவிட்டு வெளியே போய்விடுவான்/ள். அதுதான் இயற்கை. அப்படிப் போகவில்லை என்றால், அவர்களை நீங்களே அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வெளியே அனுப்பிவிட வேண்டும். சிறந்த பெற்றோர் என்பவர்கள், 18 வயதுக்குப் பின் தம் பிள்ளைகள், தம் சொந்தக் காலில் நிற்க, சொந்த சிந்தனையோடு செயல்பட, சுயமுடிவுகள் எடுக்க, உறுதியான மனமுடையவர்களாகத் தயார்படுத்துபவர்கள்தான் என்கிறது இந்த நூல்.

இதை பத்து பத்து அத்தியாயங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பத்து அத்தியாயமும் வளர்ச்சிப் போக்கின் ஒரு அம்சத்தை மையப்படுத்தி, விரிவாகப் பேசுகிறது. அனுபவங்கள், உதாரணங்கள், மேற்கோள்கள், சிந்தனைத் தெறிப்புகள் நிறைந்த நூல் இது. இதற்கு மேல் இந்த நூலைப் பற்றிப் பேசினால், சுவாரசியம் குறைந்துபோய்விடும். நீங்களே நூலைப் படித்துக்கொள்ளுங்கள்.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. இருக்கிறது. நமது இந்திய சமூகங்களில் சுயசார்புள்ள மனிதனாக ஒருவனைத் தயார்படுத்தும் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்று யோசித்தால், ஐயமே மேலோங்குகிறது. சுயசார்பு என்று சொல்லும்போது, சுயமாக முடிவெடுத்தல், தன் சொந்தக் காலில் நிற்பது, தன் முடிவைச் செயல்படுத்துவது என்று இன்னும் விரித்துப் புரிந்துகொள்ளலாம்.

பெற்றோர்களாகிய நாம், நம் பிள்ளைகளுக்குச் சுயமாக சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் சொல்லிக்கொடுத்திருக்கிறோமா? அதை செய்ய அனுமதித்திருக்கிறோமா? முடிவான பதில் தெரியவில்லை. பெற்றோர்களில் ஒரு சிலர் இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். ஒரு சிலர் செய்யவில்லை. அவர்கள், ரொம்ப பொசசிவ்வாக தம் மகவுக்குத் தேவையான அனைவற்றையும் தாமே செய்துகொடுத்து, ஸ்பூன்ஃபீட் செய்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல், இந்தப் பிள்ளைகளால் சொந்த முடிவுகளை எடுக்கும் பேச்சே எழாமல் போய்விடுகிறது. அடுத்தவர்களுக்கு வலிக்குமோ, என்ன நினைத்துக்கொள்வார்களோ, என்ன பேசுவார்களோ என்று தயங்கித் தயங்கி மற்றொரு சாதாரண குடிமகன் ஆகிவிடுவார்.

மேலே சொல்லியிருப்பது சிந்தனை ரீதியான விஷயம் என்றால், நடைமுறை ரீதியாகவாகவது நம் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கிறார்களா என்றால், அதிலும் கொஞ்சம் இடறல் உண்டு. எனக்குத் தெரிந்த குடும்பத்தில், பையன் +2 படிக்கும்போதுகூட, அவனுக்கு அவன் அம்மா வாயில் சோறு ஊட்டுவாள். காலுக்குப் போடும் காலணிகளை எடுத்துவைத்து, புத்தகங்களை பையில் அடுக்கிக்கொடுத்து, புராஜட்டுகளைத் தானே எழுதிக்கொடுத்து அந்தம்மா தானே ஸ்கூலுக்குப் போகாத குறைதான்.

இன்னொரு குடும்பத்தில் பையன், எட்டாவதோ என்னவோ படிக்கிறான். வீட்டைவிட்டு வெளியே வந்ததே இல்லை. அப்படியே வந்தான் என்றால், அது காலை அப்பா ஸ்கூலுக்கு அழைத்துச் செல்வதும் மாலை அம்மா வீட்டுக்கு அழைத்து வருவதும் மட்டும்தான். மிஞ்சி மிஞ்சி சனி ஞாயிறுகளில், அவன் அம்மாவோடு வெளியே போகும்போது, அம்மாவின் முந்தானை முனையைப் பிடித்துக்கொண்டு பின்னால் ஓடுவான். வெளியுலகம் என்று ஒன்று இருப்பதே அந்தப் பையனுக்குத் தெரியுமோ தெரியாதோ?

இதுபோன்று அதீத pampered ஆக வளரக்கூடிய பையனோ பெண்ணோ, என்ன வாழ்வு வாழ்வார்கள்? தெரியவில்லை. தன் வேலைகளை எல்லாம் எப்படியோ யாரோ செய்கிறார்கள், அவர்களுக்கு தாம் சுமையாக இருக்கிறோம் என்ற உணர்வு இவர்களுக்கு வரவே வராதோ? தன் வேலைகளை ஏன் இன்னொருவர் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழவே எழாதோ? தனக்காக எதற்கு தன் அம்மாவோ அப்பாவோ அல்லது மனைவியோ அவர்களுடைய சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வளைந்து கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழவே எழாதோ? தெரியவில்லை.

என் தோழி ஒருத்தியின் வீட்டில், அவளுடைய அப்பா, அண்ணன்கள் எல்லாம் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு போய், வாஷ்பேசினில் கழுவக்கூட மாட்டார்கள். தட்டிலேயே கையைக் கழுவிக்கொள்வார்கள். குடித்த காபி டம்பளரை, நாற்காலிக்கு கீழே வைத்துவிட்டு டிவி பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வங்கிக்கு வரும் பல இளைஞர்களிடம் பேனா இருக்காது. இரவல் பேனாவில், சலான்களை நிரப்புவார்கள். பல பிள்ளைகளுக்கு படுத்து உறங்கும் படுக்கையை மடித்து எடுத்துவைக்கத் தெரியாது.

இன்னொரு அலுவலகத் தோழி சொன்னது இது. அவளுடைய உறவினர் ஒருவர் தன் காரை ஓட்டிக்கொண்டு அலுவலகம் போயிருக்கிறார். பொதுவாக அந்தக் காரை அவரது ஓட்டுநரோ, மனைவியோதான் ஓட்டுவார்கள். அன்று இவர் ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். மேற்கு மாம்பலம் அருகே வண்டி நின்றுவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. தன் மனைவியைக் கூப்பிட்டு, என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கேட்டாராம் அவர். நடுரோட்டில் காரோடு செயலற்று நிற்கும் அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்த எனக்குச் சிரிப்பதா, வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

இவர்களிடம் சுயசார்பு பற்றியெல்லாம் பேசுவதில் அர்த்தமே இல்லை. சுயசார்பு உள்ளவனால்தான் சுய முடிவுகள் எடுக்க முடியும். சுய முடிவு எடுப்பவன் தான், பின்னர் அதைச் செயல்படுத்தவும் முடியும். செயல்படுத்தும் சுதந்திரம் என்பது ஓரளவுக்கு இங்கே இருக்கிறது. தடைகள் உண்டு. ஆனால், சுயசார்பு உள்ளவர்கள் குறைவாக இருக்கும்போது, இதைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.

நமது சமூகத்தில் ஏதோ ஒருவித நோய் இருக்கிறது. எவ்வளவு பெரியவனாக வளர்ந்தாலும், தன் பிள்ளைகளை இன்னும் சிறுவர்கள் போல் நடத்தும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்களும் அவர்தம் கருத்துகளும் ஒருவிதமான கதகதப்பை பிள்ளைகளுக்குத் வழங்குகிறது. அதனால், அந்த அரவணைப்பையும் கதகதப்பையும் பாதுகாப்பையும் எங்கே இழந்துவிடுவோமோ என்று பிள்ளைகளும் பெற்றோர் வழியில் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டு நடக்கிறார்கள்.

பழமையும் பண்பாடும் நமது செழுமைகள்தான். மூத்தோர் சொல் வேதம்தான். அதை உள்வாங்கிக்கொண்டு தன்வயப்படுத்திக்கொண்டு சுயசிந்தனையோடு செயல்பட வேண்டியது அவசியம் இல்லையா?

இதுபோன்ற சூழ்நிலை நிலவும் இந்திய, தமிழகச் சூழலில், ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ நிச்சயம் வேறோரு திசையை, தீர்வை, மனநிலையை முன்வைக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை?

Posted in பதிப்பகம், புத்தகங்கள் on September 23rd, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

தமிழ்ப் பதிப்புலகத்தின் மார்க்கெட் சைஸ், வளர்ச்சி விகிதம், மொத்த ஆக்டிவ் பதிப்பாளர்கள் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையான ‘தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்’ கட்டுரையில் பேசியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்த நண்பர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானது, ஏன் தமிழில் புத்தக விநியோகம் வளரவில்லை? இங்கே என்ன பிரச்னை என்பதுதான்.

தமிழில் புத்தக விநியோகம் என்பது சவலைப் பிள்ளை. ஒவ்வொரு புதுப் பதிப்பகம் தொடங்கும்போதும், எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்தே புதிதாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இருக்கிறது. புத்தக விநியோகம் ஏற்கெனவே தயாராக இருக்கும் ஒரு உறுப்பாக இங்கே இல்லை. அதை ஒவ்வொருவரும் தம் பதிப்பகத்தின் ஒரு பகுதியாக வளர்த்து எடுக்கவேண்டி இருக்கிறது.

புத்தக விநியோகத்தை முழுமையான ஒரு தொழிலாக/ வேலையாக இங்கே யாரும் எடுத்துச் செய்வதில்லை. அப்படியே இருக்கும் விநியோகஸ்தர்களும் தத்தமது ஊரைச் சுற்றி மட்டுமே புத்தகங்களை விநியோகிப்பவர்களாக இருக்கிறார்கள். கோவை என்றால் விஜயா வேலாயுதம். இவர் விநியோகஸ்தர் மட்டுமல்ல, பதிப்பாளர், புத்தகக் கடையையும் நடத்துபவர்.

அதாவது, தமிழகத்தின் பல ஊர்களில் புத்தகக் கடை வைத்திருப்பவர்களே, விநியோகஸ்தர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால், தங்கள் ஊரைச் சுற்றியுள்ள ஒரு ஊர்களுக்கு மட்டுமே புத்தகங்களைச் சப்ளை செய்ய முடிகிறது. தமிழகம் முழுவதற்கும் ஒரு விநியோகஸ்தர், அவரிடம் புத்தகங்களை அச்சடித்துக்கொடுத்துவிட்டால், அவர், எல்லா இடங்களிலும் போய் சேர்த்துவிடுவார் என்ற நிலைமை இன்னும் வரவில்லை.

ஆங்கிலப் புத்தக விநியோகத்திலும் இந்த நிலைமைதான். ஆனால், இன்னும் கொஞ்சம் விரிவாக அங்கே செய்ய முடிகிறது. இந்தியா புக் ஹவுஸ், இந்தியா புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ் போன்ற விநியோகஸ்தர்கள் இந்தியா முழுமையும் விநியோகம் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விநியோகமும் முழுமையானது அல்ல. பல மாநிலங்களில் அவர்களால் முழுமையாக விநியோகம் செய்ய முடிவதில்லை. சென்னையில் உள்ள வெஸ்ட்லாண்ட், ஒரு முக்கிய விநியோகஸ்தர்.

இந்த விநியோகஸ்தர்களிடம் ஒரு சில செளகரியங்கள் உள்ளன. இவர்களிடம் நேரடியான விற்பனைப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல கடைகளுக்குப் புத்தகங்களைக் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள். சில புத்தகக் கடைகள் நேரடியாக இவர்களிடமே வந்து புத்தகங்களை வாங்கிச் சென்று தங்கள் கடைகளில் வைத்து விற்பனையும் செய்கிறார்கள்.

இதெல்லாம் செய்வதற்கு ஒரு நிர்வாக அமைப்பு வேண்டும். பணியாளர்கள் வேண்டும். பணியாளர்களுக்குச் சம்பளம், புத்தகங்களை வைக்க சேமிப்புக் கிடங்கும், இன்ன பிற வசதிகளும் வேண்டும். ஆங்கில புத்தக மார்க்கெட்டில் இதையெல்லாம் செய்துகொள்ள உரிய புத்தக கமிஷன் கிடைக்கிறது. ஆங்கில மார்க்கெட்டில், வெளிநாட்டில் இருந்து வரும் பல புத்தகங்கள் குறைந்தபட்சம் 40 சதவிகிதமேனும் விற்பனைக் கழிவுடன் வருகிறது. ஒரு சில புத்தகங்களுக்கு 70 சதவிகிதம் வரை விநியோகஸ்தர்களுக்குக் கழிவு கிடைக்கும். இதிலிருந்துதான், கடைக்காரர்களுக்கான கழிவு கொடுக்கப்படுகிறது.

விநியோகமும் மார்க்கெட்டிங்கும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. ஆங்கில புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள் தங்கள் நூல்களுக்கு பெரிய அளவில் சந்தைப்படுத்தும் திட்டங்களை, அறிவிப்புகளை, புத்தகம் வெளிவருவதற்கு முன்பே செய்யத் தொடங்கிவிடும். ஹாரி பாட்டர் நூல்களைப் பாருங்கள். அந்த நூல் வரும்முன்பே, அதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து மீடியாவில் வந்துகொண்டே இருக்கும். சில இதழ்களில் அதனுடைய சாம்பிள் அத்தியாயம், எழுத்தாளரின் பேட்டி வெளியாகும். முடிந்தால் வெளியீட்டு விழா. புத்தகங்கள் வெளியானபின்பு, கடைகளில் ஒட்ட சின்னச் சின்ன போஸ்டர்கள், தொடங்க விட டாங்களர்கள் அனுப்பிவைப்பார்கள்.

ஒரு புத்தகம் பற்றிய போதிய அளவு விளம்பரம் இல்லையென்றால், அது சந்தையில் போய் சேரவே சேராது. வாங்குபவர்களுக்கு அதைப் பற்றிய முழு புரிதல் இல்லாமல் எப்படி பெரிய அளவில் வியாபாரம் சாத்தியம்? தமிழில், தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவல் வந்திருக்கிறது. இந்தத் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்? ஸ்ரீதர கணேசன், சு.தமிழ்ச்செல்வி ஆகிய எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நானேதான் போய் கண்டுபிடித்து வாங்கிக்கொண்டேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல், சமீபத்தில்தான் நான்காவது பதிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழில் மெச்சப்படும் ஒரு நாவலுக்கே இதுதான் நிலைமை.

இதனால் என்ன பாதிப்பு? கடைகளில் என்கொய்ரியே இருக்காது. நாலு பேர் தொடர்ந்துபோய் ஒரு புத்தகம் இருக்கிறதா, வைத்திருக்கிறீர்களா என்று கேட்டால்தான், கடைக்காரர் அதை வாங்கி வைப்பார். அப்போதுதான் விற்பனை அதிகரிக்கும். விற்பனை அதிகரித்தால், கடைக்காரர்கள் அதிகரிப்பார்கள், விநியோகஸ்தர்கள் அதிகரிப்பார்கள். இது ஒரு சுழற்சி.

இன்றைக்கு தமிழில் இருக்கும் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. கடைக்காரர்கள்தான் எல்லாம். அவர் தனது கடையில் என்ன புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புரொமோட் செய்கிறாரோ அந்த நூல்கள்தான் வாங்குபவர்களின் கண்களுக்குத் தென்படும். மேலும் அவரே நேராக பதிப்பகங்களிடம் பேசி நூல்களை வரவழைத்துக்கொள்ளுகிறார். இடையில் எதற்கு ஒரு டிஸ்டிரிபியூட்டர், அவருக்கு எதற்கு ஒரு மார்ஜின் என்று தெளிவாக பேசுகிறார்கள்.

அதனால், தமிழில் விநியோகஸ்தர் என்பவரின் ரோலுக்கே இடமில்லாமல் போய்விட்டது. எல்லா பதிப்பாளர்களும் நேரடியாக புத்தகக் கடைகளையே சார்ந்திருக்கிறார்கள்.

தமிழில் விநியோகத்துறை வளர முடியாததற்கு மற்றொரு முக்கிய காரணம், தூரம். வெளிநாடுகளில் இருக்கும் பதிப்பகங்களோ, வட இந்தியாவில் இருக்கும் பதிப்பகங்களோ தமிழகத்தில் புத்தகத்தை விற்கவேண்டுமானால், அதற்கு இங்கே ஒரு விநியோகஸ்தரை வைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இங்கே இருக்கும் தமிழ் பதிப்பாளர்களுக்கு தமிழகத்துக்குள்ளே விநியோகம் செய்ய எதற்கு தனியாக விநியோகஸ்தர்கள் என்று நினைக்கின்றன. எப்படி இருந்தாலும் வாங்குபவர்கள், சென்னை வரும்போதோ, அல்லது ஏதேனும் ஒரு புத்தகக் கண்காட்சியிலோ புத்தகத்தை வாங்கிவிடுவார்கள், விநியோகத்துக்கு என்று ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணமும் பதிப்பாளர்களுக்கு இருக்கலாம்.

இந்த எண்ணங்கள் ஓரளவுக்குச் சரி. ஆனால், முழுமையும் சரி என்று சொல்லிவிட முடியாது. விநியோகம் என்பது பரவலாக்குதல். ஒரு நூலை பல இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவர்களுடைய முக்கியமான வேலை. எங்கே எந்த விதமான புத்தகங்கள் விற்பனையாகக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு அங்கே அந்தத் துறை சார்ந்த நூலைக் கொண்டு போய்ச் சேர்ப்பது அவர்களுடைய வேலை. இது மார்க்கெட் இண்டெலிஜென்ஸ் சம்பந்தப்பட்டது.

எத்தனை பதிப்பாளர்களுக்கு இந்த மார்கெட் பற்றிய தெளிவு இருக்கிறது? எனக்குத் தெரியவில்லை. பள்ளி, கல்லூரி புத்தகங்கள் மட்டுமே விற்கக்கூடிய கடைகளில் பொது நூல்களும் இருக்கின்றன. ரயில்வே ஸ்டேஷன் கடைகளில் சீரியஸ் புத்தகங்கள் அடிக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கெல்லாம் விற்கக்கூடாதா? இதெல்லாம் புது சந்தையை திறக்கும் முயற்சிகள், போட்டுத்தான் பார்ப்போம், என்னாகிறது என்று புரிந்துகொள்ளலாமே என்று பேசினால் என் பதில் மெளனம்தான்.

என் கரிசனம் முழுவதும் இந்த முயற்சியில் செலவிடப்பட்டிருக்கும் நேரம், உழைப்பு சம்பந்தப்பட்டது. தேவையற்ற இடங்களில் தேவையற்ற நூல்கள் வைக்கப்பட்டால், அதனால், எந்தப் பலனும் இல்லை. உழைப்பும் நேரமும்தான் வீண்.

பதிப்பாளர்கள் நேரடியாக கடைக்காரர்களிடம் போகும்போது, பாதிப்பு பதிப்பாளர்களுக்குத்தான். அவர்களால் எத்தனை கடைகளை நேரடியாகப் பார்த்துக்கொள்ள முடியும்? விளைவு, பல பதிப்பாளர்கள், தங்களுக்கு என்று ஒரு லைன் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதில் எவ்வளவு அதிகபட்சம் விற்கமுடியுமோ அதை விற்பனை செய்கிறார்கள். மற்ற லைன்களில் ஆள்கள் போட்டு தொடர முடியாதபோது, அதை விட்டுவிடுகிறார்கள். இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை, இந்த லைனில் இருக்கும் ஒரு விற்பனைப் பையன், ஊர் ஊராகக் கிளம்பிப் போய், பணத்தை வசூல் செய்துகொண்டு வருகிறான். முடிந்தால், புதிய ஆர்டர்களையும் எடுத்துக்கொண்டு வருகிறான். இதுதான் இன்று தமிழில் நடைமுறையில் உள்ள விநியோக முறை.

விளைவு, நல்ல நூல்கள் கூட, அதிகப் படிகள் விற்பனை ஆவது இல்லை. பல நூல்கள் பல ஊர்களில் கிடைப்பது இல்லை. பல நூல்கள் கடைகளைப் போய் சேருவதே இல்லை. எல்லாம், தமிழக அரசின் நூலக ஆணையை எதிர்பார்த்து கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும். ஒரு நூலை ஒரே சமயத்தில் தமிழகம் முழுவது ஒரே நாளில் வெளியிட முடியாத நிலை இங்கே. அந்த நெட்வொர்க் பலம் பல பதிப்பாளர்களுக்குக் கிடையாது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஞானரதம் இதழ் ஆசிரியராக இருந்த தேவசித்ரபாரதி அவர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டார். ஊர் ஊராகப் புத்தகக் கடைகள் போடுகிறேன், கிட்டத்தட்ட 5000 படிகள் வரை ஒவ்வொரு நூலையும் விநியோகம் செய்ய முடியும் என்று அவர் முயன்றார். வெற்றி பெற முடியவில்லை.

அதேபோல், என்.சி.பி.எச். பதிப்பகம், தமது நூல்களையும் ராதுகா பதிப்பக நூல்களையும் நடமாடும் பேருந்துகளில் வைத்து விற்பனை செய்து வந்தார்கள். நான் பல நூல்களை இந்த பேருந்து விற்பனையகங்களில் இருந்து வாங்கியிருக்கிறேன். இப்போது அந்த வாகனங்கள் கண்ணில் படுவது இல்லை. பின்னர், கிழக்கு பதிப்பகம் இதே கான்செப்ட்டை பின்பற்றி, பிராடிஜி நூல்களை விற்பனை செய்யும் வேன் ஒன்றை உருவாக்கி, கடைகள் இல்லாத ஊர்களுக்கு அனுப்பி புத்தக விற்பனையைச் செய்ய முயன்றது. அந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெற்றதோ தெரியவில்லை. தொடர்கிறதா என்றும் தெரியவில்லை.

தமிழில் புத்தக விநியோகத்தில் சிறிய அளவில் ஈடுபட்டுள்ள நண்பர்களிடம் பேசும்போது, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளும் யோசிக்கக் தக்கதாக இருக்கின்றன. மையமான இடங்களில் கடை வைத்திருப்பவர்கள் கூடுதலான விற்பனைக் கழிவு கோருகிறார்கள். மேலும் புத்தகம் விற்ற பணத்தை உடனடியாகத் தராமல் தாமதப்படுத்துகிறார்கள். விற்காத புத்தகங்களைத் திரும்ப எடுப்பதும் சிரமமாக இருக்கிறது. அதற்கும் காலம்தாழ்த்துகிறார்கள். மற்றொரு பக்கமோ, பதிப்பாளர்கள், விற்ற புத்தகங்களின் கணக்கைக் கேட்டு, பணத்தைச் செட்டில் செய்யச் சொல்லுகிறார்கள். இரண்டு முனைகளிலும் மாட்டிக்கொண்டு நூல் அளவு கூட லாபம பார்க்க முடியாமல் தவிப்பவர்கள் விநியோகஸ்தர்கள்தான் என்கிறார்கள் இவர்கள்.

இந்த இடியாப்பச் சிக்கலில் எந்த முனையைப் பிடித்து, ஒழுங்கைப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. ஆனால், இந்த நிலையினால் உண்மையாக பாதிக்கப்படுபவர்கள் பதிப்பாளர்கள். நல்ல புத்தகங்கள் இருக்கும், விரிவாக விநியோகம் செய்யும் வாய்ப்பில்லாமல், போட்ட முதலீடு திரும்ப வராமல், ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நஷ்டத்தில் மூழ்கிப் போகிறார்கள்.

இவ்வளவையும் மீறி, தமிழ்ப் பதிப்புலகம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 12 – 15 சதவிகிதம் வரை வளருகிறது. அதுவே சாதனைதான்!

மாணவர்களுக்குக் காத்திருக்கும் பொக்கிஷம்

Posted in புத்தகங்கள் on September 9th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
டி.ஆர்.சந்தானக்கிருஷ்ணன் என்ற டி.ஆர்.எஸ். என் மெண்டர்களில் ஒருவர். சிஃபி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர். பின்னர் சதர்லேண்ட் குளோபல் லிமிடெட்டின் தலைமை நிதி அதிகாரி. இப்போது அவர் டாரஸ்குவெஸ்ட் நிறுவனத்தின் சேர்மன். நிதி, பொருளாதாரம், கணக்கியல் என்று பல துறைகளில் புலி. சார்ட்டெட் அக்கவுன்டண்ட். அவருடைய அருகாமையே அடுத்தவர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.
புத்தகங்கள் வாசிப்பதில் தணியாத ஆர்வம் உடையவர். தமிழ் புத்தகங்கள் என்றால் இன்னும் உயிர். பல தமிழ்க் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்லுவார். மேடைப் பேச்சில் திறமையானவர். அவருடைய புத்தக ஆர்வத்தை இப்போது இன்னும் பயனுடைய ஒரு முயற்சியாக மாற்றியிருக்கிறார். புக்ஸ் டு கிட்ஸ் (http://bookstokids.blogspot.com) என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறார் டி.ஆர்.எஸ். பத்தாயிரம் புத்தகங்களை பத்தாயிரம் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள். இலவசமாக அல்ல. மாணவர்கள் அந்தப் புத்தகங்களைப் பெற தங்கள் திறன்களை வெளிப்படுத்த வேண்டும். அந்தத் திறமைகளுக்கு வெகுமதியாக, அவர்கள் புத்தகங்களைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் குறித்தும், அதன் நடைமுறைகள் குறித்தும் ஒரு மினி இமெயில் பேட்டி இதோ:
1. ஒரு சிறுவனுக்கு ஒரு புத்தகம் (Books To Kids) என்ற இந்தக் கருத்து எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது?
பதில்: இந்தியாவைப் பற்றி எவ்வளவோ புத்தகங்கள் வந்திருந்தாலும், இரண்டு வருடங்களுக்கு முன் ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு – காந்திக்குப் பின்” புத்தகத்தை படித்த போது நமது அண்மைக்கால முன்னேற்றம் பற்றிய ஒரு புதிய வியப்பு ஏற்பட்டது.  இதைப்பற்றி மே 2007ல்  என்னுடைய “Top Rack ” மின்பதிவில் எழுதும்போது, ஒவ்வொரு இந்திய சிறுவனும் சிறுமியும் படிக்க வேண்டிய புத்தகம் என்று எழுதி இருந்தேன்.  மீண்டும் இதைத் தமிழில் படிக்க நேரிட்ட போதும் இதே எண்ணம் தோன்றியது.  ”Books To Kids “ம் தோன்றியது.
2. இந்தப் புத்தகங்களை எந்தச் சிறுவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறீர்கள்? எப்படிச் சேர்க்கப் போகிறீர்கள்? இதில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் எங்கே நடைபெறுகின்றன? மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பது?
பதில்: பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர் மாணவியர்க்கு.  பங்கேற்கும் பள்ளிகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் கட்டுரை அல்லது பேச்சுப் போட்டிகள் நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் முடிவின் படி சிறந்த உரைகளுக்கு பரிசாக.  (இதனால் இது ஒரு அன்பளிப்பாக இல்லாமல், விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதப்படும்).    பங்கேற்கும் பள்ளிகளில் வெளியிடப்படும் அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்கலாம்.  பங்கேற்க விரும்பும் பள்ளிகள் எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.
3. பதிப்பாளர்கள் இந்தத் திட்டத்தில் எப்படிப் பங்கேற்பது?
பதில்: புத்தகங்களை வாங்கித் தருபவர்கள் தேர்வு செய்கிறார்கள்.  நாங்களே பதிப்பாளரை நாடி சில சலுகைகளோடு வாங்க ஏற்பாடு செய்வோம்.  ஒரு உதாரணம்:  குஹாவின் நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் எங்களுக்கு விலை குறிப்பும் கொடுத்து, பள்ளிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து, புத்தகங்களை நேரடியாகக் கொண்டு சென்றுக் கொடுத்து பெரும் உதவி செய்துள்ளனர்.
4. புத்தகங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் மேல் ஆர்வம் கொண்டவர்கள், இந்தத் திட்டத்துக்கு எப்படி உதவிகரமாக இருக்க முடியும்?
பதில்: எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.  என்ன புத்தகம், எவ்வளவு பேருக்கு என்று தெரிவித்தால் நாங்கள் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொண்டு எவ்வளவு விலை என்று கண்டறிந்து யார் பெயருக்கு எவ்வளவு காசோலை தர வேண்டும் என்று தெரியப்படுத்துவோம்.  (கிழக்கு பதிப்பகம் புத்தகங்கள் என்றால் சிறிது வசதி).   புக்ஸ் டு கிட்ஸ் ஒரு தொண்டு.  இதற்கு வங்கிக்  கணக்கு கிடையாது.  இதற்கு பதிப்பகத்தினருடன் கமர்ஷியல் தொடர்பு கிடையாது.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பொக்கிஷமாக வழங்க விரும்புவோர், டி.ஆர்.சந்தானக்கிருஷ்ணனை தொடர்புகொள்ளலாம். இமெயில்: bookstokids@gmail.com.
TR Santhanakrishnan

TR Santhanakrishnan

டி.ஆர்.சந்தானக்கிருஷ்ணன் என்ற டி.ஆர்.எஸ். என் மெண்டர்களில் ஒருவர். சிஃபி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர். பின்னர் சதர்லேண்ட் குளோபல் லிமிடெட்டின் தலைமை நிதி அதிகாரி. இப்போது அவர் டாரஸ்குவெஸ்ட் நிறுவனத்தின் சேர்மன். நிதி, பொருளாதாரம், கணக்கியல் என்று பல துறைகளில் புலி. சார்ட்டெட் அக்கவுன்டண்ட். அவருடைய அருகாமையே அடுத்தவர்களுக்கு உற்சாகத்தைத் தரும்.

புத்தகங்கள் வாசிப்பதில் தணியாத ஆர்வம் உடையவர். தமிழ் புத்தகங்கள் என்றால் இன்னும் உயிர். பல தமிழ்க் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்லுவார். மேடைப் பேச்சில் திறமையானவர். அவருடைய புத்தக ஆர்வத்தை இப்போது இன்னும் பயனுடைய ஒரு முயற்சியாக மாற்றியிருக்கிறார். புக்ஸ் டு கிட்ஸ் (http://bookstokids.blogspot.com) என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறார் டி.ஆர்.எஸ். பத்தாயிரம் புத்தகங்களை பத்தாயிரம் மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள். இலவசமாக அல்ல. மாணவர்கள் அந்தப் புத்தகங்களைப் பெற தங்கள் திறன்களை வெளிப்படுத்த வேண்டும். அந்தத் திறமைகளுக்கு வெகுமதியாக, அவர்கள் புத்தகங்களைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் குறித்தும், அதன் நடைமுறைகள் குறித்தும் ஒரு மினி இமெயில் பேட்டி இதோ:
1. ஒரு சிறுவனுக்கு ஒரு புத்தகம் (Books To Kids) என்ற இந்தக் கருத்து எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது?
பதில்: இந்தியாவைப் பற்றி எவ்வளவோ புத்தகங்கள் வந்திருந்தாலும், இரண்டு வருடங்களுக்கு முன் ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு – காந்திக்குப் பின்” புத்தகத்தை படித்த போது நமது அண்மைக்கால முன்னேற்றம் பற்றிய ஒரு புதிய வியப்பு ஏற்பட்டது.  இதைப்பற்றி மே 2007ல்  என்னுடைய “Top Rack ” மின்பதிவில் எழுதும்போது, ஒவ்வொரு இந்திய சிறுவனும் சிறுமியும் படிக்க வேண்டிய புத்தகம் என்று எழுதி இருந்தேன்.  மீண்டும் இதைத் தமிழில் படிக்க நேரிட்ட போதும் இதே எண்ணம் தோன்றியது.  ”Books To Kids “ம் தோன்றியது.
2. இந்தப் புத்தகங்களை எந்தச் சிறுவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறீர்கள்? எப்படிச் சேர்க்கப் போகிறீர்கள்? இதில் அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் எங்கே நடைபெறுகின்றன? மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பது?
பதில்: பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர் மாணவியர்க்கு.  பங்கேற்கும் பள்ளிகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் கட்டுரை அல்லது பேச்சுப் போட்டிகள் நடத்தி, பள்ளி ஆசிரியர்கள் முடிவின் படி சிறந்த உரைகளுக்கு பரிசாக.  (இதனால் இது ஒரு அன்பளிப்பாக இல்லாமல், விலைமதிப்பற்ற பொக்கிஷமாக கருதப்படும்).    பங்கேற்கும் பள்ளிகளில் வெளியிடப்படும் அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்கலாம்.  பங்கேற்க விரும்பும் பள்ளிகள் எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.
3. பதிப்பாளர்கள் இந்தத் திட்டத்தில் எப்படிப் பங்கேற்பது?
பதில்: புத்தகங்களை வாங்கித் தருபவர்கள் தேர்வு செய்கிறார்கள்.  நாங்களே பதிப்பாளரை நாடி சில சலுகைகளோடு வாங்க ஏற்பாடு செய்வோம்.  ஒரு உதாரணம்:  குஹாவின் நூலை வெளியிட்ட கிழக்கு பதிப்பகம் எங்களுக்கு விலை குறிப்பும் கொடுத்து, பள்ளிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து, புத்தகங்களை நேரடியாகக் கொண்டு சென்றுக் கொடுத்து பெரும் உதவி செய்துள்ளனர்.
4. புத்தகங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினர் மேல் ஆர்வம் கொண்டவர்கள், இந்தத் திட்டத்துக்கு எப்படி உதவிகரமாக இருக்க முடியும்?
பதில்: எங்களை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.  என்ன புத்தகம், எவ்வளவு பேருக்கு என்று தெரிவித்தால் நாங்கள் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொண்டு எவ்வளவு விலை என்று கண்டறிந்து யார் பெயருக்கு எவ்வளவு காசோலை தர வேண்டும் என்று தெரியப்படுத்துவோம்.  (கிழக்கு பதிப்பகம் புத்தகங்கள் என்றால் சிறிது வசதி).   புக்ஸ் டு கிட்ஸ் ஒரு தொண்டு.  இதற்கு வங்கிக்  கணக்கு கிடையாது.  இதற்கு பதிப்பகத்தினருடன் கமர்ஷியல் தொடர்பு கிடையாது.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்களை பொக்கிஷமாக வழங்க விரும்புவோர், டி.ஆர்.சந்தானக்கிருஷ்ணனை தொடர்புகொள்ளலாம். இமெயில்: bookstokids@gmail.com.