தமிழ்ப் பதிப்புலகத்தின் மார்க்கெட் சைஸ், வளர்ச்சி விகிதம், மொத்த ஆக்டிவ் பதிப்பாளர்கள் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையான ‘தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்’ கட்டுரையில் பேசியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்த நண்பர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானது, ஏன் தமிழில் புத்தக விநியோகம் வளரவில்லை? இங்கே என்ன பிரச்னை என்பதுதான்.
தமிழில் புத்தக விநியோகம் என்பது சவலைப் பிள்ளை. ஒவ்வொரு புதுப் பதிப்பகம் தொடங்கும்போதும், எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்தே புதிதாக ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இருக்கிறது. புத்தக விநியோகம் ஏற்கெனவே தயாராக இருக்கும் ஒரு உறுப்பாக இங்கே இல்லை. அதை ஒவ்வொருவரும் தம் பதிப்பகத்தின் ஒரு பகுதியாக வளர்த்து எடுக்கவேண்டி இருக்கிறது.
புத்தக விநியோகத்தை முழுமையான ஒரு தொழிலாக/ வேலையாக இங்கே யாரும் எடுத்துச் செய்வதில்லை. அப்படியே இருக்கும் விநியோகஸ்தர்களும் தத்தமது ஊரைச் சுற்றி மட்டுமே புத்தகங்களை விநியோகிப்பவர்களாக இருக்கிறார்கள். கோவை என்றால் விஜயா வேலாயுதம். இவர் விநியோகஸ்தர் மட்டுமல்ல, பதிப்பாளர், புத்தகக் கடையையும் நடத்துபவர்.
அதாவது, தமிழகத்தின் பல ஊர்களில் புத்தகக் கடை வைத்திருப்பவர்களே, விநியோகஸ்தர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால், தங்கள் ஊரைச் சுற்றியுள்ள ஒரு ஊர்களுக்கு மட்டுமே புத்தகங்களைச் சப்ளை செய்ய முடிகிறது. தமிழகம் முழுவதற்கும் ஒரு விநியோகஸ்தர், அவரிடம் புத்தகங்களை அச்சடித்துக்கொடுத்துவிட்டால், அவர், எல்லா இடங்களிலும் போய் சேர்த்துவிடுவார் என்ற நிலைமை இன்னும் வரவில்லை.
ஆங்கிலப் புத்தக விநியோகத்திலும் இந்த நிலைமைதான். ஆனால், இன்னும் கொஞ்சம் விரிவாக அங்கே செய்ய முடிகிறது. இந்தியா புக் ஹவுஸ், இந்தியா புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ் போன்ற விநியோகஸ்தர்கள் இந்தியா முழுமையும் விநியோகம் செய்கிறார்கள். ஆனால், அவர்களுடைய விநியோகமும் முழுமையானது அல்ல. பல மாநிலங்களில் அவர்களால் முழுமையாக விநியோகம் செய்ய முடிவதில்லை. சென்னையில் உள்ள வெஸ்ட்லாண்ட், ஒரு முக்கிய விநியோகஸ்தர்.
இந்த விநியோகஸ்தர்களிடம் ஒரு சில செளகரியங்கள் உள்ளன. இவர்களிடம் நேரடியான விற்பனைப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல கடைகளுக்குப் புத்தகங்களைக் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள். சில புத்தகக் கடைகள் நேரடியாக இவர்களிடமே வந்து புத்தகங்களை வாங்கிச் சென்று தங்கள் கடைகளில் வைத்து விற்பனையும் செய்கிறார்கள்.
இதெல்லாம் செய்வதற்கு ஒரு நிர்வாக அமைப்பு வேண்டும். பணியாளர்கள் வேண்டும். பணியாளர்களுக்குச் சம்பளம், புத்தகங்களை வைக்க சேமிப்புக் கிடங்கும், இன்ன பிற வசதிகளும் வேண்டும். ஆங்கில புத்தக மார்க்கெட்டில் இதையெல்லாம் செய்துகொள்ள உரிய புத்தக கமிஷன் கிடைக்கிறது. ஆங்கில மார்க்கெட்டில், வெளிநாட்டில் இருந்து வரும் பல புத்தகங்கள் குறைந்தபட்சம் 40 சதவிகிதமேனும் விற்பனைக் கழிவுடன் வருகிறது. ஒரு சில புத்தகங்களுக்கு 70 சதவிகிதம் வரை விநியோகஸ்தர்களுக்குக் கழிவு கிடைக்கும். இதிலிருந்துதான், கடைக்காரர்களுக்கான கழிவு கொடுக்கப்படுகிறது.
விநியோகமும் மார்க்கெட்டிங்கும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. ஆங்கில புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள் தங்கள் நூல்களுக்கு பெரிய அளவில் சந்தைப்படுத்தும் திட்டங்களை, அறிவிப்புகளை, புத்தகம் வெளிவருவதற்கு முன்பே செய்யத் தொடங்கிவிடும். ஹாரி பாட்டர் நூல்களைப் பாருங்கள். அந்த நூல் வரும்முன்பே, அதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து மீடியாவில் வந்துகொண்டே இருக்கும். சில இதழ்களில் அதனுடைய சாம்பிள் அத்தியாயம், எழுத்தாளரின் பேட்டி வெளியாகும். முடிந்தால் வெளியீட்டு விழா. புத்தகங்கள் வெளியானபின்பு, கடைகளில் ஒட்ட சின்னச் சின்ன போஸ்டர்கள், தொடங்க விட டாங்களர்கள் அனுப்பிவைப்பார்கள்.
ஒரு புத்தகம் பற்றிய போதிய அளவு விளம்பரம் இல்லையென்றால், அது சந்தையில் போய் சேரவே சேராது. வாங்குபவர்களுக்கு அதைப் பற்றிய முழு புரிதல் இல்லாமல் எப்படி பெரிய அளவில் வியாபாரம் சாத்தியம்? தமிழில், தோப்பில் முகம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவல் வந்திருக்கிறது. இந்தத் தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்? ஸ்ரீதர கணேசன், சு.தமிழ்ச்செல்வி ஆகிய எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நானேதான் போய் கண்டுபிடித்து வாங்கிக்கொண்டேன். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல், சமீபத்தில்தான் நான்காவது பதிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழில் மெச்சப்படும் ஒரு நாவலுக்கே இதுதான் நிலைமை.
இதனால் என்ன பாதிப்பு? கடைகளில் என்கொய்ரியே இருக்காது. நாலு பேர் தொடர்ந்துபோய் ஒரு புத்தகம் இருக்கிறதா, வைத்திருக்கிறீர்களா என்று கேட்டால்தான், கடைக்காரர் அதை வாங்கி வைப்பார். அப்போதுதான் விற்பனை அதிகரிக்கும். விற்பனை அதிகரித்தால், கடைக்காரர்கள் அதிகரிப்பார்கள், விநியோகஸ்தர்கள் அதிகரிப்பார்கள். இது ஒரு சுழற்சி.
இன்றைக்கு தமிழில் இருக்கும் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கிறது. கடைக்காரர்கள்தான் எல்லாம். அவர் தனது கடையில் என்ன புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புரொமோட் செய்கிறாரோ அந்த நூல்கள்தான் வாங்குபவர்களின் கண்களுக்குத் தென்படும். மேலும் அவரே நேராக பதிப்பகங்களிடம் பேசி நூல்களை வரவழைத்துக்கொள்ளுகிறார். இடையில் எதற்கு ஒரு டிஸ்டிரிபியூட்டர், அவருக்கு எதற்கு ஒரு மார்ஜின் என்று தெளிவாக பேசுகிறார்கள்.
அதனால், தமிழில் விநியோகஸ்தர் என்பவரின் ரோலுக்கே இடமில்லாமல் போய்விட்டது. எல்லா பதிப்பாளர்களும் நேரடியாக புத்தகக் கடைகளையே சார்ந்திருக்கிறார்கள்.
தமிழில் விநியோகத்துறை வளர முடியாததற்கு மற்றொரு முக்கிய காரணம், தூரம். வெளிநாடுகளில் இருக்கும் பதிப்பகங்களோ, வட இந்தியாவில் இருக்கும் பதிப்பகங்களோ தமிழகத்தில் புத்தகத்தை விற்கவேண்டுமானால், அதற்கு இங்கே ஒரு விநியோகஸ்தரை வைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இங்கே இருக்கும் தமிழ் பதிப்பாளர்களுக்கு தமிழகத்துக்குள்ளே விநியோகம் செய்ய எதற்கு தனியாக விநியோகஸ்தர்கள் என்று நினைக்கின்றன. எப்படி இருந்தாலும் வாங்குபவர்கள், சென்னை வரும்போதோ, அல்லது ஏதேனும் ஒரு புத்தகக் கண்காட்சியிலோ புத்தகத்தை வாங்கிவிடுவார்கள், விநியோகத்துக்கு என்று ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணமும் பதிப்பாளர்களுக்கு இருக்கலாம்.
இந்த எண்ணங்கள் ஓரளவுக்குச் சரி. ஆனால், முழுமையும் சரி என்று சொல்லிவிட முடியாது. விநியோகம் என்பது பரவலாக்குதல். ஒரு நூலை பல இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவர்களுடைய முக்கியமான வேலை. எங்கே எந்த விதமான புத்தகங்கள் விற்பனையாகக்கூடும் என்பதைப் புரிந்துகொண்டு அங்கே அந்தத் துறை சார்ந்த நூலைக் கொண்டு போய்ச் சேர்ப்பது அவர்களுடைய வேலை. இது மார்க்கெட் இண்டெலிஜென்ஸ் சம்பந்தப்பட்டது.
எத்தனை பதிப்பாளர்களுக்கு இந்த மார்கெட் பற்றிய தெளிவு இருக்கிறது? எனக்குத் தெரியவில்லை. பள்ளி, கல்லூரி புத்தகங்கள் மட்டுமே விற்கக்கூடிய கடைகளில் பொது நூல்களும் இருக்கின்றன. ரயில்வே ஸ்டேஷன் கடைகளில் சீரியஸ் புத்தகங்கள் அடிக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கெல்லாம் விற்கக்கூடாதா? இதெல்லாம் புது சந்தையை திறக்கும் முயற்சிகள், போட்டுத்தான் பார்ப்போம், என்னாகிறது என்று புரிந்துகொள்ளலாமே என்று பேசினால் என் பதில் மெளனம்தான்.
என் கரிசனம் முழுவதும் இந்த முயற்சியில் செலவிடப்பட்டிருக்கும் நேரம், உழைப்பு சம்பந்தப்பட்டது. தேவையற்ற இடங்களில் தேவையற்ற நூல்கள் வைக்கப்பட்டால், அதனால், எந்தப் பலனும் இல்லை. உழைப்பும் நேரமும்தான் வீண்.
பதிப்பாளர்கள் நேரடியாக கடைக்காரர்களிடம் போகும்போது, பாதிப்பு பதிப்பாளர்களுக்குத்தான். அவர்களால் எத்தனை கடைகளை நேரடியாகப் பார்த்துக்கொள்ள முடியும்? விளைவு, பல பதிப்பாளர்கள், தங்களுக்கு என்று ஒரு லைன் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதில் எவ்வளவு அதிகபட்சம் விற்கமுடியுமோ அதை விற்பனை செய்கிறார்கள். மற்ற லைன்களில் ஆள்கள் போட்டு தொடர முடியாதபோது, அதை விட்டுவிடுகிறார்கள். இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை, இந்த லைனில் இருக்கும் ஒரு விற்பனைப் பையன், ஊர் ஊராகக் கிளம்பிப் போய், பணத்தை வசூல் செய்துகொண்டு வருகிறான். முடிந்தால், புதிய ஆர்டர்களையும் எடுத்துக்கொண்டு வருகிறான். இதுதான் இன்று தமிழில் நடைமுறையில் உள்ள விநியோக முறை.
விளைவு, நல்ல நூல்கள் கூட, அதிகப் படிகள் விற்பனை ஆவது இல்லை. பல நூல்கள் பல ஊர்களில் கிடைப்பது இல்லை. பல நூல்கள் கடைகளைப் போய் சேருவதே இல்லை. எல்லாம், தமிழக அரசின் நூலக ஆணையை எதிர்பார்த்து கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும். ஒரு நூலை ஒரே சமயத்தில் தமிழகம் முழுவது ஒரே நாளில் வெளியிட முடியாத நிலை இங்கே. அந்த நெட்வொர்க் பலம் பல பதிப்பாளர்களுக்குக் கிடையாது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஞானரதம் இதழ் ஆசிரியராக இருந்த தேவசித்ரபாரதி அவர்கள் ஒரு முயற்சியை மேற்கொண்டார். ஊர் ஊராகப் புத்தகக் கடைகள் போடுகிறேன், கிட்டத்தட்ட 5000 படிகள் வரை ஒவ்வொரு நூலையும் விநியோகம் செய்ய முடியும் என்று அவர் முயன்றார். வெற்றி பெற முடியவில்லை.
அதேபோல், என்.சி.பி.எச். பதிப்பகம், தமது நூல்களையும் ராதுகா பதிப்பக நூல்களையும் நடமாடும் பேருந்துகளில் வைத்து விற்பனை செய்து வந்தார்கள். நான் பல நூல்களை இந்த பேருந்து விற்பனையகங்களில் இருந்து வாங்கியிருக்கிறேன். இப்போது அந்த வாகனங்கள் கண்ணில் படுவது இல்லை. பின்னர், கிழக்கு பதிப்பகம் இதே கான்செப்ட்டை பின்பற்றி, பிராடிஜி நூல்களை விற்பனை செய்யும் வேன் ஒன்றை உருவாக்கி, கடைகள் இல்லாத ஊர்களுக்கு அனுப்பி புத்தக விற்பனையைச் செய்ய முயன்றது. அந்த முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெற்றதோ தெரியவில்லை. தொடர்கிறதா என்றும் தெரியவில்லை.
தமிழில் புத்தக விநியோகத்தில் சிறிய அளவில் ஈடுபட்டுள்ள நண்பர்களிடம் பேசும்போது, அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளும் யோசிக்கக் தக்கதாக இருக்கின்றன. மையமான இடங்களில் கடை வைத்திருப்பவர்கள் கூடுதலான விற்பனைக் கழிவு கோருகிறார்கள். மேலும் புத்தகம் விற்ற பணத்தை உடனடியாகத் தராமல் தாமதப்படுத்துகிறார்கள். விற்காத புத்தகங்களைத் திரும்ப எடுப்பதும் சிரமமாக இருக்கிறது. அதற்கும் காலம்தாழ்த்துகிறார்கள். மற்றொரு பக்கமோ, பதிப்பாளர்கள், விற்ற புத்தகங்களின் கணக்கைக் கேட்டு, பணத்தைச் செட்டில் செய்யச் சொல்லுகிறார்கள். இரண்டு முனைகளிலும் மாட்டிக்கொண்டு நூல் அளவு கூட லாபம பார்க்க முடியாமல் தவிப்பவர்கள் விநியோகஸ்தர்கள்தான் என்கிறார்கள் இவர்கள்.
இந்த இடியாப்பச் சிக்கலில் எந்த முனையைப் பிடித்து, ஒழுங்கைப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. ஆனால், இந்த நிலையினால் உண்மையாக பாதிக்கப்படுபவர்கள் பதிப்பாளர்கள். நல்ல புத்தகங்கள் இருக்கும், விரிவாக விநியோகம் செய்யும் வாய்ப்பில்லாமல், போட்ட முதலீடு திரும்ப வராமல், ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நஷ்டத்தில் மூழ்கிப் போகிறார்கள்.
இவ்வளவையும் மீறி, தமிழ்ப் பதிப்புலகம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 12 – 15 சதவிகிதம் வரை வளருகிறது. அதுவே சாதனைதான்!