திரைப்படம்

மாறும் மனச்சித்திரங்கள்

Posted in இலக்கியம், திரைப்படம் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

உரையாசிரியர் நிறைய பேர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் என்று பலர் முயன்று இருக்கிறார்கள். ஒரு மூலநூலுக்கு எப்படி இத்தனை பேர்கள் உரையெழுத முடியும் என்று யோசித்திருக்கிறேன். ஒவ்வொருத்தருடைய பார்வை, கோணம், நோக்கம் சார்ந்து உரைகள் மாற முடியும் என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையையும் மு.வ. எழுதிய உரையையும் கலைஞர் எழுதிய உரையையும் படித்துப் பார்த்தேன். ஒவ்வொருவரும் தாம் வந்த பின்னணி, சார்ந்திருக்கும் கருத்துகளை ஒட்டியே உரையெழுதியிருக்கிறார்கள்.

வெறுமனே பொருள் சொல்லும் திருக்குறள் உரைகள் நிறைய கிடைக்கின்றன. அதன் நோக்கம் வெறும் விளக்கம்தான். ஆனால், நோக்கமோ பின்னணியோ இதுபோன்ற உரைகளுக்குக் கிடையாது. உரை எழுதுவதிலேயே இப்படிப்பட்ட ஒரு பன்முகத்தன்மை இருக்கும்போது, மூலநூல்களுக்கு, படைப்புகளுக்கு எப்படிப்பட்ட பன்மைத்தன்மை இருக்கவேண்டும்?

உண்மையில் அச்சடித்த எழுத்து என்பது ஒரு எலும்புக்கூடு. அது ரத்தமும் உயிரும் பெறுவது வாசகர் மனத்தில். ஒரு எழுத்தாளன் எலும்புக்கூட்டை எவ்வளவு சிறப்பாக உருவாக்குகிறான் என்பதில் தேர்ச்சி பெற வேண்டும். நடை, உத்தி, மொழி எல்லாம் எலும்புக்கூட்டுக்கு வடிவம் கொடுக்கும் அம்சங்கள்.

வாசகன் படிக்கும்போது, ஒரு படைப்பு முழுமை பெறுகிறது. தேர்ந்த வாசகன், தொடர்ந்து படித்து வரும் வாசகன், வித்தியாசமான முறையில் எழுத்தாளனை மதிப்பிடுகிறான். எழுத்தாளனால், தன்னுள் எப்படிப்பட்ட எண்ண அலைகளை, கற்பனைச் சித்திரத்தை உருவாக்க முடிகிறது என்றே மதிப்பிடுகிறான். வாசகனின் அனுபவ உலகத்தை எழுத்தாளானால் தட்டி எழுப்ப முடியவேண்டும். அவனுக்குள் பொதிந்து இருக்கும் நினைவுகள், அறிந்த சம்பவங்கள், பார்த்திருக்கக்கூடிய நபர்கள் எல்லோரையும் எழுத்தாளனின் படைப்பு சுட்டிக் காட்ட வேண்டும்.

இப்படி எழுப்பக்கூடிய சித்திரமும் வாசகனுக்கு வாசகன் வேறுபடும். இருவேறு வாசகர்களுக்கு ஒரே சித்திரம் கிடைக்க வாய்ப்பில்லை. வாசகனின் அனுபவ உலகம் எவ்வளவு விரிவானதோ, அவ்வளவு விரிவானது படைப்பும். ஒரு படைப்பில் உள்ள வர்ணனைகள், சித்திரத்தை உருவாக்க உதவுபவை. சிந்தனை ஓட்டம், பாத்திரங்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவை.

ஆனால், எந்தக் காலத்திலும் எழுத்தாளன், நான் எழுதியதை என் வாசகர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. எழுத்தாளன் சொன்னதை அல்ல, வாசகன் தான் புரிந்துகொள்ள விரும்பியதையே புரிந்துகொண்டு இருக்கிறான்.

வாசகனின் மன சித்திரங்கள் காலவோட்டத்தில் மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றன. எத்தனையோ புறக்காரணிகள், அகச்சித்திரத்தை வடிவமைக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் அகச்சித்திரம் வேறு வேறாக இருக்கின்றன. ஆனால் ஒரு சில சரடுகள் தொடர்ந்து வருகின்றன. உதாரணமாக, இன்றைய தலைமுறை பெண்களும்,  எழுத்தாளர் லட்சுமியின் படைப்புகளைப் படிக்கின்றனர். நா. பார்த்தசாரதியைப் படிக்கின்றனர். பெண்ணைக் குறித்து இருக்கும் மனச்சித்திரம், லட்சியவாதத்தின் தேவையை உணரும் ஒரு தலைமுறைக்கு இருக்கும் மனச்சித்திரங்கள், இந்த எழுத்தாளர்களை இன்றும் ஏற்கத்தக்கவர்களாக ஆக்கியிருக்கிறது.

மனச்சித்திரங்களின் மாறுதல்களைத் திரைப்படங்களில் இன்னும் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு காலத்தில் சினிமாவில் அழுகை காட்சிகள் நிறைய இருக்கும். அப்புறம் அத்தகைய காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன. இன்றைய இளைஞர்களுக்கு ஆட்டம் பாட்டம்தான் பிடித்திருக்கிறது. அவர்களுக்குச் சோக சுவை வேண்டாம் என்று சினிமாகாரர்கள் ஒதுக்கிவிட்டார்கள். சோகம் என்றால் தனிமை, வெறுப்பு, இருட்டு என்ற சூழல்களை மாற்றி, அதையும் இன்றைய சினிமா ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. விஷ்ணுவர்த்தனின் ஒரு படத்தில் இதைப் பார்த்தேன்.

சமீப உதாரணம், வாரணம் ஆயிரம் படத்தில் வரும் பாடல், ‘நான் தேடி வந்த அஞ்சலை.’ சோகத்திலும் கும்மாளம் போடுகிறான் ஹீரோ. பழைய ரசிகர்களுக்கு இப்பாடல் ஆச்சரியம் அளிக்கலாம். ஆனால், இன்றைய ரசிகர்களின் மனச்சித்திரம் இது. அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்.

இன்னொரு படம், இயக்குநர் ஜீவாவின்  ‘ உன்னாலே உன்னாலே.’ அதாவது எதையும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆண் பெண் பழக்கம் உட்பட. தங்களைத் தாங்களே சுயஎள்ளல் செய்துகொண்ட படம், ‘சென்னை 28.’

மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும் மனச்சித்திரங்களே, நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நாம் கெட்டித் தட்டிப் போகாமல் இருக்கவும் வாழ்க்கையை அனுபவிக்கவுமே மனச்சித்திரங்கள் உதவுகின்றன. படைப்புகள் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து பிரதிபலிக்கின்றன. நவீன இந்திய நாவலாசிரியர்களின் படைப்புகளில் இந்த மாறுதல்கள் நன்கு தெரிகின்றன. அத்வைதா கலா, சேத்தன் பகத் எல்லோரும் நவீன மனச்சித்திரங்களை தட்டி எழுப்புபவர்களாக இருக்கிறார்கள்.

ஜீ. முருகனின் ‘மரம்’ நாவல் இந்தத் திசையில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறது. எனக்கு அந்த நாவல் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால், முதல் முறையாக ஒரு தமிழ் நாவலில், இண்டர்நெட், கணினி, அதில் போர்னோகிராபியைச் சேமித்து வைப்பது, இணைய போர்னோ ஏற்படுத்தும் மனச்சிக்கல்கள் எல்லாம் மரம் நாவலில் பேசப்படுகின்றன. அது புதிதாக எனக்குத் தோன்றியது. இந்த விஷயங்கள் எல்லாம் முற்றிலும் இன்றைய காலகட்டத்தின் மனச்சித்திரங்கள்.

மற்றபடி இன்றைய சிறுகதைகளில், நாவல்களில் இன்றைய காலகட்டத்தின் மனச்சித்திரங்களை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்தியோடு உறவு

Posted in திரைப்படம் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

எதை வேண்டாம் என்று விலக்குகிறோமோ அதன்மேல் கவர்ச்சி இன்னும் அதிகமாகிவிடும் போலும். விலக்கப்பட்ட கனியில் இருந்து இதே கதைதான். சமீபத்தில் வேறொரு விஷயம் தொடர்பாக, தமிழ்ப் பத்திரிகைகள், தமிழகத்தில் வரும் ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் முழுவதும் படித்தேன். அதாவது எல்லா பக்கங்களும் படித்தேன். அப்போதுதான் அந்த ஆச்சரியகரமான விஷயம் என் மனத்துக்குப் புரிந்தது.

இந்தி வேண்டாம் என்று பெரிய இயக்கமே நடத்திய தமிழ்நாட்டில், இன்று எல்லா பத்திரிகைகளிலும் இந்தி நடிகர், நடிகைகள், இந்தி சினிமா ஆகியவையே நிறைந்திருக்கின்றன. டைம்ஸும், டெக்கான் கிரானிக்களும் இந்தி சினிமா செய்திகளைத் தொடர்ந்து தாங்கி வருகிறது. அதை அப்படியே பின்பற்றி, ஹிந்துவின் வெள்ளிக்கிழமை சப்ளிமெண்ட்டில் இந்தி சினிமா முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. ஹாலிவுட் சினிமா எப்போதும்போல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

வேறொரு விஷயமாக, சென்னைப் பள்ளி ஒன்றுக்குச் செல்லவேண்டி இருந்தது. அங்கே பேசிப் பழகிய மாணவிகளிடையே இந்தி சினிமா மிகச் சரளமாகப் புழங்குகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு கூட இப்படி இருந்ததா என்று தெரியவில்லை. நடிக நடிகையரின் லேட்டஸ்ட் படங்கள் முதல்கொண்டு, அவர்கள் முன்பு நடித்த படங்கள், பாடிய பாடல்கள் எல்லாம் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கிறது.

செல்பேசிகளில் பாடல்கள் டவுன்லோட் செய்யப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழ்ப் பாடல்களுக்கு இணையாக இந்திப் பாடல்கள் டவுன்லோட் நடக்கிறது. அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொண்டு, செல்பேசிகளில் மாற்றிக்கொள்கிறார்கள்.

இதன் பாதிப்பை தமிழ்ப் பத்திரிகைகளில் நீங்கள் நிறையவே பார்க்கலாம். ஆனந்த விகடனின் இன்பாக்ஸ் பகுதியில் இந்தி நடிக நடிகையர் பற்றிய தகவல்கள் நிறைய இருக்கும். குமுதம் இந்தி சினிமாவுக்கென்றே ஒரு பகுதி வைத்துக்கொண்டு இருக்கிறது. சினிமா எக்ஸ்பிரஸ் இதழும் இந்தி சினிமாவைப் பற்றி தனிப்பகுதி வைத்துக்கொண்டு இருக்கிறது. குங்குமம் இதழும் அதன் நியூஸ் வே பகுதியில் இந்தி சினிமா பிரபலங்கள் பற்றி பேசுகின்றது.

பல வகைகளில் இந்தி சினிமா ஆர்வம், இங்கே, தமிழகத்துக்குள் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இதை நீங்கள் மோசமான பாதிப்பு என்று சொல்லவும் செய்யலாம். அது உங்கள் பார்வையைப் பொறுத்தது. நடை, உடை, பாவனைகள், பேச்சு, பழக்கங்கள் எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ்ப் பெண்களுக்கு இந்தி கனவு நாயகர்கள் உருவாக ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் நடிகர்கள் இந்தி ஹீரோக்களின் சாயல்களில் வளைய வர ஆரம்பித்துவிட்டார்கள். நேரடி உதாரணம்: பரத். ஏற்கெனவே இங்கே குணால், அப்பாஸ், வினய் மாதிரியான ஹீரோக்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் இந்தி சாயல் அதிகம்.

நடிகைகள் பற்றி தனியே சொல்லவே தேவையில்லை. எல்லா நடிகைகளுக்கும் இந்திதான் கனவு தேசம். இந்தி காஸ்டியூம் டிசைனர்கள், டான்ஸ் மாஸ்டர்கள் எல்லோரும் இங்கே பல ஆண்டுகளாக வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், பிரபுதேவா போன்றோர் இந்தி சினிமா இயக்குவதில் காட்டும் ஆர்வம், நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அதேபோல், இந்தி சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தமிழ்ப் படங்களைத் தயாரிப்பதில் நிறைய ஆர்வம் காட்டி வருகின்றன. இது இன்று என்று இல்லை. பல பத்தாண்டுகளாகவே நடந்துவருவதுதான் என்று விவரம் தெரிந்த சினிமாகாரர்கள் சொல்லுகிறார்கள். முதலில் பைனான்சியர்களாக இருந்தவர்கள் பின்னர் நேரடி திரைப்பட தயாரிப்பிலும் இறங்கி வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள்.

இந்தி சினிமா, நம்மை தொடர்ந்து தேசிய நீரோட்டத்தோடு அணுக்கமானத் தொடர்பில் வைத்தே இருந்திருக்கிறது. மற்ற வகைகளில் வேண்டுமானால், நாம் இந்தி உலகோடு வேறுபட்டு, தனிமைப்பட்டுப் போயிருக்கலாம். ஆனால், சினிமா என்ற சாதனம் நம்மைப் பிணைத்தே வைத்திருக்கிறது.

ஸ்டைலிஸ்ட் விக்ரம்

Posted in திரைப்படம் on October 22nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

ஒரு வாரத்துக்கு முன்பு கந்தசாமி திரைப்படம் பார்த்தேன். சொல்லும்படி பெரிதாக எதுவும் அந்தப் படத்தில் இல்லை, ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது நடிகர் விக்ரமின் நடிப்பு.

பி.சி.ஸ்ரீராமின் மீரா திரைப்படம் தொடங்கி, கந்தசாமி வரை விக்ரமின் பெரும்பாலான திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். இயக்குநர்கள் எப்படி ஒரு நடிகனை வடிமைக்கிறார்களோ அப்படித்தான் அவர்கள் திரையில் தெரிய வருவார்கள். இயக்குநர் பாலா, விக்ரமை ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அப்நார்மல் பாத்திரத்தைக் கொடுத்து, நடிக்க வைத்திருப்பார். அவருடைய படங்கள் ஓடின, மக்களிடம் விக்ரம் தெரிய வந்தார் என்பதுதான் இதில் ஒரே ஆறுதல். மற்றபடி, அப்பாத்திரங்கள் எந்த வகையிலும் நிஜமானதாக இருந்ததில்லை. ஒருவித வக்கிர மனநிலை மேலோங்கியே இருந்திருக்கிறது.

காசி கொஞ்சம் ஆறுதலான திரைப்படம்.

இயக்குநர் ஷங்கர், விக்ரமை வேறு மாதிரி மோல்ட் செய்தார். அவரது வழக்கமான ஹீரோ பாத்திரம் அது. அதில் கமலும் நடிக்கலாம், விக்ரமும் நடிக்கலாம், பிரபுதேவாவும் நடிக்கலாம். அர்ஜுனும் நடிக்கலாம். அதில் துளியும் வித்தியாசமில்லை.

வழக்கம்போல், ஏதோ ஒரு கட்டத்தில் மாஸ் ஹீரோ ஆகும் ஆசை விக்ரமையும் பற்றிக்கொள்ள, தில், தூள், ஜெமினி, சாமி, அருள் மாதிரியான படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இதெல்லாம் அரைவேக்காட்டுக் குப்பைகள் என்பதில் சந்தேகமில்லை. பாலா, ஷங்கர் மாதிரியான இயக்குநர்கள் நடிகனுக்கு ஏதேனும் கொஞ்சமாவது வேலை கொடுப்பார்கள். இதுபோன்ற கமர்ஷியல் ஹீரோ சப்ஜெக்டுகளில், ஹீரோயிசம் மட்டுமே முக்கியம். அதில் வித்தியாசப்படுத்திக் காட்ட ஒன்றுமே இல்லை.

ஆனால், கமர்ஷியல் வெற்றி ஒன்றுதான், திரைப்படத் துறையில் தொடர்ந்து பயணம் செய்ய உதவும் என்பதால், இந்தத் திரைப்படங்களும் அவர் பட்டியலில் சேர்ந்துள்ளன.

கந்தசாமி இதில் இருந்து சற்றே மாறுபட்டு இருக்கிறது. இதுவும் கமர்ஷியல் ஹீரோவுக்கான பாத்திரம்தான். தமிழுக்குப் புதிதுமில்லை. ஆனால், நேர்த்தியான பாத்திரம். படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை, உடலை அலட்டிக்கொள்ளாமல், மெஜஸ்டிக்கான தோற்றம் விக்ரமுக்கு.

பொதுவாகப் பாடல் காட்சிகளில் ஹீரோவையும் தலைதெறிக்க ஆடவிடுவார்கள். நம்ம ஊர் ஹீரோக்கள் எல்லா சாமர்சால்டும் அடிக்க வேண்டும். எல்லா பைத்தியக்காரத்தனங்களும் செய்யவேண்டும். அப்படி இருந்தால்தான் மக்கள் விரும்புவார்கள் என்று ஒரு கருத்து உண்டு.

கந்தசாமி, கமர்ஷியல் ஹீரோயிசத்துக்குள் நேர்த்தியை, பக்குவத்தை, அண்டர்பிளேவைக் கொண்டு வந்திருக்கிறது. ரொம்ப கவனமாக இந்த அண்டர்பிளே ஆக்டிங்கை விக்ரம் தொடர்ந்து படத்தில் பின்பற்றியிருக்கிறார். நீங்கள் ஆங்கில காட்பாதர் திரைப்படம் பார்த்திருக்கக் கூடும். அதில் அல் பசினோ உடலை வருத்திக்கொள்ளாமல் வெறும் நடை, பேச்சு, மேனரிஸம்களைக் கொண்டே அற்புதமாக நடித்திருப்பார். இன்றுவரை அவருடைய நடிப்பை மறக்கவே முடிந்ததில்லை. நடிகர் கமலிடம் அல் பசினோவின் பாதிப்பு உண்டு. கால்களைக் குறுக்கே மடக்கி, டேபிளில் அல் பசினோ சாயும் ஒரு நேர்த்தியை, கமல் பல படங்களில் திரும்பத் திரும்பச் செய்வார்.

விக்ரமுக்கு அந்த elegance இந்தப் படத்தில் வந்திருக்கிறது.

நம்ம ஊரில் உடலை வருத்திக்கொள்ள வேண்டும், ரிஸ்க் எடுத்து சண்டை போடவேண்டும், எல்லா குட்டிக்கரணங்களும் அடிக்க வேண்டும். அப்போதான் ஹீரோ. நேற்று வந்த சிம்பு கூட இந்த இலக்கணத்தை மீறாமல் அதே கூத்தைத்தான் அடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதற்கு முன்பு, சாமுராய் என்றொரு படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். அதுவும் இதே போன்ற அண்டர்பிளே செய்த பாத்திரம்தான். ஆனால், அதில் நேர்த்தி முழுமையாகக் கூடவில்லை. கந்தசாமியில் ஸ்டைலும் நேர்த்தியும் பக்குவமும் ஒருங்கே கூடியிருக்கின்றன.

விக்ரமின் இந்த நேர்த்திக்காகவே, மீண்டும் இப்படத்தைப் பார்த்தேன். இயக்குநர் இப்படித்தான் இவரை, இப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். அதை மேலும் வளர்த்து சிறப்புடன் படைத்திருப்பது விக்ரமின் ஈடுபாடு.

நான் ஸ்டைலின் காதலன். அது எழுத்தாக இருந்தாலும் நடிப்பாக இருந்தாலும் தமக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கிக்கொள்கிறவர்கள், கொச்சைப்படுத்தாமல், அதை திறம்பட வெளிப்படுத்துபவர்கள் மேல் எனக்கு எப்போதும் ஒரு கரிசனம் உண்டு. விக்ரம் ஒரு ஸ்டைலிஸ்ட் ஆக ஆகிக்கொண்டு வருகிறார்.

உன்னைப் போல் ஒருவன்

Posted in திரைப்படம் on October 7th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

இந்தப் படத்தைப் பற்றி உடனே எழுதவேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். ஒருசில கருத்துகளை முந்திச் சொல்ல வேண்டும் என்ற அவசரம் அதில் இருக்கும் என்பதே காரணம். நான் பிரேக்கிங் நியூஸ் மடல் இதழ் நடத்தவில்லை. இப்போது பத்திரிகைகளிலும் இணையத்திலும் பல விமர்சனங்கள் வந்துவிட்டன. படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. மக்களுக்குப் படம் பிடித்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் கமலைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

உ.போ.ஒ.வின் இந்தி மூலமான எ வெட்னஸ்டே திரைப்படத்தை குறைந்தபட்சம் 15 முறையாவது பார்த்திருப்பேன். என்னால் என் மகளுக்கும் அப்படத்தின் காட்சிகளும் வசனங்களும் அத்துபடி. இப்போது தமிழ்ப் பதிப்பைப் பார்த்தபோது, இந்திப் படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. உ.போ.ஒ., எ வெட்னஸ்டே படத்தில் இருந்து எங்கெல்லாம் விலகி நிற்கிறது, எங்கே ஒத்துப் போகிறது, என்ன புதிய பங்களிப்புகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன, என்ன நீக்கல்கள் நடந்திருக்கிறது என்று பார்க்கவே மனம் விழைகிறது.

முதலில் சில அழகான புதிய சேர்க்கைகளைப் பார்ப்போம்.

1. இந்தியில், போலீஸ் கமிஷ்னர் பிரகாஷ் ரத்தோட், ஓய்வு பெற்ற மறுநாள், கடற்கரையில் உட்கார்ந்து, தன் பழைய நினைவுகளை அசைபோடுவார். அதனால், ஆரம்ப காட்சியில், ஒரு போலீஸ்காரர் பிரகாஷுக்கு சேர் தூக்கிக்கொண்டு ஓடிவர, பின்னால், சிவப்பு விளக்குப் பொருத்திய அம்பாசிடர் கார் நின்றுகொண்டு இருக்கும். அதிகாரத்தின் மிச்சம் அங்கே இன்னும் இருக்கும். உ.போ.ஒ.வனில் போலீஸ் கமிஷ்னர் மாரார் பதவி நீக்கப்பட்டிருப்பார். எந்த ஒரு அதிகார மிச்சமும் இல்லாமல், தனி மனிதனாக, நாயைப் பிடித்துக்கொண்டு சூர்யோதயத்தைப் பார்த்துகொண்டு இருப்பார் மாரார். மிகவும் நுணுக்கமான இம்மாற்றம், படத்துக்கு நிறைய வலு சேர்க்கிறது.

2. இதன் தொடர்ச்சி இன்னும் இரண்டு இடங்களில் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் இருந்து கமிஷ்னர் மாரார் காக்கி உடையைத் தரித்திருப்பார். கடைசியில் எல்லா பரபரப்புகளும் முடிந்த பின்னர், அவர் தன் அறைக்குச் சென்று, சாதாரண பேண்ட் சட்டையைப் போட்டுக்கொண்டு, காமன்மேன்னைச் சந்திக்கக் கிளம்புவார். இந்தியில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பிரகாஷ் ரத்தோட் சாதாரண உடையில்தான் இருப்பார். அதிகார தொனி நீங்குவதை, தானும் காமன்மேன் ஆவதை மாரார் பாத்திரப் படைப்பில், தமிழில் நுணுக்கமாகக் காண்பித்திருக்கிறார்கள்.

3. காமன்மேன்னை மாரார் சந்திக்கும் முறையும் தமிழில் கவனமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியில், காமன்மேன்னும் பிரகாஷ் ரத்தோடும் எதிர் எதிர் திசைகளில், முனைகளில் இருந்து நடந்துவருவார்கள். ஒருவரை ஒருவர் கிராஸ் செய்வார்கள். பின்னர் நின்று பேசுவார்கள். தமிழில், காமன்மேன் படியிறங்கி வரும் திசையும் மாரார் அவரைச் சந்திக்கப் போகும் திசையும் ஒரே திசையாக இருக்கும். பின்னர் கைகுலுக்கிக்கொள்வார்கள். கருத்து ரீதியில் இருவரும் ஒரே புள்ளியில் இணைவதை, இக்காட்சி வெளிப்படுத்துகிறது.

4. இந்தியில் காமன்மேன் கட்டடத்தில் படியேறுவதை அதிக நேரம் காண்பிக்க மாட்டார்கள். தமிழில் அதற்கு ஒரு நுணுக்கமான வித்தியாசம் செய்யப்பட்டிருக்கிறது. காமன்மேன் சன்னதம் வந்தவர் மாதிரி படியேறுவார். நடையில் உத்வேகம் தெரியும். சமநிலையில் இருந்து கோபம் உயர்வதின் காட்சிப் படிமமாக படிகள் இங்கே பயன்பட்டிருக்கும். இறங்குபோதும் பதற்றம் தொற்றிக்கொள்ள, ஜல்லென கோபம் வடிந்து, உடலில் அயர்வோடு தலைகுனிந்து நடந்து வருவார். மிக அழகான காட்சி அமைப்பு இது.

5. தமிழில் வசனங்களில் நெகிழ்ச்சி, சுதந்திரம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். உரையாடல் நடுவே வந்துவிழும் ஒரு சில கமெண்ட்கள், வரிகள் பளிச்சென்று இருக்கின்றன. இரா. முருகன் பங்களிப்பு.

மேலே சொன்னவை மகிழ்ச்சி அளித்த செய்திகள் என்றால், கொஞ்சம் மனக்குறை அம்சங்களும் இப்படத்தில் உண்டு.

1. படத்தின் கேமரா, காட்சி அமைப்பு பெரிய குறை. இந்தியில் பெரும்பாலான காட்சிகள் லாங்க் ஷாட், மிட் ஷாட் ஆகியவற்றிலேயே இருக்கும். டைட் குளோஸ் அப் காட்சிகள் குறைவு. இதன் பலனாக, எல்லா காட்சிகளிலும் பின்னணியில் விரிந்த பரப்பு இருக்கும். ஸ்பேஸை மிக அகலமாக, கேன்வாஸை பெரிதாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பிரும்மாண்டம் சாத்தியமானது இதனால்தான். காட்சியின் கருத்துகளோடு ஒன்ற முடிந்தது இதனால்தான். தமிழில், நிறைய முகத்தை நெருக்கும் டைட் குளோஸ் அப் காட்சிகள். இங்கே தனி மனிதனான காமன்மேன் மையம் கொள்ள, இந்தியில் விரிந்த பரப்பில் அவனது இருப்பு மையப்படுத்தப்பட்டிருக்கும்.

2. இரண்டாவது வருத்தம், திரைக்கதை அமைப்பு. மிகவும் வளவளவென்ற திரைக்கதை. இந்தி பதிப்பு, பட்டு கத்தரித்தாற் போல் இருக்க, தமிழோ, காடா துணியைக் கிழித்தது போல் இருக்கிறது. இந்தியில் காமன்மேன், கமிஷ்னர், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், ஒரு பெண் நிருபர் அனைவருக்கும் தனித்தனி சுவைகள், முகங்கள் உண்டு. தமிழில், காமன்மேனுக்கும் கமிஷ்னருக்கும் தவிர மற்றவர்கள் யாருக்கும் முகம் இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஜெய் (தமிழில் இன்ஸ்பெக்டர் சேதுராமன்) பாத்திரம், மிக மிக அழகானது. அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே இருக்கும் காதல் ஒரு புறம் கவிதைபோல் விரியும். அந்தக் கவிதைக்கு பின்னணி இசை மெருகூட்டும். மேலும், எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும், அதைத் தன் குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல், தானே அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் நுட்பத்தை அப்பாத்திரம் வெளிப்படுத்தும். தமிழிலோ, சேதுராமனின் காதல் முனை மழுங்கிப் போய் இருக்கிறது.

3. காலப்ரமாணம் ஒரு பெரிய பிரச்னை. பல காட்சிகள், அது முழுமையாக ஏற்படுத்த வேண்டிய பாதிப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன. உதாரணமாக இந்தியில், தலைமைச் செயலர் வரும் ஒரு காட்சி, மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருக்கும். டிராபிக் நடுவே அவரது கார் விரைந்து வருவது, ஒரு ரவுண்டானாவில் திரும்புவது, பின்னர், கமிஷ்னர் அலுவலகம் வந்தவுடன், நீண்ட வராந்தாவில் ஒரு முனையில் இருந்து அடுத்த முனை வரை நடந்துவருவது என்று மெல்ல மெல்ல பார்வையாளனின் எதிர்பார்ப்பைத் தூண்டிவிடக்கூடியதாக அக்காட்சி உருவாக்கப்பட்டிருக்கும். தமிழில் இது மிஸ்ஸிங்.

4. இசை. மிகவும் வருந்த வைத்தது. இந்தியில் ஒவ்வொரு பாத்திரத்தின் தனித்தன்மையையும் பின்னணி இசைதான் உணர்த்தும். தமிழில், அது எந்த வேலையையும் செய்யவில்லை. டெம்போவை உயர்த்தவில்லை, காதலை ரசனை மிகுந்ததாக்கவில்லை.

5. படத்தில் மிகவும் அபத்தமான ஒரு விஷயம், கமல் துப்பாக்கியை எடுத்து அவ்வப்போது காட்டுவது. ஏற்கெனவே ஒரு சாமானியன் குண்டு வைக்கக் கிளம்பிவிட்டான் என்பதுதான் கதை. அதில் கூடவே அவன் துப்பாக்கியும் தூக்குகிறானாம்! மக்களுக்கு புரியாது போய்விடுமோ என்ற பயம் போலிருக்கிறது. அந்தக் காலத்து பாலசந்தர் படங்களில் மேஜர் சுந்தர்ராஜன், ஒரே வசனத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்வது போல் இருக்கிறது இது. ஒரு கட்டத்தில் கண்ணில் வழியும் நீரை, காமன்மேன் துப்பாக்கியால் துடைப்பாராம்! அபத்தத்தின் உச்சம். மொத்த சினிமாவின் அழகியலுக்குள் ஒட்டாமல் துருத்திக்கொண்டிருக்கும் அம்சம், இந்தத் துப்பாக்கி.

இதெல்லாம் என்னைப் போல் வேலையத்தவனின் விமர்சனங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் படம் ஓடுகிறது. மக்களுக்கு படத்தின் மையக்கரு பிடித்திருக்கிறது. தீவிரவாதத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் எரிச்சலும் கோபமும் நிஜமானது. சரியான விதத்தில் அந்த நாடியை இந்திப் பதிப்பும், தமிழ் பதிப்பும் பிடித்துவிட்டது. அதனால் படம் வெற்றி அடைந்ததில் ஆச்சரியம் இல்லை.