எதிர்காலம் கருதி…
Posted in சுற்றுச்சூழல் on December 24th, 2009 by வெங்கடேஷ் – 3 Commentsஒவ்வொரு நாளும் என் வீட்டுக்கு கிட்டத்தட்ட நான்கு ஐந்து பிளாஸ்டிக் கவர்கள் வருகின்றன. காய்கறி வாங்கும்போது ஒன்று, மளிகை சாமான்கள் வாங்கும்போது ஒன்று, பிரெட், பிஸ்கட்டுகள் வாங்கும்போது ஒன்று, ஆவின் பால் கவர் சில, ஏதேனும் ஸ்னாக்ஸ் வாங்கும்போது ஒன்று என்று சின்னது பெரிதுமாக பிளாஸ்டிக் கவர்கள் வந்துகொண்டே இருக்கின்றன. விழாக் காலங்களில், உடைகள் வாங்கும்போது வரும் கவர்கள் வேறு ரகம், இன்னும் கெட்டியானவை. கவர்களை உடனடியாக தூக்கிவீசிவிடவும் மனம் வருவதில்லை. பின்னொரு முறை பயன்படக்கூடும் என்ற இந்திய சேமிப்பு மனப்பான்மை இங்கும் செயல்படும்.
சிறிது நாள்களுக்கு முன் வீட்டை ஒழித்து சுத்தமாக்கியபோது, மூட்டை கட்டும் அளவுக்கு பிளாஸ்டிக் கவர்கள் சேர்ந்துபோயிருக்கின்றன. பாக்கெட் பாக்கெட்டாக சின்னக் கவர்கள் ஒரு புறம், பெரிய கெட்டி பைகள் இன்னொரு புறம். என்ன செய்வது என்று தெரியவில்லை. என் வீட்டுக்கு வந்து பழைய பேப்பர்களை எடுத்துச் செல்பவரிடம் பிளாஸ்டிக் கவர்களைக் கொடுத்தபோது, அவர் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அது அவருக்கு உபயோகமில்லை என்றார். முன்பு பால்கவர்களை மட்டும் பழைய பேப்பர் கடைக்காரர்கள் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். இப்போது அதையும் நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது.
பத்தாண்டுகள் இருபதாண்டுகளுக்கு முன்பு வரை, நான் எப்படி பொருள்களை வாங்கிவந்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போது இந்த அளவுக்குக் பிளாஸ்டிக் கவர்கள் புழக்கம் இல்லை. எங்கே போனாலும் துணிப் பையை எடுத்துக்கொண்டு போயிருக்கிறேன். அல்லது ஒயர் கூடையை எடுத்துச் சென்றிருக்கிறேன். கையை வீசிக்கொண்டு கடைகளுக்குப் போனதில்லை. ஆவன் பால் அப்போது பாட்டில்களில் விற்பனை ஆயிற்று. வீட்டு வாசலில் பால்பாட்டில்களைக் கொண்டு வைத்துவிட்டுச் செய்வார்கள்.
திருமணங்களில் அப்போது மஞ்சள் பை கொடுப்பார்கள். ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப, பையின் அளவு மாறுபடும். திருமணங்களில் இப்போது மஞ்சள் துணிப் பைகளைக் காணவில்லை. அங்கும் பிளாஸ்டிக் பைகள்தான் கோலோச்சுகின்றன. துணிப் பைகளை எல்லா இடங்களுக்கு எடுத்துச் செல்வது கெளரவக் குறைச்சலாக கருதப்பட்டதும் இல்லை. இப்போது மஞ்சள் பை என்பது ஒருவித கேலிக்குரிய சொல்லாக மாறிவிட்டது. ஒருவரைப் பழைய கால நபர் என்று குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கேலி எவ்வளவுதூரம் நம் சமூகத்தில் ஆழ வேரூன்றிவிட்டது என்பதை இப்போது நன்கு உணர முடிகிறது. என் மகள் துணிப்பையையே தொட மாட்டேன் என்கிறாள்.
கடைக்காரர்கள் காகிதப் பைகளுக்கு மாறுவதாக இல்லை. காகிதப் பை கிழிந்துவிடும் என்பது பொதுவான கருத்து. அதிலேயே கெட்டி காகிதப் பைகள் உண்டு என்றாலும், அது விலை அதிகம் என்ற எண்ணம். 80 சின்ன பிளாஸ்டிக் பைகள் கொண்ட பாக்கெட், ரூ.7 முதல் கிடைக்கிறது. கொஞ்சம் கெட்டி பிளாஸ்டிக் கவர்கள் 100 கொண்ட பாக்கெட், ரூ.15 – 20 வரை கிடைக்கிறது. சின்னக் கடைக்காரர்கள் தங்கள் செலவுக்குள் அடங்குமாறு பாக்கெட்களை வாங்குகிறார்கள்.
தெரிந்த கடைக்காரர்களிடம் பேசியபோது, இது ஒரு தவிர்க்க முடியாத தலைவலி என்றார்கள். கையில் பை இல்லாமல் பலர் வருகிறார்கள். என்ன செய்வது என்றார் அவர்களில் ஒருவர். ‘ஒரு பிளாஸ்டிக் கவர் கூட வாங்கி வெக்க மாட்டீயா?’ என்று மிஸ்டர் பொதுஜனம் வலியுறுத்துவதையும் இன்னொருவர் குறிப்பிட்டார். ‘பிளாஸ்டிக் கவர்ல சேமிச்சுதான் இவர் பங்களா கட்டப்போறாரு’ என்று நக்கல் கமெண்டுகள் இன்னொரு புறம். கடைக்காரர்கள் இதையெல்லாம் தவிர்க்க, ஏதோ செலவு கம்மியான பிளாஸ்டிக் கவர்களை வாங்கி வைத்துக் கொடுத்துவிடுகிறார்கள்.
இது ஒருவரை ஒருவர் பழி சொல்வதுபோல்தான் தோன்றுகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? நுகர்வோர்களின் மனம் மாறவில்லை என்றால் இதில் ஏதும் செய்வதற்கில்லை. என்னைப் பொறுத்தவரை ஒன்றைப் பின்பற்ற முயற்சிக்கிறேன். எங்கே கடைகளுக்குச் சென்றாலும் கூடையையோ, பிக் ஷாப்பரையோ எடுத்துக்கொண்டு செல்கிறேன். முடிந்தவரை, வீட்டுக்குள் பிளாஸ்டிக் கவர் வரவைத் தவிர்க்கப் பார்க்கிறேன்.
முடிந்தவரை, எதிர்காலத்துக்கு பூமியை நல்லபடியாக விட்டுச் செல்வது நமது கடமையல்லவா?