நேசமுடன் » சமூகம்

பேசாத சொற்கள்
பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியாமல், பேசிக்கொண்டே செல்வார்கள். முகத்தில் கோபம், உக்கிரம், வேகம் எல்லாம் பீறிட்டுக்கொண்டு இருக்கும்.

நகர வாழ்க்கை காரணமா, என்ன காரணம் என்று தெரியவில்லை. பலர் அதிபயங்கர மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு சின்ன விஷயமும் இங்கே தோல்வியோடு முடிகிறது போலிருக்கிறது. தோல்வி, நிறைவின்மை, குறைகள் எல்லாம் சேர்ந்து மனத்துக்குள் பெரும் போராட்டங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இப்படி தம்மையும் அறியாமல் பேசிக்கொண்டே செல்பவர்கள்.

குறிப்பாக நிறைய பெண்கள் இப்படி இருக்கிறார்கள். அதுவும் வேலைக்குப் போகும் பெண்கள், கைகளை ஆட்டி யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டே போவார்கள். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்களைப் பார்க்கும்போது, உள்ளுக்குள் வார்த்தைகள் வரிசை கட்டி நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பெருமூச்சு, ஒரு அலுத்துக்கொள்ளும் தலையாட்டல் எல்லாம் உள்ளே கரையும் சொற்பிரவாகத்தின் தொடர்ச்சி.

சின்னப் பெண்களுக்கு ஒருவித கட்டுப்பாடு, சங்கோஜம் எல்லாம் கூடவே தலைகாட்டுவதால், தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வயது ஆக ஆக, இந்தக் கட்டுப்பாடு கழண்டுவிடுகிறது. கவலைகள் மேலோங்கிவிடுகிறது. தம்மையும் அறியாமல் கையை ஆட்டிக்கொண்டு யாரிடமோ விவாதம் செய்துகொண்டு செல்வார்கள். ஒரு கட்டத்தில் இது இன்னும் அதிகமாகி, பேசவே ஆரம்பித்துவிடுகிறார்கள்.

நம்மிடையே பேசுவதற்கான நேரம் குறைந்துவிட்டது. குடும்பத்தாரோடு பேசுவதே அரிதாகிக்கொண்டு இருக்கிறது. குடும்பங்களில் பேச்சு என்பது அதிகபட்சம், ஒன்றிரண்டு சொற்கள், ஒரு சில வரிகளில் முடிந்துபோய்விடுகிறது. முன் தீர்மானிக்கப்பட்ட வரிகளே பேசப்படுகின்றன. ‘டிபன் பாக்ஸ் கட்டியாச்சா?’, ‘கேஸ் சிலிண்டர் வருமா?’, ‘டெலிபோன் பில் கட்டியாச்சா?’, ‘9.20 டிரெயினைப் பிடிக்கணும்’ என்று மிகச் சப்பையான வரிகளே பேசப்படுகின்றன. விளைவு, சொல்லவேண்டிய பல செய்திகள், கேட்கவேண்டிய பல கேள்விகள், மோதித் தீர்த்துக்கொள்ள வேண்டிய கோபங்கள், புரிந்துகொள்ளவேண்டிய உணர்வுகள் எல்லாம் மனத்துக்குள் மக்கிப் போய்விடுகின்றன.

தொலைக்காட்சி குடும்பங்களில் பேசும் நேரத்தைப் பெருமளவு ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது. கூடத்தில் அது ஒரு பக்கம் மண்டையிடியாக முழங்கிக்கொண்டு இருக்க, மற்றொரு பக்கம், அதற்கு இணையாக குடும்ப உறுப்பினர்கள் கத்தி கத்திப் பேசுகிறார்கள். அல்லது பேசாமல் இருந்துவிடுகிறார்கள். பேசாமல் இருப்பதுதான் அதிகம்.

பல வீடுகளில், சாப்பாடு, தொலைக்காட்சியோடு பின்னிப் பிணைந்தது. கையில் தட்டை வைத்துக்கொண்டு, டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும் கெட்ட பழக்கம் ஏராளமான வீடுகளில் இருக்கிறது. தட்டில் என்ன இருக்கிறது, என்ன சுவை, என்ன ரசனை என்ற எந்த ஒரு கவனமும் இல்லாத வெற்றுச் சாப்பாடு அது. எதில்தான் மல்டி டாஸ்கிங் வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

என் வீட்டில், சாப்பாட்டு மேஜையை நான் பேசுவதற்கான இடமாக மாற்றி வைத்திருக்கிறேன். சாப்பிடும்போது, குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும். டிவி ஓடக் கூடாது. செல்போன் கூடாது. கையில் புத்தகமோ பத்திரிகையோ கூடாது. சாப்பாடும் பேச்சும் மட்டுமே முக்கியம். அதிகபட்சம் பதினைந்து நிமிட நேரம். அல்லது அரை மணி. குடும்ப உறுப்பினர்கள் அத்தனை விஷயங்களையும் கொட்டிவிடுவார்கள். கேட்கவேண்டியதைக் கேட்டுவிடுவார்கள். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுவேன். எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பொது.

பேசாது போன, உள்ளேயே மட்கிப் போன எண்ணங்களின், கோபங்களில், வலிகளின் வெளிப்பாடுகளை, சென்னைத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். குறிப்பாக, திருவல்லிக்கேணி கோவில் அருகே இரண்டு மூன்று நபர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், பெண். அழுக்கு உடையணிந்துகொண்டு, பெளடர் பூசிப் பொட்டு வைத்துக்கொண்டு, கோவில் அருகே உட்கார்ந்திருப்பார். ஒரு காலத்தில் ஏதோ ஒரு பெரிய வீட்டின் திறமையான நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும். மிச்சமிருக்கும் அழகும் மிடுக்கும், வாழ்ந்த வாழ்க்கையின் எச்சத்தை எடுத்துச் சொல்லும். திடீரென்று யாரையோ திட்டுவார். யாரையோ மிரட்டுவார். யாருக்கோ உத்தரவு தருவார். சொல்பேச்சுக் கேட்காத பிள்ளைகளை குறை சொல்லுவார். அற்புதமான ஆங்கிலம் ஒரு சில சமயங்களில் வெளிப்படும். மற்ற நேரங்களில், நல்ல அழகான தமிழ். கொஞ்சம் நேரம் ஓரிடத்தில் அமர்ந்திருக்க மாட்டார். பெரிய கைப்பையைத் தூக்கிக்கொண்டு கோவிலைச் சுற்றியுள்ள வீட்டு வாசல்களில் உட்கார்ந்து, நடந்து, படுத்து அங்கேயே தன் நாள்களை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்.

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் பேசப்படாத வலி மொத்தம் அந்தம்மாளின் வார்த்தைகளில் தொக்கி நிற்கும். இதுபோல், மன அழுத்தம் மிகுந்த பல பெண்களை நான் சாலைகளில் பார்க்கிறேன். யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை. பேசாத சொற்கள், வலி நிரம்பியவை. அதைப் பேசி வெளியே கொட்டுவதைவிட, வேறேதும் சிறப்பான் வழி இருப்பதாகத் தெரியவில்லை.

வலி நிரம்பிய சரித்திரம்
முதல் முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா 19.01.2010 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதுவரை நான் பட்டம் வாங்கியபோதெல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கோ பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கோ சென்றதில்லை. விழா முடிந்த மறுநாள் கல்லூரி அலுவலகம் போய், அங்கே இருக்கும் பணியாளர் கையால்தான் டிகிரி சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கிறேன்!

ஒரு மாநிலத்தின் ஆளுநர் கையால், பட்டம் வாங்குவது எவ்வளவு பெருமை வாய்ந்த தருணம் என்பதை, இப்போதுதான் புரிந்துகொண்டேன். பாரம்பரியம் மிக்கப் பல்கலைக்கழகத்தின் பாரியம்பரிக்கமிக்க விழா. பின்பற்றப்பட்ட நடைமுறைகள் எல்லாம் பற்பல ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அழகான பாரம்பரியம். மரியாதை. கெளரவம். அதற்கான தயாரிப்பு, இடுப்பை ஒடிப்பதாக இருந்தாலும், நிகழ்ச்சியின் அழகும் அமரிக்கையும் பாந்தமும் எல்லா வலிகளையும் மறக்கடித்துவிட்டன.

விழாவின் பாரம்பரிய அழகு ஒருபக்கம் கவர்ந்தது என்றால், இன்னொரு பக்கம் பட்டம் பெற்றவர்களின் ஆர்வம் அற்புதமாக இருந்தது. அன்று கிட்டத்தட்ட 419 பேர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். இருபதுகளுக்குள் இருப்பவர்களில் இருந்து எழுபதுகளைத் தொட்டவர்களும் டாக்டர் பட்டங்களை வாங்கினார்கள். பார்வையற்ற இருவர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். ஒருவர் வரலாற்றுத் துறையிலும் மற்றவர் தமிழ்த் துறையில் ஆய்வுகள் செய்திருப்பவர். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் (த.சுமதி), ஏடிஜிபி ராதாகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார், செஃப் தாமு (தாமோதரன்) ஆகியோர் அன்று டாக்டர் பட்டம் பெற்றவர்களில் அடங்குவர்.

இன்னொரு பகுதி, ரேங்க் வாங்கியவர்கள். நான்கு பாடங்கள், மூன்று பாடங்கள் என்று பல பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவ மாணவியர் அன்று அதற்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கிச் சென்றார்கள்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே விழா களைகட்டத் தொடங்கிவிட்டது. விழா அரங்க வாசலில் ஏராளமான போட்டோகிராபர்கள் மோதிக்கொண்டார்கள். பட்டமளிப்பு விழா அங்கி அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளும் வேகம். அங்கியை அணிந்துகொண்டு, கார்களுக்கு முன்னால், மரத்துக்குப் பின்னால், அம்மாவை அணைத்துக்கொண்டு, அக்காவோடு நெருக்கமாக என்று விதவிதமான போஸ்களில் போட்டோகளைச் சுட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்தபின்னரும் இதே ஆர்வம்தான். துணைவேந்தரோடு சேர்ந்து போட்டோ, மேடை பின்னணியில் போட்டோ என்று பெரிய கூட்டமே அலையடித்தது.

உறவினர் கூட்டம் உற்சாகம் ததும்ப காத்திருந்தது. ஏராளமான பூங்கொத்துகள் வழங்கப்பட்டன, இனிப்புகள் கொடுக்கப்பட்டன. தம் மகள்களின் உச்சிமோந்துகொண்ட பெற்றோர்கள் இன்னொரு புறம். தாம் பெற்ற புகழைவிட தம் மகவுகள் பெறும் புகழ், அங்கீகாரம் ஆகியவற்றை மெச்சும், கொண்டாடும் பெற்றோர்களின் கண்களில் தெரிந்தது வலியும் உழைப்பும்தான்.

வாழ்க்கையில் டாக்டரேட் வாங்குவதும் ரேங்க் வாங்குவதும் இவ்வளவு கவர்ச்சிகரமான விஷயங்கள், உணர்ச்சிபூர்வமான தருணங்கள் என்று எனக்குத் தோன்றியதில்லை! வீட்டுக்கு வந்து பெட்டிக்குள் பூட்டிவைத்துள்ள என் பட்டங்களை எடுத்துப் பார்த்தேன். அதன் பின்னே தெரிந்தது, என் அப்பாவின் முகம். உழைப்பும் களைப்பும் வலியும் உற்சாகமும் ஆர்வமும் கலந்துகட்டிய முகம். பட்டம், எனக்கு இப்போது வெறும் காகிதமாகத் தோன்றவில்லை. அதன்பின்னே இருபதாண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. வலி நிரம்பிய சரித்திரம்!

மிகை தேவையா?
தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவரும் நீத்தார் நினைவு விளம்பரங்களைப் பார்ப்பது என் தினசரி பழக்கங்களில் ஒன்று. புகைப்படங்களோடு வரும் விளம்பரங்கள் ஓரிடத்திலும், ஸ்போர்ட்ஸ் பேஜ்ஜில் டெத் என்றொரு மூலையும் இருக்கிறது. இரண்டுமே என்னைக் கலவரப்படுத்தும் இடங்கள். அதே சமயம் பார்க்காமல் இருந்ததும் இல்லை. பல சமயங்களில் எனக்குத் தெரிந்தவர், அறிந்தவர்களின் புகைப்படங்கள் அங்கே வந்ததுண்டு.

விதவிதமான மரணங்கள், விதவிதமான வருத்தங்கள், விதவிதமான நினைவு கூரல்கள். கடந்த சில வாரங்களாக, மதார்ஷா கடையின் உரிமையாளர் நினைவைப் போற்றும் விளம்பரங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. தொடர்ந்து பார்த்து வருவதனாலோ என்னவோ, பல முகங்கள் எனக்கு நினைவில் அப்படியே பதிந்து இருக்கின்றன.

ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். பெரும்பாலும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எந்த மனநிலையையும் குறிக்காது. ஒருவிதமான தட்டையான முகம் அது. ஒருவரை அடையாளப்படுத்துவதே அதன் நோக்கமே. ஒரு சில நல்ல புகைப்படங்கள் வரும். ஒரு இன்ஜியரிங் நிறுவனத்தின் முதலாளி, தலைகவிழ்ந்து சிந்தனையோடு நடப்பார். இன்னொரு பெண்மணி பளிச்சென்று சிரிப்பார். நாஞ்சில் மனோகரன் புகைப்படம் உற்சாகத்தோடு இருக்கும்.

இதெல்லாம் அவர்களுடைய மரணத்துக்கு முன்பு நன்கு வாழ்ந்தபோது எடுக்கப்பட்டவை. வருங்காலத்தில் தம் குடும்பத்தார், புகைப்படங்களை இப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா? தெரியவில்லை.

சென்ற வாரம் நானும் இதுபோன்ற ஒரு மரணச் செய்தியைக் கொடுக்க இரவு பத்தேகால் மணிக்கு தி ஹிந்துவுக்கு ஓடினேன். பதினோரு மணிவரை விளம்பரங்கள் பெறப்படும் என்று பத்திரிகையிலேயே தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. என் அவசரத்தை விட, அங்கே இருந்த அலுவலர்களின் அவசரம் இன்னும் கலவரப்படுத்துவதாக இருந்தது. உடனே யாருக்கோ போன் செய்து, இன்னொரு விளம்பரம் வருகிறது, கொஞ்சம் இடம் ஒதுக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார் அங்கிருந்த ஊழியர்.

ஏற்கெனவே செய்தியை எழுதி எடுத்துச் சென்றதால், விரைவாக அவர்கள் கொடுத்த படிவத்தில், ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாக எழுதிக் கொடுத்தேன். ஸ்போர்ட்ஸ் பேஜ்ஜில் வரும் விளம்பரத்துக்கு, ஒரு வரிக்கு இருநூறு ரூபாய். என் பின்னாலே இருவர் வந்து, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுத்து விளம்பரம் எழுதித் தந்தனர். அது இன்னும் அவசரமாக உள்ளே லே அவுட் செய்யப்படும் இடத்துக்கு ஓடிப்போனது. அவர்களுக்கு ரூ.15,000 வரை ஆனது.

விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்ப, மெளண்ட் ரோடில் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாருக்கு இந்தச் செய்தி போய்ச் சேரும்? நான் கொடுத்தது என் உறவினர் ஒருவரின் மரணத்துக்கு. பெரும்பாலோருக்கு ஏற்கெனவே தொலைபேசியிலும் செல்பேசியிலும் விவரத்தைத் தெரிவித்தாயிற்று. இதையும் மீறி விடுபட்டவர்களுக்கு இந்தச் செய்தி போய்ச் சேருவதால் எந்த ஒரு புதிய பலனும் கிடைக்கப்போவதில்லை.

ஆனால், இருபத்தைந்தாவது ஆண்டு, முப்பதாவது ஆண்டு நினைவு நாள் விளம்பரங்கள் வருகின்றன. இரண்டு தலைமுறையே மாறிப்போயிருக்கும். மரணம் அதீத துயரமானது. அது தனிப்பட்ட விஷயமல்லவோ? வலியும் வேதனையையும் உறவினர்களை இழந்தவர்களுக்குத்தான் தெரியுமே அன்றி, பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பதால், என்ன புதிதாக பெறப்போகிறார்கள்? அல்லது எந்த வகையில் வலி குறையப் போகிறது?

யாருக்கு இவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்?

நேற்று, பழம்பெரும் நடிகை பானுமதியின் நினைவு நாள். போட்டோவோடு விளம்பரம். நான் என்ன பெற்றேன்? அவரது நடிப்பை நான் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேன். அது போதுமே. அதேபோல், பாரதியாரின் பிறந்த நாள், மறைந்த நாள் எல்லாவற்றையும் விழா போல் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகளில் அவரது நினைவைப் போற்றும், பங்களிப்புகளை மெச்சும் கட்டுரைகள், குறிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் எல்லாமும் உயர்வுநவிற்சிதான்.

ஒரு வகையில், நம் பண்பாட்டில், பிறப்பும் இறப்பும் கொண்டாட்டமானது போலிருக்கிறது. எல்லாவற்றையும் மிகையாக வெளிப்படுத்துவது நமது இயல்பிலேயே ஊறிப் போயிருக்கிறது.

தனிமனிதர்களிடையே தொடங்கி சமூகம் மொத்தமும் இது பரவியிருக்கிறது. இதில் சரி தவறு என்று ஏதும் இல்லை. ஆனால், மூத்தோரின் நினைவைக் கொண்டாடியே தீரவேண்டும் வலிந்து ஒன்றைத் திணிப்பது, எவ்வளவு தூரம் சரியென்றுதான் தெரியவில்லை.

அருகிப் போன ஆர்வம்
அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா. நவம்பர் 27 முதல் நவம்பர் 30 வரை சென்னை நாரத கான சபாச் சிற்றரங்கத்தில் நான்கு நாளும் இசைக் கச்சேரிகள், பேருரைகள், ஆய்வுரைகள், ஹரிகதை, நாட்டியம் எல்லாம் இனிதே நடைபெற்றன. நிறைவு விழாவுக்கு, சென்னை பலகலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் திருவாசகம் தலைமையேற்றுப் பேசினார்.

அப்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அப்ளைடு தமிழ்’ என்ற புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதைப் பற்றித் தெரிவித்தார். அப்ளைடு தமிழில் ஐம்பது சதவிகிதம் வரை தமிழும், மிச்சமிருக்கும் ஐம்பது சதவிகிதத்துக்கு அக்கவுண்டன்சி, கம்பியூட்டர் எல்லாம் சொல்லித் தரப்படும். அதன் மூலம், தமிழ்மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு சுலபத்தில் கிடைக்கும் என்றார் திருவாசகம்.

முதலில் இது புது திட்டம் இல்லை. ஏற்கெனவே, க.ப.அறவாணன் இதை இலயோலா கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். மூன்றே ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் குறைந்துபோய், இந்தக் கோர்ஸையே நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு நல்ல விஷயம் நடந்துகொண்டு இருக்கிறது. மக்கள் மனத்தில் தெளிவு பிறந்துகொண்டு இருக்கிறது. அதில் எதற்கு எல்லோரும் போய் தலையை நீட்டி தன் பங்குக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய மாணவர்கள் எந்தப் படிப்பு படித்தால் வேலை கிடைக்குமோ அதை மட்டுமே படிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, படிப்பு என்பது வேலைக்கு மட்டும்தான். அதில் இருந்து கிடைக்கும் ஞானம் என்பதெல்லாம் வேலைக்கும், அதில் கிடைக்கக்கூடிய முன்னேற்றத்துக்கும் உதவுவதாக இருந்தால்தான், அதைப் படிக்கவே செய்கிறார்கள். அப்படி முன்னேற்றம் தராத படிப்பின் பக்கம் அவர்கள் தலைவைத்தே படுப்பதில்லை.

பல கல்லூரிகளில், பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஹிஸ்டரி) போன்ற படிப்புகள் எல்லாம் ஈயோட்டுகின்றன. மாணவர்கள் சேர வராததனால், அந்தப் படிப்புகளையே மூடிவிடலாமா என்று பல்கலைக்கழகத்தைக் கேட்கின்றன கல்லூரிகள். அல்லது ஒரு சில கல்லூரிகளில், அந்தப் படிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று, மிக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை அங்கே சேர்த்துக்கொள்ளுவார்கள். விரும்பி, ஆசையாக வந்து படிக்கக்கூடிய ஒன்றிரண்டு மாணவர்கள் இருக்கவும் செய்யலாம். மொழிப்பாடத்தை முக்கியமாக கருதும் ஒரு சில பெற்றோர்கள் வேண்டுமானால், தம் பிள்ளைகளை இந்தப் படிப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்தியா போன்ற வறுமை மிகுந்த நாட்டில், ஒவ்வொருவரும் வேலை செய்தே தம் வாழ்க்கையை நடத்தவேண்டிய தேவை இருக்கும் நாட்டில், மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பது என்பது கொஞ்சம் ஆடம்பரமான ஆசைதான். நமக்குத் தேவை ஸ்கில் பேஸ்டு எடுகேஷன். தொழில் சார்ந்த படிப்பு மிக முக்கியம். பி.ஏ, எம்.ஏ., மட்டுமல்ல பி.எஸ்சி., எம்.எஸ்சி. கூட ஓரளவுக்கு உபயோகமற்ற படிப்புதான்.

மேலும் தமிழ்நாட்டில், ஐம்பது, அறுபது ஆண்டுகாலமாக, தமிழ், தமிழர் என்று பேசிப் பேசியே அரசியல் வளர்த்தாயிற்று. அதனால், தமிழ் மொழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கடும் நெருக்கடி. அரசினால் மட்டும் எவ்வளவுதான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்?

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த தாட்சர், தனது பதவிக் காலத்தில், ஆங்கிலம் படித்த பேராசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் நீக்கினார் என்று சொல்லப்படுவதுண்டு. பிரிட்டனில் இதுதான் நிலைமை.

அப்படி இருக்கும்போது, படிக்கக் கூடிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும்தான் இங்கே முடிவெடுக்கவேண்டியவர்கள். அவர்கள் மொழிப் பாடத்தை விலக்கி வைக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போது மீண்டும் நான் மொழிப் பாடத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி, அப்ளைடு தமிழ் என்றெல்லாம் அறிமுகப்படுத்துவது தேவையான வேலையாகத் தோன்றவில்லை.

மக்கள் மத்தியில் இல்லாத ஆர்வத்தை, அருகிப் போன ஆர்வத்தை எப்படி ஒரு பல்கலைக்கழகத்தால் தூண்டிவிட முடியும்? சாத்தியமே இல்லை.

இப்போதும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (வைணவம்), எம்.ஏ (சைவம்), எம்.ஏ (ஜெயினம்) என்றெல்லாம் படிப்புகள், அதை நடத்தும் துறைகள் இருக்கின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் அதில் போய் சேர்ந்து பயின்று தேர்ச்சி பெற்று வருகின்றனர். நான் அப்ளைடு வைணவம், அப்ளைடு சைவம் சொல்லிக்கொடுக்கிறேன் என்று யாரும் சொல்கிறார்களா என்ன?

மொழியைப் பற்றிய படிப்பு என்பது ஸ்காலர்லியான படிப்பு. அது ஆய்வு நோக்குடையதாக இருக்க முடியும். அல்லது, இண்டர் டிசிப்பிளினரியாக இருக்க முடியும். மொழியைப் படித்துவிட்டேன் என்பதற்காகவே அந்த மாநில அரசு வேலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அபத்தம்.

ஆர்வம் வேறு, வருமானம் வேறு. ஆர்வமே வருமானமும் தந்தால் நல்லதுதான். அதுதான் அதிகபட்ச மகிழ்ச்சி தருவது. ஆனால், இரண்டும் எப்போதும் எதிர் எதிர் துருவங்கள். இணைய வாய்ப்பே இல்லை என்பது பலருடைய வாழ்க்கை அனுபவம். உண்மையை, யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

அழியாப் புகழ் பெறும் இடங்கள்
பஸ்ஸில் போவதும் நடந்துபோவதும் எனக்குப் பிடித்த பழக்கங்கள். காரிலோ, டூவீலரிலோ போகும்போதும் எல்லாமே சரக்கென்று காணாமல் ஓடிப்போய்விடுகின்றன. எந்த ஒரு காட்சியும் கட்டடமும் பெயர்ப்பலகையும் மனத்தில் பதிவதில்லை. பெரும்பாலும் சாலைப் பெயர்களைக் கூடப் படிக்க முடிவதில்லை.

நடை அப்படி இல்லை. பஸ்ஸும் அப்படி இல்லை. எதையும் நிதானமாகப் பார்த்துக்கொண்டு போக, மனத்தில் வாங்கிக்கொள்ள உதவி செய்பவை இந்த இரண்டு முறைகள். மூன்று நான்கு பெரிய கடைகள் நடுவே மாட்டிக்கொண்டு இருக்கும் அற்புதமான உணவகங்களை, டீக் கடைகளை, கைவினைஞர்களின் கடைகளை இப்படித்தான் நான் கண்டுபிடித்திருக்கிறேன். ஒவ்வொரு சாலையும் நிறைய நிறைய மர்மங்களை ஒளித்துவைத்திருக்கிறது. சரித்திரங்களை ஒளித்து வைத்திருக்கிறது. மனிதர்களை ஒளித்துவைத்திருக்கிறது.

அம்மாவை இழந்த சின்ன வயதில், என் பெரும்பாலான நேரம் இப்படிப்பட்ட பயணங்களில் கழிந்திருக்கிறது. அப்போது வடசென்னையில் செளகார்பேட்டை என்று சொல்லப்படும் கொண்டித்தோப்பு, (கொண்டியம்பதி) தங்க சாலை அருகே வீடு. பள்ளி விட்ட பின்பும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலாற எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்துபோய்விடுவேன்.

புதிய தெருக்களைக் கண்டுபிடிப்பது, புதிய இடங்களை, புதிய கடைகளை கண்டிபிடிப்பது அப்போது ஏற்பட்ட பழக்கம்தான். அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முடிந்தபின்னர் என்ன செய்வது என்று தெரியாது. விடுமுறைகள் நாள்கள் நிறைய இருக்கும். எவ்வளவுதான் புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பது? முருகன் தியேட்டர் அருகே இருந்த அரசு நூலகத்தில் இருந்து இரண்டு மூன்று நூல்களை ஒரே நாளில் படித்த வேகம் ஞாபகம் உண்டு. படிக்க முடியாத போது, ஊர் சுற்றவது பழக்கம்.

பிளஸ் ஒன்னில் அப்பா, எனக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். பல ஆண்டுகள் சைக்கிள் என் கனவு வாகனம். அந்தப் பக்கம் தண்டையார்பேட்டை தாண்டி, சுங்கச்சாவடி, எண்ணூர் முதல், இந்தப் பக்கம் கிண்டி வரை சென்னை முழுவதையும் சைக்கிளிலேயே சுற்றித் திரிந்த வயது அது.

புதிய சாலை எப்போதும் எனக்கு ஒருவித மயக்கத்தைத் தரும். எல்லா சாலைகளும் ஏதேனும் ஒரு பெரிய சாலையிலோ இன்னொரு சிறிய சந்திலோ போய் முடிவுபெறும். வடசென்னையில் ஏராளமான முட்டுச் சந்துகள் உண்டு. சாலை முடிந்துபோய்விடும். மீண்டும் திரும்பி, அடுத்த சாலையில் சைக்கிள் ஓட்டுவேன்.

இராயபுரம், தண்டையார்பேட்டை, கல்மண்டபம், ஏழு கிணறு, பிராட்வே, கொத்தவால்சாவடி, மண்ணடி, யானைகவுனி, செண்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய பகுதிகள் எல்லாம் எனக்கு விரல்நுனியில் அத்துபடி. சைக்கிள் வந்தபிறகு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சூளை, பெரியமேடு என்று இன்னும் சுற்ற ஆரம்பித்தேன்.

இதில் இன்னொரு மகிழ்ச்சி உண்டு. தெரியாத சாலைக்குள் போய்விட்டு, அது வளைந்து, நெளிந்து, மீண்டும் ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குள், தெரிந்த சாலைக்குள் வந்து முடியும்போது, ஏதோ வாஸ்கோடகாமா, மெகஸ்தினிஸ் மாதிரி உற்சாகமாக இருக்கும். புதிய வழித்தடத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி அது. மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்ட உற்சாகம் அது.

இப்படி சுற்ற ஆரம்பித்ததற்கு பள்ளியில் நான் சாரணர் அணியில் இருந்ததும் ஒரு காரணம். சாரணர் இயக்கத்தில், ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக்கொண்டு, அதில் சிறப்பாக செய்துகாட்டினால், ‘Proficiency Badge’ தருவார்கள். நான் இரண்டு கைகளிலும் ஏராளமான பேட்ஜ்கள் வாங்கியவன். அதில் ஒன்று ‘Pathfinder’ பேட்ஜ். அதற்கு ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகப் போய், அந்தத் தெருவில் இருக்கும் முக்கிய இடங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு வரவேண்டும்.

பின்னர், அந்த முழுப் பகுதியையும் பெரிய சார்ட் பேப்பரில் வரைந்து சாலைகளைக் குறித்து, அதில் முக்கிய இடங்களைக் குறித்து, வழிகாட்ட வேண்டும். என் சுவாரசியம் இங்கிருந்துதான் தொடங்கியது. ஏற்கெனவே ஊர்சுற்றுவது என் பொழுதுபோக்கு. நான் கொண்டியம்பதி பகுதியை இப்படி வரைந்து, இடங்களைக் குறித்து, பாத்ஃபைண்டர் பேட்ஜ் வாங்கினேன். என் சார்ட்டை பல ஆண்டுகள் வைத்திருந்தேன். ஒரு பிள்ளையார் கோவில், ஒரு அம்மன் கோவில், ஒரு மரம், ஒரு விளையாட்டுத் திடல், ஒரு வளைவு என்று எதையும் விடாமல், அத்தனையையும் என் சார்டில் குறித்திருந்தேன்.

இப்போதும் எனக்கு இந்த பழக்கம் விடுவதில்லை. யாராவது எங்கேயாவது போகவேண்டும் என்று வழிகேட்டால், முதல் வேலையாக ஒரு பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு வழி போட்டுக் காட்டிவிடுவேன். என் மகள், விவேக் பாணியில், ‘மேப் போட வந்துட்டார்யா’ என்பாள். இடையில் இருக்கும் முக்கிய இடங்களை எல்லாம் சுட்டிக் காட்டுவேன். அந்த இடத்துக்குப் போகும் பஸ், பஸ் நிறுத்தத்தின் பெயர் சொல்லுவேன்.

இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது அதைச் சுற்றி இருக்கும் தடங்களை வைத்துதான். கும்பகோணத்தை அடுத்திருக்கும் என் பெரியம்மாவின் ஊருக்குப் போகவேண்டுமென்றால், என் ஞாபகத்தில் இருப்பது, ஒரு பெரிய வளைவும் வளைவு முண்டில் இருக்கும் ஆலமரமும்தான். அந்த ஆலமரத்தில் மிகப் பெரிய பொந்து உண்டு. சென்னை சாலைகளுக்கும் நான் இப்படி வழி சொல்லுவேன். ‘அங்கே திரும்பினவுடனே ஒரு அயன் கடை இருக்கும். அந்தக் கடைக்கு மூணாவது வீட்டு ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லேருந்து மணி பிளாண்ட் தொங்கும். நேரா போனீங்கன்னா, ஒரு அடி பம்பு இருக்கும்…’

புது இடங்களைப் பார்ப்பது மாதிரியான சுவாரசியம் வேறில்லை. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மர்மத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறது. பயம் மட்டும் கூடவே கூடாது. பல சமயங்களில் நண்பர்களோடு காரில் போகும்போது, தெரியாத சாலைகளில் பயணம் போக பயப்படுவார்கள். என்னுடைய லாஜிக் இவ்வளவுதான்: எப்படியாக இருந்தாலும் இது ஏதோ ஒரு ஊருக்கு, இல்லை ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குப் போய் சேர்க்கும். எதற்கு கவலைப்படுவானேன்? அங்கே இருப்பவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தான். நின்று பேசினால், பதில் சொல்லாமலா போய்விடுவார்கள்?

நடக்க அஞ்சவே கூடாது. காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு ஓடவும் கூடாது. அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற expeditionகளுக்கு லாயக்கே இல்லை. கிடைத்ததை ரசித்துச் சாப்பிடுவது இன்னொரு முக்கிய தகுதி. வெளியே சுற்றுவதின் உபமகிழ்ச்சி எல்லாவகையான உணவுகளையும் சுவைப்பது.

வேலைக்கு வந்தபிறகு வடகேரளம் முதல் தென் கேரளம் வரை, நான் சார்ந்த நிறுவனத்துக்காக ஒரு ஆங்கில ஆசிரியரை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஆங்கிலம் சொல்லித் தருவது பற்றி பாடம் நடத்தியிருக்கிறேன். கேரளம் முழுவதும் புட்டும் கடலையையும் மட்டுமே சாப்பிட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். ஆந்திரம், கர்நாடகம் சுற்றியதும் இப்படித்தான். ஆந்திர காரம் இன்னும் நினைவு மடிப்புகளில் இருக்கிறது. பின்னர் பூனா, மும்பை சுற்றியபோதும் இந்தப் பழக்கம் விடவில்லை. அங்கே எங்கே போனாலும் வடாபாவ் கிடைத்துவிடும். நம்ம ஊர் பஜ்ஜியெல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். எங்கே போனாலும் என் ஃபேவரிட் டீ கிடைத்துவிடும்.

இப்போதுதான் கொஞ்ச காலமாக, மனைவியின் அறிவுறுத்தலால், வெளியே சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். ‘என்ன எண்ணையோ என்ன தண்ணியோ, கொஞ்சம் கூட ஹைஜீனிக்கே இல்லை,’ ‘நாப்பது வயசாகப் போகுது. ஏற்கெனவே டையபடிக். கொஞ்சம் ஜாக்கிரதை,’ ‘ரெண்டு பொண்ணு இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்’  என்று என் ஆர்வங்களில் லேசாக பயம் தெளித்து, என்னை மிடில்கிளாஸ் சம்சாரியாக்கியிருக்கிறார் அவர்.

வெளியே சாப்பிடுவதை மட்டும் நிறுத்திக்கொண்டு விட்டேன். சுற்றுவதை அல்ல. இப்போதும் வெளியூர்களுக்கு பஸ்ஸில் போவது என் விருப்பம். அதுவும் இரவு நேரப் பயணம், இன்னும் அமர்க்களம். ஜன்னலோரமாக உட்கார்ந்துகொண்டுவிட்டால், ஒவ்வொரு ஊரும் தன் வாசனையை, சுவையை, மெளனத்தைச் சொல்லிக்கொண்டே வரும். தூரத்து மினுக் மினுக் விளக்குகள், அதனுள் பொதிந்திருக்கும் ஜீவனைச் சுட்டிக்காட்டும். புலன்களைத் திறந்து வைத்துக்கொண்டுவிட்டால் போதும், அதில் வந்து கொட்டும் சேதிகள் எண்ணற்றவை.

பயணங்களில் மிகப்பெரிய சந்தோஷம், அதுதரும் அனுபவம்தான். நான் பல ஊர்களை அது தந்த அனுபவத்தின் வாயிலாகவே ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த அனுபவம்தான் எனக்கான சேகரம், எனக்கான வளம். எனக்கான உந்துசக்தி. ஒவ்வொரு முறை கதை எழுத உட்காரும்போதும், இதுபோன்ற ஏதேனும் ஒரு தெருவை, ஊரை, வாசனையை, மெளனத்தை நினைத்துக்கொள்வேன். அங்கே பார்த்த நபர்கள் என் கதை மாந்தர்கள் ஆகிவிடுவார்கள். சுற்றி இருக்கும் இடங்கள் மெல்ல மெல்ல என் கதைக்குள் நுழைய ஆரம்பித்துவிடும்.

இடம் என்ற அம்சம் இல்லாமல் என்னால் கதை எழுத முடிந்ததில்லை. கதை மாந்தர்களை ஏதேனும் ஒரு தெருவில் பொருத்திவிடுவது இதனால்தான். அதற்கு பிறகு கதையை அந்த இடமே நகர்த்திச் சென்றுவிடும். இடம்தான் கதைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. மார்க்குவேஸுக்கு மகண்டோ, சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம், அசோகமித்திரனுக்கு ஹைதராபாத் எல்லாம் இப்படி நம்பகத்தன்மை வாய்ந்த இடங்கள். அவர்களுடைய கதைகள் அழியாப் புகழ் பெற்றதற்கு, இடமும் ஒரு முக்கியக் காரணமோ? இருக்கலாம்.

விளம்பரம் தரும் வாழ்வு
இரண்டு நாளைக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றம், பஸ்களில் செய்யப்படும் விளம்பரம் குறித்து ஒரு தடையை விதித்திருக்கிறது. பஸ்களின் பின்புறம் இருக்கும் கண்ணாடி, பக்கவாட்டில் மேல்புறம் இருக்கும் கண்ணாடிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது. இதனால், பிற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது, விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் பஸ்களின் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதனாலும் பாதிப்புகள் ஏற்படலாம் என்று நீதிபதிகள் கருதியிருக்கின்றனர். அதனால், இத்தகைய விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர்.

நீதிமன்றத்தின் அவமதிப்புக்கு நான் ஆளாக விரும்பவில்லை. அதனால், இந்தத் தீர்ப்பை நான் விமர்சிக்கப் போவதில்லை.

அவுட் ஆஃப் ஹோம் மீடியா (Out Of Home media – OOH media) என்பது சமீப ஆண்டுகளில் உருவான புதிய விளம்பர துறை. பெரிய பெரிய வணிக வளாகங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் நிறுத்தங்கள், ஷாப்பிங் மால்கள், இன்னபிற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விளம்பரம் செய்வதற்கு உருவாகியுள்ள வாய்ப்பையே ஓஓஹெச் மூலம் பயன்படுத்துகின்றனர். இதைப் போன்ற இடங்களில் எல்சிடி ஸ்கிரீன்களை நிறுவி, அதில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளைக் காட்டுவதோடு, விளம்பரத்தையும் சேர்த்துக் காட்டி வருகின்றனர். இந்தியாவில் இந்தத் துறை விரைவாக வளர்ந்து வருகிறது.

இதனால், பலருக்கும் வருவாய் பெருகியிருக்கிறது. பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருள்களை ஓரளவுக்கு குறைவான கட்டணத்தில் விளம்பரம் செய்ய இந்த முறையைப் பின்பற்றி வருகின்றன. விளம்பர நிறுவனங்கள் எத்தனை இடங்களில் இந்த ஸ்கிரீன்களைப் பொருத்துகின்றனவோ, அவ்வளவு தூரம் அதற்கான வருவாயும் பெருகும். கடைக்காரர்களுக்கும் இதில் வருவாய் உண்டு. இடம் அவர்களுடையதுதானே.

இதேபோல், சிறிய முதலீட்டில், செலவில் அதிகபட்ச கவரேஜ், அதிகபட்ச ரீச் கிடைக்கக்கூடிய விளம்பர உத்திகளை பலரும் உருவாக்கி வருகிறார்கள். வழக்கமான பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களை விட, புதிய முறை விளம்பரங்கள் நல்ல பலனை அளிக்கின்றன. இதில் வேஸ்டேஜ் குறைவு. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அல்லது பேட்டையில் விளம்பரம் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட வயதுடையோரிடம் போய் சேரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு இந்த விளம்பர முறை உகந்தது. பல்வேறு காபி ஷாப்கள், பப்புகள் போன்ற இடங்களிலும் இத்தகைய ஸ்கிரீன்களை நான் பார்க்கிறேன். அங்கே காட்டப்படும் விளம்பரங்கள் வித்தியாசமாக இருக்கின்றன.

இதன் தொடர்ச்சிதான் பஸ்களில் விளம்பரம். எனக்குத் தெரிந்த ஒரு நிறுவனம், கேரள பஸ்களில் டிஜிட்டஸ் ஸ்கிரீன்களை நிறுவி வந்தது. பஸ்ஸின் உள்ளே, ஓட்டுநருக்குப் பின்புறம் மேலே இருக்கும் இடம் ஒரு முக்கிய இடம். அதேபோல், பஸ்ஸின் சீட்களுக்கு மேலே இரண்டு பக்கமும் விளம்பரம் செய்ய உகந்த இடங்கள். பின்புற கண்ணாடி, பக்கவாட்டு கண்ணாடி ஆகியவை இன்னும் பார்வைக்குத் தோதான இடங்கள். சொல்லப்போனால், அரசுக்கு வருவாய் ஏற்படுத்தித் தரும் இடங்கள். பல நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் பல பஸ்களில் செய்யப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரில், மலேசியாவில், இத்தகைய விளம்பரங்கள் 2000ஆம் ஆண்டுகளில் இருந்தே இருக்கிறது.

இதே அளவுக்கு விளம்பரங்களுக்கான இடத்தைக் கண்டுபிடிப்பதில் நம்ம ஊர் ஆள்கள் புத்திசாலிகள். பல ஆண்டுகள், தினத்தந்தியின் விளம்பரம், அதைக் கட்டி எடுத்துப் போகும் சைக்கிளின் முன் பார்க்கு கீழே அடிக்கப்பட்டிருக்கும். இது ஆதித்தனாரின் கண்டுபிடிப்பாக, முன்முயற்சியாக இருந்தால், நான் ஆச்சரியப்பட மாட்டேன். இன்னும் பல கிராமங்களில், இத்தகைய சைக்கிள்களைப் பார்க்கிறேன்.

நவீன வாழ்வில் அடுக்குமாடி குடியிருப்புகள் தோன்றியபின், இரண்டு முக்கிய பிரச்னைகள் தோன்றின. ஒன்று, குடியிருப்புகளின் வாசலில் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் பலரும் வாகனங்களை நிறுத்தத் தொடங்கினர். வீடுவீடாக பொருள்களை விற்க வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்தன. இரண்டையும் கட்டுப்படுத்த, ஒவ்வொரு அடுக்கக வாசலிலும் ‘நோ பார்க்கிங்’ பலகையையும், ‘விற்பனையாளர்கள் உள்ளே வரக்கூடாது’  என்ற பலகையையும் எழுதி வைக்க வேண்டி வந்தது. இதில் ஓர் விளம்பர வாய்ப்பு இருப்பதை யாரோ ஒரு புத்திசாலி கண்டுபிடித்தார். அவ்வளவுதான்.

அடுத்த நாள் காலையில் இருந்து ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நோ பார்க்கிங் இரும்புத் தகடு தொங்கத் தொடங்கியது. கூடவே வீட்டா – ஈஸியா இங்கிலீஷ் பேசுங்க, பூர்விகா மொபைல் ஸ்டோர், சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட்… இரும்புத் தகட்டில் முக்கால் பாகத்துக்கும் மேல் விளம்பரம். கீழே ஒரே ஒரு வரி, நோ பார்க்கிங். இது எவ்வளவு தூரம் மோசமானது என்றால், ஒரே கேட்டில் நான்கு ஐந்து ஆறு இரும்புத் தகடுகள் தொங்கத் தொடங்கின. எல்லாமே இங்கே வாகனத்தை நிற்காதே, ஓடிப்போ என்று பலவித வண்ணங்களில் கத்தத் தொடங்கிவிட்டன.

இன்னொரு புத்திசாலி இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்தார். அது சென்னை எங்கும் பரவியிருக்கும் நடமாடும் இஸ்திரி போடும் கடைகள். மூன்று பக்கங்களும் பெயிண்ட் அடித்து, தங்கள் விளம்பரத்தைச் செய்யலாம் என்று யாருக்கோ தோன்றியிருக்கிறது. ஒரு ஓரத்தில், அந்தந்த இஸ்திரி கடைகளின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். முதன் முதலில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது, அஜந்தா சுகந்த சுபாரி பாக்கு நிறுவனம். இப்போது, இதே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இருப்பது, சன் டைரக்ட் டிடிஎச் சேவை.

இன்றைய வாழ்க்கையில் விளம்பரம் என்பது தவிர்க்கவே முடியாத ஒருவித சேவை. விளம்பரதாரர்களுக்கு எப்படியேனும் மக்களைப் போய் சேரவேண்டும். பயனர்களுக்கு எப்படியேனும் தகவல்கள் கிடைக்கவேண்டும். பல சமயங்களில் இதுபோன்ற விளம்பரங்களில் இருந்துதான் முக்கிய சேவைகளை, அவர்களின் தொலைபேசி எண்களை, முகவரிகளை எல்லாம் நான் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். உதாரணமாக பொருள்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பும் மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸின் தகவல்களை இப்படிப்பட்ட விளம்பரங்களில் இருந்து பெற்றிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒருவர் தம் ஸ்கூலில் பிள்ளைகளுக்கு உற்சாகம் தரும் மேஜிக் ஷோ வைக்கவேண்டும் என்றார். உடனே, ஜேம்ஸ் 98000… என்று ஒரு எண்ணை எடுத்துப் போட்டேன். ஜேம்ஸ் சென்னையில் ஒரு சின்ன இடம் கூட பாக்கிவைக்காமல், கருப்பு மசியால் தன் பெயரையும் எண்ணையும் மட்டும் எழுதியே புகழ்பெற்றிருக்கிறார்.

நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. ஒரு சின்ன வாசலைத் திறந்து வைத்தால், அதில் ஒவ்வொருவராக உள்ளே நுழைய நமக்குத் தெரியாது. முட்டி மோதி, அடித்துப் பிடித்துக்கொண்டு, கதவையே உடைத்துக்கொண்டு, துவம்சம் செய்துவிட்டு உள்ளே போகத்தான் முற்படுவோம். மக்கள்தொகை அதிகம் உள்ள, வாய்ப்புகள் குறைவாக உள்ள ஜனநாயக நாட்டின் பிரச்னை இது. முன்பு, சென்னையில் ஹோர்டிங்குகள் வைக்க சென்னை கார்ப்பரேஷன் அனுமதி வழங்கியபோது, ஊரையே ஹோர்டிங்குகளால் மறைத்த புண்ணியவான்கள் நாம். ஒரு சுபயோக சுபதினத்தில் உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் அதற்கு மங்கலம் பாடியது. இப்போது பஸ் விளம்பரங்களுக்கு உயர்நீதி மன்றம் மங்கலம் பாடியிருக்கிறது.

இதில் விளம்பர நிறுவனங்கள் நஷ்டமடையப் போகின்றன என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த வகை விளம்பரங்களைச் செய்துதரும் கடைசிமட்ட வேலைக்காரர்கள் நிலை கவலைக்குரியது. அவர்கள் இப்போது முற்றிலும் வேலை இழந்துவிடுவார்கள். ஹோர்டிங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதை மட்டுமே செய்துவந்த டிஜிட்டல் பேனர் நிறுவனங்களும் அவர் தம் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்ததைப் பார்த்திருக்கிறேன். ஒருவிதக் கட்டுப்பாட்டோ இந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். பேராசை பெருநஷ்டம் என்பது மீண்டும் ஒருமுறையும் நிரூபணமாகிறது.

போராட்ட ஆயுதங்கள்
வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘நான் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்’ என்றார். அவருடைய பேச்சின் வேகம், கோபம் எல்லாம் நியாயமானவைதான். ‘உண்ணாவிரதம் இருந்து என்ன சாதிக்கப் போறீங்க?’ என்றேன். நான் அவருடைய கருத்தை ஆதரிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டுவிட்டார் போலும். அப்புறம் பேசவில்லை.

கடந்த சில மாதங்களாக, பல இடங்களில், ‘உண்ணாவிரத போராட்டத்தைப்’ பார்க்கிறேன். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர், சாலைப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் என்று பல தரப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதைப் பார்க்கிறேன். பொதுவாக இதெல்லாம் ஒரு நாள் உண்ணாவிரதங்கள். காலையில் தொடங்கி, மாலையில் முடிந்துவிடும் உண்ணாவிரதங்கள் இவை. இதிலேயே கொஞ்சம் வித்தியாசங்களும் உண்டு. தொடர் உண்ணாவிரதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்று கோரிக்கைகளின் தீவிரத்துக்கு ஏற்ப, உண்ணாவிரதங்களில் மாற்றம் ஏற்படும்.

தனிநபர் உண்ணாவிரதங்கள், கூட்டு உண்ணாவிரதங்கள் என்று காரணங்களுக்கு ஏற்ப, நபர்களின் எண்ணிக்கையும் மாறுபடும்.

இதேபோல், என் அப்பா வேலை செய்த காலத்தில், அவருடைய அலுவலக வாசலில், வாயில் கூட்டம், கோஷம் எழுப்பும் போராட்டம், தர்ணா என்றெல்லாம் செய்வார்கள். ஒருவர் மைக் முன்னே நின்றுகொண்டு தங்கள் கோரிக்கைகளைக் கோஷங்களாக எழுதிவைத்துக்கொண்டு வாசிக்க, கூட்டத்தினர் அதனை உரத்த குரலில் வலியுறுத்தவேண்டும்.

உள்ளிருப்பு போராட்டம் என்ற முறையையும் ஒரு முறை தெரிந்துகொண்டேன். பணியாளர்கள் ஆலைகளுக்குள், அலுவலகங்களுள் இருப்பார்கள். ஆனால், வேலை செய்ய மாட்டார்கள். இதேபோல், உற்பத்தியை மந்தப்படுத்துவது ஒரு போராட்டம். வேலையே நடக்காத மாதிரி இருக்கும். முக்கிய அதிகாரிகளை கெய்ரோ செய்வது இன்னொரு போராட்ட உத்தி. பேரணி நடத்துவது, அதன் இறுதியில் சம்பந்தப்பட்டவர்களிடம் போய், கோரிக்கை மனு கொடுப்பது என்பதெல்லாம் மிகவும் பழக்கமான போராட்ட உத்திகள்.

ஜப்பானில், ஏதோ ஒரு ஷு தயாரிப்பு நிறுவனத்தில், அவர்கள் செய்த போராட்டம் சுவாரசியமாக இருந்தது. இரண்டு காலணிகளைத் தயாரிப்பதற்கு பதில், ஒரு காலுக்கான காலணியை மட்டும் தயாரித்துக்கொண்டே இருந்தார்களாம்.

நம்ம ஊரில், ஒரு குழுவினர் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, ‘உண்ணும்விரதப் போராட்டம்’ என்று எதிர்க்குழுவினர் நடத்தியதைப் பார்த்திருக்கிறேன். ஒரு சில சமயங்கள், போராட்டம் தீவிரம் அடைந்து, கோவையில் உள்ள பிரிக்கால் நிறுவனத்தில் நடந்தது போல், வன்முறையிலும் உயிரிழப்பிலும் போய்கூட முடியலாம். அல்லது மொத்த உற்பத்தியையே பாதிக்கும் அளவு, ஸ்டிரைக் போராட்டம் வெடிக்கலாம்.

எனக்குப் போராட்ட உத்திகள், முறைகள் மேல் எப்போதும் சந்தேகம் உண்டு. முதலில், தங்கள் கருத்துகளை, கோரிக்கைகளை நிறுவனத்திடமோ அரசாங்கத்திடமோ தெரிவித்திருப்பார்கள். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பாராமுகமாக இருக்கும்போது, அல்லது போதுமான கவனம் கொடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்றாதபோது, போராட்டங்கள் வெடிக்கின்றன. எந்தப் போராட்ட வடிவத்தை எடுத்துக்கொள்வது என்பது சூழ்நிலையைப் பொறுத்தும் கூட்டு மனநிலையைப் பொறுத்தும் மேற்கொள்ளப்படும் முடிவு என்று நினைக்கிறேன்.

பல தனியார் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன. ஒரு கோரிக்கை, ஒரு மனு என்று வந்தவுடனே, அதைக் கவனித்து, உரியவர்களைக் கூப்பிட்டுப் பேசி, குறைகளைக் களைந்து அல்லது களைவதற்கான உறுதியைக் கொடுத்து, நம்பிக்கையை ஏற்படுத்தி அனுப்புவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். போராட்டம் என்ற வடிவத்துக்கு போவதற்கு முன்பே, மனுக்கள், நிர்வாகத்தினரின், அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. அப்படி நடக்காத போதுதான், வேறு வேறு வகைப் போராட்டங்கள் தொடங்கப்படுகின்றன.

ஸ்டிரைக் வரை போய்விட்டால், உற்பத்தியும் லாபமும் பாதிக்கப்படும் என்பதைத் தனி

யார் நிறுவனங்கள் புரிந்துகொண்டு இருப்பதே இதற்குக் காரணம்.

போராட்டம் என்பது ஒருவகை வலியுறுத்தல். பணியாளர்களின் வலி அதிகமாகும்போது, அது உரியவர்களின் கவனத்தில் பதியாதபோது, வலியுறுத்தல் அவசியமாகிறது. ஆனால், இன்று நமக்குத் தெரிந்த எந்தப் போராட்ட வடிவமும் வலிமையானதாக இல்லை. பிரச்னை இங்கேதான்.

எல்லா போராட்ட வடிவங்களும் எல்லோருக்கும் பழக்கமாகிவிட்டது. அதை எப்படிக் கையாளவேண்டும், அடக்க வேண்டும், வழிக்குக்கொண்டு வரவேண்டும், உறுதியிழக்கச் செய்யவேண்டும் என்று தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். முரட்டுத்தனம் தோன்றிவிட்டது. ‘அதிகபட்சம் என்னாகப் போகுது. சாகப் போறான். சாவட்டுமே’ என்ற முரட்டுத்தனம். இல்லை குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு போய் வண்டியில் ஏற்றி, சிறைக்குள் தள்ளிவிடுவார்கள்.

மிரட்டல் ஒரு உபாயம். இன்னொரு உபாயம், போராட்டத்தைக் கலகலக்க வைக்க, உள்ளேயே குழுக்களை உருவாக்கி, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது.

இன்றைக்கு ஒருவனோ ஒரு குழுவோ தாம் வலியுறுத்தும் கோரிக்கைக்காகத் தம்மை வருத்திக்கொள்கிறார்கள், அதற்காகச் சாப்பிடாமல் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் புத்திசாலித்தனமில்லாத செயலாகப் பார்க்கிறார்கள். போராட்டங்களைப் பற்றிய அனுதாபமோ, அரவணைப்போ, அனுசரணையோ யாருக்கும் கிடையாது. நீ தேவையில்லாமல் என் வழியில் குறுக்கிடுகிறாய், என் அலுவலக நேரத்தை வீணாக்குகிறாய், என்னைப் பணிசெய்யவிடாமல் தடுக்கிறாய் என்பது இன்றைய மனிதர்களின் மனநிலை.

உன் நிறுவனம், உன் அரசாங்கம் உனக்கு உரிய சலுகைகளை, வசதிகளைச் செய்யவில்லை என்றால், அது உனக்கும் உனது நிர்வாகத்துக்கும் உள்ள பிரச்னையே அன்றி, அதை எடுத்துக்கொண்டு எதற்குத் தெருவுக்கு வருகிறாய்? சாலையை மறிக்கிறாய்? பஸ்ஸை நிறுத்துகிறாய்? பஸ்ஸையையோ வேறு வாகங்களையோ கொளுத்துகிறாய்?

1991க்குப் பின், இந்தியப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்ட பின்பு, வணிகக் கலாசாரம் இங்கே முற்றிலும் மாறிவிட்டது. வணிக உறவுகள் இங்கே மாறிவிட்டன. புரிதல்களும் மாறிவிட்டன. மனித மனங்களும் மாறிவிட்டன. இதில், போராட்டம் என்பது பிற்போக்குத்தனமானது, உற்பத்திக்கு எதிரானது, வளர்ச்சிக்கு முரணானது என்ற சிந்தனைகள் ஆழ வேரூன்றிவிட்டன. உற்பத்தித் துறையைவிட, இந்தியப் பொருளாதாரம், சேவைத் துறைகளை அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கிவிட்டது. சேவையில், உடல் உழைப்பைவிட, ஞானம் முக்கியம். ஞானத்துக்கு ஏற்ப, இங்கே வசதி வாய்ப்புகள் பெருகத் தொடங்கிவிட்டன. அத்துறைகளில் இருப்பவர்கள், எல்லாவற்றையும் தமது சொந்த நோக்கில் இருந்தே மதிப்பீடு செய்கின்றனர். விளைவு, போராட்டங்கள் நியாயமற்றவையாக, நாகரிகமற்றவையாக, காட்டுமிராண்டித்தனமானவையாக, நாசூக்கற்றவையாகத் தோன்றுகின்றன.

இது ஒரு பிரச்னை. இன்னொரு பிரச்னை, போராட்ட வடிவங்கள் சார்ந்தே இருக்கிறது. நம்ம ஊரில் எல்லா போராட்ட வடிவங்களும் நீர்த்துப் போய்விட்டனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அடிப்படையில், யாரும் யாரையும் எப்படியும் வலியுறுத்தக் கூடாது என்ற மனநிலை வந்துவிட்டது. மேலும் சேவை சார்ந்த துறைகளில், சங்கங்களோ, அமைப்புகளோ வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. உனக்குக் குறை இருந்தால், நீ நேரடியாக மனித வளத்துறையிடம் போய் பேசிக்கொள். வீணாக, சங்கத்திடம் போய் முறையிட்டு, மூன்றாம் நபர் அல்லது அமைப்புகளின் தலையீட்டைக் கொண்டு வராதே. நான் பதில் சொல்ல மாட்டேன்.

அமைப்பு ரீதியாக ஒன்றுபடுவதே குற்றமாகவும் நாகரிகமற்ற பழமைத்தனமாகவும் இப்போது பார்க்கப்படுகிறது. அமைப்பாக சேராத போது, கூட்டு வலியுறுத்தல் சாத்தியம் இல்லை. பொதுவான நியாயம் என்று எதுவும் இல்லை. உனக்கு ஒரு நியாயம் வழங்கப்படலாம், அதுவே உன் சக பணியாளருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நீ வலியுறுத்த முடியாது. உன் வேலை முடிந்ததா? நீ வெளியே போ. அடுத்தவனை நான் பார்த்துக்கொள்கிறேன். பேசிக்கொள்கிறேன்.

மனிதர்களை, நிர்வாகமும் அரசாங்கமும் பிளவுபடுத்திவிட்டது. திறந்த பொருளாதாரத்தின் மிகப் பெரிய சாதனையும் இதுதான், கோர முகமும் இதுதான். என் பக்கத்தில் யாருமே இல்லை, நான் எப்போதும் தனியாள். நான் குரல் கொடுக்கலாம். என் கோரிக்கையை முன்வைக்கலாம். ஆனால், வலியுறுத்த முடியாது. தனிநபர்களை உள்ளுக்குள் சுருங்க வைத்துவிட்டது, திறந்த பொருளாதாரம்.

நிறைய சம்பளமும் வசதிகளும் வந்தபோது, நிர்வாகங்கள் பெரிய அட்சயப் பாத்திரங்களாகத் தெரிந்தன. அப்போது யாரும் இந்த தனிநபர் தன்மையைக் குறையாகக் கருதவில்லை. சென்ற ஒன்றரை ஆண்டுகால பொருளாதாரத் தேக்கம், தனிநபர்களாக இருப்பதின் கையறு நிலையை பலருக்கும் எடுத்துக்காட்டியிருக்கிறது. நாலு பேர் கூட சேர்ந்து இருப்பதின் அருமையை புரிய வைத்திருக்கிறது.

என் அளவில் நான் ஒரே ஒரு போராட்டத்தில்தான் கலந்துகொண்டு இருக்கிறேன். என் கல்லூரியில் நடைபெற்ற ஒரு மாதத்துக்கும் மேலான மாணவர்கள் ஸ்டிரைக்கில் நான் பங்குபெற்றேன். ஆனால், ஸ்டிரைக்கைவிடப் பேச்சுவார்த்தைதான் சரியான வழி என்பது என் எண்ணம். என்ன கோரிக்கையாக இருந்தாலும் பேசியே தீர்த்துக்கொள்ள முடியும்.

அமைதியைவிட அற்புத ஆயுதம் வேறில்லை.

அந்தரங்கம் புனிதமானது
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் சென்ற வாரம், தோழி ஒருத்தியை மீண்டும் சந்தித்தேன். பல ஆண்டுகள் கழித்து சந்தித்ததாலேயே, பேச நிறைய செய்திகள் இருந்தன. என் குடும்பம், அவரது குடும்பம் என்று கேள்விகளும் பதில்களும் தொடர்ந்துகொண்டு இருந்தன. ஏதோ ஒரு கட்டத்தில் பேச்சு சுவாரசியத்தில், ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’ என்று கேட்டுவிட்டேன். கேட்ட பின்னர், நாக்கை கடித்துக்கொண்டேன். கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. ‘A personal question’ என்ற தோழி, பதில் சொல்லாமல் நிறுத்தினார். என் தவறு புரிந்தது.

பொதுவாக யாரிடம் பேசினாலும் பொதுவான செய்திகளையே நான் பேசுவேன். தனிப்பட்ட கேள்விகள் எதையும் கேட்கத் தயங்குவேன். என்னதான் நான் பத்திரிகையாளனாக வளர்ந்திருந்தாலும், தனிப்பட்ட கேள்விகள் மிகவும் இன்சென்சிட்டிவ்வானவை. வாழ்க்கையில் பலருக்கும் பல சிக்கல்கள். சொல்ல முடியாத சிக்கல்கள். அதனைத் தீர்க்கத் தெரியாமல், அல்லது முடியாமல் பலர் தவிக்கிறார்கள். சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தச் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இந்தச் சிக்கல்கள் பற்றி கேள்விகள் கேட்கப்படுவதை பலர் விரும்புவதில்லை. விரும்புவதில்லை என்பதைவிட, அதைப் பற்றிப் பேசுவதையே தவிர்த்து வருகிறார்கள். அதை மறந்துவிடவே முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இடம் பொருள் ஏவல் தெரியாமல், சட்டென அது சம்பந்தமான ஒரு கேள்வி எழும்போது, எரிச்சலே மிஞ்சுகிறது.

இன்றைக்கு, பலர் தங்களுக்குள் பல வட்டங்களைப் போட்டு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். சமூகத்துக்கு என்று ஒரு வட்டம், நண்பர்களுக்கு என்று ஒரு வட்டம், உறவினர்களுக்கு என்று ஒரு வட்டம் (இதற்குள்ளேயே துணை வட்டங்கள் உண்டு). இதில் எந்தச் செய்தியை யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்ற தெளிவான அல்லது தெளிவற்ற பிரிவினைகள் உண்டு. என்னதான் ஒருவரை உங்களுக்குப் பல ஆண்டுகள் தெரிந்திருந்தாலும், அவர் உங்களிடம் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கலாம். இதில் தவறொன்றுமில்லை.

அடிமனத்தில் ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் பற்றி ஒரு கணக்கு, அளவீடு இருக்கிறது. அதை ஒட்டியே தன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் தைரியம் ஏற்படுகிறது. இன்றைய நவீன கால வாழ்க்கையில், மனத்தளவில் நெருக்கம் இருந்தாலும், எல்லா செய்திகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நியதி எதுவுமில்லை.

பலருக்கும் பல செய்திகள் தனிப்பட்ட செய்திகளாக இருக்கின்றன. தென்றல் இதழின் பதிப்பாளர் சி.கே.வெங்கட்ராமனிடம் ஒரு முறை பேசிக்கொண்டு இருந்தேன். பத்திரிகைத் தொழில் பற்றிய பேச்சில், அவர் நிறைய செய்திகளைச் சொல்லி வந்தார். சொல்லி முடித்தபிறகு, ‘இதையெல்லாம் நீங்கள் ஒரு அமெரிக்கனிடம் கேட்க முடியாது. இதெல்லாம் அவனைப் பொறுத்தவரை மிகப் பெரிய சொத்து. அவ்வளவு சீக்கிரத்தில், அவ்வளவு சுலபமாக அவன் உங்களிடம் இதெல்லாவற்றையும் சொல்ல மாட்டான். அமெரிக்கனிடம் போய் உன் நிறுவனத்தின் லாபம் என்ன என்று கேட்பது முடியவே முடியாது’ என்றார் அவர்.

வேலை இன்னொரு செண்டிசிட்டி விஷயம். வேலை என்பது ஒருவனுடைய பொருளாதார வளத்தையும் அதிகார உயரத்தையும் காட்டுவதாக, நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். விளைவு, பல வேலைகள் இந்த சட்டகங்களுக்கு அடைபடுவதில்லை. இன்றைக்கு வேலையின் தன்மையே மாறிப் போயிருக்கிறது என்பது பலருக்குப் புரியவில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை என்பது பழைய காலம். அதன் பிறகு, ஐடிக்காரர்களின் நடுராத்திரி வேலைகளும் இயல்பாகிப் போயின. இன்று பல தனிநபர்கள் சுயமான கண்சல்ட்டண்ட்டுகளாக இருக்கிறார்கள். எந்த ஒரு நிறுவனத்தோடும் இணையாமல், தம் திறமைகளின் பலத்தில் நிற்பவர்கள் இவர்கள். நம்ம ஊரில் ஏற்கெனவே ஆடிட்டர்களும் வக்கீல்களும் மருத்துவர்களும் இப்படிப்பட்ட கண்சல்டன்சி வேலையைத்தான் செய்கிறார்கள். ஆனாலும் இன்று வேறு படிப்பு படித்தவர்கள், ‘கண்சல்ட்டண்ட்டாக இருக்கிறேன்’ என்றால், சமூகத்தால் ஏளனமாகவே பார்க்கப்படுகிறார்கள்.

நமது சமூகத்தில், திருமணம் ஒரு பெரிய விஷயம். அது தொடர்பான கேள்விகள் பல சமயங்களில் மிகவும் சிக்கலாக இருக்கின்றன. ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, அவர்கள் யாரோடு வாழுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் பேசுவது, இன்னும் சிக்கல்களுக்கே வழிவகுக்கின்றன. மேலும் நம்ம ஊரில், இப்போது ஏகப்பட்ட திருமண முறிவுகள் நடக்கின்றன. அதை இயல்பாக எடுத்துக்கொண்டு, அடுத்த கட்டத்துக்குச் செல்வோர் உண்டு. அதைப் பற்றிப் பேசுவதைத் தவறாக எடுத்துக்கொள்ளாதோரும் உண்டு. ஆனால், இதற்கு நேர்மாறாக நடப்பதும் உண்டு.

இதேபோல் நிறைய மதமாற்றங்கள் நடக்கின்றன. தெரிந்தவர்கள் பலர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிப் போயிருக்கிறார்கள். ஏன் மாறினார்கள், என்ன காரணம் என்றெல்லாம் இதைக் கேட்க முடியாது. கேட்கவும் கூடாது. மேலும் அதைப் பற்றிப் பேசுவதை, நண்பர்கள் தவிர்க்கிறார்கள். மதம் மாறிப் போனாலும் ஒருவித குற்றவுணர்ச்சியோடுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் போய் சாதாரணமாகப் பேசினால் கூட, இந்த மாதிரிக் கேள்விகள் வந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

குழந்தைகளின் கல்வி, காதல், பெற்றோரை வைத்துப் பராமரிக்க முடியாதிருப்பது என்று எண்ணற்ற விஷயங்கள் சிக்கல்களாக இருக்கின்றன. இதனோடு, சமூக ரீதியான ஒரு வேல்யூ ஜட்ஜ்மெண்ட் வேறு சேர்ந்திருப்பதால், கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். கேள்விகளுக்கான ஒரு பொருளாகிவிட்டோமே என்பதே பலருக்கு அவஸ்தையாக இருக்கிறது. அதை எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள்.

இதில் கேட்பவர்களின் நோக்கம் என்பதும் உள்ளடங்கி இருக்கிறது. தெரியாமல், சாதாரணமாகக் கேட்பவர்கள் இயல்பானவர்கள். வேண்டுமென்றே இக்கட்டை உருவாக்க வேண்டும் என்று நினைத்து, குதர்க்கமாகக் கேட்பவர்கள் இன்னொரு புறம். யாரை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாது இருப்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கலே.

எல்லோருக்கும் ஏதோ ஒன்றிரண்டு விஷயங்கள் உணர்வு சார்ந்த விஷயங்களாக இருக்கின்றன. திறந்த புத்தகங்கள் என்று கருதிக்கொள்வோருக்கும் இந்த நிலைதான். அதைத் தொட்டவுடன், அவர்கள் டென்ஷனாகிறார்கள். எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் திணறிப்போய்விடுகிறார்கள். இப்படித் திணறடிப்பதில் பலருக்கு ஒரு வக்கிர சந்தோஷம் இருக்கிறது.

நம்முடைய தமிழ் சமூகத்தில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அடுத்தவனைப் பற்றி அத்தனையையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு அது. அரசல்புரசலாகவேனும் தகவல்களைச் சேகரித்துக்கொள்வது ஒரு வழக்கம் என்றால், ஒரு சிலர் நேரடியாக கேட்டு, இக்கட்டான சூழ்நிலையைத் தோற்றுவித்துவிடுவதில் சமர்த்தர்களாக இருக்கிறார்கள். இப்படிச் சேகரிக்கப்படும் பல தகவல்கள் வெற்றுத் தகவல்கள். எந்த வகையிலும் யாருக்கும் உபயோகமில்லாத தகவல்கள் அவை. இதை அரிப்பு என்று சொன்னால், கொஞ்சமும் மிகையில்லை.

என் வரையில் ஒன்றைக் கண்டிருக்கிறேன். தனிப்பட்ட தகவல்கள் எதையும் கேட்காமல், தெரிந்துகொள்ளாமல் பல ஆண்டுகள் நண்பர்களாக இருக்க முடியும். பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம்? ஆனால், இப்படிக் கேட்காமல் இருப்பது என்பது ஒரு பழக்கம். முதலில் வாயைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்புறம் மெல்ல மெல்ல மனத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை மனத்தில் ஆழ வேரூன்றிவிட்டால், அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைக்கும் ஆர்வம் முற்றிலும் குறைந்துவிடும்.

அந்தரங்கம் புனிதமானது. அதைச் சீண்டிப் பார்ப்பதால், வலி மட்டுமே மிஞ்சும்.

’ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’
சென்ற ஞாயிறன்று, என்னுடைய அப்பாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டு, அப்படியே காஞ்சிபுரம் வந்தேன். வரதராஜரைச் சேவிக்க  கோவிலுக்குப் போனோம். தாயார் சன்னிதியில் கூட்டமில்லை. பெருமாள் சன்னிதியில் நல்ல கூட்டம். வரிசையில் நின்றுகொண்டோம். எனக்கு முன்னால், கர்நாடகத்தில் இருந்து வந்த யாத்ரிகர்கள் கூட்டம். எல்லோரும் முட்டிக்கொண்டு நின்றார்கள். என் பின்னே நீண்ட வரிசை. அங்கே ஒரு முதிய தம்பதிகள் தம் பிள்ளையோடும் மருகளோடும வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் தள்ளி, கைக்குழந்தையோடு ஒரு வடக்கத்திய பெண். வெயிலுக்கு மறைப்பாக தன் தலைப்பைக் குழந்தைக்குப் போர்த்தியிருந்தார். கூட்டம் நகரவில்லை.

பார்த்துக்கொண்டு இருந்தபோதே, என் பின்னால், ஒரு ஆணும் பெண்ணும் வரிசையில் வராமல் சட்டென வந்து நடுவே நின்றுகொண்டுவிட்டார்கள்.

‘லைன் போய் நில்லுங்களேம்மா’

‘இதுதான் லைனு’ அந்தப் பெண் பதில் சொன்னார்.

‘இத்தனை பேர் நிக்கறாங்களே.. நீங்க நடுவுல வந்து நிக்கறீங்க..’

‘லைன்லதான் வரோம்.’

‘எங்க வறீங்க.. பார்த்துகிட்டுதானே இருக்கேன். பின்னாடி பாருங்க. எத்தனை வயசானவரு நிக்கறாரு. நடுவுல வந்து நின்னா என்ன அர்த்த்ம்மா?’

‘ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’

‘நீங்கதானே நடுவுல வந்து நிக்கறீங்க. உங்களதானே கேக்கணும்.’

‘இவங்கள்ளாமே வாய தெறக்கல..’

’பின்னாடி இருக்கறவங்க கேக்கலங்கறதுக்காக, நான் கேக்கக் கூடாதா? வரிசையில போய் நில்லும்மா.’

‘உங்களுக்கு அப்புறம்தானே நிக்கறேன். நீங்க ஏன் சிலுத்துக்கறீங்க..நீங்க சாமி கும்புட்டு போங்க.’

எங்கே நான் சண்டையில் இறங்கிவிடுவேனோ என்று என் அப்பாவுக்குப் பயம். கையைத் தள்ளிக்கொண்டே இருக்கிறார். அதற்குள் மேலே இருந்த கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நான் நகரத் தொடங்கினேன். நடுவில் புகுந்த அந்தப் பெண்ணும் ஆணும் கொஞ்சம் கூட கூச்சமின்றி, படியேறிக்கொண்டு இருந்தனர்.

என்ன மனநிலை இது? கோவில் என்று இல்லை. எல்லா இடங்களிலும் எல்லா வரிசைகளிலும் இப்படிப்பட்ட ஓரிருவரைப் பார்க்கிறேன். அடுத்தவரைப் பற்றிய கரிசனமோ, நெறிமுறை பற்றிய எண்ணமோ துளியும் இல்லாதவர்கள். தாங்கள் வந்த வேலை உடனடியாக ஆகவேண்டும். தன் நேரம் முக்கியமானது. அடுத்தவர் நேரம் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

பாஸ்போர்ட் அலுவலத்திலும் இதே போன்ற அனுபவம் எனக்கு உண்டு. விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு, பணம் கட்டும் இடம். எனக்கு முன்னும் பின்னும் வரிசை. சட்டென ஒரு தாயும் மகளும் முன்னே கவுண்ட்டரிடம் போய், யார் பெயர்களையோ சொல்லிக்கொண்டு நிற்க ஆரம்பித்தார்கள். சட்டென கூட்டம் முழுவதும் குரலெழுப்ப ஆரம்பிக்க, கவுண்ட்டர் பின்னே பணம் வாங்கும் இடத்தில் இருந்தவர், வரிசையில் நின்று கட்டும்படி அப்பெண்ணிடம் சொல்லிவிட்டார். அந்த அம்மையாருக்கு பெருத்த அவமானம் போல் என்னவோ.

இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை? ஏன் முண்டியடித்துக்கொண்டு போய் தன் பங்கு சலுகையை அபகரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்? அடிப்படையில் ஓர் அச்ச உணர்வு இருக்கிறது. தான் விடப்படலாம், தனக்குக் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பாதுகாப்பின்மை மனத்துக்குள் இருக்கிறது.

அடுத்த கட்டம், தனக்கு உரியது தனக்குக் கிடைக்கும் என்றாலும் அதை உடனடியாகப் பெற்றுவிட வேண்டும் என்ற தவிப்பு பலருக்கு இருக்கிறது. ஜெயலலிதா அரசு நடக்கும்போது, வடசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி உங்களுக்கு நினைவு இருக்கும். விடிகாலை முதல் மக்கள் வெள்ளம் காத்திருக்க, கதவு திறந்து வெள்ள நிவாரணப் பொருள்களைத் தருவதற்குள், பெரும் தள்ளுமுள்ளு. எண்ணற்றோர் அதில் இறந்துபோயினர்.இதேபோல், கலைஞர் அரசில், வெள்ள நிவாரண நிதி வழங்கும் இடங்களில் பெரும் கூட்டம் காத்திருக்கும். ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ளும் வேகம், மூர்க்கம் எப்போதும் இருக்கும்.

பணம், பொருள், சலுகைகள் என்று வரும்போது, படித்த படிப்போ, நாகரிகமோ, பண்பாடோ யாருக்கும் ஞாபகத்தில் வருவதில்லை. அடுத்தவர்களைப் பற்றிய எண்ணம் துளியும் வருவதில்லை. ஏழை எளியவர்கள், வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லாதோர்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. முன்பெல்லாம், அமெரிக்கத் தூதரகம் முன்னே நிற்கும் வரிசையில் இரவு முதலே நின்று இடம்பிடித்துத் தருவதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்ததை நான் அறிவேன். அப்படி இடம் பிடித்துத் தருவதற்கு பணம் தரவேண்டும்.

வரிசையில் நிற்பது பலருக்கு இம்சையாக இருக்கிறது. அது அவர்களின் சுயகெளரவத்தைச் சீண்டுவதாக இருக்கிறது. தங்களைப் பற்றி அவர்கள் வளர்த்துக்கொண்ட பிம்பத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. தம் கற்பனைகளில் தாமே ராஜாவாக இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு, யதார்த்தத்தில் வரிசையில் நிற்பது, சட்டென காலுக்குக் கீழே இருக்கும் உலகத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இதை எப்படியேனும் உதற வேண்டும். எப்படியேனும் முன்னே முண்டியடித்துக்கொண்டு போய்விட வேண்டும். இது சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமில்லை, சுயகெளரவ ரணத்தைச் சொறிந்துவிட்டுக்கொள்ளவும் தேவை.

வரிசை என்பது மனத்தால் வளர்ந்த சமூகம் பின்பற்றும் ஒரு பண்பாடு. மக்கள் குடியரசில் வரிசைக்கு முக்கிய இடமுண்டு. அது ஒரு நெறி. சுய ஒழுக்கம்.

ஏழை எளியவர்களுக்கு, வரிசை ஒரு கட்டுப்பாடாகத் தெரிகிறது. தாம் அடையவேண்டியவற்றைத் தள்ளிப்போடும் ஒரு தடையாக, வரிசை முறை இருக்கிறது. வரிசைமுறையில் ஊழல் நடக்கலாம். தமக்குச் சேரவேண்டியது வேறொருவருக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். தம் உரிமையை எப்படியேனும் பெற்றுவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வரிசை பெரிய இம்சையாக இருக்கிறது.

படித்தவர்களுக்கோ வரிசை, கெளரவக் குறைச்சலாக இருக்கிறது.

இன்னொரு வகையில் பார்த்தால், வரிசைமுறை இங்கே திணிக்கப்படுகிறது. வலியுறுத்தப்படுகிறது. காரணம், இந்தியாவில் டிமாண்ட் அதிகம். சப்ளை குறைவு. வரிசையில் வருவது ஓரளவுக்கு சமூக ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும்.

வரிசைமுறையை மக்கள் தாமாக, மனம் உவந்து ஏற்கும் வழிமுறையாக மாறவேண்டும். அது எப்போது சாத்தியம்? சப்ளை அதிகமாகும்போதுதான் அது சாத்தியம். ஒளிவுமறைவு இல்லாதபோதுதான் அது சாத்தியம். அக்கவுண்டபிளிட்டி இருக்கும்போதுதான் அது சாத்தியம். அதைத்தான் சுபிட்சம் என்று சொல்கிறார்கள். வளமான நாடு என்று அப்போதுதான் அதற்குப் பெயர்.

எனக்கு அந்தப் பெண்ணோடு சண்டை போட்டது, ரொம்ப நேரம் வருத்தமாக இருந்தது. ஏன் வீணாக நொந்துகொண்டோம்? ’ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’ என்று அந்தப் பெண் கேட்டது நியாயமாகத் தோன்றியது. சமூகம் முழுக்கவே, வரிசையைப் பின்பற்ற முடியாத பிரச்னை இருக்கும்போது, அந்தம்மாவை மட்டும் கேட்பானேன். தெரியவில்லை. இப்படிக் கேட்டால், உள்ளே தூங்கிக்கொண்டு இருக்கும் நியாய உணர்வு கொஞ்சமாவது தலைதூக்காதா என்ற நப்பாசைதான்.

படியேறி மேலே வரதர் சன்னிதி அருகே போகும்போது பார்த்தேன். அந்தப் பெண்ணும் ஆணும், முதிய தம்பதியரை முன்னே விட்டுவிட்டு, அவர்களுக்குப் பின்னே நின்றுகொண்டிருந்தார்கள். இப்போது வரதர்மேல் என் கவனம் குவியத் தொடங்கியது.