கல்வி

அருகிப் போன ஆர்வம்

Posted in கல்வி, சமூகம், மாணவர்கள் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

அருட்செல்வர் நா. மகாலிங்கம் தலைமையிலான இராமலிங்கர் பணி மன்றம் ஆண்டுதோறும் தேவார மூவர் இசை விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2009), 17ஆவது ஆண்டு விழா. நவம்பர் 27 முதல் நவம்பர் 30 வரை சென்னை நாரத கான சபாச் சிற்றரங்கத்தில் நான்கு நாளும் இசைக் கச்சேரிகள், பேருரைகள், ஆய்வுரைகள், ஹரிகதை, நாட்டியம் எல்லாம் இனிதே நடைபெற்றன. நிறைவு விழாவுக்கு, சென்னை பலகலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் திருவாசகம் தலைமையேற்றுப் பேசினார்.

அப்போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அப்ளைடு தமிழ்’ என்ற புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதைப் பற்றித் தெரிவித்தார். அப்ளைடு தமிழில் ஐம்பது சதவிகிதம் வரை தமிழும், மிச்சமிருக்கும் ஐம்பது சதவிகிதத்துக்கு அக்கவுண்டன்சி, கம்பியூட்டர் எல்லாம் சொல்லித் தரப்படும். அதன் மூலம், தமிழ்மொழியை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு சுலபத்தில் கிடைக்கும் என்றார் திருவாசகம்.

முதலில் இது புது திட்டம் இல்லை. ஏற்கெனவே, க.ப.அறவாணன் இதை இலயோலா கல்லூரியில் அறிமுகப்படுத்தினார். மூன்றே ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை முற்றிலும் குறைந்துபோய், இந்தக் கோர்ஸையே நிறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு நல்ல விஷயம் நடந்துகொண்டு இருக்கிறது. மக்கள் மனத்தில் தெளிவு பிறந்துகொண்டு இருக்கிறது. அதில் எதற்கு எல்லோரும் போய் தலையை நீட்டி தன் பங்குக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய மாணவர்கள் எந்தப் படிப்பு படித்தால் வேலை கிடைக்குமோ அதை மட்டுமே படிக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, படிப்பு என்பது வேலைக்கு மட்டும்தான். அதில் இருந்து கிடைக்கும் ஞானம் என்பதெல்லாம் வேலைக்கும், அதில் கிடைக்கக்கூடிய முன்னேற்றத்துக்கும் உதவுவதாக இருந்தால்தான், அதைப் படிக்கவே செய்கிறார்கள். அப்படி முன்னேற்றம் தராத படிப்பின் பக்கம் அவர்கள் தலைவைத்தே படுப்பதில்லை.

பல கல்லூரிகளில், பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஹிஸ்டரி) போன்ற படிப்புகள் எல்லாம் ஈயோட்டுகின்றன. மாணவர்கள் சேர வராததனால், அந்தப் படிப்புகளையே மூடிவிடலாமா என்று பல்கலைக்கழகத்தைக் கேட்கின்றன கல்லூரிகள். அல்லது ஒரு சில கல்லூரிகளில், அந்தப் படிப்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று, மிக மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை அங்கே சேர்த்துக்கொள்ளுவார்கள். விரும்பி, ஆசையாக வந்து படிக்கக்கூடிய ஒன்றிரண்டு மாணவர்கள் இருக்கவும் செய்யலாம். மொழிப்பாடத்தை முக்கியமாக கருதும் ஒரு சில பெற்றோர்கள் வேண்டுமானால், தம் பிள்ளைகளை இந்தப் படிப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

இந்தியா போன்ற வறுமை மிகுந்த நாட்டில், ஒவ்வொருவரும் வேலை செய்தே தம் வாழ்க்கையை நடத்தவேண்டிய தேவை இருக்கும் நாட்டில், மொழிப் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பது என்பது கொஞ்சம் ஆடம்பரமான ஆசைதான். நமக்குத் தேவை ஸ்கில் பேஸ்டு எடுகேஷன். தொழில் சார்ந்த படிப்பு மிக முக்கியம். பி.ஏ, எம்.ஏ., மட்டுமல்ல பி.எஸ்சி., எம்.எஸ்சி. கூட ஓரளவுக்கு உபயோகமற்ற படிப்புதான்.

மேலும் தமிழ்நாட்டில், ஐம்பது, அறுபது ஆண்டுகாலமாக, தமிழ், தமிழர் என்று பேசிப் பேசியே அரசியல் வளர்த்தாயிற்று. அதனால், தமிழ் மொழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து அரசுக்கு கடும் நெருக்கடி. அரசினால் மட்டும் எவ்வளவுதான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்?

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த தாட்சர், தனது பதவிக் காலத்தில், ஆங்கிலம் படித்த பேராசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை எல்லாம் நீக்கினார் என்று சொல்லப்படுவதுண்டு. பிரிட்டனில் இதுதான் நிலைமை.

அப்படி இருக்கும்போது, படிக்கக் கூடிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும்தான் இங்கே முடிவெடுக்கவேண்டியவர்கள். அவர்கள் மொழிப் பாடத்தை விலக்கி வைக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போது மீண்டும் நான் மொழிப் பாடத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி, அப்ளைடு தமிழ் என்றெல்லாம் அறிமுகப்படுத்துவது தேவையான வேலையாகத் தோன்றவில்லை.

மக்கள் மத்தியில் இல்லாத ஆர்வத்தை, அருகிப் போன ஆர்வத்தை எப்படி ஒரு பல்கலைக்கழகத்தால் தூண்டிவிட முடியும்? சாத்தியமே இல்லை.

இப்போதும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (வைணவம்), எம்.ஏ (சைவம்), எம்.ஏ (ஜெயினம்) என்றெல்லாம் படிப்புகள், அதை நடத்தும் துறைகள் இருக்கின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் அதில் போய் சேர்ந்து பயின்று தேர்ச்சி பெற்று வருகின்றனர். நான் அப்ளைடு வைணவம், அப்ளைடு சைவம் சொல்லிக்கொடுக்கிறேன் என்று யாரும் சொல்கிறார்களா என்ன?

மொழியைப் பற்றிய படிப்பு என்பது ஸ்காலர்லியான படிப்பு. அது ஆய்வு நோக்குடையதாக இருக்க முடியும். அல்லது, இண்டர் டிசிப்பிளினரியாக இருக்க முடியும். மொழியைப் படித்துவிட்டேன் என்பதற்காகவே அந்த மாநில அரசு வேலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் அபத்தம்.

ஆர்வம் வேறு, வருமானம் வேறு. ஆர்வமே வருமானமும் தந்தால் நல்லதுதான். அதுதான் அதிகபட்ச மகிழ்ச்சி தருவது. ஆனால், இரண்டும் எப்போதும் எதிர் எதிர் துருவங்கள். இணைய வாய்ப்பே இல்லை என்பது பலருடைய வாழ்க்கை அனுபவம். உண்மையை, யதார்த்தத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.

அவையத்து முந்தியிருப்பச் செயல்

Posted in கல்வி, மாணவர்கள் on October 14th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

எல்லா அப்பாக்களுக்கும் உள்ள அதே கவலைதான் எனக்கும். என் பெண் எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். இன்னும் நான்கு ஆண்டுகளில் பள்ளி வாழ்க்கை முடிந்துவிடும். கல்லூரியில் அவளை என்ன படிக்க வைக்கவேண்டும்? கல்வித் துறை பற்றியும் அதில் வரும் புதுப் படிப்புகள் பற்றியும் ஓரளவுக்கு நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன், வருகிறேன். இதுதான் வருங்காலத்தில் முக்கியப் படிப்பாக இருக்கப் போகிறது என்று என்னால் ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டவும் முடியும். ஆனால், இதெல்லாம் என் பெண்ணுக்குப் பிடிக்கவேண்டுமே?

ஆனால், வீட்டுக்குள் இப்போதே பிரஷர் ஆரம்பித்துவிட்டது. ஐஐடியில் சேர எழுதப்படும் ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் தேர்வு பெற, உடனே பயிற்சிக்கு அனுப்பு. தி.நகரில் ஆனந்த் என்று ஒரு ஆசிரியர் இருக்கிறார். சூப்பர் மேன். அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ஐஐடிக்களில் கால்வைப்பது உறுதி. ஐஐடி இல்லையென்றாலும் பரவாயில்லை, எப்படியாவது பொறியியல் படிக்க வைத்துவிடுங்கள். கம்பியூட்டர் துறைதான் சாலச் சிறந்தது. என்னதான் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு உலகமெங்கும் கம்பியூட்டர் துறை வேலைவாய்ப்புகள் குறைந்துபோனாலும், இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு அந்தத் துறைதான் கோலோச்சப் போகிறது.

எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு உடன்பாடு இல்லை. சரி, அவளையே கேட்போம். அவளுக்கு என்ன தோன்றுகிறது என்று தெரிந்துகொள்வோம் என்று கேட்டேன். விவசாயம் என்றாள் அவள்.

சரி, நல்ல தேர்வுதான். உலகம் உள்ளளவும் உணவுத் தேவை இருந்துகொண்டுதான் இருக்கப் போகிறது. விவசாயப் படிப்பு அந்தத் திசையில் நல்ல முன்னேற்றம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.

இன்னொரு நாள் என்னிடம் வந்தாள்.

‘டாக்டர் சுதா, டாக்டர் ராஜா எல்லாம் எப்படி டாக்டரானங்க?’
‘டாக்டருக்குப் படிச்சுதாம்மா.’
‘மெடிசின் ஒரு நோபிள் ஜாப் இல்ல. நிறைய கத்துக்கலாம் இல்ல.’

டாக்டர் சுதா சேஷய்யனும் டாக்டர் ராஜா வெங்கடேஷும் எங்கள் குடும்ப நண்பர்கள். அவர்களைப் பார்த்து எழுந்த பாதிப்பு இது என்று புரிந்துகொண்டேன்.

வேறொரு நாள் பேசும்போது, என் நீண்ட நாள் ஆசையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஏ (பப்ளிஷிங்) படிப்பை எடுத்துப் படி என்றேன். அதற்கு ஏற்ப, முதலில் ஹைதராபாத்தில் உள்ள செண்ட்ரல் இண்ஸ்டிடியூட்டில் ஆங்கிலம் மொழிப்பாடத்தைப் படி என்றேன். இன்று இல்லாவிட்டாலும், இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் எப்படியும் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி, நான் மறைவதற்குள் ரூபர்ட் முர்டாக் மாதிரி ஒரு மீடியா சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிமுடிக்காமல் ஓயமாட்டேன், அதை நிர்வகிக்க நீ உதவலாம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவள் பார்த்த பார்வையே என்னை வாயை மூடிக்கொள்ள வைத்துவிட்டது!

அப்போதுதான், சைக்கோமெட்ரிக் டெஸ்ட் பற்றித் தெரிந்துகொண்டேன். முக்கால் மணி நேர டெஸ்டில், அதில் பங்கேற்கும் மாணவ மாணவியரின் ஆர்வங்களை ஓரளவுக்குப் படித்துவிட முடியும். அதைக் கொண்டு அவர்கள் தேர்வு செய்யவேண்டிய பாடங்களைப் பற்றி முடிவு எடுக்கலாம். எட்டாம் வகுப்பில் இந்த டெஸ்ட்டை எடுக்கலாம என்பவர்கள் இருக்கிறார்கள். இல்லை பத்தாம் வகுப்பு முடிக்கட்டும், அப்புறம் டெஸ்ட் எடுப்பது சரியாக இருக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள். எட்டாம் வகுப்புக்குள் ஆர்வங்கள் அவ்வளவு தூரம் கிரிஸ்டலைஸ் ஆகாது என்றார்கள். என் குழப்பம் தீரவில்லை. இன்னும் அதிகம்தான் ஆயிற்று.

இதன் பின்னர் இன்னும் இரண்டு மூன்று விஷயங்களை எதேச்சையாகத் தெரிந்துகொண்டேன். என் நண்பர் ஒருவர், மும்பையில் மூத்த அனுபவம் வாய்ந்த டாக்டர். சென்ற முறை அவளது மகளைப் பற்றி பேச்சு வந்தது. அவள் நன்கு பாடக்கூடியவள். ‘அவளும் டாக்டராக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவள் பாடகி ஆவேன் என்று சொல்லிவிட்டாள்’ என்றார் டாக்டர் நண்பர். மும்பையில் ஒரு கல்லூரியில் ஏதோ ஒரு இளங்கலை வகுப்பில் சேர்ந்துகொண்டு, முழுநேரமும் தன் நண்பர்களோடு ஒரு ராக் பாண்ட் உருவாக்கி, பாடிக்கொண்டு இருக்கிறாள்.

இன்னொரு நண்பரின் மகன், எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யில் எம்.பி.ஏ. முடித்தார். நல்ல மார்க். ரேங்க். இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டேன். ‘மகாராஷ்ட்ராவில் கிராமம் கிராமமாக சுத்திக்கொண்டு இருக்கிறான். சோஷியல் ஆந்தரபர்னர் ஆகிவிட்டான். கிராமங்களில் போய் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான விஷயங்களைச் செய்வேன் என்கிறான்’ என்றார் நண்பர்.

தோழி ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘என் மகன் நல்ல ரேங்க்கில் பொறியியல் முடித்துவிட்டான். வேலையும் தேடிக்கொண்டு இருக்கிறான். அதற்குள் அவனுக்கு மாடலிங் செய்து பார்க்கவும் ஆசை. அவனுடைய போட்டோக்களைப் பார்க்கவும்’ என்று எழுதியிருந்தார்.

பலருக்குப் படிப்பு வேறாகவும் ஆர்வம் வேறாகவும் இருக்கிறது. படிப்பைப் பின்பற்றி கிடைக்கும் வேலையில் சேர்ந்துகொள்கிறவர்கள், எந்நேரமும் ஆர்வத்தைக் கைவிடாதவர்களாக வாழ்க்கை முழுவதும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆர்வத்தைப் பின்பற்றிச் செல்பவர்களில் எத்தனை பேர் பொருளாதார ரீதியாக நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுகிறார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இதையும் மீறி ஒரு விஷயம் இருக்கிறது. அது ஜெனரேஷன் ஒய்.யின் குணாதிசயம். அவர்களைக் கவர்வது உடனடி புகழும் அபரிமிதமான பணமும்தான். இரண்டும் ஒருசேரக் கிடைப்பது மீடியா துறையில்தான் என்பதால், என்ன படிப்பு படித்தவர்களும், கடைசியில் மீடியாவின் மாயைக்குள் வந்து சேர்கிறார்கள். அதுவும் சினிமா என்ற கவர்ச்சிக்குள் வந்து சேருபவர்களில் இன்று படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே கிடையாது. இரண்டு பேரும் ஒரே மாதிரிதான் படம் எடுக்கிறார்கள்! குத்துப் பாட்டைப் படிக்காதவன் கொச்சையாக எடுக்கிறான். படித்தவன், இன்னும் லைட்டிங் ஜாலம், காமிரா மாற்றங்கள் எல்லாம் செய்து நேர்த்தியாக எடுக்கிறான்!! இறுதி நோக்கம், ‘மக்களின் பேராதரவை’ப் பெறுவதுதான்!!!

சிங்கப்பூரில் குழந்தைகள் வளரும் அரும்பு பருவத்திலேயே அவர்களின் ஆர்வங்களை இனங்கண்டு, அத்துறையில் மேலே வளர ஏதுவான வகுப்புகள், தேர்வுகள், படிப்புகள் ஆகியவற்றில் ஈடுபடுத்தி, நல்ல குடிமக்களை உருவாக்குவதில் அரசாங்கமே ஈடுபடுகிறது என்கிறார்கள். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.

எது முடிகிறதோ இல்லையோ, ஒன்றை மட்டும் நான் செய்யக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். எந்த வகையிலும் நான் என் கருத்துகளை, ஆர்வங்களை, எதிர்பார்ப்புகளையோ என் மகள் மேல் திணித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நான் என்றுமே நிறைவு செய்ய முடிந்ததில்லை. என் மகள் மட்டும் அதை எப்படிச் செய்வாள்?

சமச்சீர் கல்வி: இரண்டு பைசா கருத்துகள்!

Posted in கல்வி on September 9th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகமாகவிருக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்குப் புரிந்த வரையில், இந்தத் திட்டம் உயரிய நோக்கோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு குழந்தைகளைப் பெற்றவனாக, இதன் சாதகங்கள் நன்றாகத் தெரிகின்றன. கல்வியாளர்களும் இன்னபிற அறிஞர்களும் இணைந்து இதற்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். என் இரண்டு பைசா கருத்துகளையும் இங்கே எழுதி வைத்துவிடுகிறேன்!
1. ஒரு வகையில் இது சக்கரத்தை, மீண்டும் ஆரம்ப இடத்துக்கே கொண்டு போய் வைக்கும் முயற்சி. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, கல்வி என்றால் பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளைத்தான் நாடியிருப்பார்கள். நாம் போற்றும் பல்வேறு துறை அறிஞர்களும் இதுபோன்ற அரசு பள்ளிகளின் தயாரிப்புகளே. அது அப்படியே தொடரவில்லை. தொடர்ந்திருக்கலாம். ஆனால், தனிமனித தேவைகள், ஆர்வங்கள், உயர்வு பேணும் நோக்கு ஆகியவை வேறு வகையான கல்வி முறைகளுக்கும் பாடத்திட்டங்களுக்கும் அதைச் சொல்லித்தரும் பள்ளிகளுக்கும் இட்டுச் சென்றிருக்கின்றன. இதை மொத்தமாக
‘நவீன காலத் தேவைகள்’ என்று சொல்லலாம். இதில் ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் உண்டு என்பதையும் மனத்தில் வாங்கிக்கொள்ளுவோம்.
நவீன காலத் தேவைகளை நிறைவு செய்ய அரசுப் பள்ளிகளால் முடியவில்லை. ஒரு இடைவெளி ஏற்படுகிறது. அந்த இடைவெளியில்தான் தனியார் பள்ளிகளின் உதயம் ஆரம்பிக்கிறது. விதவிதமான பாடத்திட்டங்களின் தேவையும் ஆரம்பிக்கிறது. இதே சமயத்தில்தான் இன்னொரு விஷயமும் நடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா மொத்தமாகவே, மெல்ல மெல்ல தனியார் நிறுவனங்களை ஆதரிக்கும், அவர்களின் செயல்களைப் பேணி வளர்க்கும் மனநிலைக்கு வந்திருக்கிறோம். அரசும் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. Free Enterprise என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.
இந்த நிலையில், மீண்டும் நானே எல்லா புத்தகங்களையும் வெளியிடுகிறேன், ஒரேவிதமான பாடத்திட்டத்தையும் கல்வித்தரத்தையும் கொண்டு வருகிறேன் என்று ஒரு மாநில அரசு செய்ய முன்வருவது, நமது நாட்டின் வளர்ச்சிக் கருத்துக்கே / நோக்கத்துக்கே உவப்பானது அல்ல. பல்வேறு கல்வி போர்டுகளும் அதைப் பின்பற்றும் பள்ளிகளும் பெரிய கல்வி வியாபாரிகள் ஆகிவிட்டார்கள், பணம் பறிக்கவே அவர்கள் முனைகிறார்கள், அவர்கள் மாணவர்களுக்கு எந்த ஒரு வேல்யூவும் கொண்டு சேர்க்கவில்லை என்று ஒரு அரசுக்குத் தோன்றினால், அது அந்த போர்டுகளையும் பள்ளிகளையும் நெறிமுறைப்படுத்தி, தரத்தை உயர்த்த வேண்டுமே அன்றி, நானே எல்லாவற்றையும் செய்கிறேன் என்று எடுத்துக்கொள்வது எவ்வளவு தூரம் சரி? அப்படி வகுக்கப்படும் நெறிமுறைகளையும் மீறி, கல்வி வியாபாரிகள் திருந்தவில்லை என்றால், கல்வியின் தரம் உயரவில்லை என்றால், அவர்களுடைய பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
மாறாக, ஒரேவிதமான பாடத்திட்டம், ஒரே விதமான நூல்கள் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றே இப்போது எனக்குத் தெரிய வருகிறது. இது ஒருவகையில் சமப்படுத்துதல் (Moderation) . ஒரு அரசு இப்படிப்பட்ட சமப்படுத்துதலில் இறங்கவேண்டுமா? இதில் உள்ள பாதகங்களைப் பின்னர் பார்ப்போம். அரசே இப்படி நூல்களை தயாரித்துக் கொடுப்பதற்குப் பதில், இன்னொரு வகையில் இதைச் செய்யலாம். தமிழக அரசு, ஏற்கெனவே மெட்ரிகுலேஷனில் செய்தது போல், ஒவ்வொரு வகுப்பிலும் இன்ன இன்ன பாடங்களைச் சொல்லித் தர வேண்டும், அந்தக் கல்வியாண்டு முடியும் போது, ஒரு மாணவனுக்கு இதெல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் ஒரு விரிவான ப்ளூப்ரிண்ட்டை வெளியிட்டு இருக்கவேண்டும். இந்த ப்ளூப்ரிண்ட்டை ஒட்டி எந்தப் பதிப்பகமும் நூல்களை வெளியிடலாம், அதில் சிறந்தவற்றை/ தமக்குப் பொருத்தமானவற்றை, ஒவ்வொரு பள்ளியும் தேர்வு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டிருக்க வேண்டும்.
அறிவியலில் வெப்பம் என்று ஒரு பாடம் இருக்கிறது. அதையே பத்து விதமாக எழுத முடியும். நிறைய உதாரணங்களோடு எழுத முடியும். நிறைய செய்முறைகளோடு எழுத முடியும். விரிவாக எழுத முடியும். சுருங்கச் சொல்ல முடியும். எப்படி வேண்டுமானாலும் அதே வெப்பத்தை எழுதலாம். எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை, அதைத் தேர்வு செய்யும் பள்ளிகளிடம் விட்டுவிடவேண்டும். தங்கள் மாணவர்கள் வரும் பின்னணி, அவர்கள் காக்க விரும்பும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் சரியான நூலை அவர்கள் தேர்வு செய்துகொள்ளுவார்கள். மாநிலம் முழுவதும் ஒரே நூல்தான் பயன்படுத்தப்படும் என்றால், அது எப்படி இருக்கும்? எல்லா தர மாணவர்களின் தேவைகளையும் அந்தப் புத்தகம் நிறைவு செய்ய முடியுமா? தெரியவில்லை.
2 எப்போதும் ஒரு பிரச்னைக்கு ஒரு தீர்வு வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளும் இருக்கலாம். இங்கே சமச்சீர் கல்வி என்பதை ஒரு தீர்வாக பார்ப்போமானால், அது எந்தப் பிரச்னைக்கான தீர்வு?
அ) தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி போர்டுகளை ஒன்றாக்குவதற்கான தீர்வா?
ஆ) தமிழக அரசுப் பள்ளிக் கல்வியில் இருக்கும் பாடங்களின் தரத்தை உயர்த்துவதற்கான தீர்வா?
இ) அல்லது ‘நவீன காலத் தேவைகள்’ என்று நான் மேலே தெரிவித்த ஒன்றுக்கான தீர்வா?
கல்வி போர்டுகளை ஒன்றாக்குவதற்கான தீர்வு என்றால், அது முழுவதும் நிர்வாக சமாச்சாரம். அரசு, போர்டுகளை ஒன்றாக்கிவிடலாம். ஆனால், கல்வித் தரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அப்படியே தான் இருக்கப் போகின்றன. மேலும் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகள் என்னாகும்? அவர்கள் சி.பி.எஸ்.சி. கல்வி முறைக்கு மாற ஆரம்பித்துவிடுவார்கள். அல்லது ஐ.சி.எஸ்.சி.க்கு மாறிவிடுவார்கள்.
அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களின் தரத்தை, கல்வித் தரத்தை உயர்த்துவதுதான் திட்டம் என்றால், அதை இப்போதே செய்யலாமே. அதற்கு எதற்கு மற்ற பாடத்திட்டங்களையும் இதனோடு சேர்த்து சமப்படுத்த வேண்டும்? சமப்படுத்துவதில்தான் உண்மையான பிரச்னை இருக்கிறது. ஒவ்வொரு போர்டின் பாடத்திட்டமும் சமூகத்தில் இருக்கும் ஒருசில அடுக்குகளைச் சேர்ந்தவர்களின் தேவைகளை நிறைவு செய்ய முனைகிறது. ஓரளவுக்குப் படித்த பெற்றோர்களை உடைய குழந்தைகள் ஆங்கிலோ-இந்திய அல்லது மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு வருகிறார்கள். இங்கே படிப்பைச் சொல்லிக்கொடுக்க பெற்றோரின் பங்களிப்பும் கொஞ்சம் உண்டு. சிறு நகரங்களிலோ கிராமங்களிலோ படிக்கும் ஒரு மாணவன் முழுமையாக அவனது ஆசிரியரையே சார்ந்திருக்கிறான். பெற்றோர்கள் படித்தவர்களாகவோ, சொல்லிக்கொடுக்கத் தெரிந்தவர்களாகவோ பெரும்பாலும் இருப்பதில்லை.
இப்போது இவர்கள் இருவருக்கும் ஒரே பாடப்புத்தகம் பயன்படுத்தப்படும் என்றால், கற்றலிலும் புரிந்துகொள்ளுதலிலும் ஆரோக்கியமற்ற இடைவெளி ஏற்படும். பாடப்புத்தகங்களை எழுதும்போது, தயாரிக்கும்போது, ஸ்பெக்ட்ரத்தின் இரண்டு முனைகளில் இருப்போருக்குத் தக்க எழுதுவது சாத்தியமா? தெரியவில்லை.
மூன்றாவது கேள்விக்கான தீர்வாகவும் இதைப் பார்க்க முடியவில்லை. புத்தகங்கள் மாறுவதனால், ஆங்கில மோகமும் அமெரிக்க ஆர்வமும் மேட்டிமைத்தனமும் எந்த வகையில் மாறும்? மேலும் இதையெல்லாம் ஒரு பிரச்னையாக இனியும் பார்க்க வேண்டுமா? நாம் இயல்பாகவே ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூக அமைப்பைக் கொண்டவர்கள். ஆங்கில மோகம், நாம் உள்வாங்கிச் செறித்துக்கொண்டுவிட்ட அம்சம். அமெரிக்கா எல்லோருக்குமான கனவு தேசம். இதுதான் ஏழை எளியவர்கள், லோயர் மிடில், மிடில் கிளாஸின் கனவுகள், ஏக்கங்கள். அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு பிரச்னையே இல்லை.
இந்த நிலையில் சமச்சீர் கல்வியும் புதிய புத்தகங்களும் எந்த வகையில் ‘நவீன காலத் தேவைகளு’க்கு முகம் கொடுக்கப் போகின்றன? தெரியவில்லை. ‘ஜல்லிக்கட்டு’ போல் நம்மோடு இயல்பாகி, கலந்துவிட்ட ‘நவீன கால தேவை’யை, பிரச்னை என்று நினைத்துக்கொண்டு தீர்வு காண முயற்சிக்கிறோமோ? அதுவும் தெரியவில்லை.
அரசுடைய கவனம் கல்வியின் தரத்தை உயர்த்துவதில்தான் இருக்கவேண்டுமே ஒழிய, சமப்படுத்துவதில் இருப்பதில் அர்த்தமில்லை.

சீட் வாங்கலையோ சீட்டு

Posted in கல்வி, பொது, மாணவர்கள் on September 2nd, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
இந்த ஆண்டு (2009) தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில், ஒரு மாதம் நடைபெற்று, 12 ஆகஸ்டு அன்று முடிவு பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதெல்லாம் அரசு கோட்டா என்று சொல்லப்படும் சீட்டுகளுக்கு நடந்த கலந்தாய்வு. 35% சீட்டுகளை, கல்லூரிகளை நடத்தும் நிர்வாகங்களே மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பிக்கொண்டன. இந்தக் கலந்தாய்வின் முடிவில் கிட்டத்தட்ட 30,199 சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிப் போயின. தமிழ்நாட்டில், 440 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் 6 கல்லூரிகளில் 10 % சீட்கள் கூட நிரம்பவில்லை. 20% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 26, 30% சீட்டுகள் நிரம்பிய கல்லூரிகள் எண்ணிக்கை 34.
சீட்டுகள் நிரம்பாமல் போனதைப் பற்றி பல கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். ஓவர் சப்ளையே முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. 1980களில் பொறியியல் படிக்க வந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்லூரிகள் இல்லாமல் இருந்தன. அப்போதுதான், கர்நாடகத்தைப் பின்பற்றி, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை எம்.ஜி.ஆர். அரசு வழங்கியது. 1990 களில் நடந்த முக்கிய மாற்றங்களில் ஒன்று சந்தைப் பொருளாதாரம், தனியார் பங்கேற்பு, திறந்த வணிகம். கல்வி, குறிப்பாக பொறியியல்/ மருத்துவக் கல்வி, இந்தச் சந்தைப் பொருளாதாரத்தின் கருத்தை அடியொற்றி உருவாயின.
இன்றைக்கு இவ்வளவு சீட்டுகள் நிரப்பப்படாமல் தேங்கிக் கிடப்பதைப் பார்க்கும்போது, சந்தைப் பொருளாதாரத்தின் மகிமை புரிபடத் தொடங்குகிறது. அப்படியென்ன பெரிய மகிமையைக் கண்டுவீட்டீர்கள் என்று கேட்பவர்களுக்கு, இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு இதைச் சொன்னால் இன்னும் தெளிவாக விளங்கும்.
தூரதர்ஷன் மட்டுமே ஒரு காலத்தில் தொலைக்காட்சி என்று இருந்தபோது, அவர்கள் போட்டதுதான் நிகழ்ச்சிகள், அவர்கள் காண்பித்ததுதான் திரைப்படங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள். வெரைட்டி என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. பார்வையாளர்கள், பயனர்கள் தேர்வு என்பது இருந்ததே இல்லை. தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வருகை இந்த நிலையில் பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. ஒரு சில நொடிகளில், உங்கள் நிகழ்ச்சி பார்வையாளர்களைக் கவரவில்லை என்றால், ரிமோட் முனையில் சானல் தாவல் நிச்சயம். இன்றைக்கு நிலைமையைப் பாருங்கள், சின்னதும் பெரியதுமாக ஜெனரல் எண்டர்டெயின்மெண்ட் சானல்களே ஒரு பத்து சானல்கள் இருக்கின்றன. விருப்பமானதைத் தேர்வு செய்யலாம். வேண்டியதைத் தேர்வு செய்யலாம். வேண்டாம் என்றால், அந்தச் சேனலை ஒரே தாவலில் தாண்டி அடுத்ததுக்கு ஓடிப் போய்விடலாம். திறந்த பொருளாதாரம், பயனர்கள் கையில் தேர்வை, சுதந்திரத்தை எடுத்துக் கொடுத்தது.
இப்போது ஒவ்வொரு நிகழ்ச்சியும் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த, ஆதாவது, பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கின்றன. இதைத்தான் நான் மகிமை என்று சொன்னேன்.
பொறியியல் கல்லூரியிலும் இதுதான் இப்போது ஏற்பட்டுவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி கல்வியை சேவையாக நினைக்கவில்லையோ, அதேபோல், எந்தப் பெற்றோரும் கல்விச்சாலைகளைக் கோவில்களாகக் கருதுவதில்லை. அது ஓர் வணிகம். கல்வி என்ற சேவை அங்கே விற்பனை செய்யப்படுகிறது. வேலைவாய்ப்பை உடனடியாக வழங்கும், அதிகம் பொருளீட்டக் கூடியப் படிப்புகளைச் சொல்லித் தரும் சேவையை இந்தச் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்கின்றன.
கல்வி ஏன் விற்பனைப் பொருளாயிற்று, அதன் புனிதம் எங்கே போச்சு என்றெல்லாம் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அபத்தம். எதுவும் இலவசம் இல்லை, பொருள் நோக்கமற்ற சேவை என்று ஒன்று சாத்தியமே இல்லை. இதுதான் நவீன வாழ்வின் யதார்த்தம். கல்வி வணிகம்தான் என்பதை மனத்தில் வாங்கிக்கொண்டுவிட்டால் (பல பெற்றோர்கள் வாங்கிக்கொண்டுவிட்டார்கள்), இனி கேட்கவேண்டிய கேள்விகளே வேறு.
1. ஒழுங்காக உன்னால் சொல்லித் தர முடியுமா? அதற்குத் தகுதியான ஆசிரியர்களை நீ வைத்திருக்கிறாயா? போதிய ஆய்வுச் சாலைகள் அமைத்திருக்கிறாயா?
2. உன்னால், சர்வதேச அளவில் என் பையனை/பெண்ணைத் தகுதியுள்ளவாராக ஆக்க முடியுமா?
3. சர்வதேச அங்கீகாரம், அக்கிரெடிஷன், அசோசியேஷன் ஏதும் உண்டா?
4. உன்னிடம் பெரிய நிறுவனங்கள் ஆளெடுக்க வருகிறார்களா? கடந்த ஆண்டுகளில் படித்தவர்களில் எத்தனை பேரை இப்படி நீ வேலையில் அமர்த்த உதவியிருக்கிறாய்? என்னென்ன பெரிய நிறுவனங்களின் உன் மாணவர்கள் வேலை செய்கிறார்கள்? எந்த மட்டத்தில் அவர்கள் வேலை செய்கிறார்கள்?
5. கேம்பஸில் என்ன மினிமம் சம்பளம் தர ஒத்துக்கொள்கிறார்கள்? மேக்சிமம்?
அதாவது என் பையனை/பெண்ணை எவ்வளவு திறமையானவனாக அல்ல, எவ்வளவு எம்ப்ளாயபிளாக மாற்றி நீ அனுப்புவாய் என்பதுதான் முக்கியமான கேள்வி.
மேற்படிப்பு பற்றி நமக்கு இருக்கும் எண்ணங்கள் முற்றிலும் மாறிப்போன பின்பு, அதாவது அதன் உடனடி யுடிலிட்டிதான் முக்கியம், நீண்டகால ஞானம் அல்ல, என்றான பின்பு, பெற்றோர்கள், பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளை அணுகும்விதமும் மாறிப்போய்விட்டது. அதனால், பொறியியல் கல்லூரிகள் கொடுக்கும் விளம்பரங்களின் தன்மையும் மாறிப் போய்விட்டன.
இன்றைக்குப் பெற்றோர்களும் பிள்ளைகளும் மேலே உள்ள கேள்விகளைத்தான் கேட்கிறார்கள். சரியான பதில் வராத கல்லூரிகள்தான் இன்று நடுத்தெருவில் நிற்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய ஊர்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாகவோ, 90% மேலோ இருக்கின்றன. வேறு பல ஊர்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை 50% கூட இல்லை.
இந்த ஆண்டு மட்டும் 90 புதிய சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அத்தனை இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில்தான் தேக்கம். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் செய்த ஒரு தவறுதான், இந்தத் தேக்கத்துக்குக் காரணம். பொதுவாக, கட்டடம் மற்றும் ஒரு சில குறிப்பிட்ட வசதிகளை மட்டும் செய்துவிட்டு, கல்லூரிகளைத் தொடங்கும் போக்கு இருக்கிறது. மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு உயர, மெல்ல மெல்ல மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும் தகுதியான ஆசிரியர்களையும் கொண்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருக்கும் உலகப் பொருளாதாரத் தேக்கம், அதனால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, புதிய வேலைவாய்ப்பின்மை ஆகியவை, ஒரு சில குறிப்பிட்ட பொறியியல் படிப்புகளின் மேல் இருந்த மோகத்தை முற்றிலும் துடைத்தெறிந்துவிட்டன. விளைவு, வசதிகள் அற்ற பல கல்லூரிகளில் மாணவர்கள் சேரத் தயக்கம்.
மேலும், இன்று காலம் கடந்துவிட்டது. இன்று பொறியியல் கல்லூரி தொடங்கும் ஒருவர், இந்தச் சுயநிதிக் கல்லூரிகளிலேயே மிகச் சிறப்பாக இருக்கும் கல்லூரியோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, அங்கே கொடுக்கப்படும் அதிகபட்ச வசதிகளுக்கு இணையாக தானும் செய்ய வேண்டிய நிலைமை. அதாவது நதி ஓடிக்கொண்டு இருக்கிறது. அது சுற்றிச் சுழன்று ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஓடுகிறது. அதன் வேகத்தின் இடையே இறங்கும் ஓர் படகு தானும் அதற்கு இணையாக நகர வேண்டும். அங்கே போய் தள்ளாடினால், மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை.
திறந்த பொருளாதாரம், மதிப்பீடுகளில் தெளிவை உருவாக்கியிருக்கிறது. அதைக் கறாராகப் பெறவேண்டும் என்ற உறுதியைக் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட வேல்யூவைக் கொடுக்காத ஒன்றை சட்டென இடக்கையால் புறமொதுக்கிவிடவும் அது தயங்காது. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் இதுதான் நடக்க இருக்கிறது.
ஓட்டத்தோடு கலக்காத கல்லூரிகள் மெல்ல கரை ஒதுங்கவேண்டியதுதான். நடத்த முடியும் படிப்புகளை நடத்த வேண்டியது, முடியாதவற்றை மூடிவிட வேண்டியது. மொத்தமாக மூட வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தகுதியானவை மட்டுமே தங்கும்.