முந்தியிருப்பச் செயல் – ஹரிகிருஷ்ணன் கடிதம்
Posted in கடிதங்கள், நேசமுடன் on October 20th, 2009 by வெங்கடேஷ் – 1 Commentஎது முடிகிறதோ இல்லையோ, ஒன்றை மட்டும் நான் செய்யக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். எந்த வகையிலும் நான் என் கருத்துகளை, ஆர்வங்களை, எதிர்பார்ப்புகளையோ என் மகள் மேல் திணித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நான் என்றுமே நிறைவு செய்ய முடிந்ததில்லை. என் மகள் மட்டும் அதை எப்படிச் செய்வாள்?
))
முடியவே முடியாத காரியம் வெங்கடேஷ். நான் குடும்பத்தில் ஒரு non-interfering வகைப் பிராணி. மனைவிக்கு வந்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி நினைவூட்டுக் கடிதத்தைக்கூட பிரிக்க மாட்டேன். அவரவருக்கு வந்த கடிதத்தை அவரவர்தான் பிரிக்கவேண்டும் என்பது குடும்பத்துக்குப் பொதுவிதியாகவே போய்விட்டது.
ஆனால், ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பா ஒரு (குறைந்தபட்சமாகச் சொல்வதானால்) அதாரிடேடிவ் டிக்டேடர்தான். இருபது வயதைத் தாண்டும் வரையில் பிள்ளைக்கு அப்பா சூப்பர்வைசராகத்தான் தென்படுவார். உங்கள் புண்ணியம். பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறீர்கள். என்றென்றும் அப்பாவுக்குள் இருப்பவர்கள்.
பசங்க கதையே வேற. அதை உங்களிடம் சொல்லத் தேவையில்லை. நீங்களும் நானும் பசங்களா இருந்துதானே பெரியவங்களாகியிருக்கோம்! ‘எம்பிள்ளைக்கு நான் பரிபூரண சுதந்திரம் கொடு்த்திருக்கிறேன்’ என்றுதான் என் அப்பாவும் சொல்லிக் கொண்டிருந்தார். நானும் இப்போது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். சொல்வதில்லை. என் கருத்து, என் ஆர்வம் எல்லாம் என்வரையில்தான். நான் பிள்ளைகளை வற்புறத்துவதில்லை. ரெண்டு பசங்களும் பழந்தமிழ் இலக்கியம்னா என்ன என்றே தெரியாதவர்கள். அவரவருக்கு அவரவர் ஆர்வம் என்று நானும் தலையிடுவதில்லை. அப்பாவைப் பற்றிய பார்வை என்னவோ ஒரு பன்னிரண்டு-பதினைந்து தொடங்கி ஒரு முப்பது தாண்டும் வரையில் டமால் டுமலாகத்தான் இருக்கும். உண்டுதானே? ஆண்குழந்தையைப் பெற்றவன் பார்வையிலிருந்து கொஞ்சம் பாருங்க சார்!
அன்புடன்,
ஹரிகி.