இலக்கியம்

2009ல் வெளியான நாவல்கள்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 2 Comments

சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ள புதிய நாவல்களின் பட்டியல் இது. இப்பட்டியலில் குறுநாவல்கள் தொகுப்புகளையும் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். முடிந்தவரை எல்லா பதிப்பகங்களிலும் கேட்டுப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபட்டவை இருக்கலாம். கண்காட்சிக்கு வராத பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் நாவல்களை வெளியிட்டிருக்கலாம். நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த புதிய நாவல்களைத் தெரிவியுங்கள். இந்தப் பட்டியல் அப்போதுதான் நிறைவடையும்.

மேலும் இதில் ஒரு தேர்வு இருக்கிறது. அது என் ரசனையை ஒட்டிய தேர்வு. பிரபல எழுத்தாளர்களான ரமணி சந்திரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் (பலர் பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம்) ஆகியோர் நிச்சயம் புதிய நாவல்களை வெளியிட்டிருப்பார்கள். தொடர்கதைகளைப் புத்தகங்களாக வெளியிட்டிருப்பார்கள். இப்போது உட்கார்ந்து யோசிக்கும்போது, அதையும் வாங்கிச் சேர்த்துக்கொண்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. மீண்டும் ஒருமுறை புத்தகக் கண்காட்சி செல்லும்போது, இன்னொரு பட்டியலைத் தர முயற்சிக்கிறேன்.

2009ல் வெளியான நாவல்கள் என்று இப்பட்டியலைச் சொல்வதும் முழுமையாகாது. இப்பட்டியல் ஜனவரி 2010 புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியான நாவல்கள். 2009 நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்த நாவல்கள் வெளியாகியிருக்கும். ஒரு சில நேரடியாகப் புத்தகக் கண்காட்சிக்குத் தான் வருகின்றன. ஆண்டு தொடங்கியதில் இருந்து பல நாவல்கள் இடையில் வந்திருக்கலாம். ஒரு சில பதிப்பகங்கள் மாதம், ஆண்டு இரண்டு தகவல்களையும் இம்பிரிண்ட்டில் தருவார்கள். ஒரு சிலர் வெறும் ஆண்டு தருவார்கள். புத்தக வரிசை எண் என்றொரு முறையும் இங்கே பழக்கத்தில் இருக்கிறது.

ஆங்கில நூல்களில் ஒரு பழக்கம் உண்டு. பொதுவாக அக்டோபர் மாதத்துக்குப் பின் வெளியாகும் எந்த ஒரு புத்தகத்துக்கும் அடுத்து வரும் ஆண்டு ஜனவரியை வெளியீட்டு ஆண்டாகவும் மாதமாகவும் தருவார்கள்.

மொழிபெயர்ப்பு நாவல்களையும் நான் இப்பட்டியலில் சேர்க்கவில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்ட நாவல்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே இப்பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி முதல் தேதி அன்று, நான் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். தகவல்கள் திரட்டியபோது, கீழே உள்ள ஒரு சில நாவல்கள் அச்சாகிக் கடைகளுக்கு வந்திருக்கவில்லை. அப்புறம் வந்திருக்கலாம்.

1. காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா பதிப்பகம் – ரூ.40
2. கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம் – ரூ.50
3. குவியம் – ஜெயந்தி சங்கர் – ரூ.100
4. மலையகமல்லன் – தி.குழந்தைவேலு – காவ்யா – ரூ.80
5. என் உயிரே விட்டுக்கொடு – முத்தாலங்குறிச்சி காமராசு – காவ்யா – ரூ.90
6. அனல் காற்று – ஜெயமோகன் – தமிழினி – ரூ.90
7. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – தமிழினி – ரூ.230
8. நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி – ரூ. 220
9. தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி – ரூ.75
10. நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 120
11. மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ. 90
12. கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை பதிப்பகம் – ரூ.50
13. மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100
14. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
15. வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.220
16. அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை பதிப்பகம் – ரூ.100

கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்

Posted in இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகங்கள் on January 21st, 2010 by வெங்கடேஷ் – 1 Comment

ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா.

இந்த நாவல் என்னை மூன்று அம்சங்களில் மிகவும் கவர்ந்தது. ஒன்று இதன் உள்ளடக்கம். புதிய களம். துபாய் வந்துவிட்டு, துன்பப்பட்டு, திண்டாடி மீளும் இரண்டு பெண்கள்; இன்னொரு பெண் அங்கே வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், ஊர் திரும்புகிறார். துபாய் பற்றியும் அரபு தேசங்கள் பற்றியும் நம்மிடம் இருக்கும் மனச்சித்திரங்களை இந்த கதைத் தொடக்கமே மாற்றி அமைத்துவிடுகிறது. சிறையில் இருந்து ஒரு பெண் மீண்டும் இந்தியா திரும்ப அனுப்பப்படுகிறார். இன்னொரு பெண், ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு, பின் தப்பித்து, இந்தியா மீளுகிறாள். இதுவரை சொல்லப்படாத கதை. அதனாலே படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.

இரண்டு, நாவலை துபாய் ஏர்போர்ட்டில் தொடங்குபவர் அப்படியே இந்தியா வந்து அப்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறார். சட்டென பழைய நினைவுகளுக்குப் போய், பிளாஷ்பேக்கில் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாரோ என்று லேசாக பயந்தேன். பழைய சம்பவங்கள் கதையில் வராமல் இல்லை. ஆனால், அதை கதையின் ஓட்டத்தோடு மிக லாகவமாக இணைத்திருக்கிறார் உஷா.

மூன்றாவது, இஸ்லாமியத் தமிழைக் கையாண்டிருக்கும் திறன். முன்னுரையில் நாகூர் ரூமி, உஷாவின் மொழிப் பயன்பாட்டைப் பாராட்டியிருக்கிறார். அப்படியென்றால், மொழிப் பயன்பாடு சரியாக வந்திருக்கிறது என்றே அர்த்தம்.

என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.

குறைகள் இல்லையா? இருக்கின்றன. முதல் நாவல் எழுதியிருக்கிறார். பாராட்டுவது மட்டுமே நம் வேலை. ஏற்கெனவே கலைமகள், இந்த நாவலைப் பாராட்டி இருக்கிறது. இந்த நாவல், கலைமகள் கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. தகுதியான பாராட்டு.

கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம், எண்.57 – 63ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083. விலை ரூ.50

மாறும் மனச்சித்திரங்கள்

Posted in இலக்கியம், திரைப்படம் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

உரையாசிரியர் நிறைய பேர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் என்று பலர் முயன்று இருக்கிறார்கள். ஒரு மூலநூலுக்கு எப்படி இத்தனை பேர்கள் உரையெழுத முடியும் என்று யோசித்திருக்கிறேன். ஒவ்வொருத்தருடைய பார்வை, கோணம், நோக்கம் சார்ந்து உரைகள் மாற முடியும் என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன். திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையையும் மு.வ. எழுதிய உரையையும் கலைஞர் எழுதிய உரையையும் படித்துப் பார்த்தேன். ஒவ்வொருவரும் தாம் வந்த பின்னணி, சார்ந்திருக்கும் கருத்துகளை ஒட்டியே உரையெழுதியிருக்கிறார்கள்.

வெறுமனே பொருள் சொல்லும் திருக்குறள் உரைகள் நிறைய கிடைக்கின்றன. அதன் நோக்கம் வெறும் விளக்கம்தான். ஆனால், நோக்கமோ பின்னணியோ இதுபோன்ற உரைகளுக்குக் கிடையாது. உரை எழுதுவதிலேயே இப்படிப்பட்ட ஒரு பன்முகத்தன்மை இருக்கும்போது, மூலநூல்களுக்கு, படைப்புகளுக்கு எப்படிப்பட்ட பன்மைத்தன்மை இருக்கவேண்டும்?

உண்மையில் அச்சடித்த எழுத்து என்பது ஒரு எலும்புக்கூடு. அது ரத்தமும் உயிரும் பெறுவது வாசகர் மனத்தில். ஒரு எழுத்தாளன் எலும்புக்கூட்டை எவ்வளவு சிறப்பாக உருவாக்குகிறான் என்பதில் தேர்ச்சி பெற வேண்டும். நடை, உத்தி, மொழி எல்லாம் எலும்புக்கூட்டுக்கு வடிவம் கொடுக்கும் அம்சங்கள்.

வாசகன் படிக்கும்போது, ஒரு படைப்பு முழுமை பெறுகிறது. தேர்ந்த வாசகன், தொடர்ந்து படித்து வரும் வாசகன், வித்தியாசமான முறையில் எழுத்தாளனை மதிப்பிடுகிறான். எழுத்தாளனால், தன்னுள் எப்படிப்பட்ட எண்ண அலைகளை, கற்பனைச் சித்திரத்தை உருவாக்க முடிகிறது என்றே மதிப்பிடுகிறான். வாசகனின் அனுபவ உலகத்தை எழுத்தாளானால் தட்டி எழுப்ப முடியவேண்டும். அவனுக்குள் பொதிந்து இருக்கும் நினைவுகள், அறிந்த சம்பவங்கள், பார்த்திருக்கக்கூடிய நபர்கள் எல்லோரையும் எழுத்தாளனின் படைப்பு சுட்டிக் காட்ட வேண்டும்.

இப்படி எழுப்பக்கூடிய சித்திரமும் வாசகனுக்கு வாசகன் வேறுபடும். இருவேறு வாசகர்களுக்கு ஒரே சித்திரம் கிடைக்க வாய்ப்பில்லை. வாசகனின் அனுபவ உலகம் எவ்வளவு விரிவானதோ, அவ்வளவு விரிவானது படைப்பும். ஒரு படைப்பில் உள்ள வர்ணனைகள், சித்திரத்தை உருவாக்க உதவுபவை. சிந்தனை ஓட்டம், பாத்திரங்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவை.

ஆனால், எந்தக் காலத்திலும் எழுத்தாளன், நான் எழுதியதை என் வாசகர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. எழுத்தாளன் சொன்னதை அல்ல, வாசகன் தான் புரிந்துகொள்ள விரும்பியதையே புரிந்துகொண்டு இருக்கிறான்.

வாசகனின் மன சித்திரங்கள் காலவோட்டத்தில் மாறுதல் அடைந்துகொண்டே வருகின்றன. எத்தனையோ புறக்காரணிகள், அகச்சித்திரத்தை வடிவமைக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையிலும் அகச்சித்திரம் வேறு வேறாக இருக்கின்றன. ஆனால் ஒரு சில சரடுகள் தொடர்ந்து வருகின்றன. உதாரணமாக, இன்றைய தலைமுறை பெண்களும்,  எழுத்தாளர் லட்சுமியின் படைப்புகளைப் படிக்கின்றனர். நா. பார்த்தசாரதியைப் படிக்கின்றனர். பெண்ணைக் குறித்து இருக்கும் மனச்சித்திரம், லட்சியவாதத்தின் தேவையை உணரும் ஒரு தலைமுறைக்கு இருக்கும் மனச்சித்திரங்கள், இந்த எழுத்தாளர்களை இன்றும் ஏற்கத்தக்கவர்களாக ஆக்கியிருக்கிறது.

மனச்சித்திரங்களின் மாறுதல்களைத் திரைப்படங்களில் இன்னும் தெளிவாகப் பார்க்கலாம். ஒரு காலத்தில் சினிமாவில் அழுகை காட்சிகள் நிறைய இருக்கும். அப்புறம் அத்தகைய காட்சிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டன. இன்றைய இளைஞர்களுக்கு ஆட்டம் பாட்டம்தான் பிடித்திருக்கிறது. அவர்களுக்குச் சோக சுவை வேண்டாம் என்று சினிமாகாரர்கள் ஒதுக்கிவிட்டார்கள். சோகம் என்றால் தனிமை, வெறுப்பு, இருட்டு என்ற சூழல்களை மாற்றி, அதையும் இன்றைய சினிமா ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிட்டது. விஷ்ணுவர்த்தனின் ஒரு படத்தில் இதைப் பார்த்தேன்.

சமீப உதாரணம், வாரணம் ஆயிரம் படத்தில் வரும் பாடல், ‘நான் தேடி வந்த அஞ்சலை.’ சோகத்திலும் கும்மாளம் போடுகிறான் ஹீரோ. பழைய ரசிகர்களுக்கு இப்பாடல் ஆச்சரியம் அளிக்கலாம். ஆனால், இன்றைய ரசிகர்களின் மனச்சித்திரம் இது. அந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்.

இன்னொரு படம், இயக்குநர் ஜீவாவின்  ‘ உன்னாலே உன்னாலே.’ அதாவது எதையும் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆண் பெண் பழக்கம் உட்பட. தங்களைத் தாங்களே சுயஎள்ளல் செய்துகொண்ட படம், ‘சென்னை 28.’

மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும் மனச்சித்திரங்களே, நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. நாம் கெட்டித் தட்டிப் போகாமல் இருக்கவும் வாழ்க்கையை அனுபவிக்கவுமே மனச்சித்திரங்கள் உதவுகின்றன. படைப்புகள் இந்த மாற்றங்களைத் தொடர்ந்து பிரதிபலிக்கின்றன. நவீன இந்திய நாவலாசிரியர்களின் படைப்புகளில் இந்த மாறுதல்கள் நன்கு தெரிகின்றன. அத்வைதா கலா, சேத்தன் பகத் எல்லோரும் நவீன மனச்சித்திரங்களை தட்டி எழுப்புபவர்களாக இருக்கிறார்கள்.

ஜீ. முருகனின் ‘மரம்’ நாவல் இந்தத் திசையில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறது. எனக்கு அந்த நாவல் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால், முதல் முறையாக ஒரு தமிழ் நாவலில், இண்டர்நெட், கணினி, அதில் போர்னோகிராபியைச் சேமித்து வைப்பது, இணைய போர்னோ ஏற்படுத்தும் மனச்சிக்கல்கள் எல்லாம் மரம் நாவலில் பேசப்படுகின்றன. அது புதிதாக எனக்குத் தோன்றியது. இந்த விஷயங்கள் எல்லாம் முற்றிலும் இன்றைய காலகட்டத்தின் மனச்சித்திரங்கள்.

மற்றபடி இன்றைய சிறுகதைகளில், நாவல்களில் இன்றைய காலகட்டத்தின் மனச்சித்திரங்களை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

கறை

Posted in அனுபவம், இலக்கியம் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

சென்ற சனிக்கிழமை நான் தினப் பலனைப் பார்க்கவில்லை. வீண் அலைச்சல் என்று பலன் எழுதியிருக்கவேண்டும். ஒன்றுமே இல்லை. என் மகளின் ஸ்கூல் சட்டை, என்னுடைய ஒரு பேண்ட் ஆகியவற்றில், இன்னொரு சட்டையில் இருந்து மஞ்சள் வண்ணம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை அப்படியே போட்டுக்கொண்டு போக முடியாது. கறை பளிச்சென்று தெரியும்.

அன்று காலை இரண்டு துணிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ஸ்டைன்ஸ் அவே, பாண்ட் பாக்ஸ், புரோபஷ்னல், ஆபீசர்ஸ் லாண்டரி போன்ற பெயர்கள் என் மனத்தில் ஞாபகம் வந்தது. முதலில், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஸ்டைன்ஸ் அவே கடைக்குப் போனேன். கடையை இடம் மாற்றிவிட்டார்களாம். நீங்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் போய் கேளுங்கள் என்றார் பக்கத்துக்குக் கடையில் இருந்தவர்.

நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போய் தேட, அந்தக் கடை கிடைக்கவில்லை. உடனே எனக்கு, பட்டினப்பாக்கம் அருகே ஒரு பெரிய லாண்டரியைப் பார்த்த ஞாபகம் உண்டு. வண்டியை அங்கே ஓட்டிக்கொண்டு போக, கதவு திறந்து இருந்தது.

துணிகளை வெளியே எடுத்துப் போட, கறையைப் பார்த்த கடைக்காரர்,

‘சாரி சார். மஞ்சள் கறை போகாது. ஹைட்ரோ வாஷ்தான் போடணும். மருந்து போட்டா, அடிப்படை கலரே போயிடும். வெள்ளைத் துணின்னா செய்யலாம் சார். இது கலர் துணி.’
‘அப்ப கறை போக என்ன வழி?’
‘ஒண்ணும் இல்லை சார். அப்படியே போட்டுக்க வேண்டியதுதான்.’

எனக்கு லேசாக வருத்தம் வரத் தொடங்கிவிட்டது. ஒன்று என் மகளின் பள்ளிச் சீருடை. இன்னொன்று என்னுடைய பேண்ட். இரண்டுமே விலையுயர்ந்த ஆடைகள். என் வருத்தம் கடைக்காரருக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

‘ஆலா இருக்கா சார். ஆலா போட்டு ஊறவையுங்க. அப்புறம் கசக்குங்க. கொஞ்ச கொஞ்சமா போவும்’
‘ஓ’
‘இல்லன்னா, பாண்ட் பாக்ஸ் கடைக்குப் போங்க. அவங்க வெள்ளாவி வெச்சு தோய்ப்பாங்க. தோபி வாஷ்னு சொல்லுவாங்க. அதைச் செஞ்சு பாருங்கள். கறை போயிடும்.’

ஏதோ ஒரு பிடிமானம் கிடைத்ததே என்று வண்டியை மைலாப்பூர் பக்கம் விட்டேன். அங்கே கபாலீஸ்வரர் கோவில் பக்கத்தில் பாண்ட் பாக்ஸ் லாண்டரியைப் பார்த்த ஞாபகம். கோவிலையே இரண்டு முறைச் சுற்றி வந்திருப்பேன். யாருக்குமே கடை தெரியவில்லை. ஆட்டோகாரர்களால் கூட அடையாளம் சொல்ல முடியவில்லை. கடைசியில், கோவில் இருக்கும் தெருவின் முனையிலேயே கடை இருந்தது. பாண்ட் பாக்ஸ் போர்டுதான் இல்லை. லேசாக மழைவேறு பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது.

கடையருகே போய், என் துணிகளை எடுத்துப் போட்டேன்.

‘கறை போவாது சார்.’
‘பாண்ட்பாக்ஸ்ல போயிடும்னு சொன்னாங்களே சார்..தோபி வாஷ்னு ஒண்ணு சொன்னாங்க.’
‘நான் போவாதுங்கறேன். நீங்க போவுன்னு சொன்னா, நான் என்னா பண்றது? தோபி வாஷ்லெல்லாம் யார் செய்யறாங்க. அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு. எல்லாம் மெஷின்தான். கெமிக்கல்தான் சார் போடணும். கலர் முழுசா போயிடும். பரவாயில்லையா?’

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, ஜஸ்ட் டயல் சர்வீஸுக்குப் போன் செய்தேன். என் தேவையைச் சொல்ல, அடுத்த இரண்டாவது நிமிடம் இரண்டு மூன்று சலவைக்காரர்கள் போன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே பல்லவிதான். துணியின் அடிப்படை வண்ணமே போய்விடும். கறையை மட்டும் நீக்க முடியாது. என்ன சொல்கிறீர்கள்?

‘நல்ல துணி சார். கறை போகவே போகாதா?’
‘கறை பட்டுடுச்சே சார். கறை படாம இருக்கணும். கறையை மட்டும் நீக்க முடியாது சார்.’
‘வேற வழி என்ன சார்?’
‘கறையோடவே இருந்துடவேண்டியதுதான்.’

நான் பேச்சற்றுப் போனேன்.

அழியாப் புகழ் பெறும் இடங்கள்

Posted in அனுபவம், இலக்கியம், சமூகம் on November 25th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

பஸ்ஸில் போவதும் நடந்துபோவதும் எனக்குப் பிடித்த பழக்கங்கள். காரிலோ, டூவீலரிலோ போகும்போதும் எல்லாமே சரக்கென்று காணாமல் ஓடிப்போய்விடுகின்றன. எந்த ஒரு காட்சியும் கட்டடமும் பெயர்ப்பலகையும் மனத்தில் பதிவதில்லை. பெரும்பாலும் சாலைப் பெயர்களைக் கூடப் படிக்க முடிவதில்லை.

நடை அப்படி இல்லை. பஸ்ஸும் அப்படி இல்லை. எதையும் நிதானமாகப் பார்த்துக்கொண்டு போக, மனத்தில் வாங்கிக்கொள்ள உதவி செய்பவை இந்த இரண்டு முறைகள். மூன்று நான்கு பெரிய கடைகள் நடுவே மாட்டிக்கொண்டு இருக்கும் அற்புதமான உணவகங்களை, டீக் கடைகளை, கைவினைஞர்களின் கடைகளை இப்படித்தான் நான் கண்டுபிடித்திருக்கிறேன். ஒவ்வொரு சாலையும் நிறைய நிறைய மர்மங்களை ஒளித்துவைத்திருக்கிறது. சரித்திரங்களை ஒளித்து வைத்திருக்கிறது. மனிதர்களை ஒளித்துவைத்திருக்கிறது.

அம்மாவை இழந்த சின்ன வயதில், என் பெரும்பாலான நேரம் இப்படிப்பட்ட பயணங்களில் கழிந்திருக்கிறது. அப்போது வடசென்னையில் செளகார்பேட்டை என்று சொல்லப்படும் கொண்டித்தோப்பு, (கொண்டியம்பதி) தங்க சாலை அருகே வீடு. பள்ளி விட்ட பின்பும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலாற எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்துபோய்விடுவேன்.

புதிய தெருக்களைக் கண்டுபிடிப்பது, புதிய இடங்களை, புதிய கடைகளை கண்டிபிடிப்பது அப்போது ஏற்பட்ட பழக்கம்தான். அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முடிந்தபின்னர் என்ன செய்வது என்று தெரியாது. விடுமுறைகள் நாள்கள் நிறைய இருக்கும். எவ்வளவுதான் புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பது? முருகன் தியேட்டர் அருகே இருந்த அரசு நூலகத்தில் இருந்து இரண்டு மூன்று நூல்களை ஒரே நாளில் படித்த வேகம் ஞாபகம் உண்டு. படிக்க முடியாத போது, ஊர் சுற்றவது பழக்கம்.

பிளஸ் ஒன்னில் அப்பா, எனக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். பல ஆண்டுகள் சைக்கிள் என் கனவு வாகனம். அந்தப் பக்கம் தண்டையார்பேட்டை தாண்டி, சுங்கச்சாவடி, எண்ணூர் முதல், இந்தப் பக்கம் கிண்டி வரை சென்னை முழுவதையும் சைக்கிளிலேயே சுற்றித் திரிந்த வயது அது.

புதிய சாலை எப்போதும் எனக்கு ஒருவித மயக்கத்தைத் தரும். எல்லா சாலைகளும் ஏதேனும் ஒரு பெரிய சாலையிலோ இன்னொரு சிறிய சந்திலோ போய் முடிவுபெறும். வடசென்னையில் ஏராளமான முட்டுச் சந்துகள் உண்டு. சாலை முடிந்துபோய்விடும். மீண்டும் திரும்பி, அடுத்த சாலையில் சைக்கிள் ஓட்டுவேன்.

இராயபுரம், தண்டையார்பேட்டை, கல்மண்டபம், ஏழு கிணறு, பிராட்வே, கொத்தவால்சாவடி, மண்ணடி, யானைகவுனி, செண்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய பகுதிகள் எல்லாம் எனக்கு விரல்நுனியில் அத்துபடி. சைக்கிள் வந்தபிறகு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சூளை, பெரியமேடு என்று இன்னும் சுற்ற ஆரம்பித்தேன்.

இதில் இன்னொரு மகிழ்ச்சி உண்டு. தெரியாத சாலைக்குள் போய்விட்டு, அது வளைந்து, நெளிந்து, மீண்டும் ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குள், தெரிந்த சாலைக்குள் வந்து முடியும்போது, ஏதோ வாஸ்கோடகாமா, மெகஸ்தினிஸ் மாதிரி உற்சாகமாக இருக்கும். புதிய வழித்தடத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி அது. மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்ட உற்சாகம் அது.

இப்படி சுற்ற ஆரம்பித்ததற்கு பள்ளியில் நான் சாரணர் அணியில் இருந்ததும் ஒரு காரணம். சாரணர் இயக்கத்தில், ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக்கொண்டு, அதில் சிறப்பாக செய்துகாட்டினால், ‘Proficiency Badge’ தருவார்கள். நான் இரண்டு கைகளிலும் ஏராளமான பேட்ஜ்கள் வாங்கியவன். அதில் ஒன்று ‘Pathfinder’ பேட்ஜ். அதற்கு ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகப் போய், அந்தத் தெருவில் இருக்கும் முக்கிய இடங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு வரவேண்டும்.

பின்னர், அந்த முழுப் பகுதியையும் பெரிய சார்ட் பேப்பரில் வரைந்து சாலைகளைக் குறித்து, அதில் முக்கிய இடங்களைக் குறித்து, வழிகாட்ட வேண்டும். என் சுவாரசியம் இங்கிருந்துதான் தொடங்கியது. ஏற்கெனவே ஊர்சுற்றுவது என் பொழுதுபோக்கு. நான் கொண்டியம்பதி பகுதியை இப்படி வரைந்து, இடங்களைக் குறித்து, பாத்ஃபைண்டர் பேட்ஜ் வாங்கினேன். என் சார்ட்டை பல ஆண்டுகள் வைத்திருந்தேன். ஒரு பிள்ளையார் கோவில், ஒரு அம்மன் கோவில், ஒரு மரம், ஒரு விளையாட்டுத் திடல், ஒரு வளைவு என்று எதையும் விடாமல், அத்தனையையும் என் சார்டில் குறித்திருந்தேன்.

இப்போதும் எனக்கு இந்த பழக்கம் விடுவதில்லை. யாராவது எங்கேயாவது போகவேண்டும் என்று வழிகேட்டால், முதல் வேலையாக ஒரு பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு வழி போட்டுக் காட்டிவிடுவேன். என் மகள், விவேக் பாணியில், ‘மேப் போட வந்துட்டார்யா’ என்பாள். இடையில் இருக்கும் முக்கிய இடங்களை எல்லாம் சுட்டிக் காட்டுவேன். அந்த இடத்துக்குப் போகும் பஸ், பஸ் நிறுத்தத்தின் பெயர் சொல்லுவேன்.

இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது அதைச் சுற்றி இருக்கும் தடங்களை வைத்துதான். கும்பகோணத்தை அடுத்திருக்கும் என் பெரியம்மாவின் ஊருக்குப் போகவேண்டுமென்றால், என் ஞாபகத்தில் இருப்பது, ஒரு பெரிய வளைவும் வளைவு முண்டில் இருக்கும் ஆலமரமும்தான். அந்த ஆலமரத்தில் மிகப் பெரிய பொந்து உண்டு. சென்னை சாலைகளுக்கும் நான் இப்படி வழி சொல்லுவேன். ‘அங்கே திரும்பினவுடனே ஒரு அயன் கடை இருக்கும். அந்தக் கடைக்கு மூணாவது வீட்டு ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லேருந்து மணி பிளாண்ட் தொங்கும். நேரா போனீங்கன்னா, ஒரு அடி பம்பு இருக்கும்…’

புது இடங்களைப் பார்ப்பது மாதிரியான சுவாரசியம் வேறில்லை. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மர்மத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறது. பயம் மட்டும் கூடவே கூடாது. பல சமயங்களில் நண்பர்களோடு காரில் போகும்போது, தெரியாத சாலைகளில் பயணம் போக பயப்படுவார்கள். என்னுடைய லாஜிக் இவ்வளவுதான்: எப்படியாக இருந்தாலும் இது ஏதோ ஒரு ஊருக்கு, இல்லை ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குப் போய் சேர்க்கும். எதற்கு கவலைப்படுவானேன்? அங்கே இருப்பவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தான். நின்று பேசினால், பதில் சொல்லாமலா போய்விடுவார்கள்?

நடக்க அஞ்சவே கூடாது. காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு ஓடவும் கூடாது. அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற expeditionகளுக்கு லாயக்கே இல்லை. கிடைத்ததை ரசித்துச் சாப்பிடுவது இன்னொரு முக்கிய தகுதி. வெளியே சுற்றுவதின் உபமகிழ்ச்சி எல்லாவகையான உணவுகளையும் சுவைப்பது.

வேலைக்கு வந்தபிறகு வடகேரளம் முதல் தென் கேரளம் வரை, நான் சார்ந்த நிறுவனத்துக்காக ஒரு ஆங்கில ஆசிரியரை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஆங்கிலம் சொல்லித் தருவது பற்றி பாடம் நடத்தியிருக்கிறேன். கேரளம் முழுவதும் புட்டும் கடலையையும் மட்டுமே சாப்பிட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். ஆந்திரம், கர்நாடகம் சுற்றியதும் இப்படித்தான். ஆந்திர காரம் இன்னும் நினைவு மடிப்புகளில் இருக்கிறது. பின்னர் பூனா, மும்பை சுற்றியபோதும் இந்தப் பழக்கம் விடவில்லை. அங்கே எங்கே போனாலும் வடாபாவ் கிடைத்துவிடும். நம்ம ஊர் பஜ்ஜியெல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். எங்கே போனாலும் என் ஃபேவரிட் டீ கிடைத்துவிடும்.

இப்போதுதான் கொஞ்ச காலமாக, மனைவியின் அறிவுறுத்தலால், வெளியே சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். ‘என்ன எண்ணையோ என்ன தண்ணியோ, கொஞ்சம் கூட ஹைஜீனிக்கே இல்லை,’ ‘நாப்பது வயசாகப் போகுது. ஏற்கெனவே டையபடிக். கொஞ்சம் ஜாக்கிரதை,’ ‘ரெண்டு பொண்ணு இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்’  என்று என் ஆர்வங்களில் லேசாக பயம் தெளித்து, என்னை மிடில்கிளாஸ் சம்சாரியாக்கியிருக்கிறார் அவர்.

வெளியே சாப்பிடுவதை மட்டும் நிறுத்திக்கொண்டு விட்டேன். சுற்றுவதை அல்ல. இப்போதும் வெளியூர்களுக்கு பஸ்ஸில் போவது என் விருப்பம். அதுவும் இரவு நேரப் பயணம், இன்னும் அமர்க்களம். ஜன்னலோரமாக உட்கார்ந்துகொண்டுவிட்டால், ஒவ்வொரு ஊரும் தன் வாசனையை, சுவையை, மெளனத்தைச் சொல்லிக்கொண்டே வரும். தூரத்து மினுக் மினுக் விளக்குகள், அதனுள் பொதிந்திருக்கும் ஜீவனைச் சுட்டிக்காட்டும். புலன்களைத் திறந்து வைத்துக்கொண்டுவிட்டால் போதும், அதில் வந்து கொட்டும் சேதிகள் எண்ணற்றவை.

பயணங்களில் மிகப்பெரிய சந்தோஷம், அதுதரும் அனுபவம்தான். நான் பல ஊர்களை அது தந்த அனுபவத்தின் வாயிலாகவே ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த அனுபவம்தான் எனக்கான சேகரம், எனக்கான வளம். எனக்கான உந்துசக்தி. ஒவ்வொரு முறை கதை எழுத உட்காரும்போதும், இதுபோன்ற ஏதேனும் ஒரு தெருவை, ஊரை, வாசனையை, மெளனத்தை நினைத்துக்கொள்வேன். அங்கே பார்த்த நபர்கள் என் கதை மாந்தர்கள் ஆகிவிடுவார்கள். சுற்றி இருக்கும் இடங்கள் மெல்ல மெல்ல என் கதைக்குள் நுழைய ஆரம்பித்துவிடும்.

இடம் என்ற அம்சம் இல்லாமல் என்னால் கதை எழுத முடிந்ததில்லை. கதை மாந்தர்களை ஏதேனும் ஒரு தெருவில் பொருத்திவிடுவது இதனால்தான். அதற்கு பிறகு கதையை அந்த இடமே நகர்த்திச் சென்றுவிடும். இடம்தான் கதைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. மார்க்குவேஸுக்கு மகண்டோ, சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம், அசோகமித்திரனுக்கு ஹைதராபாத் எல்லாம் இப்படி நம்பகத்தன்மை வாய்ந்த இடங்கள். அவர்களுடைய கதைகள் அழியாப் புகழ் பெற்றதற்கு, இடமும் ஒரு முக்கியக் காரணமோ? இருக்கலாம்.

எழுத்தும் எடிட்டிங்கும்

Posted in இதழியல், இலக்கியம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

நண்பர் ஒருவர் தான் எழுதிய கதையை என்னிடம் அனுப்பினார். ஏ4 பக்க அளவில் 3.25 பக்கம். கதை நன்றாக இருந்தது. பேசும்போது, இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே, ஏன் சின்னதாக எழுதினீர்கள் என்று கேட்டேன். ‘600 வார்த்தைகள் லிமிட்’ என்றார் அவர். முன்பெல்லாம் பத்திரிகைகள் 4 பக்க அளவு என்று சொல்லுவார்கள். இப்போது வார்த்தை எண்ணிக்கை அளவுக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். என்னால், எப்போதும் சின்னதாக கதை எழுத முடிந்ததில்லை. எல்லாமே பெரிய கதைகள்தான் எழுதியிருக்கிறேன்.

அதேசமயம் பத்திரிகைகளின் பக்க அளவு பிரச்னை, மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களால், பல சமயங்களில் 4,5 பக்கங்கள் ஒதுக்குவது மிகவும் கஷ்டம். அந்த நான்கு ஐந்து பக்கங்களுக்குள்ளும் இரண்டு மூன்று ஜோக்குகள், ஒன்றிரண்டு துணுக்குகள் ஆகியவற்றுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். இல்லையெனில்,  பக்கம் முழுவதும் ஒரே எழுத்தாக நிரம்பியிருக்கும். பார்க்கவே ரிலீஃப் இருக்காது. அதற்காக என்னால் என் கையைக் குறுக்கிக்கொண்டு, பக்க அளவுகளுக்கு உள்ளோ, வார்த்தை எண்ணிக்கைக்குள்ளோ எழுத முடிந்ததில்லை.

இதற்கு நான் ஒரு வழி கண்டுபிடித்துக்கொண்டேன். சமாதானம்தான். என் போக்கில், கதை கோரும் அளவுக்கு ஏற்ப விரிவாகவோ சுருக்கமாகவோ எழுதிவிடுவேன். அப்புறம், பத்திரிகைகளுக்கு அனுப்பும்போது, அங்கே இருக்கும் துணை ஆசிரியர்களிடம் பக்க அளவுக்கு ஏற்ப வேண்டியதை எடுத்துக்கொண்டு, மிச்சத்தை வெட்டிவிடுவதை செய்துகொள்ளுமாறு சொல்லிவிடுவேன். என் கதை வெட்டுப்படுவதை நான் பெரிய பிரச்னையாக கருதியதில்லை. என் கதை, நான் எழுதியபடியே வரவேண்டும் என்றும் அடம்பிடிப்பதில்லை. வெட்டுப்பட்ட பின்பு அதைப் பற்றி வருந்தியதும் இல்லை.

பத்திரிகைகளுக்கு பத்திரிகை, பல்வேறு தனிநபர்களின் விருப்பத்திற்கிணங்க, கதைகள் எடிட் ஆகலாம். இருவேறு எடிட்டர்கள் ஒரே முறையில் எடிட் செய்ய மாட்டார்கள். வித்தியாசம் இருக்கவே செய்யும். மேலும் கதைகளை எடிட் செய்வது என்பது மிகவும் லாகவமாகச் செய்யவேண்டிய கலை. முதலில், கதை படிக்கும் ஆர்வமும் பல்வேறு கதை சொல்லும் முறைகளைப் பற்றிய தெளிவும் இருக்கிறவர்கள் எடிட் செய்தால், அந்த எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்தப் பிரச்னையே வேண்டாம் என்று பல பத்திரிகைகளில் முதலிலேயே, பக்க அளவைச் சொல்லி எழுதச் சொல்லிவிடுவார்கள். அல்லது, அவர்கள் தம் பத்திரிகையில் கதைக்கு ஒதுக்கும் பக்க அளவைப் பார்த்தே எழுத்தாளர்கள் புரிந்துகொள்ளலாம். இன்னொரு வகை ஆசிரியர்கள் உண்டு. கதையைத் தேர்வு செய்துவிட்டு, பக்க அளவுக்காகச் செய்யப்பட்ட எடிட்டிங்கை, எழுதிய ஆசிரியர்களிடமே படித்துக் காட்டி, ஒப்புதல் வாங்கி வெளியிடும் பழக்கம். கதை சிறப்பானதாக இருந்தால், பொறுத்திருந்து, அதற்குத் தேவைப்படும் பக்கங்களை ஒதுக்கி வெளியிடுவது இன்னொரு முறை. ஆனந்த விகடனில், எனக்கு இரண்டு அனுபவமும் உண்டு. என்னுடைய பெரிய கதைகள் 8,9 பக்க அளவுக்கு விகடனில் பிரசுரமாகியிருக்கிறது. பாலசுப்பிரமணியம் சார் எடிட்டராக இருந்தபோது, ஒருமுறை, கடைசி சில பாராக்களை மாற்றிய விவரத்தைத் தெரிவித்துவிட்டு கதையை வெளியிட்டார்கள்.

எடிட்டிங்கின் இன்னொரு பரிமாணத்தை திருப்பூர் கிருஷ்ணனிடம் பார்த்திருக்கிறேன். எங்கே எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத அளவு எடிட் செய்வதில் அவர் சமர்த்தர். எழுதிய மூலப் பிரதியோடு வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதன் துல்லியம் பிடிபடும். ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு காட்சியிலும் அலங்காரத்துக்காக, உணர்ச்சி வெளிப்பாடாக, சிந்தனைப் பாங்காக, எழுத்தாளரே அறியாமல் பல உபரிச் சொற்களைச் சேர்ப்பது வழக்கம். படிக்கும்போது இந்தச் சொற்கள் கதையின் வளத்தை மேம்படுத்தும்; அதே சமயம் அது இல்லையென்றாலும் கதையின் போக்கு கெடாது, அழுத்தம் குறையாது. அத்தகைய சொற்களை, வரிகளை மெல்ல மெல்ல உருவி, விலக்கிவிடுவது நேர்த்தியான எடிட்டிங். திருப்பூர் கிருஷ்ணன் இதை மிகவும் கவனமாகச் செய்வார்.

அது என்ன உபரிச் சொல்? எப்படி அதைக் கண்டுபிடிப்பது? எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், என் கட்டுரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் பல இடங்களில் நான் அழுத்தம் தரவேண்டும் என்பதற்காகவே ‘தான்’ என்ற விகுதியைப் பயன்படுத்தியிருப்பேன். அதே போல், ‘ஏ’காரச் சொற்களை நிறைய பயன்படுத்தியிருப்பேன். ‘அந்த’, ‘இந்த’, ‘நான்’ என்ற சொற்களையும் நிறைய பயன்படுத்தியிருப்பேன். இதெல்லாம் எழுத்துவேகத்தில் வந்துவிழும் சொற்கள். இதையெல்லாம் நீக்கலாம். நீக்கினாலும் வரிகள் பொருள் தரும். இதுபோல் இன்னும் எண்ணற்ற உபரிச் சொற்கள் உண்டு. உபரி வரிகள் உண்டு. எழுத்தாளருக்கு எழுத்தாளர் இது வேறுபடக் கூடும்.

ஆங்காங்கே பத்திகளை உருவி எடுத்து, அளவைக் குறைப்பது, அறுவை சிகிச்சை எடிட்டிங். சுலபமான எடிட்டிங் இது. என்ன ஒன்று, படிக்கும்போது, கதை, மான் மாதிரி துள்ளித் துள்ளி ஓடும். எந்த ஒரு காட்சியும் மனத்தில் பதியாது. ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தாது. அதுவும் கோல் போஸ்ட்டைத் தொட ஓடும் கதைகளில் இது இன்னும் எளிது.

கோல் போஸ்ட் என்பது பல கதைகளுக்கு இறுதி பத்தி, வரி அல்லது சொல். மொத்த கதையும் அந்த ஒரு வரிக்கு இட்டுச் செல்வதைத்தான் குறிக்கோளாக கொண்டிருக்கும். இதுபோன்ற கதைகளில் இறுதிவரியைக் கை வைக்காமல் இருந்தால் போதும். மேலே இருக்கும் மொத்த கதையிலும் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், வேறு வகை கதை சொல்லும் முறைகள் இருக்கின்றன. கதை வாசிப்பையே அனுபவமாக மாற்றும் கதைகளில், எடிட்டிங் மிகவும் சிக்கலானது. அங்கே அறுவை சிகிச்சை எடிட்டிங் உதவாது.

பெரும்பாலும் அடுத்த நபருக்குத்தான் எடிட்டிங் சரியாக வரும். என் கதைகளை நான் எடிட் செய்வதை விட, அடுத்தொருவருடன் இணைந்து பணியாற்றும்போதுதான், பிரதி செம்மையுறும். மூன்றாவது நபருக்குத்தான் நிறைகுறைகள் பளிச்சென்று தெரியும். உலகின் பல முக்கிய எழுத்தாளர்கள், முன்னணி எடிட்டர்களுடன் இணைந்தே பணியாற்றியிருக்கிறார்கள். எடிட்டர்களின் ஆலோசனைகள் பல சமயங்களில் பிரதியை மேன்மேலும் செம்மைப்படுத்தியிருக்கிறது.

விக்ரம்சேத்தின் சூட்டபிள் பாய் நாவலை இதற்கு உதாரணமாகச் சொல்லுவார்கள். ஆறு பதிப்பாளர்களிடம் சென்ற நாவல் அது. ஒவ்வொரு பதிப்பாசிரியரும் அந்த நாவலில் வேலை செய்திருக்கிறார்கள், ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்கள். இறுதி வடிவம் பெற்றபின், அதை வைக்கிங் வெளியிட்டது. அதன் மூலப் பிரதிக்கும் பதிப்பான பிரதிக்கும் எவ்வளவு முன்னேற்றம் என்று பின்னர் பதிப்பாசிரியர் வியந்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளில் இது இன்றைக்குச் சாத்தியமில்லை. பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்திருப்பதாக அறிகிறேன். பிரபஞ்சனின் காதலெனும் ஏணியிலே என்ற தொடர்கதை, விகடனில் வெளியானது. விகடன் ஆசிரியரின் ஆலோசனைகளோடு அத்தொடர் எழுதப்பட்டதாகச் சொல்லுவார்கள்.

எழுத்தாளர்களே நல்ல எடிட்டர்களாக இருப்பதும் உண்டு. எழுதியதை மாற்றி மாற்றி எழுதுவது ஒருவகை எடிட்டிங். பல ஆண்டுகள் பிரதியை அப்படியே வைத்திருந்து, புது வெளிச்சத்தில், புது முதிர்ச்சியோடு, மீண்டும் படித்துப் பார்த்து திருத்துவது மற்றொருவகை எடிட்டிங். அசோகமித்திரன் இதில் மாஸ்டர். பல கதைகளில், ஒவ்வொரு சொல்லையும் அவ்வளவு பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருப்பார். அதை நீக்கினால், பொருள் சிதைந்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு.

நம்ம ஊரில், ப்ரூஃப் ரீடர்களை எடிட்டர்களாக நினைக்கிறார்கள். பதிப்பாசிரியர்கள் என்ற சாதி இங்கே மைனாரிட்டி கம்யூனிட்டி. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புகளில், எடிட்டிங்கை ஒரு பாடகமாகவேனும் வைத்து இதற்கு உயிர் கொடுக்கலாம். எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கேற்ப நுண்ணுணர்வு கொண்ட எடிட்டர்களின் எண்ணிக்கை வளரவில்லை என்பது வருத்தமான விஷயம்.

மாமழை போற்றுதும்

Posted in அனுபவம், இலக்கியம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

கடந்த ஐந்து நாள்களாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மழை மகிழ்ச்சிக்கான அறிகுறி, புதிய குழந்தையின் வரவைப் போல. எவ்வளவுதான் இடர்களை அது ஏற்படுத்தினாலும் மழையைப் போல் அற்புதம் ஏதுமில்லை. நான் எழுதும் மடிக்கணினிக்குப் பக்கத்தில் ஒரு ஜன்னல், என் பின்புறம் ஒரு ஜன்னல். இரண்டிலும் மழை வரிவரியாகக் கோடுகள் இழுத்துக்கொண்டு இருந்தது. ஒரு சமயம் சாய்வுக் கோடுகள், மற்றொரு சமயம் நேர்க் கோடுகள். ஓவிய வெண்மை சட்டெனக் கருக்கத் தொடங்கும். தூரத்தில் இடிமுழக்கம். எலும்பு சில்லிடும் குளிர்க் காற்று.

எங்கும் சில்லிட்டிருக்கும். தரை, மேஜை, நாற்காலி, சோபா, படுக்கை என்று எங்கே புழங்கினாலும் உள்ளூர மழையின் குழைவு. குழாயைத் திறந்தால், சிலீர் குளுமையோடு நீர் பீய்ச்சி அடிக்கும். ஒவ்வொரு நரம்புக் கால்களிலும் சிலீர் குரலெழுப்பி, மீண்டும் மீண்டும் நடுக்கத்தை உள்ளுக்குள் நகர்த்தும். மின்விசிறியைத் தட்டினாலோ, குளுமை பொழியும். சுழன்று சுழன்று தன்மை அறைமுழுவதும் வியாபிக்கும்.

ஒவ்வொரு கட்டடத்திலும் மழைநீர்க் கோலம். தலைகீழாக நிற்கும் பீரங்கிகள். குடை சாய்ந்த பாய்மரக் கப்பல்கள். அணிவகுத்துச் செல்லும் ராஜ சைன்னியம். புள்ளினங்கள் பறக்கும் அடர்த்தியான காடு. இருவிழி மட்டும் தெரியும் ஆந்தைகள்.

பெருமகிழ்ச்சியில் ஜன்னல்கள். மூட மாட்டேன் என்று சண்டித்தனம் செய்யும். நான் திறந்தே கிடப்பேன் என்று மரம் உப்பிப் போய், என்ன இழுத்து கொக்கி போட முயற்சித்தாலும் முடியவே முடியாது. ஒவ்வொரு காற்றுக்கும் வலப்புறமும் இடப்புறமுமாக அரைவட்ட ஆட்டம் போட்டு, தன் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ளும் ஜன்னல்கள். ஜன்னல்களை ஒட்டி மழையின் துமி பெய்து, அறையெங்கும் நீர்த்திவலைகள்.

உலர்ந்தும் உலராமல் துணிகள். கால் ஈரம், அரை ஈரம். புழுக்க வாசனை. இஸ்திரி போட்டு அணிந்துகொண்டாலும் உடலோடு குளுமை ஒட்டிக்கொள்ளும். ஷூ, செருப்பு என்று எங்கும் ஈரம். இதுதான் சாக்கு என்று காத்திருந்ததுபோல், காலில் பட்டவுடன் உச்சிவரை குளுமையைக் கரைசேர்க்கும் காலணிகள்.

மழைக்கு இதமாக இருக்கட்டும் என்று மிளகு குழம்பு, சீரக மிளகு ரசம். கபம் சேராது. தொண்டை கட்டு விட்டுப் போகும் என்று காரணங்கள். தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம். ஆவி பறக்கும் டீ. ஒவ்வொரு முறை வாயில் வைக்கும்போதும், சூடு தணிந்து நாக்குக்கு இதமாக தொண்டையில் இறங்கத் தொடங்கும். இஞ்சி காரம் அடித்தொண்டையில் மிதந்துகொண்டே இருக்கும்.

சாலையில் இறங்கினால், ஓடைகள் பள்ளம் தேடி ஓடிக்கொண்டே இருக்கும். எங்கிருந்தோ அரித்துவரும் அடிமணல். சிறுகற்களும் வேகத்தில் அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கும். செருப்புகள் தரையில் ஒட்டிக்கொள்ள, சடக் சடக்கென்று ஒரே தாள லயம். நடுவில் பாயும் சைக்கிள்கள், ஓடைகளை இடைப்பிரித்து நகர, நொடிகளில் மீண்டும் ஓடை ஒன்றிணையும்.

மழை பட்டுவிடாமல், வாசல்களில் குழந்தைகள் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். பாதுகாப்பாக பெரியவர்கள். சின்ன வயது நினைவுகள் அவரவர் கண்களில் மிதப்பதை தவிர்க்கவே முடியாது. மழைக்கு ஒதுங்கும் ஆட்டோக்களில் இருந்து புகை மட்டுமே வெளியே வரும். கைகளைத் தேய்த்துக்கொண்டு, சாலையோரமாக பீடி புகைத்தபடி, கோழிகள் போல் மனிதர்கள் பதுங்கியிருப்பார்கள்.

கால் நனைக்கும் நீரில் புத்துணர்ச்சி. புது வெள்ளம். புதுத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா என்றோ சொன்னதெல்லாம் ஞாபகத்தில் வந்து போகும்.

இன்னும் கொஞ்சம் நடந்து முன்னால் போனால், எதிரே விமானம். பார்த்தசாரதியின் விமானம். மேகங்கள் விமான முகட்டில் உட்கார்ந்திருக்கும். கருமை படர்ந்த பின்னணி. அவ்வப்போது ஒளிக்கீற்று போல் விமானத்துக்கு பின்னே எங்கோ மின்னல்கள். வெண்மீசை வேந்தனை மழையால் நனைக்காமல் நகரமாட்டோம் என்று காத்திருப்பது போல், சுற்றி மேகத் திட்டுக்கள். ஒன்று மற்றொன்றை அழைக்க, அடுத்தொன்று இன்னொன்றை அழைக்க, எல்லோரும் விமானம் முன்பு சங்கமித்து, சட்டென நீர்மாரி. தான் மோதுவது எங்கே வலித்துவிடுமோ என்று மெல்ல மெல்லத் தொடங்கி, பின்னர், அடியடியாக முன்னேறி, மொத்த நீரையும் கொட்டிக் கவிழ்த்துவிட்டு, பேரமைதியில் கலந்துவிடும் மேகங்கள்.

காலடியில், பார்த்தசாரதி கோவிலின் குளம். கைவல்ய புஷ்கரணி. மழைக்கு முன்னர் மொத்த நீரையும் வெளியேற்றி, சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள். மழை வரவில்லை என்றால் என்ன செய்வது? எங்கிருந்தாவது தண்ணீர் கொண்டு வந்து கொட்டுவார்களோ என்று ஊரில் பேசிக்கொண்டு இருந்தார்கள். வருணனுக்குப் பொறுக்கவில்லை. பார்த்தசாரதிக்கு தாகம் தணிக்காமல் இருப்பதா? கொட்டித் தீர்த்தான். இன்று, நீராழி மண்டபம் வரை நீர் நிறைந்திருக்கிறது. சுத்தமான வான் நீர். வருணன் கொடை.

மெல்ல வீடு திரும்பினேன். ‘மாமழை போற்றுதும்…’ பாடல் ஏனோ ஞாபகம் வந்தது.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல்
மேல்நின்று தான் சுரத்த லான்

- இளங்கோ அடிகள், சிலம்பு

இலக்கியக் கருவூலங்கள்

Posted in இலக்கியம் on October 22nd, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

இந்த ஆண்டு  (2009) கல்கி தீபாவளி மலர் வெளிவரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கல்கி தீபாவளி மலரைத் தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறேன். இம்முறை இல்லை என்னும்போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மற்றபடி எல்லா மலர்களையும் வாங்கிவிட்டேன்.

ஆனந்த விகடன், கலைமகள், திரிசக்தி, ஓம்சகதி, லேடீஸ் ஸ்பெஷல் ஆகிய மலர்களை வாங்கிவிட்டேன். அமுதசுரபி வாங்க வேண்டும். ஆன்மிக பத்திரிகைகள் வெளியிட்டுள்ள மலர்கள் நிறைய இருக்கின்றன. வாங்கத் தோன்றவில்லை.

எல்லா மலர்களையும் ஒரு புரட்டுப் புரட்டி, மேலோட்டமாகப் படித்துவிட்டேன். இந்த நேசமுடன் இதழிலேயே ஒவ்வொரு மலரைப் பற்றியும் தனித்தனியாக விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். படித்து முடிக்க முடியவில்லை. அடுத்த நேசமுடன் இதழை தீபாவளி மலர் ஸ்பெஷலாக வைத்துக்கொள்ளலாம் என்று எண்ணம்.

என் அம்மாவழி பாட்டியின் கிராமத்து வீட்டில் இருந்து நான் எடுத்து வந்த முக்கிய பொக்கிஷங்களில் ஒன்று தீபாவளி மலர்கள். 50களின் கடைசியில் இருந்து 63, 64 வரை ஆனந்த விகடன், கலைமகள் மலர்கள் என்னிடம் இருக்கின்றன.

அதேபோல், ஆனந்த விகடன் வெளியிட்ட பெரிய தமிழ் தமிழ் அகராதியையும் கிராமத்தில் இருந்துதான் எடுத்துவந்தேன். புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த பத்து வயது காலகட்டத்திலேயே, இதனால் என்ன பயன் என்று தெரியாமல், எல்லா புத்தகங்களையும் சேர்த்துவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

பதின்ம பருவம் முடிந்து கல்லூரியில் கால்வைத்த காலத்தில், கணையாழியில் எனக்கு பார்ட் டைம் வேலை. ரூ.300 மாதச் சம்பளம். பெரும்பகுதி இதுபோன்ற பழைய நூல்கள், தீபாவளி மலர்கள் வாங்கிச் சேர்க்கத்தான் அதைப் பயன்படுத்திக்கொண்டேன். நாவலர் நெடுஞ்செழியனின் மன்றம், முரசொலியின் மலர்கள், சமுதார பிரசுராலயம், ஜோதி நிலையம், வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்கள் ஆகியவற்றை அப்போதுதான் வாங்கிச் சேர்த்தேன்.

வாசகர் வட்டத்தை நடத்திய தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியையும் அவர் கணவர் கிருஷ்ணமூர்த்தியையும் இப்படித்தான் சந்தித்தேன். தி.நகர் தணிகாசலம் தெருவில் இருந்த ஒரு அழகான வீடு அவர்களுடையது. கிருஷ்ணமூர்த்திக்கு அப்போது மிகவும் வயதாகியிருந்தது. ஈசி சேரில் சார்ந்திருந்தார்.

நான் வாசகர் வட்டப் புத்தகங்களை வாங்க வந்திருக்கிறேன் என்றபோது கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தார். கடைசியாக வெளியிட்ட பல நூல்கள் பைண்ட் கூடச் செய்யப்படாமல், அச்சகத்திலேயே உதிரி ஃபாரம்களாக இருந்ததைச் சொன்னார். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி அப்புறம் வெளியே வந்தார். என்ன பேசினோம் என்று நினைவு இல்லை. ஆனால், கொடிகள் தொங்கும் ஒரு வராண்டா ஞாபகம் இருக்கிறது. அதில், கட்டைச் சுவரில் பல உன்னதமான நவீன இலக்கிய நூல்களை வெளியிட்டு, அற்புதமான சேவை செய்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி உட்கார, அவர் ஈஸிசேரில் சாய்ந்தபடி பேசிக்கொண்டு இருந்தது சித்திரம் போல் ஞாபகம் இருக்கிறது.

எத்தனை நூல்கள்? அறுசுவை என்றொரு தொகுதி இருக்கிறது. ஆறு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. அதில் வை. ரங்கநாதன் என்பவர் எழுதிய வீதி என்றொரு குறுநாவல் உண்டு. ஒரு அரசியல் நாவல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் அந்தக் குறுநாவல்.

நரசய்யாவின் கடலோடி, தி.ஜா.வின் நடந்தாய் வாழி காவேரி, சா.கந்தசாமியின் சாயாவனம், தி.ஜா.வின் அம்மா வந்தாள் எல்லாம் வாசகர் வட்டம் வெளியிட்டது. இன்றும் தமிழ் இலக்கியத்தின் பெயர் சொல்லும் நூல்கள் இவை.

புத்தகங்கள் சேகரிக்க ஆரம்பித்த பிறகு, இன்னும் இரண்டு பைத்தியங்கள் சேர்த்துப் பிடித்துக்கொண்டன. முதல் பதிப்பைத் தேடிச் சேர்ப்பது அதில் ஒன்று. சமீபத்தில் புத்தக அடுக்குகளை ஒழித்துக்கொண்டு இருந்தபோது, வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மூன்று பதிப்புகள் இருக்கின்றன. அதேபோல் ஜெயகாந்தனின் பல நூல்களின் முதல் பதிப்புகளை வைத்திருக்கிறேன். ஒரு புளியமரத்தின் கதை, காலமும் ஐந்து குழந்தைகளும் உண்மை வேட்கை பாம்பும் பிடாரனும் ஆகியவற்றின் முதல் பதிப்புகளும் இருக்கின்றன.

இன்னொரு பைத்தியம், தொடர்கதைகளின் பைண்ட் வால்யூம்களைச் சேகரிப்பது. தி.ஜா.வின் அன்பே ஆரமுதே, உயிர்த்தேன் எல்லாம் அப்படிச் சேகரித்தவை.

இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி ஆகியோர் எழுதிய நாவல்களின் பைண்ட் வால்யூம்கள் என்னிடம் இருந்திருக்கின்றன. வாசிப்புப் பழக்கம், சுவை மாறும்போது, மெல்ல மெல்ல இவற்றையெல்லாம் என் புத்தக அடுக்களில் இருந்து நீக்கியிருக்கிறேன்.

இதுபோல், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது என் புத்தக அடுக்குகளை ஒழுங்குபடுத்தியிருக்கிறேன். நிறைய நூல்களை ஒவ்வொரு முறையும் இதுபோல் நீக்கியிருக்கிறேன். எப்போது எடுத்துப் படித்தாலும் எதையேனும் புதிதாகத் தரக்கூடிய நூல்கள் என் அலமாரியின் முன் அடுக்குகளில் இருக்கும். அசோகமித்திரன், தி.ஜா, இ.பா. ஆகியோரின் எல்லா நூல்களும் இந்த வரிசையில் வருபவை. சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகள், சுஜாதாவின் நிலா நிழல், வண்ணநிலவனின் தாமிரபரணிக் கதைகள், ரெயினீஸ் ஐயர் தெரு, செல்மா லாகர்லேவின் தேவமலர், கெளதம சித்தார்த்தனின் வேனிற்கால வீடு: சில குறிப்புகள் ஆகியவையும் இங்கே உண்டு.

ஆங்கிலத்தில் எப்போதும் மார்குவேஸ் என் மனம் கவர்ந்த எழுத்தாளர். சென்ற வாரம் கோவை, பொள்ளாச்சி பயணத்தின் போது கூட, ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிடியூட்தான் என் பக்கத் துணை. மனுஷன் மகா மகா மேதை. தொட்ட இடமெல்லாம் கதையாகப் பொங்கிப் பிரவகிக்கிறது. எங்கே புத்தகம் முடிந்துவிடப் போகிறதோ என்ற பதற்றத்துடன் தான் இந்த நாவலைப் படிக்க வேண்டியிருக்கிறது. இவருடைய நூல்களை மூலமொழியில் படிக்கவேண்டும் என்ற ஆவல்தான் என்னை ஸ்பானிஷ் மொழி படிக்கத் தூண்டிக்கொண்டு இருக்கிறது.

இலக்கியத்தைப் பொறுத்தவரை, காலம் ஆக ஆகத்தான் சுவை கூடிக்கொண்டு இருக்கிறது. பழைய புத்தகங்கள் ஆனாலும் சரி, தீபாவளி மலர்களானாலும் சரி, பழைய நூல்களில் உள்ள ரசனை, அக்கறை, தேர்வுகள் ஆகியவை எப்போதும் கொஞ்சம் உயர்வாகத்தான் இருக்கின்றன.

அந்தக் காலத்து கலைமகள் தீபாவளி மலர்கள் மிகவும் நவீனமாக இருந்திருக்கின்றன. வித்தியாசமான, புதுமையான எழுத்துகளை கி.வா.ஜ. அப்போதே பிரசுரித்திருக்கிறார்.

ஒரு பக்கம் தீபாவளி மலர்கள், இலக்கிய கருவூலங்களாக, ஓவியப் பெட்டகங்களாக இருந்திருக்கின்றன. ரெகுலர் இதழ்களில் என்ன செய்கிறார்களோ இல்லையோ, தீபாவளி மலர்களில் தங்கள் ரசனையை, சுவையை பத்திரிகைகள் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. பல தீபாவளி மலர்கள், வார இதழ்களைவிடத் தரத்தில் உயர்வாக இருக்கக் காரணம் இதுதானோ என்னவோ?

மிகைபடக் கூறுதல்

Posted in இலக்கியம் on October 22nd, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

திருக்குறளைப் பற்றி சமீபத்தில் ஒரு பேச்சு வந்தது. குறள் இதுதான்:

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

இதில் சொல்லப்படும் எண்ணும் எழுத்தும் நம்பர்களும் ஆல்ஃபபெட்டுக்களும் அல்ல. இதன் பொருள் வேறு என்றார் ஒவ்வை நடராஜன். பரிமேலழகர் இந்த உரையைத்தான் சொல்லியிருக்கிறார். எண் என்பது எண்ணுதல், சிந்தனை செய்தல், யோசித்தல். எழுத்து என்பது இலக்கியம். ஆக, சி்ந்தித்தலும் இலக்கியம் கற்றலும்தான் உண்மையில் மனிதனாக வாழுபவனுக்கு கண்கள் என்று பரிமேலழகர் உரையில் சொல்லியிருக்கிறார்.

அப்படி என்றால், அந்தக் காலத்து மக்களுக்கு எண்கள் (நம்பர்கள்) தெரியாதா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ரூபாயை 16 அணா என்றுதான் சொல்லி வந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் எட்டாகவும் எட்டின் மடங்குகளாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தக் கட்டத்தில்தான் இருவேறு கொள்கைகள் விவாதத்துக்கு வந்தன. ஒன்று, நேற்று இருந்த தலைமுறையைவிட, இன்றைய தலைமுறை விவரங்கள் நிறைந்தது, அறிவு நிரம்பியது, மேம்பாடு கொண்டது. இன்று இருக்கும் தலைமுறையை விட நாளைய தலைமுறை இன்னும் சிறப்பானதாக இருக்கும். அப்படியானால், நேற்று இருந்த தலைமுறை இன்று இருக்கும் தலைமுறையைவிடக் குறைவான விவரங்கள் தெரிந்தவர்களாகவும் போதிய கல்வி, மேம்பாடுகள் பெறாதவர்களாகவுமே இருந்திருக்க முடியும் அல்லவா?

அப்படியானால், திருவள்ளுவர் காலம் வரை பின்னோக்கிப் போனால், அவர்கள் அறிந்திருக்கும் செய்திகள், தகவல்கள் எல்லாம் இன்னும் குறைவுபட்டுப் போனதாகத்தானே இருக்க முடியும்? இந்தக் கொள்கையின் படி, முன்னோர்கள் என்பவர்கள் போதிய அறிவு இல்லாதவர்களாகத்தான் இருக்க முடியும். அப்படியானால், திருக்குறள் மாதிரியான பண்பட்ட படைப்பை, ஓர் அறநூலை எப்படி அவர்களால் வடித்திருக்க முடியும்?

இன்னொரு வழியாக இதைப் பார்க்க முடியும். பல தலைமுறைகளுக்கு முன்னால் இருந்தவர்கள் பயங்கர அறிவாளிகளாக, மேதைகளாக இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து தோன்றிய சந்ததிகள் மெல்ல மெல்ல தங்கள் அறிவுத் திறனை இழந்து வந்திருக்க வேண்டும். இது உண்மையாக இருக்குமானால், நம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஏன் பிற நாடுகளின் பெயர்களோ, பிற நகரங்களின் பெயர்களோ இடம்பெறவில்லை? பிற நாகரிங்கள் பற்றி ஏன் பேசப்படுவதில்லை? அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கப்படுவதில்லை?

அன்றைக்கு அவர்களால் ஒரு ஊரைவிட்டு அடுத்த ஊருக்குப் போவதென்பதே பெரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூரும் திருவல்லிக்கேணியும் நான்கு நாள் பயணமாக இருந்திருக்க வேண்டும். திருவொற்றியூரும் மயிலாப்பூரும் இரண்டு மூன்று நாள்கள் பயணமாக இருந்திருக்க வேண்டும்.

ஊர், நகரம், நாடு என்பதெல்லாம் இன்று நாம் அதன் நேர்ப்பொருளில் பயன்படுத்தும் town, city, country க்கு ஈடானது அல்ல. அன்றைக்கு நாடு என்பது இன்றைய மூன்று நான்கு மாவட்டங்களை ஒன்றாகச் சேர்த்தால் எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அவ்வளவுதான் இருந்திருக்க வேண்டும். அதில் நகரம் என்பது, ஊர் என்பதும் கிராமம் என்பதும் இன்னும் சின்னச்சிறு அலகுகளாக இருந்திருக்க வேண்டும்.

மேலும் இந்த நாட்டை ஆண்ட அரசர்கள் எல்லாம் தங்கள் நாட்டை விட்டு வெளியே அதிகம் பயணம் போனது போலவும் தெரியவில்லை. இமயத்தில் புலிக்கொடி நாட்டினான், கடாரம் வென்றான், கங்கை கொண்டான் என்பதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. அவர்கள் இமயம் என்று சொல்வது இன்றைக்கு நான் குறிக்கும் இமயமலையைத்தானா என்றும் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சோழன் ஆட்சி செய்த உறையூரில் இருந்து இமயமலை போய் புலிக்கொடி நாட்டிவிட்டுத் திரும்பினான் என்பதெல்லாம் அதீத உயர்வுநவிற்சியாகத் தோன்றவில்லையா?

இது ஒருபுறம் இருக்க, தகவல் ரீதியாக, செய்திகள் ரீதியாக அக்கால மக்கள் குறைவுபட்டவர்களாக இருந்தாலும் இயல்பான அறிவுத் தீட்சணயம் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான், திருக்குறள் மாதிரியான ஒரு உன்னத நூலை எழுதியிருக்க முடியும். இதில் சிக்கல் என்னவென்றால், அவர்கள் அப்படி அறிவுத் தீட்சண்யத்தோடு இருந்தார்கள் என்பதை எப்படி நிரூபிப்பது? தெரியவில்லை.

திருக்குறளில் எனக்கு பல ஆச்சரியங்கள் உண்டு. முக்கியமாக, பிறனில் விழையாமை போன்ற ஒரு அதிகாரத்தை எப்படி அவரால் எழுதியிருக்க முடியும்? அப்படியென்றால், அதற்கு முன்பிருந்தே, ராமாயணக் கதை பரம்பரைக் கதையாக சொல்லப்பட்டு வந்திருக்கலாம், அதை ஒட்டியே இப்படி ஒரு அதிகாரத்தை எழுத அவர் துணிந்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்வது சரியாக இருக்குமா? இதற்கும் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நமது பழம்பாடல்கள் பலவற்றில் மிகைப்படக் கூறுதல் ஒரு அம்சமாகவே இருந்திருக்கிறது. இன்று அரசாங்கத்திடம் பரிசுக்காகக் காத்திருப்பவர்கள் போலவே அன்றும் புலவர்கள், அரசர்களின் பரிசில்களுக்காக காத்திருந்திருப்பார்கள் போலும்! அதையும் மீறி, திருக்குறள் மாதிரி உன்னதமான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

எத்தனை முறை எப்படிப் படித்தாலும் பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கிறது திருக்குறள். காலத்தால் அழியாமல் இருப்பதற்கு அதுதான் முதல் தகுதி என்று நினைக்கிறேன்.

தஞ்சாவூர்க்கவிராயர், சுந்தர்ஜி – தனி இதழ்கள்

Posted in இலக்கியம், புதிய இதழ் on September 16th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment
புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட  ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.
சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.
முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.
சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.
எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.
இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.
இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.

புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட  ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.

சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.

முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.

சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.

எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.

இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.

இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.

படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.