இதழியல்

2009 – மறக்க முடியாத ஆண்டு 2 : பத்திரிகை

Posted in இதழியல் on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

2009ல் தமிழில் வெளியான புதிய இதழ்கள் இவை:

1. புதிய தலைமுறை: இதழாளர், எழுத்தாளர் மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ். ரூ.5 என்ற விலை ஒரு பெரிய அட்ராக்‌ஷன். நல்ல விளம்பரம் இன்னொரு அட்ராக்‌ஷன். இதழ் மிகவும் தரமாக இருக்கிறது. வழக்கமான பத்திரிகை ஃபார்மேட்டில் இல்லாமல், வேறு ஒரு பாதையை உருவாக்குகிறது புதிய தலைமுறை. ஆங்கில டைம் இதழின் சாயல் உள்ளடக்கத்திலும் வடிவமைப்பிலும் நிறைய உண்டு. இளைஞர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய ஆர்வங்கள் இப்படித்தான் என்று வெகுஜன மனத்தில் ஒரு ஸ்டீரியோடைப்பிங் இருக்கிறது. அதை முற்றிலும் மாலன் உடைத்திருக்கிறார். அவர்களுடைய சுவைக்கு ஏற்றார்போல் செய்திகளைக் கொடுப்பதைவிட, எதையெல்லாம் அவர்கள் தெரிந்துகொண்டால் பயனுடையதாக இருக்கும், வாழ்க்கைக்கு உதவும், மேம்பாடுக்கு உதவும்  என்ற கண்ணோட்டத்தில் ஒரு தப்படி முன்னே நகர்ந்து யோசித்திருக்கிறார் மாலன்.

2. சூரிய கதிர்: இதழாளர் ராவ்வை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி இருக்கும் இதழ். வெகுஜன ரசனையைப் பின்பற்றி உருவாகியிருக்கும் இதழ். நிச்சயம் மிடில்கிளாஸைச் சேர்ந்த வாசகர்களுக்கு சூரிய கதிர் பிடிக்கும். விளம்பரம் போதவில்லை. விலையும் கூடுதலோ என்ற எண்ணம் இருக்கிறது.

3. திரிசக்தி, தேவதை: கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் சுந்தரராமனின் இதழ்கள் இவை. திரிசக்தி ஆன்மிக இதழ். ஆசிரியர்: பி.சுவாமிநாதன். தேவதை பெண்கள் இதழ். ஆசிரியர்: தயாமலர். இரண்டுமே மிக அற்புதமாக உருவாகி இருக்கின்றன. இன்றைய வாசகர்களின் தேவைகளை நன்கு உணர்ந்து இவ்விதழ்கள் கட்டுரைகளை வெளியிடுகின்றன. தமிழ் இதழ்களிடையே போட்டி மிகுந்திருக்கும் சூழ்நிலையில், திரிசக்தி 70,000 பிரதிகள் விற்பனை ஆவதாக சுந்தரராமன் ஒரு விழாவில் குறிப்பிட்டார். மார்க்கெட்டிங் பலம் என்பது அதுதான். உள்ளடக்கம் நன்றாக இருப்பதோடு, போதிய அளவு ஃபீல்ட் ஒர்க் செய்யவேண்டும். அப்போதுதான், இதழ்கள் மக்களிடம் போய்ச் சேரும். இரண்டுமே நன்கு சேர்ந்திருக்கின்றன. திரிசக்தி தீபாவளி மலரும் வெளியிட்டது.

4. சுபவரம்: இதழாளர் ம.கா.சிவஞானம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியிருக்கும் புதிய ஆன்மிக மாத இதழ். தேர்ந்த இதழ் தயாரிப்பு. ஆன்மிக இதழ்களை வாசிப்போரின் தேவைகளை உணர்ந்துகொண்ட உள்ளடக்கம். போதிய விளம்பரமும் மார்க்கெட்டிங்கும் இல்லாததால், அதிகம் இந்த இதழ் தெரியவில்லை.

5. தஞ்சாவூர் கவிராயர், சுந்தர்ஜி : இரண்டுமே தனி நபர்களின் தனி இதழ்கள். அவரவர்களின் வாசிப்பு, ஆளுமை, தேர்ந்த ரசனை ஆகியவற்றை நேரடியாக இவ்விதழ்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நல்ல கான்செப்ட்.

6. அகநாழிகை: பொன்.வாசுதேவனை ஆசிரியராக இருந்து வெளியிடும் இதழ். சிறுபத்திரிகைகளில் படைப்பிலக்கியத்துக்கு மீண்டும் கவனம் திரும்பியிருக்கிறது. அகநாழிகை எனக்கு நம்பிக்கை தரும் இதழாக இருக்கிறது.

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் – என் அனுபவம்

Posted in இதழியல் on December 17th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

சென்ற வாரக் கல்கி இண்டர்நெட் இதழைப் பலர் பார்த்திருப்பீர்கள். படித்திருப்பீர்கள். படித்த நண்பர்கள் தொடர்ந்து மின்னஞ்சல் செய்தார்கள். தொலைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். குறை சொன்னார்கள். இட்லிவடை தன் வலைப்பதிவில் இதழைப் பற்றி விரிவான விமர்சனம் எழுதியிருக்கிறார். அவர்கள் அனைவருக்கு என் நன்றி.

கல்கி இதழ் தயாரிப்பு நல்ல அனுபவம். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பு, கல்கியின் ஆசிரியர் சீதா ரவி என்னைக் கூப்பிட்டு, இண்டர்நெட் சிறப்பிதழ் பற்றிப் பேசினார். உற்சாகம் தொற்றிக்கொண்டது. இரண்டு மூன்று வாரங்களில் உள்ளடக்க லிஸ்டோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். உடனே வீட்டுக்கு வந்து எனக்குத் தெரிந்த செய்திகளை எல்லாம் எழுதி லிஸ்ட் போட ஆரம்பித்தேன். என்ன சொல்லலாம், சொல்லக்கூடாது என்று யோசிக்க யோசிக்க கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட செய்திகள், கட்டுரைகளுக்கான ஐடியாக்கள் தோன்றின.

அந்த லிஸ்ட்டை ஒரு வாரம் வைத்துக்கொண்டு மீண்டும் பார்த்தேன். பல செய்திகள் மிகவும் வறட்சியாக இருந்தன. எனக்கு விஷயம் தெரியும் என்பதற்காக இதையெல்லாம் எழுதுவது போல் தோன்றியது. கல்கி வாசகர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ரொம்ப டெக்னிக்கலாக இருந்தால், எவராலும் இதழை ரசிக்க முடியாது. கல்கி அப்படிப்பட்ட இதழும் அல்ல. அது எல்லோருக்குமான இதழ்.

பல தரப்பட்ட வாசகர்கள், பலதரப்பட்ட ரசனையோடு இருக்கிறார்கள். என் ரசனை, என் ஆர்வம், என் தேவைகள், அடுத்தவர்களின் ரசனையாக, ஆர்வமாக, தேவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. என் ரசனைக்கான இதழை நான் தயாரிக்கவில்லை. மற்றவர்களின் ரசனைக்கான, தேவைக்கான இதழாக இது இருக்கவேண்டும் என்று தோன்றியது.

லிஸ்ட்டை முற்றிலும் மாற்றி எழுதினேன். அதற்கு முன்னர் பழைய கல்கி இதழ்களில் ஐந்தாறு இதழ்களை வரிவிடாமல் படித்தேன். கல்கி படிக்கும் வாசகர்களையும் அவர்களுடைய ரசனைகளையும் புரிந்துகொள்ளும் முயற்சி அது. இப்போது லிஸ்ட் ரெடி.

ஆனாலும் மீண்டும் கல்கி ஆசிரியரைப் போய் பார்க்கும் தைரியம் வரவில்லை. இண்டர்நெட் என்பது இன்றைக்கு இளைஞர்களையே அதிகம் கவர்ந்துள்ளது. எவ்வளவுதான் பெரியவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இணையம் என்னவோ இளைஞர்களின் சிம்பளாகவே இருக்கிறது. இளைஞர்களின் சுவைகளை புரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றியது.

எளிமையாக ஒரு வேலை செய்தேன். என் மூத்த மகள், எதிர்ஃப்ளாட் பெண், இன்னொரு கல்லூரி மாணவன், இன்னொரு உறவினர் பெண் என்று சின்னவர்களாகப் பார்த்து தேர்வு செய்துகொண்டேன். என் வீட்டுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் வரும் இதழ்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கட்டுரையாக பிரித்து, ஒவ்வொருவரின் ரசனை எப்படி இருக்கிறது என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். என் கருத்து என்று எதையும் சொல்ல முற்படவில்லை. அவர்களாகவே எந்தெந்த விஷயங்களை, கட்டுரைகளை, படங்களை எடுத்துப் படிக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒருவிதமான பேட்டர்ன் உருவாக ஆரம்பித்தது.

இப்போது முற்றிலும் வேறொரு கட்டுரை லிஸ்ட்டை உருவாக்கினேன். மீண்டும் சீதா ரவியைச் சந்திக்கச் சென்றேன். ஒவ்வொரு கட்டுரையையும் விளக்கினேன். எந்தக் கட்டுரையும் ஒன்றிரண்டு பக்கங்களுக்கு மேல் போகக்கூடாது என்பதை கட்டுப்பாடாக வைத்துக்கொண்டேன். ரொம்ப தேவைப்பட்டால், மூன்று பக்கங்கள். அவ்வளவுதான்.

வேலை ஆரம்பித்தது. ஒவ்வொரு கட்டுரையாக எழுத ஆரம்பிக்க, இன்னும் வறட்சியான விஷயங்கள் என்று ஒரு சில கட்டுரைகள் தோன்றின. கல்கியின் துணை ஆசிரியர்களோடு கட்டுரை சப்ஜெக்ட்டை எடுத்துப் பேசி, எப்படி எளிமையாகத் தருவது சரியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். வேகம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. 14 கட்டுரைகள் எழுதி முடித்தேன்.

பா.ராகவனைக் கதை எழுதச் சொன்னேன். முதலில் ஒத்துக்கொண்டார். புத்தகக் கண்காட்சி காரணமாக கடைசிநேரத்தில் வேலைப் பளு அதிகமானதால், எழுத முடியாமல் போனது. உடனே என்.சொக்கன். ஒரே இரவில் கதை எழுதிக் கொடுத்தார். டோண்டு ராகவனை அவருடைய அனுபவங்களை எழுதச் சொன்னேன். எழுதி அனுப்பினார். அனுபவத்தை விட, தகவல்களே ஆக்கிரமித்துக்கொண்டு இருப்பது போல் தோன்றியது. போன் போட்டு, காதாற விஷயங்களை முழுமையாக வாங்கிக்கொண்டேன். விறுவிறுவென்று மாற்றி எழுதினேன். நல்ல ஹியூமன் ஸ்டோரியை, தகவல்களால் போட்டு சாகடித்த பாவம் என்னைச் சேரக்கூடாது அல்லவா?

நடுவே அவ்வப்போது கல்கி அலுவலகத்துக்குப் போய் லே அவுட் பார்த்தேன். சென்ற வெள்ளிக்கிழமை மாலை இதழைப் பார்த்தேன். பிறந்த குழந்தையைத் தூக்குவது போலிருந்தது. கல்கி இதழை வாங்கிக்கொண்டு வெளியே வந்தவன், பிரிட்ஜ் ஏறி, காசி தியேட்டர் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு, இதழை முழுமையாகப் படித்து முடித்தேன். மனம் மகிழ்ச்சி கொண்டது.

இதழ் தயாரிப்பு என்பது ஒரு பொறுப்பு. என் சொந்த மேதாவித்தனத்தைக் காட்டும் இடமல்ல அது. மேலும், சொந்தக் காசில் சூன்யம் வைத்துக்கொள்ளலாம், அடுத்தவர் காசில் அவர்களுக்கே அதைச் செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். நான் தயாரித்த இதழால், விற்பனை அதிகமாகிறதோ இல்லையோ, குறையாமல் இருக்கவேண்டும் என்ற பயமே என்னிடம் ஆழமாக இருந்தது.

கல்கி இதழ் வந்த நாளில் இருந்து, மூத்த பத்திரிகையாளர்கள் கூப்பிட்டு பாராட்டு தெரிவித்தனர். இரா. முருகன் மகிழ்ச்சி கொப்பளிக்கப் பேசினார். என் உறவினர்கள் ஆச்சரியப்பட்டனர். இலக்கிய நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள். கல்கியின் சர்க்குலேஷனில் இருக்கும் நண்பரை ஆஞ்சநேயர் கோவிலில் பார்த்தேன். முகமெங்கும் ஆனந்தம். கைகுலுக்கினார்.

நான் தப்பு செய்யவில்லை, என் கணிப்புகள் பிசகிப்போகவில்லை என்பதை மட்டும் புரிந்துகொண்டேன்.

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ்

Posted in இதழியல் on December 9th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

வரும் ஞாயிறன்று வெளிவரும் கல்கி இதழ், இண்டர்நெட் சிறப்பிதழ். 20.12.2009 தேதியிட்ட இதழ், 13.12.2009 அன்று கடைகளில் கிடைக்கும். அந்த இதழை நான் தயாரித்திருக்கிறேன். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உற்சாகமான வேலை. இதழைப் பார்த்துவிட்டு, படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை எழுதுங்கள். இதழ் தயாரித்த அனுபவத்தை அடுத்த நேசமுடன் மடல் இதழில் எழுதுகிறேன்.

புது இதழ் : சூரிய கதிர்

Posted in இதழியல், புதிய இதழ் on November 18th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments
சூரிய கதிர்

சூரிய கதிர்

திரைப்படம் தயாரிப்பது போல், பத்திரிகை தொடங்குவது பலருக்கு கனவாக இருக்கிறது. தங்களிடம் சமூகத்துக்குச் சொல்ல ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது அல்லது மற்ற பத்திரிகைகளைவிட தம்மால வித்தியாசமாக ஏதோ ஒன்றைச் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது. இதன் பயனாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் பத்திரிகைத் தொழிலுக்குள் கால்பதித்து வருகிறார்கள். சமீபத்தில் அப்படி கால்பதித்திருப்பவர் ஒரு மருத்துவர்: டாக்டர் கை. கதிர்வேள். மூத்த பத்திரிகையாளர் ராவ்-வை ஆசிரியராகக் கொண்டு, டாக்டர் கை.கதிர்வேளை பதிப்பாசிரியராகக் கொண்டு ‘சூரிய கதிர்’ என்ற மாதமிருமுறை வெகுஜன இதழ் வெளியாகி இருக்கிறது. சப்டைட்டில், ‘சுள்ளுன்னு கொஞ்சம் ஜில்லுன்னு…’ என்று சொல்லுகிறது. இதுதான் சூரிய கதிரின் குறிக்கோள் போலிருக்கிறது. முதல் இதழ் நவம்பர் 16 தேதியிட்டு, நவம்பர் 14ஆம் தேதி கடைகளுக்கு வந்தது. ‘ஐ லவ் தமிழ் – இலியானா இச்ச்!’சுடன் முதல் அட்டை, கவர்ச்சிகரமாக இருக்கிறது.

புதிய இதழ்களில் புதிய அம்சங்களைச் சுலபமாகச் செய்ய முடியும். பாரம்பரியம் என்ற சுமை அதற்குக் கிடையாது. புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த, எழுத்து முறைகளை முயன்று பார்க்க, புதிய அம்சங்களை, வடிவங்களை எல்லாம் செய்து பார்க்க புதிய இதழ்கள் எப்போதும் பயன்படக்கூடும். வெகுஜன வாசிப்புக்கு ஏற்ற புதிய படைப்புகளை உருவாக்க, வெகுஜன இதழ்கள் உதவக்கூடும். சூரிய கதிர் அதையெல்லாம் செய்கின்றவனா என்று பார்க்கவேண்டும்.

இதழ் முழுவதும் கலர்ஃபுல் விஷயங்கள். நேற்றைய இன்றைய பிரபலங்கள், எல்லா பக்கங்களில் அணிவகுத்திருக்கிறார்கள். 80 பக்கங்கள். நிறைய கட்டுரைகள். இதழ் முழுவதும் features அம்சங்கள் கூடுதல். வெகுஜன இதழுக்கான அத்தனை அம்சங்களும் இங்கே ஆஜர்.  மொத்த இதழையும் படித்த பின்னர், எனக்குப் பிடித்த அம்சங்கள் இவை:

1. ஜெயேந்திரர் கைதுக்குப் பின்னர், அவரை விரிவாக பேட்டி எடுத்துப் போட்டிருக்கும் முதல் இதழ் இதுதானோ என்னவோ? பத்திரிகைகள், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோதும் அதற்குப் பின்னரும் அவரைத் தொடத்தக்கவர் அல்ல என்று விலக்கி வைத்திருந்தன. அதற்கு முன்னர் இதே பத்திரிகைகள், அவரைப் பற்றிப் பக்கம் பக்கமாக புகழ்ந்து எழுதித் தள்ளின. இப்போது, இந்தப் பேட்டியில், ஒரு நிதானம் இருக்கிறது. பக்குவம் இருக்கிறது. பேலன்ஸ் இருக்கிறது.

2. சின்னகுத்தூசியின் ‘சட்டமும் மக்களும் – அதுவா இதுவா?’ என்ற இரண்டு பக்கக் கட்டுரை இருக்கிறது. பழைய அரசியல் செய்திகளைச் சுவாரசியத்தோடும் விவர ஞானத்தோடும் எழுதத் தெரிந்த ஒரு சிலரில் சின்னகுத்தூசி ஒருவர். அவரது கட்டுரை சிற்பம் செதுக்கினார் போல் இருக்கும். இந்தக் கட்டுரையும் அப்படியே. தேர்ந்த பத்திரிகையாளரின் கைவண்ணம் அதில் மிளிர்கிறது.

3. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், தமிழச்சி தங்கபாண்டியனின் அழகு பற்றிய கட்டுரை, வைகோ பேட்டி எல்லாம் நல்ல சுவாரசியத்துடன் எழுதப்பட்டுள்ளன.

4. சீனா பற்றிய கட்டுரை, டாக்டர் கை.கதிர்வேளின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ கட்டுரை ஆகியவை முக்கியமானவை.

கூடவே நிறைய கேள்விகளும் தோன்றின. அவை:

1. ஏன் எல்லா கட்டுரைகளும் பேட்டிகளும் ‘கீர்த்தனாரம்பத்திலே…’ என்று தொடங்குகின்றன? ஜெயேந்திரர் பேட்டி, அவருக்கு எட்டு வயதில் பூணூல் போட்டதில் இருந்து தொடங்குகிறது. வைகோ பேட்டி, ‘பிறந்த ஊரில் மறக்க முடியாத விஷயங்கள்?’ என்று தொடங்குகிறது, கே.எம். செரியனின் பேட்டி இப்படித் தொடங்குகிறது ‘ஐந்தேகால் அடி கம்பீரமான உயரம். எப்போதும் மாறாத 66 கிலோ எடை…’ இதெல்லாம் கொஞ்சம் Cliché  இல்லையோ? இப்படி நிறைய முறை ஏற்கெனவே எழுதி எழுதித் தேய்த்துவிட்டோமே? பொதுவாக வெகுஜன பத்திரிகை பேட்டிகள், பேட்டி கட்டுரைகள் எல்லாம் சமீபத்திய விவரங்களில் இருந்து தொடங்கி, மேலே எழுந்து செல்லுமே அன்றி, முன்கதை சுருக்கம் மாதிரி இருப்பதில்லை.

2. டீக்கடை பெஞ்சு, கழுகார் பாணியில், அரசியல் பேசும் நால்வர் அணியின் பத்தி ஒன்று இருக்கிறது. ஆனால், அதில் சுவாரசியமான விஷயங்கள் வெளிவந்திருக்கிறதா என்பது முக்கியம்.

3. பாலகுமாரன் தொடர் ஒன்று ஆரம்பித்திருக்கிறார். அவரது எழுத்தில் கவர்ச்சி காணாமல் போய் ரொம்ப நாளாச்சு இல்லையோ? புதிதாக என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்கவேண்டும்.

4. இவ்வளவு பக்கங்கள் கொண்ட இதழில் ஒரு சிறுகதை கூட இல்லை. கதைக்கான காலம் முடிந்துபோய்விட்டது என்று சொல்லாமல் சொல்லுகிறார்களோ?

5. டோட்டல் வேஸ்ட் என்று சொல்லவேண்டுமென்றால், அந்தப் புகழ் கடைசி பக்கத்துக்குப் போய்ச் சேரும். சும்மா வெள்ளைத்தாளாய் விட்டுவிட்டால் கூடப் பரவாயில்லை. இயக்குநர் பார்த்திபனின் உளறல் சகிக்கவில்லை. இரண்டாவது வேஸ்ட், பாஸ்கியின் இரண்டு பக்க அறுவை. தாங்க முடியவில்லை. கிச்சுகிச்சு மூட்டினால் கூட சிரிப்பு வந்துடும். இதில் அதுகூட வரமாட்டேன் என்கிறது.

6. என் வருத்தங்களில் முக்கியமானது, புதியவர்களின் பங்களிப்பு இந்த இதழில் எங்கேயும் காணக்கிடைக்கவில்லை என்பதுதான். ஏற்கெனவே பிரபலமானவர்கள், அல்லது சமீபத்தில் பிரபலமானவர்கள்தான் இதழ் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நாளைய பிரபலங்களை, இன்றே இனங்காணுவது இன்னும் சிறப்பு இல்லையா?

இன்றைக்கு இருக்கும் வர்த்தக போட்டியில், எப்படி இந்த இதழைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. 14ஆம் தேதி சென்னை சுவர்களில் கொஞ்சம் போஸ்டர்கள் பார்த்தேன். கடைகளில் போஸ்டர்கள் காணோம். பெரிய விளம்பரம் காணோம். கொண்டாட்டங்களும் மிஸ்ஸிங். இன்றைக்கு வெகுஜன இதழ் தொடங்குவது என்பது அமைதியான விஷயமில்லை. புதுப்பட தொடக்க விழா பூஜை மாதிரி பெரிய அளவில் செய்தால்தான், கொஞ்சமாவது வாசகர்களின் கவனத்தைக் கவர முடியும்.

மேலும் இதழின் விலை ரூ.15. ரூ.10 என்பது ஒரு பெரிய தடுப்பு. பலர் ரூ.10ஐத் தாண்டி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள். இந்த விலையை, வாசகர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்றும் பார்க்கவேண்டும்.

சூரிய கதிர் – வெகுஜன வெரைட்டி மசாலா.

ஜால மொழி ஜித்தர்கள்

Posted in இதழியல் on November 18th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

‘ஏ.பி.சி. என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங்! ஆக்‌ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்ஸ்…’

‘மணிரத்னம் படம் ஒரு பக்கம் மணியடிக்க, ஃப்ரீ பிகினி மறுபக்கம் கிர்ரடிக்க வைக்கும் ப்ரியாமணிக்கு, இதுதான் பீக்!’

‘சிம்புதேவனின் கிளாஸிக் மேஜிக்கில் அடுத்த களம், கௌபாய் கதகளி! ஆக்ஷன், காதல், யதார்த்தங்களுக்கு நடுவே காமிக்கல் கலர் வெடிவைக்கிற சிம்புதேவனின் ஃபார்முலா இப்போ ‘இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்.’ இந்த முறை கொஞ்சம் காஸ்ட்லி வெடி! ‘

‘முமைத்கான்… பார்த்தாலே பற்றிக்கொள்ளும் பாஸ்பரஸ். அம்மாடி… பம்பரக் கண்ணால் காதல் தாண்டியும் சங்கதி சொல்லும் சிக்கிமுக்கி நெருப்புடன் ஒரு சிக்லெட் பேட்டி! ‘

வெகுஜன இதழ்களில் எழுதப்படும் கவர்ச்சிகரமான மொழியின் சில சாம்பிள்கள்தான் மேலே. பல எழுத்தாளர்கள் வெகுஜன எழுத்து முறையை ஏதோ தீண்டத்தகாத ஒன்று போல் நினைக்கிறார்கள். அல்லது புறங்கையால் புறமொதுக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள். இன்னும் கொஞ்சம் சுத்தமானவர்கள், அதில் மொழிக் கலப்பு, மொழிச் சிதைவு, மொழி இழிவு என்றெல்லாம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.

பல்வேறு விதமான வெகுஜன எழுத்து முறை உண்டு. இதில் ‘வெகுஜன’ என்ற சொல் வசதி கருதி பயன்படுத்தப்படுகிறதே அன்றி, குறையாகவோ, கொச்சையாகவோ பயன்படுத்தவில்லை. பொதுவாக எல்லா தரப்பு வாசகர்களும் ரசிக்கும்படி எழுதவேண்டும் என்று ஒவ்வொரு எழுத்தாளரும் விரும்புவார்கள். படைப்புகளில் இது ஒருவிதமாக இயங்கும் என்றால், பத்திரிகைக் கட்டுரைகளில், பேட்டிக் கட்டுரைகளில் வேறு விதமாக இயங்கும். படிக்கும்போதே துள்ளலும் குதியலும் சேர வேண்டும். மகிழ்ச்சி மேடையேற வேண்டும்.

அப்படிப்பட்ட மொழியை எல்லோரும் சுலபமாகப் பெற்றுவிட முடியாது. ஒரு சிலருக்கு அது இயல்பாக வரலாம். எழுத்தாளர் சுஜாதா இதற்கு சரியான உதாரணம். பல பத்திரிகையாளர்கள், படாத பாடுபட்டு அப்படிப்பட்ட துள்ளலைத் தம் மொழிக்குள் கொண்டுவருவதைப் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக, சினிமா நடிகைகள், நடிகர்களின் பேட்டிகள், பேட்டிக் கட்டுரைகளின் ஆரம்பப் பத்திகளில் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக இப்படியொரு மொழி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒன்றிரண்டு ஆரம்ப அறிமுக வரிகளை எழுதுவதற்குள் விழி பிதுங்கிவிடும். எல்லாமே புது வார்த்தைகளாக இருக்கவேண்டும். இன்றைய இளைஞர்களின் அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் சொற்களாக இருக்கவேண்டும். அல்லது சமீபத்தில் ஹிட்டான பாடல் வரிகளாக இருக்கவேண்டும். அல்லது கவிதைக்கான அம்சத்தைக் கொஞ்சம் தொட்டுக்கொள்ள வேண்டும். சொல்லும்போதே, படிக்கும்போதே, வாசகனை உள்ளே இழுத்துக்கொள்வதாக இருக்கவேண்டும்.

இந்த மொழியை வளர்த்துச் செம்மைப்படுத்தியதில் ஆனந்த விகடனுக்கு முக்கிய பங்குண்டு. அங்கே எழுதும் கட்டுரையாளர்கள், இத்தகைய வார்த்தை ஜாலத்தைச் சுலபமாகக் கற்றுக்கொண்டுவிடுவார்கள். படிக்கும் வாசகர்களின் இன்றைய சுவையை, ரசனையை மனத்தில் கொண்டு எழுதப்படும் வரிகள் இவை. ஆனந்த விகடன் பட்டறையில் இருந்து வெளிவந்த பலருக்கும் இத்தகைய அலங்கார மொழி உண்டு.

இதை ஒன்றிரண்டு வரிகள்தான் எழுத முடியும் என்றில்லை. நீண்ட கட்டுரைகளையே இதுபோன்ற அலங்கார ஜால மொழியில் எழுத முடியும். பெரிய கட்டுரையாக எழுதும்போது, வெகுஜன கவர்ச்சி மொழி இன்னும் நெகிழ்வுத் தன்மையோடு செயல்படும். கீழே கொஞ்சம் உதாரணங்கள்:

‘மழலைக்குரல் மீனாவும், மன்மத ராக்கெட் ரம்பாவும் இப்பவே கண்ணாடி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஜோதிகாவும் அந்த லிஸ்டில் இருப்பதுதான் ஆச்சர்யம். உதவி இயக்குனர் ஸ்கிரிப்டோடு அருகில் வந்தால் “படிச்சு காட்டிடுங்க. ஒப்பிச்சிடுறேன்” என்று சொல்கிற நிலையில்தான் இருக்கிறது இவர்களின் படிப்பறிவு. படிப்பில் ஒன்றும் குறையில்லை. பார்வையில்தான் இவர்களுக்கு சின்ன குறை. கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ, மேற்படி நடிகைகள் கண்ணாடி போட்டால்தான் படிக்க முடியும் என்ற நிலையில் இருக்கிறார்கள். இனி இவர்கள் கவலையை தூக்கி சுனாமியில் போட்டுவிட்டு நிம்மதியாக படிக்கலாம். சின்ன சின்ன எழுத்துக்களை கூட! ‘

‘விக்னேஷுக்கு மேலே, கரணுக்கு கீழே என்பது மாதிரிதான் இருக்கிறது ஷாமின் மார்க்கெட்! இவர் நடித்து எந்த படமும் ஹவுஸ்புல் ஆனதில்லை என்பது கலையுலகத்தின் கல்வெட்டு. அப்படிப்பட்ட ஷாமுக்கே ஆயிரம் தெனாவட்டு! இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் ஒருவரே, ‘ஷாமா? அவர் இருக்கும் பக்கமே இனி தலை வச்சு படுக்க மாட்டோம்’ என்று ஓப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார்.’

’இலியானாவின் இடுப்புக்கு ஆந்திராவையே எழுதி வைக்க துடிக்கிறார்கள் தெலுங்கு தேச கண்மணிகள். தனது படத்தில் எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று துடிதுடித்த பிரபுதேவா, அதற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் தருவதற்கு தயார் என்றார். விஜய், அஜீத் என்று இளசுகளின் தேசத்தில் இலியானா என்ற வைரத்தின் விலை எக்கச்சக்கம்! நிலைமை இப்படியிருக்க, ரஜினி படத்தில் ஜோடியாக நடிக்க கேட்டதும், தமிழ் நாட்டுக்கே ஓடி வந்தார் இலியானா. வந்தவருக்கு ஆந்திர மிளகாயை ஊட்டி அனுப்பியிருக்கிறார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா!’

’ரஜினி, கமல், விஜய், அஜீத்களே வெரைட்டி விருந்து வைத்தால்தான் தியேட்டருக்குள் கூட்டம் வருகிறது. சேனல்களில் மட்டும் உட்டாலக்கடி அடித்துக்கொண்டே இருக்க முடியுமா? ‘கனாக் காணும் காலங்கள்’ சக்சஸ் ஃபார்முலாவில் லொகேஷன் மட்டும் மாற்றம் செய்து, அடுத்த ஜில் ஜாலி கலாட்டாவை ஆரம்பித்துவிட்டது விஜய் டி.வி. இதுவரை சிட்டி பள்ளிக்கூடத்தில் ஜுஜுலிப்பான சேட்டைகள் செய்து வந்த மாணவர்கள் கும்பல், இனி அலப்பறை கொடுக்கவிருப்பது பட்டி பள்ளிக் கூடத் தில்! தேனி குமரகுருபரர் மேல்நிலைப் பள்ளிக்கூடம்தான் இனி ‘கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்!’ ’

ஆனந்த விகடன் எடிட்டோரியலில் இருப்பவர்களைத் தவிர்த்து, நான் பார்த்து பத்திரிகைத்துறையில் இதுபோன்ற ஜால மொழி எழுதுவதில் இரண்டு பேர்கள் பயங்கர எக்ஸ்பர்டுகள். ஒருவர் எம்.பி.உதயசூரியன். புதிய தலைமுறை இதழில் துணை ஆசிரியராக இருக்கும் இவரது மொழி, கற்கண்டு போல் இனிக்கும். இவரும் விகடன் பட்டறையில் மெருகேறியவர். தமிழ் சிஃபியில் இவர் எழுதிய சினிமா செய்திகள், பேட்டிகள் எல்லாம் அவ்வளவு சுவையானவை. ரசிக்கத்தக்கவை. இன்றைக்கு அந்த வலைத்தளத்தை மூடிவிட்டார்கள். இல்லையென்றால், எண்ணற்ற உதாரணங்களை எடுத்துக் காட்டியிருக்க முடியும். இன்னொருவர் ஆர்.எஸ். அந்தணன். தமிழ்சினிமா டாட் காம் வலைத்தளத்தில் அந்தணன் எழுதும் சினிமா செய்திகளைப் படித்துப் பாருங்கள். ‘கிக்’கேற்றும் மொழி.

மொழிப் பயன்பாட்டில் பாணி (ஸ்டைல்) மிகவும் முக்கியம் என்று கருதுபவன் நான். ஸ்டைல் இல்லாமல் சுவாரசியம் இல்லை. வாக்கிய அமைப்பு, பயன்படுத்தப்படும் சொற்கள் எல்லாம் இதில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சுத்தபத்தம் அவசியமில்லை. சொல்லும் செய்தியை இந்தப் புதிய பாணி எழுத்துமுறை சட்டென தனித்துக் காண்பித்துவிடும். கவனத்தைக் கவருவதாக இருக்கும். வித்தியாசமாகத் தெரியும். வாசகனிடம் எளிமையாகப் போய் சேர முடியும்.

அந்த வகையில் இரண்டு எழுத்து ஸ்டைலிஸ்டுகளை நான் தொடர்ந்து வாசித்து வருபவன். ஒருவர் பா.ராகவன். இன்னொருவர் எல்லே ராம் என்று அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம். பா.ராகவனுக்கு முன்னோடி ஒருவர் உண்டு. எழுத்தாளர் ம.வே.சிவகுமார். அவரும் எழுத்தை இழைத்து இழைத்து மெருகேற்றுவார்.

இன்றைக்கு தொலைக்காட்சியும் சினிமாவும் வாசகர்களுக்கு வேறொரு அனுபவத்தைக் கொடுத்திருக்கின்றன. அவர்களுடைய மொழியும் ஒலியும் இத்தகைய ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அழகியல் காட்சி ஊடகங்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள, பத்திரிகைகளுக்கு ஜாலம் செய்யும் மொழி அவசியமாகிறது. இல்லையெனில், வாசகன் பக்கங்களைத் தள்ளிக்கொண்டே போய்விடுவான்.

இதில் ஒரே ஒரு அபாயம் உண்டு. மொழியில் ஜாலம் செய்ய முற்படும்போது, அதில் சொல்லவேண்டிய செய்தியின் வீர்யம் குறைந்துபோகலாம். தீவிரத்தன்மையும் குறையாமல், அதே சமயம் அசத்தல் மொழியும் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்! இவர் வாசகர்களை நோக்கிப் போகவேண்டாம், வாசகர்களே இவரைக் கண்டுபிடித்து, கொண்டாடி மகிழ்வார்கள், சுஜாதாவைக் கொண்டாடியதைப் போல.

எழுத்தும் எடிட்டிங்கும்

Posted in இதழியல், இலக்கியம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

நண்பர் ஒருவர் தான் எழுதிய கதையை என்னிடம் அனுப்பினார். ஏ4 பக்க அளவில் 3.25 பக்கம். கதை நன்றாக இருந்தது. பேசும்போது, இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே, ஏன் சின்னதாக எழுதினீர்கள் என்று கேட்டேன். ‘600 வார்த்தைகள் லிமிட்’ என்றார் அவர். முன்பெல்லாம் பத்திரிகைகள் 4 பக்க அளவு என்று சொல்லுவார்கள். இப்போது வார்த்தை எண்ணிக்கை அளவுக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். என்னால், எப்போதும் சின்னதாக கதை எழுத முடிந்ததில்லை. எல்லாமே பெரிய கதைகள்தான் எழுதியிருக்கிறேன்.

அதேசமயம் பத்திரிகைகளின் பக்க அளவு பிரச்னை, மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களால், பல சமயங்களில் 4,5 பக்கங்கள் ஒதுக்குவது மிகவும் கஷ்டம். அந்த நான்கு ஐந்து பக்கங்களுக்குள்ளும் இரண்டு மூன்று ஜோக்குகள், ஒன்றிரண்டு துணுக்குகள் ஆகியவற்றுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். இல்லையெனில்,  பக்கம் முழுவதும் ஒரே எழுத்தாக நிரம்பியிருக்கும். பார்க்கவே ரிலீஃப் இருக்காது. அதற்காக என்னால் என் கையைக் குறுக்கிக்கொண்டு, பக்க அளவுகளுக்கு உள்ளோ, வார்த்தை எண்ணிக்கைக்குள்ளோ எழுத முடிந்ததில்லை.

இதற்கு நான் ஒரு வழி கண்டுபிடித்துக்கொண்டேன். சமாதானம்தான். என் போக்கில், கதை கோரும் அளவுக்கு ஏற்ப விரிவாகவோ சுருக்கமாகவோ எழுதிவிடுவேன். அப்புறம், பத்திரிகைகளுக்கு அனுப்பும்போது, அங்கே இருக்கும் துணை ஆசிரியர்களிடம் பக்க அளவுக்கு ஏற்ப வேண்டியதை எடுத்துக்கொண்டு, மிச்சத்தை வெட்டிவிடுவதை செய்துகொள்ளுமாறு சொல்லிவிடுவேன். என் கதை வெட்டுப்படுவதை நான் பெரிய பிரச்னையாக கருதியதில்லை. என் கதை, நான் எழுதியபடியே வரவேண்டும் என்றும் அடம்பிடிப்பதில்லை. வெட்டுப்பட்ட பின்பு அதைப் பற்றி வருந்தியதும் இல்லை.

பத்திரிகைகளுக்கு பத்திரிகை, பல்வேறு தனிநபர்களின் விருப்பத்திற்கிணங்க, கதைகள் எடிட் ஆகலாம். இருவேறு எடிட்டர்கள் ஒரே முறையில் எடிட் செய்ய மாட்டார்கள். வித்தியாசம் இருக்கவே செய்யும். மேலும் கதைகளை எடிட் செய்வது என்பது மிகவும் லாகவமாகச் செய்யவேண்டிய கலை. முதலில், கதை படிக்கும் ஆர்வமும் பல்வேறு கதை சொல்லும் முறைகளைப் பற்றிய தெளிவும் இருக்கிறவர்கள் எடிட் செய்தால், அந்த எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இந்தப் பிரச்னையே வேண்டாம் என்று பல பத்திரிகைகளில் முதலிலேயே, பக்க அளவைச் சொல்லி எழுதச் சொல்லிவிடுவார்கள். அல்லது, அவர்கள் தம் பத்திரிகையில் கதைக்கு ஒதுக்கும் பக்க அளவைப் பார்த்தே எழுத்தாளர்கள் புரிந்துகொள்ளலாம். இன்னொரு வகை ஆசிரியர்கள் உண்டு. கதையைத் தேர்வு செய்துவிட்டு, பக்க அளவுக்காகச் செய்யப்பட்ட எடிட்டிங்கை, எழுதிய ஆசிரியர்களிடமே படித்துக் காட்டி, ஒப்புதல் வாங்கி வெளியிடும் பழக்கம். கதை சிறப்பானதாக இருந்தால், பொறுத்திருந்து, அதற்குத் தேவைப்படும் பக்கங்களை ஒதுக்கி வெளியிடுவது இன்னொரு முறை. ஆனந்த விகடனில், எனக்கு இரண்டு அனுபவமும் உண்டு. என்னுடைய பெரிய கதைகள் 8,9 பக்க அளவுக்கு விகடனில் பிரசுரமாகியிருக்கிறது. பாலசுப்பிரமணியம் சார் எடிட்டராக இருந்தபோது, ஒருமுறை, கடைசி சில பாராக்களை மாற்றிய விவரத்தைத் தெரிவித்துவிட்டு கதையை வெளியிட்டார்கள்.

எடிட்டிங்கின் இன்னொரு பரிமாணத்தை திருப்பூர் கிருஷ்ணனிடம் பார்த்திருக்கிறேன். எங்கே எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத அளவு எடிட் செய்வதில் அவர் சமர்த்தர். எழுதிய மூலப் பிரதியோடு வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதன் துல்லியம் பிடிபடும். ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு காட்சியிலும் அலங்காரத்துக்காக, உணர்ச்சி வெளிப்பாடாக, சிந்தனைப் பாங்காக, எழுத்தாளரே அறியாமல் பல உபரிச் சொற்களைச் சேர்ப்பது வழக்கம். படிக்கும்போது இந்தச் சொற்கள் கதையின் வளத்தை மேம்படுத்தும்; அதே சமயம் அது இல்லையென்றாலும் கதையின் போக்கு கெடாது, அழுத்தம் குறையாது. அத்தகைய சொற்களை, வரிகளை மெல்ல மெல்ல உருவி, விலக்கிவிடுவது நேர்த்தியான எடிட்டிங். திருப்பூர் கிருஷ்ணன் இதை மிகவும் கவனமாகச் செய்வார்.

அது என்ன உபரிச் சொல்? எப்படி அதைக் கண்டுபிடிப்பது? எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், என் கட்டுரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் பல இடங்களில் நான் அழுத்தம் தரவேண்டும் என்பதற்காகவே ‘தான்’ என்ற விகுதியைப் பயன்படுத்தியிருப்பேன். அதே போல், ‘ஏ’காரச் சொற்களை நிறைய பயன்படுத்தியிருப்பேன். ‘அந்த’, ‘இந்த’, ‘நான்’ என்ற சொற்களையும் நிறைய பயன்படுத்தியிருப்பேன். இதெல்லாம் எழுத்துவேகத்தில் வந்துவிழும் சொற்கள். இதையெல்லாம் நீக்கலாம். நீக்கினாலும் வரிகள் பொருள் தரும். இதுபோல் இன்னும் எண்ணற்ற உபரிச் சொற்கள் உண்டு. உபரி வரிகள் உண்டு. எழுத்தாளருக்கு எழுத்தாளர் இது வேறுபடக் கூடும்.

ஆங்காங்கே பத்திகளை உருவி எடுத்து, அளவைக் குறைப்பது, அறுவை சிகிச்சை எடிட்டிங். சுலபமான எடிட்டிங் இது. என்ன ஒன்று, படிக்கும்போது, கதை, மான் மாதிரி துள்ளித் துள்ளி ஓடும். எந்த ஒரு காட்சியும் மனத்தில் பதியாது. ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தாது. அதுவும் கோல் போஸ்ட்டைத் தொட ஓடும் கதைகளில் இது இன்னும் எளிது.

கோல் போஸ்ட் என்பது பல கதைகளுக்கு இறுதி பத்தி, வரி அல்லது சொல். மொத்த கதையும் அந்த ஒரு வரிக்கு இட்டுச் செல்வதைத்தான் குறிக்கோளாக கொண்டிருக்கும். இதுபோன்ற கதைகளில் இறுதிவரியைக் கை வைக்காமல் இருந்தால் போதும். மேலே இருக்கும் மொத்த கதையிலும் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், வேறு வகை கதை சொல்லும் முறைகள் இருக்கின்றன. கதை வாசிப்பையே அனுபவமாக மாற்றும் கதைகளில், எடிட்டிங் மிகவும் சிக்கலானது. அங்கே அறுவை சிகிச்சை எடிட்டிங் உதவாது.

பெரும்பாலும் அடுத்த நபருக்குத்தான் எடிட்டிங் சரியாக வரும். என் கதைகளை நான் எடிட் செய்வதை விட, அடுத்தொருவருடன் இணைந்து பணியாற்றும்போதுதான், பிரதி செம்மையுறும். மூன்றாவது நபருக்குத்தான் நிறைகுறைகள் பளிச்சென்று தெரியும். உலகின் பல முக்கிய எழுத்தாளர்கள், முன்னணி எடிட்டர்களுடன் இணைந்தே பணியாற்றியிருக்கிறார்கள். எடிட்டர்களின் ஆலோசனைகள் பல சமயங்களில் பிரதியை மேன்மேலும் செம்மைப்படுத்தியிருக்கிறது.

விக்ரம்சேத்தின் சூட்டபிள் பாய் நாவலை இதற்கு உதாரணமாகச் சொல்லுவார்கள். ஆறு பதிப்பாளர்களிடம் சென்ற நாவல் அது. ஒவ்வொரு பதிப்பாசிரியரும் அந்த நாவலில் வேலை செய்திருக்கிறார்கள், ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்கள். இறுதி வடிவம் பெற்றபின், அதை வைக்கிங் வெளியிட்டது. அதன் மூலப் பிரதிக்கும் பதிப்பான பிரதிக்கும் எவ்வளவு முன்னேற்றம் என்று பின்னர் பதிப்பாசிரியர் வியந்திருக்கிறார்கள்.

பத்திரிகைகளில் இது இன்றைக்குச் சாத்தியமில்லை. பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்திருப்பதாக அறிகிறேன். பிரபஞ்சனின் காதலெனும் ஏணியிலே என்ற தொடர்கதை, விகடனில் வெளியானது. விகடன் ஆசிரியரின் ஆலோசனைகளோடு அத்தொடர் எழுதப்பட்டதாகச் சொல்லுவார்கள்.

எழுத்தாளர்களே நல்ல எடிட்டர்களாக இருப்பதும் உண்டு. எழுதியதை மாற்றி மாற்றி எழுதுவது ஒருவகை எடிட்டிங். பல ஆண்டுகள் பிரதியை அப்படியே வைத்திருந்து, புது வெளிச்சத்தில், புது முதிர்ச்சியோடு, மீண்டும் படித்துப் பார்த்து திருத்துவது மற்றொருவகை எடிட்டிங். அசோகமித்திரன் இதில் மாஸ்டர். பல கதைகளில், ஒவ்வொரு சொல்லையும் அவ்வளவு பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருப்பார். அதை நீக்கினால், பொருள் சிதைந்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு.

நம்ம ஊரில், ப்ரூஃப் ரீடர்களை எடிட்டர்களாக நினைக்கிறார்கள். பதிப்பாசிரியர்கள் என்ற சாதி இங்கே மைனாரிட்டி கம்யூனிட்டி. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புகளில், எடிட்டிங்கை ஒரு பாடகமாகவேனும் வைத்து இதற்கு உயிர் கொடுக்கலாம். எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கேற்ப நுண்ணுணர்வு கொண்ட எடிட்டர்களின் எண்ணிக்கை வளரவில்லை என்பது வருத்தமான விஷயம்.

உள்ளடக்கமும் விலையும் – கடிதம்

Posted in இதழியல், கடிதங்கள் on October 20th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

புதிய தலைமுறை வாங்கிப் படித்தேன். ஏமாற்றமே அடைந்தேன். தலைப்பைத் தவிர எதுவும் புதிதில்லை. அரைச்ச மாவே எங்கும். அது வியாபாரமானால் அதன் குறைந்த விலைக்காகத்தானே தவிர அதன் உள்ளடக்கத்திற்காக அல்ல. நொந்தசாமி படம் போல பல பத்திரிகைகளின் கதம்பம்தான் இது. இது என் ஆழ்ந்த கருத்தை இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது. அது – அனுபவம் (அதிக அனுபவம்) புதுமையை தர முடியாது என்பது. ஆசிரியர் குழுவில் உள்ள அனைவரும் பழுத்த அனுபவம் உள்ளவர்கள். அவர்களால் புதுமையை தர முடியாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

புதிய தளைமுறை நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் அதன் குறைந்த விலையாலும், வியாபாரத் தந்திரத்தினாலும்தான்.

இந்தியாவின் சாபமான பழுத்த அனுபவத் தேவை இதிலும் குறை சேர்க்கிறது.

Regards,
Kumar…

உள்ளடக்கமும் விலையும்

Posted in இதழியல், புதிய இதழ் on October 14th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

வீட்டில் நான் நான்கு தினசரிகள் வாங்குகிறேன். பல ஆண்டுகளாக ஹிந்து. தினத்தந்தியையும் தினமலரையும் ஆன்லைனில் படித்துவிட்டாலும் வீட்டுக்கு தினமணி வேண்டும் என்று அதை வாங்க ஆரம்பித்தேன். அது அப்பா வீட்டுப் பழக்கம். பிசினஸ் தினசரிகளில் என் தேர்வுகள் தி மிண்ட்டும் பிசினஸ்லைனும் பிசினஸ் ஸ்டேண்டர்டும். இகனாமிக் டைம்ஸை நான் நம்புவதில்லை. பிசினஸ்லைன் நான்கு ரூபாய் பேப்பரை 1.72 காசுக்கு ஆண்டு சந்தாவில் கொண்டு வந்தார்கள். உடனே அந்தச் சந்தாவை வாங்கினேன். பூனாவில் இருந்தவரை டைம்ஸை வாங்கி அதன் ருசி கண்டதால், சென்னையிலும் அதன் சந்தாவைக் கட்டினேன். ரூ.2 பேப்பரை 82 பைசாவுக்கு (ஆண்டு சந்தா ரூ.299) தருகிறார்கள். இப்போது தி மிண்ட்டும் சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. விரைவில் அதற்கும் சந்தா கட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏனோ ஆரம்பத்தில் இருந்து எனக்கு டெக்கான் கிரானிக்களைப் பிடிக்கவில்லை.

தரத்தை நிலையாக வைத்துக்கொண்டு விலைகளுக்குள் நடக்கும் யுத்தம் இது. ஒவ்வொரு இதழும் தமக்கென ஒரு எழுதும் முறை, செய்திகளைத் தரும் முறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒவ்வொரு இதழும் சிறப்பைப் பெற்று உள்ளன. இதையெல்லாம் படிக்க வேண்டும் என்று நினைப்பவனுக்குத் தடையாக இருந்தது விலைதான். விலையும் இந்த யுத்தத்தில் சரிந்தபோது, வாங்குவது சுலபமானது.

ஒருவகையில் இந்த தினசரிகளின் உள்ளடக்கங்கள் அவ்வளவு கம்பெல்லிங்காக இருக்கின்றன. வாங்கவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவனவாக இருக்கின்றன. ஆனால், இதுநாள் வரை விலை ஒரு பிரச்னையாக இருந்தது. விலையில் ஏற்பட்டுள்ள போட்டி, வாசகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதே நிலை, ஆன்லைன் மார்க்கெட்டில் உள்ளதா என்று பார்த்தால், சந்தேகமே மிஞ்சுகிறது. இன்றைக்கு விகடன், குமுதம், நக்கீரன், துக்ளக் ஆகியவை சந்தா கட்டி படிக்கும் வலைதளங்களாக உள்ளன. அமெரிக்கா, கனடா, அமீரக நாடுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்துதான் பெருமளவு ஆன்லைன் சந்தா வருகின்றன. தமிழர்கள் அதிக அளவு வசிக்கும் இந்த நாடுகளில் இருந்து சந்தா வருவதில் அதிசயமில்லை.

ஆனால், ஒருவரே பலவேறு இதழ்களுக்கும் சந்தா கட்டுகிறாரா என்று பார்த்தால், அது சந்தேகமே. ஆன்லைனில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இதழ்களுக்குத்தான் சந்தா கட்டுகிறார்கள். இத்தனைக்கும் அச்சிதழைவிட, வலையிதழ்களின் சந்தா தொகை மிகவும் குறைவு. ஆனாலும் ஆன்லைன் சந்தா பெரிய அளவில் வளரவில்லை.

இந்த நிலையில், மீடியா பெருந்தலையான ரூபர்ட் முர்டாக், ஆன்லைன் உள்ளடக்கங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பேசிவருகிறார். சமீபத்தில் சீனாவில் முர்டாக் பேசும்போது, தேடுபொறிகளான கூகுள் போன்றவை தன் செய்திகளைத் திருடி வியாபாரம் செய்கின்றன என்று ரொம்பவும் காட்டமாகப் பேசியிருக்கிறார். ஆன்லைன் உள்ளடக்கங்களில், பல்வேறு படிப்பு சார்ந்த, துறை சார்ந்த ஜர்னல்களுக்கு எல்லா நாடுகளில் இருந்தும் ஆய்வாளர்களும் தனிநபர்களும் ஆய்வு நிறுவனங்களும் நூலகங்களும் சந்தா கட்டி வருகின்றன. ஆனால், எண்டர்டெயின்மெண்ட் உள்ளடக்கம் என்று சொல்லப்படுகிற நியூஸ், சினிமா, புத்தகங்கள் ஆகிய உள்ளடக்கங்களுக்கு யார் பணம் கட்டிப் படிப்பார்கள் என்று தெரியவில்லை.

பல வெளிநாட்டு தினசரிகள், இந்தியாவில் இந்தியா டுடே இதழிலும் கூட, அச்சிதழுக்கு சந்தா கட்டினால், நீங்கள் வலையிதழையும் இலவசமாகப் படிக்கலாம் என்று சொல்லுகின்றன. ஒரு சில அச்சிதழ்கள், அதன் சந்தாவோடு கூடுதலாக சிறிய தொகை ஒன்றையும் பெற்றுக்கொண்டு, வலையிதழை வாசிக்கத் தருவதோடு, வலையிதழுக்கென்றே புதிய உள்ளடக்கங்களையும் சேர்த்து தருகின்றன. இதெல்லாம் சந்தையில் இருக்கும் பல்வேறு மாடல்கள்.

‘புதிய தலைமுறை’ இதழ் இப்போது தமிழ் பத்திரிகையுலகில் இன்னொரு சவாலை முன்வைத்திருக்கிறது. 68 பக்கங்கள், நல்ல உள்ளடக்கம், வழவழ தாள், முழு வண்ண அச்சு, விலையோ ரூ.5. கடைக்காரர்களிடம் பேசியபோது, ‘நல்லா விளம்பரம் செய்யறாங்க சார். அஞ்சு ரூபான்னவுடனே உடனே வாங்கிடறாங்க..’ என்றார்கள்.  இதற்கு முன்னர் இதேபோன்ற ஒரு சவாலை, தினகரன் முன்வைத்தது. ரூ.1 விலை. அந்த விலை யுத்தத்தின் மூலம், இன்று தினகரனுக்கு கணிசமான ரெகுலர் வாசகர்கள் கிடைத்துவிட்டார்கள்.

வார இதழ்கள், பதினைந்து நாள் இதழ்கள், மாதாந்திர இதழ்கள் மத்தியில் இதுபோன்ற விலை யுத்தம் இல்லாமல் இருந்தது. ‘புதிய தலைமுறை’ அந்தச் சவாலை முன்வைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. நல்ல உள்ளடக்கம், நல்ல அச்சு, கைக்கு அடக்கமான விலை என்றால், நப்பாசை எழாமல் என்ன செய்யும்? சந்தா கட்டினால், இன்னும் விலை குறைவு. ரூ.3.84. (ஆண்டு சந்தா ரூ.200).

வழக்கம்போல் விமர்சனங்களும் கேட்கின்றன:

இந்தப் பத்திரிகை யாருக்குன்னே தெரியல. ஆடியன்ஸ் சரியா தெரியல.
இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி வாரி உடறாங்கன்னு பார்ப்போம்.
கொள்ள கொள்ளயா சொத்து இருக்கு. வாரி உடறாங்க.
அவருக்கு இதுலேர்ந்து பணம் வரணும்னு அவசியமில்லை. பப்ளிசிட்டிக்கு ஒரு பத்திரிகை வேண்டும்.அதனால செய்யறாங்க.
அரசியல் கட்சி தொடங்க போறாங்க. அதுக்கு ஒரு மவுத்பீஸ் வேண்டாமா?

இதெல்லாம் சவாலை நேரடியாகச் சந்திக்காமல், வளைந்து தப்பிப்பதற்கான பதில்கள். மேலே சொன்னதெல்லாம் உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், கண்ணெதிரே ரூ.5ல் ஒரு பத்திரிகை தொங்குகிறது. அது நிஜம். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

இந்தப் பத்திரிகை வேறு சில நிஜங்களை முன்னே எடுத்து வைக்கின்றன. அதில்தான் என் கவனம் குவிந்திருக்கிறது.

1. இனிமேல் தொடங்கக் கூடிய புதிய இதழ்களின் விலை ரூ.5க்கு மேல் இருந்தால், அது மார்க்கெட்டில் அடி வாங்கும். ரூ.5 என்பது ஒரு பேஸ்லைன் ஆக ஆகிவிட்டது.

2. ஏற்கெனவே ஒரு இதழ் தொடங்குவது என்பது சாதாரணர்களின் கைகளுக்கு எட்டாமல் இருந்தது. புதிய தலைமுறை செய்யும் மார்க்கெட் ஹைப், அதன் செலவு எல்லாம், மிகவும் பிரும்மாண்டமாக இருக்கிறது. பெரிய அளவில் மூலதனம் இருந்தால் மட்டுமே இனி சந்தையில் நிற்க முடியும், மக்கள் கவனத்தைக் கவர முடியும் என்ற நிலையை புதிய தலைமுறை உருவாக்கிவிட்டது.

இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் மெல்ல மெல்ல அமெரிக்கா மாதிரி முழுவதும் விளம்பர ஆதரவு பெற்ற, வாசகர்களின் கைகளில் இலவசமாகப் போகும் இதழ்களை நோக்கிப் போகிறோமோ என்று தோன்றுகிறது. ரூபர்ட் முர்டாக் இதற்கு நேர் எதிராகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். உள்ளடக்கத்துக்கு படிப்பவன் காசு கொடுக்கவேண்டும். இலவசம் கூடாது என்கிறார் அவர். என்னாகப் போகிறதோ? பார்ப்போம்.

கொச்சைப்படுத்தும் பேட்டிகள்

Posted in இதழியல், எழுத்தாளர்கள் on September 30th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழ், ‘தினமணி கதிர்’. 27.09.09 தேதியிட்ட இதழில் மூத்த கவிஞர் கலாப்ரியாவின் ஒரு பக்க பேட்டி வெளிவந்திருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகள் இவை:

1. உங்களைப் பற்றி?
2. உங்கள் இயற்பெயரே கலாப்ரியா தானா?
3. கவிதை ஆர்வம் வந்தது எப்படி?
4. உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யார்?
5. மரபுக் கவிதைகளை விட்டு நவீன கவிதைகளைத் தேர்வு செய்தது ஏன்?
6. வெளிநாட்டுப் பயணம்?
7. கவிதைகள் சார்ந்த உங்களின் வேறு பணிகள்?
8. வாங்க விரும்பும் விருது?
9. திரைப்படப் பாடல் எழுதுவீர்களா?

இப்பேட்டிக்கு எழுதப்பட்டுள்ள அறிமுக பத்திகளில் இது ஒன்று: ‘கவிதைகளில் மரபுக் கவிதை, நவீன கவிதை என்ற இருவேறு வடிவங்கள் இருந்தபோதும் நவீன கவிதையை தனது வசமாக்கி அந்த கவிதைக்காகவே கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் கலாப்ரியா.’

இந்தப் பேட்டியை இங்கே நான் பிரித்து ஆராயப் போவதில்லை. அப்படிச் செய்தால், இன்னும் நிறைய செய்திகளை எடுத்துச் சொல்ல முடியும். என் ஆதங்கம், தினமணி போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் நிறைந்த இதழிலேயே இப்படிப்பட்ட பேட்டி வந்திருப்பதுதான். அவர்களுக்குக் கலாப்ரியாவைத் தெரியாதா? தமிழில் அவர் எத்தனை ஆண்டுகளாக எழுதுகிறார், நவீன கவிதைக்கு அவருடைய பங்களிப்பு என்ன என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாதா?

அப்படி இருந்தும், அவருடன் இப்படி ஒரு ருடிமெண்டரியான பேட்டியை எடுத்துப் போடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? கலைமாமணி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவருடைய பங்களிப்பு நவீன கவிதையில் என்றுமே நின்று நிலைப்பது. அப்படி இருக்கும்போது, இந்தப் பேட்டி, அவருக்கு என்ன புகழைச் சேர்க்கிறது?

இலக்கியவாதிகள் பேட்டியின் வேலை என்ன? தெரியாத விவரங்களை, அனுபவங்களை, முயற்சிகளை, வாசிப்புகளை, நோக்குநிலைகளை அவரிடமிருந்து வெளிக்கொண்டு வருவதுதானே? அவருடைய சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக அல்லவா கேள்விகள் இருக்கவேண்டும்? அல்லது அவர் செய்யத் தவறின விஷயங்களைப் பற்றிய விமர்சனமாக கேள்விகள் அமையலாம். அரசியல் பேட்டிகளின் தன்மை வேறு. அது வேறு விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.

அந்தப் பேட்டியைப் படித்து முடிக்கும்போது, ஒரு இலக்கியவாதியின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் வாசகன் பெற்றிருக்கவேண்டும். அவனுடைய வாசிப்பு விரிவின் திசைகளைப் புரிந்துகொண்டு இருக்க வேண்டும். அதுதான் படிக்கும் வாசகனுக்குக் கிடைக்கும் பலன்.

வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்ற பெயரில், ஒரு சாதனையாளரின் 30 ஆண்டுக்கால, 40 ஆண்டுக்கால பங்களிப்பை, கூனிக் குறுகி நிற்க வைத்துவிடுகிறார்கள். பல பேட்டிகளில் இதே பிரச்னையைப் பார்க்கிறேன். இதற்குப் பின்னால் இருக்கும், ‘என்னால்தான் நீ வெளியுலகுக்கே தெரிய வருகிறாய்’ என்ற தொனி மிகவும் அபாயகரமானது. அருவருப்பானது.

மூத்த எழுத்தாளர்களிடம், கவிஞர்களிடம் பேட்டி எடுக்கும்போது, ஆரம்பிக்கும்போதே, உயரமான தளத்தில் தொடங்கவேண்டும். ஆரம்பப் பத்திகளில், அவருடைய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு, பேட்டிக்கான கேள்விகள் அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். அப்போதுதான், பேட்டிக்கும் கெளரவம், அதைக் கொடுக்கும் படைப்பாளிக்கும் கெளரவம், வெளியிடும் இதழுக்கும் கெளரவம்.

பேட்டிகளில் எரிச்சல் தரக்கூடிய ஒரு கேள்வி, எழுத்தாளன் என்றால், எப்போது சினிமாவுக்கு வசனம் எழுதுவீர்கள் என்ற கேள்வி. கவிஞர் என்றால், சினிமாவுக்குப் பாட்டெழுதுவீர்களா என்ற கேள்வி. சினிமாதானா ஒரு இலக்கியவாதியின் அல்டிமேட் கோல்? ஏன் வாழ்க்கையில் அவன் வேறு எதுவுமே சாதிக்க மாட்டானா? என்ன சோகை பிடித்த சிந்தனை இது? ஒரு சினிமா நடிகனிடம் போய், நீங்கள் எப்போது ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ மாதிரி ஒரு நாவல் எழுதுவீர்கள் என்று கேட்பார்களா? எப்படி அது ஒரு அபத்தமான கேள்வியோ, அதேபோன்றதுதான், எழுத்தாளன் முன் வீசப்படும் சினிமா கேள்வியும்.

பேட்டி எடுக்கப் போகும்முன்பு, ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் ஒன்றிரண்டு புத்தகங்களையேனும் படித்திருக்கவேண்டும். இன்றைய அவசரமான பத்திரிகை உலகில், படித்துவிட்டு போவதோ, விவரங்களைத் திரட்டிக்கொண்டு போவதென்பதோ சாத்தியமே இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இது எவ்வளவு உண்மையோ, தெரியவில்லை. ஆனால், நிலைமை இதுதான்.

இதுபோன்ற சூழ்நிலைகளிலும் பேட்டியின் தரத்தை நிமிர்த்திக் காண்பிப்பவர் அசோகமித்திரன். எப்படிப்பட்ட கேள்விகளுக்கும், எழுத்துப்பூர்வமான பதில்களால், பேட்டிக்கு உயர் அந்தஸ்தைத் தந்துவிடுபவர் அவர். பல பேட்டிகள் கொடுத்த அனுபவம் அவருக்கு.

இல்லையெனில், பேட்டிகள், எழுத்தாளர்களை மேன்மைப்படுத்துவதைவிட, கொச்சைப்படுத்திவிடும் சாத்தியங்களே அதிகம்.