ஆன்மிகம்

பதில்களின் சொரூபம்

Posted in ஆன்மிகம், பொது on December 17th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

“நீங்கள் இன்றைய இளைஞர் பயங்கர பக்திமான்கள் ஆக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். உங்களிடம் ஒரு விஷயம் கேக்கலாமா?” என்றார் நண்பர்.

“கேளுங்கள்”

“நூறாண்டுகளுக்கு முன்பு சென்னையுடைய பாப்புலேஷன் என்ன?”

மனம் கணக்குப் போடத் தொடங்கியது. 2009 கணக்குகள்படி, சென்னையில் மட்டும் 43 லட்சம் பேர் வாழ்வதாகவும், சென்னையைச் சுற்றியுள்ள இடங்களை எல்லாம் சேர்த்து 75 லட்சம் வரை வாழலாம் என்றும் ஆய்வாளார்கள் சொல்லுகிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் சென்னையை நோக்கி வந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எங்கோ பார்த்த பழைய சென்சஸ் தகவல் ஞாபகம் வந்தது.

“கிட்டத்தட்ட ஐந்து லட்சம்.”

“அப்படியானால் பத்து மடங்கு பாப்புலேஷன் வளர்ந்திருக்கிறது இல்லையா?”

“ஆமாம்.”

“அப்படியானால், கபாலீஸ்வரர் கோவிலிலும் பார்த்தசாரதி கோவிலிலும் கூட்டம் அலைமோத வேண்டாமா? இடமே இருக்கக்கூடாது இல்லையா? இன்னும் கூட்டம் சாதாரணமாகத்தானே இருக்கிறது. அப்படியானால், பக்தி வளரவில்லை என்றுதானே அர்த்தம்?”

ஒரு நிமிடம் தாமதித்தேன். நண்பரை புண்படுத்த விரும்பவில்லை.

“உடலே கோவிலாக, உள்ளமே இறைவனாக வழிபடக் கற்றுக்கொண்டுவிட்டார்கள் இளைஞர்கள்” என்றேன்.

இதுபோன்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்படியெல்லாம் கடவுளின் இருப்பையோ இல்லாமையையோ நிறுவிவிட முடியும் என்று தோன்றவில்லை. இதெல்லாம் சும்மா புத்திசாலித்தனம்.

ஆனால், மிக ஆழமாக நம் இந்திய சமூகத்துக்கு கடவுள் தேவையாக இருக்கிறார். ஒவ்வொரு நாள் காலையும் இரண்டு ஊதுவத்திகளை கொளுத்திவைத்துவிட்டுத்தான் எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் துணி தைப்பவர் தன் தொழிலைத் தொடங்குகிறார். துணிகளுக்கு இஸ்திரி போடுபவர், தன் சின்ன பெட்டிக் கடையின் ஓரத்தில் காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டே சலவைப்பெட்டியைத் தொடுகிறார். அந்தோணியாருக்கும் மேரி மாதாவுக்கும் மெழுகுவர்த்தியை ஏற்றிவிட்டே, காய்கறிக் கடைக்காரர், விற்பனையை ஆரம்பிக்கிறார்.

பல ஐடி நிறுவனங்களில் நண்பர்களின் கியூபிக்கிள், கேபின்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு ஓரமாக பிள்ளையார்பட்டி பிள்ளையார் இருப்பார். முருகன் இருப்பார். வெளிநாட்டுக்காரன் இங்கே வந்து தொழிற்சாலை கட்டினாலும் முதலில் அந்தணரைப் பிடித்து, கணபதி ஹோமம் செய்கிறார். இதையெல்லாம் வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது, கடவுள் பல அடுக்குகளில் நிறைந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

முதலில், நாகரிக சமூகத்தில், அடுத்தவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, உனக்கு உன் கடவுளிடம் நம்பிக்கை இருக்கிறதா? அப்படியானால், நான் என் கருத்தை வலியுறுத்த விரும்பவில்லை. எல்லோரும் சேர்ந்து வாழ, பணியாற்ற, இதுபோன்ற நம்பிக்கைகள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று ஒரு சாரார் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதை அப்ஜெக்டிவ் அப்ரோச் என்று சொல்லலாம்.

சப்ஜெக்டிவ்வாக, கடவுள் இரண்டு மூன்று தளங்களில் செயல்படுகிறார். எல்லோருக்கும் அநித்தியம் பயங்கரமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறது. என்ன நடக்கும் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. இந்தத் த்ரில்தான் வாழ்க்கையின் சுவாரசியம். ஆனால், அதைத் த்ரில்ல்லாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. நாம் அதை ஏதேனும் ஒரு வடிவத்துக்குள், நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க, புரிந்துகொள்ளத்தக்க சூத்திரத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனாலும் முடிவதில்லை. Uncertainity அப்படியே கட்டு குலையாமல் இருக்கிறது.

பெரும்பாலானவர்களால் தங்களை நம்ப முடியவில்லை. எப்போதும் ஒரு பற்றுக்கோடு, ஒரு ரெபரென்ஸ் தேவையாக இருக்கிறது. தங்களை யாரேனும் வழிநடத்த மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். நாம் தான் அடியெடுத்து வைத்து எதிர்காலம் என்ற கும்மிருட்டுக்குள் வழிகண்டு முன்னேற வேண்டும் என்னும்போது இயல்பான பயம் இன்னும் அதிகமாகிவிடுகிறது.

பலர் இந்த uncertainityஐ பலவிதங்களை தாண்டிப் போக முயற்சிக்கிறார்கள். முதலில் வீராப்பு. வாழ்க்கையில் எங்கோ ஓரிடத்தில் அடிபடும்போது (அல்லது தாம் விரும்பும்படி ஒரு விஷயம் நடக்காமல், மனம் நோகும்போது), லேசான தயக்கம் ஆரம்பிக்கும். அடுத்து பிடிவாதம். கடவுள் இல்லை என்பதில் பிடிவாதம். உடல் தளரும்போது, மெல்ல அதுவும் தளர ஆரம்பிக்கும்.

ஒவ்வொரு நாளும், தாம் செய்யும் செயல்கள் பற்றிய விமர்சனங்கள் தாக்கிக்கொண்டே இருக்கும். சரியா தவறா என்ற கேள்வி துளைத்துக்கொண்டே இருக்கும். சரி தவறு பற்றி அடிப்படையாக நமக்கு இருக்கும் விதிகள், இந்திய மரபின் தொடர்ச்சியாக வருவது. பாவம் புண்ணியம், நல்வினை தீவினை, முற்பகல் பிற்பகல் எல்லாம் ஆழ வேரூன்றிய கருத்துகள். எதற்கு பயப்படுகிறதோ இல்லையோ, இந்திய மனம் இத்தகைய விமர்சனங்களுக்கு நிச்சயம் பயப்படும். நம்முடைய consciousஐ இதுபோன்ற அளவீடுகளே கட்டமைத்து இருக்கின்றன.

மேலும் தான் செய்யும் செயல்களுக்கு ஒரு affirmation தேவையாக இருக்கிறது. சரியாகத்தான் செய்திருக்கிறோம் என்று பக்கத்தில் இருந்து யாராவது சொல்லவேண்டும். பக்கத்தில் இருப்பவரை எவ்வளவு தூரம் நம்ப முடியும் என்பது இன்னொரு கேள்வி. அவனுடைய நோக்கம் என்னவாகவும் இருக்கலாம். அதனால், அவனை நம்ப முடியாது. என்ன செய்யலாம்?

இன்னொரு பெரிய பிரச்னை, தோல்வி. நினைத்தது நடக்காமல் போவது. எதிர்பார்ப்பு பொய்த்துப் போவது. நம்பிக்கை தகர்ந்து போவது. எப்படி இதைப் புரிந்துகொள்ள வேண்டும்? எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்ன பதில் என்னை மீண்டும் உயிர்ப்பிக்கும்? எந்தக் காரணம் என்னை மீண்டும் உற்சாகப்படுத்தும்? என்ன சமாதானம் என்னை மீட்டெடுக்கும்? தெரியவில்லை.

இதுபோன்ற இடங்களில்தான் கடவுள் மிகவும் தேவையாக இருக்கிறார். நாம் விரும்பும் விதங்களில் எல்லாம் நம்மோடு இருப்பவர் அவர். நாம் வைக்கும் கோரிக்கைகள், எடுத்துச் செல்லும் விண்ணப்பங்கள் அனைத்தையும் நிறைவு செய்பவராக அவர் இருக்கிறார். சாய்ந்து அழ ஒரு தோளாக அவர் இருக்கிறார். துன்பங்களில் துணை நிற்கிறார். தேவைப்படும்போது ஆலோசனை வழங்குகிறார். தப்பைச் சுட்டிக் காட்டுகிறார். உங்களுடைய நலனை மட்டுமே நாடுபவராக அவர் இருக்கிறார். உங்களுடைய ஆல்டர் ஈகோவாக கடவுள் நின்றுகொண்டு இருக்கிறார். அது போதாதா?

உணர்வு மட்டத்தில் கடவுளை replace செய்ய ஆளே இல்லை. ஏனெனில், அவர் உங்கள் விருப்பப்படி உருவாகுபவர். உங்கள் வழிகாட்டி, முகம் காட்டி, நெறி காட்டி. மனிதனின் மனத்தில் கேள்விகள் இருக்கும்வரை, கடவுள் இருந்துகொண்டுதான் இருப்பார். ஏனெனில் பதில்களின் சொரூபம் அவர்.

நமது வளம்

Posted in ஆன்மிகம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

சென்ற வாரம் வெள்ளிக்கிழமையுடன் ‘கண்ணனின் ஆரமுது’ என்ற நிகழ்ச்சி பொதிகைத் தொலைக்காட்சியில் நிறைவுபெற்றது. 2007 ஜனவரி மாதம் தொடங்கி, 2009 நவம்பர் வரை, பகவத் கீதையின் விளக்கங்களை வேளுக்குடி கிருஷ்ணன் தொடர்ந்து வழங்கி வந்தார். எண்ணற்ற கோவில்கள், அதன் சிறப்புகள் என்று விவரித்து, பின்னர் ஒவ்வொரு நாளும் பகவத் கீதையில் சுலோகங்களுக்கு விளக்கங்கள் தந்த வேளுக்குடி கிருஷ்ணனின் உரை மிகவும் எளிமையாக இருந்தது. நான் தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் பார்க்கவில்லை. அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்த்து வந்திருக்கிறேன். சிறப்பான நிகழ்ச்சி. பல விளக்கங்களைக் கேட்டு நான் மயங்கி நின்றிருக்கிறேன். அந்த வியப்புக்குக் காரணம் இல்லாமலில்லை.

மனிதனின் அபாரக் கற்பனை எனக்கு வியப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது, வருகிறது. ஆதிகாலத்தில் இருந்து மனிதன் தவியாய் தவிக்கும் ஒருசில விஷயங்கள், மனம், சிந்தனை என்பவைதான். மனமும் சிந்தனையும் வழிநடத்தும் புலன்கள் இன்னொரு பெரிய புதிர். ஒருவர் ஏன் ஒரு விஷயத்துக்குக் கோபப்படுகிறார், ஒரு சலுகைக்குப் பொறாமைப்படுகிறார், அடுத்தவர் வளர்ச்சியைத் தாங்க முடியாமல் எரிச்சல் கொள்ளுகிறார், அல்லது ஒரு குழந்தையின் பிறப்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகிறார், பெண்ணைக் கண்டு மையல் கொள்ளுகிறார் என்றெல்லாம் யோசித்தால், அதற்கு தீர்க்கமான அறிவியல்பூர்வமான தர்க்கபூர்வமான பதில்கள் கிடைப்பதில்லை.

மனம், சிடுக்குகள் நிறைந்த நூல்கண்டு மாதிரி இருக்கிறது. அதன் வேகம், ஓட்டம், திசை என்று எதுவுமே புலனாவதில்லை. ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. இரண்டு வேறு வேறு நபர்களுடைய சிந்தனை ஒரே மாதிரி எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அவரவர் கல்வி, பண்பாடு, வளர்ச்சிமுறை, நோக்கங்கள் ஆகியவை சார்ந்தே ஆக்‌ஷன்களும் ரியாக்‌ஷன்களும் இருக்கின்றன. இப்படித்தான் ஒருவர் ஒரு செய்திக்கு எதிர்வினையாற்றுவார் என்று எந்தக் காலத்திலும் சொல்லிவிட முடியாது.

இதன் தொடர்ச்சிதான் ஆசை, இச்சை ஆகியவை. முக்கியமாக பொருளாதார வளம், அதிகாரத் தேடல், அதனால் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், குழப்பங்கள், கோபதாபங்கள், இன்னபிற வேட்கைகள். ஒருசிலருக்கு ஒரு சில அம்சங்களில் வெற்றி கிடைக்கிறது. ஒருசிலவற்றில் கிடைப்பதில்லை. வருத்தங்கள் எப்போதும் சூழ்ந்துள்ளன. நிறைவின்மையே நிரந்தரம்.

சாகும்போதுகூட பலருக்கு நிறைவு இருப்பதில்லை. இத்தனைக்கும் அடுத்தவர் பார்வையில் இவர்கள் நிறைவாழ்வு வாழ்ந்திருப்பார்கள். ஆனாலும் ஏதோ ஒன்று அடையமுடியாத இலக்காக, தொடமுடியாத சாதனையாக, பெறமுடியாத அனுபவமாக, அணுகமுடியாத உயரமாக இருந்து வந்திருக்கிறது. சாகும்போதே இப்படிப்பட்ட உணர்வுகள் உண்டு என்றால், வாழும்போது, இந்த ஏமாற்றங்கள் இன்னும் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு செயலும் தம் விருப்பப்படி நடக்கவேண்டும், ஒவ்வொருவரும் தம் ஆசைக்கேற்ப செயல்பட வேண்டும், தான் இழுத்த இழுப்புக்கு வளைந்துகொடுக்கவேண்டும் என்ற பேராசை எப்போதும் உண்டு. இது ஒருசில சமயங்களில் நடக்கக் கூடும். பல சமயங்களில் நடக்காது. எப்படியாவது நடத்திக்காட்டிவிட வேண்டும் என்ற துடிப்புதான் முசோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை உருவாக்குகிறது. அடக்குமுறையைத் தோற்றுவிக்கிறது. மேலாதிக்க மனோபாவத்தை ஏற்படுத்துகிறது.

எல்லா மனிதப் பிறப்புகளுக்கும் வலிதான் மிச்சம். நிறைவின்மைதான் மிச்சம். வாழும்போது ஒரு துளி மகிழ்ச்சியையும் அனுபவிக்காதவர்கள் உண்டு. இதற்கெல்லாம் காரணம் அவரவருடைய மனம்தான்.

நம்முடைய முன்னோர்கள், மனத்தைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள். அதை எப்படியேனும் decipher செய்யவேண்டும் என்ற முயற்சி, நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்திருக்க வேண்டும். ஏதேனும் ஒரு சில வகைமாதிரிக்குள் மக்களின் மனங்களைப் பிரித்து, ஒரேமாதிரியான ரியாக்‌ஷன்களைத் தொகுத்து, ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்று பார்த்திருக்கிறார்கள். மனத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சிகளைத்தான் நாம் இலக்கியங்களாகப் பார்க்கிறோமோ என்னவோ? இலக்கியங்கள் அனுபவம் சார்ந்த புரிதலை வழங்க சிறந்த முறை. ஆனாலும் மனத்தைப் பற்றிய தெளிவின்மை இன்னும் தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. நிறைவின்மை தொடர்ந்துகொண்டே இருந்திருக்கிறது.

இத்தகைய சூழலில்தான் மனிதனின் தேடல் வேறு வேறு திசைகளில் பயணம் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும். அவனுடைய மனநலம், உளவியல் நலம் ஆகியவை மிக முக்கியம், அதைப் பாதுகாக்கவேண்டியது அவசியம் என்பது புரிந்திருக்க வேண்டும். விளைவு, அதியற்புதமான கற்பனைகள் விரியத் தொடங்குகின்றன. மனிதன் பிறப்பது முதல் இறப்பது வரை, மனிதனின் கண்முன்னே அவனது வாழ்க்கை, இருப்பு, பிரக்ஞைப் பூர்வமாக, உணர்வுபூர்வமான அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அவன் பிறப்பதற்கு முன்னால் இருந்ததையோ, இறந்த பின் ஏற்படுவதைப் பற்றியோ யாருக்கும் எதுவுமே தெரியாது.

இந்த இரண்டு முனைகளையும் சேர்த்து விரிவதுதான் அதியற்புத சிந்தனைகள். முற்பிறவி, அடுத்த பிறவி, நன்மை, தீமை, மேல் உலகம், கீழ் உலகம், பாவம் புண்ணியம், ஊழ்வினை, அழுக்காறு என்று தொடரும் சிந்தனைச் சரத்தில் ஆகச்சிறந்த கருத்துருவாக்கம் தெய்வம் என்பதுதான். சக்திகளின் பிறப்பிடம், மூலாதாரம் அதுதான். அங்கிருந்துதான் நாமெல்லோரும் தோன்றினோம், நாம் மீண்டும் அவர் மடியிலேயே போய்ச் சேரவேண்டும் என்பதுதான் லாஜிக்கல் முடிவு.

இன்னொரு வகையில் பார்த்தால், இந்த உலக வாழ்வை அளக்க நமக்கு வேறொரு உலகம் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவின் முன்னேற்றதை அளக்கும்போதும் அதை அமெரிக்கா என்ற பற்றுக்கோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளக்கிறோம் அல்லவா, அதுபோல், இந்த உலக வாழ்வை மேல் உலகம், சொர்க்கம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அளந்து பார்த்துக்கொள்வது நமக்கு உவப்பாக இருக்கிறது. வேறொரு உலகில் வாழும் குடிமக்களான தேவர்கள் இப்படியெல்லாம் வாழுகிறார்கள், பெருமையுடன் விளங்குகிறார்கள், அவர்களைப் போல் நாமும் வாழ வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை, தோற்றத்தை ஏற்படுத்துவது, இங்கே வாழும் மனிதனுக்கு தேவையாக இருக்கிறது.

அடுத்த கட்டம், இந்த தெய்வத்தை, சொர்க்கத்தை, வீடுபேற்றை அடைவது எப்படி என்பது. அதற்கான வழிமுறைகளை நமது புராணங்களும் இதிகாசங்களும் எடுத்துவைக்கின்றன. நீதி நூல்களும் அறக்கோட்பாடுகளும் இவ்வுலக வாழ்வியலின் நெறியையும் அதன்மூலம் மேல் உலகத்தை அடைவதற்கான வழியையும் எடுத்துச் சொல்லுகின்றன. தெய்வத்தை அடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வழிமுறை தேவையாக இருக்கிறது. எளிமையாக, இன்னும் எளிமையாக இறைவன் மடி போய்ச் சேருவதற்கான பாதைகள் போடப்பட்டுக்கொண்டே வருகின்றன. வழிபாட்டு முறைகள் காலந்தோறும் மாறுகின்றன.

நான் மதிமயங்கி வியக்கிறேன் என்று சொன்னது, ஆன்மிகப் பண்பாட்டின் இந்தச் செழுமையான கற்பனைவளத்தை, சிந்தனைப்பெருக்கைக் கண்டுதான். எவ்வளவு விரிவாக, ஆழமாக முன்னோர்கள் யோசித்திருக்கிறார்கள்? இனி தோன்றப் போகும் மனிதனுக்கும் அவனுக்குத் தோன்றப் போகும் எண்ணற்ற கேள்விகளுக்கும் சேர்த்தே, அவர்கள் பதில்கள் யோசித்து வைத்திருக்கிறார்கள். எவ்வளவு லாஜிக்கலாக, ஒன்றோடு ஒன்றைப் பிணைத்து, நெருக்கமான ஜரிகை வேலைப்பாடு மாதிரி இருக்கிறது இந்தக் கற்பனைகள்? எந்த ஒரு இழையும் நீங்கள் தனியாகவும் ரசிக்கலாம், மொத்த ஜரிகையாகவும் அனுபவிக்கலாம்.

அடிப்படையில், மனிதன் வாழும் இவ்வுலத்தில் அவனுக்கு நிம்மதியும் சமாதானமும் நிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கவேண்டும். வாழும்போது மகிழ்ச்சியாக எந்த மனக்குறையும் இல்லாமல் வாழவேண்டும். சாகும்போது எதையோ இழந்துவிட்டோமே என்ற நிறைவின்மையோடு சாகக்கூடாது. ஆன்மிகம், உளவியல் ரீதியாக இதை உறுதிப்படுத்தவே முனைகிறது. ஒவ்வொருவருக்கும் அதை ஒவ்வொருவிதமாகச் செய்கிறது. இதை உறுதிப்படுத்துவதுதான் மனிதனின் ஆகப்பெரிய சாதனையாக இருக்க முடியும்.

எல்லோரும் சரணாகதி என்ற சிந்தனையில்தான் வந்து முடிக்கிறார்கள். தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்புக்கொடுத்துவிடுதல் என்பது உயரிய சிந்தனை. செயல்கள் என் காரணமாக நடந்தன என்றால்தானே எல்லா மனக்குழப்பங்களும் தோன்றுகின்றன்? என்னால் எதுவும் நடைபெறவில்லை, எல்லாம் இறைவனின் திருவுள்ளப்படியே நடைபெற்றது, நான் அவன் ஆட்டுவிக்கும் ஓர் பொம்மை என்ற சிந்தனை மனத்தின் ஆழத்துள் பதியும்போது, செயல்களால் ஏற்படும் சுக துக்கங்கள் என்னைச் சேராது என்பது ஒரு சிந்தனை.

அடிப்படையில், மனிதனின் மனத்தையும் அவனது செயல்களையும் எவ்வளவு தூரம் விலக்கி வைக்க முடியுமோ, அவ்வளவு தூரம் விலக்கி வைக்கப் பார்க்கிறது ஆன்மிகம். இதற்கான பலாபலன்கள்களை தருவதும் தராததும் தெய்வசித்தம். ஒவ்வொரு செயலுக்குள்ளும் தெய்வத்தைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டால், அங்கே நம்பிக்கையும் அதேநேரம், பலன்களைப் பற்றிய எதிர்பார்ப்பும் மட்டுப்படுத்தப்படும். அதனால், வலியும் வேதனையும் குறைந்துபோய்விடும். உண்மையிலேயே, நமது முன்னோர்கள் மிக மிக புத்திசாலிகள் என்று ஒவ்வொருமுறையும் நான் வியப்பது இதுபோன்ற தருணங்களில்தான். நமது சிந்தனை வளத்தை அவர்கள் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். என்னதான் நீங்கள் tangential ஆக யோசிக்கக்கூடியவராக இருந்தாலும், அதுவும் ஏதோ ஒரு சட்டகத்துக்குள் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. கொஞ்சம் விரிவான சட்டகம்.

இதற்கும் மேல் ஒரு விஷயம் என் வியப்பை அதிகப்படுத்துகிறது. அது கதை சொல்லும் மரபு. எந்த ஒரு அம்சமாக இருந்தாலும் சரி, நீதியாக இருந்தாலும் சரி, சமாதானமாக இருந்தாலும் சரி, முன்னோர்கள் அதற்கு கதை என்ற ஊடக வடிவத்தைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். நமது ஆன்மிக வளத்தை எங்கே தொட்டாலும் அங்கிருந்து ஒரு கதை குதித்து ஓடிவருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தத்தமது மேதாவிலாசத்தைச் சேர்த்து பலரும் இந்தக் கதைகளை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். மொழியில், வடிவத்தில், சொல்லும் முறையில் நேர்த்தியைக் கொணர்ந்திருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உங்கள் கண்முன்னே ஒரு பெருவெள்ளம் ஓடி வருகிறது. நமது ஆன்மிகம், பண்பாடு, சிந்தனை மரபு, பெருங்கற்பனைகள் எல்லாம் அலையலையாக ஓடி வந்து உங்கள் காலடியை நனைத்துக்கொண்டு இருக்கின்றன. உங்கள் முகம் அதில் தெரியும். நீங்கள் ஒரு பெரும் மரபின் தொடர்ச்சி. வளத்தின் அடுத்த கண்ணி.

இந்த வளத்தைப் பெருக்குவது நமது கடமை.