அனுபவம்
வழி சொல்லுங்க…
Posted in அனுபவம், எழுத்தாளர்கள் on August 26th, 2009 by வெங்கடேஷ் – 2 Commentsமதிய சாப்பாட்டை முடித்துவிட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். ஆங்கிலோ இந்திய ரிசெப்ஷனிஸ்ட் போனில் கூப்பிட்டார். ‘உன்ன பாக்க, யாரோ ஆத்தர் வந்துகிது. கீழ வா.’ இரண்டாம் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு இறங்கி வந்தேன். பெரிய வரவேற்பறை அது. மூன்று பக்கமும் நீள சோபாக்கள். சோபாக்கள் சேருமிடங்களில் தொட்டிகளில் பிளாஸ்டிக் செடிகள். நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க ஒருவர் பச்சை நிற பிளாஸ்டிக் பையோடு நின்றுகொண்டு இருந்தார். தலைமுடியை மிகச் சமீபத்தில்தான் வெட்டியிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு உருத்திராட்சம். சட்டை பாக்கெட் முழுக்க நாலைந்து வண்ண பேனாக்கள், துண்டு காகிதங்கள்.
‘நமச்சிவாய வாழக. நாதன் தாள் வாழ்க.’ கண்கள் புன்னகைப்பது தெரிந்தது. பச்சைப் பையோடு கைகூப்பினார் அவர். பதிலுக்கு நான் என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஒரு மாதிரி புன்னகைப்பது போல் வைத்துக்கொண்டு கைகூப்பினேன். சோபாவில் உட்காரச் சொன்னேன்.
‘நீங்களா தம்பி இங்க தமிழ் புத்தகங்கள் போடறது?’
’ஆமா சார்.’
‘மிக நல்ல பணி. புத்தகக் கண்காட்சியில பார்த்தேன். நல்ல வேலை செஞ்சிருக்கீங்க தம்பி.’
ஒரு மாதிரி கோணலாகச் சிரித்தேன். சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து ஒன்றிரண்டு வாரங்கள் ஆகியிருக்கும்.
‘உங்களுக்கு எந்த ஊரு தம்பி?’
‘மெட்ராஸ்தான் சார்.’
எனக்குத் தெரிந்தது மெட்ராஸ்தான். எங்கப்பாவுக்கு வேற ஊர். அதையெல்லாம் இவரிடம் போய் ஏன் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
‘சீர்மிகும் சென்னை.’
‘ஓ!’
‘என் பெயர் மாணிக்கவாசகம். செய்யாறு பக்கத்துல ஸ்கூல்ல தமிழாசிரியரா இருந்து ஓய்வு பெற்றவன். நான் சென்னை வந்து அஞ்சாறு வருஷமாச்சு’
நான் வெறுமனே மண்டையை ஆட்டினேன்.
‘இதுவரைக்கும் ஐம்பதுக்கும் மேல புத்தகங்கள் போட்டிருக்கேன். நான் ஆசுகவி. சித்திரக் கவிதை எழுதுவேன். மயில் மாதிரி, தேர் மாதிரி, குதிரை மாதிரியெல்லாம் கவிதை எழுதுவேன்.’
‘காபி குடிக்கறீங்களா?’
‘டீ கிடைச்சா நல்லது தம்பி. சர்க்கரை கொஞ்சம் அதிகம்.’
வந்து நின்ற கேண்டீன் பையன் திரும்பிப் போனான்.
’மேடையில பிரசங்கம் செய்வேன். வாரியார் சுவாமிகள் எங்க ஊருக்கு வந்தபோது, வாழ்த்தி சால்வை போர்த்தினாரு.’
‘சரி சார்’
‘ஜோசியம் குடும்பத் தொழில். எங்கப்பா காலத்துலேருந்து செஞ்சுகிட்டு வரோம். நான் ஆறு ஜோசிய புத்தகங்கள் எழுதியிருக்கேன். இதுவரைக்கு ஒரு லட்சம் ஜாதகத்துக்கு மேல பார்த்திருப்பேன். வித்வான் வே. லட்சுமணன் தெரியுமா?’
‘ஓ!’
‘நீங்கள் மேஷ ராசியா? பரணி நட்சத்திரம்?’
இது கொஞ்சம் சங்கடமான இடம். எனக்கு என் ராசி, நடசத்திரம் எல்லாம் துல்லியமாகத் தெரியாது.
‘தெரியல சார். நீங்க சொல்லுங்க.’
’நீங்க கொஞ்சம் அவசரத்துல இருக்கீங்களோ?’
‘இல்ல சார். சொல்லுங்க’
‘என்னை உங்கப்பா மாதிரின்னு நினைச்சுக்கங்க..உங்களுக்கு என்ன 23 வயசு இருக்குமா?’
நான் மையமாக தலையசைத்தேன்.
‘வானதியில என் புக்ஸ் போட்டிருக்காங்க. மணிமேகலைல குடுத்திருக்கேன். நானே ஊர்ல சின்னதா கோவில் விசேஷங்களுக்கு புத்தகம் போட்டிருக்கேன்.’
பச்சை நிற பிளாஸ்டிக் பையின் ஜிப்பைத் திறந்தார். சின்ன சின்னதாக இரண்டு கைடக்க புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். பதினாறு பக்கங்கள் கொண்ட புத்தகங்கள். இரண்டு நூல்களின் மேலட்டையிலும் வேறு வேறு அம்மன் படங்கள் இருந்தன. கடைசி பக்கத்தில் உபயம்: M.மணிவேல், தங்கராஜ் ஒயரிங் சர்வீஸஸ், செய்யாறு என்றிருந்தது.
‘நான் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கேன். அதை உங்ககிட்ட கொடுக்கத்தான் வந்தேன். யாரும் சொல்லாத உரை இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகால உழைப்பு.’
அவர் அதே பச்சைப் பையில் இருந்து புல்ஸ்கேல் பேப்பர்கள் கொண்ட பைலை எடுக்க ஆரம்பிக்கும் போதே, எனக்கு லேசாக உதற ஆரம்பித்தது.
‘நாங்க இந்த மாதிரி புக்ஸெல்லாம் போடறதில்ல சார்.’
‘அப்ப என்ன மாதிரி போடுவீங்க?’ புல்ஸ்கேல் பைலை உள்ளே தள்ளினார்.
’குழந்தைகளுக்கு, ஸ்கூல்ல யூஸ் பண்றா மாதிரி’
‘நீதிக் கதைகள் தரட்டுமா? பண்பாட்டுக் கதைகள்னு ஒரு புக்கு எழுதியிருக்கேன். இப்போ கூட, தி. நகர்ல ஒருத்தருக்கு நன்நெறிக் கதைகள்னு ஒரு புக்கு கொடுத்தேன்.. யார் அவன்?’
சட்டென அவர் மீண்டும் பச்சை பிளாஸ்டிக் பைக்குள் கையை விட்டார்.
‘அப்படி இல்ல சார்.இங்க ஒர்க் புக்ஸ், எக்ஸஸைஸ் புக்ஸ்தான் போடுவாங்க.’
‘நானே கதை எழுதி, நம்ம ஹரி தெரியுமா.. டிராயிங்கெல்லாம் போடுவாரே.. அவர வெச்சு படங்கள் போட்டு, படக்கதை போட்டிருக்கேன். ஆர்ட் ஒர்க்கே ரெடியா இருக்கு. 32 பக்கம் வரும்.’
வண்ணங்கள் தீட்டப்பட்ட அட்டைகளை அவர் வெளியே எடுத்தார்.
‘நீங்க சரின்னு சொன்னா, இங்க உங்க கம்பெனி பேரப் போட்டு அடிச்சுக் குடுத்துடுவேன். நமக்குத் தெரிஞ்ச பிரஸெல்லாம் இருக்கு. நமக்குன்னா நல்ல ரேட்டுல அடிச்சுக் குடுப்பாங்க. எனக்கு இந்தத் தயாரிப்பு செலவு மட்டும் தந்தா போதும். உரிமையெல்லாம் உங்களுக்கே எழுதிக் கொடுத்திடறேன். எத்தனை பிரிண்ட் வேணும்னாலும் போட்டுக்கலாம். ஸ்கூல் இந்த புத்தகங்கள் எல்லாம் எக்கச்சக்கமாக போவும்.’
அவருடைய முனைப்பு, வேகம், திட்டமிடல் எல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படியும் வயது 65க்கு மேல் இருக்கும். தோல் தளர்ந்துபோயிருந்தது. விட்டால், இவரே புத்தகத்தை விற்றுவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
‘அப்படி இல்ல சார். இங்கே எல்லாம் வருஷ ஆரம்பத்துலேயே முடிவு செஞ்சி, இன்னின்ன புத்தகங்கள் போடணும், இவங்க எழுதணும்னு திட்டமிட்டு வேலை செய்வாங்க சார். நீங்கள் உங்க ஐடியாஸை எல்லாம் என்கிட்ட எழுதிக் குடுங்க. எங்க சேல்ஸ் டீம்கிட்ட பேசிட்டு, எதெல்லாம் மார்க்கெட்டுல நல்லா போகும்னு தெரிஞ்சுகிட்டு அப்புறம் எழுதச் சொல்றேன் சார்.’
‘உங்கள் சேல்ஸ் டீமுக்கு யார் பொறுப்புன்னு சொல்லுங்க. நான் பேசறேன். எனக்கு 35 வருஷம் அனுபவம் உண்டு தம்பி. எந்த புக்கு நல்லா போவும்னு நல்லா தெரியும். நான் சொல்றேன்.’
நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். இவருக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. இங்கே தனிமனிதர் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. செயல்படுத்தியும் விட முடியாது. இது ஓர் நிறுவனம். நிறுவனத்துக்கான நடைமுறையோடுதான் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக முடியும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விஷயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும். இந்த நிறுவனம் பிராசஸ் ட்ரிவன் நிறுவனம். எல்லாம் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவர்,
‘மணி ரெண்டாவப் போகுது தம்பி. இன்னும் சாப்படலை. இனிமே தான் வீட்டுக்குப் போய் சாப்பிடணும். நீங்க ஏதாவது புத்தகத்தை எடுத்துகிட்டு, கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா நிம்மதியா வீடு போய் சேருவேன். இல்லன்னா, திருப்பியும் டி. நகர் போய் வேற யாரையாவது பார்க்கணும்.’
ஜன்னலில் மதிய வெயில் சுள்ளென உறைத்தது. வெக்கை. நான் ஒரு சில நொடிகள் நொறுங்கிப் போனேன். அற்புதமான தேனினும் இனிய தமிழ் படிப்பு. பக்குவம். மேதமை. எல்லாம் காலத்தால் தள்ளப்படும் வெறும் குப்பை.
இது நடந்து 16 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது நான் ஓரியன்ட் லாங்மன் பதிப்பாசிரியர். நான் எதிர்காலத்தில் எப்படி ஆகிவிடக் கூடாது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. 16 ஆண்டுகள் கழித்து இரண்டு நாள்களுக்கு முன்னர் மற்றொருவர் வந்தார். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் பேசியிருப்பார். தமிழ் தெரியும். ஓவியம் தெரியும். இசை தெரியும். பரதம் தெரியும். வரிசையாக விருதுகள், பாராட்டுகள். சைவத்தில் அதிதீவிர ஈடுபாடு.
‘பெரிய பொண்ண கட்டி கொடுத்துட்டேன் தம்பி. ரெண்டாவது பொண்ணும் பையனும் காலேஜ்ல படிக்கறாங்க. அடுத்த செமஸ்டருக்கு ஃபீஸ் கட்டணும். ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க தம்பி.’
நான் வார்தைகளற்று நின்றேன்.
ஹார்ன் அடிப்பவர்கள்: சில குறிப்புகள்
Posted in அனுபவம், பொது on August 19th, 2009 by வெங்கடேஷ் – 1 Commentகடந்த பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக நான் டூவீலர் ஓட்டிக்கொண்டு இருக்கிறேன். என்னிடம் இருக்கும் டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் வண்டிக்கு ஒன்பது ஆண்டுகள் சர்வீஸ். அதற்கு முன்னர் பஜாஜ் எம்.80. கல்லூரிக் காலம் முழுவதும் பஸ். வண்டி ஓட்டுவது மாதிரியான இனிமையான அனுபவம் எதுவுமே இல்லை. வண்டி ஓட்ட ஆரம்பித்தவுடன் என் கற்பனைக் குதிரை சட்டென வேகம் பிடிக்கத் தொடங்கிவிடும். அன்று காலை படித்த செய்தி, எழுந்தவுடன் முணுமுணுக்க ஆரம்பித்த பாடல், ஆதித்யா சேனலில் ரசித்த ஏதேனும் ஒரு நல்ல காமெடி, என் மகள் தெரிவித்த ஒரு பள்ளி அனுபவம் என்று ஒன்று மற்றொன்றைத் தொட்டு ஓடிக்கொண்டு இருக்கும். திடீரென்று, ஒரு அவசரக்காரன் என் பக்கத்தில் வந்து காட்டுக் கத்தலாய் ஹாரன் அடிக்க ஆரம்பித்து, என்னை ஒரு சில நொடிகள் நிலைகுலைய வைத்துவிடுவான். ஒரு சில நொடிகள் தான். ஆனால், அதன் பாதிப்பு நாள் முழுவதும் இருக்கும்.
என்ன காரணமாக இவ்வளவு அவசரம், அவன் முகம் எப்படி இருக்கும் என்றெல்லாம் மனத்தில் எதுவுமே பதிந்திருக்காது. வாகனக் கூட்டத்துக்குள் நுழைந்து ஒரு சில நொடிகளுக்குள்ளேயே அவன் காணாமல் போயிருப்பான். காதைக் கிழித்த அந்த ஹாரன் சப்தமும் அது ஏற்படுத்திய பதற்றமும் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். பெரும்பாலும் ஏதேனும் உணவுப் பண்டங்களை எடுத்துச் செல்பவர்கள்தான் இப்படிப் பறப்பார்கள். முன்பெல்லாம், ஜிஎஸ்டி சாலையில் தலைதெறிக்க ஓடும் மணல் லாரிகள் மாதிரி, பிட்சா ஹட் டெலிவரி பணியாளர்கள் வண்டி ஓட்டுவார்கள். குறிப்பிட்ட நேரத்தில் பிட்சாவைக் கொண்டுபோய் வீடுகளில் சேர்க்கவேண்டும் என்ற சர்வீஸ் கமிட்மெண்ட்(!), இந்தக் களேபரத்துக்குக் காரணம். இப்போது பிட்சா ஹட் பையன்களை அதிகம் காணவில்லை.
சாலையில் வண்டியில் போகும்போது அவசரக்காரர்களை நீங்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம்.
1. உடலை 45 டிகிரி முன்னே வளைத்துக்கொண்டு, ரேஸில் வண்டியோட்டும் பாணியில் ஹாண்டில்பாரைப் பிடித்திருப்பார்கள்.
2. வண்டியின் வேகத்தைக் கூட்ட, சைலன்சர்களைக் கழட்டிவைத்துவிட்டிருப்பார்கள். ஹெல்மெட், பெட்ரோல் டாங்க் மேல் சயனித்திருக்கும்.
3. சிக்னல்களில், ஆம்பரில் இருந்து சிவப்பு விளக்கு எட்டிப் பார்க்கும் கடைசிக் கணத்தில், நிறுத்தக் கோட்டைத் தாண்டுவார்கள்.
4. அப்படியே சிக்னலில் நிற்கவேண்டியதாகிவிட்டால், சிவப்பு விளக்கு பச்சைக்கு மாறுவதற்குள் பைக்கைக் கியர் மாற்றி சாலை நடுவே கொண்டுவந்துவிட்டிருப்பார்கள்.
5. டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டுவிட்டால், எல்லா சந்துகள் வழியேயும் வெளியே வந்துவிடத் துடிப்பார்கள். சட்டென பிளாட்பாரத்தில் ஏறி வண்டியோட்டுவார்கள். சாலை நடுவே தடுப்பு இல்லையென்றால், எதிர்ப்பக்கம் பாய்வதில் மன்னர்கள்.
6. எல்லாவற்றையும்விட முக்கியமானது, இவர்களுக்கு பேரல்லல் பார்க்கிங் என்றால் என்னவென்றே தெரியாது. கோணல்மாணலாக நிறுத்துவது ஸ்டைல். சைட் ஸ்டேண்ட் போடுவது மற்றொரு ஸ்டைல்.
இவர்கள் கூட்டமான சாலையில்தான் ஹாரன் அடிப்பார்கள் என்றில்லை. சாலையில் யாருமே இல்லையென்றாலும் ஹாரன் அடிப்பார்கள். ஏனெனில், உள்ளே இருக்கும் வேகம், பதற்றமாக வெளிப்படுகிறது. மனத்துக்குள் எங்கேயோ அவசரமாகப் போய், எதையோ செய்து முடிக்கவேண்டும் என்று பரபரக்கிறது. சாலை, மிகப் பெரிய இம்சையாக இருக்கிறது. தொலைவு, ரொம்ப எதார்த்தமாக இருக்கிறது. தூரம், ஸ்தூலமாக இருக்கிறது. காற்றில் இறக்கைக் கட்டிப் பறந்துவிட்டால், எப்படி இருக்கும்? அது சாத்தியமில்லை என்பதால், சாலையில் போக வேண்டியிருக்கிறது. சாலையில் இவர்கள் வண்டியை ஓட்டுவது இல்லை. நதியைக் கடப்பது போல், இவர்கள் சாலையைக் ‘கடக்கிறார்கள்’.
இது நடுவே வரும் எந்த ஒரு சின்ன இடைஞ்சலும் பெரிய தலைவலியாகத் தெரிகிறது. முன்னால் வண்டியோட்டுபவன் பெரிய துரோகி. பக்கத்தில் ஓட்டுபவனோ போட்டியாளன். இருவரையும் மிஞ்சிவிட வேண்டும். டிராபிக் ஜாம்மில்தான் இவர்களின் பரிதாப அவசரம் இன்னும் தெளிவாகத் தெரியும். டிராபிக் ஜாம் என்பது ஒரு கிரைசிஸ் (crisis). பொறுமையை, வலிமையை, தாக்குபிடிக்கும் சக்தியை சோதனை செய்யும் தருணம் அது. மனத்துக்குள் இதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அது நிஜ வாழ்வின் ஓர் எதார்த்த தருணம். எப்படியும் இதில் இருந்து ‘கடந்து’விட வேண்டும். அந்தத் துன்பத்தை ‘அனுபவிக்க’ முடியாது; அதைத் ‘தொலைத்து’விட்டு, ‘கடந்துவிட்டு’, அடுத்த கட்டத்துக்கு ஓடிப் போய்விட வேண்டும்.
டிராபிக் ஜாம் ஆண்களுக்கு ஒருவிதமான கிரைசிஸ் என்றால், பெண்களுக்கு அது வேறுவிதமான கிரைசிஸ். துரியோதன, துச்சாதன கூட்டத்துக்கு நடுவே சிக்கிக்கொண்டுவிட்ட திரெளபதி தவிப்பு, அவர்கள் பார்வையில் தெரியும். சட்டென உடைகளை இழுத்து மூடிக்கொள்ளும் வேகத்தில் அது இன்னும் தெளிவாகத் தெரியும். கிடைக்கும் சந்துக்குள் புகுந்து வெளியேறிவிட வேண்டும் என்ற அவசரம் மிக அதிகமாக இருக்கும்.
இதுபோன்ற தருணங்களில்தான் ஹாரன் அலற ஆரம்பிக்கும். எனக்கு வழிவிடு, நான் தப்பித்துப் போய்விடுகிறேன் என்ற அலறல் அது.
வளர்ந்த பண்பாடு நிறைந்த சமூகங்களில் ஹாரன் என்பது ஒரு அநாகரிகம். நான் பார்த்த வெளிநாடுகளில் எல்லாம் காரில் செல்பவர்கள் ஹாரன் அடிக்கத் தயங்குவார்கள். முன்னே செல்பவனைத் தவறு செய்கிறாய் என்று சொல்லாமல் சொல்கிறது நம் ஹாரன். அதனால், அதை அடித்து அவனைக் கொச்சைப்படுத்தக்கூடாது. அவனை இம்சை செய்யக் கூடாது. அவனது வண்டியோட்டும் அனுபவத்தைக் கெடுக்கக்கூடாது. அவனுக்கு அவனது தவறைச் சுட்டிக்காட்ட மட்டுமே ஹாரம் அடிக்க வேண்டும்.
ஆனால், நம்ம ஊரிலோ அதற்கு நேர் மாறாக எல்லாம் இருக்கிறது. ஹாரன் அடிப்பவர்களுக்கும் நாகரிகம் இல்லை. அதைக் கேட்டு ஒதுங்கவேண்டியவர்களும் அதைச் சட்டை செய்வதில்லை. ஹாரன் அடிப்பது போதைப் பழக்கம் மாதிரி. விரல்கள் தன்னால் ஹாரன் அருகே போய்க்கொண்டே இருக்கும். இன்னொரு வகையில் சொல்லப்போனால், அது ஓட்டுபவனின் பயத்தையே பெரும்பாலும் பிரதிபலிப்பதாக இருக்கும். என் மேல் மோதிவிடாதே, நான் வந்துகொண்டிருக்கிறேன் என்பதற்கான சமிக்ஞை ஹார்ன்.
வேறு வகையில் சொல்லவேண்டுமானால், இவர்கள் அடுத்தவர்களை நேசிக்கத் தெரியாதவர்கள். மனத்துக்குள் தனித் தீவுகளாகி இருப்பவர்கள். ஜோவெனப் பெய்யும் மழை கூட, இவர்களுக்கு ‘சனியன் பிடிச்ச மழை’தான். வெயிலை இயல்பாக மனத்துக்குள் வாங்கிக்கொண்ட இவர்களால், அருமழையை வாங்கிக்கொள்ளத் தெரியவில்லை. மழையில் ‘மாட்டி’க்கொண்டுவிட்டோம் என்றுதான் இதைச் சொல்வார்கள்.
இந்தக் குணங்கள் இவர்களை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. சிக்னல்களில் நிற்கும்போது, வேண்டுமென்றே பக்கத்தில் பேச்சு கொடுப்பேன். ‘இந்த ரோடுல ஐசிஐசிஐ பேங்க் ஏடிஎம் எங்க இருக்கு தெரியுமா?’ அல்லது ‘இந்த ரோடுல போனா மெரினா பீச் வருமா?’ என்று கேட்பேன். பத்தில் ஒன்பது பேர் தெரியாது என்று உதட்டைப் பிதுக்குவார்கள். அவர்களுக்கு சாலை தெரியும். இரண்டு பக்கமும் இருக்கும் கடைகளோ, கோவில்களோ இன்னபிற முக்கிய இடங்களோ அவர்கள் மனத்தில் பதிந்தே இருக்காது. அழகைப் பருகத் தெரியாதவர்கள்.
சாலையும் வாகனமும் அவர்களைப் பொறுத்தவரை, உபயோகப் பொருள்கள். அதன் உபயோகம்தான் அவர்களின் நினைவில் பதிந்திருக்குமே தவிர, இந்த உபகரணங்களைக் கொண்டு வாழ்வை ரசிக்க முடியும், அனுபவிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
நகரம் நிறைய விஷயங்களை இழக்க வைத்திருக்கிறது. அதில் முக்கியமானது, நமது ரசனை.
ஒரு துளி தேன்
Posted in அனுபவம் on August 19th, 2009 by வெங்கடேஷ் – 3 Commentsநான் போராடக்கூடிய ஒரு சில விஷயங்கள் இருந்தன. அதில் முக்கியமானது, தினசரி செலவுகளை ஞாபகம் வைத்துக்கொள்வது. வெளியே கடைக்குப் போவேன்.வீட்டுக்கு வேண்டியதை எல்லாம் வாங்குவேன். பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். என்ன பில் ஆச்சு, கடைக்காரர் சரியாகக் கூட்டியிருக்கிறாரா என்றெல்லாம் பார்க்கும் பழக்கம் இல்லை. இதைவிடப் பெரிய பிரச்னை, சட்டென பர்ஸில் பணமில்லாமல் போவது. அதுவும் சாலையில் எங்காவது போய்கொண்டு இருக்கும்போது, வண்டியின் பெட்ரோல் தீர்ந்துவிடும். பெட்ரோல் ஸ்டேஷனுக்குள் போகும்போதுதான், பர்ஸில் பணமில்லையே, வங்கியில் இருந்து எடுக்கவேண்டுமே என்பது ஞாபகம் வரும். திட்டமிடாமல் வாழ்ந்த காலம் அது.
செலவுகளை ஒழுங்காக எழுதி வைத்தால், ஓரளவுக்குக் கணக்குப் பிடிபடும் என்று மனது சொல்லத் தொடங்கியது. இதைச் செயல்படுத்திவிட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் 80 பக்கம் நோட்டு ஒன்றை வாங்கி, கணக்கெழுத ஆரம்பிப்பேன். சரியாக மூன்றாவது நாள் சோம்பேறித்தனம் வரும். எழுதாமல் இருக்க ஏதேனும் ஒரு காரணத்தை மனம் தேடும். நமக்குத் தெரியாமல் அப்படி என்ன செலவு செய்துவிடப் போகிறோம்? நான் ஒன்றும் ஊதாரி கிடையாது. எதற்கு வீணாக இதையெல்லாம் எழுத வேண்டும்? வரிசையாகக் காரணங்கள். ஐந்தாவது நாள் மூடுவிழா.
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் படையெடுப்பேன். இந்த முறை சலிப்பே வரக்கூடாது. கணக்கு எழுதும் பழக்கத்தால், என்னவெல்லாம் சாதனை செய்ய முடியும் தெரியுமா? ஆண்டு பட்ஜெட் போட முடியும். வரக் கூடிய செலவுகளை முன்கூட்டியே யோசித்துவிட முடியும். அதற்குத் தேவையான பணத்தைத் தயார்செய்து வைத்துக்கொள்ள முடியும். செலவுகள் போக முடிந்தவரை சேமிக்கவும் பார்க்கவேண்டும். முனைப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ, அவ்வளவு சீக்கிரமாக சலிப்பும் வந்துவிடும். இழுத்துப் பிடித்து 3 நாள்கள் எழுதுவேன். அத்தோடு சரி.
ஒரு விஷயத்தை வழக்கப்படுத்திக்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை அப்போதுதான் நேரடியாகப் புரிந்துகொண்டேன். மூளை ஒன்றைச் சொல்லும், உடம்பு வேறொன்றைச் செய்யும். ஒருவித கையாலாகத்தனம், எரிச்சல், பச்சாதாபம் எல்லாம் எட்டிப் பார்க்கும். பூனாவில் இருக்கும்போதுதான், இதற்கு ஒரு விடிவு பிறந்தது. மனைவியும் மகள்களும் சென்னையில். நான் மட்டும் பூனாவில். அலுவலகத்தில் இருந்து வீடு வந்துவிட்டால், வேறு வேலையே கிடையாது. என்னை முழுமையாக ஆட்படுத்திக்கொள்ள புத்தகங்களும் எழுத்தும்தான் பயன்பட்டன. கூடவே கணக்கெழுதுவது. விடாமல் ஒரு மாசம் எழுதியிருப்பேன். ஐம்பது பைசா செலவைக் கூட ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதிவைத்தேன். விளைவு, ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.
அப்போதுதான் 21 நாள் பயிற்சி பற்றிப் படித்தேன். எங்கு படித்தேன் என்று இப்போது ஞாபகமில்லை. ஏதேனும் ஒரு செயலை 21 நாள்கள் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால், அது வழக்கமாகிவிடும். உடம்பும் மனமும் மூளையும் ஒரு நேர்க்கோட்டுக்கு வர 21 நாள்கள் ஆகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் மோதிக்கொண்டு இருக்கும்போது, எல்லாவற்றையும் ஒத்திசைந்து வேலை செய்ய வைக்க 21 நாள்கள் தேவைப்படும்.
நான் கணக்கெழுத ஆரம்பித்த தேதியை மீண்டும் பார்த்தேன். ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருந்தது. கணக்கெழுத வேண்டும் என்ற எண்ணம் இதற்குள் எனக்குள் ஆழ ஊடுருவியிருந்தது. சொல்லப்போனால், ஒவ்வொரு செலவைச் செய்யும்போதும், வரவைப் பெறும்போதும், மனத்துக்குள்ளேயே அன்றைக்கு இன்னின்ன விஷயங்களை நோட்டில் எழுதவேண்டும் என்று குறித்துவைத்துக்கொள்வேன். இரவு எழுத ஆரம்பித்தவுடன், கடகடவென செலவுகள் காட்சிபோல் மனத்தில் தோன்ற ஆரம்பித்துவிடும்.
இன்னொன்றையும் கவனித்தேன். வீணான கேள்விகளே எழுவதில்லை. எழுதிவைத்து ஆகப்போவது என்ன? அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள் என்று அதே செலவுகள்தானே? ஒன்றும் புதிதாகச் செய்யவில்லையே.. இதைப் போய் ஏன் எழுதுவானேன் என்று இடக்கு கேள்விகள் தோன்றவில்லை. இதனால் ஏற்பட்ட பயன்களை நான் அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்துவிட்டேன். என் வழக்கம் என் மனைவிக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. என் சின்ன மகளுக்கும் கூடத் தொற்றிக்கொண்டுவிட்டது.
ஒரு விஷயத்தை 21 நாளில் கற்றுக்கொள்ள முடியும், வழக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்றால், ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 12 வித்தைகளையாவது கற்றுக்கொள்ள முடியும். ஒருவன் 30 ஆண்டுகள் உடல்நலனோடு வாழ்ந்தால், 30 x 12 = 360 வித்தைகள் / விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். யோசிக்கவே ஆச்சரியமாக இருந்தது. எத்தனை மொழிகள் கற்க முடியும்? எத்தனை துறைகளைப் படிக்க முடியும்? எத்தனை நல்ல வழக்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்?
அதுவும் இந்த 21 நாள்கள் என்பது மந்திரச் சொல் மாதிரி இருக்கிறது. நிறைய இடங்களில் இந்த 21 நாள்கள் பயன்படுகின்றன. கார் டிரைவிங் கற்றுக்கொள்ளப் போனால், 21 நாள் கிளாஸ். திருவல்லிக்கேணி விவேகானந்தா கேந்திராவில் யோகா கற்கப் போனால், 21 நாள் கிளாஸ். நீச்சல் பயிற்சிக்குப் போனால் 21 நாள் கிளாஸ். பெரும்பாலான கிராஷ் கோர்ஸ்களின் பயிற்சிக் காலகட்டம் 21 நாள்கள். 3 வாரம் என்பது மிகவும் நீண்ட காலமுமில்லை, மிகக் குறைவான காலகட்டமும் இல்லை. சரியான கால அளவு. ஆறு மாசம், ஒரு வருடம் கோர்ஸ் என்பதைவிட, 3 வாரம் என்றவுடன் போய் சேர்ந்துவிட மனது உடனே அனுமதி கொடுத்துவிடுகிறது.
21 நாள்கள் என்பது ஆரம்ப வேகம் போல் இருக்கிறது. அது, ஒரு துறையின், ஒரு செயலின் சுவையை, குழந்தைக்கு நாக்கில் தேனைத் தடவுவது மாதிரி தடவிவிடும் போலிருக்கிறது. ஒரு துளி தேன், தேனின் திளைப்பை கோடி காட்டிவிடுகிறது. அதைப் முழுமையாகப் பருகும் ஆசை தொடருவதில் ஆச்சரியமே இல்லை.
21 நாள்கள் டெக்னிக்கை இப்போது பல விஷயங்களில் நான் பயன்படுத்தி வருகிறேன். உடற்பயிற்சி, படிப்பு, டிவி சீரியல்களைத் தவிர்த்தல், பேசும்போது ஒரு சில சொற்களைப் பயன்படுத்தாது தவிர்த்தல் என்று சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து என் முயற்சியை செய்து பார்த்தேன். நல்ல பலன். ஒன்றும் வேண்டாம், முகத்தைச் சவரம் செய்துகொள்வது எவ்வளவு சின்ன விஷயம். சனி, ஞாயிறு வந்துவிட்டால், ஒரு வித சோம்பல், அசதி வந்துவிடும். இரண்டு நாள் தாடியோடு அலைவேன். விடிகாலையில் பல் துலக்கியவுடன், கூடவே சவரம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படுத்த, எனக்கே என் முகம் களையாக இருக்கிறது!
வழக்கம்தான் நிறைய விஷயங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்குவேஸ் காலையில் ஒன்பது மணிக்கு தன் அறையில் எழுத நுழைந்துவிட்டால், மதியம் ஒரு மணி வரை எழுதுவாராம். அசோகமித்திரனைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி என்று நினைக்கிறேன். நிறைய எழுதிக் குவித்திருக்கிறீர்கள் என்பது போல் ஒரு கேள்விக்கு, 20 வருஷமா, தினமும் காலை அரை மணி நேரம் எழுதினது. இவ்வளவு பக்கங்கள் வராமலா இருக்கும் என்று பதில் சொன்னார். க.நா.சு. சோர்வே இல்லாமல் எழுதியிருக்கிறார்.
வழக்கம் என்பது ஒரு செயலின் மேல் காதலை உருவாக்கிவிடும். ஆரம்பம், வேகம். பின்பு எரிச்சல். அப்புறம் கொஞ்சம் தொய்வு. விட்டுவிடக் கூடாது என்று தொடர்ந்து செய்ய முனையும்போது, ஒரு செயலின் நுணுக்கங்களுக்குள் கவனம் குவிய ஆரம்பிக்கும். அது ஏதோ ஒருவிதமான மாற்றத்தை தனக்குள் ஏற்படுத்துகிறது என்பதை மெல்ல புரிந்துகொள்ளும் தருணம் அடுத்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் 21 நாள் முடிந்துபோயிருக்கும். ஆனால், ஈடுபட ஆரம்பித்த செயல், கற்க ஆரம்பித்த வித்தை, மெல்ல கிளைபரப்பி வளர ஆரம்பித்திருக்கும். ஆசை இன்னும் தீவிரப்படும். தொடர்ந்து ஈடுபடுவது அதற்குப் பின்னர் நிற்கவே நிற்காது.
ஒருவகையில், இந்த நேசமுடனும் என்னுடைய 21 நாள் பயிற்சியின் தொடர்ச்சிதான்.