அனுபவம்

2009 – மறக்க முடியாத ஆண்டு 4 : நானும் நண்பர்களும்

Posted in அனுபவம், பொது on December 30th, 2009 by வெங்கடேஷ் – Be the first to comment

தனிப்பட்ட அளவிலும் நான் ஆர்வம் செலுத்தும் பல செய்திகளின் அடிப்படையிலும் 2009, எனக்கு மறக்க முடியாத ஆண்டு. தனிப்பட்ட அளவில் என்றால், இதெல்லாம் என் மனத்துக்கு மகிழ்ச்சி அளித்தவை:

1. 2009 முழுவதும் பத்திரிகைகளில் நிறைய கட்டுரைகள் எழுதினேன். ஜூனியர் விகடன், கல்கி, நாணயம் விகடன், புதிய தலைமுறை என்று குறைந்தபட்சம் 25 கட்டுரைகளேனும் பிரசுரம் ஆகியிருக்கும்.

2. நேசமுடன் மடல் இதழை மீண்டும் தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்ய முடிந்தது. 21 இதழ்கள் வெளியாகி இருக்கின்றன. ஒரு இதழுக்கு 3 கட்டுரைகள் என்றாலும் தோராயமாக 63 கட்டுரைகள் எழுத முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. எழுதுவதை விட எழுத்தாளனுக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

3. கல்கி இணையச் சிறப்பிதழ் தயாரிக்க முடிந்தது நல்லதொரு வாய்ப்பு.

4. இரண்டு புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது.

5. என் பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்தது. வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கிவிட்டவர்களை எல்லோரையும் ஃபேஸ்புக் மூலம் இணைத்தோம். அப்புறம், நேரடி சந்திப்புகள் தொங்கி, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு சந்திப்பு. மிக்க மகிழ்ச்சியான சந்திப்புகள்.

6. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களிடம் நேரடியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவரைப் பற்றி தனியே கட்டுரை எழுத வேண்டும். ஒரே ஒரு செய்தி மட்டும்: லேட்டஸ்டாக என்ன ஆங்கிலப் புத்தகம் வந்தாலும் வாங்கிப் படித்துவிடுவார் அருட்செல்வர். படிக்கும் வேகமும் மிக அதிகம். அதைப் பற்றிய சுயமான கருத்து ஒன்றையும் அவர் உருவாக்கிக்கொள்ளத் தவறுவதில்லை. அவருக்கு வயது 87.

7. இந்த ஆண்டு, நண்பர் இரா. முருகன் திரைபிரவேசம் செய்திருக்கிறார். உன்னைப் போல் ஒருவன் படத்தில் அவர் வசனம் எழுதியிருக்கிறார். இரா.முருகனுக்கு சினிமா ஆசை இருக்கும் என்று நான் நினைத்ததில்லை. சாஃப்ட்வேர் சமர்த்து பிள்ளை என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். வசனங்கள் நன்றாக இருந்தன. அவர் பெயரைத்தான் இறுதி வரிசை டைட்டில் கார்டில் போட்டார்கள். சேத்தன் பகத்துக்கும் 3 இடியட்ஸில் இதுதான் நிலைமை. அவருடைய 5 பாயிண்ட் சம்திங் நாவல்தான் 3 இடியட்ஸ். அவர் பெயரும் இறுதி வரிசையில் ஓடுகிறது. சினிமாவுக்கான விதிகள் வேறு போலும்!

8. பா.ராகவன் வசனம் எழுதிய முதல் திரைப்படம், கனகவேல் காக்க, நான் அறிந்து ஒன்றே கால் ஆண்டுகளாக பெட்டியில் இருக்கிறது. டிசம்பரில் ரிலீஸ் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தேன். வேட்டைக்காரன் முட்டுக்கட்டைக்காரனாகி விட்டான்.

9. அஜயன் பாலாவை பல ஆண்டுகளாகத் தெரியும். சினிமா ஆசையில், பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டுவிட்டு, ராஜேஷ்வரிடம் அசிஸ்டெண்ட்டாகப் போய் சேர்வதற்கு முன்பிருந்தே தெரியும். நன்றாக எழுதக் கூடியவர். சினிமா ஆசை பொல்லாதது. துணை இயக்குநர், நடிகர் என்றெல்லாம் முயற்சித்தார். விகடன் மீண்டும் அவரை எழுத வைத்தது. பிரபலங்களின் சாதனைகளை வரிசையாக எழுதினார். எல்லாம் நான்-ஃபிக்‌ஷன். இப்போது, கல்கி இதழில் ‘பகல் மீன்கள்’ என்றொரு தொடர்கதை எழுதுகிறார். இலக்கியத்துக்குள் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

10. பல ஆண்டுகளுக்கு முன்பு, ‘கொக்காட்டி துலுக்கன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர் நண்பர் கொ.மு. ரியாஜ் அகமது. நல்ல வாசகர். என் சின்ன வயது நண்பர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரை கோவையில் சந்தித்தேன். வாழ்க்கை பல வலிகளை அவருக்கும் வழங்கியிருக்கிறது. அதையும் மீறி உற்சாகமாக இருந்தார். புத்தக வாசிப்பைத் தொடர்கிறார். மகிழ்ச்சியாக இருந்தது.

செய்து முடிக்காதவை, கஷ்டங்கள் எல்லாம் தனிப்பட்டவை. அல்லது அதெல்லாம் முடிந்துபோய்விட்டவை. அதனாலேயே அதற்கு இனிமேல் ஒன்றும் பெரிய முக்கியத்துவம் இல்லை.

மகிழ்ச்சிகளும் வருத்தங்களும் ஆச்சரியங்களும்

Posted in அனுபவம், பொது on December 24th, 2009 by வெங்கடேஷ் – 4 Comments

கடந்த சில நாள்களாக பார்க்கும் சில விஷயங்கள், செய்திகள் ஆகியவை கலவையான உணர்வையே அளிக்கின்றன. சில வருத்தமளிக்கின்றன, ஒரு சில மகிழ்ச்சி அளிக்கின்றன, கொஞ்சம் ஆச்சரியமும் அளிக்கின்றன. ஒவ்வொன்றாக பின்னே:

1. மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டிருக்கும் கசாப்பின் விசாரணையைத் தொடர்ந்து படிப்பவர்கள், ஆச்சரியப்படுவது உறுதி. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, தவறான செய்திகளைச் சொல்வது, மிரட்டலுக்கு அடிபணிவது என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே, நீதிமன்றத்தை எவ்வளவு தூரம் கேலிக்குரிய இடமாக மாற்ற முடியுமோ அவ்வளவையும் கசாப் செய்துகொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் பேசினால், வீணான தாமதம், அலைக்கழிப்பு, தேவயற்ற எரிச்சல் எல்லாம் தோன்றவே செய்யும். இதையெல்லாம் வெளியே இருந்து பார்க்கும் நம்மைப் போன்ற குடிமகன்களுக்கு, ஒரே ஒரு கேள்விதான் எழும். நமது நீதிமன்றங்கள் இவ்வளவு கேலிசெய்யப்பட வேண்டுமா?

2. ஒரு சில பெயர்களை, கவிதைகளை எடுத்துச் சொல்ல ரொம்பக் கூச்சமாக இருக்கிறது. கால ஓட்டத்தில், இந்தப் பெயர்களையும், கவிதைகளையும் அடித்துத் துவைத்து, அதனை ஒருவித இழிவுநிலைக்குக் கொண்டுவந்துவிட்டார்களோ என்ற அச்சம் இருக்கிறது. மகாத்மா என்றோ, காந்தி என்றோ எங்காவது எழுதினால், எடுத்துக்காட்டு சொன்னால், கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. இதற்கு முன்னர் அதைப் பயன்படுத்தியவர்கள் எவ்வளவு தூரம் அதை நல்லவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தச் சொற்கள், அதைப் படிக்கும், கேட்கும் மக்கள் மனத்தில் நல்ல எண்ணங்களைவிட, கூடவே ஒருவித கேலிக்குரிய தோற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நான் அதை எவ்வளவுதூரம் சிறப்பான பொருளில் எடுத்துப் பயன்படுத்தினாலும், ஏற்கெனவே அச்சொல் பெற்றிருக்கும் சாயல்களின் அதீத கனம் அதை அழுத்துகிறது. இதேபோல், திருக்குறளையும் எங்கும் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது.

3. என்னிடம் இரண்டு சட்டைகள் இருக்கின்றன. ஒன்று, என் நண்பர் ஜெ. முத்துகுமார் தந்தது. அவரது அலுவலகத்துக்குச் சென்றபோது, நினைவுப் பரிசாக டி.ஷர்டைத் தந்தார். இன்னொன்று என் மனைவி வாங்கித் தந்தது. இரண்டுக்கும் ஒரு தனி விசேஷம் உண்டு. அந்த டி.ஷர்டை எங்கே நான் போட்டுக்கொண்டு போனாலும், நிச்சயம் மழை பிடித்துக்கொள்ளும். கனமழை. சட்டையை நனைக்காமல் நான் வீடு வந்ததில்லை. நாள் முழுக்க நல்ல வெயில் அடிக்கும். மழைக்கான சுவடே இருக்காது. வீடு திரும்பும்போது, லேசாக மழை ஆரம்பிக்கும். என் தலைமேல் மட்டும்தான் கொட்டுகிறதோ என்று கூட நினைத்துக்கொள்வேன். மே, ஜூன் போன்ற வெயில் காலங்களில் இந்தச் சட்டைகளைப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்!

4. சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி, ஒவ்வொரு வாரக்கடைசியிலும் சென்னையில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. உயிர்மை, திரிசக்தி பதிப்பக வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டார்கள். அபரிமிதமான மரியாதை, கெளரவம். புகழ் மொழிகள் அரங்கம் எங்கும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. எழுத்தாளர்களுக்கு இவையெல்லாம் நிச்சயம் உவப்பளிக்கும். பதிப்பாளர்களும் மகிழ்ச்சியடைந்தால், நான் இன்னும் மகிழ்வேன்.

5. சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்கு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவரோடு சில மணி நேரங்கள் செலவிடும் வாய்ப்பைப் பெற்றேன். புகழ் வளையம் தன்னை இறுக்கிவிடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். தன் வேலைகளுக்குக் கிடைத்திருக்கும் புதிய புகழை அவர் ஒரு இடைஞ்சலாகக் கருதுவதாகவே தோன்றியது. ‘நான் தத்துவ முத்துகளை எல்லாம் உதிர்க்க முடியாது’ என்று கவனமாகப் பேசினார். முக்கியமாக, அவருக்கு இப்போது வழங்கப்படும் ‘இந்தியன், தமிழன்’ போன்ற அடையாளங்களை அவர் திணிப்புகளாக கருதுகிறார். அடையாள வளையங்களிலும் தான் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற கவனம் அவரிடம் இருக்கிறது.

மொட்டை மாடி இரவுகள்

Posted in அனுபவம், பொது on December 9th, 2009 by வெங்கடேஷ் – 6 Comments

சென்னை மாநகரில் வளர்ந்தவர்களுக்கு தஞ்சம் புக இரண்டு இடங்கள் உண்டு. ஒன்று மெரினா கடற்கரை, இன்னொன்று, வீட்டின் மொட்டை மாடி. நான் செளகார்பேட்டையில் வளர்ந்தவன். விசாலமான மொட்டை மாடிகள் கொண்ட வீடுகள். ஒவ்வொரு வீடும் அடுத்தொன்றோடு ஒட்டிக்கொண்டு இருக்கும். ஏதேனும் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஏறிவிட்டால், அப்படியே அடுத்தடுத்த வீடுகளின் மொட்டை மாடிகளில் தாண்டிப்போய்க்கொண்டே இருக்கலாம்.

மழையும் பனியும் இல்லாத பெரும்பாலான இரவுகளில் மொட்டைமாடியில்தான் படுக்கை. கூட்டுக் குடித்தன வாழ்க்கையில், வீட்டின் அறைகளுக்குள் படுக்க முடியாது. என்னதான் மின்விசிறி ஓடினாலும் புழுங்கித் தள்ளிவிடும். ஒரு கட்டத்தில் மின்விசிறி வெப்பத்தை அப்படியே அள்ளித் தெளிக்கும். தாங்கவே முடியாது. மொட்டை மாடியில் பெரிதாக காற்று அடித்துவிடாது. ஆனால், ஒருவித குளிர்ச்சி இருக்கும். காலை அகட்டி அண்ணாந்து பார்த்துப் படுக்க மொட்டை மாடியைப் போன்ற இடம் வேறொன்று இல்லை.

வெயில் காலங்களில் மாடியை படுக்க உகந்த இடமாக மாற்றுவது ஒரு கலை. மாலை மூன்று நான்கு மணியில் இருந்தே, படுக்கும் இடங்களில் தண்ணீரைக் கொட்ட வேண்டும். கொட்டிய ஒருசில நிமிடங்களிலேயே தண்ணீர் ஆவியாகிப் போய்விடும். தரையில் நிற்க முடியாது. வெப்பம் கால்களில் தெரியும். இது முதல் ரவுண்டு. ஐந்து மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைக் கொட்ட வேண்டும். இப்போது தண்ணீர் அவ்வளவு சீக்கிரத்தில் ஆவியாகிவிடாது. ஆனால், சூடு இன்னும் இருக்கும். மீண்டும் ஒரு ஏழு, ஏழரை மணி வாக்கில் இன்னொரு முறை தண்ணீரைத் தெளிக்கவேண்டும். ராத்திரி பத்து மணி வாக்கில் பாயை விரித்துப் படுக்க போகும்போது, கொஞ்சம் இதமாக இருக்கும். பல இரவுகளில் கையில் விசிறியோடு படுத்துகொள்ள வேண்டும். விசிற விசிற மெல்லத் தூக்கம் கண்ணைச் சுழட்டும்.

சின்ன வயதில் பெற்றோரோடு மொட்டை மாடியில் படுத்துக்கொண்ட ஞாபகம் உண்டு. ஒரு வயதுக்கு மேல், பெற்றோர் சுவாரசியம் போய்விடும். இதுதான் சாக்கு என்று ஒரே ஆலோசனை மழை பொழிந்துவிடுவார்கள். அப்பாக்கள் பிள்ளைகளைக் குறைசொல்லும், கடிந்துகொள்ளும் இடமாகவும் மொட்டை மாடி மாறிவிடும். தாங்க முடியாது. நண்பர்கள் முக்கியமாகிவிடுவார்கள். கூட்டுக் குடித்தனத்தில் நண்பர்களுக்கு பஞ்சமே கிடையாது. செட் சேர்ந்துகொண்டு இரவெல்லாம் கதை பேச, நண்பர்கள்தான் சரியானவர்கள்.

சினிமா, படிப்பு, ஊர்க்கதை, வம்பு என்று தொடரும் கதைகளுக்கு அளவே இல்லை. எவ்வளவு பேசினாலும் இன்னும் இன்னும் என்று விஷயங்கள் இருந்துகொண்டே இருக்கும். அக்கம்பக்கத்து வீட்டு பையன்களும் சேர்ந்துகொண்டால், ஏதேனும் ஒரு மாடியில் கூடுவது இன்னும் சுவாரசியம் மிகுந்தது. பல வீட்டு பையன்கள் இப்படித்தான் நண்பர்கள் ஆவார்கள். விடுமுறைக் காலங்களில் வரும் பையன்களும் இதில் சேர்ந்துகொள்வார்கள். இதில் வயது வித்தியாசம் பெரிதாகத் தெரியாது. ரொம்ப சின்ன பையன் என்று யாரையும் ஒதுக்கவும் மாட்டார்கள். காதல் கதைகள் தான் ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

அதுவும் பெரிய பையன்கள் பேசும் காதல் அனுபவங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை. ஈர்ப்பு மிகுந்தவை. தூக்கமே வராது. பதினோரு மணி குல்பி ஐஸ் வண்டிக்காரன் போவான். அப்புறம் பனிரெண்டு மணி குல்பி ஐஸும் போகும். பக்கத்தில் இருந்த கிருஷ்ணா தியேட்டர், செலக்ட் தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு செல்பவர்கள், சத்தமாகப் பேசிகொண்டு போவார்கள். வழக்கம்போல் பெரும்பாலான காதல்கள் துக்கத்தில் போய் முடியும். தோல்வியில் போய் முடியும். அல்லது தோல்வி மாதிரியான ஏதோ ஒரு முட்டுக்கட்டையில் போய் முடியும். கைக்கிளை கதைகள் இன்னொரு தனி ரகம். தனி சுவை. எதுவுமே முடிவுறாது. ஒரு காதல் முடிந்து இன்னொரு காதலுக்குப் பையன்கள் தயாராவார்கள். அதுவும் முறிந்துபோனால், அடுத்தொரு காதல். ஒரு காதல் முறிந்துபோக, காரணமா இல்லை? புரிந்தும் புரியாத வயதில், பயமே அதிகமாக இருக்கும்.

இன்னொரு பெரிய விஷயம், படிப்பு, வேலை. யாரையும் பயங்கர படிப்பாளி என்று சொல்லிவிட முடியாது. எல்லோரும் ஆவரேஜ் மாணவர்கள். குடும்பப் பின்னணிகளும் எளிமையானவை. செளகார்பேட்டை முழுவதும் ஒண்டுக்குடுத்தனவாசிகள் நிறைந்த இடம். பெரும்பாலும் அப்பாக்களும் அம்மாக்களும் அரசு உத்தியோகம், டீச்சர் உத்யோகம், ஏதேனும் தனியார் நிறுவனங்களில் உத்யோகம் என்று மாதச் சம்பளக்காரர்களாக இருப்பார்கள். பல வீட்டு வாசல்களில் பால்காரன், அரிசிகாரன், நெய்காரன் கணக்கெழுதி வைத்துவிட்டுப் போவான். மாதமானால், முதல் வாரத்தில் ஒவ்வொருவரும் வந்து நின்றுவிடுவார்கள். பல குடும்பங்கள், வரவுக்கும் செலவுக்கும் ஈடுசெய்ய முடியாமல் திண்டாடிப் போய்விடும்.

நாங்கள் இருந்த போர்ஷனுக்கு அப்போது 90 ரூபாய் வாடகை. அதை வீட்டுக்காரம்மாள், ரூ.125 ஆக்கியபோது, எங்களால் அதைக் கட்ட முடியவில்லை. வேறு வீடு பார்த்துக்கொள்ள ஆயத்தமாகும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலைதான் பெரும்பாலோருக்கு. இதிலிருந்தெல்லாம் மீள, படிப்பும் வேலையும் தான் ஒரே வழி. ஆனால், என்ன சுட்டுப்போட்டாலும் 70 சதவிகிதத்துக்கு மேல் மார்க் வராது. பெரும்பாலான பையன்களுக்கு இதுதான் பிரச்னை. ஒவ்வொரு முறையும் அப்பாக்கள் திட்டித் தீர்த்துவிடுவார்கள். எதிர்காலம் என்ற இருட்டை அவ்வப்போது இன்னும் பூதாகாரமாக்கிக் காட்டுவார்கள். வளர வளர இன்னும் பயம் அதிகமாகும்.

வேலையில்லாத அண்ணாக்கள் ஒன்றிரண்டு பேர்கள் இருப்பார்கள். அவர்களும் இரவில் மொட்டை மாடியில்தான் படுத்துக்கொள்வார்கள். ஒரு அண்ணா அற்புதமாக வண்ண ஓவியம் வரைவார். பல மத்தியானங்களில் அவரோடு நான் பொழுதைக் கழித்திருக்கிறேன். அவருக்கு வேலையில்லை, அதனால்தான் இதெல்லாம் செய்துகொண்டிருந்தார் இப்போது தோன்றுகிறது. அப்போது ஒன்றும் தெரியாது. ஆனால், அண்ணாவின் வீட்டில் எப்போதும் ஒருவித முரட்டுத்தனம் இருக்கும். அவருடைய அம்மா, என்னை எப்போதும் ஒருவித சிடுசிடுப்புடனேயே எதிர்கொள்வார்.

இன்னொரு அண்ணா, பாடி பில்டர். மொட்டை மாடியில் எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டே இருப்பார். உடம்பு விண்ணென்று இருக்கும். எங்களுடைய காற்றாடி சண்டைகளுக்கு எல்லாம் அவர்தான் மத்தியஸ்தம். நீதிபதி. இரவில் அவரும் மொட்டை மாடியில் படுத்துக்கொள்ள வருவார். பேச்சு மீண்டும் மீண்டும் வேலையைச் சுற்றிச் சுற்றியே வரும். வேலை கிடைப்பது அவ்வளவு கஷ்டம் என்பது மனத்தில் ஆழப் பதிந்தது அப்போதுதான். அதைவிட, வேலை கிடைக்காததன் வேதனை, பெற்றோரின் ஏச்சு, மற்றவர்களின் ஏளனம் எல்லாம் இன்னும் வலி தரும். ஒரு கட்டத்தில் அண்ணாக்களும் அப்பாக்களை மாதிரியே ‘நிறைய படிடா, நிறைய மார்க் வாங்குடா’ என்று அட்வைஸ் மழையில் இறங்கிவிடுவார்கள்.

கண்ணை மூடும்போது, மனமெங்கும் துக்கமும் எரிச்சலும் மிஞ்சியிருக்கும். எச்சிலில் ஒருவித துவர்ப்பு. மற்றவர்களின் வலியும் வேதனையும் தாக்கியிருக்கும். ஏதோ நானே இதையெல்லாம் செய்துபார்த்து, தோற்றவன் போன்ற ரணம் ஏற்பட்டுவிடும். ஏதோ ஒரு கணத்தில் கனவும் கற்பனையும் கலந்து தூக்கம் இழுத்துக்கொண்டு போகும். கண்கள் தானாகவே மூடிக்கொள்ளும்.

திடீரென்று விடிகாலையில் விழிப்பு வரும். எல்லோரும் ஒவ்வொரு பக்கம் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். வானம் வெளிர்நீலத்தில். ஆங்காங்கே நட்சத்திரங்கள் தெளித்த வண்ணக் கோலம். தூரத்தில் ஏதேனும் ஒரு வாகனம் அவசரமாகப் போய்கொண்டு இருக்கும். வெண்மை பூத்த கொக்குகள் முக்கோண வடிவில் ராணுவ ஒழுங்கோடு பறந்து போகும். சாலை விளக்குகள் மொட்டை மாடி வரை பரவி லேசான வெளிச்சத்தை பரப்பியிருக்கும். ரொம்ப உயரத்தில் ஒரு விமானம் வீடு திரும்பும்.

நல்ல விழிப்பு நிலை. தூக்கம் முற்றிலும் போயிருக்கும். உடல் சோர்வு அற்று, பயங்கர உற்சாகமாக இருக்கும். எல்லாம் புதிதாகத் தெரியும். அன்றைய நாள் நல்லபடியாக விடியும் என்று உள்மனக் குரல் சொல்லும். அன்றைக்குச் செய்யவேண்டிவற்றை மனம் பட்டியலிடும். பாயை உதறி, பெட்ஷீட்டை மடித்து, தலையணையோடு கீழே இறங்கும்போது, ஏதேனும் ஒரு வீட்டு குக்கர் விசில் அடிக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் குழாயில் தண்ணீர் கொட்டி அடித்துப் பார்ப்பார்கள். புழுக்கம் வரவேற்கும். இறுக்கம் வரவேற்கும்.

மீண்டும் ஒரு நீண்ட நாள், வலி நிறைந்த நாள் காத்திருக்கும்.

கறை

Posted in அனுபவம், இலக்கியம் on December 2nd, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

சென்ற சனிக்கிழமை நான் தினப் பலனைப் பார்க்கவில்லை. வீண் அலைச்சல் என்று பலன் எழுதியிருக்கவேண்டும். ஒன்றுமே இல்லை. என் மகளின் ஸ்கூல் சட்டை, என்னுடைய ஒரு பேண்ட் ஆகியவற்றில், இன்னொரு சட்டையில் இருந்து மஞ்சள் வண்ணம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதை அப்படியே போட்டுக்கொண்டு போக முடியாது. கறை பளிச்சென்று தெரியும்.

அன்று காலை இரண்டு துணிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ஸ்டைன்ஸ் அவே, பாண்ட் பாக்ஸ், புரோபஷ்னல், ஆபீசர்ஸ் லாண்டரி போன்ற பெயர்கள் என் மனத்தில் ஞாபகம் வந்தது. முதலில், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஸ்டைன்ஸ் அவே கடைக்குப் போனேன். கடையை இடம் மாற்றிவிட்டார்களாம். நீங்கள் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் போய் கேளுங்கள் என்றார் பக்கத்துக்குக் கடையில் இருந்தவர்.

நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போய் தேட, அந்தக் கடை கிடைக்கவில்லை. உடனே எனக்கு, பட்டினப்பாக்கம் அருகே ஒரு பெரிய லாண்டரியைப் பார்த்த ஞாபகம் உண்டு. வண்டியை அங்கே ஓட்டிக்கொண்டு போக, கதவு திறந்து இருந்தது.

துணிகளை வெளியே எடுத்துப் போட, கறையைப் பார்த்த கடைக்காரர்,

‘சாரி சார். மஞ்சள் கறை போகாது. ஹைட்ரோ வாஷ்தான் போடணும். மருந்து போட்டா, அடிப்படை கலரே போயிடும். வெள்ளைத் துணின்னா செய்யலாம் சார். இது கலர் துணி.’
‘அப்ப கறை போக என்ன வழி?’
‘ஒண்ணும் இல்லை சார். அப்படியே போட்டுக்க வேண்டியதுதான்.’

எனக்கு லேசாக வருத்தம் வரத் தொடங்கிவிட்டது. ஒன்று என் மகளின் பள்ளிச் சீருடை. இன்னொன்று என்னுடைய பேண்ட். இரண்டுமே விலையுயர்ந்த ஆடைகள். என் வருத்தம் கடைக்காரருக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

‘ஆலா இருக்கா சார். ஆலா போட்டு ஊறவையுங்க. அப்புறம் கசக்குங்க. கொஞ்ச கொஞ்சமா போவும்’
‘ஓ’
‘இல்லன்னா, பாண்ட் பாக்ஸ் கடைக்குப் போங்க. அவங்க வெள்ளாவி வெச்சு தோய்ப்பாங்க. தோபி வாஷ்னு சொல்லுவாங்க. அதைச் செஞ்சு பாருங்கள். கறை போயிடும்.’

ஏதோ ஒரு பிடிமானம் கிடைத்ததே என்று வண்டியை மைலாப்பூர் பக்கம் விட்டேன். அங்கே கபாலீஸ்வரர் கோவில் பக்கத்தில் பாண்ட் பாக்ஸ் லாண்டரியைப் பார்த்த ஞாபகம். கோவிலையே இரண்டு முறைச் சுற்றி வந்திருப்பேன். யாருக்குமே கடை தெரியவில்லை. ஆட்டோகாரர்களால் கூட அடையாளம் சொல்ல முடியவில்லை. கடைசியில், கோவில் இருக்கும் தெருவின் முனையிலேயே கடை இருந்தது. பாண்ட் பாக்ஸ் போர்டுதான் இல்லை. லேசாக மழைவேறு பிடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது.

கடையருகே போய், என் துணிகளை எடுத்துப் போட்டேன்.

‘கறை போவாது சார்.’
‘பாண்ட்பாக்ஸ்ல போயிடும்னு சொன்னாங்களே சார்..தோபி வாஷ்னு ஒண்ணு சொன்னாங்க.’
‘நான் போவாதுங்கறேன். நீங்க போவுன்னு சொன்னா, நான் என்னா பண்றது? தோபி வாஷ்லெல்லாம் யார் செய்யறாங்க. அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு. எல்லாம் மெஷின்தான். கெமிக்கல்தான் சார் போடணும். கலர் முழுசா போயிடும். பரவாயில்லையா?’

சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, ஜஸ்ட் டயல் சர்வீஸுக்குப் போன் செய்தேன். என் தேவையைச் சொல்ல, அடுத்த இரண்டாவது நிமிடம் இரண்டு மூன்று சலவைக்காரர்கள் போன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரும் ஒரே பல்லவிதான். துணியின் அடிப்படை வண்ணமே போய்விடும். கறையை மட்டும் நீக்க முடியாது. என்ன சொல்கிறீர்கள்?

‘நல்ல துணி சார். கறை போகவே போகாதா?’
‘கறை பட்டுடுச்சே சார். கறை படாம இருக்கணும். கறையை மட்டும் நீக்க முடியாது சார்.’
‘வேற வழி என்ன சார்?’
‘கறையோடவே இருந்துடவேண்டியதுதான்.’

நான் பேச்சற்றுப் போனேன்.

அழியாப் புகழ் பெறும் இடங்கள்

Posted in அனுபவம், இலக்கியம், சமூகம் on November 25th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

பஸ்ஸில் போவதும் நடந்துபோவதும் எனக்குப் பிடித்த பழக்கங்கள். காரிலோ, டூவீலரிலோ போகும்போதும் எல்லாமே சரக்கென்று காணாமல் ஓடிப்போய்விடுகின்றன. எந்த ஒரு காட்சியும் கட்டடமும் பெயர்ப்பலகையும் மனத்தில் பதிவதில்லை. பெரும்பாலும் சாலைப் பெயர்களைக் கூடப் படிக்க முடிவதில்லை.

நடை அப்படி இல்லை. பஸ்ஸும் அப்படி இல்லை. எதையும் நிதானமாகப் பார்த்துக்கொண்டு போக, மனத்தில் வாங்கிக்கொள்ள உதவி செய்பவை இந்த இரண்டு முறைகள். மூன்று நான்கு பெரிய கடைகள் நடுவே மாட்டிக்கொண்டு இருக்கும் அற்புதமான உணவகங்களை, டீக் கடைகளை, கைவினைஞர்களின் கடைகளை இப்படித்தான் நான் கண்டுபிடித்திருக்கிறேன். ஒவ்வொரு சாலையும் நிறைய நிறைய மர்மங்களை ஒளித்துவைத்திருக்கிறது. சரித்திரங்களை ஒளித்து வைத்திருக்கிறது. மனிதர்களை ஒளித்துவைத்திருக்கிறது.

அம்மாவை இழந்த சின்ன வயதில், என் பெரும்பாலான நேரம் இப்படிப்பட்ட பயணங்களில் கழிந்திருக்கிறது. அப்போது வடசென்னையில் செளகார்பேட்டை என்று சொல்லப்படும் கொண்டித்தோப்பு, (கொண்டியம்பதி) தங்க சாலை அருகே வீடு. பள்ளி விட்ட பின்பும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலாற எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்துபோய்விடுவேன்.

புதிய தெருக்களைக் கண்டுபிடிப்பது, புதிய இடங்களை, புதிய கடைகளை கண்டிபிடிப்பது அப்போது ஏற்பட்ட பழக்கம்தான். அதுவும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முடிந்தபின்னர் என்ன செய்வது என்று தெரியாது. விடுமுறைகள் நாள்கள் நிறைய இருக்கும். எவ்வளவுதான் புத்தகங்கள் படித்துக்கொண்டு இருப்பது? முருகன் தியேட்டர் அருகே இருந்த அரசு நூலகத்தில் இருந்து இரண்டு மூன்று நூல்களை ஒரே நாளில் படித்த வேகம் ஞாபகம் உண்டு. படிக்க முடியாத போது, ஊர் சுற்றவது பழக்கம்.

பிளஸ் ஒன்னில் அப்பா, எனக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தார். பல ஆண்டுகள் சைக்கிள் என் கனவு வாகனம். அந்தப் பக்கம் தண்டையார்பேட்டை தாண்டி, சுங்கச்சாவடி, எண்ணூர் முதல், இந்தப் பக்கம் கிண்டி வரை சென்னை முழுவதையும் சைக்கிளிலேயே சுற்றித் திரிந்த வயது அது.

புதிய சாலை எப்போதும் எனக்கு ஒருவித மயக்கத்தைத் தரும். எல்லா சாலைகளும் ஏதேனும் ஒரு பெரிய சாலையிலோ இன்னொரு சிறிய சந்திலோ போய் முடிவுபெறும். வடசென்னையில் ஏராளமான முட்டுச் சந்துகள் உண்டு. சாலை முடிந்துபோய்விடும். மீண்டும் திரும்பி, அடுத்த சாலையில் சைக்கிள் ஓட்டுவேன்.

இராயபுரம், தண்டையார்பேட்டை, கல்மண்டபம், ஏழு கிணறு, பிராட்வே, கொத்தவால்சாவடி, மண்ணடி, யானைகவுனி, செண்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய பகுதிகள் எல்லாம் எனக்கு விரல்நுனியில் அத்துபடி. சைக்கிள் வந்தபிறகு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சூளை, பெரியமேடு என்று இன்னும் சுற்ற ஆரம்பித்தேன்.

இதில் இன்னொரு மகிழ்ச்சி உண்டு. தெரியாத சாலைக்குள் போய்விட்டு, அது வளைந்து, நெளிந்து, மீண்டும் ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குள், தெரிந்த சாலைக்குள் வந்து முடியும்போது, ஏதோ வாஸ்கோடகாமா, மெகஸ்தினிஸ் மாதிரி உற்சாகமாக இருக்கும். புதிய வழித்தடத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி அது. மர்ம முடிச்சை அவிழ்த்துவிட்ட உற்சாகம் அது.

இப்படி சுற்ற ஆரம்பித்ததற்கு பள்ளியில் நான் சாரணர் அணியில் இருந்ததும் ஒரு காரணம். சாரணர் இயக்கத்தில், ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக்கொண்டு, அதில் சிறப்பாக செய்துகாட்டினால், ‘Proficiency Badge’ தருவார்கள். நான் இரண்டு கைகளிலும் ஏராளமான பேட்ஜ்கள் வாங்கியவன். அதில் ஒன்று ‘Pathfinder’ பேட்ஜ். அதற்கு ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாகப் போய், அந்தத் தெருவில் இருக்கும் முக்கிய இடங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு வரவேண்டும்.

பின்னர், அந்த முழுப் பகுதியையும் பெரிய சார்ட் பேப்பரில் வரைந்து சாலைகளைக் குறித்து, அதில் முக்கிய இடங்களைக் குறித்து, வழிகாட்ட வேண்டும். என் சுவாரசியம் இங்கிருந்துதான் தொடங்கியது. ஏற்கெனவே ஊர்சுற்றுவது என் பொழுதுபோக்கு. நான் கொண்டியம்பதி பகுதியை இப்படி வரைந்து, இடங்களைக் குறித்து, பாத்ஃபைண்டர் பேட்ஜ் வாங்கினேன். என் சார்ட்டை பல ஆண்டுகள் வைத்திருந்தேன். ஒரு பிள்ளையார் கோவில், ஒரு அம்மன் கோவில், ஒரு மரம், ஒரு விளையாட்டுத் திடல், ஒரு வளைவு என்று எதையும் விடாமல், அத்தனையையும் என் சார்டில் குறித்திருந்தேன்.

இப்போதும் எனக்கு இந்த பழக்கம் விடுவதில்லை. யாராவது எங்கேயாவது போகவேண்டும் என்று வழிகேட்டால், முதல் வேலையாக ஒரு பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டு வழி போட்டுக் காட்டிவிடுவேன். என் மகள், விவேக் பாணியில், ‘மேப் போட வந்துட்டார்யா’ என்பாள். இடையில் இருக்கும் முக்கிய இடங்களை எல்லாம் சுட்டிக் காட்டுவேன். அந்த இடத்துக்குப் போகும் பஸ், பஸ் நிறுத்தத்தின் பெயர் சொல்லுவேன்.

இடங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது அதைச் சுற்றி இருக்கும் தடங்களை வைத்துதான். கும்பகோணத்தை அடுத்திருக்கும் என் பெரியம்மாவின் ஊருக்குப் போகவேண்டுமென்றால், என் ஞாபகத்தில் இருப்பது, ஒரு பெரிய வளைவும் வளைவு முண்டில் இருக்கும் ஆலமரமும்தான். அந்த ஆலமரத்தில் மிகப் பெரிய பொந்து உண்டு. சென்னை சாலைகளுக்கும் நான் இப்படி வழி சொல்லுவேன். ‘அங்கே திரும்பினவுடனே ஒரு அயன் கடை இருக்கும். அந்தக் கடைக்கு மூணாவது வீட்டு ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லேருந்து மணி பிளாண்ட் தொங்கும். நேரா போனீங்கன்னா, ஒரு அடி பம்பு இருக்கும்…’

புது இடங்களைப் பார்ப்பது மாதிரியான சுவாரசியம் வேறில்லை. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மர்மத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறது. பயம் மட்டும் கூடவே கூடாது. பல சமயங்களில் நண்பர்களோடு காரில் போகும்போது, தெரியாத சாலைகளில் பயணம் போக பயப்படுவார்கள். என்னுடைய லாஜிக் இவ்வளவுதான்: எப்படியாக இருந்தாலும் இது ஏதோ ஒரு ஊருக்கு, இல்லை ஏதேனும் ஒரு பெரிய சாலைக்குப் போய் சேர்க்கும். எதற்கு கவலைப்படுவானேன்? அங்கே இருப்பவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தான். நின்று பேசினால், பதில் சொல்லாமலா போய்விடுவார்கள்?

நடக்க அஞ்சவே கூடாது. காலில் வெந்நீரை கொட்டிக்கொண்டு ஓடவும் கூடாது. அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற expeditionகளுக்கு லாயக்கே இல்லை. கிடைத்ததை ரசித்துச் சாப்பிடுவது இன்னொரு முக்கிய தகுதி. வெளியே சுற்றுவதின் உபமகிழ்ச்சி எல்லாவகையான உணவுகளையும் சுவைப்பது.

வேலைக்கு வந்தபிறகு வடகேரளம் முதல் தென் கேரளம் வரை, நான் சார்ந்த நிறுவனத்துக்காக ஒரு ஆங்கில ஆசிரியரை அழைத்துக்கொண்டு ஊர் ஊராகப் போய் ஆங்கிலம் சொல்லித் தருவது பற்றி பாடம் நடத்தியிருக்கிறேன். கேரளம் முழுவதும் புட்டும் கடலையையும் மட்டுமே சாப்பிட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். ஆந்திரம், கர்நாடகம் சுற்றியதும் இப்படித்தான். ஆந்திர காரம் இன்னும் நினைவு மடிப்புகளில் இருக்கிறது. பின்னர் பூனா, மும்பை சுற்றியபோதும் இந்தப் பழக்கம் விடவில்லை. அங்கே எங்கே போனாலும் வடாபாவ் கிடைத்துவிடும். நம்ம ஊர் பஜ்ஜியெல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும். எங்கே போனாலும் என் ஃபேவரிட் டீ கிடைத்துவிடும்.

இப்போதுதான் கொஞ்ச காலமாக, மனைவியின் அறிவுறுத்தலால், வெளியே சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறேன். ‘என்ன எண்ணையோ என்ன தண்ணியோ, கொஞ்சம் கூட ஹைஜீனிக்கே இல்லை,’ ‘நாப்பது வயசாகப் போகுது. ஏற்கெனவே டையபடிக். கொஞ்சம் ஜாக்கிரதை,’ ‘ரெண்டு பொண்ணு இருக்கு. ஞாபகம் இருக்கட்டும்’  என்று என் ஆர்வங்களில் லேசாக பயம் தெளித்து, என்னை மிடில்கிளாஸ் சம்சாரியாக்கியிருக்கிறார் அவர்.

வெளியே சாப்பிடுவதை மட்டும் நிறுத்திக்கொண்டு விட்டேன். சுற்றுவதை அல்ல. இப்போதும் வெளியூர்களுக்கு பஸ்ஸில் போவது என் விருப்பம். அதுவும் இரவு நேரப் பயணம், இன்னும் அமர்க்களம். ஜன்னலோரமாக உட்கார்ந்துகொண்டுவிட்டால், ஒவ்வொரு ஊரும் தன் வாசனையை, சுவையை, மெளனத்தைச் சொல்லிக்கொண்டே வரும். தூரத்து மினுக் மினுக் விளக்குகள், அதனுள் பொதிந்திருக்கும் ஜீவனைச் சுட்டிக்காட்டும். புலன்களைத் திறந்து வைத்துக்கொண்டுவிட்டால் போதும், அதில் வந்து கொட்டும் சேதிகள் எண்ணற்றவை.

பயணங்களில் மிகப்பெரிய சந்தோஷம், அதுதரும் அனுபவம்தான். நான் பல ஊர்களை அது தந்த அனுபவத்தின் வாயிலாகவே ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த அனுபவம்தான் எனக்கான சேகரம், எனக்கான வளம். எனக்கான உந்துசக்தி. ஒவ்வொரு முறை கதை எழுத உட்காரும்போதும், இதுபோன்ற ஏதேனும் ஒரு தெருவை, ஊரை, வாசனையை, மெளனத்தை நினைத்துக்கொள்வேன். அங்கே பார்த்த நபர்கள் என் கதை மாந்தர்கள் ஆகிவிடுவார்கள். சுற்றி இருக்கும் இடங்கள் மெல்ல மெல்ல என் கதைக்குள் நுழைய ஆரம்பித்துவிடும்.

இடம் என்ற அம்சம் இல்லாமல் என்னால் கதை எழுத முடிந்ததில்லை. கதை மாந்தர்களை ஏதேனும் ஒரு தெருவில் பொருத்திவிடுவது இதனால்தான். அதற்கு பிறகு கதையை அந்த இடமே நகர்த்திச் சென்றுவிடும். இடம்தான் கதைக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. மார்க்குவேஸுக்கு மகண்டோ, சுஜாதாவுக்கு ஸ்ரீரங்கம், அசோகமித்திரனுக்கு ஹைதராபாத் எல்லாம் இப்படி நம்பகத்தன்மை வாய்ந்த இடங்கள். அவர்களுடைய கதைகள் அழியாப் புகழ் பெற்றதற்கு, இடமும் ஒரு முக்கியக் காரணமோ? இருக்கலாம்.

மாமழை போற்றுதும்

Posted in அனுபவம், இலக்கியம் on November 11th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

கடந்த ஐந்து நாள்களாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மழை மகிழ்ச்சிக்கான அறிகுறி, புதிய குழந்தையின் வரவைப் போல. எவ்வளவுதான் இடர்களை அது ஏற்படுத்தினாலும் மழையைப் போல் அற்புதம் ஏதுமில்லை. நான் எழுதும் மடிக்கணினிக்குப் பக்கத்தில் ஒரு ஜன்னல், என் பின்புறம் ஒரு ஜன்னல். இரண்டிலும் மழை வரிவரியாகக் கோடுகள் இழுத்துக்கொண்டு இருந்தது. ஒரு சமயம் சாய்வுக் கோடுகள், மற்றொரு சமயம் நேர்க் கோடுகள். ஓவிய வெண்மை சட்டெனக் கருக்கத் தொடங்கும். தூரத்தில் இடிமுழக்கம். எலும்பு சில்லிடும் குளிர்க் காற்று.

எங்கும் சில்லிட்டிருக்கும். தரை, மேஜை, நாற்காலி, சோபா, படுக்கை என்று எங்கே புழங்கினாலும் உள்ளூர மழையின் குழைவு. குழாயைத் திறந்தால், சிலீர் குளுமையோடு நீர் பீய்ச்சி அடிக்கும். ஒவ்வொரு நரம்புக் கால்களிலும் சிலீர் குரலெழுப்பி, மீண்டும் மீண்டும் நடுக்கத்தை உள்ளுக்குள் நகர்த்தும். மின்விசிறியைத் தட்டினாலோ, குளுமை பொழியும். சுழன்று சுழன்று தன்மை அறைமுழுவதும் வியாபிக்கும்.

ஒவ்வொரு கட்டடத்திலும் மழைநீர்க் கோலம். தலைகீழாக நிற்கும் பீரங்கிகள். குடை சாய்ந்த பாய்மரக் கப்பல்கள். அணிவகுத்துச் செல்லும் ராஜ சைன்னியம். புள்ளினங்கள் பறக்கும் அடர்த்தியான காடு. இருவிழி மட்டும் தெரியும் ஆந்தைகள்.

பெருமகிழ்ச்சியில் ஜன்னல்கள். மூட மாட்டேன் என்று சண்டித்தனம் செய்யும். நான் திறந்தே கிடப்பேன் என்று மரம் உப்பிப் போய், என்ன இழுத்து கொக்கி போட முயற்சித்தாலும் முடியவே முடியாது. ஒவ்வொரு காற்றுக்கும் வலப்புறமும் இடப்புறமுமாக அரைவட்ட ஆட்டம் போட்டு, தன் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ளும் ஜன்னல்கள். ஜன்னல்களை ஒட்டி மழையின் துமி பெய்து, அறையெங்கும் நீர்த்திவலைகள்.

உலர்ந்தும் உலராமல் துணிகள். கால் ஈரம், அரை ஈரம். புழுக்க வாசனை. இஸ்திரி போட்டு அணிந்துகொண்டாலும் உடலோடு குளுமை ஒட்டிக்கொள்ளும். ஷூ, செருப்பு என்று எங்கும் ஈரம். இதுதான் சாக்கு என்று காத்திருந்ததுபோல், காலில் பட்டவுடன் உச்சிவரை குளுமையைக் கரைசேர்க்கும் காலணிகள்.

மழைக்கு இதமாக இருக்கட்டும் என்று மிளகு குழம்பு, சீரக மிளகு ரசம். கபம் சேராது. தொண்டை கட்டு விட்டுப் போகும் என்று காரணங்கள். தொட்டுக்கொள்ள சுட்ட அப்பளம். ஆவி பறக்கும் டீ. ஒவ்வொரு முறை வாயில் வைக்கும்போதும், சூடு தணிந்து நாக்குக்கு இதமாக தொண்டையில் இறங்கத் தொடங்கும். இஞ்சி காரம் அடித்தொண்டையில் மிதந்துகொண்டே இருக்கும்.

சாலையில் இறங்கினால், ஓடைகள் பள்ளம் தேடி ஓடிக்கொண்டே இருக்கும். எங்கிருந்தோ அரித்துவரும் அடிமணல். சிறுகற்களும் வேகத்தில் அவசரமாக ஓடிக்கொண்டு இருக்கும். செருப்புகள் தரையில் ஒட்டிக்கொள்ள, சடக் சடக்கென்று ஒரே தாள லயம். நடுவில் பாயும் சைக்கிள்கள், ஓடைகளை இடைப்பிரித்து நகர, நொடிகளில் மீண்டும் ஓடை ஒன்றிணையும்.

மழை பட்டுவிடாமல், வாசல்களில் குழந்தைகள் மழையைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். பாதுகாப்பாக பெரியவர்கள். சின்ன வயது நினைவுகள் அவரவர் கண்களில் மிதப்பதை தவிர்க்கவே முடியாது. மழைக்கு ஒதுங்கும் ஆட்டோக்களில் இருந்து புகை மட்டுமே வெளியே வரும். கைகளைத் தேய்த்துக்கொண்டு, சாலையோரமாக பீடி புகைத்தபடி, கோழிகள் போல் மனிதர்கள் பதுங்கியிருப்பார்கள்.

கால் நனைக்கும் நீரில் புத்துணர்ச்சி. புது வெள்ளம். புதுத் தண்ணீர் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று அம்மா என்றோ சொன்னதெல்லாம் ஞாபகத்தில் வந்து போகும்.

இன்னும் கொஞ்சம் நடந்து முன்னால் போனால், எதிரே விமானம். பார்த்தசாரதியின் விமானம். மேகங்கள் விமான முகட்டில் உட்கார்ந்திருக்கும். கருமை படர்ந்த பின்னணி. அவ்வப்போது ஒளிக்கீற்று போல் விமானத்துக்கு பின்னே எங்கோ மின்னல்கள். வெண்மீசை வேந்தனை மழையால் நனைக்காமல் நகரமாட்டோம் என்று காத்திருப்பது போல், சுற்றி மேகத் திட்டுக்கள். ஒன்று மற்றொன்றை அழைக்க, அடுத்தொன்று இன்னொன்றை அழைக்க, எல்லோரும் விமானம் முன்பு சங்கமித்து, சட்டென நீர்மாரி. தான் மோதுவது எங்கே வலித்துவிடுமோ என்று மெல்ல மெல்லத் தொடங்கி, பின்னர், அடியடியாக முன்னேறி, மொத்த நீரையும் கொட்டிக் கவிழ்த்துவிட்டு, பேரமைதியில் கலந்துவிடும் மேகங்கள்.

காலடியில், பார்த்தசாரதி கோவிலின் குளம். கைவல்ய புஷ்கரணி. மழைக்கு முன்னர் மொத்த நீரையும் வெளியேற்றி, சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள். மழை வரவில்லை என்றால் என்ன செய்வது? எங்கிருந்தாவது தண்ணீர் கொண்டு வந்து கொட்டுவார்களோ என்று ஊரில் பேசிக்கொண்டு இருந்தார்கள். வருணனுக்குப் பொறுக்கவில்லை. பார்த்தசாரதிக்கு தாகம் தணிக்காமல் இருப்பதா? கொட்டித் தீர்த்தான். இன்று, நீராழி மண்டபம் வரை நீர் நிறைந்திருக்கிறது. சுத்தமான வான் நீர். வருணன் கொடை.

மெல்ல வீடு திரும்பினேன். ‘மாமழை போற்றுதும்…’ பாடல் ஏனோ ஞாபகம் வந்தது.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல்
மேல்நின்று தான் சுரத்த லான்

- இளங்கோ அடிகள், சிலம்பு

’ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’

Posted in அனுபவம், சமூகம் on October 28th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

சென்ற ஞாயிறன்று, என்னுடைய அப்பாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டு, அப்படியே காஞ்சிபுரம் வந்தேன். வரதராஜரைச் சேவிக்க  கோவிலுக்குப் போனோம். தாயார் சன்னிதியில் கூட்டமில்லை. பெருமாள் சன்னிதியில் நல்ல கூட்டம். வரிசையில் நின்றுகொண்டோம். எனக்கு முன்னால், கர்நாடகத்தில் இருந்து வந்த யாத்ரிகர்கள் கூட்டம். எல்லோரும் முட்டிக்கொண்டு நின்றார்கள். என் பின்னே நீண்ட வரிசை. அங்கே ஒரு முதிய தம்பதிகள் தம் பிள்ளையோடும் மருகளோடும வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் தள்ளி, கைக்குழந்தையோடு ஒரு வடக்கத்திய பெண். வெயிலுக்கு மறைப்பாக தன் தலைப்பைக் குழந்தைக்குப் போர்த்தியிருந்தார். கூட்டம் நகரவில்லை.

பார்த்துக்கொண்டு இருந்தபோதே, என் பின்னால், ஒரு ஆணும் பெண்ணும் வரிசையில் வராமல் சட்டென வந்து நடுவே நின்றுகொண்டுவிட்டார்கள்.

‘லைன் போய் நில்லுங்களேம்மா’
‘இதுதான் லைனு’ அந்தப் பெண் பதில் சொன்னார்.
‘இத்தனை பேர் நிக்கறாங்களே.. நீங்க நடுவுல வந்து நிக்கறீங்க..’
‘லைன்லதான் வரோம்.’
‘எங்க வறீங்க.. பார்த்துகிட்டுதானே இருக்கேன். பின்னாடி பாருங்க. எத்தனை வயசானவரு நிக்கறாரு. நடுவுல வந்து நின்னா என்ன அர்த்த்ம்மா?’
‘ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’
‘நீங்கதானே நடுவுல வந்து நிக்கறீங்க. உங்களதானே கேக்கணும்.’
‘இவங்கள்ளாமே வாய தெறக்கல..’
’பின்னாடி இருக்கறவங்க கேக்கலங்கறதுக்காக, நான் கேக்கக் கூடாதா? வரிசையில போய் நில்லும்மா.’
‘உங்களுக்கு அப்புறம்தானே நிக்கறேன். நீங்க ஏன் சிலுத்துக்கறீங்க..நீங்க சாமி கும்புட்டு போங்க.’

எங்கே நான் சண்டையில் இறங்கிவிடுவேனோ என்று என் அப்பாவுக்குப் பயம். கையைத் தள்ளிக்கொண்டே இருக்கிறார். அதற்குள் மேலே இருந்த கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நான் நகரத் தொடங்கினேன். நடுவில் புகுந்த அந்தப் பெண்ணும் ஆணும் கொஞ்சம் கூட கூச்சமின்றி, படியேறிக்கொண்டு இருந்தனர்.

என்ன மனநிலை இது? கோவில் என்று இல்லை. எல்லா இடங்களிலும் எல்லா வரிசைகளிலும் இப்படிப்பட்ட ஓரிருவரைப் பார்க்கிறேன். அடுத்தவரைப் பற்றிய கரிசனமோ, நெறிமுறை பற்றிய எண்ணமோ துளியும் இல்லாதவர்கள். தாங்கள் வந்த வேலை உடனடியாக ஆகவேண்டும். தன் நேரம் முக்கியமானது. அடுத்தவர் நேரம் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

பாஸ்போர்ட் அலுவலத்திலும் இதே போன்ற அனுபவம் எனக்கு உண்டு. விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு, பணம் கட்டும் இடம். எனக்கு முன்னும் பின்னும் வரிசை. சட்டென ஒரு தாயும் மகளும் முன்னே கவுண்ட்டரிடம் போய், யார் பெயர்களையோ சொல்லிக்கொண்டு நிற்க ஆரம்பித்தார்கள். சட்டென கூட்டம் முழுவதும் குரலெழுப்ப ஆரம்பிக்க, கவுண்ட்டர் பின்னே பணம் வாங்கும் இடத்தில் இருந்தவர், வரிசையில் நின்று கட்டும்படி அப்பெண்ணிடம் சொல்லிவிட்டார். அந்த அம்மையாருக்கு பெருத்த அவமானம் போல் என்னவோ.

இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை? ஏன் முண்டியடித்துக்கொண்டு போய் தன் பங்கு சலுகையை அபகரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்? அடிப்படையில் ஓர் அச்ச உணர்வு இருக்கிறது. தான் விடப்படலாம், தனக்குக் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பாதுகாப்பின்மை மனத்துக்குள் இருக்கிறது.

அடுத்த கட்டம், தனக்கு உரியது தனக்குக் கிடைக்கும் என்றாலும் அதை உடனடியாகப் பெற்றுவிட வேண்டும் என்ற தவிப்பு பலருக்கு இருக்கிறது. ஜெயலலிதா அரசு நடக்கும்போது, வடசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி உங்களுக்கு நினைவு இருக்கும். விடிகாலை முதல் மக்கள் வெள்ளம் காத்திருக்க, கதவு திறந்து வெள்ள நிவாரணப் பொருள்களைத் தருவதற்குள், பெரும் தள்ளுமுள்ளு. எண்ணற்றோர் அதில் இறந்துபோயினர்.இதேபோல், கலைஞர் அரசில், வெள்ள நிவாரண நிதி வழங்கும் இடங்களில் பெரும் கூட்டம் காத்திருக்கும். ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ளும் வேகம், மூர்க்கம் எப்போதும் இருக்கும்.

பணம், பொருள், சலுகைகள் என்று வரும்போது, படித்த படிப்போ, நாகரிகமோ, பண்பாடோ யாருக்கும் ஞாபகத்தில் வருவதில்லை. அடுத்தவர்களைப் பற்றிய எண்ணம் துளியும் வருவதில்லை. ஏழை எளியவர்கள், வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லாதோர்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. முன்பெல்லாம், அமெரிக்கத் தூதரகம் முன்னே நிற்கும் வரிசையில் இரவு முதலே நின்று இடம்பிடித்துத் தருவதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்ததை நான் அறிவேன். அப்படி இடம் பிடித்துத் தருவதற்கு பணம் தரவேண்டும்.

வரிசையில் நிற்பது பலருக்கு இம்சையாக இருக்கிறது. அது அவர்களின் சுயகெளரவத்தைச் சீண்டுவதாக இருக்கிறது. தங்களைப் பற்றி அவர்கள் வளர்த்துக்கொண்ட பிம்பத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. தம் கற்பனைகளில் தாமே ராஜாவாக இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு, யதார்த்தத்தில் வரிசையில் நிற்பது, சட்டென காலுக்குக் கீழே இருக்கும் உலகத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இதை எப்படியேனும் உதற வேண்டும். எப்படியேனும் முன்னே முண்டியடித்துக்கொண்டு போய்விட வேண்டும். இது சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமில்லை, சுயகெளரவ ரணத்தைச் சொறிந்துவிட்டுக்கொள்ளவும் தேவை.

வரிசை என்பது மனத்தால் வளர்ந்த சமூகம் பின்பற்றும் ஒரு பண்பாடு. மக்கள் குடியரசில் வரிசைக்கு முக்கிய இடமுண்டு. அது ஒரு நெறி. சுய ஒழுக்கம்.

ஏழை எளியவர்களுக்கு, வரிசை ஒரு கட்டுப்பாடாகத் தெரிகிறது. தாம் அடையவேண்டியவற்றைத் தள்ளிப்போடும் ஒரு தடையாக, வரிசை முறை இருக்கிறது. வரிசைமுறையில் ஊழல் நடக்கலாம். தமக்குச் சேரவேண்டியது வேறொருவருக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். தம் உரிமையை எப்படியேனும் பெற்றுவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வரிசை பெரிய இம்சையாக இருக்கிறது.

படித்தவர்களுக்கோ வரிசை, கெளரவக் குறைச்சலாக இருக்கிறது.

இன்னொரு வகையில் பார்த்தால், வரிசைமுறை இங்கே திணிக்கப்படுகிறது. வலியுறுத்தப்படுகிறது. காரணம், இந்தியாவில் டிமாண்ட் அதிகம். சப்ளை குறைவு. வரிசையில் வருவது ஓரளவுக்கு சமூக ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும்.

வரிசைமுறையை மக்கள் தாமாக, மனம் உவந்து ஏற்கும் வழிமுறையாக மாறவேண்டும். அது எப்போது சாத்தியம்? சப்ளை அதிகமாகும்போதுதான் அது சாத்தியம். ஒளிவுமறைவு இல்லாதபோதுதான் அது சாத்தியம். அக்கவுண்டபிளிட்டி இருக்கும்போதுதான் அது சாத்தியம். அதைத்தான் சுபிட்சம் என்று சொல்கிறார்கள். வளமான நாடு என்று அப்போதுதான் அதற்குப் பெயர்.

எனக்கு அந்தப் பெண்ணோடு சண்டை போட்டது, ரொம்ப நேரம் வருத்தமாக இருந்தது. ஏன் வீணாக நொந்துகொண்டோம்? ’ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’ என்று அந்தப் பெண் கேட்டது நியாயமாகத் தோன்றியது. சமூகம் முழுக்கவே, வரிசையைப் பின்பற்ற முடியாத பிரச்னை இருக்கும்போது, அந்தம்மாவை மட்டும் கேட்பானேன். தெரியவில்லை. இப்படிக் கேட்டால், உள்ளே தூங்கிக்கொண்டு இருக்கும் நியாய உணர்வு கொஞ்சமாவது தலைதூக்காதா என்ற நப்பாசைதான்.

படியேறி மேலே வரதர் சன்னிதி அருகே போகும்போது பார்த்தேன். அந்தப் பெண்ணும் ஆணும், முதிய தம்பதியரை முன்னே விட்டுவிட்டு, அவர்களுக்குப் பின்னே நின்றுகொண்டிருந்தார்கள். இப்போது வரதர்மேல் என் கவனம் குவியத் தொடங்கியது.

மீள முடியுமா?

Posted in அனுபவம், பொது on September 30th, 2009 by வெங்கடேஷ் – 3 Comments

விடிகாலை எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இணைய இணைப்பு வேண்டும். மடிக்கணினி முன் அமர்ந்து ஒரு மணிநேரம் முக்கியமான செய்தி மற்றும் பொருளாதார இணையதளங்களை எல்லாம் படிக்க வேண்டும். பின்னர், வந்திருக்கும் மின்னஞ்சல்களை பார்த்து, பதில் போடவேண்டியவற்றுக்கு பதில் போட்டு, நாற்காலியில் இருந்து எழுந்திருக்க ஐந்தரை ஆறு மணி ஆகும். அதற்குப் பின்னர்தான் காலை நடைப் பயிற்சியே.

இணைய இணைப்பு இல்லையென்றால், மடிக்கணினி பக்கமே நான் செல்வதில்லை. கடந்த பதினைந்து நாள்களாக, என் நிலைமை இப்படித்தான் ஆகிக்கொண்டு இருக்கிறது.

ஒரு நாள் எங்கள் வீட்டுத் தொலைபேசி செயலிழந்து போனது. பி.எஸ்.என்.எல். காரர்களிடம் புகார் தெரிவிக்க வந்து ரிப்பேர் செய்தார்கள். போன் வேலை செய்யத் தொடங்கியது. பிராட்பேண்ட் இணைய இணைப்புக்குக் கேடு ஏற்பட்டுவிட்டது. தொலைபேசி அழைப்பு வந்தால், இங்கே இணைய இணைப்பு சரியத் தொடங்கிவிடும்.

அல்லது இணைய இணைப்பே கிடைக்காது. இங்கேதான் விசித்திரம் விளையாடும். காலையில் எழுந்தவுடன், இன்று இன்னின்ன விஷயங்களை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவலோடு மடிக்கணினி முன் அமர்வேன். மோடம்மை ஆன் செய்வேன். உடனே, பச்சைக் கண்கள் ஒவ்வொன்றாக விழித்துக்கொள்ளத் தொடங்கும். ஒயர்லெஸ், ஏடிஎஸ்எல், ஸ்டேட்டஸ் கண்களும் நின்று நிதானமாக ஒளிரத் தொடங்கும். ஆனால், மடிக்கணினியில் இணைய இணைப்பு வந்திருக்காது.

இங்கிருந்து டென்ஷன் ஆரம்பிக்கும். உடனே எல்லா ஒயர்களையும் மீண்டும் ஒருமுறை அழுத்தி வைப்பேன். மூன்று நான்கு முறை மோடத்தை ஆஃப் செய்து மீண்டு ஆன் செய்வேன். கணினியையும் இரண்டு மூன்று முறை ரீஸ்டார்ட் செய்வேன். ஆனால், கணினியில் மட்டும் இணைப்பு கிடைக்கவே கிடைக்காது.

அவ்வளவுதான், போதை ஜல்லென வடிந்துவிடும். அதற்குள் காலை விடிந்துவிடும். இனிமேல் கணினி முன் உட்காருவது சாத்தியமே இல்லை. எரிச்சல் பீடிக்க எழுந்துகொள்ள வேண்டியதுதான்.

அடுத்த படையெடுப்பு, திருவல்லிக்கேணி டெலிபோன் இணைப்பகத்துக்கு. அல்லது தொலைபேசியில் புகார் பதிவு. இரண்டு மூன்று மணி நேரத்துக்கெல்லாம் ஒரு லைன்மேன் போன் செய்வார். அவருக்குக் கொஞ்சம் விரிவாகப் புரிய வைக்கவேண்டும். ‘போன் லைனில் பிரச்னை இல்லை சார். பிராட்பேண்டில்தான் பிரச்னை. கனெக்‌ஷன் வரவே மாட்டேங்குது’ என்றவுடன், ‘பிராட்பேண்டா சார்.. அது எங்களுக்குத் தெரியாது சார். நான் ஒரு நம்பர் தரேன். ஜேஇ, இஇ கிட்ட பேசுங்க.’

அடுத்தது இ இ. விவரங்கள் கேட்டபின், ‘நீங்க எப்போ ஆபீஸ்லேருந்து வருவீங்க சார்?’

‘சாயங்காலம் ஆகும். நீங்க வரீங்கன்னா, நான் சீக்கிரம் வரேன்.’

‘அதுதான் சார் பிரச்னை. இங்க ஆள் இல்லை. இது ரொம்ப ஈஸி சார். நீங்க வீட்டுக்கு வந்துட்டு மெஷின் முன்னால் உட்கார்ந்துட்டு என்னைக் கூப்பிடுங்க சார். நான் போன்லேயே வழி சொல்றேன்.’

ஒரு நாள் அதையும் செய்து பார்த்தேன். அவர் சொன்ன வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி செய்து பார்த்தாயிற்று.

‘எல்லாம் சரியா இருக்கே சார். ஏன் கனெக்‌ஷன் வரல?’

‘அதைத்தான் நானும் கேக்கறேன் சார்.’

‘திருப்பியும் கூப்பிடறேன் சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.’ இது நடந்து பத்து நாள்களாகி இருக்கும். இன்னும் அவர் கூப்பிடப் போகிறார்.

நான் படும் அவஸ்தையைப் பார்த்து, என் மனைவி களமிறங்கினார். கணினியையும் மோடத்தையும் அவர் ஆன் செய்ய சட்டென இணைய இணைப்பு கிடைத்தது. பெருமிதத்தோடு, காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார். அப்போதுதான் இன்னொரு விஷயம் புரிந்தது, இணைப்பு முழுவதும் துண்டாகவில்லை. அது எங்கேயோ மக்கர் செய்கிறது.

இப்போது பிரச்னை, அது எப்போது மக்கர் செய்யும் என்று தெரியாததுதான். ஏதாவது அவசரமாக தேட வேண்டும், டவுன்லோட் செய்யவேண்டும், மின்னஞ்சல் பார்க்கவேண்டும் என்றால், அன்று இணைப்பே கிடைக்காது. நீங்கள் தலைகீழாக நின்றாலும், மோடம் சிவனே என்று பார்த்துக்கொண்டு இருக்கும். பிரும்ம நிலை.

பிரும்ம முகூர்த்தத்தின் போது, பிரும்ம நிலை ஏற்பட்டால்தான் எரிச்சல் உச்சகட்டத்தை அடையும். ஏதும் பேசாமல், காலை நடைபயிற்சிக்குப் போய்விடுவேன். கடற்கரையில் காலாற நடக்கும்போதுதான், எவ்வளவுதூரம் இதுபோன்ற நவீன வசதிகளுக்கு நான் அடிமைப்பட்டுப் போயிருக்கிறேன் என்பது புரியும்.

இணையமோ கணினியோ இல்லாமல் வாழ்ந்ததில்லையா? அல்லது உலக செய்திகளையும் பொருளாதாரத்தையும் படிக்காமல் இருந்தபோது, நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லையே? மின்னஞ்சல்கள் இல்லாமலும் வாழ்ந்திருக்கிறோமே?

வசதிகள், அடிமைத்தனத்தை வளர்த்துவிட்டன என்பது ஒரு புறம். இணையத்தில் எல்லா தகவல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன என்று, அள்ளிப் போட்டுக்கொள்ளும் அவசரம் மறுபுறம். மற்றவர்களை விட கூடுதல் விவரங்களை, செய்திகளைத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையின் பரபரப்பு இன்னொரு புறம். விளைவு, இன்று என்னால் கையால் எதையும் எழுத முடியாத நிலை. எங்கே போனாலும் எழுதுவதற்கு கணினியோ, மடிக்கணினியோ வேண்டும். படிக்க இணைய இணைப்பு வேண்டும்.

யோசித்துப் பார்த்தால், அடிமைத்தனம் வெட்கமாக இருக்கிறது. தெரியவில்லை. இதிலிருந்து மீளவேண்டுமா அல்லது இப்படித்தான் வாழவேண்டுமா? மேலும் இந்த வலையில் இருந்து மீளத்தான் முடியுமா? அதுவும் தெரியவில்லை.

அகக்குரலைக் கேட்க பயந்து…

Posted in அனுபவம், பொது on September 30th, 2009 by வெங்கடேஷ் – 1 Comment

காலை நேரங்களில், எந்தத் தொலைக்காட்சி சானலைத் திறந்தாலும் ஒரு இந்து, கிருத்துவ அல்லது இஸ்லாமிய வழிகாட்டி பேசிக்கொண்டு இருப்பார். அவர் பேச்சின் சாராம்சம் ஒன்றே ஒன்றுதான். அமைதி பெறுதல். மெளனத்தை நோக்கித் திரும்புதல். அதற்கு யோகம், தியானம் என்று விளக்குவார்.

இன்றைக்கு அமைதி அபூர்வ அம்சமாக இருக்கிறது. திடீரென்று வீட்டில் மின்சாரம் தடைபடும்போதுதான், மேகமென அமைதி கவியத் தொடங்கும். டிவிகள் ஓடாது, தண்ணீர் மோட்டர் சத்தம் இல்லை, வரவழைக்கப்பட்ட உற்சாகத்தோடு பேசும் எஃப்.எம். வானொலிகள் இல்லை. காற்று அறைக்குள் புகுந்து புறப்படும் மெல்லிய ஓசை கேட்கும். காக்கை கரையும், புறாக்கள் அகவும் ஒலி எட்டிப் பார்க்கும். நகரத்துக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் சின்ன கிராமம் மெல்லத் தலைதூக்கும். தாம் ஜீவித்திருக்கிறோம் என்பதே பலருக்கு அப்போதுதான் தெரியத் தொடங்கும்.

எங்கே போனாலும் சப்தம்தான். சமீபத்தில் ஒரு நாள் என் தோழி ஒருத்தியின் திருமண விருந்து. முன் இரவு தாண்டி தொடங்கிய பார்ட்டி. ராக் பேண்ட் ஒன்றின் பேரிரைச்சல் கும்மாளம். எவர் பேச்சும் எவர் காதிலும் விழவில்லை. விழவேண்டும் என்று யாரும் நினைக்கவும் இல்லை. இரண்டு மணிநேரங்களுக்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை.

திருமண வீடு என்றில்லை. இந்த நிலை எங்கும் பரவியிருக்கிறது. கல்லூரி பெண்களும் ஆண்களும் காதுகளை எஃப்.எம். வானொலிகளுக்கும் மியூசிக் பிளேயர்களுக்கும் இரவல் கொடுத்துவிட்டார்கள். வயதானவர்களோ, காலை தொடங்கி இரவு வரை, தொலைக்காட்சியின் சப்தத்துக்கு ஆட்பட்டு கிடக்கிறார்கள்.

திரைப்படம் போனால், அங்கும் இரைச்சல். இந்த இரைச்சல், ஒலி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. காட்சிகள், கருத்துகள், வலியுறுத்தல்கள் எல்லாவற்றிலும் இரைச்சல் நிறைந்து கிடக்கிறது.

யாராவது எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் பேசும் பலரிடம் குரலில் கனிவு இல்லை. சப்தமாகப் பேசிப் பேசி முரட்டுத்தனம் படிந்துவிட்டது. எல்லாவற்றிலும் ஒருவித மிகை. உணர்வுகளில், எதிர்வினைகளில், நடத்தைகளில் எல்லாம் உபரித் தன்மை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒன்று புரியும். இவர்கள் யாரும் தம் அகக்குரலைக் கேட்க தயாராக இல்லை. அமைதி என்பது, உள்ளே இருக்கும் குரலைக் கேட்பதற்கான இனிய நேரம். பிரச்னை, அகக் குரல் பலருக்கு பயமுறுத்துவதாக இருக்கிறது. அது யதார்த்தத்தின் குரல். அது உண்மை பேசும் குரல். பூச்சுகள் படியாத குரல். பிம்பங்கள் களைந்த குரல்.

தாம் நம்ப விரும்பும், காண்பிக்க விரும்பும் தோற்றங்களின் நேர் எதிராக இருக்கிறது, அகக் குரல். அது பூமியில் கால் பாவி, சந்தேகங்களையும் கசப்பு அனுபவங்களையும் ஒன்று திரட்டியதாக இருக்கிறது. சதா ஒலித்துக்கொண்டு இருக்கும் இந்தக் குரலின் இம்சையில் இருந்து தப்பிக்க தம் காதுகளையும் மூளையையும் பலர் கழட்டிக்கொடுத்துவிடத் தயாராக இருக்கிறார்கள்.

பல தர்மசங்கடமான கேள்விகளை அகக்குரல் கேட்கிறது. தான் நினைத்ததை அகக்குரல் வழிமொழிய மாட்டேன் என்கிறது. உன் முடிவைப் போல் உண்டா என்று மெச்ச மாட்டேன் என்கிறது. அது முதல் விமர்சகனாக, முதல் எதிரியாகவே இருக்கிறது. ஈவு இரக்கமற்ற விமர்சனம்.

ஒரு பக்கம் அந்தக் குரலின் வெளிச்சத்தில் பயணம் மேற்கொள்ள விருப்பம் இருக்கிறது. ஆனால், அது சமூகம் காட்டும் வழியைப் போலல்லாமல் முற்றிலும் வேறு பாதையாக இருக்கிறது. அந்தப் பாதை வெற்றியைத் தருமா, குறிப்பாக பொருளாதார வெற்றியை உறுதிப்படுத்துமா என்ற கேள்வி சதா குடைந்துகொண்டே இருக்கும். தனக்கும் அகக்குரலுக்குமான விவாதங்கள் எப்போதும் உச்சகட்டத்திலேயே இருக்கும்.

ஒவ்வொரு முறையும் அகக்குரலை அடக்கிவிட்டுத் தன் விருப்பம் போல் முடிவுகள் எடுக்க விரும்புகிறோம். விளைவு, அகக்குரல் இன்னும் மூர்க்கமாகக் கேள்விகள் எழுப்பும். நீங்கள் விலக்க விலக்க மேன்மேலும் வந்து ஒட்டிக்கொள்ளும் பிசினைப் போன்றது அது. மனிதன் மனதுக்குள் துண்டாகிச் சிதறிப்போவது இப்படித்தான்.

அகக்குரலை அடக்குவதற்கான முயற்சியில்தான் நாம் பேரிரைச்சல்களோடு சம்பந்தம் கொள்ளத் தொடங்குகிறோம். அது சினிமா, தொலைக்காட்சி, பேச்சு என்று ஒவ்வொரு வடிவத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வடிவத்திலும் நாம் எதிர்பார்ப்பது முழுமையான விடுதலையை. அதாவது, அகக்குரலிலிருந்து விடுதலையை.

ஒரு காலத்தில் ஜெயகாந்தன் எழுத்துக்கள் உரக்க ஒலித்த போது, அதை ரசித்தவர்கள் நாம். உணர்ச்சிப் பிழம்பாக நமது திரைப்படங்கள் கண்ணீர் மல்க நின்ற போது, அதை ரசித்தோம். இன்று தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்கின்றன. இளைஞர்களுக்கு பிடித்த சப்தத்தை இன்றைய திரைப்படங்கள் வழங்குகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் போதைப் பொருள் மேன்மேலும் அதிகரித்துக்கொண்டே போவதைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.

போதை எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் அகக்குரலின் வலியுறுத்தல் நிற்பதே இல்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான், அமைதியை நோக்கித் திரும்புதல் என்ற அம்சம் தேவைப்படுகிறது. வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில், தருணத்தில், அமைதியை நோக்கித் திரும்ப வேண்டிய அவசியத்தை உணர ஆரம்பிக்கிறோம். இங்கேதான் பக்தி என்பதும் இறைவன் என்பதும் திடீரென முக்கியமாகத் தோன்ற ஆரம்பிக்கிறது.

இன்றைக்கு வெளியுலகில் பிரபலமாகியிருக்கும் பல ஆன்மிகப் பெரியவர்களும் சாமியார்களும் இந்த நவீனத் தேவையை நிறைவு செய்கிறார்கள். அமைதியைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அமைதியை அடையப் பயிற்சி அளிக்கிறார்கள். உள்ளுக்குள் திரும்பிப் பார்க்கச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

வெளிப்புறமாக மட்டுமே பார்த்துவந்த நம் பார்வை, நமக்குள்ளே திரும்பு வேண்டியதின் தேவை அப்போது புரிபடுகிறது. இதுநாள் வரை எதிரியாக, விமர்சகனாக மட்டுமே பார்த்து வந்த அகக்குரலை எப்படி நட்புடன், ஆதரவுடன், அன்புடன் பார்க்க வேண்டும், அணுக வேண்டும் என்பது தெரியத் தொடங்குகிறது. அகக்குரல் நமக்கு வழிகாட்ட உருவானதே அன்றி, நம்மை இம்சைப்படுத்த உருவானதல்ல என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் காலம் தேவைப்படும்.

வேறு எவரையும் விட, மிகவும் தீர்மானமான கருத்துகளை அழுத்தந்திருத்தமாகச் சொல்வது அகக்குரல். அதில் பிசிர் இல்லை. குழப்பம் இல்லை. உங்களுக்கான மிக நம்பிக்கையான confidant அது.

அகக்குரலும் நீங்களும் ஒன்றாகச் சேரும் புள்ளியில்தான் அமைதி குடிகொண்டு இருக்கிறது. இந்த இடத்துக்கு வந்து சேருவதில்தான் காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொருவருடைய அகங்காரத்துக்கும் ஏற்ப கால அவகாசம் மாறுபடும். இங்கே வந்து சேர்ந்தபின், சட்டென எல்லாம் தெளிவாகத் தொடங்கும். அன்றலர்ந்த மலரென வாழ்வே விரியத் தொடங்கிவிடும்.

அதுவரை, அகக்குரலைக் கேட்ப பயந்து ஓடும் ஓட்டம் நிற்கப் போவதே இல்லை.

தூக்கம் இழந்தவர்கள்…

Posted in அனுபவம், பொது on September 30th, 2009 by வெங்கடேஷ் – 2 Comments

தி லாண்ட்மார்க் போரம் என்ற மூன்று நாள் பயிற்சி முகாம் பெங்களூருவில் நடக்கும். லாண்ட்மார்க் எடுகேஷன்  நிறுவனம் நடத்தும் வாழ்க்கைப் பாடங்கள் நிறைந்த முகாம் இது. மிக எளிமையான பயிற்சிகள். முகாம் பற்றி எழுதுவதில் அர்த்தமில்லை. நேரடியாக பங்குகொள்வது பயன் அளிக்கும்.

அதில் முதல் நாள் ஒரு மாயையை உடைப்பார்கள். பொதுமக்கள் மத்தியில் எட்டு மணி நேரம் தூக்கம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுவது எவ்வளவு பெரிய பொய் என்று நிரூபிப்பார்கள். முகாம் நடந்துகொண்டே இருக்கும். இரவு மணி 12, 1, 2 வரை போய்கொண்டே இருக்கும். வீட்டுக்கு அனுப்ப மாட்டார்களா என்று இருக்கும்.

அப்போதுதான் மாயையை உடைப்பார் அதை வழிநடத்தும் ஆசிரியர். எல்லோரையும் கண்களை மூடச் சொல்லி, மெள்ள மெள்ள உடலை ரிலாக்ஸ் செய்ய, மிதமான வார்த்தைகளைச் சொல்லுவார். ஒரு கட்டத்தில் நினைவு நழுவி, உடல் தளர்ந்து, தூக்கம் முழுமையாகப் பற்றிக்கொள்ளும். ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோதான். உடனே விழிப்பு ஏற்பட, மனம் புத்துணர்ச்சியோடு இருக்கும். மூளை விழிப்புடன் இருக்கும். எவ்வளவு நேரம் என்பதில்லை, எவ்வளவு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதே முக்கியம் என்பதை அனுபவபூர்வமாக தெளிவிப்பார்கள்.

விவேகானந்தா கேந்திராவில் சொல்லிக்கொடுக்கப்படும் யோகாசன வகுப்புகளில், இறுதியில் ஷவாசன் என்றொரு ஆசனத்தைச் சொல்லித் தருவார்கள். உடலைத் தளரச் செய்வதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தருவதும் ஷவாசனின் குறிக்கோள், தூங்கிவிடாதீர்கள் என்பார்கள். ஆனால், பலருக்குத் தூக்கம் சுழட்டிக்கொண்டு வரும். எழுந்திருக்கும்போது, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

நான் முடிவெட்டிக்கொள்ளும் ஆண்கள் பார்லரில், முகத்துக்கு ப்ளீச்சிங், இன்னபிற அழகு பேஷியல் சேவைகளையும் செய்வார்கள். முகத்தில் கை வைத்து பேஷியல் செய்யத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே பலர் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். தலை ஒருபக்கம் சாய்ந்துவிடும், குறட்டைச் சத்தம் பார்லரையே தூக்கும்.

உறக்கமும் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. நீண்ட நேரம் தூங்கவேண்டாம், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால் போதும் என்று சொல்பவர்கள், தொடர்ந்து அசதியையும் சோர்வையும் சேமிக்கிறார்கள். இன்னொரு பக்கம், பலருக்கு ஆழ்ந்த தூக்கமே கிடைப்பதில்லை. எப்போதும் கண்களில் தூக்கம் மிச்சமிருக்கும். ஒரு மாதிரி போதை மனநிலையிலேயே இருப்பார்கள். அதுவும் காலை வேளைகளில், இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஏற்றி வரும் வாகனங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் பல்வேறு பிபிஓக்களில் இரவு நேரப் பணியை செய்தவர்கள். வண்டியில் வரும்போதே தூக்கம் அப்பிக்கொண்டு இருக்கும்.

பலர் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிரே இருப்பவர் கண் அயர்வதைப் பார்க்க முடியும். இசைக் கச்சேரிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளில் இதுபோல் தம்மை மறந்து உறங்குபவர்கள் அதிகம். மீண்டும் எழுந்தவுடன் ஒருவித கூச்சம் தலைகாட்டும்.

நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்னை இருக்கிறது. என்னோடு பணியாற்றிய நண்பர் ஒருவருடன் வெளியூர் பயணங்கள் அல்லது ஏதேனும் அலுவலக சந்திப்புகளில் ஒரே அறையில் தங்க நேரிடும். மனிதர் தூங்கவே மாட்டார். பதினொன்று பனிரெண்டு வரை மது. அப்புறம் விடிய விடிய புகை. டிவியைப் போட்டுவிட்டு விளையாட்டுப் போட்டி ஏதேனும் ஒன்றை ரசித்துக்கொண்டு இருப்பார். விடிகாலை நான் எழுந்திருக்கும் சமயம், லேசாக அவர் கண்ணயர்வார். இதற்கு நேர் எதிரானவர்களும் உண்டு. விடிகாலை என்பது இவர்களுக்கு பாதி ராத்திரி ஒன்று அல்லது இரண்டு மணி. எழுந்து உட்கார்ந்துகொண்டு, வீட்டில் உள்ளதையெல்லாம் குடைந்துகொண்டு இருப்பார்கள்.

கவலை நிறைய பேரைத் தூங்கவிடாமல் செய்கிறது. இரவின் தனிமை மிகவும் அகோரமாக இருக்கிறது. உள்ளே பீறிடும் துக்கமும் கவலையும் சோகமும் ஆதங்கங்களும் இவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. ஒவ்வொரு இரவையும் இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல், வலியுடன் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் பலியாவது, தூக்கம். தூக்கமின்மை, எரிச்சலை மேன்மேலும் அதிகப்படுத்துகிறது.

வாழ்க்கையின் மிகப் பெரிய வரம், தூக்கம். அதை இழந்து தவிப்பவர்களைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும். நவீன வாழ்க்கை முறை, இவர்களின் மேல் கருணையே இல்லாமல் வலியையே திணித்துக்கொண்டு இருக்கிறது. தம் வலிக்கான நிவாரணங்களையே இவர்கள் தொடர்ந்து லாண்ட்மார்க் போரம்களிலும் கேந்திராவிலும் தேடி வருகிறார்கள். எவ்வளவு தூரம் கிடைத்ததோ தெரியவில்லை.

மேலும் முழுமையான நிவாரணம் கிடைத்துவிடுமா என்றும் தெரியவில்லை. வலியும் சோர்வும் தூக்கமின்மையும்தான் வாழ்க்கை போலும்!