வலி நிரம்பிய சரித்திரம்

முதல் முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா 19.01.2010 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதுவரை நான் பட்டம் வாங்கியபோதெல்லாம் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கோ பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கோ சென்றதில்லை. விழா முடிந்த மறுநாள் கல்லூரி அலுவலகம் போய், அங்கே இருக்கும் பணியாளர் கையால்தான் டிகிரி சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கிறேன்!

ஒரு மாநிலத்தின் ஆளுநர் கையால், பட்டம் வாங்குவது எவ்வளவு பெருமை வாய்ந்த தருணம் என்பதை, இப்போதுதான் புரிந்துகொண்டேன். பாரம்பரியம் மிக்கப் பல்கலைக்கழகத்தின் பாரியம்பரிக்கமிக்க விழா. பின்பற்றப்பட்ட நடைமுறைகள் எல்லாம் பற்பல ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப்பட்டு வருகின்றன. அழகான பாரம்பரியம். மரியாதை. கெளரவம். அதற்கான தயாரிப்பு, இடுப்பை ஒடிப்பதாக இருந்தாலும், நிகழ்ச்சியின் அழகும் அமரிக்கையும் பாந்தமும் எல்லா வலிகளையும் மறக்கடித்துவிட்டன.

விழாவின் பாரம்பரிய அழகு ஒருபக்கம் கவர்ந்தது என்றால், இன்னொரு பக்கம் பட்டம் பெற்றவர்களின் ஆர்வம் அற்புதமாக இருந்தது. அன்று கிட்டத்தட்ட 419 பேர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். இருபதுகளுக்குள் இருப்பவர்களில் இருந்து எழுபதுகளைத் தொட்டவர்களும் டாக்டர் பட்டங்களை வாங்கினார்கள். பார்வையற்ற இருவர் டாக்டர் பட்டம் பெற்றார்கள். ஒருவர் வரலாற்றுத் துறையிலும் மற்றவர் தமிழ்த் துறையில் ஆய்வுகள் செய்திருப்பவர். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் (த.சுமதி), ஏடிஜிபி ராதாகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார், செஃப் தாமு (தாமோதரன்) ஆகியோர் அன்று டாக்டர் பட்டம் பெற்றவர்களில் அடங்குவர்.

இன்னொரு பகுதி, ரேங்க் வாங்கியவர்கள். நான்கு பாடங்கள், மூன்று பாடங்கள் என்று பல பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்ற ஏராளமான மாணவ மாணவியர் அன்று அதற்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வாங்கிச் சென்றார்கள்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே விழா களைகட்டத் தொடங்கிவிட்டது. விழா அரங்க வாசலில் ஏராளமான போட்டோகிராபர்கள் மோதிக்கொண்டார்கள். பட்டமளிப்பு விழா அங்கி அணிந்துகொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளும் ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளும் வேகம். அங்கியை அணிந்துகொண்டு, கார்களுக்கு முன்னால், மரத்துக்குப் பின்னால், அம்மாவை அணைத்துக்கொண்டு, அக்காவோடு நெருக்கமாக என்று விதவிதமான போஸ்களில் போட்டோகளைச் சுட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்தபின்னரும் இதே ஆர்வம்தான். துணைவேந்தரோடு சேர்ந்து போட்டோ, மேடை பின்னணியில் போட்டோ என்று பெரிய கூட்டமே அலையடித்தது.

உறவினர் கூட்டம் உற்சாகம் ததும்ப காத்திருந்தது. ஏராளமான பூங்கொத்துகள் வழங்கப்பட்டன, இனிப்புகள் கொடுக்கப்பட்டன. தம் மகள்களின் உச்சிமோந்துகொண்ட பெற்றோர்கள் இன்னொரு புறம். தாம் பெற்ற புகழைவிட தம் மகவுகள் பெறும் புகழ், அங்கீகாரம் ஆகியவற்றை மெச்சும், கொண்டாடும் பெற்றோர்களின் கண்களில் தெரிந்தது வலியும் உழைப்பும்தான்.

வாழ்க்கையில் டாக்டரேட் வாங்குவதும் ரேங்க் வாங்குவதும் இவ்வளவு கவர்ச்சிகரமான விஷயங்கள், உணர்ச்சிபூர்வமான தருணங்கள் என்று எனக்குத் தோன்றியதில்லை! வீட்டுக்கு வந்து பெட்டிக்குள் பூட்டிவைத்துள்ள என் பட்டங்களை எடுத்துப் பார்த்தேன். அதன் பின்னே தெரிந்தது, என் அப்பாவின் முகம். உழைப்பும் களைப்பும் வலியும் உற்சாகமும் ஆர்வமும் கலந்துகட்டிய முகம். பட்டம், எனக்கு இப்போது வெறும் காகிதமாகத் தோன்றவில்லை. அதன்பின்னே இருபதாண்டுகளின் சரித்திரம் இருக்கிறது. வலி நிரம்பிய சரித்திரம்!

  1. S< Krishnamoorthy says:

    சிறிது காலமாகவெ என்னை உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்.
    சமீப காலமாக டாக்டர் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை வேர்க்கடலை போல அதிகமாகிக் கொண்டே போகிறது. கூகுள் ஆண்டவரின் கருணையும் உதவியும் நிறையக் கிடைப்பதும் ஒரு காரணம் என்று சொல்லுகிறார்கள். இருக்கட்டும்.
    ஆனால் மேலைநாடுகளில் – குறிப்பாக அமெரிக்காவில் – டாக்டர் பட்டம் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் டாக்டர் என்று சாதாரணமாகப் போட்டுக்கொள்ளுவதில்லை என்பதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன்.
    ஆனால் நமதுதமிழ்நாட்டின் கதையே வேறாக இருக்கிறது. கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற படிக்காத மேதைகள் முனைவர் என்றும் டாக்டர் என்றும் தண்டோரா போடுவது அவசியம்தானா?
    இந்த முனைவர்கள் தாங்கள் படித்துப் பெற்ற எல்லாப் பட்டங்களையும் (B.A.,M.A., M.O.L., M.Phil., Ph.D) என்று வரிசை மாறாமல் தோரணம் கட்டுவதும் எதற்காக?
    இதைப் பற்றியும் விஷயம் தெரிந்த உங்களைப் போன்றவர்கள் எழுடவேண்டும்.
    இது ஒரு தொத்து வியாதி போலப் பரவிக்கொண்டிருக்கிறது.
    கிருஷ்ணமூர்த்தி

  2. P.S.SRINIVASAN says:

    God “father”!

    Certainly, our qualifications and what we are today is a result of our fathers’ dreams/hard-work/commitment!

    He named us and he remains as an initial before our name confirming the very fact “I am always for/with you”.

    As sons/daughters, it is our responsibility to add some “value” to his name and make him feel proud of us at least once in his lifetime.

    Father is a “God” promoted so by God!

    P.S.SRINIVASAN

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply