2009 – மறக்க முடியாத ஆண்டு 3 : பொருளாதாரம்

1. 2009 தொடங்கியபோது, விலைவாசி உயர்வு கடுமையாக இருந்தது. அக்டோபர், நவம்பர் 2008ல் இருந்தே விலைவாசி கடுமையாக உயரத் தொடங்கியிருந்தது. 2009 இறுதி வரை விலைவாசி இறங்கவே இல்லை. காய்கறிகள், பருப்பு வகைகள், மளிகை சாமான்கள் எல்லாம் கீழ் மத்திய வர்க்கமும் மத்திய வர்க்கமும் வாங்க முடியாத உயரத்துக்குப் போய்விட்டது. எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

2. சர்வதேச பொருளாதாரம், குறிப்பாக அமெரிக்கப் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது. அதுவும், மக்களுக்கு, அமெரிக்க அரசு கொடுத்த வரிச்சலுகை, பணப்பட்டுவாடா மூலம், மக்கள் கையில் பணப்புழக்கத்தை அரசு மேம்படுத்தியது. இதனால், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும், அதன் மூலம் உற்பத்தி பெருகும் என்பது எதிர்பார்ப்பு. எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் வளர்ந்திருப்பதாக, 2009 கடைசி காலாண்டு நிதி அறிக்கைகளில் விவரங்களைத் தெரிவித்திருக்கின்றன.

3. ஆனால், வேலைவாய்ப்பு உயரவில்லை. அமெரிக்காவிலும் உயரவில்லை. இந்தியாவிலும் உயரவில்லை. எல்லா இடங்களிலும் ஒருவித பயமும் தயக்குமும் அப்படியே இருக்கின்றன. உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகளும் ஆரம்பநிலை வேலைகளுக்கே உருவாகியிருக்கிறது. குறைந்த ஊதிய வேலைகள் அவை. அல்லது ஒப்பந்த வேலைகள். இந்திய ஐடி நிறுவனங்கள் இனிமேல் தான் கேம்பஸ் இண்டர்வியூக்களுக்கு வரவேண்டும்.

4. பங்குச் சந்தை, முரட்டுக் குதிரை மாதிரி ஓடிக்கொண்டு இருக்கிறது. என்ன காரணத்துக்காக ஏறுகிறது என்று முகாந்திரமே இல்லாமல் சென்செக்ஸும், நிஃப்டியும் ஏறுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ஜிடிபி 9 சதவிகிதத்தைத் தொடலாம் என்று நிதி அமைச்சர் சொன்னால், அன்றே 500 புள்ளிகள் சென்செக்ஸ் ஏறுகிறது. இதற்கெல்லாம் ஏதாவது அடிப்படை இருக்கிறதா என்றும் தெரியவில்லை. பல நிறுவனங்களின் லாப விகிதம் இன்னும் உயரவில்லை. உற்பத்தியும் விற்பனையும் உயரவில்லை. ஆட்டோ, வங்கித் துறை, பார்மா துறைகளில் வளர்ச்சி தென்படுகிறது. ஆனால், அரசின் முதலீடு அதிகரிக்கும், கட்டுமான முதலீடுகள் பெருகும் என்ற எதிர்பாப்பில், ஒவ்வொரு நிறுவன விலையும் உயர்ந்துகொண்டே செல்கின்றன.

மனநிலை நன்றாக இருக்கும்போது, உற்சாகமாக இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட பங்குக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பிரிமியம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது.

5. பணவீக்கமும் விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படாததால், இந்திய மக்களைப் பொறுத்தவரை, 2009 ஒரு வலி நிறைந்த ஆண்டே.

Leave a Reply