எதிர்காலம் கருதி…

ஒவ்வொரு நாளும் என் வீட்டுக்கு கிட்டத்தட்ட நான்கு ஐந்து பிளாஸ்டிக் கவர்கள் வருகின்றன. காய்கறி வாங்கும்போது ஒன்று, மளிகை சாமான்கள் வாங்கும்போது ஒன்று, பிரெட், பிஸ்கட்டுகள் வாங்கும்போது ஒன்று, ஆவின் பால் கவர் சில, ஏதேனும் ஸ்னாக்ஸ் வாங்கும்போது ஒன்று என்று சின்னது பெரிதுமாக பிளாஸ்டிக் கவர்கள் வந்துகொண்டே இருக்கின்றன. விழாக் காலங்களில், உடைகள் வாங்கும்போது வரும் கவர்கள் வேறு ரகம், இன்னும் கெட்டியானவை. கவர்களை உடனடியாக தூக்கிவீசிவிடவும் மனம் வருவதில்லை. பின்னொரு முறை பயன்படக்கூடும் என்ற இந்திய சேமிப்பு மனப்பான்மை இங்கும் செயல்படும்.

சிறிது நாள்களுக்கு முன் வீட்டை ஒழித்து சுத்தமாக்கியபோது, மூட்டை கட்டும் அளவுக்கு பிளாஸ்டிக் கவர்கள் சேர்ந்துபோயிருக்கின்றன. பாக்கெட் பாக்கெட்டாக சின்னக் கவர்கள் ஒரு புறம், பெரிய கெட்டி பைகள் இன்னொரு புறம். என்ன செய்வது என்று தெரியவில்லை. என் வீட்டுக்கு வந்து பழைய பேப்பர்களை எடுத்துச் செல்பவரிடம் பிளாஸ்டிக் கவர்களைக் கொடுத்தபோது, அவர் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அது அவருக்கு உபயோகமில்லை என்றார். முன்பு பால்கவர்களை மட்டும் பழைய பேப்பர் கடைக்காரர்கள் வாங்கிக்கொண்டு இருந்தார்கள். இப்போது அதையும் நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது.

பத்தாண்டுகள் இருபதாண்டுகளுக்கு முன்பு வரை, நான் எப்படி பொருள்களை வாங்கிவந்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போது இந்த அளவுக்குக் பிளாஸ்டிக் கவர்கள் புழக்கம் இல்லை. எங்கே போனாலும் துணிப் பையை எடுத்துக்கொண்டு போயிருக்கிறேன். அல்லது ஒயர் கூடையை எடுத்துச் சென்றிருக்கிறேன். கையை வீசிக்கொண்டு கடைகளுக்குப் போனதில்லை. ஆவன் பால் அப்போது பாட்டில்களில் விற்பனை ஆயிற்று. வீட்டு வாசலில் பால்பாட்டில்களைக் கொண்டு வைத்துவிட்டுச் செய்வார்கள்.

திருமணங்களில் அப்போது மஞ்சள் பை கொடுப்பார்கள். ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப, பையின் அளவு மாறுபடும். திருமணங்களில் இப்போது மஞ்சள் துணிப் பைகளைக் காணவில்லை. அங்கும் பிளாஸ்டிக் பைகள்தான் கோலோச்சுகின்றன. துணிப் பைகளை எல்லா இடங்களுக்கு எடுத்துச் செல்வது கெளரவக் குறைச்சலாக கருதப்பட்டதும் இல்லை. இப்போது மஞ்சள் பை என்பது ஒருவித கேலிக்குரிய சொல்லாக மாறிவிட்டது. ஒருவரைப் பழைய கால நபர் என்று குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கேலி எவ்வளவுதூரம் நம் சமூகத்தில் ஆழ வேரூன்றிவிட்டது என்பதை இப்போது நன்கு உணர முடிகிறது. என் மகள் துணிப்பையையே தொட மாட்டேன் என்கிறாள்.

கடைக்காரர்கள் காகிதப் பைகளுக்கு மாறுவதாக இல்லை. காகிதப் பை கிழிந்துவிடும் என்பது பொதுவான கருத்து. அதிலேயே கெட்டி காகிதப் பைகள் உண்டு என்றாலும், அது விலை அதிகம் என்ற எண்ணம். 80 சின்ன பிளாஸ்டிக் பைகள் கொண்ட பாக்கெட், ரூ.7 முதல் கிடைக்கிறது. கொஞ்சம் கெட்டி பிளாஸ்டிக் கவர்கள் 100 கொண்ட பாக்கெட், ரூ.15 – 20 வரை கிடைக்கிறது. சின்னக் கடைக்காரர்கள் தங்கள் செலவுக்குள் அடங்குமாறு பாக்கெட்களை வாங்குகிறார்கள்.

தெரிந்த கடைக்காரர்களிடம் பேசியபோது, இது ஒரு தவிர்க்க முடியாத தலைவலி என்றார்கள். கையில் பை இல்லாமல் பலர் வருகிறார்கள். என்ன செய்வது என்றார் அவர்களில் ஒருவர். ‘ஒரு பிளாஸ்டிக் கவர் கூட வாங்கி வெக்க மாட்டீயா?’ என்று மிஸ்டர் பொதுஜனம் வலியுறுத்துவதையும் இன்னொருவர் குறிப்பிட்டார். ‘பிளாஸ்டிக் கவர்ல சேமிச்சுதான் இவர் பங்களா கட்டப்போறாரு’ என்று நக்கல் கமெண்டுகள் இன்னொரு புறம். கடைக்காரர்கள் இதையெல்லாம் தவிர்க்க, ஏதோ செலவு கம்மியான பிளாஸ்டிக் கவர்களை வாங்கி வைத்துக் கொடுத்துவிடுகிறார்கள்.

இது ஒருவரை ஒருவர் பழி சொல்வதுபோல்தான் தோன்றுகிறது. பூனைக்கு யார் மணி கட்டுவது? நுகர்வோர்களின் மனம் மாறவில்லை என்றால் இதில் ஏதும் செய்வதற்கில்லை. என்னைப் பொறுத்தவரை ஒன்றைப் பின்பற்ற முயற்சிக்கிறேன். எங்கே கடைகளுக்குச் சென்றாலும் கூடையையோ, பிக் ஷாப்பரையோ எடுத்துக்கொண்டு செல்கிறேன். முடிந்தவரை, வீட்டுக்குள் பிளாஸ்டிக் கவர் வரவைத் தவிர்க்கப் பார்க்கிறேன்.

முடிந்தவரை, எதிர்காலத்துக்கு பூமியை நல்லபடியாக விட்டுச் செல்வது நமது கடமையல்லவா?

  1. லலிதா ராம் says:

    இந்தப் பழக்கம் ஒரு அமெரிக்கத் தாக்கம். அங்குதான் எதற்கெடுத்தாலும் bag. Trash bag, ziploc, carry bag என்று விதவிதமாய் கவர்கள்.

    ஐரோப்பாவில், பெரும்பான்மையான நாடுகளில், வெறுங்கையை வீசிக் கொண்டு போனால், காசு கொடுத்துதான் கவர் வாங்க வேண்டும்.

    சாதாரண கவர்களை அவர்கள் வைப்பதுமில்லை. 1 யூரோவுக்கு கவர் வாங்க, பலருக்கு மனமும் வருவதில்லை. அதனால், கண்டிப்பாக வீட்டிலிருந்தே கவர் எடுத்துச் செல்கின்றனர்.

    நம்மூரில் 10 பேர் கவர் தர மாட்டேன் என்றால், 11-ஆவது ஆள் அதையே USP ஆக வைத்து, விற்பனையைப் பெருக்கக் கூடும்.

    கொடைக்கானலில், பிளாஸ்டிக் அரவே இல்லாது வியாபாரம் செய்ய வைக்கும் சட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்.

    Polyethylene, recyclable material-தானே? அதை ஏன் பழைய பேப்பர் ஆசாமிகள் வாங்க மறுக்கின்றனர்?

  2. லலிதா ராம்,

    பெங்களூரில் நாங்கள் வழக்கமாகப் பொருள் வாங்கும் ஒரு சூப்பர் மார்க்கெட் (பெயர்: Total) இப்படிக் கவர்களுக்குக் காசு வசூலிக்க ஆரம்பித்தார்கள், இப்போதெல்லாம் நாங்கள் ஒழுங்காகப் பைகளைக் கொண்டுசென்றுவிடுகிறோம்.

    மற்றவர்களும் செய்யலாம். ஆனால் சட்டம் வரும்வரை செய்யமாட்டார்கள்.

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

  3. kavi says:

    நான் எடுத்த புத்தாண்டு தீர்மானங்களில் ஒன்று பிளாஸ்டிக் பைகளை அறவே தவிர்ப்பது. அதனால் விளையும் பயன்கள் ஒருபுறம் இருக்க இதை நடைமுறை படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. நான் தனியனாக இருப்பதால் ஓரளவு சாத்தியபடுகிறது. ஷாப்பிங் செல்லும்போது பை எடுத்து செல்வது மறந்து விடுவதால் இரண்டு நன்மைகள். கையில் தூக்கி வர முடிந்த மட்டுமே பொருள்கள் வாங்க வேண்டும் என்பதால் தேவை இல்லாதவற்றை வாங்கி குவிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. மீண்டும் ஒரு முறை கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் உடற்பயிற்சி மாதிரியும் ஆனது. :) …. இதை தொடர்ந்து கடைபிடிப்பது சிக்கலாக தோன்றுகிறது. எல்லா மட்டங்களிலும் இந்த உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் மட்டுமே பார்வை இருப்பவர்கள் மத்தியில் குருடர்கள் போல உணர்வோம். அறவே தவிர்ப்பது சாத்தியமில்லாத ஒன்று ஆனால் அதுவே வீட்டில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர காரணமாக இருக்க கூடாது என்றுநினைக்கிறன்.

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply