மிகை தேவையா?
தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவரும் நீத்தார் நினைவு விளம்பரங்களைப் பார்ப்பது என் தினசரி பழக்கங்களில் ஒன்று. புகைப்படங்களோடு வரும் விளம்பரங்கள் ஓரிடத்திலும், ஸ்போர்ட்ஸ் பேஜ்ஜில் டெத் என்றொரு மூலையும் இருக்கிறது. இரண்டுமே என்னைக் கலவரப்படுத்தும் இடங்கள். அதே சமயம் பார்க்காமல் இருந்ததும் இல்லை. பல சமயங்களில் எனக்குத் தெரிந்தவர், அறிந்தவர்களின் புகைப்படங்கள் அங்கே வந்ததுண்டு.
விதவிதமான மரணங்கள், விதவிதமான வருத்தங்கள், விதவிதமான நினைவு கூரல்கள். கடந்த சில வாரங்களாக, மதார்ஷா கடையின் உரிமையாளர் நினைவைப் போற்றும் விளம்பரங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. தொடர்ந்து பார்த்து வருவதனாலோ என்னவோ, பல முகங்கள் எனக்கு நினைவில் அப்படியே பதிந்து இருக்கின்றன.
ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். பெரும்பாலும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எந்த மனநிலையையும் குறிக்காது. ஒருவிதமான தட்டையான முகம் அது. ஒருவரை அடையாளப்படுத்துவதே அதன் நோக்கமே. ஒரு சில நல்ல புகைப்படங்கள் வரும். ஒரு இன்ஜியரிங் நிறுவனத்தின் முதலாளி, தலைகவிழ்ந்து சிந்தனையோடு நடப்பார். இன்னொரு பெண்மணி பளிச்சென்று சிரிப்பார். நாஞ்சில் மனோகரன் புகைப்படம் உற்சாகத்தோடு இருக்கும்.
இதெல்லாம் அவர்களுடைய மரணத்துக்கு முன்பு நன்கு வாழ்ந்தபோது எடுக்கப்பட்டவை. வருங்காலத்தில் தம் குடும்பத்தார், புகைப்படங்களை இப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்று அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்களா? தெரியவில்லை.
சென்ற வாரம் நானும் இதுபோன்ற ஒரு மரணச் செய்தியைக் கொடுக்க இரவு பத்தேகால் மணிக்கு தி ஹிந்துவுக்கு ஓடினேன். பதினோரு மணிவரை விளம்பரங்கள் பெறப்படும் என்று பத்திரிகையிலேயே தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. என் அவசரத்தை விட, அங்கே இருந்த அலுவலர்களின் அவசரம் இன்னும் கலவரப்படுத்துவதாக இருந்தது. உடனே யாருக்கோ போன் செய்து, இன்னொரு விளம்பரம் வருகிறது, கொஞ்சம் இடம் ஒதுக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார் அங்கிருந்த ஊழியர்.
ஏற்கெனவே செய்தியை எழுதி எடுத்துச் சென்றதால், விரைவாக அவர்கள் கொடுத்த படிவத்தில், ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஒவ்வொரு எழுத்தாக எழுதிக் கொடுத்தேன். ஸ்போர்ட்ஸ் பேஜ்ஜில் வரும் விளம்பரத்துக்கு, ஒரு வரிக்கு இருநூறு ரூபாய். என் பின்னாலே இருவர் வந்து, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுத்து விளம்பரம் எழுதித் தந்தனர். அது இன்னும் அவசரமாக உள்ளே லே அவுட் செய்யப்படும் இடத்துக்கு ஓடிப்போனது. அவர்களுக்கு ரூ.15,000 வரை ஆனது.
விளம்பரத்தைக் கொடுத்துவிட்டு வீடு திரும்ப, மெளண்ட் ரோடில் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. யாருக்கு இந்தச் செய்தி போய்ச் சேரும்? நான் கொடுத்தது என் உறவினர் ஒருவரின் மரணத்துக்கு. பெரும்பாலோருக்கு ஏற்கெனவே தொலைபேசியிலும் செல்பேசியிலும் விவரத்தைத் தெரிவித்தாயிற்று. இதையும் மீறி விடுபட்டவர்களுக்கு இந்தச் செய்தி போய்ச் சேருவதால் எந்த ஒரு புதிய பலனும் கிடைக்கப்போவதில்லை.
ஆனால், இருபத்தைந்தாவது ஆண்டு, முப்பதாவது ஆண்டு நினைவு நாள் விளம்பரங்கள் வருகின்றன. இரண்டு தலைமுறையே மாறிப்போயிருக்கும். மரணம் அதீத துயரமானது. அது தனிப்பட்ட விஷயமல்லவோ? வலியும் வேதனையையும் உறவினர்களை இழந்தவர்களுக்குத்தான் தெரியுமே அன்றி, பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பதால், என்ன புதிதாக பெறப்போகிறார்கள்? அல்லது எந்த வகையில் வலி குறையப் போகிறது?
யாருக்கு இவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்?
நேற்று, பழம்பெரும் நடிகை பானுமதியின் நினைவு நாள். போட்டோவோடு விளம்பரம். நான் என்ன பெற்றேன்? அவரது நடிப்பை நான் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேன். அது போதுமே. அதேபோல், பாரதியாரின் பிறந்த நாள், மறைந்த நாள் எல்லாவற்றையும் விழா போல் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகளில் அவரது நினைவைப் போற்றும், பங்களிப்புகளை மெச்சும் கட்டுரைகள், குறிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் கட்டுரைகள் எல்லாமும் உயர்வுநவிற்சிதான்.
ஒரு வகையில், நம் பண்பாட்டில், பிறப்பும் இறப்பும் கொண்டாட்டமானது போலிருக்கிறது. எல்லாவற்றையும் மிகையாக வெளிப்படுத்துவது நமது இயல்பிலேயே ஊறிப் போயிருக்கிறது.
தனிமனிதர்களிடையே தொடங்கி சமூகம் மொத்தமும் இது பரவியிருக்கிறது. இதில் சரி தவறு என்று ஏதும் இல்லை. ஆனால், மூத்தோரின் நினைவைக் கொண்டாடியே தீரவேண்டும் வலிந்து ஒன்றைத் திணிப்பது, எவ்வளவு தூரம் சரியென்றுதான் தெரியவில்லை.
People are more desirous of “attention”!
“Attention grabbing” has become a way of life nowadays. We are not quite clear/sure of what we think of ourselves but are more concerned of what others think of us. “What others think of us?” is a question, which will ultimately change our own/real identity. “Being ourselves” need not result in “Get noticed”! Right from birth to death everything is attention-grabbed! But it is worth if we live our life as simple as possible though living a simple life is not that simple! Simply, we can pay attention to “things” but we are not those “things”! It’s really great/courageous to simplify our life!!
P.S.SRINIVASAN
நீங்கள் மட்டுமா நீத்தார் நினைவுப் பத்தியைப் படிக்கிறீர்கள்? என்னைப் போன்ற “பஸ்”ஸ்க்குக் காத்திருக்கும் பெரிசுகளும் அதைத் தினமும் படிக்கத் தவறுவதில்லை.
நீங்கள் நினைத்தது போல நானும் நினைக்கிறேன் “என் மரணச்செய்தி அறிவிப்பால்” யாருக்கு என்ன பயன்? பால்ய சிநேகிதர்கள், வெகு தொலைவில் தொடர்பு விட்டுப்போன நண்பர்கள், உறவினர்கள் இந்தச் செய்தியைப் படித்து ஒரு முழுக்குப் போடலாம் அல்லது ஒரு “இச்” கொட்டலாம் என்று சமாதானம் அடைகிறேன்.
அவ்வளவுதான்.
கிருஷ்ணமூர்த்தி
does The Hindu demand some proof before posting the news in Death section in Sports page ? like death certificate copy or something like that ?
for 3-4 lines – how much does it cost ?
After the online matrimonial sites’ success, have you noticed that The Hindu’s sunday matrimonial section becoming small these days ?