சென்னையில் இரண்டு புதிய விஷயங்கள்
1. யுனினார். புதிய மொபைல் சேவை நிறுவனம் தமிழகத்துக்கு வந்திருக்கிறது. வழக்கமாக எல்லோரும் செய்யும் விளம்பர முறைகளை யுனினார் பின்பற்றியிருக்கிறது. கூடவே ஒரு வித்தியாசமான அம்சத்தையும் கண்டுபிடித்திருக்கிறது. இத்தனை நாள் அது தோன்றாமல் இருந்தது. எல்லோரும் நிச்சயம் சிக்னல்களில் நின்றே தீரவேண்டும். சிக்னல் இல்லாத சாலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சிக்னல் விளக்குக்குக் கீழே யுனினாரின் அழகான நீலமலர் லோகோவை ஒளிர வைத்துவிட்டார்கள். எவ்வளவு புத்திசாலித்தனம்! மக்களின் பார்வையில் மிக அதிகமாக படக்கூடிய ஓரிடத்தை இத்தனை நாள் யாரும் கவனிக்கவில்லையே என்று தோன்றியது. யுனினார் சேவை எப்படி இருக்கிறதோ எனக்குத் தெரியாது, ஆனால், அதன் விளம்பர உத்திகள் ரசனையுடன் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன.
2. இன்னொரு கண்டுபிடிப்பு, புதிய வகை மப்ளர். பனிக்காலத்தில் பெரும்பாலோர் கழுத்தையும் காதையும் மறைக்கும்படி மப்ளரைச் சுற்றிக்கொள்வார்கள். இந்த மார்கழி மாதம் புதிய மப்ளர் சென்னை எங்கும் தென்படுகிறது. வாக்மேனின் ஹெட்போன்களைப் போல், இரண்டு பக்கமும் காதுகளை மட்டும் மறைக்கும் கம்பளி. அதை அப்படியே எடுத்து காதுகளுக்கு மட்டும் மாட்டிக்கொண்டு பலர் காலை வாக்கிங் வருகிறார்கள். குளிருக்கு இதமாக இருப்பதாகத் தகவல். ரூ. 15தான் விலை. யாருடைய கண்டுபிடிப்போ தெரியவில்லை. நல்ல முயற்சி.
அந்த ஹெட்ஃபோன் பாணி மஃப்ளரை நிறைய ஆங்கில கார்ட்டூன்களில் பார்த்திருக்கிறேன் (குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலகட்டத்தைச் சித்திரிக்கும் ஓவியங்களில்). அதையே கொஞ்சம் டிஸைன் மாற்றி அழகாகச் செய்திருக்கிறார்கள் – பெங்களூரில் அதன் விலை ரூ 10/-மட்டுமே.
ஆனால் ஒன்று, ஏழெட்டு தடவை போட்டுமுடித்தால் லேசாகத் தையல் பிரிய ஆரம்பித்துவிடுகிறது. இந்தக் காலத்தில் பத்து ரூபாய்க்கு இதற்குமேல் எதிர்பார்க்கமுடியாதுதான்.
- என். சொக்கன்,
பெங்களூரு.
யூனினார் ஒரு பெரிய நிறுவனம். நேற்று ம்யூசிக் அகாதெமிக்கு நித்யஸ்ரீ கச்சேரிகேட்கச் சென்றிருந்தேன். வாயிலில் இரண்டு நபர்கள் (பிஹாரிகளோ?) 40, 50 கிறிஸ்துமஸ் தாத்தா ஆயத்த ஆடைகளை விற்பனைக்காக வைத்துக்கொண்டிருந்தார்கள். கச்சேரிக்கு வருகை புரிந்த இள்சுகளும், தாத்தாக்களும் பாட்டிகளும் போட்டி போட்டிக்கொண்டு வாங்க ஆரம்பித்தார்கள். பத்தே நிமிஷங்களில் எல்லாவற்றையும் விற்றுவிட்டு நடையைக் கட்டினார்கள் இருவரும். இந்த வருஷம் இது புதுசு. சந்தைப்படுத்துதல் (marketing) என்பதற்கு எம்.பீ.ஏ. தான் படித்து இருக்கவேண்டும் என்பதில்லை என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
கிருஷ்ணமூர்த்தி