புதிய இதழ்: அகநாழிகை
அகநாழிகை இரண்டாவது இதழே வந்துவிட்டது. முதல் இதழ் வந்தபோதே எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். மிகச் சிறப்பான இதழாக அகநாழிகையை பொன்.வாசுதேவன் உருவாக்கியிருக்கிறார். படைப்பிலக்கியம் என்பதை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வரும் சிறு பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. சமூக சார்ந்த, தத்துவம் சார்ந்த, கருத்துகள் சார்ந்த செய்திகளைப் பேசும் கட்டுரைகளே, விமர்சனங்களே பெரும்பாலான சிறு பத்திரிகைகளை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கின்றன.
திடீரென்று புதிய படைப்புகளே படிக்கக் கிடைக்காதோ என்ற எண்ணம் தோன்றிவிட்டது. அல்லது, சிறு பத்திரிகைகள் வெளியிடும் கட்டுரைகளின் பாதிப்பால் நல்ல படைப்புகள் உருவாகுமா என்று பார்த்தால், அப்படியும் ஏதும் பெரிதாகத் தோன்றியதாகத் தெரியவில்லை. ஒரு மாதிரி கவனம் திசை திரும்பியிருந்த நிலையில்தான், உயிர் எழுத்து இதழ் வந்தது. நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து தாங்கி வரும் இதழாக உயிர் எழுத்து இருக்கிறது.
அகநாழிகை, இதேபோல் படைப்பிலக்கியங்களுக்கு நிறைய பக்கங்களை ஒதுக்கியிருப்பது மனத்துக்கு இதமாக இருக்கிறது. குறிப்பாக சிறுகதைகளை சிறு பத்திரிகைகள் புறக்கணிக்கத் தொடங்கிய காலத்தில், அகநாழிகை போன்ற இதழ்கள் அதற்கு நிறைய இடம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சம். சிறுபத்திரிகைகளில், படைப்பிலக்கியம் தான் ஒரு ஆசிரியரின் ரசனையை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அந்த வகையில், பொன்.வாசுதேவனின் ரசனை கூர்மையானதாக இருக்கிறது. தேர்வுகள் கவனமாகச் செய்யப்பட்டிருக்கின்றன.
நல்லிலக்கிய வளர்ச்சிக்கு மற்றுமொரு கைகாட்டி, அகநாழிகை.