எழுத்தும் எடிட்டிங்கும்
நண்பர் ஒருவர் தான் எழுதிய கதையை என்னிடம் அனுப்பினார். ஏ4 பக்க அளவில் 3.25 பக்கம். கதை நன்றாக இருந்தது. பேசும்போது, இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமே, ஏன் சின்னதாக எழுதினீர்கள் என்று கேட்டேன். ‘600 வார்த்தைகள் லிமிட்’ என்றார் அவர். முன்பெல்லாம் பத்திரிகைகள் 4 பக்க அளவு என்று சொல்லுவார்கள். இப்போது வார்த்தை எண்ணிக்கை அளவுக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். என்னால், எப்போதும் சின்னதாக கதை எழுத முடிந்ததில்லை. எல்லாமே பெரிய கதைகள்தான் எழுதியிருக்கிறேன்.
அதேசமயம் பத்திரிகைகளின் பக்க அளவு பிரச்னை, மிகவும் முக்கியமான ஒன்று. அவர்களால், பல சமயங்களில் 4,5 பக்கங்கள் ஒதுக்குவது மிகவும் கஷ்டம். அந்த நான்கு ஐந்து பக்கங்களுக்குள்ளும் இரண்டு மூன்று ஜோக்குகள், ஒன்றிரண்டு துணுக்குகள் ஆகியவற்றுக்கும் இடம் ஒதுக்க வேண்டும். இல்லையெனில், பக்கம் முழுவதும் ஒரே எழுத்தாக நிரம்பியிருக்கும். பார்க்கவே ரிலீஃப் இருக்காது. அதற்காக என்னால் என் கையைக் குறுக்கிக்கொண்டு, பக்க அளவுகளுக்கு உள்ளோ, வார்த்தை எண்ணிக்கைக்குள்ளோ எழுத முடிந்ததில்லை.
இதற்கு நான் ஒரு வழி கண்டுபிடித்துக்கொண்டேன். சமாதானம்தான். என் போக்கில், கதை கோரும் அளவுக்கு ஏற்ப விரிவாகவோ சுருக்கமாகவோ எழுதிவிடுவேன். அப்புறம், பத்திரிகைகளுக்கு அனுப்பும்போது, அங்கே இருக்கும் துணை ஆசிரியர்களிடம் பக்க அளவுக்கு ஏற்ப வேண்டியதை எடுத்துக்கொண்டு, மிச்சத்தை வெட்டிவிடுவதை செய்துகொள்ளுமாறு சொல்லிவிடுவேன். என் கதை வெட்டுப்படுவதை நான் பெரிய பிரச்னையாக கருதியதில்லை. என் கதை, நான் எழுதியபடியே வரவேண்டும் என்றும் அடம்பிடிப்பதில்லை. வெட்டுப்பட்ட பின்பு அதைப் பற்றி வருந்தியதும் இல்லை.
பத்திரிகைகளுக்கு பத்திரிகை, பல்வேறு தனிநபர்களின் விருப்பத்திற்கிணங்க, கதைகள் எடிட் ஆகலாம். இருவேறு எடிட்டர்கள் ஒரே முறையில் எடிட் செய்ய மாட்டார்கள். வித்தியாசம் இருக்கவே செய்யும். மேலும் கதைகளை எடிட் செய்வது என்பது மிகவும் லாகவமாகச் செய்யவேண்டிய கலை. முதலில், கதை படிக்கும் ஆர்வமும் பல்வேறு கதை சொல்லும் முறைகளைப் பற்றிய தெளிவும் இருக்கிறவர்கள் எடிட் செய்தால், அந்த எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இந்தப் பிரச்னையே வேண்டாம் என்று பல பத்திரிகைகளில் முதலிலேயே, பக்க அளவைச் சொல்லி எழுதச் சொல்லிவிடுவார்கள். அல்லது, அவர்கள் தம் பத்திரிகையில் கதைக்கு ஒதுக்கும் பக்க அளவைப் பார்த்தே எழுத்தாளர்கள் புரிந்துகொள்ளலாம். இன்னொரு வகை ஆசிரியர்கள் உண்டு. கதையைத் தேர்வு செய்துவிட்டு, பக்க அளவுக்காகச் செய்யப்பட்ட எடிட்டிங்கை, எழுதிய ஆசிரியர்களிடமே படித்துக் காட்டி, ஒப்புதல் வாங்கி வெளியிடும் பழக்கம். கதை சிறப்பானதாக இருந்தால், பொறுத்திருந்து, அதற்குத் தேவைப்படும் பக்கங்களை ஒதுக்கி வெளியிடுவது இன்னொரு முறை. ஆனந்த விகடனில், எனக்கு இரண்டு அனுபவமும் உண்டு. என்னுடைய பெரிய கதைகள் 8,9 பக்க அளவுக்கு விகடனில் பிரசுரமாகியிருக்கிறது. பாலசுப்பிரமணியம் சார் எடிட்டராக இருந்தபோது, ஒருமுறை, கடைசி சில பாராக்களை மாற்றிய விவரத்தைத் தெரிவித்துவிட்டு கதையை வெளியிட்டார்கள்.
எடிட்டிங்கின் இன்னொரு பரிமாணத்தை திருப்பூர் கிருஷ்ணனிடம் பார்த்திருக்கிறேன். எங்கே எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத அளவு எடிட் செய்வதில் அவர் சமர்த்தர். எழுதிய மூலப் பிரதியோடு வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அதன் துல்லியம் பிடிபடும். ஒவ்வொரு பத்தியிலும் ஒவ்வொரு காட்சியிலும் அலங்காரத்துக்காக, உணர்ச்சி வெளிப்பாடாக, சிந்தனைப் பாங்காக, எழுத்தாளரே அறியாமல் பல உபரிச் சொற்களைச் சேர்ப்பது வழக்கம். படிக்கும்போது இந்தச் சொற்கள் கதையின் வளத்தை மேம்படுத்தும்; அதே சமயம் அது இல்லையென்றாலும் கதையின் போக்கு கெடாது, அழுத்தம் குறையாது. அத்தகைய சொற்களை, வரிகளை மெல்ல மெல்ல உருவி, விலக்கிவிடுவது நேர்த்தியான எடிட்டிங். திருப்பூர் கிருஷ்ணன் இதை மிகவும் கவனமாகச் செய்வார்.
அது என்ன உபரிச் சொல்? எப்படி அதைக் கண்டுபிடிப்பது? எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், என் கட்டுரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் பல இடங்களில் நான் அழுத்தம் தரவேண்டும் என்பதற்காகவே ‘தான்’ என்ற விகுதியைப் பயன்படுத்தியிருப்பேன். அதே போல், ‘ஏ’காரச் சொற்களை நிறைய பயன்படுத்தியிருப்பேன். ‘அந்த’, ‘இந்த’, ‘நான்’ என்ற சொற்களையும் நிறைய பயன்படுத்தியிருப்பேன். இதெல்லாம் எழுத்துவேகத்தில் வந்துவிழும் சொற்கள். இதையெல்லாம் நீக்கலாம். நீக்கினாலும் வரிகள் பொருள் தரும். இதுபோல் இன்னும் எண்ணற்ற உபரிச் சொற்கள் உண்டு. உபரி வரிகள் உண்டு. எழுத்தாளருக்கு எழுத்தாளர் இது வேறுபடக் கூடும்.
ஆங்காங்கே பத்திகளை உருவி எடுத்து, அளவைக் குறைப்பது, அறுவை சிகிச்சை எடிட்டிங். சுலபமான எடிட்டிங் இது. என்ன ஒன்று, படிக்கும்போது, கதை, மான் மாதிரி துள்ளித் துள்ளி ஓடும். எந்த ஒரு காட்சியும் மனத்தில் பதியாது. ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தாது. அதுவும் கோல் போஸ்ட்டைத் தொட ஓடும் கதைகளில் இது இன்னும் எளிது.
கோல் போஸ்ட் என்பது பல கதைகளுக்கு இறுதி பத்தி, வரி அல்லது சொல். மொத்த கதையும் அந்த ஒரு வரிக்கு இட்டுச் செல்வதைத்தான் குறிக்கோளாக கொண்டிருக்கும். இதுபோன்ற கதைகளில் இறுதிவரியைக் கை வைக்காமல் இருந்தால் போதும். மேலே இருக்கும் மொத்த கதையிலும் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், வேறு வகை கதை சொல்லும் முறைகள் இருக்கின்றன. கதை வாசிப்பையே அனுபவமாக மாற்றும் கதைகளில், எடிட்டிங் மிகவும் சிக்கலானது. அங்கே அறுவை சிகிச்சை எடிட்டிங் உதவாது.
பெரும்பாலும் அடுத்த நபருக்குத்தான் எடிட்டிங் சரியாக வரும். என் கதைகளை நான் எடிட் செய்வதை விட, அடுத்தொருவருடன் இணைந்து பணியாற்றும்போதுதான், பிரதி செம்மையுறும். மூன்றாவது நபருக்குத்தான் நிறைகுறைகள் பளிச்சென்று தெரியும். உலகின் பல முக்கிய எழுத்தாளர்கள், முன்னணி எடிட்டர்களுடன் இணைந்தே பணியாற்றியிருக்கிறார்கள். எடிட்டர்களின் ஆலோசனைகள் பல சமயங்களில் பிரதியை மேன்மேலும் செம்மைப்படுத்தியிருக்கிறது.
விக்ரம்சேத்தின் சூட்டபிள் பாய் நாவலை இதற்கு உதாரணமாகச் சொல்லுவார்கள். ஆறு பதிப்பாளர்களிடம் சென்ற நாவல் அது. ஒவ்வொரு பதிப்பாசிரியரும் அந்த நாவலில் வேலை செய்திருக்கிறார்கள், ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்கள். இறுதி வடிவம் பெற்றபின், அதை வைக்கிங் வெளியிட்டது. அதன் மூலப் பிரதிக்கும் பதிப்பான பிரதிக்கும் எவ்வளவு முன்னேற்றம் என்று பின்னர் பதிப்பாசிரியர் வியந்திருக்கிறார்கள்.
பத்திரிகைகளில் இது இன்றைக்குச் சாத்தியமில்லை. பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்திருப்பதாக அறிகிறேன். பிரபஞ்சனின் காதலெனும் ஏணியிலே என்ற தொடர்கதை, விகடனில் வெளியானது. விகடன் ஆசிரியரின் ஆலோசனைகளோடு அத்தொடர் எழுதப்பட்டதாகச் சொல்லுவார்கள்.
எழுத்தாளர்களே நல்ல எடிட்டர்களாக இருப்பதும் உண்டு. எழுதியதை மாற்றி மாற்றி எழுதுவது ஒருவகை எடிட்டிங். பல ஆண்டுகள் பிரதியை அப்படியே வைத்திருந்து, புது வெளிச்சத்தில், புது முதிர்ச்சியோடு, மீண்டும் படித்துப் பார்த்து திருத்துவது மற்றொருவகை எடிட்டிங். அசோகமித்திரன் இதில் மாஸ்டர். பல கதைகளில், ஒவ்வொரு சொல்லையும் அவ்வளவு பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருப்பார். அதை நீக்கினால், பொருள் சிதைந்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு.
நம்ம ஊரில், ப்ரூஃப் ரீடர்களை எடிட்டர்களாக நினைக்கிறார்கள். பதிப்பாசிரியர்கள் என்ற சாதி இங்கே மைனாரிட்டி கம்யூனிட்டி. பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புகளில், எடிட்டிங்கை ஒரு பாடகமாகவேனும் வைத்து இதற்கு உயிர் கொடுக்கலாம். எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கேற்ப நுண்ணுணர்வு கொண்ட எடிட்டர்களின் எண்ணிக்கை வளரவில்லை என்பது வருத்தமான விஷயம்.
எடிட்டிங்பற்றி இவ்வளவு விரிவாக ஒரு கட்டுரையா? சுவையான முரண்
சில வருடங்களுக்குமுன்னால், தமிழ் சிஃபியில் நீங்கள் என்னுடைய சிறுகதை ஒன்றை எடிட் செய்து வெளியிட்டிருந்தீர்கள். ஆனால் நான் மீண்டும் அதை வாசித்துப் பார்த்தபோது, எதுவும் வெட்டப்பட்ட உணர்வே இல்லை, மூலப் பிரதியுடன் ஒப்பிட்டபோதுதான் எங்கே கை வைத்திருக்கிறீர்கள் என்பது புரிந்தது – இதை அப்போதே உங்களிடம் சொல்லிப் பாராட்டினேன், நன்றி சொன்னேன், உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா தெரியவில்லை!
அப்புறம் ஒரு கோரிக்கை, கட்டுரைகளை எடிட் செய்வதுபற்றியும் நீங்கள் எழுதவேண்டும்.
இந்த விஷயத்தில் என்னுடைய அனுபவம், பத்திரிகைகள் இத்தனை வார்த்தைகளில் கதை / கட்டுரை வேண்டும் என்று கேட்கிறபோது, எழுதுகையில் நான் அதைப்பற்றி யோசிப்பதில்லை. எழுதி முடித்தபிறகு எண்ணிப் பார்ப்பேன், 10% எல்லை மீறியிருந்தால் ஓகே, அதற்குமேல் போய்விட்டால் நானே எடிட் செய்து அந்த வரம்புக்குள் கொண்டுவந்தபிறகு அனுப்புகிறேன்.
நாம் எழுதியதை நாமே வெட்டுவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், முன்புபோல் இதைப்பற்றி உணர்ச்சிவயப்படுவதில்லை. பின்னர் இந்தக் கட்டுரைகள் புத்தகமாக வந்தால் அந்த ஒரிஜினல் (முழு) பிரதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சமாதானம் சொல்லிக்கொள்வேன்.
இதில் இன்னொரு லாபம், இப்படி ’நமக்கு நாமே’ வெட்டிப் பழகினால், அடுத்தமுறை எழுதும்போது கொஞ்சூண்டு ‘on-the-fly editing’ நடந்தே தீரும்
நல்லதுதானே?
இதற்கு நேர் எதிராக இன்னோர் அனுபவம், சமீபத்தில் மாலன் ஒரு கட்டுரை கேட்டிருந்தார், பழக்க தோஷத்தில் ‘எத்தனை வார்த்தைகளில் எழுதலாம்?’ என்று பதில் அனுப்பினேன், அவர் சொன்னது:
‘உங்கள் விருப்பப்படி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்கள், Here we’re paid to edit it and bring to the page limit’
- என். சொக்கன்,
பெங்களூரு.
சுவாரசியமான பதிவு. அனுபவம் பேசுகிறது என்று சொல்லலாம். டி.கே.சி. சொன்னது போல பல அமாவாசைகளுக்கு நீங்கள் விளக்குப் போட்டுவிட்டீர்கள்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
You might like it: COPY EDITING AT THE NEW YORKER MAGAZINE. AN INTERVIEW WITH MARY NORRIS
http://www.redroom.com/blog/andyross/copy-editing-the-new-yorker-magazine-an-interview-with-mary-norris