’ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’
சென்ற ஞாயிறன்று, என்னுடைய அப்பாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டு, அப்படியே காஞ்சிபுரம் வந்தேன். வரதராஜரைச் சேவிக்க கோவிலுக்குப் போனோம். தாயார் சன்னிதியில் கூட்டமில்லை. பெருமாள் சன்னிதியில் நல்ல கூட்டம். வரிசையில் நின்றுகொண்டோம். எனக்கு முன்னால், கர்நாடகத்தில் இருந்து வந்த யாத்ரிகர்கள் கூட்டம். எல்லோரும் முட்டிக்கொண்டு நின்றார்கள். என் பின்னே நீண்ட வரிசை. அங்கே ஒரு முதிய தம்பதிகள் தம் பிள்ளையோடும் மருகளோடும வரிசையில் நின்றுகொண்டு இருந்தார்கள். இன்னும் இரண்டு பேர் தள்ளி, கைக்குழந்தையோடு ஒரு வடக்கத்திய பெண். வெயிலுக்கு மறைப்பாக தன் தலைப்பைக் குழந்தைக்குப் போர்த்தியிருந்தார். கூட்டம் நகரவில்லை.
பார்த்துக்கொண்டு இருந்தபோதே, என் பின்னால், ஒரு ஆணும் பெண்ணும் வரிசையில் வராமல் சட்டென வந்து நடுவே நின்றுகொண்டுவிட்டார்கள்.
‘லைன் போய் நில்லுங்களேம்மா’
‘இதுதான் லைனு’ அந்தப் பெண் பதில் சொன்னார்.
‘இத்தனை பேர் நிக்கறாங்களே.. நீங்க நடுவுல வந்து நிக்கறீங்க..’
‘லைன்லதான் வரோம்.’
‘எங்க வறீங்க.. பார்த்துகிட்டுதானே இருக்கேன். பின்னாடி பாருங்க. எத்தனை வயசானவரு நிக்கறாரு. நடுவுல வந்து நின்னா என்ன அர்த்த்ம்மா?’
‘ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’
‘நீங்கதானே நடுவுல வந்து நிக்கறீங்க. உங்களதானே கேக்கணும்.’
‘இவங்கள்ளாமே வாய தெறக்கல..’
’பின்னாடி இருக்கறவங்க கேக்கலங்கறதுக்காக, நான் கேக்கக் கூடாதா? வரிசையில போய் நில்லும்மா.’
‘உங்களுக்கு அப்புறம்தானே நிக்கறேன். நீங்க ஏன் சிலுத்துக்கறீங்க..நீங்க சாமி கும்புட்டு போங்க.’
எங்கே நான் சண்டையில் இறங்கிவிடுவேனோ என்று என் அப்பாவுக்குப் பயம். கையைத் தள்ளிக்கொண்டே இருக்கிறார். அதற்குள் மேலே இருந்த கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நான் நகரத் தொடங்கினேன். நடுவில் புகுந்த அந்தப் பெண்ணும் ஆணும் கொஞ்சம் கூட கூச்சமின்றி, படியேறிக்கொண்டு இருந்தனர்.
என்ன மனநிலை இது? கோவில் என்று இல்லை. எல்லா இடங்களிலும் எல்லா வரிசைகளிலும் இப்படிப்பட்ட ஓரிருவரைப் பார்க்கிறேன். அடுத்தவரைப் பற்றிய கரிசனமோ, நெறிமுறை பற்றிய எண்ணமோ துளியும் இல்லாதவர்கள். தாங்கள் வந்த வேலை உடனடியாக ஆகவேண்டும். தன் நேரம் முக்கியமானது. அடுத்தவர் நேரம் பற்றி எந்தக் கவலையும் இல்லை.
பாஸ்போர்ட் அலுவலத்திலும் இதே போன்ற அனுபவம் எனக்கு உண்டு. விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு, பணம் கட்டும் இடம். எனக்கு முன்னும் பின்னும் வரிசை. சட்டென ஒரு தாயும் மகளும் முன்னே கவுண்ட்டரிடம் போய், யார் பெயர்களையோ சொல்லிக்கொண்டு நிற்க ஆரம்பித்தார்கள். சட்டென கூட்டம் முழுவதும் குரலெழுப்ப ஆரம்பிக்க, கவுண்ட்டர் பின்னே பணம் வாங்கும் இடத்தில் இருந்தவர், வரிசையில் நின்று கட்டும்படி அப்பெண்ணிடம் சொல்லிவிட்டார். அந்த அம்மையாருக்கு பெருத்த அவமானம் போல் என்னவோ.
இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏன் வரவில்லை? ஏன் முண்டியடித்துக்கொண்டு போய் தன் பங்கு சலுகையை அபகரிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்? அடிப்படையில் ஓர் அச்ச உணர்வு இருக்கிறது. தான் விடப்படலாம், தனக்குக் கிடைக்காமல் போய்விடலாம் என்ற பாதுகாப்பின்மை மனத்துக்குள் இருக்கிறது.
அடுத்த கட்டம், தனக்கு உரியது தனக்குக் கிடைக்கும் என்றாலும் அதை உடனடியாகப் பெற்றுவிட வேண்டும் என்ற தவிப்பு பலருக்கு இருக்கிறது. ஜெயலலிதா அரசு நடக்கும்போது, வடசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி உங்களுக்கு நினைவு இருக்கும். விடிகாலை முதல் மக்கள் வெள்ளம் காத்திருக்க, கதவு திறந்து வெள்ள நிவாரணப் பொருள்களைத் தருவதற்குள், பெரும் தள்ளுமுள்ளு. எண்ணற்றோர் அதில் இறந்துபோயினர்.இதேபோல், கலைஞர் அரசில், வெள்ள நிவாரண நிதி வழங்கும் இடங்களில் பெரும் கூட்டம் காத்திருக்கும். ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ளும் வேகம், மூர்க்கம் எப்போதும் இருக்கும்.
பணம், பொருள், சலுகைகள் என்று வரும்போது, படித்த படிப்போ, நாகரிகமோ, பண்பாடோ யாருக்கும் ஞாபகத்தில் வருவதில்லை. அடுத்தவர்களைப் பற்றிய எண்ணம் துளியும் வருவதில்லை. ஏழை எளியவர்கள், வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லாதோர்தான் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. முன்பெல்லாம், அமெரிக்கத் தூதரகம் முன்னே நிற்கும் வரிசையில் இரவு முதலே நின்று இடம்பிடித்துத் தருவதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்ததை நான் அறிவேன். அப்படி இடம் பிடித்துத் தருவதற்கு பணம் தரவேண்டும்.
வரிசையில் நிற்பது பலருக்கு இம்சையாக இருக்கிறது. அது அவர்களின் சுயகெளரவத்தைச் சீண்டுவதாக இருக்கிறது. தங்களைப் பற்றி அவர்கள் வளர்த்துக்கொண்ட பிம்பத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. தம் கற்பனைகளில் தாமே ராஜாவாக இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு, யதார்த்தத்தில் வரிசையில் நிற்பது, சட்டென காலுக்குக் கீழே இருக்கும் உலகத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இதை எப்படியேனும் உதற வேண்டும். எப்படியேனும் முன்னே முண்டியடித்துக்கொண்டு போய்விட வேண்டும். இது சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமில்லை, சுயகெளரவ ரணத்தைச் சொறிந்துவிட்டுக்கொள்ளவும் தேவை.
வரிசை என்பது மனத்தால் வளர்ந்த சமூகம் பின்பற்றும் ஒரு பண்பாடு. மக்கள் குடியரசில் வரிசைக்கு முக்கிய இடமுண்டு. அது ஒரு நெறி. சுய ஒழுக்கம்.
ஏழை எளியவர்களுக்கு, வரிசை ஒரு கட்டுப்பாடாகத் தெரிகிறது. தாம் அடையவேண்டியவற்றைத் தள்ளிப்போடும் ஒரு தடையாக, வரிசை முறை இருக்கிறது. வரிசைமுறையில் ஊழல் நடக்கலாம். தமக்குச் சேரவேண்டியது வேறொருவருக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம். தம் உரிமையை எப்படியேனும் பெற்றுவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வரிசை பெரிய இம்சையாக இருக்கிறது.
படித்தவர்களுக்கோ வரிசை, கெளரவக் குறைச்சலாக இருக்கிறது.
இன்னொரு வகையில் பார்த்தால், வரிசைமுறை இங்கே திணிக்கப்படுகிறது. வலியுறுத்தப்படுகிறது. காரணம், இந்தியாவில் டிமாண்ட் அதிகம். சப்ளை குறைவு. வரிசையில் வருவது ஓரளவுக்கு சமூக ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கும்.
வரிசைமுறையை மக்கள் தாமாக, மனம் உவந்து ஏற்கும் வழிமுறையாக மாறவேண்டும். அது எப்போது சாத்தியம்? சப்ளை அதிகமாகும்போதுதான் அது சாத்தியம். ஒளிவுமறைவு இல்லாதபோதுதான் அது சாத்தியம். அக்கவுண்டபிளிட்டி இருக்கும்போதுதான் அது சாத்தியம். அதைத்தான் சுபிட்சம் என்று சொல்கிறார்கள். வளமான நாடு என்று அப்போதுதான் அதற்குப் பெயர்.
எனக்கு அந்தப் பெண்ணோடு சண்டை போட்டது, ரொம்ப நேரம் வருத்தமாக இருந்தது. ஏன் வீணாக நொந்துகொண்டோம்? ’ஏன் என்ன மட்டும் கேக்கறீங்க?’ என்று அந்தப் பெண் கேட்டது நியாயமாகத் தோன்றியது. சமூகம் முழுக்கவே, வரிசையைப் பின்பற்ற முடியாத பிரச்னை இருக்கும்போது, அந்தம்மாவை மட்டும் கேட்பானேன். தெரியவில்லை. இப்படிக் கேட்டால், உள்ளே தூங்கிக்கொண்டு இருக்கும் நியாய உணர்வு கொஞ்சமாவது தலைதூக்காதா என்ற நப்பாசைதான்.
படியேறி மேலே வரதர் சன்னிதி அருகே போகும்போது பார்த்தேன். அந்தப் பெண்ணும் ஆணும், முதிய தம்பதியரை முன்னே விட்டுவிட்டு, அவர்களுக்குப் பின்னே நின்றுகொண்டிருந்தார்கள். இப்போது வரதர்மேல் என் கவனம் குவியத் தொடங்கியது.
Really you touched a nerve. Reminds me a Nagesh’s song in a 1960s movie where he mentions this queue problem everywhere due to population.
While I was standing in a queue in walmart with my colleague, there were actually about twenty people standing in 4 queues in 4 billing counters and they suddenly opened 3 more billing counters.
I tried to move to the freed counter and my colleague stopped me saying people are already standing before us. We just arrived at this queue; so let us allow the gentleman before us to move to the next counter. The same guy would behave differently if he were in India – I am sure.
The thing is that we are not good or bad. See there are two hundred people in a queue in government office – and they open only one counter. why not say open 20 counters to cater to more people? In banks, two three staffs will just gossip, while there will be 50 people standing in for a particular counter… Its really disgusting.
In some places, there will be two or three counters for different purposes and all are crowded. A number of people would be standing in wrong queue and there will be a mess.
I can go on like this… hmm, it will take another hundred years for us to change this.
வெங்கடேஷ்!
தங்கள் பார்வையும் உணர்தலும் வித்தியாசமனவை. தமிழ்ப் பதிவுகளில் உங்கள் பதிவுகள் மிகத்தெளிவாகவும், புரிதல் உணர்வுடனும் இருக்கின்றன. அவை இதயத்தைத் தொடு சிறு சிறு அலைகளை ஏற்டுத்துகின்றன. எந்த எழுத்து இதயத்தில் அலைகளை ஏற்படுத்துகிறதோ அது நல்ல எழுத்து. வாழ்த்துக்கள்.!
கிருஷ்ணமூர்த்தி