பணக்கொள்கை: சலுகைகள் தொடரலாமா?
நேற்று பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி. சுப்பாராவ், 2009-10 நிதியாண்டில், இரண்டாம் காலாண்டு பணக்கொள்கை ஆய்வுக்குப் பிறகு ஒருசில அறிவிப்புகளைச் செய்தார். அவர் பேசிய பல செய்திகள், பொருளாதார வல்லுநர்களுக்குத்தான் புரியும். ஆனால், இந்தியாவில் வாழ்ந்துகொண்டு அதைப் புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே? என் வரையில் புரிந்துகொள்ள முயற்சித்தேன். என் புரிதல் இப்படி இருக்கிறது:
1. சென்ற ஆண்டு பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டபோது, உலக நாடுகள் பலவும் தத்தமது நாட்டின் பொருளாதார, தொழில் வளர்ச்சிகளுக்காக, சில நடவடிக்கைகளை எடுத்தன. சில சலுகைகளை வழங்கின. சில கொள்கை மாற்றங்களைச் செய்தன. அதன் மூலம், தொழில் முனைவோர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், வங்கிகளில், கடன் கொஞ்சம் சுலபமாகக் கிடைக்கத் தொடங்கியது. தொழில் நடத்தத் தேவைப்படும் கடன் தொகை, அவர்களுக்குப் போதிய அளவு கிடைக்காமல் இருந்ததே அப்போது பெரும் பிரச்னையாக இருந்தது.
இப்போது ஓராண்டுக்கும் மேல் கடந்துவிட்ட நிலையில், தொழில்கள் மெல்ல மெல்ல தம் சிக்கல்களில் இருந்து மீண்டிருக்கின்றன. ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் காலாண்டில் பல தனியார் நிறுவனங்களும் அரசுத் துறை நிறுவனங்களும் ஓரளவுக்கு நல்ல லாபம் ஈட்டியிருப்பதைத் தெரிவித்திருக்கின்றன. தொழில்கள் காலூன்றத் தொடங்கியிருப்பதை இது காட்டுகிறது.
இந்த நிலையில், தொழில்கள் வளர, வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்ட சலுகைகளை மெல்ல மெல்ல ரிசர்வ் வங்கி விலக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கிறது. நேற்றைய சுப்பாராவின் பேச்சு, இந்தத் திசையில்தான் இருந்தது. ஏற்கெனவே என்னுடைய முந்தைய ‘ரெசஷன் முடிந்துவிட்டதா? கட்டுரையில், பல நாடுகளில் இதே மனநிலை இருப்பதையும், சலுகைகளை விலக்கிக்கொள்ள வழி தேடுவதையும் (exit strategy) குறிப்பிட்டிருந்தேன். இஸ்ரேலிலும் ஆஸ்திரேலியாவிலும் இதைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். சலுகைகளை விலக்கிக்கொள்ளத் தொடங்கியிருக்கும் மூன்றாவது நாடு, இந்தியா.
2. சுப்பாராவ் உடனடியாகச் சலுகைகளை விலக்கிக்கொள்ளவில்லை. ஆனால், அதற்கான முகாந்திரத்தைச் சொல்லியிருக்கிறார். அந்தத் திசையில் எடுக்கப்பட்டுள்ள ஓர் சிற்றடியாக, வங்கிகள், தாம் பெறும் முதலீடுகளுக்கு ஈடாக, காப்பீடாகத் தாம் வைத்துக்கொள்ள வேண்டிய தொகையின் அளவில் 1 சதவிகிதத்தைக் கூட்டியிருக்கிறது. இதற்கு Statutory Liquidity Ratio (SLR) என்று பெயர். சென்ற ஆண்டு 25 சதவிகிதமாக இருந்த எஸ்.எல்.ஆர்.ஐ 24 சதவிகிதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி. இம்முறை அதை மீண்டும் 25 சதவிகிதத்துக்கு உயர்த்தியிருக்கிறது. இந்தத் தொகையை, வங்கிகள், அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்து வைக்க முடியும். இதனால், உடனடி பாதிப்பு ஏதுமில்லை என்று சொல்லுகிறார்கள் வங்கித்துறை வல்லுநர்கள். ஏற்கெனவே பல வங்கிகள், 25 சதவிகிதத்துக்கு மேலேயே அரசுகளின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வைத்திருக்கின்றன.
3. இன்னொரு வேலையையும் செய்திருக்கிறார் சுப்பாராவ். வங்கிகள், பெரிய கட்டுமான நிறுவனங்களுக்கு, கட்டுமானப் பணிகளுக்காகக் கடன்கள் கொடுத்திருக்கின்றன. இதில் ஒரு சில கடன்கள் திரும்பி வர முடியாமல் போகக்கூடும். அந்த முதலீடு முற்றிலும் பொருளற்றதாகவும் போகக்கூடும். அந்தக் கடன் தொகையினால், வங்கிகளுக்கு எந்த வருவாயும் இல்லாமல் போகக்கூடும். இதை Non-performing assets (NPA) என்று சொல்லுவார்கள். இப்படி ஆகலாம் என்று எதிர்பார்த்தே, கடன் கொடுக்கும் வங்கிகள், கொடுக்கும் கடனுக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்தத் தயார் நிலையில் இருக்க வேண்டிய தொகையின் அளவு முன்பு 0.4 சதவிகிதமாக இருந்தது. இப்போது அதை 1 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார் சுப்பாராவ்.
இதை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கட்டுமான நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய் கடனுக்கும் 0.4 பைசாவை காப்பீடாக எடுத்துவைக்க வேண்டும். இப்போது, அது 1 பைசாவாக உயர்ந்திருக்கிறது. இது பல செய்திகளைச் சொல்லுகிறது. முதல் செய்தி, கட்டுமான நிறுவனங்கள், வங்கிகளிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் போகும் அளவு கூடுதலாகலாம். எப்போது அந்நிறுவனங்களால் கடனைக் கட்ட முடியாமல் போக முடியும்? அவர்களுடைய கட்டடங்களைப் போதிய நபர்கள் வாங்க முடியாமல் போகும்போது, விலை கூடுதலாக இருக்கும்போது. அப்படியானால், கட்டுமானத் துறைக்குள் ஒரு பூதம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்றுதானே இதற்கு அர்த்தம்? இதை முன்னெச்சரிகை நடவடிக்கை என்று எடுத்துக்கொண்டாலும், உள்ளூர பிரச்னை இருப்பதைத்தான் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை எடுத்து வைக்கிறது.
இன்னொரு செய்தி, கூடுதலான தயார்நிலைத் தொகையை எடுத்து வைக்கவேண்டும் என்பதால், பல வங்கிகள், கட்டுமான நிறுவனங்களுக்குக் கொடுக்கும் கடன்களின் அளவைக் குறைத்துவிடக் கூடும். உண்மையிலேயே கடன்களைக் கட்ட முடியும் என்று நம்பிக்கை தரும் நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வங்கிகளில் கடன் கிடைக்கும் நிலையும் ஏற்படலாம்.
4. மேலே சொன்ன மாற்றங்கள் ஏற்பட முக்கியக் காரணங்களில் ஒன்று, பணவீக்கம். இந்தியாவில், வங்கிகளில் காட்டப்பட்ட சலுகைகளால், அளவுக்கு அதிகமான பணபுழக்கம் இருந்து வருகிறது. கொள்கை ரீதியாகக் காட்டப்பட்ட சலுகைகளாலும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் மூலதனம் வந்து கொட்டியிருக்கின்றன. இதனால், ஒரு நன்மையும் ஒரு தீமையும் உண்டும். நன்மை, தொழில் வளர்ச்சி. முன்னேற்றம். தீமை, பணவீக்கம். அதாவது, பணப்புழக்கம் அதிகமானதால், பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. இந்த விலைகள் உயர்வதற்கான எந்த ஓர் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக உணவுப் பொருள்களின் விலைகள் கடந்த ஓராண்டில் மிகவும் அதிகமாக உயர்ந்திருக்கின்றன. மொத்த விற்பனைக் குறியீட்டென் (Wholesale Price Index – WPI), இந்த நிதியாண்டின் முடிவில், மார்ச் 2010ல் 6.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. முன்பு இது 5 சதவிகிதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. அது 6.5 சதவிகிதத்துக்கும் மேல் போக வாய்ப்புண்டு என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. அதில் முக்கியமாக உணவுப் பொருள்களின் விலைதான் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பருவமழை பொய்த்துப் போய்க்கொண்டு இருப்பதால், உணவுப் பொருள்களின் விலைகள் இன்னும் அதிகமாகக்கூடும் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அப்படியானால், பணபுழக்கத்தைக் கட்டுப்படுத்தினால், ஓரளவுக்கு பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பணபுழக்கத்தைக் குறைத்தாலோ, தொழில்களின் வளர்ச்சி பாதிப்படையலாம். இரண்டையும் எப்படி ஒரே சமயத்தில் கையாளுவது? வேறு வழியில்லை, பணவீக்கம் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் முன்பு அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டிய சூழல் வந்திருக்கிறது. இன்று இல்லையென்றாலும் அடுத்த பணக்கொள்கை சந்திப்பின்போது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்தே ஆகவேண்டும்.
5. இதையெல்லாம் விட முக்கியமான கேள்வி என்னவெனில், சலுகைகளை விலக்கிக்கொள்ள ரிசர்வ் வங்கி முயல்கிறதே, இது கொஞ்சம் அவசரமான முடிவு அல்லவா என்பதுதான். தொழில்கள் தமது சொந்தக் காலில் நிற்க பழகிவிட்டனவா? அவற்றுக்கு அரசின் சலுகையோ ஆதரவோ இனி தேவைப்படாத சூழல் ஏற்பட்டுவிட்டதா? தெரியவில்லை. பணக்கொள்கை ஆய்வுக்குப் பின் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொழில்களும் பொருளாதாரமும் வலுவான பிறகே, சலுகைகள் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும், அதுவரை சலுகைகள் தொடரும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இதைப் பங்குச் சந்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கிடுகிடுவென பங்குகளின் விலைகள் விழத் தொடங்கிவிட்டன.
6.சரி, ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளால் நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்படி பாதிக்கப்படுவோம்? பல தொழில் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிவிட்டனவா என்று தெரியவில்லை. பல நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைத்திருப்பதன் மூலம் லாபம் ஈட்டியிருக்கின்றனவே அன்றி, விற்பனைப் பெருக்கத்தால் அல்ல. அப்படியானால், அரசின் சலுகைகள் விலக்கப்படுமானால், அவர்களுக்குத் தேவைப்படும் மூலதனம் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், உற்பத்தி பாதிக்கப்படலாம். வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போகலாம். இன்னொரு பக்கம், மெல்ல மெல்ல பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணத்தின் மதிப்பு உயரும். உணவுப் பொருள்களைக் குறைந்த செலவில் வாங்கக் கூடிய சூழல் உருவாகும்.
இதில் முக்கியம், தொழில் வளர்ச்சியும் அதனால் ஏற்படக்கூடிய வேலைவாய்ப்புகள் பெருக்கமும்தான். அது எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அதே சமயம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலைகளும், பணவீக்கமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் ஏழை எளியோர், மத்திய வர்க்கத்தினர் எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும்.
மத்திய அரசு எப்படி இதைக் கையாளுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.