யுடிலிட்டி வேல்யூ!
நூல்களின் மேல் பெரும் காதல் உடையவர்களாக நூலகர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவும் தப்பாக ஆசைபட்டிருக்கிறேன். சின்ன வயதில் இருந்து அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள் என்று தொடர்ந்து பல நூலகங்களில் இருந்து நூல்களை வாங்கிப் படித்துவந்திருக்கிறேன். அரசு நூலகங்களில் உள்ள நூலகர்கள் பலருக்கு, நூல்களின் பெருமை தெரியுமோ தெரியாதோ ஆனால், அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற விவரம் மட்டும் நன்கு தெரியும்.
ஒவ்வொரு ஆண்டும் அரசு நூலகங்களில் வந்து சேரும் புது நூல்களை, நூலகர்கள் உடனடியாக எடுத்து அடுக்குகளில் வைக்கமாட்டார்கள். அதை பொக்கிஷம் போல் கொஞ்ச நாள் மறைத்து மறைத்து பீரோவுக்குள் வைத்துக்கொண்டு இருப்பார்கள். ஒரு நாள் மெல்ல ஒவ்வொரு நூலாக வெளியே வரும். அதை எடுத்துப் போகும் ஆளை, நூலகர் பார்க்கும் பார்வை, ஏதே சொந்தப் பெண்ணை களவாடிக்கொண்டு செல்பவன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
அந்த நூல்கள் எல்லாம் மக்களுக்குக் கொடுக்கவே வாங்கப்பட்டுள்ளன, அதைப் பயன்படுத்துவதன் மூலமே நூலின் உபயோகம் முழுமை பெறும் என்ற எண்ணங்களை விட, ஏதோ பத்திரமாக வைத்து பூஜை செய்வதே உயர்ந்த பணிபோல், இந்த நூலகர்கள் நினைத்துக்கொள்வார்கள் போலும். நூல்களின் மதிப்பு பலருக்குத் தெரிவதில்லை, அவர்கள் அதைக் கிழித்துவிடக் கூடும், திருடிக்கொள்ளக் கூடும் என்றெல்லாம் நூலகர்கள் காரணம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கிழிந்தால்தான் என்ன? படித்துக் கிழிக்கத்தானே நூல்கள்? அவ்வளவு பேர் படித்து நைந்து கிழிந்துபோனால், அதைவிட, அந்த நூல் அடையக்கூடிய பேறு வேறு என்ன இருக்க முடியும்? புதிதாக மேலும் படிகள் வாங்கிவைக்கவேண்டியதுதான்.
நூலகங்களில் நூல்களைத் திருடுபவர்களை எனக்குத் தெரியும். பல நூல் நிலைய காவலாளிகள், உதவியாளர்களே, இப்படிக் களவாடிக்கொடுக்கத் தயங்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை அதிகபட்ச தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லோரும் பயன்படுத்தவே நூல்கள், நூலகங்கள். தங்கள் விருப்பங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ள, அதிகம் செலவில்லாமல் நூல்களைக் களவாடிக்கொள்ளலாம் என்ற எண்ணமே முற்றிலும் தவறு.
ஆனால், இதனாலெல்லாம், நூலகர்கள் போலீஸ்காரர்களைப் போல் நடந்துகொள்ள வேண்டாம். எல்லோர் மேலும் ஒரு சந்தேகக் கண். விளைவு, பயன்படுத்துபவர்கள் மேல் ஒருவித அசூசை. நூலகத்தை உண்மையாகப் பயன்படுத்துபவனையும் அதை முறைகேடாக பயன்படுத்த நினைப்பவனையும் இனம்காண முடியாதா என்ன?
எல்லா அரசு நூல் நிலைய நூலகர்களையும் இப்படிச் சொல்ல முடியாது. நான் சின்ன வயதில் பல முக்கிய நூல்களை வாசித்த, சென்னை கொண்டியம்பதியில், முருகன் தியேட்டர் அருகே இருந்த நூல்நிலைய நூலகர் மிக நல்ல மனிதர். நூல் நிலையத்திலேயே ஒரு முழு நூலைப் படித்துவிட்டு, கையில் இன்னும் இரண்டு நூல்களை எடுத்துவந்து அடுத்த நாளைக்குள் அவையிரண்டையும் படித்துவிட்டு, மீண்டும் போய் நூலகத்தில் நிற்பேன். மனிதர் சிரித்துக்கொண்டே அடுத்த நூல்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பார்.
இவருக்கு நேர் எதிராக இருந்தவர், நான் படித்த து.கோ.வைணவக் கல்லூரி நூலகர். மிக அற்புதமான நூலகம் இது. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் வெளியான நல்ல தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் சேகரம் இங்கே உண்டு. நான் படித்தது கணிதம். எடுத்து வாசித்தது அத்தனையும் இலக்கியம். துறை சார்ந்த நூல்கள் எல்லாம் முன்னால் இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நூல்கள் பின்னால் ஒருபக்கம் அடுக்கி வைத்திருப்பார்கள். விளக்கு இருக்காது. நான் சளைத்தவனில்லை.
உள்ளே நுழைந்து எண்ணற்ற ஆங்கில கதைப் புத்தகங்களை எடுத்துவந்துவிடுவேன். ஃபாக்னர் என் ப்ரிய ஆசிரியர். நூலகருக்குப் பொறுக்காது.
‘சப்ஜெக்ட் புக் இல்லையே இது?’
‘ஆமா சார்.’
‘நேத்து கூட கதை புஸ்தகம் எடுத்துகிட்டு போன போல இருக்கே?’
‘ஆமா சார்.’
‘படிச்சுட்டியா?’
‘ஆச்சு சார்.’
லேசாக முறைப்பது போல் இருக்கும். திடீரென்று, நூலகர் என் அப்பா முகத்தை எடுத்து மாட்டிக்கொண்டிருப்பார். தாடைகள் இறுக்கம் கொள்ளும். கைகள் படபடக்கும்.
‘இதெல்லாம் எடுத்துகிட்டுப் போக முடியாது. சப்ஜெக்ட் புக்ஸ்தான்.’
‘அப்படி ஒண்ணும் போடலியே சார். எல்லாம் புக்ஸும் எடுக்கலாம்னுதான் போட்டிருக்கு.’
‘ஹெ.ஓ.டி.கிட்ட சொல்ல வேண்டியிருக்கும்.’
‘தாராளமா சொல்லுங்க.’
சட்டென புத்தகங்களை வீசிவிட்டு அவர் அறைக்குள் போய்விடுவார். ‘உருப்படாத சனியன்’ என்று நினைத்திருப்பார். நான் வழக்கம்போல், நூலகத்துக்குப் பின்புறம் இருக்கும் அமைதியான பழைய கட்டடம் ஒன்றில் போய் அமர்ந்துகொண்டு படித்துக்கொண்டு இருப்பேன்.
சமீபத்தில் வேறொரு கல்லூரி நூலகரைச் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தேன்.
‘ஸ்டூடன்ஸ் என்ன மாதிரி புக்ஸெல்லாம் எடுத்துப் படிக்கறாங்க சார்?’
‘சப்ஜெக்ட் புக்ஸ்தான் சார். நான் வேறெதுவும் கொடுக்கறதில்ல.’
‘ஏன் கதை புத்தகமெல்லாம் கொடுக்க மாட்டீங்களா?’
‘அதெல்லாம் எதுக்கு சார்? அதையெல்லாம் வெச்சம்னா, எந்நேரமும் அதைத்தான் படிச்சிகிட்டு இருப்பானுங்க.’
கேட்க எனக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனாலும் கேட்டுவிட்டேன்.
‘கதை புக்ஸ் படிச்சா என்ன சார்?’
‘உருப்படாம போயிடுவாங்க. நாளைக்கு அங்கம்மா அப்பாவுக்கு யார் பதில் சொல்றது சொல்லுங்க? காலேஜுக்கு எதுக்கு அனுப்பறாங்க? படிக்கத்தானே? அதை ஒழுங்கா செய்யாம இவன் கண்டதையும் படிச்சுட்டு திரிஞ்சான்னா, நாளைக்கு யார் பதில் சொல்றது? வாழ்க்கையே வேஸ்டா போயிடும் இல்லையா?’
யுடிலிட்டி வேல்யூ இருக்க வேண்டும். சமூகம் மிகத் தெளிவாக இருக்கிறது. நூலகம் என்பது காசு கொடுத்து தனிநபர் வாங்க முடியாத அதிகத் தொகை உள்ள புத்தகங்களை வாங்கி வைக்கும் இடம். அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அங்கேபோய் சும்மா இலக்கியம், கதை, கவிதை எல்லாம் படிக்கக் கூடாது. கவைக்குதவாத விஷயங்கள் அவை. பணம் சம்பாதிக்க உதவாத, முன்னேற்றத்துக்கு உதவாத எதுவும் பயனுடையது அல்ல.
சமூகத்தின் இந்தக் குணத்தைத்தான் நூலகர்களும் பிரதிபலிக்கிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.
இந்த குணமும் எண்ணமும் எவ்வளவுதூரம் தெரியுமா வந்திருக்கிறது? திருவல்லிக்கேணி பாரதி சாலை ஓரம் இருக்கும் பழைய புத்தகக் கடைகள் அத்தனையிலும் இப்போது கல்லூரிகள், பள்ளிகள் சார்ந்த நூல்கள் மட்டுமே விற்கப்படுகின்றன. ஆசிரியர் பெயர் சொன்னால், புத்தகத்தை எடுத்துத் தருவார்கள், படிப்பு மற்றும் ஆண்டு விவரம் சொன்னால், அந்தக் குறிப்பிட்ட ஆண்டு பயன்படுத்தப்படும் நூல்களின் விவரங்களை கடைக்காரர்கள் எடுத்துச் சொல்வார்கள். அவ்வளவு அத்துபடி.
எப்போதாவது, பழைய நூலகங்களில் உள்ள பழைய குப்பைகள் என்று அட்டை கிழிந்த, பக்கங்கள் நைந்துபோன இலக்கிய புத்தகங்களை அம்பாரமாய் கொட்டி வைப்பார்கள். ‘எது எடுத்தாலும் ஐந்து ரூபாய்.’ ‘எது எடுத்தாலும் பத்து ரூபாய்’ என்று செ.யோகநாதனும் சூர்யதீபனும் பழமலய்யும் இ.பாவும் சிதறிக்கிடப்பார்கள்.
என்னைப் போல் ஒருசிலர் அதன் அருமை கருதி வாங்கிச் செல்வார்கள். மற்றபடி, இதையெல்லாம் மசாலா வேர்க்கடலை விற்பவனும் சோம்பப்டி விற்பனும்தான் வாங்குகிறார்கள். எனக்கு இருப்பதைப் போலவே, அவர்களுக்கும் அதில் ஓர் யுடிலிட்டி இருக்கிறது!!!
Really a nice one. I also faced similar problems in my school days.
Especially the lines “திடீரென்று, நூலகர் என் அப்பா முகத்தை எடுத்து மாட்டிக்கொண்டிருப்பார்.” are good.
Keep writing more about literature please.