அவையத்து முந்தியிருப்பச் செயல்
எல்லா அப்பாக்களுக்கும் உள்ள அதே கவலைதான் எனக்கும். என் பெண் எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். இன்னும் நான்கு ஆண்டுகளில் பள்ளி வாழ்க்கை முடிந்துவிடும். கல்லூரியில் அவளை என்ன படிக்க வைக்கவேண்டும்? கல்வித் துறை பற்றியும் அதில் வரும் புதுப் படிப்புகள் பற்றியும் ஓரளவுக்கு நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன், வருகிறேன். இதுதான் வருங்காலத்தில் முக்கியப் படிப்பாக இருக்கப் போகிறது என்று என்னால் ஒரு சிலவற்றைச் சுட்டிக்காட்டவும் முடியும். ஆனால், இதெல்லாம் என் பெண்ணுக்குப் பிடிக்கவேண்டுமே?
ஆனால், வீட்டுக்குள் இப்போதே பிரஷர் ஆரம்பித்துவிட்டது. ஐஐடியில் சேர எழுதப்படும் ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் தேர்வு பெற, உடனே பயிற்சிக்கு அனுப்பு. தி.நகரில் ஆனந்த் என்று ஒரு ஆசிரியர் இருக்கிறார். சூப்பர் மேன். அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ஐஐடிக்களில் கால்வைப்பது உறுதி. ஐஐடி இல்லையென்றாலும் பரவாயில்லை, எப்படியாவது பொறியியல் படிக்க வைத்துவிடுங்கள். கம்பியூட்டர் துறைதான் சாலச் சிறந்தது. என்னதான் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டு உலகமெங்கும் கம்பியூட்டர் துறை வேலைவாய்ப்புகள் குறைந்துபோனாலும், இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு அந்தத் துறைதான் கோலோச்சப் போகிறது.
எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு உடன்பாடு இல்லை. சரி, அவளையே கேட்போம். அவளுக்கு என்ன தோன்றுகிறது என்று தெரிந்துகொள்வோம் என்று கேட்டேன். விவசாயம் என்றாள் அவள்.
சரி, நல்ல தேர்வுதான். உலகம் உள்ளளவும் உணவுத் தேவை இருந்துகொண்டுதான் இருக்கப் போகிறது. விவசாயப் படிப்பு அந்தத் திசையில் நல்ல முன்னேற்றம்தான் என்று நினைத்துக்கொண்டேன்.
இன்னொரு நாள் என்னிடம் வந்தாள்.
‘டாக்டர் சுதா, டாக்டர் ராஜா எல்லாம் எப்படி டாக்டரானங்க?’
‘டாக்டருக்குப் படிச்சுதாம்மா.’
‘மெடிசின் ஒரு நோபிள் ஜாப் இல்ல. நிறைய கத்துக்கலாம் இல்ல.’
டாக்டர் சுதா சேஷய்யனும் டாக்டர் ராஜா வெங்கடேஷும் எங்கள் குடும்ப நண்பர்கள். அவர்களைப் பார்த்து எழுந்த பாதிப்பு இது என்று புரிந்துகொண்டேன்.
வேறொரு நாள் பேசும்போது, என் நீண்ட நாள் ஆசையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஏ (பப்ளிஷிங்) படிப்பை எடுத்துப் படி என்றேன். அதற்கு ஏற்ப, முதலில் ஹைதராபாத்தில் உள்ள செண்ட்ரல் இண்ஸ்டிடியூட்டில் ஆங்கிலம் மொழிப்பாடத்தைப் படி என்றேன். இன்று இல்லாவிட்டாலும், இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் எப்படியும் ஒரு பதிப்பகத்தைத் தொடங்கி, நான் மறைவதற்குள் ரூபர்ட் முர்டாக் மாதிரி ஒரு மீடியா சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிமுடிக்காமல் ஓயமாட்டேன், அதை நிர்வகிக்க நீ உதவலாம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவள் பார்த்த பார்வையே என்னை வாயை மூடிக்கொள்ள வைத்துவிட்டது!
அப்போதுதான், சைக்கோமெட்ரிக் டெஸ்ட் பற்றித் தெரிந்துகொண்டேன். முக்கால் மணி நேர டெஸ்டில், அதில் பங்கேற்கும் மாணவ மாணவியரின் ஆர்வங்களை ஓரளவுக்குப் படித்துவிட முடியும். அதைக் கொண்டு அவர்கள் தேர்வு செய்யவேண்டிய பாடங்களைப் பற்றி முடிவு எடுக்கலாம். எட்டாம் வகுப்பில் இந்த டெஸ்ட்டை எடுக்கலாம என்பவர்கள் இருக்கிறார்கள். இல்லை பத்தாம் வகுப்பு முடிக்கட்டும், அப்புறம் டெஸ்ட் எடுப்பது சரியாக இருக்கும் என்பவர்களும் இருக்கிறார்கள். எட்டாம் வகுப்புக்குள் ஆர்வங்கள் அவ்வளவு தூரம் கிரிஸ்டலைஸ் ஆகாது என்றார்கள். என் குழப்பம் தீரவில்லை. இன்னும் அதிகம்தான் ஆயிற்று.
இதன் பின்னர் இன்னும் இரண்டு மூன்று விஷயங்களை எதேச்சையாகத் தெரிந்துகொண்டேன். என் நண்பர் ஒருவர், மும்பையில் மூத்த அனுபவம் வாய்ந்த டாக்டர். சென்ற முறை அவளது மகளைப் பற்றி பேச்சு வந்தது. அவள் நன்கு பாடக்கூடியவள். ‘அவளும் டாக்டராக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவள் பாடகி ஆவேன் என்று சொல்லிவிட்டாள்’ என்றார் டாக்டர் நண்பர். மும்பையில் ஒரு கல்லூரியில் ஏதோ ஒரு இளங்கலை வகுப்பில் சேர்ந்துகொண்டு, முழுநேரமும் தன் நண்பர்களோடு ஒரு ராக் பாண்ட் உருவாக்கி, பாடிக்கொண்டு இருக்கிறாள்.
இன்னொரு நண்பரின் மகன், எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யில் எம்.பி.ஏ. முடித்தார். நல்ல மார்க். ரேங்க். இப்போது என்ன செய்கிறார் என்று கேட்டேன். ‘மகாராஷ்ட்ராவில் கிராமம் கிராமமாக சுத்திக்கொண்டு இருக்கிறான். சோஷியல் ஆந்தரபர்னர் ஆகிவிட்டான். கிராமங்களில் போய் அவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தேவையான விஷயங்களைச் செய்வேன் என்கிறான்’ என்றார் நண்பர்.
தோழி ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘என் மகன் நல்ல ரேங்க்கில் பொறியியல் முடித்துவிட்டான். வேலையும் தேடிக்கொண்டு இருக்கிறான். அதற்குள் அவனுக்கு மாடலிங் செய்து பார்க்கவும் ஆசை. அவனுடைய போட்டோக்களைப் பார்க்கவும்’ என்று எழுதியிருந்தார்.
பலருக்குப் படிப்பு வேறாகவும் ஆர்வம் வேறாகவும் இருக்கிறது. படிப்பைப் பின்பற்றி கிடைக்கும் வேலையில் சேர்ந்துகொள்கிறவர்கள், எந்நேரமும் ஆர்வத்தைக் கைவிடாதவர்களாக வாழ்க்கை முழுவதும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். ஆர்வத்தைப் பின்பற்றிச் செல்பவர்களில் எத்தனை பேர் பொருளாதார ரீதியாக நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுகிறார்கள் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இதையும் மீறி ஒரு விஷயம் இருக்கிறது. அது ஜெனரேஷன் ஒய்.யின் குணாதிசயம். அவர்களைக் கவர்வது உடனடி புகழும் அபரிமிதமான பணமும்தான். இரண்டும் ஒருசேரக் கிடைப்பது மீடியா துறையில்தான் என்பதால், என்ன படிப்பு படித்தவர்களும், கடைசியில் மீடியாவின் மாயைக்குள் வந்து சேர்கிறார்கள். அதுவும் சினிமா என்ற கவர்ச்சிக்குள் வந்து சேருபவர்களில் இன்று படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே கிடையாது. இரண்டு பேரும் ஒரே மாதிரிதான் படம் எடுக்கிறார்கள்! குத்துப் பாட்டைப் படிக்காதவன் கொச்சையாக எடுக்கிறான். படித்தவன், இன்னும் லைட்டிங் ஜாலம், காமிரா மாற்றங்கள் எல்லாம் செய்து நேர்த்தியாக எடுக்கிறான்!! இறுதி நோக்கம், ‘மக்களின் பேராதரவை’ப் பெறுவதுதான்!!!
சிங்கப்பூரில் குழந்தைகள் வளரும் அரும்பு பருவத்திலேயே அவர்களின் ஆர்வங்களை இனங்கண்டு, அத்துறையில் மேலே வளர ஏதுவான வகுப்புகள், தேர்வுகள், படிப்புகள் ஆகியவற்றில் ஈடுபடுத்தி, நல்ல குடிமக்களை உருவாக்குவதில் அரசாங்கமே ஈடுபடுகிறது என்கிறார்கள். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.
எது முடிகிறதோ இல்லையோ, ஒன்றை மட்டும் நான் செய்யக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். எந்த வகையிலும் நான் என் கருத்துகளை, ஆர்வங்களை, எதிர்பார்ப்புகளையோ என் மகள் மேல் திணித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், என் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை நான் என்றுமே நிறைவு செய்ய முடிந்ததில்லை. என் மகள் மட்டும் அதை எப்படிச் செய்வாள்?
Very good one Venkatesh.
It made me to think about my stand with my boy.