ரெசஷன் முடிந்துவிட்டதா?

கோடி ரூபாய் கேள்வி இது. டிசம்பர் 2007ல் பொருளாதாரச் சரிவு ஆரம்பித்தது என்பதை அறிவிக்க, மேலும் இரண்டு காலாண்டுகள் ஆயின. அதன் பிறகு கடந்த ஒன்றே முக்கால் ஆண்டாக, உலக நாடுகள் அனைத்திலும் வளர்ச்சி தடைபட்டுப் போயிருக்கிறது. இந்த நிலையிலும் இந்தியாவும் சீனாவும் ஓரளவுக்கு வளர்ச்சி பெறும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். அமெரிக்கா உள்பட பல வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள அரசுகள் தத்தமது தொழில் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் ஏராளமான பொருளாதாரச் சலுகைகளையும் உதவிகளையும் வாரி வழங்கின. விளைவு, பல நாடுகளில் மீண்டும் தொழில்துறை, வளர்ச்சிப் பாதையில் திரும்பத் தொடங்கியிருக்கிறது.

கடந்த ஒன்றே முக்கால் ஆண்டுகளில் நடைபெற்ற மாற்றங்களை இப்படி ஒரே பத்தியில் சொல்வது கொஞ்சம் அபத்தம்தான். அதன் வலி, வேதனைகளுக்கு இங்கே இடமே இல்லாமல் போய்விட்டது. பயத்துக்கும் தவிப்புக்கும் இது நியாயம் செய்வதாகவும் ஆகாது.

எப்போது இந்த நிலை மாறும் என்ற அவசரம் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் எப்போதும் இருந்து வந்தது. பல அரசுகள் தம்மால் இயன்ற முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்தன. இன்னும் நிலைமை மோசமாகிவிடாமல் பல நாடுகள் பார்த்துக்கொண்டன.

இப்போது அடுத்த கேள்வி, இந்த சரிவு நின்றுவிட்டதா? வளர்ச்சிப் பாதைக்கு நம் நாடுகள், குறிப்பாக அமெரிக்கா திரும்பிவிட்டதா? எந்த ஆய்வாளரும் உறுதியாக இதற்கு ஆம், அல்லது இல்லை என்று பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். சரிவு இப்போதைக்கு இல்லை. நின்றுவிட்டது மாதிரிதான் தெரிகிறது என்று ஒரு மாதிரி குழப்பமான பதில்தான் வருகிறது. பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்பவர்கள் பயங்கர உற்சாகிகள். எட்டர்னல் ஆப்டிமிஸ்டுகள். ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே, உலகப் பொருளாதாரம் சரியாகிவிட்டது என்று கடகடவென்று பல்வேறு வளரும் நாடுகளில் உள்ள பங்குச் சந்தைகளில் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

இந்தியாவில் மார்ச் 8க்கு பின், மும்பைப் பங்குச் சந்தை மிகவும் வேகமாக முன்னேறி, இன்று 17,000 புள்ளிகளைத் தொட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறது. 20,000 புள்ளிகளைத் தொடும் என்று ஆருடம் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு புறம், இந்த வேகம் பயமாக இருக்கிறது, இது நிறுவனங்களின் வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக இருக்கிறது, இது தாக்குப்பிடிப்பதற்கான சூழ்நிலை இல்லை என்று யதார்த்த நிலை பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெளிநாட்டுப் பணம் கிட்டத்தட்ட 12,600 கோடிகள் வந்து குவிந்திருக்கின்றன. அபரிமிதமான பணபுழக்கம், இந்தியாவுக்குள் அதிகரித்திருக்கிறது. மத்திய அரசு, வட்டி விகிதங்களைக் குறைவாக வைத்திருப்பதன் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறது. இதனால் பணபுழக்கம் அதிகரித்திருக்கிறது. மறுபுறம், பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. காய்கறி, அரிசி, பருப்பு என்று அன்றாடம் தேவைப்படும் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது. கன்சியூமர் பிரைஸ் இண்டெக்ஸ் 14 சதவிகிதத்தைத் தொட்டது. இதற்காக, பணப்புழக்க அளவை இந்தியாவில் கட்டுப்படுத்தினால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று அரசு பயப்படுகிறது.

சர்வதேச அளவில் பல நாட்டு அரசுகளும் மத்திய வங்கிகளும் இப்போது வேறோரு விஷயத்தையும் பேசத் தொடங்கியிருக்கின்றன. பொருளாதாரம் வளர கொடுக்கப்பட்டச் சலுகைகளை மெல்ல மெல்ல திரும்பப் பெற்றுக்கொள்ளலாமா (exit strategy), பெற்றுக்கொள்ள இது ஏற்ற தருணம்தானா என்று பேசத் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில், பொருளாதார ஆதரவும் ஊக்கங்களும் இன்னும் கொஞ்சம் காலத்துக்குத் தொடரவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

வளர்ச்சி பற்றிய ஐயம் இப்போது எல்லா நாடுகளில் பீடித்திருக்கிறது. நாம் பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டிருக்கலாம். தொழில்துறை வளர்ச்சி பல நாடுகளில், சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு நம்பிக்கை தருவதாக இருக்கலாம். ஆனால், இது நிஜம்தானா என்ற கேள்வி எல்லோருடைய மண்டையையும் ஆக்கிரமித்திருக்கிறது. பல நிறுவனங்கள் லாபம் காண்பித்திருப்பது, தமது செலவுகளைக் குறைத்திருப்பதனால்தானே அன்றி, உற்பத்திப் பெருக்கத்தினாலோ, விற்பனை அளவு கூடுதலாகியிருப்பதனாலோ அல்ல.

இந்த ஐயத்துக்கு இன்னொரு காரணம், வேலையில்லாத் திண்டாட்டம் பல நாடுகளில் இன்னும் மோசமாகிக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவில் அது 10 சதவிகித அளவுக்கு மேல் போகக்கூடும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படியானால், வீட்டில் பணம் வந்து சேரவில்லை என்னும்போது, வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? பொருள்களின் தேவை எப்படி உயரும்? உற்பத்தி எப்படிப் பெருகும்? அப்படியானால், இன்று வளர்ச்சி என்று காண்பிக்கப்படுவது எவ்வளவு தூரம் உண்மை?

அதீத பணப்புழக்கத்தால், மற்றொரு நீர்க்குமிழி உருவாகிக்கொண்டு இருக்கிறதோ என்ற அச்சம் பல நிதித்துறை ஆய்வாளர்களுக்கு இருக்கிறது.

இதில் இருந்து இன்னொரு முடிவுக்கும் வருகிறார்கள். நாம் பொருளாதாரச் சரிவில் இருந்து மீளலாம். ஆனால், வளர்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் இருக்காது. பல இடங்களில் இன்னும் பள்ளங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் தட்டுத் தடுமாறித்தான் முன்னேற்றம் காண முடியும்.

இதெல்லாம் உலக நிலைமைகள். இந்தியாவைப் பொறுத்தவரை, என் கவலைகள் இன்னும் அதிகம். 50 சதவிகிதத்துக்கும் மேல் இளைஞர்களை உடைய இந்தியாவில், கடந்த ஒன்றே முக்கால் ஆண்டுகள், மோசமான வெறுமையை உருவாக்கியிருக்கிறது. 70களிலும் 80களிலும் எப்படி இளைஞர்கள் வேலையில்லாமல், மனம் நொந்து, அரசை எதிர்த்துக்கொண்டு, செங்கொடியின் நிழலில் போய் நின்றார்களோ, அப்படிப்பட்ட வெறுமை இது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் வேறொருவிதமான் உற்சாகம் எங்கும் கொப்பளித்துக்கொண்டு இருந்தது. நகரங்களில் வளர்ந்த ஒரு தலைமுறையினர், வேலையில்லாத் திண்டாட்டம் என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தது. இப்போது மீண்டும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியிருக்கிறது.

பொருளாதார வளம் பெருகும்போது, எல்லோராலும் வாழ முடியும். சாதி, மத ஏற்றத்தாழ்வு இல்லாமல், தகுதி பாகுபாடு இல்லாமல், எல்லோரும் அண்டிக்கொள்ள ஓர் நிழல் கிடைக்கும். தம்மளவில் நிறைவான கெளரவமான வாழ்வை உருவாக்கிக்கொள்ள பொருளாதார வளம் முக்கியம். இன்று வளர்ச்சி பற்றிய பயமும் முன்னேற்றம் பற்றிய தெளிவின்மையும் இருக்கும்போது, பல நிறுவனங்கள், ஆளெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும். சுணக்கம் காட்டும் நிறுவனங்களும் உண்டு. அபரிமிதமான ஆள்சேர்ப்புக்கு இனி உடனடி வாய்ப்பு இல்லை. தகுதிகள், மிகுந்த கவனத்தோடு சரிபார்க்கப்படும். செலவுகளை எவ்வளவு தூரம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்ற கவனமும் நிறுவனங்களுக்கு வந்துவிடும். ஒருவகை இறுக்கம், மூடிய நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த இறுக்கம், சமூக ரீதியாக நிறைய பாதிப்புகளையே உருவாக்கும்.

ஒன்று நன்றாகத் தெரிகிறது. இந்தப் பொருளாதாரச் சரிவு, நம்மை அப்படியே விட்டுப் போகப்போவதில்லை. நம் நெஞ்சில் நீங்காத வடுவை ஏற்படுத்திவிட்டே செல்லப் போகிறது. இனி, நாம் பழைய மனிதர்களாக இருக்க மாட்டோம். அடுத்த பத்திருபது ஆண்டுகள் இதைப் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கப் போகிறோம். அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக் கூடியதா இந்த வலி?

Leave a Reply