முகங்கள்: ஆனைமலை ரங்கநாதன், வசந்தா ரங்கநாதன்
ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், வள்ளலார் மகாத்மா காந்தி விழாவை அருட்செல்வர் நா. மகாலிங்கம் நடத்தி வருகிறார். இது 44 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. காந்தியப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் முக்கியமானவர்களைக் கூப்பிட்டு அருட்செல்வர், ‘அருட்ஜோதி காந்திய விருது’ வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இந்த ஆண்டு (2009) இவ்விருதைப் பெற்றிருப்பவர் ஆனைமலை மா. ரங்கநாதன்.
இதுவரை அவரை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. மீடியா வெளிச்சத்துக்கே வராமல் இருக்கிறார். ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் என் அலுவலத்துக்கு வந்திருந்தார். விகடன் பிரசுரமாக அவரின் வாழ்க்கை வரலாறான ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நூலை வெளியிட்டிருந்தோம். அவர் சென்னை வந்தபோது, நூல் தொடர்பாக என்னையும் வந்து சந்தித்தார். உண்மையில் நான் கொஞ்சம் ஆடிப் போய்விட்டேன். கிருஷ்ணம்மாளும் அவர் கணவர் ஜெகன்னாதனும் இணைந்து, நிலமற்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு பூதான அடிப்படையில் நிலங்களை அரசிடமிருந்தும் தனிநபர்களிடம் இருந்தும் பெற்றுக்கொடுத்து பலரது வாழ்வில் ஒளியேற்றியவர்கள். இன்னும் ஏற்றிக்கொண்டிருப்பவர்கள். இப்போது நினைத்தாலும் அந்தச் சந்திப்பு ஒரு கனவு போல் இருக்கிறது.
ரங்கநாதன் ஐம்பதுகளில் இருப்பார். கால் முட்டுக்கு மேல் தூக்கிக்கட்டிய வேட்டி. தலையில் அதிகம் கேசமில்லை. நெற்றியில் குங்குமப் பொட்டு. திடகாத்திரமான தேகம். விரிந்த தோள்கள். அதிகம் உயரமில்லை. மேடையில் கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டு இருந்தார். அருட்செல்வர், ரங்கநாதனுக்கு விருதையும் பணத்துக்கான காசோலையையும் வழங்கினார்கள். பெற்றுக்கொண்ட ரங்கநாதன் ஏற்புரை வழங்க மைக் அருகே வந்தார்.
அலங்காரமோ பூச்சுக்களோ எதுவுமற்ற எளிமையான பேச்சு. உண்மைகள் தெறித்துவிழும் போது, அலங்காரங்களுக்கு அங்கே ஏது இடம்?
எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் ரங்கநாதன். என்.ஜி.எம். கல்லூரியில் பட்டப் படிப்பு. பின்னர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு. முறையாக மற்றவர்கள் போல் நீதிமன்றத்தில் போய் பொய்களோடு போராடாமல், நேராக மக்கள் மன்றத்துக்கு வந்துவிட்டார் ரங்கநாதன். காரணம், மகாத்மா காந்தி. இல்லாதவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் கைவிடப்பட்டோருக்கும் சேவை செய்வதே வாழ்க்கைக்கு பொருள் தரும் என்பதை அவர் தெரிந்துகொண்ட இடம், கல்லூரி.
திருமணம் செய்துகொண்டால், விதவையையோ, ஊனமுற்றவரையோ, வேற்று சாதியினரையோதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற முடிவோடு இருந்து, தனது 25வது வயதில் ஹரிஜனப் பெண் ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தார். குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளாததால், 10 ஆண்டுகள் காத்திருந்து, தனது 35வது வயதில் அவரை, வசந்தாவைக் கைப்பிடித்திருக்கிறார் ரங்கநாதன். தனது திருமணத்துக்கு இவர் செலவழித்த தொகை வெறும் ரூ.825. தானே தக்ளியில் நூற்ற நூலில் தாலி செய்து, மஞ்சளைக் கட்டி, திருமண நாண் பூட்டியிருக்கிறார்.
இவர் போராட எடுத்துக்கொண்ட விஷயங்கள்தான் என்னை மிகவும் கவர்ந்தன:
1. மதுக்கடைகளை ஏலத்துக்கு விடப்படுவதை எதிர்த்துப் போராட்டம், சிறைவாசம்.
2. மதுக்கடைகளை மூடக் கோரி 7 நாள் உண்ணாவிரதம். பின்னர் சிறைவாசம்.
2. கேரளத்துக்கு தமிழக மாடுகள் இறைச்சிக்காகக் கடத்தப்படுவதை எதிர்த்துப் போராட்டம். சிறைவாசம்.
3. கோவில்களில் ஆபாசப் பாடல்களும் நடனங்களும் நடத்தப்படுவதைக் கண்டித்து பாதயாத்திரை, தொடர்ந்து பழனியில் உண்ணாவிரதம்.
4. ஆபாசப் புத்தகம், சுவரொட்டிகளை தடைசெய்யக் கோரி பாதயாத்திரை மற்றும் புத்தக எரிப்புப் போராட்டம்.
இந்தப் போராட்டம், பாதயாத்திரை அத்தனையிலும் இவரோடு பங்கேற்றவர் இவரது மனைவி வசந்தா. சிறைவாசங்களையும் கூடவே அனுபவித்தவர். இரண்டு பெண்கள்: சர்வோதயா, அஹிம்சா.
1968ல் ஆனைமலையில் மகாத்மா காந்தியின் பெயரால் ஒரு ஆசிரமம் தொடங்கி இன்றுவரை நடத்திவருகிறார். அங்கே ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும் ரத்ததானமும் கூட நடைபெறுகின்றன. இன்னும் சட்ட உதவி, நுகர்வோ நலப் பணிகள், விழிப்புணர்வு பணிகளும் இங்கே நடைபெறுகின்றன. எல்லாம் சேவை. இதையெல்லாம் செய்ய பணம் வேண்டுமே?
‘நிறைய பேரு உதவி செய்யறேன்னும் வராங்க. நான் யார் கிட்ட பணம் வாங்கணுங்கறதுல தெளிவா இருக்கேன். சாராயம் விக்கிறவன், மக்களை ஏமாத்தறவன், கெடுக்கறவன் போன்ற ஆள்களிடம் நான் பணம் வாங்கமாட்டேன். மக்கள் எங்க சேவையைத் தெரிந்து என்ன கொடுக்கிறார்களோ, அதை வைத்துக்கொண்டு, எல்லா உதவிகளையும் செய்யறோம். அது போதும்.’
‘அதேபோல, பலர் விருது கொடுக்கறேன், பணமுடிப்பு கொடுக்கறேன்னு சொல்றாங்க. அருட்செல்வர் ஐயா, இந்த விருதை எனக்குத் தர விஷயத்தைச் சொன்னபோது, நான் வேண்டாம்னுதான் சொன்னேன். விருதெல்லாம் வந்திருச்சின்னா, தலைக்கனம் கூடிப்போயிரும். நாம் என்னவோ ரொம்ப பெரிய மனுஷன்னு நினைப்பு வந்துடும். ஏதோ சாதிச்சுட்டோம்ங்கற எண்ணமும் வந்திரும். அதெல்லாம் காந்திக்கோ வள்ளலாருக்கோ ஒத்துக்காத விஷயங்கள். ஐயா, வந்து வாங்கிக்கய்யான்னு வலியுறுத்துனாரு. என்னால தட்ட முடியல. அவர் எனக்கு வழிகாட்டி. ஒரே ஒரு விஷயம் சொன்னேன், ஐயா, நான் விருது வாங்கறதுக்கு முன்னாடி ஒரு வேலை செஞ்சுட்டு வருவேன். அதை முடிச்சுட்டுத்தான் விருது வாங்குவேன்னும் சொன்னேன்.
இன்னிக்குக் காலையில இங்கே வந்து இறங்கினேன். மத்தியானம் தக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போனேன். அங்க இருக்கற பசங்களோட கக்கூஸ்ங்களையெல்லாம் தண்ணி வூத்தி கழுவிவிட்டேன். பசங்க எல்லாம் என்ன என்னன்னு கேட்டாங்க. ஒண்ணுமில்ல, தலைக்கனம் ஏறக்கூடாதுன்னு நானே இதைச் செஞ்சுகிட்டேன்.’
‘இங்க விருது கொடுக்கும்போது, என்னை கூப்பிட்டாங்க. என் மனைவியைக் கூப்புடலை. எனக்கு என்னவோ போல இருந்திச்சி. அவங்க உதவி இல்லாமல், நான் இல்லை. அருட்செல்வர் ஐயா என் மனைவியையும் மேடைக்குக் கூப்பிட்டு, இரண்டு பேருக்கும் சேர்த்து இந்த விருது கொடுத்தாங்க. இப்பதான் எனக்கு மனசு நிம்மதியாச்சு.’
பேசி முடித்து உட்கார்ந்த ரங்கநாதனுக்கு என்னவோ ஞாபகம் வந்தது போல் மீண்டும் மைக் அருகே வந்தார்.
‘இந்த விருதோட பணமும் கொடுத்திருக்காங்க அருட்செல்வர் ஐயா. அது எனக்கு என்னாத்துக்கு? அதை நாகப்பட்டணத்துல சுனாமியால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செய்ய கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வேலை செஞ்சிகிட்டிருக்காங்க. அவங்களுக்கு அந்தப் பணத்தை நான் கொடுத்திடறேன்’ என்றவர் மீண்டும் போய் கடைசி இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
பலர் காந்தியையும் அவரது கருத்துகளையும் போட்டு துவைத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர் பலருக்கு இன்னும் ஒளிவிளக்காக, வழிகாட்டியாக, ஆதர்சமாகத் திகழ்ந்துகொண்டு இருக்கிறார். பேச்சை விட, செயல் எப்போதுமே உசத்திதான். செயலில் உசத்தி சேவை.
கூட்டம் முடிந்ததும், எல்லோருக்கும் உணவு பரிமாறப்படும் இடத்துக்கு தன் மனைவியோடும் மகள்களோடும் அவர் விரைவாக நடந்து செல்வதை நான் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். ரங்கநாதன் அருகே செல்ல எனக்குக் கூச்சமாக இருந்தது.
அறிமுகத்துக்கு நன்றி. தங்கள் வலைப்பதிவு மூலம் பல புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அருமையான கட்டுரை. அய்யா ரங்கநாதனை பற்றி படிக்கையில் மனதிற்கு ஒரு புதுவிதமான ஆறுதலும், நம்பிக்கையும் ஏற்படுகிறது.
அய்யா பொள்ளாச்சி நா மகாலிங்கத்திற்கும் பாராட்டுகள் பல….
மயிலாடுதுறை சிவா…
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! கேள்விப்பட்ட பெயர், பல ஆண்டுகளுக்கு முன்பு ஓரிருமுறை பொள்ளாச்சியில் இவரைப் பார்த்த நினைவு.
எத்தகைய போராட்டங்களுக்கெல்லாம் சிறை தண்டனை பாருங்கள்!
Mr. Ranganathan is a great person. He is a true Gandhian.
His ashram
“Gandhi Ashram, Anamalai, Pollachi (TK).”.