கொச்சைப்படுத்தும் பேட்டிகள்

தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழ், ‘தினமணி கதிர்’. 27.09.09 தேதியிட்ட இதழில் மூத்த கவிஞர் கலாப்ரியாவின் ஒரு பக்க பேட்டி வெளிவந்திருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகள் இவை:

1. உங்களைப் பற்றி?
2. உங்கள் இயற்பெயரே கலாப்ரியா தானா?
3. கவிதை ஆர்வம் வந்தது எப்படி?
4. உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யார்?
5. மரபுக் கவிதைகளை விட்டு நவீன கவிதைகளைத் தேர்வு செய்தது ஏன்?
6. வெளிநாட்டுப் பயணம்?
7. கவிதைகள் சார்ந்த உங்களின் வேறு பணிகள்?
8. வாங்க விரும்பும் விருது?
9. திரைப்படப் பாடல் எழுதுவீர்களா?

இப்பேட்டிக்கு எழுதப்பட்டுள்ள அறிமுக பத்திகளில் இது ஒன்று: ‘கவிதைகளில் மரபுக் கவிதை, நவீன கவிதை என்ற இருவேறு வடிவங்கள் இருந்தபோதும் நவீன கவிதையை தனது வசமாக்கி அந்த கவிதைக்காகவே கலைமாமணி விருதும் பெற்றுள்ளார் கலாப்ரியா.’

இந்தப் பேட்டியை இங்கே நான் பிரித்து ஆராயப் போவதில்லை. அப்படிச் செய்தால், இன்னும் நிறைய செய்திகளை எடுத்துச் சொல்ல முடியும். என் ஆதங்கம், தினமணி போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் நிறைந்த இதழிலேயே இப்படிப்பட்ட பேட்டி வந்திருப்பதுதான். அவர்களுக்குக் கலாப்ரியாவைத் தெரியாதா? தமிழில் அவர் எத்தனை ஆண்டுகளாக எழுதுகிறார், நவீன கவிதைக்கு அவருடைய பங்களிப்பு என்ன என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாதா?

அப்படி இருந்தும், அவருடன் இப்படி ஒரு ருடிமெண்டரியான பேட்டியை எடுத்துப் போடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது? கலைமாமணி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அவருடைய பங்களிப்பு நவீன கவிதையில் என்றுமே நின்று நிலைப்பது. அப்படி இருக்கும்போது, இந்தப் பேட்டி, அவருக்கு என்ன புகழைச் சேர்க்கிறது?

இலக்கியவாதிகள் பேட்டியின் வேலை என்ன? தெரியாத விவரங்களை, அனுபவங்களை, முயற்சிகளை, வாசிப்புகளை, நோக்குநிலைகளை அவரிடமிருந்து வெளிக்கொண்டு வருவதுதானே? அவருடைய சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக அல்லவா கேள்விகள் இருக்கவேண்டும்? அல்லது அவர் செய்யத் தவறின விஷயங்களைப் பற்றிய விமர்சனமாக கேள்விகள் அமையலாம். அரசியல் பேட்டிகளின் தன்மை வேறு. அது வேறு விஷயங்களை வெளியே கொண்டு வரவேண்டும்.

அந்தப் பேட்டியைப் படித்து முடிக்கும்போது, ஒரு இலக்கியவாதியின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் வாசகன் பெற்றிருக்கவேண்டும். அவனுடைய வாசிப்பு விரிவின் திசைகளைப் புரிந்துகொண்டு இருக்க வேண்டும். அதுதான் படிக்கும் வாசகனுக்குக் கிடைக்கும் பலன்.

வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்ற பெயரில், ஒரு சாதனையாளரின் 30 ஆண்டுக்கால, 40 ஆண்டுக்கால பங்களிப்பை, கூனிக் குறுகி நிற்க வைத்துவிடுகிறார்கள். பல பேட்டிகளில் இதே பிரச்னையைப் பார்க்கிறேன். இதற்குப் பின்னால் இருக்கும், ‘என்னால்தான் நீ வெளியுலகுக்கே தெரிய வருகிறாய்’ என்ற தொனி மிகவும் அபாயகரமானது. அருவருப்பானது.

மூத்த எழுத்தாளர்களிடம், கவிஞர்களிடம் பேட்டி எடுக்கும்போது, ஆரம்பிக்கும்போதே, உயரமான தளத்தில் தொடங்கவேண்டும். ஆரம்பப் பத்திகளில், அவருடைய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு, பேட்டிக்கான கேள்விகள் அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். அப்போதுதான், பேட்டிக்கும் கெளரவம், அதைக் கொடுக்கும் படைப்பாளிக்கும் கெளரவம், வெளியிடும் இதழுக்கும் கெளரவம்.

பேட்டிகளில் எரிச்சல் தரக்கூடிய ஒரு கேள்வி, எழுத்தாளன் என்றால், எப்போது சினிமாவுக்கு வசனம் எழுதுவீர்கள் என்ற கேள்வி. கவிஞர் என்றால், சினிமாவுக்குப் பாட்டெழுதுவீர்களா என்ற கேள்வி. சினிமாதானா ஒரு இலக்கியவாதியின் அல்டிமேட் கோல்? ஏன் வாழ்க்கையில் அவன் வேறு எதுவுமே சாதிக்க மாட்டானா? என்ன சோகை பிடித்த சிந்தனை இது? ஒரு சினிமா நடிகனிடம் போய், நீங்கள் எப்போது ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ மாதிரி ஒரு நாவல் எழுதுவீர்கள் என்று கேட்பார்களா? எப்படி அது ஒரு அபத்தமான கேள்வியோ, அதேபோன்றதுதான், எழுத்தாளன் முன் வீசப்படும் சினிமா கேள்வியும்.

பேட்டி எடுக்கப் போகும்முன்பு, ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் ஒன்றிரண்டு புத்தகங்களையேனும் படித்திருக்கவேண்டும். இன்றைய அவசரமான பத்திரிகை உலகில், படித்துவிட்டு போவதோ, விவரங்களைத் திரட்டிக்கொண்டு போவதென்பதோ சாத்தியமே இல்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இது எவ்வளவு உண்மையோ, தெரியவில்லை. ஆனால், நிலைமை இதுதான்.

இதுபோன்ற சூழ்நிலைகளிலும் பேட்டியின் தரத்தை நிமிர்த்திக் காண்பிப்பவர் அசோகமித்திரன். எப்படிப்பட்ட கேள்விகளுக்கும், எழுத்துப்பூர்வமான பதில்களால், பேட்டிக்கு உயர் அந்தஸ்தைத் தந்துவிடுபவர் அவர். பல பேட்டிகள் கொடுத்த அனுபவம் அவருக்கு.

இல்லையெனில், பேட்டிகள், எழுத்தாளர்களை மேன்மைப்படுத்துவதைவிட, கொச்சைப்படுத்திவிடும் சாத்தியங்களே அதிகம்.

  1. நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இன்றைய காலகட்டத்தில் நேர்காணல்கள் எல்லாம் வெறும் சம்பிரதாயமாகப் போய் விட்டது. வெறுமனே ஓரிரு பக்கங்களில் தகவல்களை நிரப்பித் தள்ளி விடுவதையே பல பத்திரிகைகள் தங்கள் கடமையாக வைத்திருக்கின்றன. அதிலும் பரபரப்பான செய்திகளை வெளியிடுவதில் மட்டுமே அவை அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றன. அது போல பேட்டிக் காணச் செல்பர்களில் பலரும் முன் தயாரிப்புடன் செல்வது என்பதை விட பத்திரிகையுலக அவசரத்திற்குத் தேவையான செய்திகளைத் தர வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

    அதேசமயம் நல்ல பல நேர்காணல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் சில இதழ்கள் வெளிவருகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். அவை பற்றியும் நீங்கள் குறிப்பிட வேண்டியது அவசியம்.

  2. kanummc says:

    your poet would have been abstained from this interview . he himself did not bothered and gave interview

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply