மீள முடியுமா?
விடிகாலை எழுந்தவுடன் எது இருக்கிறதோ இல்லையோ, எனக்கு இணைய இணைப்பு வேண்டும். மடிக்கணினி முன் அமர்ந்து ஒரு மணிநேரம் முக்கியமான செய்தி மற்றும் பொருளாதார இணையதளங்களை எல்லாம் படிக்க வேண்டும். பின்னர், வந்திருக்கும் மின்னஞ்சல்களை பார்த்து, பதில் போடவேண்டியவற்றுக்கு பதில் போட்டு, நாற்காலியில் இருந்து எழுந்திருக்க ஐந்தரை ஆறு மணி ஆகும். அதற்குப் பின்னர்தான் காலை நடைப் பயிற்சியே.
இணைய இணைப்பு இல்லையென்றால், மடிக்கணினி பக்கமே நான் செல்வதில்லை. கடந்த பதினைந்து நாள்களாக, என் நிலைமை இப்படித்தான் ஆகிக்கொண்டு இருக்கிறது.
ஒரு நாள் எங்கள் வீட்டுத் தொலைபேசி செயலிழந்து போனது. பி.எஸ்.என்.எல். காரர்களிடம் புகார் தெரிவிக்க வந்து ரிப்பேர் செய்தார்கள். போன் வேலை செய்யத் தொடங்கியது. பிராட்பேண்ட் இணைய இணைப்புக்குக் கேடு ஏற்பட்டுவிட்டது. தொலைபேசி அழைப்பு வந்தால், இங்கே இணைய இணைப்பு சரியத் தொடங்கிவிடும்.
அல்லது இணைய இணைப்பே கிடைக்காது. இங்கேதான் விசித்திரம் விளையாடும். காலையில் எழுந்தவுடன், இன்று இன்னின்ன விஷயங்களை எல்லாம் பார்க்கவேண்டும் என்ற ஆவலோடு மடிக்கணினி முன் அமர்வேன். மோடம்மை ஆன் செய்வேன். உடனே, பச்சைக் கண்கள் ஒவ்வொன்றாக விழித்துக்கொள்ளத் தொடங்கும். ஒயர்லெஸ், ஏடிஎஸ்எல், ஸ்டேட்டஸ் கண்களும் நின்று நிதானமாக ஒளிரத் தொடங்கும். ஆனால், மடிக்கணினியில் இணைய இணைப்பு வந்திருக்காது.
இங்கிருந்து டென்ஷன் ஆரம்பிக்கும். உடனே எல்லா ஒயர்களையும் மீண்டும் ஒருமுறை அழுத்தி வைப்பேன். மூன்று நான்கு முறை மோடத்தை ஆஃப் செய்து மீண்டு ஆன் செய்வேன். கணினியையும் இரண்டு மூன்று முறை ரீஸ்டார்ட் செய்வேன். ஆனால், கணினியில் மட்டும் இணைப்பு கிடைக்கவே கிடைக்காது.
அவ்வளவுதான், போதை ஜல்லென வடிந்துவிடும். அதற்குள் காலை விடிந்துவிடும். இனிமேல் கணினி முன் உட்காருவது சாத்தியமே இல்லை. எரிச்சல் பீடிக்க எழுந்துகொள்ள வேண்டியதுதான்.
அடுத்த படையெடுப்பு, திருவல்லிக்கேணி டெலிபோன் இணைப்பகத்துக்கு. அல்லது தொலைபேசியில் புகார் பதிவு. இரண்டு மூன்று மணி நேரத்துக்கெல்லாம் ஒரு லைன்மேன் போன் செய்வார். அவருக்குக் கொஞ்சம் விரிவாகப் புரிய வைக்கவேண்டும். ‘போன் லைனில் பிரச்னை இல்லை சார். பிராட்பேண்டில்தான் பிரச்னை. கனெக்ஷன் வரவே மாட்டேங்குது’ என்றவுடன், ‘பிராட்பேண்டா சார்.. அது எங்களுக்குத் தெரியாது சார். நான் ஒரு நம்பர் தரேன். ஜேஇ, இஇ கிட்ட பேசுங்க.’
அடுத்தது இ இ. விவரங்கள் கேட்டபின், ‘நீங்க எப்போ ஆபீஸ்லேருந்து வருவீங்க சார்?’
‘சாயங்காலம் ஆகும். நீங்க வரீங்கன்னா, நான் சீக்கிரம் வரேன்.’
‘அதுதான் சார் பிரச்னை. இங்க ஆள் இல்லை. இது ரொம்ப ஈஸி சார். நீங்க வீட்டுக்கு வந்துட்டு மெஷின் முன்னால் உட்கார்ந்துட்டு என்னைக் கூப்பிடுங்க சார். நான் போன்லேயே வழி சொல்றேன்.’
ஒரு நாள் அதையும் செய்து பார்த்தேன். அவர் சொன்ன வழிமுறைகளை எல்லாம் பின்பற்றி செய்து பார்த்தாயிற்று.
‘எல்லாம் சரியா இருக்கே சார். ஏன் கனெக்ஷன் வரல?’
‘அதைத்தான் நானும் கேக்கறேன் சார்.’
‘திருப்பியும் கூப்பிடறேன் சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.’ இது நடந்து பத்து நாள்களாகி இருக்கும். இன்னும் அவர் கூப்பிடப் போகிறார்.
நான் படும் அவஸ்தையைப் பார்த்து, என் மனைவி களமிறங்கினார். கணினியையும் மோடத்தையும் அவர் ஆன் செய்ய சட்டென இணைய இணைப்பு கிடைத்தது. பெருமிதத்தோடு, காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார். அப்போதுதான் இன்னொரு விஷயம் புரிந்தது, இணைப்பு முழுவதும் துண்டாகவில்லை. அது எங்கேயோ மக்கர் செய்கிறது.
இப்போது பிரச்னை, அது எப்போது மக்கர் செய்யும் என்று தெரியாததுதான். ஏதாவது அவசரமாக தேட வேண்டும், டவுன்லோட் செய்யவேண்டும், மின்னஞ்சல் பார்க்கவேண்டும் என்றால், அன்று இணைப்பே கிடைக்காது. நீங்கள் தலைகீழாக நின்றாலும், மோடம் சிவனே என்று பார்த்துக்கொண்டு இருக்கும். பிரும்ம நிலை.
பிரும்ம முகூர்த்தத்தின் போது, பிரும்ம நிலை ஏற்பட்டால்தான் எரிச்சல் உச்சகட்டத்தை அடையும். ஏதும் பேசாமல், காலை நடைபயிற்சிக்குப் போய்விடுவேன். கடற்கரையில் காலாற நடக்கும்போதுதான், எவ்வளவுதூரம் இதுபோன்ற நவீன வசதிகளுக்கு நான் அடிமைப்பட்டுப் போயிருக்கிறேன் என்பது புரியும்.
இணையமோ கணினியோ இல்லாமல் வாழ்ந்ததில்லையா? அல்லது உலக செய்திகளையும் பொருளாதாரத்தையும் படிக்காமல் இருந்தபோது, நான் ஒன்றும் குறைந்துபோய்விடவில்லையே? மின்னஞ்சல்கள் இல்லாமலும் வாழ்ந்திருக்கிறோமே?
வசதிகள், அடிமைத்தனத்தை வளர்த்துவிட்டன என்பது ஒரு புறம். இணையத்தில் எல்லா தகவல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன என்று, அள்ளிப் போட்டுக்கொள்ளும் அவசரம் மறுபுறம். மற்றவர்களை விட கூடுதல் விவரங்களை, செய்திகளைத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையின் பரபரப்பு இன்னொரு புறம். விளைவு, இன்று என்னால் கையால் எதையும் எழுத முடியாத நிலை. எங்கே போனாலும் எழுதுவதற்கு கணினியோ, மடிக்கணினியோ வேண்டும். படிக்க இணைய இணைப்பு வேண்டும்.
யோசித்துப் பார்த்தால், அடிமைத்தனம் வெட்கமாக இருக்கிறது. தெரியவில்லை. இதிலிருந்து மீளவேண்டுமா அல்லது இப்படித்தான் வாழவேண்டுமா? மேலும் இந்த வலையில் இருந்து மீளத்தான் முடியுமா? அதுவும் தெரியவில்லை.
இதில் என்ன அடிமைத்தனம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. நாம் விஞ்ஞான வளர்ச்சியை நமக்குச் சாதகமானவற்றிக்கு மட்டும் தானே பயன்படுத்துகிறோம். அதனால் அது அடிமைத் தனம் ஆகாது. ஆனால் அது இல்லாமல் எதுவுமே செய்ய முடியவில்லை என்று ஆகும் போது உண்மையில் எரிச்சல், கோபம், வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான். அந்த அளவிற்கு நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை விட, நம் அன்றாட வாழ்வில் அது அந்த அளவிற்கு இரண்டறப் பிணைந்து விட்டது என்பது தான் உண்மையாகிறது.
// இன்று என்னால் கையால் எதையும் எழுத முடியாத நிலை. எங்கே போனாலும் எழுதுவதற்கு கணினியோ, மடிக்கணினியோ வேண்டும். படிக்க இணைய இணைப்பு வேண்டும்//
இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் பெரும்பாலான நிலை அதுதான். ஆனால் படிக்க இணைய இணைப்பு வேண்டும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. பல தகவல்களின் இணைப்பிற்கு, சந்தேக நிவாரணங்களுக்கு, உடனடி நிகழ்வுகளுக்கு இணையத்தைப் போல ’வரப்ரசாதி’ யாருமில்லைதான். ஆனால் படிப்பு, விவரம் திரட்டுதல் போன்றவற்றை புத்தகங்கள், நூல்கள், நாளிதழ்கள் மூலமாகவும் செய்ய முடியும். அதனால் தாமதமாகலாம். ஆனால் தகவல் உத்திரவாதம் உண்டு. இணையத்தில் வெளியாகும் பல செய்திகளின் உண்மைத் தன்மைக்கு யார் பொறுப்பு என்பது கேள்விக்குரியது.
எனக்கென்னவோ பிரச்சனை உங்கள் இணைய இணைப்பில் இல்லை. லேப்-டாப்பில் தான் என்று தோன்றுகிறது. தேவையில்லாத செயலிகள் ஏதேனும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருந்தால் சமயங்களில் இவ்வாறு இணைய இணைப்பு துண்டாகி விடும். டாஸ்க் மேனேஜர்-ஸ்டார்ட்-அப் மெனுவைப் பார்த்து, அது எது என்பதைக் கண்டறிந்து சரி செய்து விடலாம்.
எனக்கும் கூட சில நாட்கள் முன்பு இப்பிரச்சனை இருந்தது. நான் இதே முறையைக் கையாண்டு, தேவையற்று இயங்கிக் கொண்டிருக்கும் செயலிகளை நீக்கியதில் இப்போது பிரச்சனை சரியாகி விட்டது.
எனக்கு நீங்கள் சொல்வதில் ஒரளவு உடன்பாடு உண்டு. நம்மை அறிந்தோ அல்லது அறியமலோ நாம் இவற்றிக்கு அடிமை ஆகிவிட்டோம். என்னதான் அறிவியல் வளர்ச்சி என்று நாம் சொன்னாலும் இவற்றில் சிக்கி கொண்டு விட்டோம்.
இந்த வலையில் இருந்து மீள் இதன் நேரத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்றுதான் எனக்கு தோணுகிறது.
வாழ்க்கையை நாம் வெளியில் தேட வேண்டும். நீங்கள் சொன்னது போல கடற்கரையில் நடப்பது, நிறைய நண்பர்களை பார்ப்பது, பேசுவது, நம் உறவினர்களுடன் நிறைய நேரம் ஒதுக்குவது இப்படி….
உங்கள் இந்த பதிவில் யாதர்த்தமான உண்மை இருக்கிறது….
மயிலாடுதுறை சிவா…