அகக்குரலைக் கேட்க பயந்து…

காலை நேரங்களில், எந்தத் தொலைக்காட்சி சானலைத் திறந்தாலும் ஒரு இந்து, கிருத்துவ அல்லது இஸ்லாமிய வழிகாட்டி பேசிக்கொண்டு இருப்பார். அவர் பேச்சின் சாராம்சம் ஒன்றே ஒன்றுதான். அமைதி பெறுதல். மெளனத்தை நோக்கித் திரும்புதல். அதற்கு யோகம், தியானம் என்று விளக்குவார்.

இன்றைக்கு அமைதி அபூர்வ அம்சமாக இருக்கிறது. திடீரென்று வீட்டில் மின்சாரம் தடைபடும்போதுதான், மேகமென அமைதி கவியத் தொடங்கும். டிவிகள் ஓடாது, தண்ணீர் மோட்டர் சத்தம் இல்லை, வரவழைக்கப்பட்ட உற்சாகத்தோடு பேசும் எஃப்.எம். வானொலிகள் இல்லை. காற்று அறைக்குள் புகுந்து புறப்படும் மெல்லிய ஓசை கேட்கும். காக்கை கரையும், புறாக்கள் அகவும் ஒலி எட்டிப் பார்க்கும். நகரத்துக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் சின்ன கிராமம் மெல்லத் தலைதூக்கும். தாம் ஜீவித்திருக்கிறோம் என்பதே பலருக்கு அப்போதுதான் தெரியத் தொடங்கும்.

எங்கே போனாலும் சப்தம்தான். சமீபத்தில் ஒரு நாள் என் தோழி ஒருத்தியின் திருமண விருந்து. முன் இரவு தாண்டி தொடங்கிய பார்ட்டி. ராக் பேண்ட் ஒன்றின் பேரிரைச்சல் கும்மாளம். எவர் பேச்சும் எவர் காதிலும் விழவில்லை. விழவேண்டும் என்று யாரும் நினைக்கவும் இல்லை. இரண்டு மணிநேரங்களுக்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை.

திருமண வீடு என்றில்லை. இந்த நிலை எங்கும் பரவியிருக்கிறது. கல்லூரி பெண்களும் ஆண்களும் காதுகளை எஃப்.எம். வானொலிகளுக்கும் மியூசிக் பிளேயர்களுக்கும் இரவல் கொடுத்துவிட்டார்கள். வயதானவர்களோ, காலை தொடங்கி இரவு வரை, தொலைக்காட்சியின் சப்தத்துக்கு ஆட்பட்டு கிடக்கிறார்கள்.

திரைப்படம் போனால், அங்கும் இரைச்சல். இந்த இரைச்சல், ஒலி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. காட்சிகள், கருத்துகள், வலியுறுத்தல்கள் எல்லாவற்றிலும் இரைச்சல் நிறைந்து கிடக்கிறது.

யாராவது எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் பேசும் பலரிடம் குரலில் கனிவு இல்லை. சப்தமாகப் பேசிப் பேசி முரட்டுத்தனம் படிந்துவிட்டது. எல்லாவற்றிலும் ஒருவித மிகை. உணர்வுகளில், எதிர்வினைகளில், நடத்தைகளில் எல்லாம் உபரித் தன்மை.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஒன்று புரியும். இவர்கள் யாரும் தம் அகக்குரலைக் கேட்க தயாராக இல்லை. அமைதி என்பது, உள்ளே இருக்கும் குரலைக் கேட்பதற்கான இனிய நேரம். பிரச்னை, அகக் குரல் பலருக்கு பயமுறுத்துவதாக இருக்கிறது. அது யதார்த்தத்தின் குரல். அது உண்மை பேசும் குரல். பூச்சுகள் படியாத குரல். பிம்பங்கள் களைந்த குரல்.

தாம் நம்ப விரும்பும், காண்பிக்க விரும்பும் தோற்றங்களின் நேர் எதிராக இருக்கிறது, அகக் குரல். அது பூமியில் கால் பாவி, சந்தேகங்களையும் கசப்பு அனுபவங்களையும் ஒன்று திரட்டியதாக இருக்கிறது. சதா ஒலித்துக்கொண்டு இருக்கும் இந்தக் குரலின் இம்சையில் இருந்து தப்பிக்க தம் காதுகளையும் மூளையையும் பலர் கழட்டிக்கொடுத்துவிடத் தயாராக இருக்கிறார்கள்.

பல தர்மசங்கடமான கேள்விகளை அகக்குரல் கேட்கிறது. தான் நினைத்ததை அகக்குரல் வழிமொழிய மாட்டேன் என்கிறது. உன் முடிவைப் போல் உண்டா என்று மெச்ச மாட்டேன் என்கிறது. அது முதல் விமர்சகனாக, முதல் எதிரியாகவே இருக்கிறது. ஈவு இரக்கமற்ற விமர்சனம்.

ஒரு பக்கம் அந்தக் குரலின் வெளிச்சத்தில் பயணம் மேற்கொள்ள விருப்பம் இருக்கிறது. ஆனால், அது சமூகம் காட்டும் வழியைப் போலல்லாமல் முற்றிலும் வேறு பாதையாக இருக்கிறது. அந்தப் பாதை வெற்றியைத் தருமா, குறிப்பாக பொருளாதார வெற்றியை உறுதிப்படுத்துமா என்ற கேள்வி சதா குடைந்துகொண்டே இருக்கும். தனக்கும் அகக்குரலுக்குமான விவாதங்கள் எப்போதும் உச்சகட்டத்திலேயே இருக்கும்.

ஒவ்வொரு முறையும் அகக்குரலை அடக்கிவிட்டுத் தன் விருப்பம் போல் முடிவுகள் எடுக்க விரும்புகிறோம். விளைவு, அகக்குரல் இன்னும் மூர்க்கமாகக் கேள்விகள் எழுப்பும். நீங்கள் விலக்க விலக்க மேன்மேலும் வந்து ஒட்டிக்கொள்ளும் பிசினைப் போன்றது அது. மனிதன் மனதுக்குள் துண்டாகிச் சிதறிப்போவது இப்படித்தான்.

அகக்குரலை அடக்குவதற்கான முயற்சியில்தான் நாம் பேரிரைச்சல்களோடு சம்பந்தம் கொள்ளத் தொடங்குகிறோம். அது சினிமா, தொலைக்காட்சி, பேச்சு என்று ஒவ்வொரு வடிவத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வடிவத்திலும் நாம் எதிர்பார்ப்பது முழுமையான விடுதலையை. அதாவது, அகக்குரலிலிருந்து விடுதலையை.

ஒரு காலத்தில் ஜெயகாந்தன் எழுத்துக்கள் உரக்க ஒலித்த போது, அதை ரசித்தவர்கள் நாம். உணர்ச்சிப் பிழம்பாக நமது திரைப்படங்கள் கண்ணீர் மல்க நின்ற போது, அதை ரசித்தோம். இன்று தொலைக்காட்சிகள் அந்த வேலையைச் செய்கின்றன. இளைஞர்களுக்கு பிடித்த சப்தத்தை இன்றைய திரைப்படங்கள் வழங்குகின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் போதைப் பொருள் மேன்மேலும் அதிகரித்துக்கொண்டே போவதைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.

போதை எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் அகக்குரலின் வலியுறுத்தல் நிற்பதே இல்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான், அமைதியை நோக்கித் திரும்புதல் என்ற அம்சம் தேவைப்படுகிறது. வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில், தருணத்தில், அமைதியை நோக்கித் திரும்ப வேண்டிய அவசியத்தை உணர ஆரம்பிக்கிறோம். இங்கேதான் பக்தி என்பதும் இறைவன் என்பதும் திடீரென முக்கியமாகத் தோன்ற ஆரம்பிக்கிறது.

இன்றைக்கு வெளியுலகில் பிரபலமாகியிருக்கும் பல ஆன்மிகப் பெரியவர்களும் சாமியார்களும் இந்த நவீனத் தேவையை நிறைவு செய்கிறார்கள். அமைதியைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அமைதியை அடையப் பயிற்சி அளிக்கிறார்கள். உள்ளுக்குள் திரும்பிப் பார்க்கச் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

வெளிப்புறமாக மட்டுமே பார்த்துவந்த நம் பார்வை, நமக்குள்ளே திரும்பு வேண்டியதின் தேவை அப்போது புரிபடுகிறது. இதுநாள் வரை எதிரியாக, விமர்சகனாக மட்டுமே பார்த்து வந்த அகக்குரலை எப்படி நட்புடன், ஆதரவுடன், அன்புடன் பார்க்க வேண்டும், அணுக வேண்டும் என்பது தெரியத் தொடங்குகிறது. அகக்குரல் நமக்கு வழிகாட்ட உருவானதே அன்றி, நம்மை இம்சைப்படுத்த உருவானதல்ல என்பதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் காலம் தேவைப்படும்.

வேறு எவரையும் விட, மிகவும் தீர்மானமான கருத்துகளை அழுத்தந்திருத்தமாகச் சொல்வது அகக்குரல். அதில் பிசிர் இல்லை. குழப்பம் இல்லை. உங்களுக்கான மிக நம்பிக்கையான confidant அது.

அகக்குரலும் நீங்களும் ஒன்றாகச் சேரும் புள்ளியில்தான் அமைதி குடிகொண்டு இருக்கிறது. இந்த இடத்துக்கு வந்து சேருவதில்தான் காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொருவருடைய அகங்காரத்துக்கும் ஏற்ப கால அவகாசம் மாறுபடும். இங்கே வந்து சேர்ந்தபின், சட்டென எல்லாம் தெளிவாகத் தொடங்கும். அன்றலர்ந்த மலரென வாழ்வே விரியத் தொடங்கிவிடும்.

அதுவரை, அகக்குரலைக் கேட்ப பயந்து ஓடும் ஓட்டம் நிற்கப் போவதே இல்லை.

  1. //யாராவது எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நான் பேசும் பலரிடம் குரலில் கனிவு இல்லை. சப்தமாகப் பேசிப் பேசி முரட்டுத்தனம் படிந்துவிட்டது. எல்லாவற்றிலும் ஒருவித மிகை. உணர்வுகளில், எதிர்வினைகளில், நடத்தைகளில் எல்லாம் உபரித் தன்மை.//

    உண்மை. இதற்குக் காரணம் பலரும் இதைத் தான் யதார்த்தம் என்று நினைத்துக் கொண்டிருப்பதுதான். இன்றைய வாழ்க்கை அமைப்பு பலவிதங்களில் சீர்கெட்டு இருப்பதற்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை நாம் உதாசீனம் செய்ததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். மேலும் நாம் எதையுமே மிகைப்படுத்தி எழுத, பேச, சிந்திக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். அதற்கு ஏதோ ஒரு விதத்தில் இன்றைய அரசியலும், சமூகச் சூழலும் காரணமாகிறது. ஆனால் கிராமங்கள் பரவாயில்லை. தொலைக்காட்சி சப்தம் அவ்வப்போது காதில் வந்து மோதினாலும் அதனூடே ஆடுகளின் ’மே.. மே’வும், கோழிகளின் ’கொக்… கொக்..’கும் கலந்து அவ்வப்போது அமைதியையும், ஆனந்தத்தையும் ஞாபகப்படுத்தி விட்டுச் செல்கின்றன.

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply