தூக்கம் இழந்தவர்கள்…
தி லாண்ட்மார்க் போரம் என்ற மூன்று நாள் பயிற்சி முகாம் பெங்களூருவில் நடக்கும். லாண்ட்மார்க் எடுகேஷன் நிறுவனம் நடத்தும் வாழ்க்கைப் பாடங்கள் நிறைந்த முகாம் இது. மிக எளிமையான பயிற்சிகள். முகாம் பற்றி எழுதுவதில் அர்த்தமில்லை. நேரடியாக பங்குகொள்வது பயன் அளிக்கும்.
அதில் முதல் நாள் ஒரு மாயையை உடைப்பார்கள். பொதுமக்கள் மத்தியில் எட்டு மணி நேரம் தூக்கம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுவது எவ்வளவு பெரிய பொய் என்று நிரூபிப்பார்கள். முகாம் நடந்துகொண்டே இருக்கும். இரவு மணி 12, 1, 2 வரை போய்கொண்டே இருக்கும். வீட்டுக்கு அனுப்ப மாட்டார்களா என்று இருக்கும்.
அப்போதுதான் மாயையை உடைப்பார் அதை வழிநடத்தும் ஆசிரியர். எல்லோரையும் கண்களை மூடச் சொல்லி, மெள்ள மெள்ள உடலை ரிலாக்ஸ் செய்ய, மிதமான வார்த்தைகளைச் சொல்லுவார். ஒரு கட்டத்தில் நினைவு நழுவி, உடல் தளர்ந்து, தூக்கம் முழுமையாகப் பற்றிக்கொள்ளும். ஐந்து நிமிடங்களோ, பத்து நிமிடங்களோதான். உடனே விழிப்பு ஏற்பட, மனம் புத்துணர்ச்சியோடு இருக்கும். மூளை விழிப்புடன் இருக்கும். எவ்வளவு நேரம் என்பதில்லை, எவ்வளவு ஆழ்ந்து தூங்குகிறோம் என்பதே முக்கியம் என்பதை அனுபவபூர்வமாக தெளிவிப்பார்கள்.
விவேகானந்தா கேந்திராவில் சொல்லிக்கொடுக்கப்படும் யோகாசன வகுப்புகளில், இறுதியில் ஷவாசன் என்றொரு ஆசனத்தைச் சொல்லித் தருவார்கள். உடலைத் தளரச் செய்வதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தருவதும் ஷவாசனின் குறிக்கோள், தூங்கிவிடாதீர்கள் என்பார்கள். ஆனால், பலருக்குத் தூக்கம் சுழட்டிக்கொண்டு வரும். எழுந்திருக்கும்போது, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
நான் முடிவெட்டிக்கொள்ளும் ஆண்கள் பார்லரில், முகத்துக்கு ப்ளீச்சிங், இன்னபிற அழகு பேஷியல் சேவைகளையும் செய்வார்கள். முகத்தில் கை வைத்து பேஷியல் செய்யத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே பலர் உறக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். தலை ஒருபக்கம் சாய்ந்துவிடும், குறட்டைச் சத்தம் பார்லரையே தூக்கும்.
உறக்கமும் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. நீண்ட நேரம் தூங்கவேண்டாம், நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைத்தால் போதும் என்று சொல்பவர்கள், தொடர்ந்து அசதியையும் சோர்வையும் சேமிக்கிறார்கள். இன்னொரு பக்கம், பலருக்கு ஆழ்ந்த தூக்கமே கிடைப்பதில்லை. எப்போதும் கண்களில் தூக்கம் மிச்சமிருக்கும். ஒரு மாதிரி போதை மனநிலையிலேயே இருப்பார்கள். அதுவும் காலை வேளைகளில், இளைஞர்களையும் இளம்பெண்களையும் ஏற்றி வரும் வாகனங்கள் இப்போது அதிகரித்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் பல்வேறு பிபிஓக்களில் இரவு நேரப் பணியை செய்தவர்கள். வண்டியில் வரும்போதே தூக்கம் அப்பிக்கொண்டு இருக்கும்.
பலர் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிரே இருப்பவர் கண் அயர்வதைப் பார்க்க முடியும். இசைக் கச்சேரிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளில் இதுபோல் தம்மை மறந்து உறங்குபவர்கள் அதிகம். மீண்டும் எழுந்தவுடன் ஒருவித கூச்சம் தலைகாட்டும்.
நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்னை இருக்கிறது. என்னோடு பணியாற்றிய நண்பர் ஒருவருடன் வெளியூர் பயணங்கள் அல்லது ஏதேனும் அலுவலக சந்திப்புகளில் ஒரே அறையில் தங்க நேரிடும். மனிதர் தூங்கவே மாட்டார். பதினொன்று பனிரெண்டு வரை மது. அப்புறம் விடிய விடிய புகை. டிவியைப் போட்டுவிட்டு விளையாட்டுப் போட்டி ஏதேனும் ஒன்றை ரசித்துக்கொண்டு இருப்பார். விடிகாலை நான் எழுந்திருக்கும் சமயம், லேசாக அவர் கண்ணயர்வார். இதற்கு நேர் எதிரானவர்களும் உண்டு. விடிகாலை என்பது இவர்களுக்கு பாதி ராத்திரி ஒன்று அல்லது இரண்டு மணி. எழுந்து உட்கார்ந்துகொண்டு, வீட்டில் உள்ளதையெல்லாம் குடைந்துகொண்டு இருப்பார்கள்.
கவலை நிறைய பேரைத் தூங்கவிடாமல் செய்கிறது. இரவின் தனிமை மிகவும் அகோரமாக இருக்கிறது. உள்ளே பீறிடும் துக்கமும் கவலையும் சோகமும் ஆதங்கங்களும் இவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது. ஒவ்வொரு இரவையும் இவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல், வலியுடன் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் பலியாவது, தூக்கம். தூக்கமின்மை, எரிச்சலை மேன்மேலும் அதிகப்படுத்துகிறது.
வாழ்க்கையின் மிகப் பெரிய வரம், தூக்கம். அதை இழந்து தவிப்பவர்களைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கும். நவீன வாழ்க்கை முறை, இவர்களின் மேல் கருணையே இல்லாமல் வலியையே திணித்துக்கொண்டு இருக்கிறது. தம் வலிக்கான நிவாரணங்களையே இவர்கள் தொடர்ந்து லாண்ட்மார்க் போரம்களிலும் கேந்திராவிலும் தேடி வருகிறார்கள். எவ்வளவு தூரம் கிடைத்ததோ தெரியவில்லை.
மேலும் முழுமையான நிவாரணம் கிடைத்துவிடுமா என்றும் தெரியவில்லை. வலியும் சோர்வும் தூக்கமின்மையும்தான் வாழ்க்கை போலும்!
//பலர் பேசிக்கொண்டே இருக்கும்போது, எதிரே இருப்பவர் கண் அயர்வதைப் பார்க்க முடியும். இசைக் கச்சேரிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகளில் இதுபோல் தம்மை மறந்து உறங்குபவர்கள் அதிகம்//
அரசியல் கூட்டங்களை விட்டு விட்டீர்களே அய்யா. மேடையிலேயே தூங்கி விடும் தலைவர்கள் வாழும் நாடல்லவா இது.
தலைப்பைப் பார்த்ததும் நன்கு தூங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் தருவீர்களோ என்று எதிர்பார்த்தேன். சரி விடுங்கள், வள்ளலாரே அதிகம் தூங்கக் கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார். அதை பின்பற்றி விட்டுப் போக வேண்டியது தான். ஆனால் பல ஆண்டுகளாக இரவில் மட்டுமல்ல பகலில் கூடத் தூங்கவே தூங்காத ஒரு தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் இங்கே இருக்கிறார் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அடுத்த முறை அவரைச் சந்திக்கும் போது டிப்ஸ் கேட்கலாம் என்றிருக்கிறேன்.
சிலருக்கு புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் பிச்சுக்கும். எனக்கு அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களில், யாராவது மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டால் தூக்கம் சொக்கும். குறிக்கோள் இல்லாமல், கடமைக்காக நடக்கும் கூட்டங்கள், எல்லோரும் பங்கு பெரும் வகையில் இல்லாத கூட்டங்கள் சுத்த போர். நீண்ட நாள் கஷ்டப்பட்டு பிறகு ஒரு வழி கண்டுபிடித்தேன். பேசுகிறவர் பேசுவதை எல்லாம் உபயோகமாக இருக்கிறதோ இல்லையோ குறிப்பெடுத்துக் கொண்டே இருப்பது – நிறுத்தாமல் எழுதிக் கொண்டே இருந்தால் மூளை விழிப்புடன் இருக்கும் – தூக்கம் வராது.