9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள்
ஜனவரி 21 – 24, 2010ல், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவையில் கூடப் போகிறது. தமிழக அரசே நடத்தப்போவதால், கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்கப் போவதில்லை. பல்வேறு துறைகளில், தலைப்புகளில் கூட்டங்கள், கட்டுரை வாசித்தல் எல்லாம் இருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற 8வது மாநாட்டுக்கு நான் போயிருக்கிறேன். அந்தக் கொண்டாட்டம் இன்னும் நினைவில் இருக்கிறது.
வழக்கம்போல், இந்த மாநாட்டைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. இதைச் செய்தால் நல்லது, அதைச் செய்தால் நல்லது என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள். என் அளவில், இந்த மாநாட்டை ஒட்டி, ஒரு சில விஷயங்கள் நடந்தால், மகிழ்ச்சியடைவேன்.
அவை:
1. தமிழக அரசு ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துருவை நிலையானதாக, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அறிவித்துவிடலாம். பல்வேறு அரசுத் துறை வலைத்தளங்களில் இன்னும் டாமும் டாபும் தான் கோலோச்சுகின்றன. எழுத்துருவை இறக்கிக்கொண்டு படிக்கவேண்டிய நிலை 2010லும் தொடர வேண்டுமா? (தமிழ் இணைய மாநாட்டில் பேசவேண்டியதை இங்கே ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்காதீர்கள். இறுதியில் செயல்படுத்தவேண்டியது தமிழக அரசுதான் என்பதால், இங்கே சொல்வதும் பொருத்தம். எப்படி இருந்தாலும் அறிவியல் தமிழ் என்று அமர்வு கண்டிப்பாக இந்த மாநாட்டில் வைப்பார்களே?)
2. ஆங்கிலத்தில் வேர்ட் வெப் (Word Web) என்றொரு அகராதி இருக்கிறது. உங்கள் கணினியில் இறக்கிக்கொண்டு, எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒருமுறை இறக்கிக்கொண்டுவிட்டால் போதும். அப்புறம் இணைய இணைப்பு வேண்டாம். மிகச் சின்ன நிரலி. இலவச எடிஷன். உலகில் உள்ள அத்தனை சொற்களுக்கும் அர்த்தம் சொல்லிவிடுமோ என்று நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பழனியப்பா பிரதர்ஸ் தயாரித்த பால்ஸ் மின் அகராதியை முன்னர், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது, தமிழ் சிடியில் மொத்தமாகப் பதிந்து கொடுத்தார்கள். வலைத்தளத்திலும் போட்டு வைத்திருந்தார்கள். இப்போது அது காணோம். ஒரு ஆங்கிலம் – தமிழ், தமிழ் – தமிழ் அகராதியை இப்படி இந்த மாநாட்டு நேரத்தில் சின்ன நிரலியாக்கி வெளியிட்டால், 9வது தமிழ் மாநாட்டை நான் மறக்கவே மாட்டேன்.
3. ஒரு ஸ்பெல்செக்கர், ஒரு சந்தி செக்கரும் கூடவே கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி. இணையத் தமிழ் கலைஞருக்கு மிகவும் கடமைப்பட்டதாக இருக்கும். இதெல்லாம் இப்போது வெளியில் சந்தையில் கிடைக்கிறதே என்று சொல்லாதீர்கள். இலவசமாகக் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி. குறைந்தபட்சம் ஒரு பேசிக் எடிஷனையாவது இலவசமாக இணையத்தில் கொடுக்கலாம்.
4. தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் வலையேற்றப்பட்டுள்ள பல்வேறு அகராதிகள், இலக்கியங்கள் ஆகியவற்றை யுனிகோட்டுக்கு மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் திறந்துவிட்டால் இன்னும் புண்ணியமாக இருக்கும்.
5. சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதியை, இன்றைய காலத்துக்கு ஏற்ற மொழியில் செம்மைப்படுத்தும் திட்டத்தை, இந்த மாநாட்டில் போது தொடங்கினால் பயனுடையதாக இருக்கும். இன்றைக்கும் அந்த அகராதிதான் மிகவும் எக்ஸாஸ்டிவ் வார்த்தைச் சுரங்கம் கொண்டதாக இருக்கிறது.
6. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வாழ்வியற் களஞ்சியம், அறிவியற் களஞ்சியம் ஆகிய தொகுதிகளை இணையத்தில் வெளியிட்டு தேடும் வசதியோடு வைத்தால், உதவிகரமாக இருக்கும்.
7. தமிழ் பதிப்பாளர்களுக்கான வாரியம் தொடங்கப்பட்டிருக்கிறது. 16 செப்.-09 அன்று நடைபெற்ற வாரியத்தின் முதல் கூட்டத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் 4,000 நூலகங்கள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இப்போது அரசு நூலகங்களுக்காக 1000 படிகள் மட்டுமே வாங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் அதை 2000 படிகள் என்று உயர்த்துவது சரி. அது முடியாவிட்டால், அரசு புத்தகங்களை வாங்க நிர்ணயித்திருக்கும் விலைகளையாவது உயர்த்த வேண்டும். காகித செலவு, அச்சுக் கூலி எல்லாம் உயர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே புத்தகங்களை வாங்குவது எப்படிச் சரி?
Really, these are the needs of the moment.
I have added it the link to the படித்தது / பிடித்தது series in my site:
http://www.writercsk.com/2009/09/69.html