தஞ்சாவூர்க்கவிராயர், சுந்தர்ஜி – தனி இதழ்கள்
புதிய இதழ்கள் எப்போதுமே மகிழ்ச்சி தருவன. அது பெரிய வெகுஜன இதழாகட்டும், சிறு பத்திரிகையாகட்டும், புது முயற்சிகள் எப்போதுமே உற்சாகமானவை. மாலனை ஆசிரியராகக் கொண்ட ‘புதிய தலைமுறை’ விஜயதசமி அன்று வெளியாகும் என்று நினைக்கிறேன். விகடனில் முன்னர் ஆசிரியராக இருந்த ராவ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு ‘சூரியக் கதிர்’ என்ற புதிய இதழ் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னுடைய நீண்ட நாள் நண்பர் பொன். வாசுதேவன், ‘அகநாழிகை’ என்ற இருமாத இதழை அக்டோபர் 2009ல் இருந்து கொண்டு வர இருக்கிறார்.
சென்ற வாரம் ‘சுந்தர்ஜி’ இதழ் எனக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன்னரே ‘தஞ்சாவூர்க்கவிராயர்’ இதழ்களும் வந்து சேர்ந்தன. இந்த இரண்டு இதழ்களும் விசேஷமானவை. இரண்டுமே தனி ஆசிரியர்களின் சொந்த இதழ்கள். இதில், அந்தந்த ஆசிரியர்களின் சொந்தப் படைப்புகள் மட்டுமே வெளிவரும். ‘நேசமுடன்’ மடல் இதழைத் தொடங்கியபோது, இதே கருத்தைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன். இப்போது அது இவ்விரு கவிஞர்களின் தனி இதழ்களாக உருவாகி இருக்கின்றன.
முதலில் தஞ்சாவூர்க்கவிராயர். மூன்று இதழ்கள் வந்துவிட்டன. பல ஆண்டுகளாக கவிதைகள் எழுதுபவரும் மொழிபெயர்ப்புகள் செய்பவருமான தஞ்சாவூர்க் கவிராயரான கோபாலகிருஷ்ணனின் தனி இதழ். சமீபத்தில் கல்கி இதழில் 13 வாரங்கள் கவிதைத் தொடர் ஒன்றை எழுதி முடித்தார். கணையாழியில் தொடர்ந்து இவரது கவிதைகளை நான் படித்திருக்கிறேன். இப்போது இந்த இதழில் (24 பக்கங்கள்) ஏராளமான கவிதைகள் கொட்டிக்கிடக்கின்றன. கடைசியில் குழந்தைகளுக்காக இவர் எழுதியுள்ள மழலைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடைசி இரண்டு பக்கங்களில் ராஜாஜியின் ஜெயில் டைரியை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.
சுந்தர்ஜி. தஞ்சை மண்ணில் இருந்து வந்த மற்றொரு கவிஞர். தஞ்சை பிரகாஷ்தான் இவர்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன். இவருடைய கவிதைகளையும் நான் சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கோபாலகிருஷ்ணன் நேரில் பழக்கம் உண்டு. இவர் யாரென்று நேரில் பார்த்து அறியேன். ஆனால், சுந்தர்ஜி இதழ் மொத்தமும் இவர் கவிதைகள் இவருடைய பல்வேறு ஆர்வங்களை எனக்கு எடுத்துக் காட்டியது. ரசனை மிக்க கவிதைகள்.
எப்படி எனக்கு இவர்களின் கவிதைகள் பிடித்திருக்கின்றவனவோ, அப்படியே இவர்களின் இந்த தனி இதழ் கருத்தும் மிகவும் பிடித்திருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், சிறுபத்திரிகைகளில் வெளிவரும் பல கவிதைகளுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள, ஒரு சில தனிக் கவிதைகள் போதுமானதாக இருப்பதில்லை. அதற்கு அவர்களின் கவிதைத் தொகுதிகளைத் தேடிக்கொண்டு போகவேண்டும். புத்தகம் என்றவுடனே அதன் விலையும் கிடைக்குமிடங்களும் பெரிய இடர்களாக மாறிப்போய்விடுகின்றன. இந்த தனி இதழ்கள், கவிதைத் தொகுதிக்கான வேலையையும் சேர்த்துச் செய்கிறது.
இதில் உள்ள பல கவிதைகள், வேறு சிறு பத்திரிகைகளில் வெளிவந்திருக்குமா என்றால் அது சந்தேகம் தான். ஏனெனில், ஒவ்வொரு இதழும் தமக்கான அளவுகோல்களைக் கொண்டே ஒரு கவிதையைத் தேர்வு செய்யும். அந்தந்த ஆசிரியர்களின் பார்வையில் ஒரு சில, கவிதைகளாகவே தோன்றாமல் போகலாம். ஆனால், பல நுட்பமான கவிதைகள் வெளியிடப்படும் வாய்ப்பே இல்லாமல் காகிதத்திலேயே சமாதி அடைந்துவிடக்கூடும். இந்த தனி இதழ்கள், அப்படி காணாமல் போய்விடக்கூடிய கவிதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
தனி இதழ்கள், இவ்விதழ்களை உருவாக்குவோரின் ஆளுமையைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. தஞ்சாவூர்க் கோபாலி, முக்கியமான மொழிபெயர்ப்பாளரும் கூட. அவர் மழலைப் பாடல்கள் எழுதுவதில் ஆர்வமுள்ளவர் என்பதை இந்த இதழைப் பார்த்துதான் நான் தெரிந்துகொண்டேன். இந்த இதழ்களில் அவர்களின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்திக்கொள்ள நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த இதழ்களில் மற்றொரு விஷயமும் உள்ளூர நடக்கிறது. கவிஞர்களே இதழ்களின் ஆசிரியர்களாகவும் ஆகும்போது, நல்ல கவிதைகளைத் தேர்வு செய்வதும், அது வாசகர் மத்தியில் போய்ச் சேருவதாக இருக்கவேண்டும் என்பதையும் இந்த ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். சுயதேர்வு. சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் தேர்வு இது.
இந்த இதழ்களின் உள்ளடக்கத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது. வெரைட்டி இல்லாமல் போய்விடக் கூடிய பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். இன்னொரு சிக்கல், இதன் வாழ்நாள். கவிஞர்களால் தம் சொந்தப் பணத்தைப் போட்டு, எத்தனை இதழ்கள் கொண்டு வர முடியும்? தெரியவில்லை. அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம் என்று நினைக்கிறேன்.
படிப்பதற்கு இந்த இதழ்கள் சிறப்பாக இருக்கின்றன. அதுதான் வாசகனாகிய எனக்கு முக்கியம்.