டிப்பிங் பாயிண்ட்

நான் பூனா போனபோதுதான், இந்த இட்லி மாவை பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்யும் முறையைப் பார்த்தேன். மும்பையிலும் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் வாசலில், மாவு பாக்கெட்டுகளை விற்க ஆரம்பித்திருந்தார்கள். பெரும்பாலும் தமிழ் பையன்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பார்கள். பக்கத்திலேயே ஒரு கிரைண்டர். மாவு அரைக்க அரைக்க, ஒரு கிலோ அரை கிலோ பாக்கெட்டுகளில் போட்டு கட்டி வைப்பார்கள். அடுத்த சில நிமிடங்களிலேயே பாக்கெட்டுகள் காணாமல் போய்விடும். ஒரு கட்டத்தில், இட்லி மாவோடு, கெட்டி சட்னி, அடை மாவு போன்றவற்றையும் பாக்கெட்டுகளில் போட்டு விற்க ஆரம்பித்தார்கள்.
அந்தச் சமயத்தில் சென்னை வந்தபோது, இங்கேயும் இட்லி மாவு விற்கும் பழக்கம் கடைகளில் தொடங்கியிருப்பதைப் பார்த்தேன். தாயார் இட்லி மாவு என்று பிராண்டுதான் இங்கே சென்னையில் கிடைத்தது. காலையும் மாலையும் இந்த இட்லி மாவு பாக்கெட்டுகளைக் கொண்டு வந்து கடைகளில் நிரப்பிக்கொண்டு இருந்தார்கள். இட்லி மாவுக்கு இப்படி ஒரு டிமாண்ட் உருவாகும் என்று யாரும் நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால், வீட்டில் கஷ்டப்பட்டு இட்லி மாவை அரைப்பதைவிட, கடைகளில் வாங்கி இட்லியோ தோசையோ செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் இருந்திருக்கிறது. அதற்கான ஒரு வாய்ப்பு அதுவரை இல்லாமல் இருந்தது. வாய்ப்பு கிடைத்தவுடன் இட்லி மாவு பிசினஸ் சென்னையில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது. பெண்கள் இதுவரை இட்லி மாவு அரைக்க அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பது, இட்லி மாவு சேல்ஸைப் பார்த்தே நாம் தெரிந்துகொள்ளலாம்.
இன்று தாயார் இட்லி மாவுடன் வேறு சில பிராண்டுகளும் சந்தையில் வந்துவிட்டன. ஒரு கிலோ ரூ.20க்கு விற்கப்படும் இந்த மாவு அதிகபட்சம் இரண்டு நாள்கள் தாங்குகின்றன. அப்புறம் புளிப்பு வாசனை வந்துவிடுகிறது. சந்தைக்கு வந்தவுடனே விற்றுத் தீரும் உணவுப் பொருளாக இட்லி மாவு இருப்பதால், தேங்கிப் போகவே வாய்ப்பில்லை.
இன்றைக்கு இந்த இட்லி மாவு பிசினஸுக்குள் பெரும்போட்டி முளைத்திருக்கிறது. ரூ. 7, ரூ.15 ஆகிய விலைகளில் உள்ளூர் பெண்களே இட்லி மாவு தயாரித்து, பக்கத்தில் இருக்கும் கடைகளில் கொண்டு போய் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
இட்லி மாவு இதற்கு முன்னாலும் இருந்ததுண்டு. மாவு அரைத்துத் தரும் கடைகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். வீட்டில் கிரைண்டர் இல்லாத பெண்கள், ஈர அரிசியையும் ஈர பருப்பையும் மாவு மெஷினுக்குப் போய் வைத்துவிட்டு வருவார்கள். அவர்களும் அரைத்துக் கலந்துதருவார்கள். ஆனால், இட்லி மாவுக்கான ஒரு டிப்பிங் பாயிண்ட் எங்கோ இருந்திருக்கிறது.
கடைகளில் இட்லி மாவு வாங்குவது ஒருவகையில் கெளரவக் குறைச்சல் என்று கருதப்பட்ட காலம் போய்விட்டது. வேலைக்குப் போகும் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது. முதல் நாள் இட்லி, இரண்டாம் நாள் தோசை, மூன்றாம் நாள் ஊத்தப்பம் என்று மாவைக் காலி செய்வதற்கு பதில் அவ்வப்போது ஃபிரெஷ்ஷாக வாங்கி இட்லியோ தோசையோ செய்துகொள்வது ஒரு தேவையாக உருவெடுத்திருக்கிறது. விளைவு, இன்று இட்லி மாவு பல நூறு குடும்பங்களில் வாழ்வதற்கான ஆதரமாக ஆகியிருக்கிறது.
இன்னும் பூனா, மும்பை போல் ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமெட் இட்லி, ரெடிமேட் வடை ஆகியவை சென்னைக்கு வரவில்லை. விரைவில் வந்துவிட வாய்ப்புண்டு.
சென்னையில் புதிதாக முளைத்துள்ள இன்னொரு தொழில், பெண்கள் கைகளுக்கு மெஹந்தி போடுவது. முன்பெல்லாம், பெண்கள் திருமணங்களுக்கு மருதாணி வைத்துக்கொள்வார்கள். மொத்தை மொத்தையாக கைநிறைய அப்பிக்கொண்டிருந்த கல்யாணப் பெண்கள் உண்டு. அதிலேயே டிசைன்கள் வரைந்த அந்தக் காலத்துக் கில்லாடிகளும் உண்டு.
இன்றோ, மெஹந்தி கோன் என்று ஒன்று கடைகளில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ஐஸ்கிரீம் கோன் வடிவில், உள்ளே மருதாணியை அடைத்து ஒரு கோன் ரூ. 5க்கு விற்பனை செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள், திருமணத்துக்குத் தயாராகும் பெண்கள் அதை வாங்கி தாங்களே தங்களுக்குத் தெரிந்த டிசைகள், அல்லது புத்தகங்களைப் பார்த்து டிசைன்கள் வைத்துக்கொண்டு இருந்தார்கள்.
இங்கேயும் ஒரு டிப்பிங் பாயிண்ட் இருக்கிறது. அதுவரை ஒருமாதிரி அடக்கமாக இருந்த விஷயம் இன்று சட்டென ஃபாஷனாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது.
தி.நகர் பனகல் பார்க் பக்கம் போய் பாருங்கள். காலையில் இருந்து இரவு வரை மெஹந்தி வைத்துவிடவென்றே ஒரு பெரிய கும்பல் உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. குட்டி குட்டி சேர்கள் போட்டு பெண்களின் கைகளிலும் கால்களிலும் மெஹந்தி ராஜாங்கமே நடத்துகிறார்கள். சின்னப் பெண்களில் இருந்து பெரியவர்கள் வரை அங்கே அலைமோதுகிறார்கள். உள்ளங்கை மட்டும் வைத்துவிட ஒரு ரேட், புறங்கையும் வைக்க ஒரு ரேட், முன்கை முழுக்க வைத்துவிட ஒரு ரேட், காலில் வைத்துவிட ஒரு ரேட். அசாத்திய ஸ்பீடில் வேலை செய்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் பரபரவென கைகளில் கோலம் போட்டு அனுப்பிவிடுகிறார்கள். எல்லோரும் மார்வாடி, சிந்தி, குஜராத்தி பையன்கள்.
வீட்டுக்கே வந்து மெஹந்தி வைத்து விட தனி ரேட். கல்யாணப் பெண்ணுக்கான மெஹந்தி என்றால் அதற்குத் தனி ரேட்.
மருதாணி வழக்கொழிந்து போன ஒரு காலம் உண்டு. நெயில் பாலீஷ் கொடிகட்டிப் பறந்தது அப்போது. ஆனால், பெண்கள் மனத்தில் உள்ளூர மருதாணிக்கு இருந்த கவர்ச்சி மங்கவே இல்லை. அது இப்போது மெஹந்தி வடிவத்தில் நவீன புத்துயிர் பெற்றிருக்கிறது.
ஆட்டுக்கல்லில் அரைத்து, பின் மிக்ஸியிலும் கிரைண்டரிலும் அரைத்து இட்லி சுட்ட காலம் போய், பிட்சாவும் பர்க்கரும் ஹாட் டாக்கும் தமிழர்கள் சாப்பிட்டார்கள். ஆனால் உள்ளூர இடலிக்கு இருந்த மெளசு குறையவே இல்லை. இன்று இட்லி மாவு வேறு வடிவத்தில் மீண்டு புத்துயிர் பெற்றிருக்கிறது.
தேவைகள் அப்படியேதான் இருக்கின்றன. வடிவங்கள் மாறுகின்றன. எல்லாவற்றுக்கும் ஒரு டிப்பிங் பாயிண்ட் வரவேண்டும்.

Leave a Reply