வழி சொல்லுங்க…

மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு வந்து என் இருக்கையில் அமர்ந்தேன். ஆங்கிலோ இந்திய ரிசெப்ஷனிஸ்ட் போனில் கூப்பிட்டார். ‘உன்ன பாக்க, யாரோ ஆத்தர் வந்துகிது. கீழ வா.’ இரண்டாம் தளத்தில் இருந்து முதல் தளத்துக்கு இறங்கி வந்தேன். பெரிய வரவேற்பறை அது. மூன்று பக்கமும் நீள சோபாக்கள். சோபாக்கள் சேருமிடங்களில் தொட்டிகளில் பிளாஸ்டிக் செடிகள். நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க ஒருவர் பச்சை நிற பிளாஸ்டிக் பையோடு நின்றுகொண்டு இருந்தார். தலைமுடியை மிகச் சமீபத்தில்தான் வெட்டியிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு உருத்திராட்சம். சட்டை பாக்கெட் முழுக்க நாலைந்து வண்ண பேனாக்கள், துண்டு காகிதங்கள்.

‘நமச்சிவாய வாழக. நாதன் தாள் வாழ்க.’ கண்கள் புன்னகைப்பது தெரிந்தது. பச்சைப் பையோடு கைகூப்பினார் அவர். பதிலுக்கு நான் என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஒரு மாதிரி புன்னகைப்பது போல் வைத்துக்கொண்டு கைகூப்பினேன். சோபாவில் உட்காரச் சொன்னேன்.

‘நீங்களா தம்பி இங்க தமிழ் புத்தகங்கள் போடறது?’

’ஆமா சார்.’

‘மிக நல்ல பணி. புத்தகக் கண்காட்சியில பார்த்தேன். நல்ல வேலை செஞ்சிருக்கீங்க தம்பி.’

ஒரு மாதிரி கோணலாகச் சிரித்தேன். சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிந்து ஒன்றிரண்டு வாரங்கள் ஆகியிருக்கும்.

‘உங்களுக்கு எந்த ஊரு தம்பி?’

‘மெட்ராஸ்தான் சார்.’

எனக்குத் தெரிந்தது மெட்ராஸ்தான். எங்கப்பாவுக்கு வேற ஊர். அதையெல்லாம் இவரிடம் போய் ஏன் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

‘சீர்மிகும் சென்னை.’

‘ஓ!’

‘என் பெயர் மாணிக்கவாசகம். செய்யாறு பக்கத்துல ஸ்கூல்ல தமிழாசிரியரா இருந்து ஓய்வு பெற்றவன். நான் சென்னை வந்து அஞ்சாறு வருஷமாச்சு’
நான் வெறுமனே மண்டையை ஆட்டினேன்.

‘இதுவரைக்கும் ஐம்பதுக்கும் மேல புத்தகங்கள் போட்டிருக்கேன். நான் ஆசுகவி. சித்திரக் கவிதை எழுதுவேன். மயில் மாதிரி, தேர் மாதிரி, குதிரை மாதிரியெல்லாம் கவிதை எழுதுவேன்.’

‘காபி குடிக்கறீங்களா?’

‘டீ கிடைச்சா நல்லது தம்பி. சர்க்கரை கொஞ்சம் அதிகம்.’

வந்து நின்ற கேண்டீன் பையன் திரும்பிப் போனான்.

’மேடையில பிரசங்கம் செய்வேன். வாரியார் சுவாமிகள் எங்க ஊருக்கு வந்தபோது, வாழ்த்தி சால்வை போர்த்தினாரு.’

‘சரி சார்’

‘ஜோசியம் குடும்பத் தொழில். எங்கப்பா காலத்துலேருந்து செஞ்சுகிட்டு வரோம். நான் ஆறு ஜோசிய புத்தகங்கள் எழுதியிருக்கேன். இதுவரைக்கு ஒரு லட்சம் ஜாதகத்துக்கு மேல பார்த்திருப்பேன். வித்வான் வே. லட்சுமணன் தெரியுமா?’

‘ஓ!’

‘நீங்கள் மேஷ ராசியா? பரணி நட்சத்திரம்?’

இது கொஞ்சம் சங்கடமான இடம். எனக்கு என் ராசி, நடசத்திரம் எல்லாம் துல்லியமாகத் தெரியாது.

‘தெரியல சார். நீங்க சொல்லுங்க.’

’நீங்க கொஞ்சம் அவசரத்துல இருக்கீங்களோ?’

‘இல்ல சார். சொல்லுங்க’

‘என்னை உங்கப்பா மாதிரின்னு நினைச்சுக்கங்க..உங்களுக்கு என்ன 23 வயசு இருக்குமா?’

நான் மையமாக தலையசைத்தேன்.

‘வானதியில என் புக்ஸ் போட்டிருக்காங்க. மணிமேகலைல குடுத்திருக்கேன். நானே ஊர்ல சின்னதா கோவில் விசேஷங்களுக்கு புத்தகம் போட்டிருக்கேன்.’

பச்சை நிற பிளாஸ்டிக் பையின் ஜிப்பைத் திறந்தார். சின்ன சின்னதாக இரண்டு கைடக்க புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார். பதினாறு பக்கங்கள் கொண்ட புத்தகங்கள். இரண்டு நூல்களின் மேலட்டையிலும் வேறு வேறு அம்மன் படங்கள் இருந்தன. கடைசி பக்கத்தில் உபயம்: M.மணிவேல், தங்கராஜ் ஒயரிங் சர்வீஸஸ், செய்யாறு என்றிருந்தது.

‘நான் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கேன். அதை உங்ககிட்ட கொடுக்கத்தான் வந்தேன். யாரும் சொல்லாத உரை இது. கிட்டத்தட்ட மூன்றாண்டுகால உழைப்பு.’

அவர் அதே பச்சைப் பையில் இருந்து புல்ஸ்கேல் பேப்பர்கள் கொண்ட பைலை எடுக்க ஆரம்பிக்கும் போதே, எனக்கு லேசாக உதற ஆரம்பித்தது.

‘நாங்க இந்த மாதிரி புக்ஸெல்லாம் போடறதில்ல சார்.’

‘அப்ப என்ன மாதிரி போடுவீங்க?’ புல்ஸ்கேல் பைலை உள்ளே தள்ளினார்.

’குழந்தைகளுக்கு, ஸ்கூல்ல யூஸ் பண்றா மாதிரி’

‘நீதிக் கதைகள் தரட்டுமா? பண்பாட்டுக் கதைகள்னு ஒரு புக்கு எழுதியிருக்கேன். இப்போ கூட, தி. நகர்ல ஒருத்தருக்கு நன்நெறிக் கதைகள்னு ஒரு புக்கு கொடுத்தேன்.. யார் அவன்?’

சட்டென அவர் மீண்டும் பச்சை பிளாஸ்டிக் பைக்குள் கையை விட்டார்.

‘அப்படி இல்ல சார்.இங்க ஒர்க் புக்ஸ், எக்ஸஸைஸ் புக்ஸ்தான் போடுவாங்க.’

‘நானே கதை எழுதி, நம்ம ஹரி தெரியுமா.. டிராயிங்கெல்லாம் போடுவாரே.. அவர வெச்சு படங்கள் போட்டு, படக்கதை போட்டிருக்கேன். ஆர்ட் ஒர்க்கே ரெடியா இருக்கு. 32 பக்கம் வரும்.’

வண்ணங்கள் தீட்டப்பட்ட அட்டைகளை அவர் வெளியே எடுத்தார்.

‘நீங்க சரின்னு சொன்னா, இங்க உங்க கம்பெனி பேரப் போட்டு அடிச்சுக் குடுத்துடுவேன். நமக்குத் தெரிஞ்ச பிரஸெல்லாம் இருக்கு. நமக்குன்னா நல்ல ரேட்டுல அடிச்சுக் குடுப்பாங்க. எனக்கு இந்தத் தயாரிப்பு செலவு மட்டும் தந்தா போதும். உரிமையெல்லாம் உங்களுக்கே எழுதிக் கொடுத்திடறேன். எத்தனை பிரிண்ட் வேணும்னாலும் போட்டுக்கலாம். ஸ்கூல் இந்த புத்தகங்கள் எல்லாம் எக்கச்சக்கமாக போவும்.’

அவருடைய முனைப்பு, வேகம், திட்டமிடல் எல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படியும் வயது 65க்கு மேல் இருக்கும். தோல் தளர்ந்துபோயிருந்தது. விட்டால், இவரே புத்தகத்தை விற்றுவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

‘அப்படி இல்ல சார். இங்கே எல்லாம் வருஷ ஆரம்பத்துலேயே முடிவு செஞ்சி, இன்னின்ன புத்தகங்கள் போடணும், இவங்க எழுதணும்னு திட்டமிட்டு வேலை செய்வாங்க சார். நீங்கள் உங்க ஐடியாஸை எல்லாம் என்கிட்ட எழுதிக் குடுங்க. எங்க சேல்ஸ் டீம்கிட்ட பேசிட்டு, எதெல்லாம் மார்க்கெட்டுல நல்லா போகும்னு தெரிஞ்சுகிட்டு அப்புறம் எழுதச் சொல்றேன் சார்.’

‘உங்கள் சேல்ஸ் டீமுக்கு யார் பொறுப்புன்னு சொல்லுங்க. நான் பேசறேன். எனக்கு 35 வருஷம் அனுபவம் உண்டு தம்பி. எந்த புக்கு நல்லா போவும்னு நல்லா தெரியும். நான் சொல்றேன்.’

நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். இவருக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. இங்கே தனிமனிதர் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது. செயல்படுத்தியும் விட முடியாது. இது ஓர் நிறுவனம். நிறுவனத்துக்கான நடைமுறையோடுதான் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக முடியும். ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விஷயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும். இந்த நிறுவனம் பிராசஸ் ட்ரிவன் நிறுவனம். எல்லாம் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தவர்,

‘மணி ரெண்டாவப் போகுது தம்பி. இன்னும் சாப்படலை. இனிமே தான் வீட்டுக்குப் போய் சாப்பிடணும். நீங்க ஏதாவது புத்தகத்தை எடுத்துகிட்டு, கொஞ்சம் பணம் கொடுத்தீங்கன்னா நிம்மதியா வீடு போய் சேருவேன். இல்லன்னா, திருப்பியும் டி. நகர் போய் வேற யாரையாவது பார்க்கணும்.’

ஜன்னலில் மதிய வெயில் சுள்ளென உறைத்தது. வெக்கை. நான் ஒரு சில நொடிகள் நொறுங்கிப் போனேன். அற்புதமான தேனினும் இனிய தமிழ் படிப்பு. பக்குவம். மேதமை. எல்லாம் காலத்தால் தள்ளப்படும் வெறும் குப்பை.

இது நடந்து 16 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது நான் ஓரியன்ட் லாங்மன் பதிப்பாசிரியர். நான் எதிர்காலத்தில் எப்படி ஆகிவிடக் கூடாது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது. 16 ஆண்டுகள் கழித்து இரண்டு நாள்களுக்கு முன்னர் மற்றொருவர் வந்தார். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் பேசியிருப்பார். தமிழ் தெரியும். ஓவியம் தெரியும். இசை தெரியும். பரதம் தெரியும். வரிசையாக விருதுகள், பாராட்டுகள். சைவத்தில் அதிதீவிர ஈடுபாடு.

‘பெரிய பொண்ண கட்டி கொடுத்துட்டேன் தம்பி. ரெண்டாவது பொண்ணும் பையனும் காலேஜ்ல படிக்கறாங்க. அடுத்த செமஸ்டருக்கு ஃபீஸ் கட்டணும். ஏதாவது வழியிருந்தா சொல்லுங்க தம்பி.’

நான் வார்தைகளற்று நின்றேன்.

  1. கணேஷ் சந்திரா says:

    அடிப்படை பிரச்சனை எங்கே ?

    1. எதை எழுதினாலும் புத்தகமாக போடுவார்கள் என்று எண்ணமா ?

    2. ஆர்வக்கோறளுகளிடம் காசை வாங்கிக்கொண்டு புத்தகம் போட்டு கெடுத்த சில பதிப்பாளர்களா ?

    3. நல்ல புத்தகங்களை வாசிக்க மறுக்கும்.. வாசகர்களா ?

    யோசித்துக்கொண்டே இருக்கிறேன்…

  2. கடந்த காலங்களில் புலவர்களுக்கு ஆதரவாக புரவலர்கள் இருந்தார்கள், கம்பருக்கு சடையப்ப வள்ளலைப் போல. அதையெல்லாம் இப்போது எதிர்ப்பார்க்க இயலுமா?

    எழுத்தாளர்கள் முதலில் நிரந்தர வருமானம் வரும் வேறு வேலைகளை தேடிக் கொண்டு செயல்படுவது இக்காலத்தின் கட்டாயம். அதற்கான மற்ற திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டியதுதான். இதையெல்லாம் யாரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அவரவர் அவசரம் அவரவருக்கு.

    நீங்கள் கூறிய உதாரணங்களில் முதலாமவர் சற்றே enterprising ஆக காணப்படுகிறார். ஆனால் அது போதவில்லை என்பதுதான் சோகம். தினசரி தேவைகளுக்கு மேல் வருமான ஒன்று தனியாக இருந்திருந்தால் அவரது ரேஞ்சே மாறியிருந்திருக்கும். கைவசம் இருந்த ஜோஸ்ய வித்தையிலேயே பணம் அள்ளியிருக்க முடியுமே? அதை சரியாக மார்க்கெட்டிங் செய்திருந்தால் இன்னும் அதிக தன்னம்பிக்கையுடன் இருந்திருக்கலாமே.

    உள்ளே கூர்ந்து பார்த்தால் கஷ்டப்படும் எழுத்தாளர்கள் படும் துன்பத்தை நீக்கும் வழிகள் அவர்களிடமே உள்ளன. அவற்றை அடையாளம் காண்பது அவர்கள் வேலை. அவர்களது மட்டுமே.

    இது சம்பந்தமாக நான் இட்ட இடுகை வறுமையும் புலமையும், பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_113377860362071006.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply