தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்

I.

தமிழ்ப் பதிப்புலகம் பற்றி வேற்று மொழியைச் சேர்ந்த பதிப்பாளர்களிடமோ, எழுத்தாளர்களிடமோ பேசும்போது, ஒரு பிரச்னையைத் தொடர்ந்து சந்திப்பேன். உங்கள் மார்க்கெட் சைஸ் என்ன? எவ்வளவு பதிப்பாளர்கள் இருப்பார்கள்? தமிழ் பதிப்புத் தொழிலின் மொத்த டர்ன் ஓவர் என்ன? வளர்ச்சி விகிதம் என்ன? எப்படி விலை வைப்பார்கள்? நிகர லாபம் எவ்வளவு சதவிகிதம் இருக்கும்? முதல் பதிப்பு எவ்வளவு வெளியிடுவீர்கள்? ஒரு சாதாரண புத்தகம் ஓராண்டுக்குள் தோராயமாக எத்தனை படிகள் விற்பனையாகும்?

தமிழைப் பொறுத்தவரை, பதிப்புத் தொழில் என்பது இனிமேலும் குடிசைத் தொழில் அல்ல. அது ஒரு இண்டஸ்ட்ரி என்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. பதிப்புத் தொழிலை நம்பி நிறைய துணைத் தொழில்கள் தோன்றியிருக்கின்றன. பெரிய அளவில் மூலதனம் போட்டு, பிரிண்டிங் மெஷின்கள் வாங்கிப் போட ஆரம்பித்துவிட்டார்கள். டைப் செட்டிங், ஃபிலிம் எடுத்தல், பைண்டிங் என்று பல தொழில்கள் வளர்ந்திருக்கின்றன. நல்ல புத்தகம் போட்டு, நல்லபடியாக மார்க்கெட் செய்பவர்கள் யாரும் இந்தத் தொழிலில் தோற்றதில்லை. ஒரு சில ஆர்வக்கோளாறு ஆசாமிகள் வேண்டுமானால், கையைச் சுட்டுக்கொண்டு இருக்கலாம். அது தனிக் கதை. இப்போது தமிழ்ப் பதிப்புத் தொழிலின் அளவு பற்றி மட்டும் பேசுவோம்.

தமிழ் பதிப்புலகின் மார்க்கெட் சைஸ் என்ன? இது சம்பந்தமாக ஏதும் ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா என்று தேடிப்பார்த்தேன். என் பார்வையில் அப்படி ஏதும் தென்படவில்லை. மேலும் மேலே எழுப்பிய பல கேள்விகளுக்கு தீர்மானமான பதில்கள் கிடைக்கவில்லை. இல்லை என்பதற்காக விட்டுவிட முடியாது அல்லவா? ஏதேனும் ஒரு புள்ளியில் தொடங்கித்தான் ஆகவேண்டும். கிழக்குப் பதிப்பகத்தில் பணியாற்றிவிட்டு, இப்போது ஆப்பிள் புக்ஸில் பணியாற்றும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர் விக்ரம் சதீஷ் மற்றும் நான் ஆகிய மூவரும் சேர்ந்து தமிழ்ப் பதிப்புலகின் சைஸையும் இன்ன பிற தகவல்களையும் ஒன்றிணைக்க ஆரம்பித்தோம். விவரங்கள் இப்படி இருக்கின்றன.

1. தோராயமாகத் தமிழ்ப் பதிப்புலகின் மார்க்கெட் சைஸ் – 80 கோடி.
2. ஆக்டிவ்வான பதிப்பாளர்கள் – 175 (மொத்தம் எவ்வளவு பதிப்பாளர்கள் என்று கணக்கு தெரியவில்லை). இவர்கள் பபாசி எனப்படும் பதிப்பாளர் விற்பனையாளர் கூட்டமைப்பிலும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
3. கடந்த ஐந்து ஆண்டுகளில், Compounded Annual Growth Rate (CAGR) – 12 % – 13%.
4. பதிப்பாளர்களுக்கு எல்லா செலவுகளும் போக நிகர லாபம் – 12% – 15%.
5. இனி பதிப்பாளர்களை அவர்களுடைய டர்ன் ஓவர்க்கு ஏற்ப பல்வேறு அடுக்குகளில் பிரிக்கலாம். இது முற்றிலும் எங்கள் அனுமானம். எந்தப் பதிப்பாளரும் தம் ஆண்டு விற்பனையை வெளியிடுவதில்லை. பதிப்பாளர்களின் புத்தகப் பட்டியலை வைத்துக்கொண்டு, புத்தகங்களின் விலையை வைத்துக்கொண்டு, அவரவர்களுடைய பெஸ்ட் செல்லர் விற்பனையை வைத்துக்கொண்டு, இந்த அடுக்குகளுக்குள் பதிப்பாளர்களைப் பொருத்தியிருக்கிறோம். இது முற்றிலும் தவறாக இருக்க வாய்ப்பில்லை.

அ) ரூபாய் ஐந்து கோடி வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1.என்.சி.பி.எச்., 2. விகடன் பிரசுரம், 3. கண்ணதாசன் பதிப்பகம், 4. கிழக்கு பதிப்பகம், 5. ராமகிருஷ்ணா மடம்

ஆ) ரூபாய் இரண்டு கோடி வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1. வானதி பதிப்பகம், 2. கலைஞன் பதிப்பகம், 3. நர்மதா பதிப்பகம், 4. தி அலையன்ஸ் கம்பெனி, 5. மணிமேகலை பிரசுரம், 6. திருமகள் நிலையம், 7. நக்கீரன் பதிப்பகம், 8. பாரதி புத்தகாலயம், 9. சுரா புக்ஸ்

இ) ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1. பாரி நிலையம், 2. வர்த்தமானன் பதிப்பகம், 3. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 4. மணிவாசகர் பதிப்பகம், 5. கவிதா பப்ளிகேஷன்ஸ், 6. தமிழ் புத்தகாலயம், 7. லிஃகோ, 8. அருணோதயம்

ஈ) ரூபாய ஐம்பது லட்சம் வரை விற்பனை செய்யக்கூடியவர்கள்
1.பழனியப்பா பிரதர்ஸ், 2. பூம்புகார் பதிப்பகம், 3. ஸ்ரீசெண்பகா, 4. மீனாட்சி புத்தக நிலையம், 5. ஐந்திணை, 6. காலச்சுவடு, 7. காவ்யா, 8. சந்தியா, 9. உயிர்மை, 10. அடையாளம்

உ) ஐம்பது லட்ச ரூபாய் வரை விற்பனை செய்பவர்களை இன்றும் மூன்றாகப் பிரிக்கலாம். பத்து லட்சம் ஒரு அடுக்கு, 25 லட்சம் வரை ஒரு அடுக்கு, 50 லட்சம் வரை மற்றொரு அடுக்கு என்று பிரிக்க முடியும்.

6. தமிழகம் எங்கும் சின்னதும் பெரியதுமாக கிட்டத்தட்ட 500 புத்தகக் கடைகள் இருக்கின்றன.
7. விற்பனைக் கழிவு – 25 % – 40 % வரை.
8. கிரெடிட் பீரியர் – 90 – 120 நாட்கள் (சில சமயங்களில் 180 நாள்கள் வரை போவது உண்டு)
9. புத்தக விலை – அடக்கவிலை போல் மூன்றில் இருந்து நான்கு மடங்கு (இங்கிலாந்து ஆங்கிலப் பதிப்பகங்களில் இதுவே பத்து மடங்கு!)
10. எழுத்தாளர் ராயல்டி – புத்தக விலையில் 7.5% – 10%.
11. சென்னை, ஈரோடு, மதுரை, நெய்வேலி ஆகிய இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன.
12. பெரிய புத்தகக் கடைகளான லேண்ட்மார்க்கோ, ஒடிசியோ, ஹிக்கின்பாதம்ஸோ, கிராஸ்வேர்ட்டோ தமிழ் புத்தகங்கள் அதிக அளவில் வைக்க ஆர்வம் காட்டுவதில்லை.
13. சமீப ஆண்டுகளாக ஆங்கிலப் பதிப்பகங்கள் தமிழில் காலவைக்க விரும்புகின்றன. ஜெய்கோ புக்ஸ், விவா புக்ஸ் ஆகியவை தாமே தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியிடுகின்றன. சேஜ் புக்ஸ் விகடன் பிரசுரத்தோடு சேர்ந்து புத்தகங்கள் போடுகின்றன. வெஸ்ட்லாண்ட், பான், பியர்சன் ஆகியவை கிழக்கு பதிப்பகத்தோடு இணைந்து புத்தகங்கள் வெளியிடுகின்றன.
14 மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு தமிழ் புத்தகங்களை வாங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இனப் பிரச்னை உச்சகட்டத்தை அடையும் முன்பு, அங்கும் தமிழ் புத்தகங்களின் ஏற்றுமதி நடைபெற்று வந்தது.
15. தமிழக அரசு வருடத்துக்கு ஒருமுறை, நூலகத் தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் நூல்களில், 1000 படிகள் வாங்குகிறது. ஃபாரம் இவ்வளவு விலை என்ற கணக்கில் அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்குகிறது. டெம்மி 1/8 நூல் – ஃபாரத்துக்கு ரூ.3.10, கிரவுன் 1/8 நூல் – ஃபாரத்துக்கு ரூ. 2.90. பல ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த இந்த விலை இன்னும் ஏற்றப்படவில்லை.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் நடந்த முக்கிய மாற்றம், வாசிப்புப் பழக்கம். பல சிறு நகரங்களில் கூட, ஊர்களில் கூட, காசு கொடுத்து புத்தகம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது நடுவே கடந்த ஓராண்டுக்கும் மேல் பொருளாதார சரிவு வேறு ஏற்பட்டிருக்கிறது. பல பதிப்பகங்கள் இதன் பாதிப்பை உணர்ந்திருக்கின்றன. விகடன் பிரசுரம் புத்தகங்கள் வெளியிடும் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது. கிழக்கு பதிப்பகம் இதையே வேறு மாதிரி அணுகியிருக்கிறது. ரூ.25 விலையில் ஒரு சந்தை இருப்பதைப் புரிந்துகொண்டு பல நூல்களை இதே விலையில் வெளியிட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கான கேக் புக்ஸ், ஓவியப் புத்தகங்கள் ஆகியவற்றையும் கிழக்கு வெளியிட்டு இருக்கிறது. மற்றொரு புறம், நிறைய மொழிபெயர்ப்பு நூல்களில் கவனம் செலுத்தி வருகிறது.

இன்னொரு வகையில் பார்த்தால், பொருளாதாரச் சரிவு காலம்தான், புதிய தொழில்களில் ஈடுபட உகந்த காலம். ஆழி பதிப்பகம் இதைப் புரிந்துகொண்டு இருக்கிறது. நாகார்ஜுனனின் நளிர் மாதிரியான குண்டு புத்தகங்களோடு பல்வேறு துறை சார்ந்த நூல்களையும் இந்தப் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இன்னும் எண்ணி, ஐந்தாவது மாதத்தில் சென்னை புத்தகக் காட்சி வந்துவிடும். 2009 புத்தகக் காட்சி பெரிய சுவாரசியம் இல்லாமல் இருந்தது. 2010 காட்சி எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

II.

நீண்ட கால அளவில், ஒரு சில விஷயங்கள் தமிழ் பதிப்புலகில் நடக்க வேண்டும். நடக்கும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் புத்தகம் போடுகிறார்கள். நல்ல புத்தகங்களைத் தேடி வெளியிடும் முனைப்பும் முன்பை விடக் கூடுதலாகியிருக்கிறது. ஆனால், விற்பனை செய்யும் முனைப்பு மட்டும் இங்கே குறைவு. மார்க்கெட்டிங்க், விளம்பரம் ஆகியவற்றில் செலவு செய்வதை விட, அடுத்த அடுத்த புத்தகங்களைப் போட்டுவிடலாம் என்பது பதிப்பகங்களின் எண்ணம். நல்ல எழுத்து எப்படியிருந்தாலும் விற்கும், அதற்கு சந்தைப்படுத்தும் முயற்சியே தேவையில்லை என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைத்தான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்று சொல்வது.

நல்ல மார்க்கெட்டிங்கும், நல்ல விநியோகமும் இல்லை என்றால், நல்ல புத்தகம் கூட குடோனில்தான் தூங்க நேரிடும்.

ஆங்கில புத்தகங்களுக்கு இருப்பது போல் விரிவான விநியோகஸ்தர்கள் நெட்வொர்க் தமிழ்ப் புத்தகங்களுக்கு வர வேண்டும். பதிப்பாளர்கள் நல்ல புத்தகங்களைத் தேடிப் போக, விநியோகஸ்தர்கள், விற்பனையை மேம்படுத்தும் சூழல் வரவேண்டும். இன்றைக்கு இருக்கக்கூடிய பல விநியோகஸ்தர்கள், புத்தகங்களை விற்பனை செய்வதில் பெரிய முனைப்பு காட்டுவதில்லை. தமிழின் முன்னணி பதிப்பகங்கள், தாங்களே விநியோகஸ்தர்களாக மாறினால் மிகவும் நல்லது.

இரண்டாவது, தமிழ்ப பதிப்புலகில் ஒரு வகையான கண்சாலிடேஷன் ஏற்பட வேண்டும். எண்ணற்ற சின்ன பதிப்பகங்கள் இருக்கின்றன. அவர்களால், அற்புதமான புதிய எழுத்தாளர்களையும் புதிய படைப்புகளையும் இனம் காண முடிகிறது. புத்தகம் வெளியிட முடிகிறது. ஆனால், விற்பனையில் பெரிய எண்ணிக்கை வருவதில்லை. பெரிய பதிப்பகங்கள், இந்தப் புதிய எழுத்தாளர்களையும் படைப்புகளையும் இனம் காணுவதில்லை. அவர்களுடைய வேகப் பார்வையில் இவர்கள் படுவதே இல்லை.

ஆங்கிலத்தில் முன்பு ரவி தயாள் பப்ளிஷர்ஸ் என்றொரு பதிப்பகம் இருந்தது. ரவி தயாள்தான் எல்லாம். அவரே புதிய எழுத்தை இனம் காணுவார். எழுத்தாளரைத் தூண்டி எழுத வைப்பார். எடிட் செய்வார். நல்ல அழகான அச்சில் புத்தகம் போடுவார். விற்பனை உரிமையை, ஓரியன்ட் பிளாக்ஸ்வானிடம் கொடுத்துவிடுவார். விற்பனைக்கு விற்பனையும் ஆச்சு. நல்ல புத்தகமும் வெளியாச்சு. கல்கத்தா குரோமோஸோம், ஷேடோ லைன்ஸ் போன்ற நூல்களையும் அமிதவ் கோஷ் போன்ற முன்னணி எழுத்தாளர்களையும் வெளிக்கொணர்ந்தவர் இவர்தான். குஷ்வந்த சிங்கின் மாப்பிள்ளை. ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸில் எடிட்டராக மும்பையில் இருந்தவர். பின்னர் சென்னை ஓ யு பியை உருவாக்கினார். அப்புறம் தில்லிக்குப் போய் ஓ யு பி யின் தலைமை நிர்வாக அலுவலராக பல ஆண்டுகள் இருந்தவர். 2006ல் தவறிவிட்டார் ரவி தயாள்.

தமிழில் மருதா என்றொரு பதிப்பகம் இருக்கிறது. மருதா வெளியிட்ட ஒவ்வொரு நூலும் கவனத்தைக் கவருபவை. சரியான படைப்பை, நல்ல எழுத்தை இனம் காணுவதில் மருதா பாலகுருவுக்கு ஒரு சுவை, ரசனை இருக்கிறது. ஆனால், விற்பனை? பெரிய எண்ணிக்கையில் இருக்குமா என்று தெரியவில்லை. மருதா ஒரு உதாரணம்தான். கருப்பு பிரதிகள், பரிசல், நிழல் போன்ற பதிப்பகங்கள் இப்படி பல நல்ல நூல்களை வெளியிட்டிருக்கின்றன. இதுபோல் மேலும் பலர் இருக்கக்கூடும்.

இதுபோன்ற கன்சாலிடேஷன்களும் விநியோகஸ்தர்கள் நெட்வொர்க்கும் அதிகமாகும்போதுதான், தமிழ் பதிப்புலகம் மேலும் விரிவடையும். புத்தகங்கள் மேன்மேலும் அனைத்து இடங்களில் போய் சேர சேரத்தான் புதிய வாசகர்கள் உருவாவார்கள். இது ஒரு சக்கிரம். சுழன்றுகொண்டே இருக்க வேண்டியது தான் இதில் மிகவும் முக்கியம்.

  1. மிகவும் நேர்த்தியாக, விவரங்களைத் தொகுத்திருக்கிறீர்கள்.

    வாசகர்களை ஈர்ப்பதில் பருவ இதழ்கள் மட்டுமே முன்னிலை வகித்த காலம் கடந்து விட்டது. நான் எழுதினதே எழுத்து, அதைப் படிப்பது உன் தலையெழுத்து என்ற ரீதியில், இங்கே சிலர் ஜெயக்கொடி நாட்டிக் கொண்டிருந்ததற்கும், மாத நாவல்கள் என்று வந்த மலிவு விலை முயற்சிகள் ஆப்பு வைத்தன. அங்கேயும் இங்கேயும் என்று இரண்டு பக்கமும் கால் வைத்துக் காணாமலேயே போனவர்கள் பலருண்டு.

    ஒரு புதிய தலைமுறை இங்கே வாசிக்க வந்திருக்கிறது என்பதே எழுதுபவர்களுக்கும், பதிப்புத் தொழில் செய்தவர்களுக்கும் தெரிய வர வெகு நாளாயிற்று.

    டர்ன் ஓவரை வைத்து வணிகத்தைக் கணித்த உங்களது பட்டியலிலேயே, அவர்கள் என்ன மாதிரிப் புத்தகங்களை வெளியிடுகிறார்கள், என்ன மாதிரி எழுத்து அதிகம் விற்பனையாகிறது என்பதைக் கணிக்க ஒரு வகை தெரிகிறது. உதாரணத்திற்கு கண்ணதாசன் பதிப்பகம், சுய முன்னேற்றத்திற்கான நூல்களில் அதிகம் கவனம் செலுத்தும் அதே நேரம், அல்லையன்ஸ் பதிப்பகம், பழைய எழுத்தாளர்கள் நூற்களை வெளியிடுவதில் கவனம் செலுத்துகிறது. இரண்டு நேரெதிரான சந்தை வாய்ப்புக்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. கிழக்கு, இணையத்தை மிக வெற்றிகரமான சந்தைப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தும் ஒரே தமிழ்ப் பாதுப்பு நிறுவனம் என்று சொன்னால் தவறே இல்லை.

    பரபரப்பான செய்திகளை வைத்து, சுடச் சுட செய்திகளைக் கொடுத்த காலம் போய், செய்திகளையே புத்தகமாக்குகிற, உடனடியாகச் சந்தைக்குக் கொண்டுவருகிற சாமர்த்தியம், கிழக்குக்கு மட்டுமே இன்றைக்கு இருக்கிறது. மாறிவரும் தேவைகளைப் புரிந்துகொள்கிற, அதற்குத் தகுந்த மாதிரித் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிற திறமையும் கிழக்குக்கு மட்டுமே இருக்கிறது.

    நேற்றைய கணக்கீடுகள்படி இல்லாமலும், நின்றைய நிலவரம் என்பது என்ன என்பது தெளிவாகாமலும், புத்தகச் சந்தை ஒரு புதிய திசையில், நிச்சயமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. மாறுவதைப் புரிந்துகொள்ள ஒரு கணம் நின்று யோசிக்க வைத்த இந்தக் கட்டுரைக்கு எனது மனமுவந்த நன்றி.

  2. மயிலாடுதுறை சிவா says:

    பதிப்பகம் பற்றி நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.

    ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க எவ்வளவு தொகை தேவைப் படும்?

    மயிலாடுதுறை சிவா…

  3. நல்ல தொகுப்பு

    //இரண்டாவது, தமிழ்ப பதிப்புலகில் ஒரு வகையான கண்சாலிடேஷன் ஏற்பட வேண்டும். எண்ணற்ற சின்ன பதிப்பகங்கள் இருக்கின்றன. அவர்களால், அற்புதமான புதிய எழுத்தாளர்களையும் புதிய படைப்புகளையும் இனம் காண முடிகிறது. புத்தகம் வெளியிட முடிகிறது. ஆனால், விற்பனையில் பெரிய எண்ணிக்கை வருவதில்லை. பெரிய பதிப்பகங்கள், இந்தப் புதிய எழுத்தாளர்களையும் படைப்புகளையும் இனம் காணுவதில்லை. அவர்களுடைய வேகப் பார்வையில் இவர்கள் படுவதே இல்லை.//

    இது தற்சமயம் ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன்..

  4. From a book lover’s point of view, do you know how difficult it is to shop for books in Tamil? The only time I get to have a shopping experience is the annual Book fair. The experience there is “low quality” (hot ambience, narrow aisles, huge crowd etc).

    We need high quality retail shops (the equivalent of a “Landmark” or a “Crossword”) for Tamil books.

    Online distribution alone cannot make an industry big. Buying a book is like searching for a word in a dictionary. You may get what you want. What is more enjoyable is the stuff you stumble into!

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply