மாற்றுப் பார்வையை முன்வைக்கும் ‘புதிய தலைமுறை’

மாலனை ஆசிரியராகக் கொண்டு இளைஞர்களுக்கான புதிய வார இதழ் ‘புதிய தலைமுறை’ செப்டம்பர் 2009ல் இருந்து வெளிவரப் போகிறது. எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் இந்த இதழைத் தொடங்கியிருக்கிறது. அதன் முதல் மாதிரி இதழ், எனக்கு இரண்டு படிகள் நேற்று வந்து சேர்ந்தன. கவரைப் பிரித்துப் பார்த்தவுடன், முதல் பார்வையில் இந்த இதழ் ஆங்கில டைம் இதழின் தோற்றத்தையே தந்தது. கண்களில் அடிக்காத வண்ணம், அதிக பக்கங்கள் இல்லாமல் சிக்கென இருந்தது.

வழக்கம்போல், புதிய பேப்பரின் வாசனையை முகர்ந்து பார்த்துவிட்டு, பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன். தலைப்புகளை மட்டும் படித்துக்கொண்டே முழு இதழையும் புரட்டிப் பார்த்தேன். லே அவுட், கலர் சென்ஸ் எல்லாம் புரொபஷ்னலாக இருந்தது. திடீரென்று பல்லை இளிக்கும் வெளிர்மஞ்சள் இல்லை. காடியான பச்சை எங்கும் இல்லை. ஒன்றிரண்டு கட்டுரை ஓப்பனிங் பக்க டிசைன்கள் அழகாக இல்லை. கணினியில் எழுத ‘எல்லாமே ஓசி’ கட்டுரை மட்டும் கொஞ்சம் அசிரத்தையான லே அவுட்.

இதைப் புரட்டிக்கொண்டு இருக்கும்போதே, மனத்தில், எந்த இதழோடு இதைப் பொருத்திப் பார்ப்பது? ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற கேள்விகள் தோன்றின. இதற்கு முன்னர் இளைஞர் இதழ் என்று தமிழில் ஏதேனும் இருந்ததுண்டா? இளைஞர் இதழ் என்று இந்த இதழ் வெளிப்படையாக எங்கும் பிரகடணப்படுத்திக்கொள்ளவில்லை. ஆங்கிலத்தில் உள்ள இளைஞர் இதழ்களோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமா?

எதனோடு பொருத்திப் பார்ப்பது என்பதைவிட, எதனோடெல்லாம் இதைப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்ற எண்ணமும் கூடவே வந்தது. இந்த இதழை சிறுபத்திரிகைகளோடு ஒப்பிடக் கூடாது. அதேபோல், இதை வெகுஜன இதழ்களோடும் ஒப்பிடக் கூடாது (விளம்பர ஏஜென்சிகள் இதனை வெகுஜன இதழ்களோடுதான் ஒப்பிட்டுப் பார்க்கும் என்பது வேறு கதை). இது முற்றிலும் வேறொரு ஃபார்மெட்டில் இருக்கிறது.

நாற்பத்தெட்டு பக்கங்களில், ஒரு சிறுகதை, சாதிக்கும் இளம்பெண்கள் பற்றிய கட்டுரை, உமா சக்தியின் கவிதை, சர்க்கரை நோய் பற்றிய கட்டுரை, ஒரு தன்னம்பிக்கை (சுயமுன்னேற்ற) வடிவ கட்டிரை, சினிமா விமர்சனம், சினிமா துறையில் கிராமத்து இளைஞர்கள் செய்துள்ள சாதனைகள் பற்றி கட்டுரை, சீமானோடு ஒரு நேர்காணல், எஞ்சினியரிங் கவுன்சிலிங் பற்றி ஒரு கட்டுரை, பைக் வாங்குவது பற்றி ஒரு கட்டுரை, ஒரு சிற்றுலா கட்டுரை, கே.ஆர். மணி மொழிபெயர்த்த ‘எங்கே போனது என் அல்வா துண்டு?’ புத்தகத்தின் அறிமுகம், ஒன்றிரண்டு பொதுக் கட்டுரைகள் ஆகியவை இருக்கின்றன.

இளைஞர்கள் என்றாலே ஆழமாகப் படிக்க மாட்டார்கள், கொறிப்பார்கள், அவர்களுடைய அட்டென்ஷன் ஸ்பான் குறுகியது ஆகிய வெகுஜன பத்திரிகையின் எண்ணங்கள் இந்த இதழின் தயாரிப்பில் குறுக்கிடவே இல்லை என்பது நன்கு தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையும் மூன்று நான்கு பக்கங்களுக்கு நீளுகின்றன. அதேபோல், அவர்கள் கவர்ச்சியையும் சென்சேஷனையும் தேடி ஓடுகிறார்கள் என்ற பொருத்தமற்ற எண்ணமும் இவ்விதழில் குறுக்கிடவில்லை. இளம்பெண்களை எங்குமே கவர்ச்சி வஸ்துவாக இவ்விதழ் காட்டவில்லை.

கட்டுரைகளையும் பேட்டியையும் கதையையும் படித்து முடித்தேன். முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது. எழுத்து முழுவதிலும் ஒரு கண்ணியம் இருக்கிறது. நிதானம் இருக்கிறது. அமரிக்கை இருக்கிறது. சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்ற பொறுப்பு இருக்கிறது. எல்லா கட்டுரைகளும் புரியும்படி இருக்கிறது. வார்த்தை ஜோடனைகளோ, Highbrow மனப்பான்மையோ இல்லை. பம்மாத்து இல்லை. தனிமனித துதி இல்லை. என் மனத்துக்கு நிறைவாக இருந்தது.

இதுவரை இவ்விதழில் இருந்ததைச் சொல்லிவிட்டேன். என்ன இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

தலையங்கம் வேண்டும். இளைஞர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக தலையங்கம் இருக்கவேண்டும். தலையங்கம் தான் பத்திரிகையின் குரல். இந்த இதழில் அந்தக் குரல் கேட்கவேண்டியது மிக அவசியம். வெகுஜன ஊடகங்கள் திரும்பத் திரும்ப இளைஞர்களின் குரல் என்று ஒரு மாய பிம்பத்தைச் சமைத்துக்கொண்டு இருக்க, நிச்சயம் அது மட்டுமே எங்கள் குரல் அல்ல, எங்களுக்கு வேறு குரல்களும் குறிக்கோள்களும் உண்டு என்று இந்தத் தலையங்கம் எடுத்துச் சொல்வது அவசியம்.

மற்றொன்று, ஸ்டைல். நான் எழுத்துப் பாணி, நடைகளின் தனிக்காதலன். இந்த இதழில் யாருக்கும் தனி நடை இருப்பதாக தெரியவில்லை. வித்தியாசமான எழுத்து நடை, வட்டார வழக்குகள், சொல்லும் முறை ஆகியவற்றுக்கு இந்த இதழ் இடம்கொடுக்க வேண்டும். இதழ் மொத்தமும் ஒரே குரலும் நடையும் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். காட்சி ஊடகம் எப்படி கட்டிப் போடுகிறதோ அதேபோல் எழுத்து ஊடகமும் கட்டிப் போட வேண்டும். வெரைட்டி இருந்தால்தான் அது சாத்தியம்.

உலக அரசியலும் உள்ளூர் அரசியலும் வேண்டும். தகவல் கட்டுரைகளாக, அலசல்களாக, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக அரசியல் இருக்க வேண்டும். அழுத்தந்திருந்தமான கருத்துகள் சொல்லப்பட வேண்டும்.

இணையமும் கணினியும் செல்போனோனும் சார்ந்திருக்கும் இளைஞர் சமூகத்தைவிட, அது இல்லாமல், இன்னும் சிறு நகரங்களிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் இருக்கும் இளைஞர்கள் அதிகம். அவர்கள் இன்னும் அச்சடித்த எழுத்தை நம்புகிறார்கள். அதில் தங்கள் பெயர் பத்து பாயிண்ட் போல்டில் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கான கனவுகளும் எதார்த்தங்களும் வேறு. புதிய தலைமுறை, அந்த வாசகர்களையும் மனத்தில் கொண்டு படைக்கப்படுவது சரியாக இருக்கும்.

இந்தப் பத்திரிகைக்கு விலை குறிப்பிடப்படவில்லை (இது மாதிரி இதழ்). விலை ரூ. 10, ரூ.15 வைக்கப்படலாம். இந்த விலைக்கு 48 பக்கங்கள் மிகவும் குறைவு என்ற எண்ணம் வராமல் இல்லை. 80 பக்கங்களேனும் இருப்பது சரியாக இருக்கும்.

ஒரு வகையில், சினிமா தொலைக்காட்சி பத்திரிகைகள் என்று வெகுஜன கலாசாரத்தில் இளைஞர்கள் பற்றி படிந்துபோயுள்ள வழக்கமான கொச்சை பிம்பங்களுக்கு மாற்றாக இந்த இதழ் இருக்க முயற்சித்திருக்கிறது. அதனாலேயே பல இளைஞர்களுக்கு இவ்விதழோடு ஒன்றிப் போக முடியும். என்னால் முடிகிறது. இதுதான் இவ்விதழில் வெற்றியாக இருக்க முடியும்.

பி.கு 1: என் மனைவி இவ்விதழை படித்து முடித்துவிட்டார். அவர் கமெண்ட்: ‘வடக்கு வாசல், ரசனை, உயிர்மை எல்லாம் வருதே.. அது மாதிரி இருக்கு இது.’
பி.கு.2: எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்துகின்றன.

  1. மாலன் தான் எடுத்து வைக்கும் திசை இன்னது என்று புரிந்துகொண்டுதான் இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்று நம்புகிறேன்.

    பின்குறிப்பு ஒன்று, இரண்டில் இருப்பதை மாலன் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டதா?

  2. மயிலாடுதுறை சிவா says:

    மாலனுக்கு வாழ்த்துக்கள்! இந்த பத்திரிக்கை இணையத்தில் கிடைக்குமா?

    மயிலாடுதுறை சிவா…

  3. இப்பொழுதுதான் முதல் இதழ் வந்திருக்கிறது. அதற்குள் அதைப் பற்றிய அபிப்பிராயத்தையும், அபிலாஷைகளையும் முன் வைப்பது சரியானதாக இருக்காது என்பது என் கருத்து. திரு. மாலனின் கைவண்ணம் எப்போதும் சிறப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. சில இதழ்கள் வந்த பிறகு தான் ‘புதிய தலைமுறை’ யின் நோக்கம், டார்கெட் ஆடியன்ஸ், உள்ளடகத்தின் பலம், பலவீனம், சிறப்பு, சிறப்பின்மை போன்றவற்றைப் பற்றிச் சொல்ல முடியும், விமர்சிக்க முடியும் என்று கருதுகிறேன். ஆனால் ஒருவிதத்தில் புதிய தலைமுறை போன்ற இதழ்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனென்றால் தமிழில் இளைஞர்களுக்கென்று, அவர்களது அறிவார்ந்த சிந்தனையை மேம்படுத்தும் இதழ்கள் எதுவுமே வெளிவரவில்லை. புதியதலைமுறை அந்தக் குறையைப் போக்கும் என்று நம்புவோம்.

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply