ஒரு துளி தேன்
நான் போராடக்கூடிய ஒரு சில விஷயங்கள் இருந்தன. அதில் முக்கியமானது, தினசரி செலவுகளை ஞாபகம் வைத்துக்கொள்வது. வெளியே கடைக்குப் போவேன்.வீட்டுக்கு வேண்டியதை எல்லாம் வாங்குவேன். பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன். என்ன பில் ஆச்சு, கடைக்காரர் சரியாகக் கூட்டியிருக்கிறாரா என்றெல்லாம் பார்க்கும் பழக்கம் இல்லை. இதைவிடப் பெரிய பிரச்னை, சட்டென பர்ஸில் பணமில்லாமல் போவது. அதுவும் சாலையில் எங்காவது போய்கொண்டு இருக்கும்போது, வண்டியின் பெட்ரோல் தீர்ந்துவிடும். பெட்ரோல் ஸ்டேஷனுக்குள் போகும்போதுதான், பர்ஸில் பணமில்லையே, வங்கியில் இருந்து எடுக்கவேண்டுமே என்பது ஞாபகம் வரும். திட்டமிடாமல் வாழ்ந்த காலம் அது.
செலவுகளை ஒழுங்காக எழுதி வைத்தால், ஓரளவுக்குக் கணக்குப் பிடிபடும் என்று மனது சொல்லத் தொடங்கியது. இதைச் செயல்படுத்திவிட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் 80 பக்கம் நோட்டு ஒன்றை வாங்கி, கணக்கெழுத ஆரம்பிப்பேன். சரியாக மூன்றாவது நாள் சோம்பேறித்தனம் வரும். எழுதாமல் இருக்க ஏதேனும் ஒரு காரணத்தை மனம் தேடும். நமக்குத் தெரியாமல் அப்படி என்ன செலவு செய்துவிடப் போகிறோம்? நான் ஒன்றும் ஊதாரி கிடையாது. எதற்கு வீணாக இதையெல்லாம் எழுத வேண்டும்? வரிசையாகக் காரணங்கள். ஐந்தாவது நாள் மூடுவிழா.
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் படையெடுப்பேன். இந்த முறை சலிப்பே வரக்கூடாது. கணக்கு எழுதும் பழக்கத்தால், என்னவெல்லாம் சாதனை செய்ய முடியும் தெரியுமா? ஆண்டு பட்ஜெட் போட முடியும். வரக் கூடிய செலவுகளை முன்கூட்டியே யோசித்துவிட முடியும். அதற்குத் தேவையான பணத்தைத் தயார்செய்து வைத்துக்கொள்ள முடியும். செலவுகள் போக முடிந்தவரை சேமிக்கவும் பார்க்கவேண்டும். முனைப்பு எவ்வளவு தீவிரமாக இருக்கிறதோ, அவ்வளவு சீக்கிரமாக சலிப்பும் வந்துவிடும். இழுத்துப் பிடித்து 3 நாள்கள் எழுதுவேன். அத்தோடு சரி.
ஒரு விஷயத்தை வழக்கப்படுத்திக்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை அப்போதுதான் நேரடியாகப் புரிந்துகொண்டேன். மூளை ஒன்றைச் சொல்லும், உடம்பு வேறொன்றைச் செய்யும். ஒருவித கையாலாகத்தனம், எரிச்சல், பச்சாதாபம் எல்லாம் எட்டிப் பார்க்கும். பூனாவில் இருக்கும்போதுதான், இதற்கு ஒரு விடிவு பிறந்தது. மனைவியும் மகள்களும் சென்னையில். நான் மட்டும் பூனாவில். அலுவலகத்தில் இருந்து வீடு வந்துவிட்டால், வேறு வேலையே கிடையாது. என்னை முழுமையாக ஆட்படுத்திக்கொள்ள புத்தகங்களும் எழுத்தும்தான் பயன்பட்டன. கூடவே கணக்கெழுதுவது. விடாமல் ஒரு மாசம் எழுதியிருப்பேன். ஐம்பது பைசா செலவைக் கூட ஞாபகம் வைத்துக்கொண்டு எழுதிவைத்தேன். விளைவு, ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.
அப்போதுதான் 21 நாள் பயிற்சி பற்றிப் படித்தேன். எங்கு படித்தேன் என்று இப்போது ஞாபகமில்லை. ஏதேனும் ஒரு செயலை 21 நாள்கள் தொடர்ந்து செய்து வந்தீர்கள் என்றால், அது வழக்கமாகிவிடும். உடம்பும் மனமும் மூளையும் ஒரு நேர்க்கோட்டுக்கு வர 21 நாள்கள் ஆகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் மோதிக்கொண்டு இருக்கும்போது, எல்லாவற்றையும் ஒத்திசைந்து வேலை செய்ய வைக்க 21 நாள்கள் தேவைப்படும்.
நான் கணக்கெழுத ஆரம்பித்த தேதியை மீண்டும் பார்த்தேன். ஒரு மாதத்துக்கு மேல் ஆகியிருந்தது. கணக்கெழுத வேண்டும் என்ற எண்ணம் இதற்குள் எனக்குள் ஆழ ஊடுருவியிருந்தது. சொல்லப்போனால், ஒவ்வொரு செலவைச் செய்யும்போதும், வரவைப் பெறும்போதும், மனத்துக்குள்ளேயே அன்றைக்கு இன்னின்ன விஷயங்களை நோட்டில் எழுதவேண்டும் என்று குறித்துவைத்துக்கொள்வேன். இரவு எழுத ஆரம்பித்தவுடன், கடகடவென செலவுகள் காட்சிபோல் மனத்தில் தோன்ற ஆரம்பித்துவிடும்.
இன்னொன்றையும் கவனித்தேன். வீணான கேள்விகளே எழுவதில்லை. எழுதிவைத்து ஆகப்போவது என்ன? அரிசி, பருப்பு, எண்ணை, காய்கறிகள் என்று அதே செலவுகள்தானே? ஒன்றும் புதிதாகச் செய்யவில்லையே.. இதைப் போய் ஏன் எழுதுவானேன் என்று இடக்கு கேள்விகள் தோன்றவில்லை. இதனால் ஏற்பட்ட பயன்களை நான் அனுபவபூர்வமாக உணர ஆரம்பித்துவிட்டேன். என் வழக்கம் என் மனைவிக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. என் சின்ன மகளுக்கும் கூடத் தொற்றிக்கொண்டுவிட்டது.
ஒரு விஷயத்தை 21 நாளில் கற்றுக்கொள்ள முடியும், வழக்கப்படுத்திக்கொள்ள முடியும் என்றால், ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 12 வித்தைகளையாவது கற்றுக்கொள்ள முடியும். ஒருவன் 30 ஆண்டுகள் உடல்நலனோடு வாழ்ந்தால், 30 x 12 = 360 வித்தைகள் / விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். யோசிக்கவே ஆச்சரியமாக இருந்தது. எத்தனை மொழிகள் கற்க முடியும்? எத்தனை துறைகளைப் படிக்க முடியும்? எத்தனை நல்ல வழக்கங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்?
அதுவும் இந்த 21 நாள்கள் என்பது மந்திரச் சொல் மாதிரி இருக்கிறது. நிறைய இடங்களில் இந்த 21 நாள்கள் பயன்படுகின்றன. கார் டிரைவிங் கற்றுக்கொள்ளப் போனால், 21 நாள் கிளாஸ். திருவல்லிக்கேணி விவேகானந்தா கேந்திராவில் யோகா கற்கப் போனால், 21 நாள் கிளாஸ். நீச்சல் பயிற்சிக்குப் போனால் 21 நாள் கிளாஸ். பெரும்பாலான கிராஷ் கோர்ஸ்களின் பயிற்சிக் காலகட்டம் 21 நாள்கள். 3 வாரம் என்பது மிகவும் நீண்ட காலமுமில்லை, மிகக் குறைவான காலகட்டமும் இல்லை. சரியான கால அளவு. ஆறு மாசம், ஒரு வருடம் கோர்ஸ் என்பதைவிட, 3 வாரம் என்றவுடன் போய் சேர்ந்துவிட மனது உடனே அனுமதி கொடுத்துவிடுகிறது.
21 நாள்கள் என்பது ஆரம்ப வேகம் போல் இருக்கிறது. அது, ஒரு துறையின், ஒரு செயலின் சுவையை, குழந்தைக்கு நாக்கில் தேனைத் தடவுவது மாதிரி தடவிவிடும் போலிருக்கிறது. ஒரு துளி தேன், தேனின் திளைப்பை கோடி காட்டிவிடுகிறது. அதைப் முழுமையாகப் பருகும் ஆசை தொடருவதில் ஆச்சரியமே இல்லை.
21 நாள்கள் டெக்னிக்கை இப்போது பல விஷயங்களில் நான் பயன்படுத்தி வருகிறேன். உடற்பயிற்சி, படிப்பு, டிவி சீரியல்களைத் தவிர்த்தல், பேசும்போது ஒரு சில சொற்களைப் பயன்படுத்தாது தவிர்த்தல் என்று சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து என் முயற்சியை செய்து பார்த்தேன். நல்ல பலன். ஒன்றும் வேண்டாம், முகத்தைச் சவரம் செய்துகொள்வது எவ்வளவு சின்ன விஷயம். சனி, ஞாயிறு வந்துவிட்டால், ஒரு வித சோம்பல், அசதி வந்துவிடும். இரண்டு நாள் தாடியோடு அலைவேன். விடிகாலையில் பல் துலக்கியவுடன், கூடவே சவரம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துச் செயல்படுத்த, எனக்கே என் முகம் களையாக இருக்கிறது!
வழக்கம்தான் நிறைய விஷயங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்குவேஸ் காலையில் ஒன்பது மணிக்கு தன் அறையில் எழுத நுழைந்துவிட்டால், மதியம் ஒரு மணி வரை எழுதுவாராம். அசோகமித்திரனைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி என்று நினைக்கிறேன். நிறைய எழுதிக் குவித்திருக்கிறீர்கள் என்பது போல் ஒரு கேள்விக்கு, 20 வருஷமா, தினமும் காலை அரை மணி நேரம் எழுதினது. இவ்வளவு பக்கங்கள் வராமலா இருக்கும் என்று பதில் சொன்னார். க.நா.சு. சோர்வே இல்லாமல் எழுதியிருக்கிறார்.
வழக்கம் என்பது ஒரு செயலின் மேல் காதலை உருவாக்கிவிடும். ஆரம்பம், வேகம். பின்பு எரிச்சல். அப்புறம் கொஞ்சம் தொய்வு. விட்டுவிடக் கூடாது என்று தொடர்ந்து செய்ய முனையும்போது, ஒரு செயலின் நுணுக்கங்களுக்குள் கவனம் குவிய ஆரம்பிக்கும். அது ஏதோ ஒருவிதமான மாற்றத்தை தனக்குள் ஏற்படுத்துகிறது என்பதை மெல்ல புரிந்துகொள்ளும் தருணம் அடுத்தது. திரும்பிப் பார்ப்பதற்குள் 21 நாள் முடிந்துபோயிருக்கும். ஆனால், ஈடுபட ஆரம்பித்த செயல், கற்க ஆரம்பித்த வித்தை, மெல்ல கிளைபரப்பி வளர ஆரம்பித்திருக்கும். ஆசை இன்னும் தீவிரப்படும். தொடர்ந்து ஈடுபடுவது அதற்குப் பின்னர் நிற்கவே நிற்காது.
ஒருவகையில், இந்த நேசமுடனும் என்னுடைய 21 நாள் பயிற்சியின் தொடர்ச்சிதான்.
வணக்கம் வெங்கடேஷ்,
நீண்ட நாட்களாகிறது தொடர்பு கொண்டு. நீங்கள் சொன்ன சோம்பேறித்தனம் எனக்கும் நிறைய உண்டு.(நிறைய பேருக்கும் என்று நினைக்கிறேன்). உங்கள் 21 நாள் பயிற்சியை கண்டிப்பாக முயற்சிக்கிறேன். நீங்கள் சொல்வது போல் நம் நாட்டில்தான் ஹார்ன் தேவையில்லாமல் அடிக்கிறார்கள். இங்கு ஹார்ன் சத்தம் கேட்கவே முடியாது. அப்படிக் கேட்டால் முன்னால் செல்பவர் ஏதோ தவறு செய்கிறார் என்று அர்த்தம். மிகப் பயனுள்ளப் பதிவுகள்
செலவுக் குறிப்புகளை எழுதி வைப்பது என்பது ஆண்களுக்கு ஒருவித சோம்பேறித்தனமான விஷயம் மட்டுமல்ல; கௌரவக் குறைவாகவும் பலர் நினைக்கிறார்கள் என்பதே உண்மை. அட, இதையெல்லாம் போய் மெனக்கெட்டு எழுதிக்கிட்டு என்பது தான் பல ஆண்களின் மனோபாவம்.
ஆனால் பெண்களைப் பாருங்கள் (நவீனப் பெண்கள் விதிவிலக்கு) அவர்கள் கண்டிப்பாக செலவுக் கணக்கை எழுதாமல் இருக்க மாட்டார்கள்.
சில ஆண்களுக்கு எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் தொடர்ந்து செயல்பட எண்ணம் இருக்காது. அவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குறிப்புகள் மிகவும் பயனளிக்கும்.
நான் கூட சில நாட்கள் செலவுக் கணக்கை எழுத முயற்சித்து பின்னர் விட்டு விடுகிறேன், நாம் என்ன அநாவசியச் செலவுகளா செய்கிறோம் என்ற எண்ணத்தில்… ஆனால் புத்தகங்கள், குறுந்தகடுகள், சினிமா, சங்கீத வி.சி.டிக்கள் என்று சமயத்தில் கணக்குப் பார்த்தால் சிலவற்றை வாங்காமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றும். கண்கெட்ட பிறகு கதிரவன் வணக்கம் போல். நீங்கள் சொன்ன ஆலோசனைகளை வரும் 21ம் தேதி முதல் செயல்படுத்திப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
ஒரு 21 நாள் ஹார்ன் அடிக்காமல் பழகி பார்க்கிறேன்.