மாயவித்தை செய்யும் மனனம்
சின்ன வயதில் இருந்து எந்த ஒரு பாடத்தையும் செய்யுளையும் கணித சூத்திரத்தையும் மனப்பாடம் செய்யக்கூடாது என்று மனத்தில் தோன்றிவிட்டது. எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது என்றெல்லாம் ஞாபகமில்லை. ஆனால், பாடத்தைப் புரிந்து படித்துக்கொள்வதும் கணித சூத்திரத்தை விளங்கிககொள்வதும் முக்கியமே தவிர, மனப்பாடம் செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்துவிட்டேன். இதே முனைப்புடன் கல்லூரிக் காலத்தையும் ஓட்டிவிட்டேன்.
கல்லூரிக் காலத்தில் மனப்பாடம் செய்பவர்களை மிகவும் இளக்காரமாக பார்த்ததும் உண்டு. சுயசிந்தனை அற்றவர்கள், மதிப்பெண் வாங்குவது மட்டுமே குறிக்கோள், புரிந்துகொள்வது அல்ல என்பது அப்போது என் எண்ணம். பல மாணவர்களிடம் அது உண்மையாகவும் இருந்தது. முதலாண்டு படித்தது எதுவும் அடுத்த ஆண்டில் ஞாபகம் இருந்ததில்லை. எல்லாம் அந்த ஆண்டு எழுதும் தேர்வோடு முடிந்து போய்விட்டவர்களும் உண்டு.
ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றிப் படிக்க திறனற்றவர்களே, மனனம் செய்வார்கள் என்ற ஒருவித தப்பான எண்ணமும் இருந்தது. தேர்வும் மதிப்பெண்ணும் அதனால் பெறப்படும் உயர் உத்யோகமும் மட்டுமே முக்கியமாகக் கருதப்படும் காலகட்டத்தில், மாணவர்கள் மனனம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நமது அமைப்பில் உள்ள குறையிது. மாணவர்கள் என்ன செய்வார்கள்? இதெல்லாம் இப்போது தோன்றும் எண்ணங்கள். அன்று, மனனம் செய்து எழுதுபவர்களை, “வாந்தி”, “டப்பா” என்றெல்லாம் கேலி பேசியது உண்டு.
படிப்பு என்றில்லை, இலக்கியத்திலும் இதே அளவுகோலைத்தான் நான் பயன்படுத்தினேன். சந்த நயத்தோடு, மீட்டரோடு எழுதப்பட்ட செய்யுள்களை புறமொதுக்கிவிட்டேன். பாவகைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேனே தவிர, அதைக் கொண்டு எழுதுவதை கவிதை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. இது என் தப்பு மட்டுமல்ல. நான் படித்த பல சமகாலக் கவிதைத் தொகுதிகள், உள்ளடக்கமே இல்லாமல் வெறும் செய்யப்படும் கவிதைகளாக இருந்தன. நிறைய பேருக்கு மீட்டர் பிடிபட்டுவிட்டது, மேட்டர் பிடிபடவில்லை. மரபுக் கவிதையில் எனக்குப் போதுமான பயிற்சி இல்லை என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஆனாலும் படித்ததில் ஏராளமானவை குப்பைகள். புதுக்கவிதையும் நவீன கவிதையும் தான் என்னைக் காப்பாற்றின. கவிதையை அனுபவிக்கும் ரசனை எனக்குப் புதுக்கவிதை வழியேதான் பிடிபட்டது. ஆங்கிலக் கவிதை வழியே இந்த ரசனை இன்னும் கொஞ்சம் மேம்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு வகையான அனுபவங்களுக்கு ஆட்பட்டு வருகிறேன். ஹரிகிருஷ்ணன், சுதா சேஷய்யன், அவ்வை நடராஜன் வழியே கம்பனையும் திருவள்ளுவரையும் ஆழத் தோய்ந்து வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாலாயிர திவ்யப் பிரபந்தம், சைவப் பாடல்கள் ஆகியவற்றையும் தொடர்ந்து வாசிக்கிறேன். பழம் இலக்கியச் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன்.
இப்போது ஒரு விஷயம் புரியத் தொடங்கியது. இலக்கியச் சொற்பொழிவுகள் செய்பவர்கள், பல முக்கியப் பாடல்களை முழுவதும் மனனம் செய்து வைத்திருக்கிறார்கள். அப்பாடல்களுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரைகளையும் வரி பிறழாமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பிறகு, அதன் மேல் ஒரு வேல்யூ அடிஷன் நடக்கிறது. அது இரண்டு தளங்களில் நடக்கிறது. சமகால பொருத்தப்பாட்டில் இருந்து, இப்பழைய பாடல்களுக்குத் தக்க பொருள் அல்லது விளக்கம் அல்லது நீட்சி வழங்குகிறார்கள். திருக்குறளுக்கு இப்படி எழுதப்பட்ட பல உரைகளைப் படித்தேன். ஒவ்வொருவரின் மனச்சாய்வுக்கும் கருதுகோள்களுக்கும் ஏற்ப, விளக்கங்கள் இருக்கின்றன. இது இயல்பான ஒன்று. இது ஒருவகை வேல்யூ அடிஷன்.
அடுத்த வகை வேல்யூ அடிஷனை அவ்வை நடராஜனிடம் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல பாடல்களில் உள்ள சொற்களைத் தட்டி தட்டி பொருள் சொல்கிறார் அவர். எண்ணற்ற பாடல்கள் அவர் ஞாபகத்தில் இருப்பதால், ஒரு பாடலின் சொற்களை வேறொன்றோடு தொடர்பு படுத்தவும், முற்றிலும் வேறொரு அனுபவத்தைத் தீட்டித் தரவும் அவரால் முடிகிறது. மேலும் அவ்வையோடு, பேராசிரியர் வைத்தியலிங்கன் என்பவர் இருக்கிறார். அவர் பாடல்களைப் பண்ணோடு பாடிகாட்டவும் தெரிந்தவர்.
சென்ற வாரம் அவ்வையோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்த ‘யாதும் ஊரே, யாவரு கேளீர்’ என்ற வரி எப்படித் தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது என்பதை விளக்கினார். அந்த முழுப்பாடலையும் ஏற்ற இறக்கங்களோடு சந்தத்தோடு சொல்லக் கேட்டபோது, அதன் பின்னே இருக்கும் தொனி முற்றிலும் வேறாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு வித சோக, தத்துவக் கவிதை. சாவைப் பற்றிய கவிதை. அவலச் சுவை. வாழ்வின் மேல் துளியும் நம்பிக்கை இல்லாத கவிதை. ஆனால், தமிழனின் பரந்த மனப்பான்மை, தாராள எண்ணம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவே இந்த வரியை தப்பாக Out of contextல் பயன்படுத்தும் நமது போக்கை எடுத்துச் சொன்னார்.
எனக்கு அப்போதுதான் மனனம் செய்வதின் முக்கியத்துவம் விளங்கியது. பாடல்கள் மனத்துக்குள் வளையவந்து ரீங்கரிக்கும்போது, ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளை மட்டுமல்ல, அதன் பின்னே உள்ள தொனி, லயம் ஆகியவற்றையும் சேர்த்து உள்ளே வாங்கிக்கொள்ள முடிகிறது. அதுவும் கம்பனின் பல பாடல்களில் உள்ள இசை நயம், பாடல் தரும் பொருளை பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது.
முன்பொருமுறை பேராசிரியர் நாகநந்தி அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அயோத்தியின் உயர்ந்த வெளிப்புற வாயில்களில் கட்டப்பட்டுள்ள கொடிகள் ஆடிய விதத்தை கம்பன் எழுதிய நடையிலேயே எடுத்துச் சொன்னார். கவிதை அங்கே சட்டென காட்சி வடிவம் கொள்வதும் சொற்கள், பொருள் என்ற தம் எல்லை தாண்டி வேறொரு மாயவித்தை செய்வதும் எனக்குப் புரிந்தது. கவிதைகள் மனப்பாடமாக தெரிந்தால் அன்றி, இந்தச் சுவைகளை உணர முடியாது, மற்றவர்களுக்கு வெளியே எடுத்துச் சொல்லவும் முடியாது.
நவீன உரைநடைக்குள்ளும் பழம்தமிழ் பாடல்கள் இணங்கி வரலாம் என்பதை நான் அ.முத்துலிங்கத்திடம் பார்த்தேன். அவருடைய வம்சவிருத்தி தொகுதியில் உள்ள கதைகளில் மிகவும் பொருத்தமான இடங்களில் செய்யுள்கள் வருகின்றன. சட்டென எழுத்தின் தளத்தை இக்கவிதைகள் உயர்த்தி நிறுத்துகின்றன.
குறைந்தபட்சம் 100 நல்ல கவிதைகளையாவது மனனம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். வாழ்க்கை முழுவதும் அதை மென்று சுவைத்தாலே போதும்!
வெங்கடேஷ், நல்ல கவிதைகளை நான் மனப்பாடம் செய்வதில்லை. நல்ல கவிதைகள் எனக்கு மனப்பாடமாகிவிடுகின்றன. அவ்ளதான்.
வேடிக்கை இருக்கட்டும். முனைந்து மனப்பாடமாக இருத்திக் கொள்வதால் நிறைய வசதிகள் உண்டு. நடந்து போய்க்கொண்டிருக்கும்போதும், தனியாக இருக்கும் சமயங்களிலும் மற்ற சந்தர்ப்பங்களிலும் மனத்துக்குள் அதுபாட்டுக்கு ஒருபக்கம் பாடமாக இருப்பதெல்லாம் ஓடத் தொடங்கும். புத்தகத்தைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லாமலேயே வாசிக்கும் அனுபவம் மீண்டும் மீண்டும் கிட்டும். நிறைய சிந்திக்கவும், ரசானுபவப் பெருக்கத்துக்கும் இந்த முயற்சி பயனாகிறது. ‘கணினி யுகத்தில் மனப்பாட ஜந்த்துக்கள்‘ குறித்த பிம்பம் உடைபட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. நூறு என்ன, ஆயிரம் கவிதைகள் உங்கள் வசப்படுவதாக! இது சாதனை செய்க பராசக்தி!
/வெங்கடேஷ், நல்ல கவிதைகளை நான் மனப்பாடம் செய்வதில்லை. நல்ல கவிதைகள் எனக்கு மனப்பாடமாகிவிடுகின்றன. /
)
எனக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாது. நல்ல கவிதைகள், என்னுள் தங்கி விடுகின்றன!
//ஒரு வித சோக, தத்துவக் கவிதை. சாவைப் பற்றிய கவிதை. அவலச் சுவை. வாழ்வின் மேல் துளியும் நம்பிக்கை இல்லாத கவிதை. ஆனால், தமிழனின் பரந்த மனப்பான்மை, தாராள எண்ணம் ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகவே இந்த வரியை தப்பாக Out of contextல் பயன்படுத்தும் நமது போக்கை எடுத்துச் சொன்னார்//
இல்லை; இது சாவைப் பற்றிய கவிதை அல்ல. வாழ்வைப் பற்றிய கவிதை. இது நம்பிக்கையின்மையைப் பற்றிப் பேசவில்லை. இது இப்படித்தான், வாழ்க்கை என்பதன் இயல்பு இதுதான், ஆகவே அதைப் பற்றி நாம் அதைரியம் கொள்ளாமல் நமது செயல்களைத் தொடர்வோம் என்கிறது. மேலும் நாம் செய்யும் செயல்கள் தான் அனைத்திற்கும் காரணம். எனவே அதற்காக பிறரை குறை கூறிக் கொண்டிருப்பதோ, பகைமை பாராட்டிக் கொண்டிருப்பதோ சரியல்ல; அனைவரும் நமது உறவினர்களே என்பதைத் தான் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகள் சுட்டுகிறது. ’யாதும் ஊரே’ தன்னம்பிக்கை தான் தொக்கி நிற்கிறதே தவிர, அவலச்சுவையல்ல.
கவிதையை ஒரு முறை வாசித்துப் பாருங்கள்…
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்,
இன்னாது என்றலும் இலமே’ மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆர் உயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே;
திணை – பொதுவியல்
துறை – பொருண்மொழிக் காஞ்சி
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே;
- என்ற வரிகளைப் படித்தால் ஒருவனுக்கு தன்னமிக்கை தான் மேலோங்குமே தவிர நம்பிக்கை வறட்சி என்பது ஏற்படவே ஏற்படாது.