வண்ணங்கள் பலவிதம்
சட்டென ஒரு கட்டத்தில் பேச்சு, கடுமையாகிவிட்டது. ராம்ஜி அமைதியானான். செல்வத்தின் முகத்தில் தெரிந்த வேகம் அவனைப் பேசவிடாமல் தடுத்தது. மேலும் அதே வழியில் பேசினால், கோபமும் வெறுப்பும் அதிகமாகலாம். விவாதம் அர்த்தமற்றுப் போய்விடலாம். எந்தப் பயனும் இல்லாமல் பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை. ராம்ஜி எழுந்துகொண்டான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு, கட்டைச் சுவருக்கு அருகில் போய் நின்றுகொண்டான்.
தெருவிளக்கு தூரத்தில் எரிந்துகொண்டிருந்தது. வீட்டுக்குத் திரும்பும் களைப்பு. மெதுவாக இரண்டு பெண்கள் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தார்கள். ஹான்டில்பாரின் ஒருபுறம் காய்கறிகள். பைக்கு வெளியே முருங்கைக்காய் துருத்திக்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் இறங்கி காய்கறி வாங்கிக்கொண்டு வருவார்களாக இருக்கும். இனிமேல் போய், பிள்ளைகளுக்கு படிப்புச் சொல்லிக் கொடுத்து, காலையில் செய்த சமையலையே சுட வைத்துச் சாப்பிட்டுப் படுத்துக்கொள்வார்கள், நாளை மீண்டும் அலுலகம் ஓட.
ராம்ஜி சிரித்துக்கொண்டான். எல்லோர் வீடும் தன்னுடையதைப் போலவே இருக்கும் என்று நம்பவேண்டியதில்லை. வித்தியாசமாகக் கூட இருக்கலாம். புறநகர் வாழ்வு ஒன்றுபோலவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. சைக்கிள் ஓட்டிப் போகும் பெண்ணுக்குக் கல்யாணமே நடைபெறாமல் கூட இருக்கலாம். அம்மா அப்பாவுக்குத் துணையாக வாழ்ந்துகொண்டிருக்கலாம். வீட்டுக்குப் போய், அம்மா கொடுக்கும் காபியைக் குடித்துவிட்டு, அமைதியாக காலையில் தவறவிட்ட நாளிதழைப் படிக்கலாம்.
ஏன் இப்படிக் கூட இருக்கலாம். தனக்கு மட்டும் சமைத்துச் சாப்பிட்டு, தனியாளாக வாழ்பவளாக இருக்கலாம். இருக்கலாம். எவ்வளவு சாத்தியங்கள். எவ்வளவு வண்ணங்கள். ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு, அனைத்து சாத்தியங்களையும் பொருத்த முடியுமானால், எத்தனை கதைகளை சிருஷ்டிக்கலாம்? எத்தனை வர்ணனைகளைத் தொடுக்கலாம்? உண்மை. வாழ்வின் சாத்தியங்கள் போல்தான், எழுத்தின் சாத்தியங்களும். அதன் விரிந்த பரந்த கரங்களை யார் முழுமையாக அறிந்தவர்?
ராம்ஜி திரும்பிப் பார்த்தான். செல்வம் இன்னும் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்தான். சற்றுமுன் நடந்த விவாதமோ, அதன் உக்கிரமோ இப்போது அறவே மறந்து போயிருந்தது. சொல்லப் போனால், சற்று அர்த்தமற்றும் தோன்றியது. எதற்காக இந்த விவாதம்? தேவையே இல்லையோ என்றும் தோன்றாமலில்லை.
“சரிடா, நீ சொல்றா மாதிரி, சண்முகத்தோட எல்லாக் கதைகளையும் தொகுத்துடுவோம்டா..”
செல்வம் இதை எதிர்பார்க்கவில்லை போலும். முகத்தில் மின்னிய சந்தேகம், அதைத் தொடர்ந்த கேள்விக்குறி ஆகியவற்றை ராம்ஜியால் பார்க்க முடிந்தது.
“நான் சொன்னேன்ங்கிறதுக்காக ஒத்துக்கவேண்டாம்.”
“இல்லை. அப்படியில்லை. நீ சொல்றதுலேயும் நியாயம் இருக்கு. எதிர்கால வாசகனுக்கு சண்முகம் இப்படியும் எழுதியிருக்கார்ங்கறது தெரியட்டும். நாம் யார் அவரையும் அவரோட புகழையும் தாங்கிப் பிடிக்கறதுக்கு. அவரோட புகழ் அவரோட எழுத்தினாலதானே வரப் போவுது.”
செல்வம் இப்போது யோசிப்பவன் போல் அமைதி காத்தான். இவ்வளவு நேரம் தன் கருத்துக்களில் தீவிரமாக இருந்தவன், இப்போது தன் மீதே சந்தேகம் வந்தவன் போல் நின்றான். எதிர்கருத்து இருக்கும் வரை, தன் கருத்தைத் தீவிரமாக முன்வைப்பதில் இருந்த முனைப்பு, இப்போது சட்டென மாறினவுடன், கூடுதல் பொறுப்பு போல் தோன்றத் தொடங்கிவிட்டது.
“படிக்கறவனும் கிரிட்டிக்ஸூம் இதைச் சரியாகப் புரிஞ்சுக்கணும். வேணும்னா, முன்னால நல்ல முன்னுரை ஒண்ணு எழுதிடலாம். சண்முகத்தில் எழுத்து பல தரத்துடையது. அதில் ஏற்றஇறக்கங்கள் இருக்கலாம் அப்படின்னு.. என்ன சொல்ற?”
ராம்ஜிக்கு இது அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை. நாம் யார் சண்முகத்துக்கு அரண் அமைக்க? ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல தரத்தில் எழுதுவதும், பல தேவைகளுக்கு எழுதுவதும் சகஜம்தானே? அதற்குப் போய் எதற்காக ஒரு புது நியாயம் சொல்லி, அண்டைக் கொடுக்க வேண்டும்? யாருக்காகப் பயந்து?
“இல்லன்னா, ரொம்ப சுலபத்துல சண்முகத்தைப் புறக்கணிச்சுடுவாங்க ராம்ஜி. எதுக்கு எல்லார் வாயிலேயும் விழுந்து எழுந்துக்கணும் அவர்?”
ராம்ஜி இதைத்தான் முதலில் இருந்து சொல்லி வந்தான். சற்று முன் நடந்த கடுமையான விவாதத்துக்கும் இதுவே காரணமாயிற்று. அப்போது எதிர்கட்சியாக இருந்த செல்வம் இப்போது சட்டென இப்படி மாறிப் பேசுகிறான். அக்கறைதான் காரணம்.
சண்முகம் இறந்து போய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் இருந்தபோது மூன்று தொகுதிகள் சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. தொகுதிகள் வந்த காலத்தில், அவர் எழுத்தின் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். அவர் முன்வைத்த கருத்துக்கள், எழுதிய விதம் எல்லாம் அன்றைய தேதிக்குப் புதிதாக இருந்ததால், எல்லாரும் நிறையவே படித்திருக்கிறார்கள். கொஞ்ச நாளிலேயே அவருக்கு ஒரு கல்ட் ஃபிகருக்கான அந்தஸ்து கிட்டவும் செய்தது.
அப்புறம், பேச்சே இல்லை. வழக்கம்போல், தமிழ் சமூகத்துக்கு எவ்வளளோ முக்கியமான வேலை. அவரை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமென்ன. சுலபத்தில் மறந்தும் போய்விட்டது. அவ்வப்போது, எங்கேனும் ஒன்றிரண்டு சிறுகதைகள் மீண்டும் மீண்டும் பிரசுரமாகும். அல்லது தேர்வாளர்கள் வசதிக்கேற்க, அவர்களது தேவைக்கேற்க மீண்டும் மீண்டும் ஒரு சில கதைகளே பிரபலப்படுத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளுக்குப் பின் இருக்கும் அரசியல்தான் ராம்ஜியை அதிகம் வெறுப்படையச் செய்தது.
முதல் வேலையாக அவர் எழுதிய அனைத்து எழுத்துக்களையும் தொகுக்க வேண்டும் என்று முனைந்த போது, உடன் வந்து சேர்ந்துகொண்டவன் செல்வம். அவனுக்கும் சண்முகத்தின் எழுத்தின் மேல் இருந்த அக்கறை, வேலையைத் துரிதப்படுத்தியது. செல்வத்துக்குச் சின்னதாக ஒரு பதிப்பகமும் இருந்தது இன்னும் வசதியாகப் போயிற்று. வங்கியில் செய்யும் வேலை நேரம் போக, அவ்வப்போது கவிதைகள் எழுதுவதுடன் புத்தகங்களும் வெளியிட்டான் செல்வம்.
அவனே சண்முகத்தின் எழுத்துக்களை வெளியிட முன்வந்தன். பழைய இதழ்கள், தொகுதிகள், முதல் பதிப்பு நூல்கள் என்று ஒன்றுவிடாமல் தேட, அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கத் தொடங்கின. ஆரம்பித்த போது இருந்த வேகம், தடைகளைச் சந்திக்க சந்திக்க மெல்ல மட்டுப்படத் தொடங்கியது. ஒரு மாதிரியாக எல்லா படைப்புகளும் கிடைப்பதற்குள், கிட்டத்தட்ட ஒன்றரை இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் வேறெங்கேனும் அவர் எழுதியிருக்கக் கூடும் என்ற சந்தேகம் ராம்ஜிக்கு நிரம்பவே உண்டு.
எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் படிக்க ஆரம்பித்தபோதுதான், ஒரு விஷயம் தெளிவானது. சண்முகம், எல்லாவற்றையும் தன் தொகுதிகளில் சேர்த்துக்கொள்ளவில்லை. அவரே தேர்ந்தெடுத்தக் கதைகளை மட்டுமே தன் தொகுதியில் போட்டுக்கொண்டிருக்கிறார். தன் எழுத்தில் உள்ள ஏற்றஇறக்கம் பற்றிய தெளிவு அவருக்கே இருந்திருக்கிறது.
“நாம எல்லாத்தையும் சேர்த்துப் போடணுமா?” ராம்ஜி.
“போட வேண்டியதுதான். இது நல்லது, இது நல்லாயில்லன்னு சொல்ல நாம யாரு? நம்ம வேலை, அவரோட எழுத்துக்கள் அத்தனையும் கிடைக்கச் செய்யறதுதான். படிக்கறவனுக்கு செய்யற பெரிய உதவியிது. ஆனா இந்தத் தொகுதி அனாவசியமா அவரோட புகழைக் கெடுக்கக்கூடாது இல்லையா?”
“பின்ன ஏன் அப்படிப்பட்ட எழுத்தை அவர் எழுதணும்? அவர் எழுதறது தப்பில்லன்னா, அதைத் தொகுக்கறதும் தப்பில்லதான்.”
ராம்ஜிக்கு கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. உண்மை. எதற்கு இப்படிப்பட்ட தரம்குறைந்த எழுத்துக்களை எழுதவேண்டும்? இதில் எழுத்தாளனைக் குறை சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுப் பெற்ற பத்திரிகைகளைக் குறைசொல்ல வேண்டுமா? தெரியவில்லை. எவ்வளவோ காரணங்கள் இருந்திருக்கலாம். பணத்தேவை, புகழ் தேவை, குறைந்தபட்சம் உதவ முன்வரும் நண்பர்களுக்காக எழுதிக்கொடுப்பது போன்ற எத்தனையோ சாத்தியங்கள். அல்லது வளரும் வேகத்தில் எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பு கூட காரணமாக இருக்கலாம்.
பின்னர் அவரே அவைகளைப் புத்தகமாக்க முனையும்போது, அவர் உள்ளே இருக்கும் உண்மையான இலக்கிய ரசிகன், பல கதைகளைப் புறந்தள்ளியிருப்பான். சில கதைகளைப் பொறுக்கி எடுத்திருப்பான். அவை மட்டுமே தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இன்றைக்குப் போய் அவர் ஏன் அப்படிப்பட்ட குறைகதைகளை எழுதவேண்டும் என்று கேள்வி கேட்டால், யாரால் பதில் சொல்ல முடியும்?
“அப்படியில்ல செல்வம். எல்லாத்தையும் தொகுத்துடலாம். அதனால புகழ் வந்தா ஒண்ணும் பிரச்சினை இல்லை. அதே தொகுதியின் மூலமா கெட்ட பெயர் வந்தா, அதை எதிர்கொள்ளவோ, சரியான விளக்கம் தரவோ சண்முகம் இல்லைங்கறதை ஞாபகம் வெச்சுக்கவேண்டாமா? இன்னொன்னும் பார்க்கணும். நாம சொல்ற குறையுடைய கதைகளை எழுதிய அதே கைதான் சிறப்பான கதைகளையும் எழுதியிருக்கு.”
“எப்படிடா, ஒரே கை ரெண்டையும் எழுத முடியும்? இதுல ஏதோ ஒண்ணு பொய்யாதானே இருக்கணும்?”
ராம்ஜிக்குத் தூக்கிவாரிப் போட்டது. செல்வம் கேட்பதில் உண்மையில்லாமலில்லை. தரம் என்ற ஒன்று தெரிந்த பின், எப்படித் தரமற்றவைகளை எழுத முடியும்? ஆரம்பத்தில் கொஞ்சம் குற்றங்குறைகளோடு தொடங்கி பின் வளர்ந்து வந்தார் என்றும் சொல்வதற்கில்லை. முதல் கதையில் இருந்தே அப்பழுக்கற்ற தரம் வெளிப்படுகிறது. நல்ல வாசிப்பு. நல்ல கல்வி. உலக ஞானம். எல்லாம் இருந்திருக்கிறது. ஆனால், பின்னால் எழுதிய பல கதைகள், குறுநாவல்கள், இடக்கையால் எழுதின ரகம். எப்படி இதை நியாயப்படுத்த முடியும்? தெரியவில்லை.
“பிரச்சினை என்ன தெரியுமா?” செல்வம்.
செல்வமும் எழுந்துகொண்டான். ராம்ஜி நின்றிருந்த கைப்பிடிச் சுவர் அருகே வந்தான். வானம் இன்னும் இருட்டிக்கொண்டிருந்தது.
“சொல்லு..”
“நீ அனாவசியமா சண்முகத்தைத் தாங்கிப் பிடிக்கணும்னு நினைக்கறே. அங்கதான் பிரச்சினை. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. அவரோட புகழ்ல நீயும் குளிர்காயணும்னு நினைக்கறே. அதுதான் பிரச்சினை.”
அப்படியா? ஒரு கணம் செல்வத்தின் முகத்தைப் பார்த்தான். அப்படியும் ஒரு காரணம் இருக்க முடியுமா? சண்முகத்துக்கும் எனக்கும் என்ன உறவு? நான் அவர் ரசிகன். அவர் எழுத்துக்களால் கவரப்பட்டவன். அவர் எழுத்து முக்கியமான எழுத்து என்று உளமாற நினைப்பவன். அவ்வளவுதான். அவர் பெருமையில் நான் எப்படிப் பங்கெடுத்துக்கொள்ள முடியும்?
“எப்படி சொல்ற?”
“சண்முகத்தின் எழுத்துக்களைத் தொகுத்தவர்னு உன் பெயர் வரும் இல்லையா? உன் அந்தஸ்தை அது கொஞ்சம் தூக்கிவிடத்தானே செய்யும்.”
“சில்லி…”
உண்மையில் எரிச்சலாகத்தான் இருந்தது. சண்முகத்தின் எழுத்துக்களைத் தேடி அலைந்தபோது இருந்த உற்சாகம், கிடைத்தப் போது அடைந்த மகிழ்ச்சி எல்லாம் இந்த அற்பத்தனத்துக்குத்தானா? நிச்சயம் இல்லை. அவர் மனைவி, நண்பர்கள் என்று ஒவ்வொருவராகப் போய்ப் பார்த்துப் பேசிப் பேசி ஒவ்வொரு அங்குலமாக சண்முகத்தருகே முன்னேறியது இத்தகைய ஒரு வார்த்தைக்குத்தானா? நிச்சயம் இல்லை. ஆனால், அதை அனைவரிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு மனதும் ஒவ்வொரு வண்ணம் கொண்டது. ஒவ்வொரு நோக்கம் கொண்டது. நோக்கங்களை நிமிர்த்தவா முடியும்? பதில்சொல்லித்தான் சந்தேகத்தை நிவர்த்திசெய்துவிட முடியுமா?
ஆனால், உண்மையில் சண்முகம் எழுத்தைத் தேட வைத்தது எது? கிடைத்த படைப்புகளைப் படித்துவிட்டு, எல்லாரும் சொல்வதைத் திரும்பச் சொல்லி, அதே பழைய மேற்கோள்களையே திரும்பத் திரும்ப மேற்கோள்களாக்கிவிட்டு, தன் வழியையைப் பார்த்துக்கொண்டு போயிருக்கலாம். ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் இவ்வளவு அற்புதமாக எழுதிய ஒரு கை, ஒரு மனம், ஒரு புத்தி எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? அதன் நோக்கங்கள் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? அதன் ஆசைகள், எதிர்பார்ப்புகள் எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.
சதையும் ரத்தமுமகாக ஒரு எழுத்தாளன் தன் கனவுகளை வரைந்து வைத்திருக்கிறான். அதை அணுகிப் பார்ப்பதைப் போல் உற்சாகமும் நிறைவும் தருவது வேருண்டோ ? உண்மையில் அந்த தேடலும் அதன் அட்வென்சருமே நிறைவளிப்பது. இதையெல்லாம் விளக்க முடியாது. இது உணர்வு சம்மந்தப்பட்டது. மகிழ்ச்சி சொல்லில் நிறைவுறாதது.
கிளம்பிவிடவேண்டும் என்று தோன்றியது. நிறைய விஷயங்களைப் புரிய வைக்க முடியாது. சைக்கிளில் போகும் பெண், வீட்டுக்குப் போய் என்னவாக வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். அவள் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் வேண்டுமானால் ஆசைப்படலாம். சண்முகம் நல்ல கதைகள் மட்டுமே எழுதிருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் அப்படிப்பட்டதுதான். ஆனால், அதெல்லாம் நமது ஆசைகள். நமது விருப்பங்கள். அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையா இடமுடியும்?
“சரி செல்வம், நான் கிளம்பறேன். நீயே பார்த்து செய். முடிஞ்சவரைக்கும் எல்லா கதைகளும் தொகுத்தாச்சு. அதெல்லாம் வெளியான வருஷப்படியே வரிசைப்படுத்தியிருக்கேன். அப்படியே போட்டுடு.”
“முன்னுரை ஏதாவது எழுதறியா?”
ராம்ஜி ஒரு கணம் நின்றான்.
“சண்முகம் தன் சொந்தக் கால்ல நிற்பார். நல்லது கெட்டதும் அவருக்கே போய்ச் சேரட்டும். நாம யார் அவருக்கு முட்டுக்கொடுக்க?”
சொல்லிவிட்டு ராம்ஜி தெருவில் இறங்கி நடந்தான். ஒரு பெண் சைக்கிளில் அவனைக் கடந்து முன்னே போனாள்.