ஒரு கேள்வி

கஸ்தூரிபாய் ரயில்வே ஸ்டேஷன் இருட்டில் இதமாக இருந்தது. எதிர்ப்புறம் இரண்டொரு விளக்குகள்

எரிந்துகொண்டிருந்தன. யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்டேஷன் கட்டட வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும்.
அவர்கள் நின்ற பக்கத்தில், தள்ளி தள்ளி இருவர் மூவராக நின்றுகொண்டிருந்தார்கள். மேலே பளிச்சென்ற ஆகாயம்.
அமாவாசை முடிந்து நாளாவது நாள். சின்னதாய் நிலா துளிர்விட்டுக்கொண்டிருந்தது. ஸ்டேஷன் நல்ல உயரத்தில்
இருந்தது.
சாலை விளக்குகள், வீட்டின் வெளிச்சத் தெறிப்புகள் என்று எதுவும் வானத்தை மறைக்கவில்லை. எல்லாம் கீழே
எங்கோ இருப்பது போல் இருந்தது. ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த சாலையில் இருந்து அவ்வப்போது ஏதேனும் அவசர
வாகனத்தில் அவசர அலறல் தவிர, அமைதி. துலக்கி வைத்த அமைதி. செல்வத்துக்கு என்ன சொல்வது என்று
தெரியவில்லை. மணி அண்ணனும் பேசவில்லை. அவரும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது போல் தான்
தோன்றியது. கையில் சின்ன பை. மதியச் சாப்பாட்டைக் கட்டி எடுத்துவந்திருந்தார்கள்.
முழுக்கை சட்டையை இரண்டு மடிப்பு மடித்துவிட்டிருந்தார் அண்ணன். கைப்பையை முன்னால் பிடித்துக்கொண்டு மேலே
தெளித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். செல்வமும் பார்த்தான். வியப்பாகத்தான் இருந்தது.
எல்லாமே அதே பிரகாசத்தோடு, அதே குளுமையோடு. ஊரில் பார்த்த அதே குளுமை, பிரகாசம். சட்டெனத் தான்
செய்யார் போய்விட்டோ மோ என்று தோன்றியது செல்வதுக்கு.
நாளை கிளம்பியாக வேண்டும். நான்கு நாள்கள் அண்ணனோடு போனது தெரியவே இல்லை. ஒவ்வொரு கணமும் அண்ணனின்
பாதுகாப்பும் அரவணைப்பும்தான் கண்களில் தெரிந்தது. இத்தனைக்கும் ஊரில் அண்ணனோடு பழகியது மிகச் சில
சமயங்களில்தான். பேசியது அதைவிடக் குறைவு. அப்பாவின் நண்பர் மகன். வயதில் மூத்தவர். அவர் வளைய வந்த
செட்டே வேறு. அவர் கல்லூரி போன நாள்களில், செல்வம் பள்ளியையே தாண்டவில்லை.
அப்பா ஃபோன் பண்ணிக் கேட்டுக்கொண்டார் என்றுதான் இத்தனை பாதுகாப்பு, அரவணைப்பு. தாம்பரத்தில் வந்து
இறங்கியது முதல், ஒவ்வொரு கல்லூரியாகப் போய் அட்மிஷன் ஃபார்ம் வாங்குவது, அதற்குத் தேவையான டிடி எடுப்பது,
போட்டோ க்கள் ஒட்டி, ஃபார்ம்மை நிறைவு செய்வது என்று அண்ணன் ஓடாத ஓட்டமில்லை. இன்னும் +2 தேர்வு முடிவுகள்
வெளியாகவில்லை. இரண்டொரு வாரத்தில் வந்துவிடும் என்றிருக்கிறார்கள்.
அதற்கு முன்னரே அண்ணனே பார்த்துச் சொல்லிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் மூலமாக எண்ணைக்
கொடுத்தனுப்பி, வாங்கியிருக்கும் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அண்ணன். செல்வத்துக்கும்
ஆசையாகத்தான் இருந்தது. எப்படியும் நல்ல மதிப்பெண் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அந்த
நம்பிக்கைதான் சென்னை வரை அவனைத் துரத்தியதும்.
முதலில் ஒரு பி.காம். அப்புறம், தொடர்ந்து எம்.காம். அப்புறம் சி.ஏ. எங்கேயாவது நல்ல ஆடிட்டரிடம்
சேர்ந்துவிட்டால் போதும். சி.ஏ.வை ஒரே வேகத்தில் முடித்துவிட்டால், கண்டேன் கண்டேன் என்று கொத்திக்கொண்டு
போகமாட்டார்களா என்ன?. அவன் குடும்பத்தில் யாருமே படிக்காதப் படிப்பாக இருக்கும். அவன் மட்டுமே அறிந்த
துறையாக அது இருக்கும். அந்த வேகமும் ஆசையும்தான் இவ்வளவு தூரம் அவனைத் துரத்தியது.
தூரத்தில் வெளிச்சக் குழல் தெரிய, அண்ணன், திரும்பிப் பார்த்தார்.
“வண்டி வருது.. இது திருவான்மியூர் ஸ்டேஷன் போயிட்டுத் திரும்பி வரும்.”
செல்வமும் பார்த்தான். கண்களைக் கூசும் ஒளி வெள்ளம், மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது. ஸ்டேஷனின்
பிளாட்பாரம் முழுவதும் இப்போது ஒளியில் மிதந்தது. தூர தூர நின்றுகொண்டிருந்த சிலர் முன்னேறி, வண்டியருகே
வரத்தொடங்கினர். வண்டி சின்னதாக ஒரு அலுங்கல் காட்டி நிற்க,
“ஏறிப்போமா? திருவான்மியூர் போயிட்டு திரும்பி வருவோம்?”
சரியென்று செல்வம் தலையாட்ட, சட்டென ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டனர். வானம் தொலைந்துபோக, அழுதுவடியும்
விளக்குகள். ஜன்னலோரமாக போய் உட்கார்ந்துகொண்டார்கள். காற்றின் வேகம், கேசத்தைக் கோதியபடி இருந்தது.
கீழே சாலையில் வாகனங்கள் போட்டியிடுவது போல் நகர்ந்தன.
“டெய்லி இந்த வண்டியிலதான் வருவீங்களாண்ணா?”
“காலையில ஷிப்டுன்னா, ஆறுலேருந்து ரெண்டு. அப்போ, காலையில பஸ் புடுச்சி வந்துடுவேன். மத்தியானம்
டிரெயின் ஏறிடுவேன். மத்தியானம் ரெண்டுலேருந்து ஆறுன்னா, மத்தியானமும் சாயங்காலமும் டிரெயின்லேயே
வந்துடுவேன். சீஸன் வெச்சிருக்கேன. பயங்கர சீப்பு.”
இந்த வாரம் மதிய ஷிப்டு. செல்வம் வந்ததால், நடுவே ஒருநாள் விட்டு ஒருநாள் விடுமுறை எடுத்துவிட்டார். இன்று
நேராக கட்டடம் கட்டும் சைட்டுக்கே வந்துவிடச் சொல்லியிருந்தார். விட்டுப் போன, இரண்டு கல்லூரிகளில் அன்று
அப்ளிகேஷன்களை வாங்கிக்கொண்டு, நேரே அவர் சொன்ன, அடையாறு பக்கம் சைட்டுக்கே செல்வம் வந்து சேர்ந்தான்.
பெரிய இடம். எண்ணற்ற அடுக்ககங்கள் வரவிருந்தன. அண்ணன்தான் டிராப்ட்ஸ்மேன். அவரைப் போல், இன்னும் இரண்டு
டிராப்ட்ஸ்மேன்கள் இருந்தார்கள்.
இரவும் பகலுமாக வேலை நடந்துகொண்டிருந்தது. அலுவலக அறை மாதிரி இருந்த இடத்திலேயே எண்ணற்ற சிமிண்ட்
மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. வெளியே சிமிண்ட்டும் மணலும் கலந்து ஒருவித வாசனையை ஏற்படுத்தியிருந்தன.
செல்வம் ஓரமக உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். நடு நடுவே இஞ்சினியர், அவர் இவர் என்று பலர் வந்து
பேசிக்கொண்டே இருந்தார்கள். அண்ணன் எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். கோபம் வரவேண்டிய
இடத்திலும் அமைதியே கோலோச்சியது. அதைப் பணிவு என்று சொல்வதை விட, பயம் என்று சொல்லலாம்.
ஏன் பயம்? இந்த வேலை இல்லையென்றால், அடுத்தொன்று. எதற்கு அப்படியாவது கும்மிடு போடவேண்டும்?
தெரியவில்லை. செல்வத்துக்கு நிறைய தெரியவில்லைகள் இருந்தன. அப்பா, அம்மா தொடங்கி, அவன் கேட்க
நினைத்துக் கேட்க தவிர்த்த எத்தனையோ தெரியவில்லைகள் மிச்சமிருந்தன. அவர்களாலும் அதற்குப் பதில் சொல்ல
முடியாதோ என்ற எண்ணமே பல கேள்விகளைக் கேட்கத் தவிர்த்திருக்கிறான். ஆனால், அக்கேள்விகள் அவனுள்
ஏற்படுத்தும் இம்சை தாங்க முடியாதது. நாக்குநுனி வரை கேள்விகள் துள்ளி ஓடி வரும். வேறெதோ மனத்தில் சட்டென
உறைக்க,கேள்வி தவிர்க்கப்படும். மனத்தின் ஆதங்கம் மட்டும் வடுவாய் மிச்சமிருக்கும்.
“அண்ணே, உங்களை மத்தியானமே கேக்கணும்னு நினைச்சேன்..”
சட்டென நெஞ்சில் நின்றது, வாய் வரை வந்துவிட்டது. இனி நிற்குமோ? மணி அண்ணன், செல்வத்தைத் திரும்பிப்
பார்த்தார். பூனை முடி மாதிரி மீசை. இன்னும் கருக்கவில்லை. மூங்கில்கம்பு மாதிரி தேகம். பள்ளிக்கு
பரபரவென ஓடிய காலம்தொட்டு, அவனை மணிக்குத் தெரியும். இன்று, வளர்ந்து, மேலே படிக்கவே வந்துவிட்டான்.
ஆச்சரியம்தான். வளர்ச்சி என்பதை யாரால் தடுக்க முடியும். என்ன கேள்வி என்பது அண்ணன், முகபாவம் இருந்தது.
“யார்யாரோ வந்து உங்ககிட்ட மெரட்டறாங்க, அதிகாரம் பண்றாங்க? நீங்க சும்மா பதில்
சொல்றீங்களே..? உங்களுக்குக் கோபமே வரலியே..”
மணி அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தார். கோபமா? அவருக்கு இன்னும் சிரிப்புதான் வந்தது. யார் மேல்
கோபப்பட முடியும்? ஏன் சிரிக்கிறார் என்று செல்வத்துக்குப் புரியவில்லை. தன் தலையெழுத்தை நினைத்துக்
கோபப்படலாம். தான் ஏதோ தப்பாகக் கேட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் சட்டென செல்வத்தைத் தாக்கியது. தன்
எதிர்காலம் தன் கையில் இல்லாமல் போனது பற்றிக் கோபப்படலாம். ஆனால், கோபம்தான் வரமாட்டேன்
என்கிறதே?
ரயில் வண்டி திருவான்மியூர் ஸ்டேஷனை அடைய, முண்டியடித்துக்கொண்டு கூட்டம் பக்கவாட்டில் ஓடிவந்தது. அவசரஅவசரமாக
ஜன்னல்வழியாக, கர்சீப், பை, சாப்பாட்டு கூடை என்று உள்ளே எறிந்து இடம்பிடிக்க முயற்சித்தார்கள்.
இறங்குபவர்களுக்கு இடம் தராமல், ஏற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அதில் யாரோ ஒருவர் கத்த, மற்றவர்,
எதிர்க்குரல் கொடுத்தார். இறங்கினபின்பும், அந்தக் கடுமையான பேச்சு தொடர்ந்தது. தொடர்ந்து இரண்டொரு கெட்ட
வார்த்தைகள்.
செல்வத்துக்குக் கூசியது. இடம் கிடைக்காமலா போய்விடும்? எதற்கு இந்தப் பரபரப்பு? அதைவிட, முந்திக்கொள்ள
வேண்டும் என்ற அவசரம் தரும் வார்த்தைகள் அவை. பக்கத்தில் எல்லாரும் திமுதிமுவென வந்து அமர்ந்துகொண்டார்கள்.
பிடித்த இடத்தில் அடுத்தவர் உட்கார்ந்தால், அவரை எழுப்ப ஒரு முறைப்பு. வார்த்தை தடிப்பு. எதையும் சட்டை
செய்யாதவர் போல், பிடித்த இடத்தில் உட்கார்ந்திருப்பவர் அப்படியே உட்கார்ந்திருந்தார்.
எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். அப்புறம், அவரவர் அவரவர் உலகங்களில். ஒருத்தர் பேப்பரில், மற்றவர் ஒரு
புத்தகத்தில். நிறைய பெண்கள், தங்கள் செல்பேசிகளோடு. நிறைய அலுப்பு. நிறைய கவலை. தூரத்தில் ஒளிர்ந்த
டைடல் பார்க்கின் கசக்கிப் பிழிந்த மிச்சங்கள்.
மணி, அந்த கட்டடத்துக்குள் போய்ப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான். ஒவ்வொரு முறை, இந்தப் பக்கம்
போகும்போதெல்லாம் மனது அடித்துக்கொள்ளும். பளபளவென கண்ணாடி பளிச்சிடும் கட்டடம். வாசல் தொடங்கி, அரண்
போல் பாதுகாவல். அதுவும் காலைவேளைகளில், கூட்டம் கூட்டமாக பெண்கள் மிடுக்குடன் நடந்து போவதைப் பார்ப்பதே
அழகு. படிப்பு தந்த மிடுக்கு. அறிவு தந்த வாழ்வு. முடிந்தால், அங்கே வேலை செய்யும் ஏதேனும் ஒரு பெண்ணைக்
காதலித்தாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொள்வான் மணி. மணி தன் பக்கத்தில் வந்தமர்ந்த
பெண்ணை பார்த்தான். தீவிரமாக செல்பேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.
மணி அண்ணன் பதில் சொல்லவில்லையென்பது செல்வத்துக்கு உறுத்தலாக இருந்தது. வழக்கம்போல்,
அவசரப்பட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் வந்துத் தொலைத்தது. என்ன கேட்கவேண்டும், யாரைக் கேட்கவேண்டும், எப்படிக்
கேட்கவேண்டும் என்ற இங்கிதம் தனக்கு இன்னும் வரவில்லையென்பது செல்வத்துக்கு நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு
முறையும் இப்படி யாரையாவது தப்பாகக் கேட்டுவிடுவதும், அதற்குப்பின் வருந்துவதும் செல்வத்துக்கு வாடிக்கையாகவே
ஆகிவிட்டது.
பல சமயங்களில் திண்டாடுபவர் அப்பாதான். ஆனாலும் பொறுமையாக எடுத்துக்கொண்டார். இப்போது சென்னை
அனுப்பியது வரை, அவனது அதிகப்பிரசங்கித்தனத்தின் விளைவுகள்தான் எல்லாமே. காஞ்சிபுரத்திலேயே
படித்திருக்கலாம். சென்னை செல்வத்தின் விருப்பம். பத்தாவது முடித்தவுடனேயே அப்பா ஐடிஐ போய்ப் படிக்கச்
சொன்னார். மேலே வந்தது, செல்வத்தின் பிடிவாதம். பின்னர் இஞ்சினியரிங், அப்பா விருப்பம். வணிகம், அவன்
விருப்பம்.
ஒவ்வொரு மாற்றமும், பேச்சுக்களின் வலியில் உதித்தவைதாம். அப்பா விருப்பம் என்று எதையும் தான் இதுவரை
ஏற்றுக்கொண்டதில்லை என்பது ஏனோ செல்வத்துக்கு ஞாபகம் வந்தது. உண்மைதான். அவன் விருப்பத்தைத்தான் அவர்
நிறைவேற்றி வருகிறார். கோபமில்லை. வருத்தமில்லை. ஆனால், நெஞ்சில் வலி இருக்குமோ? இருக்கலாம்.
ஆனால், தன்னால் வேறெப்படியும் இருக்க முடியுமென்று தோன்றவில்லை. தனக்குப் பிடித்ததைச் செய்ய மட்டுமே முடியும்.
பிடிக்காது என்று தோன்றிவிட்டால், அருகே போவது கூட முடியாது.
மணி, பக்கத்துப் பெண்ணைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டான். வலிந்து தன் பார்வையை வேறு பக்கம்
திருப்பிக்கொண்டான். அவரமாகத் தன் பைத்தியக்கார ஈடுபாட்டைத் துடைத்துப் போட்டான். எண்ணத்தில் ரீங்கரித்த
வாசனையைக் கலைக்க முயன்றான். நாளை காலை செல்வத்தை பஸ் ஏற்றிவிடவேண்டும். நல்லவேளையாக, மதிய ஷிப்ட்.
காலை கொஞ்சம் மெல்ல எழுந்து, அவனை வழியனுப்பலாம். அவசரமில்லை. காலை ஷிப்ட் வாரங்களில்தான்,
விடிகாலையே எழுந்து, குளித்து, பஸ்பிடித்து, சைட்டுக்கு வந்து சேரவேண்டும். உடம்பு ஓய்ந்து போய்விடும்.
பக்கத்து சீட் பெண், காலை மாற்றி உட்கார, மணி மேல் இடித்தது. அவன் அவசரமாய் நகர்ந்ததைச் சட்டென
உணர்ந்து, மன்னிப்பு கேட்டாள். ஒரு கணம்தான். அழகை மனசுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியுமா? பின் ரொம்ப
நேரம் சிரமப்பட்டு, தன் எண்ணத்தை மணி திருப்பினான். கயிறை அறுத்துக்கொண்டு ஓடும் கன்றுக்குட்டியென மனம்
தறிகெடுவதை அவனால், தடுக்க முடியவில்லை. தலையை உதறிக்கொண்டான். செல்வத்தைப் பார்த்தான். செல்வம்
வெளியே ஓடும் கட்டடங்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் ஏதாவது தப்பா கேட்டிருந்தா, தப்பா எடுத்துக்காதீங்கண்ணா…”
திருவல்லிக்கேணி ஸ்டேஷனைவிட்டு வெளியே வரும்போது, செல்வம் பேசினான். கனத்த இருட்டு. ஸ்டேஷனே வீடாய்
பலர் உருண்டுகொண்டிருந்தனர். அவ்வப்போது, ஒரு தீக்குச்சி, பொட்டு வெளிச்சம் பரப்பி, ஒரு பீடியைப் பற்ற
வைத்துக்கொண்டிருந்தது.
“சேச்சே.. என்ன தப்பு? ஒரு தப்புமில்லப்பா..”
மீண்டும் செல்வத்தின் கேள்வி, மணிக்கு ஞாபகம் வந்தது. ஞாபகம் வந்தது என்பதை விட, ஞாபகத்தின்
மேல்தளத்தில்தான் அது இருந்தது. சொல்லப் போனால், அதை அவன் மறக்கவே முயன்றான். மறக்க மறக்க, அது
மேலெழும்பிக்கொண்டேதான் இருந்தது. ஏன் கோபம் கொள்ள முடியவில்லை? ஏன் முடியாது? முடியுமே? செய்யலாம்.
கோபம் கொண்டால், விரைவில் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும். வேறு கட்டட நிறுவனத்தில் மீண்டும் ஒரு
டிராப்ட்ஸ்மேனாக, தன் பணியைத் தொடங்கவேண்டும். அங்கேயும் இதே கோபங்கள் தலையெடுக்கலாம். அப்போ என்ன
செய்வது? வேறொரு வேலை தேடிக்கொள்ள வேண்டுமா?
வேலைகள் என்ன கொட்டியா கிடக்கிறது? தெரியவில்லை. இருக்கலாம். தன் கண்ணுக்கு அத்தகைய வேலைகள்
தென்படாமல் இருக்கலாம். சென்னை வந்த இந்த நான்கைந்து ஆண்டுகளில் இது இரண்டாவது நிறுவனம். இதுவரை கோபம்
கொப்பளித்ததில்லை.
“கோபம் வந்தா, வாழ்க்கை நடத்த முடியாது செல்வம்.”
உண்மைதான். எல்லாரும் அப்பாவாக இருந்துவிடவா முடியும்? அவன் கோபம், பிடிவாதம் எல்லாவற்றையும்
பொறுத்துக்கொள்ள அப்பாவால் முடியும். மேலதிகாரிகள், சகவேலையாளர்கள் ஒப்புக்கொள்ள முடியுமா என்ன?
செல்வத்துக்கு தான் கேட்டது எவ்வளவு மடத்தனம் என்று தோன்றியது.
“பீச்சுக்குப் போய் உட்கார்ந்துட்டு போவோமா?”
மணி கேட்க, செல்வம் தலையாட்டினான். கடற்கரை சாலையை கடந்து எதிர்ப்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கூட்டம்
அவ்வளவாக இல்லை. வேலை நாள். விடுமுறைகளில் கூட்டம் மிகுந்திருக்கலாம். சென்னை வந்த முதல்நாளே மணி அண்ணன்
கடற்கரைக்குக் கூட்டி வந்தார். இந்த முனையில் அந்த முனை வரை நடந்துவிட்டு வந்தார்கள். அப்புறம், தண்ணீர் அருகே
போய் நின்றுவிட்டும் வந்தார்கள்.
“கோபப்படணும். கோபப்படலாம். எப்போ கோபப்படலாம்னா, நமக்குத் தகுதி இருக்கும்போது
கோபப்படலாம். நம்ம தகுதி அடுத்தவனுக்குத் தெரியும்போது கோபப்படலாம். நம்ம பேச்சு எடுபடும்னா
கோபப்படலாம்.”
அண்ணன், தான் கேட்ட கேள்வியை இன்னும் மறக்கவில்லை. அதுதான் அவர் மனத்தில் அப்போதில் இருந்து வளைய
வந்துகொண்டிருக்கிறது. முட்டி முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. மணலில் கால் செருப்பைப் போட்டுவிட்டு
உட்கார்ந்துகொண்டார்கள்.
“என்னால கோபப்பட முடியாது. நான் கோபப்பட்டா, அடுத்த வேலைய தேடிக்க வேண்டியதுதான். அடுத்த வேலை
கிடைக்கும்னு நம்பிக்கை இருந்தா கோபப்படலாம். எனக்கு அது இல்ல.”
செல்வம், மணி அண்ணனின் கண்களையே பார்த்தான். அதில் தெரிந்த சுயவெறுப்பை அவனால் உணர முடிந்தது. பேச
முடியவில்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலேயேயும் நான் அடுத்தவங்களோட தயவுலதான் வாழ்ந்திருக்கேன். அவங்களோட எண்ணத்தை
புரிஞ்சிக்கிட்டுதான் எல்லாம் செஞ்சிருக்கேன். அப்பா சொன்னபடி படிப்பு. மாமா வாங்கிக்கொடுத்த வேல.
யாரையும் நான் கேள்வி கேக்கல. சொல்றதைச் சொஞ்சேன். எனக்குன்னு நான் எதையும் யோசிச்சதில்லை. அதனாலகூட
கோபம் வராமலிருக்கலாம்.
“அண்ணா, நீங்க அதை மறந்துடுங்கண்ணா, எதுக்கு அதையே யோசிக்கறீங்க? நான் ஏதோ வாய் தவறி
கேட்டுட்டேன்.”
செல்வத்துக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இந்த வருத்தம் அவனை
கஷ்டப்படுத்தியிருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் கேள்வி கேட்டுவிட, அடுத்தவருக்கு அது ஏற்படுத்தும் வலியை அவன்
உணரும்போது, உண்மையிலேயே சிரமப்படுவான். மணி அண்ணன் இன்னும் வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டிருப்பது
தெரிந்தது.
“இல்ல செல்வம். நீ கேட்டது சரிதான். நீ அப்படி இருக்கக்கூடாது. இருக்காதேங்கறதுக்காகத்தான் சொல்ல
வந்தேன். உங்கப்பா என் கிட்ட பேசும்போது, அவன் மெட்ராஸ்ல, பி.காம். படிக்கணும்னு பிடிவாதமா இருக்கான்பா,
சொன்னா கேக்க மாட்டேங்றான், என்ன செய்யறதுன்னு தெரியல. அனுப்பி வெக்கறேன். ஃபார்ம்மெல்லாம்
வாங்கிக்கொடுப்பான்னார். எனக்கு அப்பவே உன்னைப் பிடிச்சுப் போச்சு. எனக்கு உன் அப்பாவோட நிலைமை
தெரியும். ஆனாலும், உன் பிடிவாதம் சரின்னு தோணிச்சு. அப்படித்தான் இருக்கணும். நாம எங்கே போகணுங்கற
தெளிவு இருக்கணும். என்னவா ஆகணுங்கற தெளிவு இருக்கணும். அதை அடைய பிடிவாதம் வேணும். எனக்கு அது எதுவுமே
இல்லாம போச்சு. அதான் இன்னிக்கு எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கிக்கிட்டு நிக்கறேன்.”
செல்வம் மணலை அலைந்துகொண்டிருந்தான். தெரியவில்லை. தன் பிடிவாதத்துக்கு இவ்வளவுதூரம் பொருள் இருக்கும் என்று
அவன் நம்பவில்லை. கனவு மட்டும்தான் அவனைத் துரத்திக்கொண்டிருந்தது. கனவுகளை இழந்தவர்களுக்கு கனவோடு
வாழ்பவர்களைப் பார்ப்பது பெரும்கனவு. மணி, அப்புறம் ரொம்ப நேரம் பேசவில்லை. தூரத்தில் அடுத்தொரு
ரயில்வண்டி தடதடவெனப் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.
செல்வம், மணி அண்ணனைப் பார்த்தான். அவர் கிளம்பலாம் என்பதுபோல், மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.
*******
Venkatesh R
B5, 41 Sunkuwar Street, Triplicane, Chennai 5
Tel: 28444401 / 98410 53881

கஸ்தூரிபாய் ரயில்வே ஸ்டேஷன் இருட்டில் இதமாக இருந்தது. எதிர்ப்புறம் இரண்டொரு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்டேஷன் கட்டட வேலை செய்பவர்களாக இருக்கவேண்டும்.

அவர்கள் நின்ற பக்கத்தில், தள்ளி தள்ளி இருவர் மூவராக நின்றுகொண்டிருந்தார்கள். மேலே பளிச்சென்ற ஆகாயம். அமாவாசை முடிந்து நாளாவது நாள். சின்னதாய் நிலா துளிர்விட்டுக்கொண்டிருந்தது. ஸ்டேஷன் நல்ல உயரத்தில் இருந்தது.

சாலை விளக்குகள், வீட்டின் வெளிச்சத் தெறிப்புகள் என்று எதுவும் வானத்தை மறைக்கவில்லை. எல்லாம் கீழே எங்கோ இருப்பது போல் இருந்தது. ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த சாலையில் இருந்து அவ்வப்போது ஏதேனும் அவசர வாகனத்தில் அவசர அலறல் தவிர, அமைதி. துலக்கி வைத்த அமைதி. செல்வத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மணி அண்ணனும் பேசவில்லை. அவரும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பது போல் தான் தோன்றியது. கையில் சின்ன பை. மதியச் சாப்பாட்டைக் கட்டி எடுத்துவந்திருந்தார்கள்.

முழுக்கை சட்டையை இரண்டு மடிப்பு மடித்துவிட்டிருந்தார் அண்ணன். கைப்பையை முன்னால் பிடித்துக்கொண்டு மேலே தெளித்திருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். செல்வமும் பார்த்தான். வியப்பாகத்தான் இருந்தது.

எல்லாமே அதே பிரகாசத்தோடு, அதே குளுமையோடு. ஊரில் பார்த்த அதே குளுமை, பிரகாசம். சட்டெனத் தான் செய்யாறு போய்விட்டோ மோ என்று தோன்றியது செல்வதுக்கு.

நாளை கிளம்பியாக வேண்டும். நான்கு நாள்கள் அண்ணனோடு போனது தெரியவே இல்லை. ஒவ்வொரு கணமும் அண்ணனின் பாதுகாப்பும் அரவணைப்பும்தான் கண்களில் தெரிந்தது. இத்தனைக்கும் ஊரில் அண்ணனோடு பழகியது மிகச் சில சமயங்களில்தான். பேசியது அதைவிடக் குறைவு. அப்பாவின் நண்பர் மகன். வயதில் மூத்தவர். அவர் வளைய வந்த செட்டே வேறு. அவர் கல்லூரி போன நாள்களில், செல்வம் பள்ளியையே தாண்டவில்லை.

அப்பா ஃபோன் பண்ணிக் கேட்டுக்கொண்டார் என்றுதான் இத்தனை பாதுகாப்பு, அரவணைப்பு. தாம்பரத்தில் வந்து இறங்கியது முதல், ஒவ்வொரு கல்லூரியாகப் போய் அட்மிஷன் ஃபார்ம் வாங்குவது, அதற்குத் தேவையான டிடி எடுப்பது, போட்டோ க்கள் ஒட்டி, ஃபார்ம்மை நிறைவு செய்வது என்று அண்ணன் ஓடாத ஓட்டமில்லை. இன்னும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இரண்டொரு வாரத்தில் வந்துவிடும் என்றிருக்கிறார்கள்.

அதற்கு முன்னரே அண்ணனே பார்த்துச் சொல்லிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் மூலமாக எண்ணைக் கொடுத்தனுப்பி, வாங்கியிருக்கும் மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அண்ணன். செல்வத்துக்கும் ஆசையாகத்தான் இருந்தது. எப்படியும் நல்ல மதிப்பெண் வந்துவிடும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அந்த நம்பிக்கைதான் சென்னை வரை அவனைத் துரத்தியதும்.

முதலில் ஒரு பி.காம். அப்புறம், தொடர்ந்து எம்.காம். அப்புறம் சி.ஏ. எங்கேயாவது நல்ல ஆடிட்டரிடம் சேர்ந்துவிட்டால் போதும். சி.ஏ.வை ஒரே வேகத்தில் முடித்துவிட்டால், கண்டேன் கண்டேன் என்று கொத்திக்கொண்டு போகமாட்டார்களா என்ன?. அவன் குடும்பத்தில் யாருமே படிக்காதப் படிப்பாக இருக்கும். அவன் மட்டுமே அறிந்த துறையாக அது இருக்கும். அந்த வேகமும் ஆசையும்தான் இவ்வளவு தூரம் அவனைத் துரத்தியது.

தூரத்தில் வெளிச்சக் குழல் தெரிய, அண்ணன், திரும்பிப் பார்த்தார்.

“வண்டி வருது.. இது திருவான்மியூர் ஸ்டேஷன் போயிட்டுத் திரும்பி வரும்.”

செல்வமும் பார்த்தான். கண்களைக் கூசும் ஒளி வெள்ளம், மெல்ல மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது. ஸ்டேஷனின் பிளாட்பாரம் முழுவதும் இப்போது ஒளியில் மிதந்தது. தூர தூர நின்றுகொண்டிருந்த சிலர் முன்னேறி, வண்டியருகே வரத்தொடங்கினர். வண்டி சின்னதாக ஒரு அலுங்கல் காட்டி நிற்க,

“ஏறிப்போமா? திருவான்மியூர் போயிட்டு திரும்பி வருவோம்?”

சரியென்று செல்வம் தலையாட்ட, சட்டென ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டனர். வானம் தொலைந்துபோக, அழுதுவடியும் விளக்குகள். ஜன்னலோரமாக போய் உட்கார்ந்துகொண்டார்கள். காற்றின் வேகம், கேசத்தைக் கோதியபடி இருந்தது.

கீழே சாலையில் வாகனங்கள் போட்டியிடுவது போல் நகர்ந்தன.

“டெய்லி இந்த வண்டியிலதான் வருவீங்களாண்ணா?”

“காலையில ஷிப்டுன்னா, ஆறுலேருந்து ரெண்டு. அப்போ, காலையில பஸ் புடுச்சி வந்துடுவேன். மத்தியானம் டிரெயின் ஏறிடுவேன். மத்தியானம் ரெண்டுலேருந்து ஆறுன்னா, மத்தியானமும் சாயங்காலமும் டிரெயின்லேயே வந்துடுவேன். சீஸன் வெச்சிருக்கேன. பயங்கர சீப்பு.”

இந்த வாரம் மதிய ஷிப்டு. செல்வம் வந்ததால், நடுவே ஒருநாள் விட்டு ஒருநாள் விடுமுறை எடுத்துவிட்டார். இன்று நேராக கட்டடம் கட்டும் சைட்டுக்கே வந்துவிடச் சொல்லியிருந்தார். விட்டுப் போன, இரண்டு கல்லூரிகளில் அன்று அப்ளிகேஷன்களை வாங்கிக்கொண்டு, நேரே அவர் சொன்ன, அடையாறு பக்கம் சைட்டுக்கே செல்வம் வந்து சேர்ந்தான்.

பெரிய இடம். எண்ணற்ற அடுக்ககங்கள் வரவிருந்தன. அண்ணன்தான் டிராப்ட்ஸ்மேன். அவரைப் போல், இன்னும் இரண்டு டிராப்ட்ஸ்மேன்கள் இருந்தார்கள்.  இரவும் பகலுமாக வேலை நடந்துகொண்டிருந்தது. அலுவலக அறை மாதிரி இருந்த இடத்திலேயே எண்ணற்ற சிமிண்ட் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. வெளியே சிமிண்ட்டும் மணலும் கலந்து ஒருவித வாசனையை ஏற்படுத்தியிருந்தன.

செல்வம் ஓரமக உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். நடு நடுவே இஞ்சினியர், அவர் இவர் என்று பலர் வந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். அண்ணன் எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். கோபம் வரவேண்டிய இடத்திலும் அமைதியே கோலோச்சியது. அதைப் பணிவு என்று சொல்வதை விட, பயம் என்று சொல்லலாம்.

ஏன் பயம்? இந்த வேலை இல்லையென்றால், அடுத்தொன்று. எதற்கு அப்படியாவது கும்மிடு போடவேண்டும்? தெரியவில்லை. செல்வத்துக்கு நிறைய தெரியவில்லைகள் இருந்தன. அப்பா, அம்மா தொடங்கி, அவன் கேட்க நினைத்துக் கேட்க தவிர்த்த எத்தனையோ தெரியவில்லைகள் மிச்சமிருந்தன. அவர்களாலும் அதற்குப் பதில் சொல்ல முடியாதோ என்ற எண்ணமே பல கேள்விகளைக் கேட்கத் தவிர்த்திருக்கிறான். ஆனால், அக்கேள்விகள் அவனுள் ஏற்படுத்தும் இம்சை தாங்க முடியாதது. நாக்குநுனி வரை கேள்விகள் துள்ளி ஓடி வரும். வேறெதோ மனத்தில் சட்டென உறைக்க,கேள்வி தவிர்க்கப்படும். மனத்தின் ஆதங்கம் மட்டும் வடுவாய் மிச்சமிருக்கும்.

“அண்ணே, உங்களை மத்தியானமே கேக்கணும்னு நினைச்சேன்..”

சட்டென நெஞ்சில் நின்றது, வாய் வரை வந்துவிட்டது. இனி நிற்குமோ? மணி அண்ணன், செல்வத்தைத் திரும்பிப் பார்த்தார். பூனை முடி மாதிரி மீசை. இன்னும் கருக்கவில்லை. மூங்கில்கம்பு மாதிரி தேகம். பள்ளிக்கு பரபரவென ஓடிய காலம்தொட்டு, அவனை மணிக்குத் தெரியும். இன்று, வளர்ந்து, மேலே படிக்கவே வந்துவிட்டான்.

ஆச்சரியம்தான். வளர்ச்சி என்பதை யாரால் தடுக்க முடியும். என்ன கேள்வி என்பது அண்ணன், முகபாவம் இருந்தது.

“யார்யாரோ வந்து உங்ககிட்ட மெரட்டறாங்க, அதிகாரம் பண்றாங்க? நீங்க சும்மா பதில் சொல்றீங்களே..? உங்களுக்குக் கோபமே வரலியே..”

மணி அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தார். கோபமா? அவருக்கு இன்னும் சிரிப்புதான் வந்தது. யார் மேல் கோபப்பட முடியும்? ஏன் சிரிக்கிறார் என்று செல்வத்துக்குப் புரியவில்லை. தன் தலையெழுத்தை நினைத்துக் கோபப்படலாம். தான் ஏதோ தப்பாகக் கேட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் சட்டென செல்வத்தைத் தாக்கியது. தன் எதிர்காலம் தன் கையில் இல்லாமல் போனது பற்றிக் கோபப்படலாம். ஆனால், கோபம்தான் வரமாட்டேன் என்கிறதே?

ரயில் வண்டி திருவான்மியூர் ஸ்டேஷனை அடைய, முண்டியடித்துக்கொண்டு கூட்டம் பக்கவாட்டில் ஓடிவந்தது. அவசரஅவசரமாக ஜன்னல்வழியாக, கர்சீப், பை, சாப்பாட்டு கூடை என்று உள்ளே எறிந்து இடம்பிடிக்க முயற்சித்தார்கள்.

இறங்குபவர்களுக்கு இடம் தராமல், ஏற முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அதில் யாரோ ஒருவர் கத்த, மற்றவர், எதிர்க்குரல் கொடுத்தார். இறங்கினபின்பும், அந்தக் கடுமையான பேச்சு தொடர்ந்தது. தொடர்ந்து இரண்டொரு கெட்ட வார்த்தைகள்.

செல்வத்துக்குக் கூசியது. இடம் கிடைக்காமலா போய்விடும்? எதற்கு இந்தப் பரபரப்பு? அதைவிட, முந்திக்கொள்ள வேண்டும் என்ற அவசரம் தரும் வார்த்தைகள் அவை. பக்கத்தில் எல்லாரும் திமுதிமுவென வந்து அமர்ந்துகொண்டார்கள்.

பிடித்த இடத்தில் அடுத்தவர் உட்கார்ந்தால், அவரை எழுப்ப ஒரு முறைப்பு. வார்த்தை தடிப்பு. எதையும் சட்டை செய்யாதவர் போல், பிடித்த இடத்தில் உட்கார்ந்திருப்பவர் அப்படியே உட்கார்ந்திருந்தார்.

எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான். அப்புறம், அவரவர் அவரவர் உலகங்களில். ஒருத்தர் பேப்பரில், மற்றவர் ஒரு புத்தகத்தில். நிறைய பெண்கள், தங்கள் செல்பேசிகளோடு. நிறைய அலுப்பு. நிறைய கவலை. தூரத்தில் ஒளிர்ந்த டைடல் பார்க்கின் கசக்கிப் பிழிந்த மிச்சங்கள்.

மணி, அந்த கட்டடத்துக்குள் போய்ப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறான். ஒவ்வொரு முறை, இந்தப் பக்கம் போகும்போதெல்லாம் மனது அடித்துக்கொள்ளும். பளபளவென கண்ணாடி பளிச்சிடும் கட்டடம். வாசல் தொடங்கி, அரண் போல் பாதுகாவல். அதுவும் காலைவேளைகளில், கூட்டம் கூட்டமாக பெண்கள் மிடுக்குடன் நடந்து போவதைப் பார்ப்பதே அழகு. படிப்பு தந்த மிடுக்கு. அறிவு தந்த வாழ்வு. முடிந்தால், அங்கே வேலை செய்யும் ஏதேனும் ஒரு பெண்ணைக் காதலித்தாவது கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொள்வான் மணி. மணி தன் பக்கத்தில் வந்தமர்ந்த பெண்ணை பார்த்தான். தீவிரமாக செல்பேசியில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.

மணி அண்ணன் பதில் சொல்லவில்லையென்பது செல்வத்துக்கு உறுத்தலாக இருந்தது. வழக்கம்போல், அவசரப்பட்டுவிட்டோ மோ என்ற எண்ணம் வந்துத் தொலைத்தது. என்ன கேட்கவேண்டும், யாரைக் கேட்கவேண்டும், எப்படிக் கேட்கவேண்டும் என்ற இங்கிதம் தனக்கு இன்னும் வரவில்லையென்பது செல்வத்துக்கு நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் இப்படி யாரையாவது தப்பாகக் கேட்டுவிடுவதும், அதற்குப்பின் வருந்துவதும் செல்வத்துக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

பல சமயங்களில் திண்டாடுபவர் அப்பாதான். ஆனாலும் பொறுமையாக எடுத்துக்கொண்டார். இப்போது சென்னை அனுப்பியது வரை, அவனது அதிகப்பிரசங்கித்தனத்தின் விளைவுகள்தான் எல்லாமே. காஞ்சிபுரத்திலேயே படித்திருக்கலாம். சென்னை செல்வத்தின் விருப்பம். பத்தாவது முடித்தவுடனேயே அப்பா ஐடிஐ போய்ப் படிக்கச் சொன்னார். மேலே வந்தது, செல்வத்தின் பிடிவாதம். பின்னர் இஞ்சினியரிங், அப்பா விருப்பம். வணிகம், அவன் விருப்பம்.

ஒவ்வொரு மாற்றமும், பேச்சுக்களின் வலியில் உதித்தவைதாம். அப்பா விருப்பம் என்று எதையும் தான் இதுவரை ஏற்றுக்கொண்டதில்லை என்பது ஏனோ செல்வத்துக்கு ஞாபகம் வந்தது. உண்மைதான். அவன் விருப்பத்தைத்தான் அவர் நிறைவேற்றி வருகிறார். கோபமில்லை. வருத்தமில்லை. ஆனால், நெஞ்சில் வலி இருக்குமோ? இருக்கலாம்.

ஆனால், தன்னால் வேறெப்படியும் இருக்க முடியுமென்று தோன்றவில்லை. தனக்குப் பிடித்ததைச் செய்ய மட்டுமே முடியும். பிடிக்காது என்று தோன்றிவிட்டால், அருகே போவது கூட முடியாது.

மணி, பக்கத்துப் பெண்ணைப் பார்ப்பதை நிறுத்திக்கொண்டான். வலிந்து தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். அவரமாகத் தன் பைத்தியக்கார ஈடுபாட்டைத் துடைத்துப் போட்டான். எண்ணத்தில் ரீங்கரித்த வாசனையைக் கலைக்க முயன்றான். நாளை காலை செல்வத்தை பஸ் ஏற்றிவிடவேண்டும். நல்லவேளையாக, மதிய ஷிப்ட்.

காலை கொஞ்சம் மெல்ல எழுந்து, அவனை வழியனுப்பலாம். அவசரமில்லை. காலை ஷிப்ட் வாரங்களில்தான், விடிகாலையே எழுந்து, குளித்து, பஸ்பிடித்து, சைட்டுக்கு வந்து சேரவேண்டும். உடம்பு ஓய்ந்து போய்விடும்.

பக்கத்து சீட் பெண், காலை மாற்றி உட்கார, மணி மேல் இடித்தது. அவன் அவசரமாய் நகர்ந்ததைச் சட்டென உணர்ந்து, மன்னிப்பு கேட்டாள். ஒரு கணம்தான். அழகை மனசுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியுமா? பின் ரொம்ப நேரம் சிரமப்பட்டு, தன் எண்ணத்தை மணி திருப்பினான். கயிறை அறுத்துக்கொண்டு ஓடும் கன்றுக்குட்டியென மனம் தறிகெடுவதை அவனால், தடுக்க முடியவில்லை. தலையை உதறிக்கொண்டான். செல்வத்தைப் பார்த்தான். செல்வம் வெளியே ஓடும் கட்டடங்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“நான் ஏதாவது தப்பா கேட்டிருந்தா, தப்பா எடுத்துக்காதீங்கண்ணா…”

திருவல்லிக்கேணி ஸ்டேஷனைவிட்டு வெளியே வரும்போது, செல்வம் பேசினான். கனத்த இருட்டு. ஸ்டேஷனே வீடாய் பலர் உருண்டுகொண்டிருந்தனர். அவ்வப்போது, ஒரு தீக்குச்சி, பொட்டு வெளிச்சம் பரப்பி, ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டிருந்தது.

“சேச்சே.. என்ன தப்பு? ஒரு தப்புமில்லப்பா..”

மீண்டும் செல்வத்தின் கேள்வி, மணிக்கு ஞாபகம் வந்தது. ஞாபகம் வந்தது என்பதை விட, ஞாபகத்தின் மேல்தளத்தில்தான் அது இருந்தது. சொல்லப் போனால், அதை அவன் மறக்கவே முயன்றான். மறக்க மறக்க, அது மேலெழும்பிக்கொண்டேதான் இருந்தது. ஏன் கோபம் கொள்ள முடியவில்லை? ஏன் முடியாது? முடியுமே? செய்யலாம்.

கோபம் கொண்டால், விரைவில் வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும். வேறு கட்டட நிறுவனத்தில் மீண்டும் ஒரு டிராப்ட்ஸ்மேனாக, தன் பணியைத் தொடங்கவேண்டும். அங்கேயும் இதே கோபங்கள் தலையெடுக்கலாம். அப்போ என்ன செய்வது? வேறொரு வேலை தேடிக்கொள்ள வேண்டுமா?

வேலைகள் என்ன கொட்டியா கிடக்கிறது? தெரியவில்லை. இருக்கலாம். தன் கண்ணுக்கு அத்தகைய வேலைகள் தென்படாமல் இருக்கலாம். சென்னை வந்த இந்த நான்கைந்து ஆண்டுகளில் இது இரண்டாவது நிறுவனம். இதுவரை கோபம் கொப்பளித்ததில்லை.

“கோபம் வந்தா, வாழ்க்கை நடத்த முடியாது செல்வம்.”

உண்மைதான். எல்லாரும் அப்பாவாக இருந்துவிடவா முடியும்? அவன் கோபம், பிடிவாதம் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள அப்பாவால் முடியும். மேலதிகாரிகள், சகவேலையாளர்கள் ஒப்புக்கொள்ள முடியுமா என்ன?

செல்வத்துக்கு தான் கேட்டது எவ்வளவு மடத்தனம் என்று தோன்றியது.

“பீச்சுக்குப் போய் உட்கார்ந்துட்டு போவோமா?”

மணி கேட்க, செல்வம் தலையாட்டினான். கடற்கரை சாலையை கடந்து எதிர்ப்பக்கம் வந்து சேர்ந்தார்கள். கூட்டம் அவ்வளவாக இல்லை. வேலை நாள். விடுமுறைகளில் கூட்டம் மிகுந்திருக்கலாம். சென்னை வந்த முதல்நாளே மணி அண்ணன் கடற்கரைக்குக் கூட்டி வந்தார். இந்த முனையில் அந்த முனை வரை நடந்துவிட்டு வந்தார்கள். அப்புறம், தண்ணீர் அருகே போய் நின்றுவிட்டும் வந்தார்கள்.

“கோபப்படணும். கோபப்படலாம். எப்போ கோபப்படலாம்னா, நமக்குத் தகுதி இருக்கும்போது கோபப்படலாம். நம்ம தகுதி அடுத்தவனுக்குத் தெரியும்போது கோபப்படலாம். நம்ம பேச்சு எடுபடும்னா கோபப்படலாம்.”

அண்ணன், தான் கேட்ட கேள்வியை இன்னும் மறக்கவில்லை. அதுதான் அவர் மனத்தில் அப்போதில் இருந்து வளைய வந்துகொண்டிருக்கிறது. முட்டி முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. மணலில் கால் செருப்பைப் போட்டுவிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.

“என்னால கோபப்பட முடியாது. நான் கோபப்பட்டா, அடுத்த வேலைய தேடிக்க வேண்டியதுதான். அடுத்த வேலை கிடைக்கும்னு நம்பிக்கை இருந்தா கோபப்படலாம். எனக்கு அது இல்ல.”

செல்வம், மணி அண்ணனின் கண்களையே பார்த்தான். அதில் தெரிந்த சுயவெறுப்பை அவனால் உணர முடிந்தது. பேச முடியவில்லை.

“ஒவ்வொரு காலகட்டத்திலேயேயும் நான் அடுத்தவங்களோட தயவுலதான் வாழ்ந்திருக்கேன். அவங்களோட எண்ணத்தை புரிஞ்சிக்கிட்டுதான் எல்லாம் செஞ்சிருக்கேன். அப்பா சொன்னபடி படிப்பு. மாமா வாங்கிக்கொடுத்த வேல.

யாரையும் நான் கேள்வி கேக்கல. சொல்றதைச் சொஞ்சேன். எனக்குன்னு நான் எதையும் யோசிச்சதில்லை. அதனாலகூட கோபம் வராமலிருக்கலாம்.”

“அண்ணா, நீங்க அதை மறந்துடுங்கண்ணா, எதுக்கு அதையே யோசிக்கறீங்க? நான் ஏதோ வாய் தவறி கேட்டுட்டேன்.”

செல்வத்துக்கு உண்மையிலேயே வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இந்த வருத்தம் அவனை கஷ்டப்படுத்தியிருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் கேள்வி கேட்டுவிட, அடுத்தவருக்கு அது ஏற்படுத்தும் வலியை அவன் உணரும்போது, உண்மையிலேயே சிரமப்படுவான். மணி அண்ணன் இன்னும் வார்த்தைகளைக் கூட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது.

“இல்ல செல்வம். நீ கேட்டது சரிதான். நீ அப்படி இருக்கக்கூடாது. இருக்காதேங்கறதுக்காகத்தான் சொல்ல வந்தேன். உங்கப்பா என் கிட்ட பேசும்போது, அவன் மெட்ராஸ்ல, பி.காம். படிக்கணும்னு பிடிவாதமா இருக்கான்பா, சொன்னா கேக்க மாட்டேங்றான், என்ன செய்யறதுன்னு தெரியல. அனுப்பி வெக்கறேன். ஃபார்ம்மெல்லாம் வாங்கிக்கொடுப்பான்னார். எனக்கு அப்பவே உன்னைப் பிடிச்சுப் போச்சு. எனக்கு உன் அப்பாவோட நிலைமை தெரியும். ஆனாலும், உன் பிடிவாதம் சரின்னு தோணிச்சு. அப்படித்தான் இருக்கணும். நாம எங்கே போகணுங்கற தெளிவு இருக்கணும். என்னவா ஆகணுங்கற தெளிவு இருக்கணும். அதை அடைய பிடிவாதம் வேணும். எனக்கு அது எதுவுமே இல்லாம போச்சு. அதான் இன்னிக்கு எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கிக்கிட்டு நிக்கறேன்.”

செல்வம் மணலை அலைந்துகொண்டிருந்தான். தெரியவில்லை. தன் பிடிவாதத்துக்கு இவ்வளவுதூரம் பொருள் இருக்கும் என்று அவன் நம்பவில்லை. கனவு மட்டும்தான் அவனைத் துரத்திக்கொண்டிருந்தது. கனவுகளை இழந்தவர்களுக்கு கனவோடு வாழ்பவர்களைப் பார்ப்பது பெரும்கனவு. மணி, அப்புறம் ரொம்ப நேரம் பேசவில்லை. தூரத்தில் அடுத்தொரு

ரயில்வண்டி தடதடவெனப் போய்க்கொண்டிருந்தது தெரிந்தது.

செல்வம், மணி அண்ணனைப் பார்த்தான். அவர் கிளம்பலாம் என்பதுபோல், மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தார்.

  1. easwaran says:

    yes. If you get angry , you can not have a good life . Not only at work but ?????

  1. There are no trackbacks for this post yet.

Leave a Reply